Asia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்!


(Picture courtesy: Internet)

கடைசி ஓவர் த்ரில்லர் துபாயில் நேற்று (28-9-18). இந்தியா-பங்களாதேஷுக்கிடையே நடந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் ஃபைனல். 223 ரன் அடிப்பதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்றால், ஆம் என்பதைத் தவிர வேறு பதிலிருக்க வாய்ப்பில்லை. ஒரு-நாள் கிரிக்கெட். எந்த வீரருக்குள் எந்த பூதம் எப்போது இறங்கும், என்ன நடக்கும்? யாருக்குத் தெரியும்? எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டி, கழித்து நடத்திவிடமுடியாது.

இதுவரை பங்களாதேஷ் துவக்க ஆட்டக்காரராக இந்த ஆசியக்கோப்பையில் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. 33 பந்துகளில் அரைசதம் கடந்த பங்களாதேஷின் லிட்டன் தாஸ் (Liton Das) தனது கேரியரின் அருமையான சதத்தை ஆசியக்கோப்பை ஃபைனலுக்கென ரிசர்வு செய்திருந்தார்போலும். ஆரம்பத்திலிருந்தே விளாசல். பொதுவாக, பும்ராவை யாரும் வெளியே ஏறிவந்து தாக்கி, தப்பித்துவிடமுடியாது. ஆனால் நேற்று அந்த பூதம் தாஸுக்குள் நுழைந்துவிட்டிருந்தது. தாஸின் நாள். அதையும் அவர் செய்தார். ஸ்பின்னர்களை சாதாரணமாக ஸ்வீப் செய்தும் பௌண்டரியைக் காட்டியது இந்தியக் கேப்டனின் நெற்றியில் கவலைக் கோடுகளைப் பரப்பியது. இந்தியாவுக்கெதிராக ஆஃப்கானிஸ்தானின் ஷாஸாத் ஆடிய அட்டகாச இன்னிங்ஸின் வீடியோ பார்த்துவிட்டு வந்திருக்கிறாரோ? பௌண்டரிகள் வெடித்துக்கிளம்பின. தாஸ் விளையாடுகையில், முதன் முறையாக ஸ்கோர் 300 வரை நெருங்கும்போலிருக்கிறதே எனத் தோன்றியது. பங்களாதேஷின் துவக்க பார்ட்னர்ஷிப் 120 ரன். யாரும் எதிர்பாத்திருக்க வாய்ப்பில்லை.

அதிவேக 121 ரன்னெடுத்து லிட்டன் தாஸ் வெளியேறியபின், அதற்காகவே காத்திருந்ததுபோல் தள்ளாடியது, தடுக்கி விழுந்தது பங்களாதேஷ். 120 for no loss –லிருந்து 151-க்கு 5. இந்திய ஸ்பின் தாக்குதலை எதிர்த்து ஆடமுடியாமல் மிடில்-ஆர்டரின் தப்பாட்டம். கேதார் ஜாதவின் அதிமந்தமான சுழல் மெஹ்தி ஹாசனையும், முஷ்ஃபிகுர் ரஹீமையும் விரைவில் வீட்டுக்கு அனுப்ப, சௌமியா சர்க்காரின் 33-ஐத் தவிர, மற்றவர்கள் தப்பி ஓட்டம்! 250-270 எனச் சென்றிருக்கவேண்டிய பங்களாதேஷ், பும்ராவின் death-overs நெருக்கலில் மேலும் தடுமாறி 222 எனச் சரணடைந்தது.

223 தானா இலக்கு? கப் வந்துவிட்டது கையில் என நினைத்து இந்தியா இறங்கியிருந்தால் அது மகா தப்பு! தாஸுக்கு பதில் சொல்லும் வகையில், 3 சிக்ஸர்கள், பௌண்டரிகள் என விறுவிறுவென ரோஹித் ஷர்மா ஆரம்பித்தாலும், மறுமுனையில் தவண் 15 ரன்னிலேயே கழன்றுகொண்டார். ராயுடுவையும் எளிதில் தூக்கிவிட்டது பங்களாதேஷ். தினேஷ் கார்த்திக்கோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருந்த ரோஹித், ருபெல் ஹுசைனை புல் செய்கிறேன் என்று மிட்-விக்கெட்டில் கேட்ச் கொடுத்து 48-ரன்னில்(வெளியேறுகையில் பங்களாதேஷிற்கு கோப்பை தெரிய ஆரம்பித்திருந்தது. நிலைமையை சமாளித்து அணியை கரைசேர்ப்பதில் முனைந்த கார்த்திக்-தோனி ஜோடி, எப்பவுமே சிங்கிள், எப்பவாவது ஒரு பௌண்டரி என ஆரம்பத்தில் போக்குகாட்டி ஸ்கோரை மெல்ல நீட்டியது. பார்ட்னர்ஷிப் உருவாகும் நேரத்தில் 37 ரன்னில் (4 பௌண்டரி, 1 சிக்ஸ்) கார்த்திக், கேப்டன் மொர்தாஸாவிடம் எல்பிடபிள்யூ ஆகி விழ, தோனியோடு சேர்ந்தார் கேதார் ஜாதவ். வேகம் காட்ட முயன்ற ஜாதவை காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு திணறவைத்தது. நின்று அடிக்கவோ, ஓடி ரன்னெடுக்கவோ அவரால் முடியவில்லை. 19 ரன் எடுத்திருக்கையில் காயம் காரணமாக வெளியேறியது பிரச்சினையைத் தீவிரமாக்கியது. ரவீந்திர ஜடேஜா இறங்கித் தட்ட ஆரம்பித்தார். இதற்கிடையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த தோனியை முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 36 ரன்னில் (3 பௌண்டரி) சாய்க்கையில், இந்திய ஸ்கோர் 160-க்கு 5 விக்கெட்டுகள். நிலைமை மோசம்.

ஜடேஜாவும் புவனேஷ்வரும் இணைந்து கவனமாக ரன் ரன்னாகச் சேர்க்க, இந்தியாவுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வர ஆரம்பித்திருந்தது. துல்லியமாகப் பந்துவீசிக்கொண்டிருந்தனர் முஸ்தாஃபிஸுர் ரஹ்மானும், ருபெல் ஹுசைனும். சிங்கிளைத் தவிர வேறு ஏதும் யோசிக்கமுடியாத கட்டம். திடீரென ருபெல் ஹுசைனை ஒரு அடி வெளிவந்து புவனேஷ்வர் குமார் தூக்க, சிக்ஸர். அடுத்த முனையில் ஜடேஜாவே ஆச்சரியப்பட்டிருப்பார்.. அட, நம்ப Bhuvi-யா இது! இந்திய ரசிகர்களுக்கு மீண்டது உற்சாகம். சிரிப்புகள் எழுப்பிய சலசலப்பு. ஆனால் அதெல்லாம் நீடிக்குமா?

47- ஆவது, 48-ஆவது ஓவர்களில் ஜடேஜாவும், புவனேஷ்வரும் அடுத்தடுத்து காணாமல்போக, ஸ்கோர் 214-க்கு 7 என்றது. இந்தியர்களின் முகம் இருண்டது. உறைந்தது. 9 ரன்கள் எடுக்கவேண்டும் வெற்றிக்கு. 11 பந்துகளில். ஆனால் ரன்னே வராமல் dot balls வந்துவிழும் சூழலில் யாரெடுப்பது இதை? குல்தீப் யாதவா? 3 விக்கெட் எடுத்தார், சரி. ரன்னுமா? புவனேஷ்வருக்குப் பின் மைதானம்வந்து ஆடப்போவது யார், சஹலா? ஐயோ, ரெண்டு பந்துகூட தாங்கமாட்டாரே மனுஷன்? பும்ராவா? ரசிகர்களே குழம்பி முழிக்கையில், காயம்பட்டிருந்த கேதார் ஜாதவை ’கால் வலியைக் கொஞ்சம் பொறுத்துக்கப்பா.. போய் ஏதாவது செய்!’ என்று ரோஹித் அனுப்பிவைத்தார். இப்படித்தான் ஆரம்பித்தது ஒரு எபிக் ஃபைனலின் 6 ரன், 6 பந்து என மிரட்டிய கடைசி ஓவர். இந்தியாவுக்கு கோப்பையா இல்லையா என்பது இப்போது இருவரின் கையில். ஜாதவ். யாதவ். அவ்வ்..

அங்கே தலையைப் பிய்த்துக்கொண்டிருப்பது யார்? பங்களாதேஷ் கேப்டன் மொர்தாஸா. யாருக்குக் கொடுப்பது கடைசி ஓவரை? ஜாதவ் வேறு திரும்பிவந்து நிற்கிறாரே.. சௌம்யா சர்க்கார்? நோ, தினேஷ் கார்த்திக் கொலம்புவில் கொடுத்த அடி ஞாபகம் இருக்கிறது. மொகமதுல்லா! ’வா தம்பி. நீ புடி பந்தை. போடு.. பாத்துப்போடு!’ என்று கொடுத்துவிட்டார் பங்களாதேஷ் கேப்டன். முதல் இரண்டு பந்தில் குல்தீப், கேதார் ஆளுக்கொரு சிங்கிள். மூணாவதில் குல்தீப் தூக்க, பௌண்டரி போகவேண்டியதைத் தடுத்தி நிறுத்தியது பங்களாதேஷ் ஃபீல்டிங். இரண்டு ரன்கள். நாலாவது பந்து : Dot ball ! ஹே, பகவான்! ஐந்தாவது பந்து – லெக்சைடில் அடிக்க குல்தீப் முயல, காலில் பட்டு விக்கெட்கீப்பரை விட்டு விலகி ஓட, ஓடிவிட்டார்கள் ஒரு ரன்! ஸ்கோர்ஸ் சமம். இனி தோக்கமாட்டோம்யா!

மேட்ச்சின் கடைசிக்கணம். ஒரு பந்து. ஒரு ரன். கோப்பை இந்தியாவுக்கா? இல்லையா? ஹை-வோல்ட்டேஜ் சஸ்பென்ஸ். கிரிக்கெட்டின் தீரா சாகஸம். ஏகப்பட்ட பேருக்கு இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, நாடித்துடிப்பு – எல்லாத்துடிப்பும் ஒரேயடியாக எகிற, திறந்த வாய் திறந்தபடியே இருக்க, போட்டார் மொகமதுல்லா பந்தை. கேதார் ஜாதவ் ஒரு மின்னல்கணத்தில் கால்பக்கமாக அதைத் தட்டிவிட முயற்சிக்க, பந்து அவரது பேடில்(pad) பட்டு டபாய்த்து, விக்கெட்கீப்பருக்கும் பே..பே..காட்டி பின்பக்கம் பாய, ஜாதவும், யாதவும் ஓடியேவிட்டார்கள் – எக்ஸ்ட்ரா ரன். அந்த மேஜிக்கல் ரன்! இந்தியாவுக்கே வெற்றி. ஓ, ஜெய் ஹிந்த் என்றால் இதுதானா அர்த்தம்..!

பளபளக்கும் ஆசியக்கோப்பை, ஏழாவது தடவையாக இந்தியாவின் கையில். இனி, ஓஹோதான், ஆஹாதான், அடுத்த கோப்பை வரும்வரை!

*

8 thoughts on “Asia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்!

  1. பங்களாதேஷ் முதலில் கவலை அளித்தது. தாஸ் நன்றாக விளையாடினார். என் எதிர்பார்ப்பும் கணிப்பும் பொய்யில்லை என்று நிரூபித்தார் தவன். ஸார்… புவி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடக்கூடிய ஆட்டக்காரர் என்று முன்பே நிரூபித்திருக்கிறார்… கட்சி பந்து வெற்றி… நல்லவேளை மானம் போகாமல் சாதித்தார்களே! மறுநாள்காலை தெரிந்துகொண்டேன் ஆட்ட விவரங்களை!!

    Like

    1. @ஸ்ரீராம் : இந்த ஃபைனல் சாதாரணமாக முடியாது என முன்பே தெரியும். அவர்களின் போராட்ட குணந்தான் இங்கே highlights. மொர்தாஸாவின் கேப்டன்சியும் அபாரமானது. கவனித்தவர்களுக்கு இந்த ஆட்டத்தில் நிறையத் தெரிந்தன.

      Like

    1. @திண்டுக்கல் தனபாலன் :
      முதல்மணியை நமக்கு ஹாங்காங் கூட அடித்துச்சென்றது! நாம் சரியாகக் கேட்காவிட்டால்.. இங்கிலாந்தில் அடுத்த வருடம் வருகிறது உலகக்கோப்பை. அது கிண்டாமணி!

      துபாயில், ரோஹித்தின் தலைமையும் அணியை நடத்தியவிதமும் மகிழ்வு தந்தது.

      Like

  2. //இனி, ஓஹோதான், ஆஹாதான்,//

    நான் பொதுவா லைவ் ஆட்டங்கள் பார்ப்பதில்லை. அது பார்க்கும் மனநிலை எனக்கு இல்லை. ரொம்ப டென்ஷன் பார்ட்டி.

    இந்தப் போட்டி பட்டப் பகலில் நடந்திருந்தாலும், தோனி அவுட் ஆனபிறகு நிச்சயம் பார்த்திருக்க மாட்டேன். 100க்கு விக்கெட் இல்லை என்றபோதே நான் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் (அடுத்த சாம்பியன்ஸ் ஃபைனல் போலாகிவிட்டது என்று)

    See.. நமக்கு (இந்தியாவுக்கு) ஏகப்பட்ட வாய்ப்புகள் கிரிக்கெட் ப்ராக்டிஸ், ஆட்கள் availability etc. தவன், நிச்சயம் நாளை வெற்றி பெறுவோம் என்று சொல்லும்போதே இந்தியா சொதப்பப் போகிறது என்று தெரியும். ஆனால் இப்படியா?

    டாஸ் வென்றது நாம். பாகிஸ்தான் போல பயங்கரமாக ஸ்கோர் செய்யவிடவில்லை, ஓகே. இந்த ஸ்கோரை சேஸ் செய்ய இப்படித் தலையால் தண்ணீர் குடிக்கணுமா? அந்த வெற்றில என்ன பெருமை இருக்கு? இது இரண்டாவது பைனல், முக்கி முக்கி வெற்றி பெற்றதில். I am sure, அவங்களோட திறமைனால, பங்களாதேஷ், நம்மை நாக்கவுட் சுற்றுக்குச் செல்லவிடாமல் செய்யப்போகிறார்கள்…

    Like

    1. @நெல்லைத் தமிழன்:

      மேலே ‘ஆஹா..ஓஹோ’ should be seen in a lighter vein !
      ஆயினும், கிரிக்கெட்டிலும் எந்த ஒரு ஸ்போர்ட்டிலும் வெற்றி என்றால் வெற்றிதான். – அது பெருமித வெற்றியாக இல்லாது போனாலும்.

      நமது அணியிடம் ஒரு ஸ்பெஷாலிட்டி: They will make heavy weather of any low target…150 ரன் தான் இலக்கென்றாலும் அதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து, மூச்சு நின்றுபோய்த்தான் கடைசியில் ஜெய்ப்பார்கள். எளிதாக ஜெய்த்தோமா வெளியே வந்தோமா என்பது அனேகமாக இல்லை.
      உலகக்கோப்பை ஃபார்மேட்டைப் பார்த்தால்தான் தெரியும். பங்களாதேஷ் நம் குரூப்பில் உட்கார்ந்திருக்கிறதா என்று. அணி எவ்வாறு அமைக்கப்படவிருக்கிறது (English conditions) என்பதை முதலில் பார்க்கவேண்டும். அரையிறுதி வரை இந்தியா வந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. பார்ப்போம்.

      Like

Leave a comment