மஹாளயம், முன்னோர் வழிபாடு ..

மஹாளய பட்சம் தொடங்குகிற நாளிது. இன்னும் பதினைந்து நாட்கள். முன்னோர்களை நினைத்து எள், நீர் தெளித்து அர்க்கியம் விட, மனமார்ந்த நினைவுகளில் அவர்களை மானசீகமாக வணங்கி, நமக்காகவும் நம் சந்திகளுக்காக ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள என விதிக்கப்பட்டிருக்கும் காலம்.
மறைந்துவிட்ட மூதாதையர், நமது பெற்றோர் அல்லது அவர்களின் பெற்றோர், தாத்தா பாட்டிகள் – அவர்களில் பலரை நாம் பார்த்திருக்கக்கூட வாய்ப்பில்லை- பெரும்பாலான வீடுகளில், குழந்தைகளுக்குக் காண்பிக்கப் படங்கள் கூட இருப்பதில்லை. இருப்பினும், நாம் இருக்கிறோம் என்பதே அவர்கள் இருந்தார்கள் என்பதற்கான அத்தாட்சி. இதுவே நம் மனதுக்குப் போதுமானது. அவர்களை இந்த சமயத்திலாவது, வாஞ்சையோடு நினைவுகூர்தல், முடிந்தால் அவர்களின் நினைவாக சில நற்காரியங்கள் செய்தல் மனதுக்கு நிம்மதி தரும். இன்னபிற நலன்களையும் குடும்பத்தில் கொண்டு சேர்க்கும் என்றெல்லாம் சொல்லிச் செல்கிறது, நம்மை நல்வழிப்படுத்த நினைக்கும் இந்து மதம்.

பித்ரூ கீதம் எனும் இந்து சாஸ்திர நூல் இப்படிச் சொல்கிறது: பெரியவர்கள், மூதாதையர்கள் இல்லையென்றால் நாமுமில்லை. வயதாகிவிட்ட தாய், தந்தையரைக் கண்போல் காக்கவேண்டும். பித்ரு தேவதைகளை (வேறு உலகில் இருக்கும் முன்னோர்களின் ஆவிகளை) ஆராதிப்பது, அவர்களின் கருணையைப் பெற்றுக்கொள்வது இகத்தில் மனிதருக்கு மிகவும் முக்கியம். வயதானவர்களின் இறுதிக்காலம், குடும்பத்துக்காரர்கள் அவர்களை எப்படி நடத்தவேண்டும் என மேலும் சொல்கிறது. வீட்டில் ஒரு பெரியவர் – அப்பாவோ, அம்மாவோ, தாத்தாவோ, பாட்டியோ – மிகவும் முதியவர், யாருக்கும் ஒரு தொல்லையும் கொடுக்கவில்லை. தெய்வமே என்று ஒரு மூலையில் உட்கார்ந்து காலத்தைக் கழிக்கிறார். அவர் இருப்பதுபற்றிய பிரக்ஞைகூட மற்றவர்களுக்கில்லை. உடம்புக்கும் ஒன்றுமில்லை. வயதாகிவிட்டது என்பதுதான். ஒரு நாள். பிராணன் போய்விட்டது. ’யாருக்குமே ஒரு சிரமமும் தரலை. இப்படிப்போய்ட்டாரே..’ என்கிறார்கள் குடும்பத்தினர். அனாயாசேன மரணம். வயதான காலத்திலும் யாருக்கும் தொந்திரவு தராத, திடீர்ச் சாவு. இது சம்பந்தப்பட்டவருக்கு வாய்க்கவேண்டும். அவருக்கு அந்த பாக்யம் இருக்கவேண்டும். மற்றவர்கள் ஒன்றும் சொல்லக்கூடாது. இருப்பவர்கள் ‘ இன்னும் அவஸ்தைப்பட்டுக்கொண்டு இப்பிடிக் கிடக்கிறாரே.. இருக்கிறவாளுக்கும்வேற கஷ்டமாக இருக்கே.. எப்போத்தான் போவாரோ…’ என்று புலம்பித்தள்ளுதல் ஆகாது. நம்மால் முடிந்த சேவையை அவர்களுக்கு செய்யவேண்டுமே தவிர, குறைசொல்லல் கூடாது. அது பாவம் என்றெல்லாம் சொல்கிறது சாஸ்திரம்.

முன்னோர் வழிபாடு என்பது நம் நாட்டில் மட்டும்தான் என்றில்லை. சீனாவில், ஜப்பானில் இருக்கிறது. கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளிலும் இன்றும் காணலாம். ஆப்பிரிக்க, லத்தீன்-அமெரிக்கப் பழங்குடிகளில் நிறைய உண்டு. என்னதான் நவீன வாழ்க்கை, தனி மனிதனை தினம் பரபரக்க வைத்து, பல கலாச்சாரக் கூறுகளை வாழ்விலிருந்து இழக்கும்படி செய்தாலும், சில உன்னதமான விஷயங்கள், இந்தத் தாக்குதலிலிருந்து எப்படியோ தப்பித்துவிடுகின்றன என்பது, இன்னும் பாக்கி இருக்கும் நமது நல்ல காலத்தையே காட்டுகிறது. நான் ஜப்பானில் இருந்தபோது, மூன்று வருட சொற்பகாலம்தான் எனினும், அவர்களது கலாச்சாரப் பண்புகளை கிடைத்த சந்தர்ப்பங்களில் உற்று நோக்கியிருக்கிறேன். ஜப்பானில், குறிப்பாக ஷிண்ட்டோ (Shinto) மதத்தினரில், முன்னோர் வழிபாடு மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு வருடமும் ஜூலை-ஆகஸ்ட் மாதவாக்கில் பான் (Bon) எனப்படும் முன்னோர் வழிபாட்டை ஜப்பானியர்கள் சிரத்தையோடு செய்கிறார்கள். பான் –இன் போது அவர்கள் தங்களது முன்னோர்கள் குடியிருந்த பழையவீட்டுக்குத் திரும்புகிறார்கள். அங்கே மூதாதையரின் ஆவிகளுக்குப் பழங்கள், மலர்களை சமர்ப்பித்து, ஊதுபத்தி ஏற்றி வழிபடுகிறார்கள். அந்த நாட்களில் மூதாதையரின் ஆவிகள் தாங்கள் முன்பு குடியிருந்த வீடுகளுக்குத் திரும்புவதாகவும், இருக்கும் சந்ததிகளை ஆசீர்வதிப்பதாகவும் ஜப்பானியர்கள் நம்புகின்றனர். பலர், முன்னோர்களின் கல்லறைக்குச் சென்று ஊதுபத்தி ஏற்றி, பூக்கள் வைத்துக் கண்மூடிப் பிராத்திப்பதுண்டு. மூதாதையரில் பலர் மது, புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவராயிருந்திருப்பர். அவர்களுக்குப் பிடித்தமான மதுவகையின் சிறுபாட்டிலையும், சிகரெட் பாக்கெட்டுகளையும் வரிசையாக வைத்து, ஊதுபத்திப்புகை காட்டி, பயபக்தியோடு வணங்கும் ஜப்பானியர்களைப் பார்த்திருக்கிறேன்.

பொதுவாகவே, வயதானவர்களை அலட்சியம் செய்யாது மதித்து வாழ்தல் நல்லது. அவர்கள் நமது உறவினராய்த்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் ஏதுமில்லை. யாராக வேண்டுமானாலும், எக்குலத்தைச் சேர்ந்தவராயினும், எந்நாட்டவராயினும், பெரியவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்வதும், அவர்களுக்குத் தேவைப்பட்டு நம்மால் ஒருக்கால் முடிந்தால், உதவி செய்வதும் ஆன்மபலம் தரும் விஷயம். நமக்கும் நம் பின்வரும் இளசுகளுக்கும் நல்லதையே கொண்டுசேர்க்கும் அது.

படம்: இணையம். நன்றி.

*

10 thoughts on “மஹாளயம், முன்னோர் வழிபாடு ..

  1. இக்காலத்துக்குத் தேவையான விஷயங்களைச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. கடைப்பிடித்தலும் வேண்டும். பெரும்பாலோர் இப்போல்லாம் மஹாலயம் என்பதையே அனுசரிப்பதில்லை. 😦

    Liked by 1 person

    1. @Geetha Sambasivam :
      இந்தமாதிரி விஷயங்களை சரியாகப் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன், அவற்றின் முக்கியத்துவம் ஓரளவு புரிகிறது என்றாலும், நானும் ஒரு அரைகுறைதான். தன்னைத் தானே சரிசெய்துகொள்ளவேண்டிய விஷயங்கள் பல இருக்கிறது என்னிடம்.

      Like

  2. “புத்தேள் உலகு” பற்றி என்ன நினைக்கிறீர்கள்…? எனது பதிவில் தங்களின் கருத்துரைக்காக இதைக் கேட்கவில்லை… உங்களின் இந்த பதிவைப் பற்றிய உள்ளார்ந்த சிந்தனையைப் பற்றி…

    Liked by 1 person

  3. @திண்டுக்கல் தனபாலன் :

    புத்தேள் உலகுபற்றி நம்பிக்கை இருக்கிறது. இறந்தவர் அனைவரும் ஒரே இடத்திற்குத் திரும்புவதில்லை எனவே நான் அறிகிறேன். அவரவர் கர்மாவுக்கேற்றபடி, வாழ்ந்த வாழ்க்கையின் உன்னதம் அல்லது அபத்தத்திற்கேற்றவாறு வெவ்வேறு உலகிற்கு அனுப்பப்படுகிறார்கள் எனவே தோன்றுகிறது. (இது கிறித்தவம் சொல்லும் சொர்க்கம்-நரகம் கதையல்ல)
    ( சின்ன வயதில் இம்மாதிரி விஷயங்களைப் பற்றி (Occult, paranormal experiences, nde (Near Death Experiences) சிலஆங்கிலப்புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. )

    Like

  4. திரு ஏகாந்தன்,
    அனாயாச மரணம் பலவற்றைச் சந்தித்த ஆயாசம் என்னை மேற்கொண்டாலும் சென்றவர்களை வாழ்த்துகிறேன். எங்கிருந்தாலும் நலமாக இருக்கட்டும் என்று.
    உங்கள் பதிவு அந்தத் தொடர் சங்கிலியை அழகாக வலியுறுத்துகிறது.
    நம் குழந்தைகளிடம் முன்னோற் பார்ரீயா ணாள்ளா ஸேய்ட்ஹீகாலாஈயே ஆலிக்க வேண்டும்.
    நம் மனத்திலிருந்தும்
    பழைய கசப்புகளை அகற்றி விடவேண்டும்.
    இது மிக முக்கியம் என்பதைத் தினமும் எனக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

    மிக மிக ஆதர்சமான பதிவு. என் மக்களும் அவர்கள்
    கடமைகளைச் சரியாக நிறைவேற்றணும்.
    பிதுரு தேவதைகள் அனைவரையும் ரட்ச்கிக்கட்டும்.
    அவர்கள் இல்லாமல் நாம் எங்கே.

    Liked by 1 person

    1. @Revathi Narasimhan :

      உங்களது அனுபவம் கடுமையானது போலிருக்கிறது. போனவர்களுக்கு நற்கதி கிடைக்கட்டும். அதுவே முக்கியம்.

      மஹாளயம்பற்றி நேற்று உங்கள் பதிவிலும் சிறிய கமெண்ட் போட்டிருந்தேன். இன்றுகாலை வாக்கிங் போகையில் ஒரு வாட்ஸப் கவிதை இதுபற்றியே வந்தது. கூடவே ஜப்பானியர்களின் மூதாதையர் தினம் போன்றவை சிந்தனையில் வரிசையாக. விளைவு விரைவாகப் போடப்பட்டது இந்தப் பதிவு.

      குழந்தைகள் நல்லவர்கள். அவர்கள் கடமையை அவர்களுக்குத் தோன்றியபடி, சொல்லப்பட்டபடி செய்வார்கள். கவலை வேண்டாம்.
      வருகைக்கு நன்றி.

      Like

  5. நல்ல பதிவு.
    முன்னோர்களை தினம் வணங்கி வருகிறோம்.

    //பொதுவாகவே, வயதானவர்களை அலட்சியம் செய்யாது மதித்து வாழ்தல் நல்லது//

    உண்மை. வயதானவர்கள் எதிர்பார்ப்பது ஆதுரத்துடன் கையைபிடித்து . அன்பான வார்த்தை பேசுவது . அந்த அன்பை கொடுத்தாலே போதும் அது கொடுக்கும் தெம்பு எந்த டானிகும் கொடுக்காது.

    Liked by 1 person

    1. @ கோமதி அரசு :
      பெரும்பாலும் அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் கொஞ்சம் அக்கறை. அவர்கள் பேசுவதை (புலம்புவதை என்று நினைத்தாலும்) காதுகொடுத்து யாராவது கேட்கவேண்டும். இதற்கு வேண்டிய பொறுமையும்கூட, பெரும்பாலானோரிடம் இன்று இருப்பதில்லை. இவர்கள் முதியவராகையில் என்னென்ன நடக்குமோ?

      Like

  6. @முத்துசாமி இரா :
    விஸ்தாரமாக எழுத நான் முனையவில்லை. அதன் தாத்பரியம் குறித்துச் சொன்னால் போதும் என நினைத்தேன். அன்று காலையில் அதுபற்றி சிந்தித்திருந்ததால்..

    Liked by 1 person

Leave a comment