Asia Cup: மீண்டும் சுருண்ட பாகிஸ்தான்


ஆசியக்கோப்பையில், பாகிஸ்தானுக்கெதிராக துபாயில் நடந்த நேற்றைய (23-9-18) கிரிக்கெட் ஆட்டத்தில், இந்தியா 2 வேகப்பந்துவீச்சாளர்கள், 3 ஸ்பின்னர்கள் என்ற விகிதத்தில் இறங்கியது (நான்காவது ஸ்பின்னராக கேதார் ஜாதவும் பயன்படுத்தப்படும் வாய்ப்புடன்). இந்தியாவை வெல்ல பாகிஸ்தான் கைக்கொண்ட ஃபார்முலா 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 1 ஸ்பின்னர். டாஸ் ஜெயித்து பேட்டைக் கையிலெடுத்த பாகிஸ்தான், இந்திய வேகப்பந்துவீச்சை கவனத்துடன் ஆட ஆரம்பித்தது. முதல் பவர்ப்ளேயில்(10 ஓவர்கள்) வேகப்பந்துவீச்சை சமாளித்து, விக்கெட் இழப்பின்றி ரன் கொஞ்சம் எடுத்துவிட்டால் போதும். பின்னர் வரும் ஸ்பின்னர்களில் யாராவது ஒருவரையாவது அடித்துத் தூள்கிளப்பிவிடலாம், கௌரவமான ஸ்கோரும் கிடைக்கும் என்று கணக்கு போலும்.

ரோஹித் ஷர்மா விடவில்லை. 8-ஆது ஓவரிலேயே லெக்-ஸ்பின்னர் யஜுவேந்திர சஹலை திடீரென நுழைத்து, பாகிஸ்தானை முழிக்கவைத்தார். துபாயின் ஸ்லோ-பிட்ச்சில் சஹலையும் குல்தீப்பையும் ஆட, பேட்ஸ்மனுக்கு, திறனோடு தன்னில் பெரும் நம்பிக்கையும் இருக்கவேண்டும். இரண்டு ஸ்பின்னர்களில் ஒருவர் அடிவாங்கினாலும், அடுத்து வருகிறார் இடதுகை சுழல் ரவீந்திர ஜடேஜா. ஆரம்ப ஆட்டக்காரர்கள் ஃபக்ர் ஜமன் (Fakhr Zaman) மற்றும் இனாம்-உல்-ஹக்கிடம் பாகிஸ்தான் நேற்று நிறைய எதிர்பார்த்தது. ஆனால் ஏமாற்றமே எஞ்சியது. அடித்து ஆட முயன்ற இனாம்-உல்-ஹக்கை முதலில் தூக்கி எறிந்தார் சஹல். முப்பதைக் கடந்து ஆடிக்கொண்டிருந்த ஃபக்ர் ஜமன் குல்தீப் யாதவின் ஒரு ஓவரில் ஸ்வீப் செய்யமுயன்றார். சறுக்கினார். சாய்ந்தார். நேரே வந்த பந்து ஸ்டம்புக்கு முன்னால் அவரது காலை முட்டியது. ஜமனை வீட்டுக்கு அனுப்பியது. ஆரவாரமாகக் குதித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் அடங்கி உட்கார்ந்தார்கள். 16-ஆவது ஓவரை ஜடேஜா போட்டுக்கொண்டிருக்கையில், கேப்டன் சர்ஃப்ராஸ் அஹ்மதுடன் ஆடிக்கொண்டிருந்தார் பாகிஸ்தானின் இன்னுமொரு பேட்டிங் ஸ்டாரான பாபர் ஆஸம்(Babar Azam). சர்ஃப்ராஸ், ஜடேஜாவின் அந்தப்பந்தை ஆஃப்-சைடில் தட்டிவிட, சிங்கிளுக்காக இந்தப் பக்கத்திலிருந்து பாய்ந்தார் பாபர் ஆஸம். சர்ஃப்ராஸ் அதைக் கவனிக்கவில்லை. சஹல் பந்தைப் பாய்ந்து நிறுத்தி ஜடேஜாவிடம் தூக்கி எறிந்தார். பாபர் ஆஸம் அலறிக்கொண்டு தன் க்ரீஸுக்குத் திரும்பி ஓடிவர, ஜடேஜா பந்தைக் காற்றிலே ஒரு லாவு லாவி, மின்னல்வேகத்தில் பெயிலைத் தட்டிவிட்டார். பாபரின் கதை முடிந்தது. மேட்ச்சை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பாகிஸ்தானிப் பெண் (பாபரின் மனைவியோ?) வாயைப்பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

58 க்கு 3 விக்கெட்டுகள். இப்போது வந்து இறங்கினார் ஷோயப் மாலிக். இதற்குமுன் இந்தியாவுக்கெதிரான 14 இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட அடிக்காதவர். ஆனால் பாகிஸ்தான் மிடில்-ஆர்டரின் பலம் எனக் கருதப்படுபவர். கேப்டனுடன் சேர்ந்து, ஸ்பின்னர்களைத் தட்ட ஆரம்பித்தார். ரன்கள் சேர ஆரம்பித்தன.அவ்வப்போது சில அருமையான ஷாட்டுகள். நேற்று ஆடிய பாகிஸ்தானிகளில் ஷோயப் மாலிக் மட்டுமே இந்திய ஸ்பின்னர்களுக்கெதிராக அபாரமாக ஆடினார். இறுதியில் ஜஸ்ப்ரித் பும்ராவின் வேகப்பந்தைத் தொட்டு, தோனியிடம் கேட்ச்சாகி வெளியேறினார். 78 ரன்னெடுத்து அவர் திரும்பியபின் பாகிஸ்தான் துவண்டது. சர்ஃப்ராஸின் 44, புவனேஷ்வரின் ஒரு ஓவரில் சிக்ஸர், பௌண்டரி எனப் பறக்கவிட்ட ஆசிஃப் அலியின் 30-ஐத் தவிர அவர்களிடம் ஏதுமில்லை. ஜஸ்ப்ரித் பும்ராவின் டெத்-ஓவர் பௌலிங் (death overs) அபாரமாக அமைந்ததால், பாகிஸ்தானால் 250-ஐ நெருங்க முடியவில்லை. 237-க்கு 7 என்பதே அவர்களின் இறுதி அறிவிப்பு.

வெற்றி இலக்கை நோக்கிய படையெடுப்பில், ரோஹித் ஷர்மாவும் ஷிகர் தவணும் சிறப்பாக வாள் வீசினார்கள். டென்ஷனில் கிடுகிடுத்த பாகிஸ்தான், ஆங்காங்கே கேட்ச்சுகளை நழுவவிட்டுக்கொண்டு இந்தியத் தாக்குதலுக்கு ஒத்து ஊதியது, இந்திய ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. இரு இந்தியத் துவக்க ஆட்டக்காரர்களுமே சதம் விளாசியது அபூர்வமானது. தவண், ரோஹித் இருவரிடமிருந்தும் அருமையான ஷாட்டுகளைப் பார்க்கமுடிந்ததில் ரசிகர்களுக்கு ஏக சந்தோஷம். ரோஹித்தின் சதத்தை ரசிகர்கள் கொண்டாடுகையில், ஸ்டேடியத்தில் தவணின் மனைவி ஆயிஷா முகர்ஜி, ரோஹித்தின் மனைவி ரித்திகா ஸஜ்டே-யை அணைத்து வாழ்த்தியது இன்னுமொரு கலர்ஃபுல் சீன். இல்லாத ரன்னுக்காக அவசரமாக ஓடி, திரும்பமுடியாமல் ஷிகர் தவண் அவுட்டாகாமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கு இது பத்துவிக்கெட் வித்தியாச வெற்றியாக அமைந்திருக்கும். கடைசியில் ராயுடுவும் களத்தில் இறங்கி ஆட, ரோஹித் 111 நாட்-அவுட் என வெற்றி வாகை சூடியது இந்திய அணி.

செப்டம்பர் 26-ல் அபு தாபியில் நடக்கவிருக்கும் பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான போட்டி, இறுதிப்போட்டியில் யார் இந்தியாவைச் சந்திப்பதென முடிவு செய்யும். இன்னுமொரு இந்தியா-பாகிஸ்தான் ஃபைனலா, அல்லது இந்தியா-பங்களாதேஷ் மோதலா என்பதே ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு கலந்த தவிப்பு!

*

8 thoughts on “Asia Cup: மீண்டும் சுருண்ட பாகிஸ்தான்

  1. பொயடிக் ஜஸ்டிஸ் என்பது ஆஃப்கான் வெற்றி பெற்றிருந்தால் ஆசியக் கோப்பைக்குக் கிடைத்திருக்கும் (பைனலில் என்று சொல்லலை, சூப்பர் 4ல்). அவங்களோட திறமை, பங்களாதேஷ், பாகிஸ்தானைவிட அபாரம். ரொம்ப மெச்சூர்டு ப்ளேயர்ஸ். பார்ப்போம் அவங்க இந்தியாவுக்கு எதிரா எப்படி ஆடுகின்றனர் என்று.

    Like

    1. @நெல்லைத்தமிழன் :

      உண்மை. இந்த ஆசியக்கோப்பையின் most colourful team என்றால் அது ஆப்கானிஸ்தான் தான். பாகிஸ்தானுக்கெதிராக 97 நாட் அவுட் அடித்த ஆஃப்கன் ஆட்டக்காரர் ஷஹிதி பங்களாவுக்கெதிராக 71 அடித்திருக்கிறார். அருமையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மன். இப்படி நிறைய சிறப்புகள். இந்தியாவையும் அவர்கள் ஒரு கை பார்ப்பார்கள்.

      Like

    1. @திண்டுக்கல் தனபாலன் :
      சரிதான். ஒருவேளை பங்களா ஜெயித்தால் நாகின் டான்ஸ் பார்க்கலாம். ஸ்ரீலங்காவை வெறுப்பேற்றி ஸ்ரீலங்க ரசிகர்களை பங்களாவுக்கெதிராக நடந்த ஃபைனலில், இந்தியாவுக்கு சப்போர்ட் செய்யவைத்த டான்ஸ்! (நடந்தது லங்காவில்)

      Like

  2. நேற்று ஆப்கன் ஜெயித்திருக்கவேண்டும். பங்களாதேஷுக்கு தண்ணி காட்டி விட்டார்கள். ஜெயித்ததும் முஷ்பிகுர் ஆப்கன் டான்ஸ் ஆடியது அல்பத்திலும் அல்பம்.

    செப்டம்பர் 26 போட்டியில் பாகிஸ்தான் ஜெயிக்கவே வாய்ப்பு அதிகம்.

    Like

    1. @ஸ்ரீராம் : மூணு ரன்னில் ஜெய்த்துவிட்டு முஷ்ஃபிகுர் ஆட்டம் வேறயா! வெறுப்பேற்றுவதில் பங்களாவை வெல்லமுடியாது.

      கடுப்பில் இருக்கும் பாக், 26-ல் பங்களாவை நசுக்கும் எனவே எல்லோரும் எதிர்பார்ப்பார்கள்.

      Like

  3. கிரிக்கெட் ஆட்டம்தான் அன்செர்டென் க்லோரிஸூக்கு வாய்ப்பு தருகிறது அன்றைய தினம் யார் நன்றாக ஆடுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவர்

    Like

    1. @Balasubramaniam G.M :
      அப்படித்தான் கதை மாறியது கடந்த வருட சேம்பியன்ஸ் ட்ராஃபி ஃபைனலில், பாகிஸ்தானுக்கு சாதகமாக. இந்தத் தடவை துபாய் என்ன சொல்லப்போகிறதெனப் பார்ப்போம்.

      Like

Leave a comment