முள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி

தி.ஜா.வின் ஒருகதையைப் படித்தால் போதுமா? இன்னொன்றையும் பார்த்துவிடுவோமே. எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த ’சர்வதேசக் கதைகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்ற ’முள்முடி’ எனும் கதை. நேர்மையான, அந்தக்கால பள்ளிக்கூட வாத்தியார் ஒருவரின் கதைமூலம், வாசகர்களை நெகிழவைக்கிறார் தி.ஜானகிராமன்.

தன் பள்ளி நாட்களில், மற்ற வாத்தியார்களைப்போல் கடனே என்று பாடம் நடத்திச் செல்லாமல், அடிக்காமல், அலட்டாமல், பள்ளிப்பிள்ளைகளை அன்போடும், அரவணைப்போடும் நடத்தி, மேலேற்றிவிட்டவர் அனுகூலசாமி. அமைதியான சுபாவம். வாத்தியார்னா இப்படித்தான் இருக்கணும்னு பள்ளியில் மாணவர்களும், ஊரில் மற்றவர்களும் பேசக்கூடிய அளவுக்குப் பேரெடுத்தவர். இருந்தும் என்ன? எல்லா நல்ல விஷயங்களும்கூட ஒருநாள் முடிவுக்கு வந்தாகவேண்டுமே? அதுதானே இயற்கை அடிக்கடிச் செய்துகாட்டுவது? ஆயிற்று. அனுகூலசாமியின் ரிடையர்மெண்ட் நாளும் வந்தது. பள்ளிப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார் அவர்.

அவர் பள்ளியிடமிருந்தோ, மாணவர்களிடமிருந்தோ எதையும் எதிர்பார்த்தவரில்லை. இருந்தும் மாணவர்கள் விட்டுவிடுவார்களா? பள்ளியின் உபசரணை, வழியனுப்பு நிகழ்ச்சிதாண்டி, தாங்களும் தங்களுக்குப் பிடித்தமான வாத்தியாருக்காகச் செய்ய நினைத்தார்கள். தனியாகக் கொஞ்சம் பணம் சேர்த்தார்கள். ஊர்ப்பெரியவர்களோடு நாயனக்காரர் சகிதமாய் அவரை வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டு, மாலைபோட்டு, பரிசு கொடுத்து அனுகூலசாமிக்கு மரியாதை செய்வித்தார்கள். எதுக்குப்பா இதெல்லாம் என்று அனுகூலசாமி உருகிப்போனார். தங்கள் பிரிய வாத்தியாரை வணங்கியபின், லைட்டுகளை அப்பறமா வந்து எடுத்துக்குறோம் சார் என்று சொல்லிவிட்டு ஒருவழியாக மாணவர்கள் விடைபெற்றுப்போனார்கள். வீட்டில் சிந்தனை வயப்பட்டு ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கும் அனுகூலசாமி.

தி.ஜானகிராமனின் வரிகளில் அந்தக் கட்டத்தைக் கொஞ்சம் பாருங்கள்:

“புஸ்ஸ்..’ என்று பெட்ரோமாக்ஸ் இரண்டும் சூன்யத்தை நிரப்பிக் கொண்டிருந்தன.
தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நாளைக்குப் புதன்கிழமை. ஆனால் அவருக்கு சனி, ஞாயிறு.. நாளை மறுநாள், அதற்கும் மறுநாள் – இனிமேல் எப்போதுமே சனி ஞாயிறுதான். பள்ளிக்கூடத்துக்கு இனிமேல் போக முடியாது. அவருக்கு வயது அறுபதாகி விட்டது. ஓய்வு கிடைத்து விட்டது.

ஊஞ்சல்மீது உட்கார்ந்து கொண்டார் அவர். பக்கத்தில் ஃப்ரேம் போட்ட ஏழெட்டு உபசாரப் பத்திரங்கள். ஒரு வெள்ளித் தட்டு. ஒரு பேனா. கடையில நாலு ரூபாய் விலை. ஆனால் இங்கு இந்தப் பேனாவுக்கு விலை கிடையாது. நாலு லட்சம். நாலு கோடி பெறும் என்று சொன்னால் வீண் வார்த்தை. ஏதோ இரண்டும் சமம் என்று ஆகிவிடும்.

கொர்னாப் பட்டையும், வெள்ளி நூலுமாக நாலைந்து ரோஜா மாலைகள் சுருண்டு கிடந்தன.

ஊஞ்சல் சங்கிலி இரண்டையும் பிடித்துக் கொண்டு நின்றாள் மகிமை. பேசவில்லை. அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். இத்தனை மேளதாளங்களும், தழதழப்பும் தனக்கு் கிடைத்தாற்போல ஒரு பார்வை. ஒரு நிமிஷம். அவரைப் பருகிக் கொண்டு நின்றவள் சட்டென்று வாசலுக்குப் போய்க் கதவைத் தாழி்ட்டு வந்து மாலைகளை ஒவ்வொன்றாக அவர் கழுத்தில் போட்டு தோள்களைப் பற்றி முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

”என்னைக் கூடத்தான் நீங்க அடிச்சதில்லே. அதிர்ந்து சொன்னதில்லே” என்று மார்பில் தலையைச் சாத்திக் கொண்டாள்.

”உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்ச காலம். ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல. அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக்கிட்டுப் போக்கணுமா? அடிச்சு யாரைத் திருத்த முடியும்? ”

”ராட்சசன் மாதிரி கோச்சுக்க வாணாம். ஆம்பிளையா இருக்கறத்துக்காவது ஒரு தடவை கோபம் வர வேணாம்?”

”வராமயா இருக்கும்?”

”வெளியிலே காமிக்கணும்”

”அதுக்குத்தான் பால்காரி, வேலைக்காரி எல்லாம் இருக்கறாங்க உனக்கு. நான் வேற கோச்சுக்கணுமா?”

”பள்ளிக்கூடத்திலே அடிக்காம, அதட்டாம இருக்கமுடியுமா?”

”இருக்கமுடிஞ்சுதே!”

பரவசமாகப் பார்த்துவிட்டு அவர் மீசையை இழுத்துவிட்டு ”காபி சாப்பிடறீங்களா?” என்று நகர்ந்து நின்றாள் மகிமை.

அவள் உள்ளே விரைந்தபோது, தன் பிராணனே இன்னோர் உடம்பு எடுத்து விரைவது போலிருந்தது. மேலே சுவரைப் பார்த்தார். முள்முடியுடன் அந்த முகம் கருணை வெள்ளமாகப் பொழிந்து கொண்டிருந்தது. நாலைந்து படம் தள்ளி இன்னொரு படத்தில், அதே முகம் ஓர் ஆட்டுச் சிசுவை அணைத்துக் கொண்டிருந்தது.

கண்ணுசாமி சொன்னது அப்படியே உண்மைதான். முப்பத்தாறு வருஷ உத்தியோகத்தில் ஒரு பையனைக்கூட அடிக்கவில்லை. அதட்டிப் பேசவில்லை அவர்.

சுபாவமே அப்படி. லூயிசா பிறந்து பள்ளிக்கூடம் சேர்ந்து ஆறுவயதில் ஏதோ விஷமம் பண்ணியதற்காக, வாத்தியாரிடம் அடி வாங்கிவிட்டது. அந்த வாத்தியார் ஸ்கேலால் அடித்தபோது சட்டைக்குள் இருந்த கோடைக்கட்டியின் மீது பட்டு… அப்பப்பா! – அன்று துடித்த துடி! அதைப் பார்த்ததும் சுபாவத்தை சங்கல்பமாகச் செய்துகொண்டார் அனுகூலசாமி. எல்லோரும் செய்த பாவங்களுக்குத் தன் உயிரை விலை கொடுத்தானே. அவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் சேர்த்துத்தான் கொடுத்தான். அந்த உறுதி முப்பத்தாறு வருஷமும் ஒரு மூளி விழாமல் பிழைத்து விட்டது. இல்லாவிட்டால், பதவியை விட்டு ஓய்வு எடுக்கிற எந்த வாத்தியாரை மேளதாளத்துடன் வீடுவரை கொண்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

காப்பிப்போட்டுக்கொண்டுவந்து கொடுத்தாள் அவர் மனைவி. வாசலில் ஏதோ சத்தம். மனைவி போய்க் கதவைத் திறக்கிறாள். ஆறுமுகம்.. நாட்டாண்மைக்காரர் போன்று நடந்துகொள்ளும் வகுப்பின் ‘மூத்த’ பையன். கூடவே அவரிடம் படித்த இன்னொரு பையன்.. சின்னைய்யா. நாற்பது வயது மதிக்கத்தக்க, கழுத்தில், காதில், மூக்கில் ஒன்றுமில்லாத ஒரு பெண்ணும் அருகில் நிற்கிறாள். அனுகூலசாமி குழப்பத்தோடு பார்த்து, என்ன விஷயம் என்று கேட்கிறார் ஆறுமுகத்திடம். சின்னைய்யா பாக்கணும்னு சொன்னான் சார். இது அவனோட அம்மா என்று சொல்கிறான் அவன். அம்மா அனுகூலசாமியை வணங்குகிறாள். என்ன சின்னைய்யா என்று அவர் கேட்டும், ஒன்றும் சொல்லாது, தலைகுனிந்து அழுகிறான் சின்னைய்யா. துணுக்குறுகிறார் அனுகூலசாமி. என்ன பிரச்சினை? அவருக்கும் உடனே ஒன்றும் ஞாபகம் வரமாட்டேன் என்கிறது..

கதையை மேற்கொண்டு எப்படி நகர்த்திச்செல்கிறார் தி.ஜானகிராமன்? வாசியுங்கள் அன்பர்களே அவருடைய ‘முள்முடி’ சிறுகதை.

லிங்க்: https://azhiyasudargal.wordpress.com/2012/02/09/முள்முடி-தி-ஜானகிராமன்/

நன்றி: அழியாச்சுடர்கள் இணையதளம்.

**

15 thoughts on “முள்முடி – தி.ஜானகிராமன் சிறுகதைபற்றி

  1. ஆஆஆஆவ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ.. பார்த்தீங்களோ பெண்களுக்கே எதிலும் முதலிடம்… பெயரிலும்.. ஜானகி…ராமன் ஹா ஹா ஹா..

    Liked by 1 person

  2. //பள்ளிக்கூடத்துக்கு இனிமேல் போக முடியாது. அவருக்கு வயது அறுபதாகி விட்டது. ஓய்வு கிடைத்து விட்டது.//

    இதுதான் நம்மவர்களிடம் இருக்கும் மனப்பான்மை எனக்குப் பிடிப்பதில்லை.. ஓய்வுக்கு வயது ஒரு காரணம் இல்லை.. 60 ஆனாலோ இல்லை ஓய்வு கிடைத்து விட்டாலோ.. உன் வாழ்க்கை முடிஞ்சு போச்சு வயசாகிட்டுது ஓரமா இரு என்பதுபோல வீட்டிலிருப்போரே ஒதுக்கி விடுவார்கள்.

    வயசில் என்ன இருக்கிறது.. 60 ஆவது பிறந்ததினம் வந்ததும் உடம்பு மனம் எல்லாமே சுவிஜ் ஐ ஓவ் பண்ணுவதுபோல ஓவ் ஆகிவிடுமோ.. இந்த விசயத்தில் வெள்ளையர்களைப் பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

    இப்போ சாகும் வயது 100 ஆக உயர்ந்திருப்பதாக அறிக்கைகள் சொல்லுது அப்போ 60 என்பது பாதி வயதுதானே… ஓய்வெடுத்தபின் உற்சாகமாக உலகம் சுற்றலாமே..

    ஓவராப் பொயிங்கிட்டனோ?:)

    Like

  3. //”ராட்சசன் மாதிரி கோச்சுக்க வாணாம். ஆம்பிளையா இருக்கறத்துக்காவது ஒரு தடவை கோபம் வர வேணாம்?”//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆம்பிளையாக இருப்பதற்கான தகுதி இதுவோ? விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போயிடுறேன்ன்ன்.. பொறுக்க முடியுதில்லை:))

    Like

  4. //கதையை மேற்கொண்டு எப்படி நகர்த்திச்செல்கிறார் தி.ஜானகிராமன்? வாசியுங்கள் அன்பர்களே அவருடைய ‘முள்முடி’ சிறுகதை.//

    ஹா ஹா ஹா இப்பூடி முடிச்சிட்டீங்களே சரி சரி இப்போ இல்லை பின்பு போய்ப் படிக்கிறேன்.

    Like

    1. @ athiramiya :
      ரிடையர்மெண்ட், ஆம்பிளை, கோபம் ..அது, இதுன்னு பொயிங்கினா போதுமா!
      கதையை எப்போது படிக்கப்போகிறீர்கள்?

      Like

  5. ஏற்கெனவே அந்தத் தொகுப்பில் ஹூஸ்டனில் மீனாக்ஷி கோயில் நூலகத்தில் எடுத்துப் படிச்சிருக்கேன். இப்போ மீண்டும் படிச்சேன். என்ன சொல்வது! யாராக இருந்தாலும் நுணுக்கமாக யோசிச்சால் சின்னத் தப்பாவது பண்ணி இருப்பாங்க தான்! இங்கே அனுகூலசாமியும் அப்படித் தான்! என்றாலும் நம் மனதில் மதிப்புக் கூடத் தான் செய்கிறது! குறையவில்லை! சம்பவங்களைக் கண்ணெதிரே கொண்டு வந்து விட்டார் தி.ஜா.

    Liked by 1 person

    1. @ கீதா சாம்பசிவம்:.. என்றாலும் நம் மனதில் மதிப்புக் கூடத் தான் செய்கிறது! குறையவில்லை! //

      அதுதான் திஜா வின் எழுத்து ஜாலம்!

      Like

    1. @ திண்டுக்கல் தனபாலன் : ஓ! உங்களுக்கு இது மறுவாசிப்பா! நல்லது.

      Like

  6. “தேவன் மகன்… முள்முடி சுமந்தான்… இவனல்லவோ ..” என்று ஒரு எஸ் பி பி பாட்டு வரும். சட்டென அது நினைவுக்கு வந்துவிட்டது.

    Liked by 1 person

    1. @ ஸ்ரீராம்: தேவன் மகன்… முள்முடி சுமந்தான்… இவனல்லவோ ..” //

      இப்படி ஒரு பாட்டு உண்டா? உருகித்தான் பாடியிருப்பார் எஸ்பிபி.

      ஏசுவின் அழகான படங்களை சிறுவயதில் நண்பர்கள் வீட்டில், சர்ச்சில் என்று ரசித்திருக்கிறேன்.

      Like

  7. ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் தந்ததற்கு நன்றி. நல்ல வேளை கலையை கலைக்காக மட்டுமே ரசித்த நல்ல ரசிகர்கள் இருந்த கால கட்டத்தில் தி.ஜ.ரா வாழ்ந்திருக்கிறார். இப்போது இப்படப்பட்ட கதையை எழுதியிருந்தால், கிருத்தவர்களை உயர்த்தி, இந்துக்களை மட்டப்படுத்தியிருக்கிறார். இது கிருத்தவ சதி என்று உளறியிருப்பார்கள்.

    Liked by 1 person

    1. @Banumathy V. //:…இப்போது இப்படிப்பட்ட கதையை எழுதியிருந்தால்..//

      நீங்கள் சொல்வது சரிதான். இலக்கியம் தாண்டி, கலைதாண்டி எதெதையோ யோசிக்கவைக்கும் கஷ்டகாலம் இது. படைப்பாளிக்கு சோதனைக்காலம்..

      இந்தக்கதையை இரண்டாவது தி.ஜா. கதையாக பதிவு செய்கையில் நானும் தயங்கினேன். சிலர் ‘சாதி’ எனும் prism-மூலம் பார்க்க ஆரம்பித்துவிட்டால்,ஒரு நல்ல கதையை நழுவவிட்டுவிடுவார்களே என்று. அதனால் அவருடைய ’அக்பர் சாஸ்திரி’யைப் பதிவு செய்யலாமா என்றும் யோசித்தேன். பிறகு ஒன்றும் ஆகாது ..இதையே போட்டுவிடுவோம் என முடிவு செய்தேன்.

      Like

Leave a comment