அதுவும் இதுவும் – 2

தொடர்ச்சி . .

இன்னொரு பாய் ஞாபகத்திற்கு வருகிறது. இல்லை, வருகிறார். இது பாய் (Bhai). பத்துப் பன்னிரண்டு வயதுப் பையனாக, நான் கிராமத்து சிறுவர்களோடு வீதிகளில் உலவியபோது பரிச்சயமான பாய். உப்பு பாய். உப்பு ராவுத்தர் என்றும் அழைக்கப்பட்டதுண்டு. உப்புமூட்டை வைத்த ஒற்றை மாட்டுவண்டியில் வருவார். இல்லை. நான் சரியாக சொல்லவில்லை. மாட்டுவண்டியில் உப்பு வரும். மாடு இழுத்துவரும். இவர் மாட்டின் தும்பைப் பிடித்துக்கொண்டு ஒரு கையால் வண்டியைத் தள்ளிக்கொண்டே நடந்து வருவார். ஏன் வண்டியில் ஏறி உட்காராமல் நடந்தே வருகிறார். ரொம்ப நாளானது சிறுவர்களான எங்களது மண்டையில் இது ஏற. மாடு பழையது. அதாவது வயதானது. மெலிந்துமிருந்தது. வெகு சிரமப்பட்டுத்தான் வண்டியை இழுத்தது. அதற்கு மேலும் பாரமாகிவிடக்கூடாது என்று தன் வண்டியிலேயே ஏறி உட்காரமாட்டார் பாய். மாறாக, மாடிழுக்க, வண்டியைத் தானும் தள்ளிச் செல்வார் எங்கள் பாய். உப்பு ராவுத்தர். மற்றபடி அவர் பெயர்தான் என்ன? யாருக்கும் தெரியாது. யாரும் கேட்டதில்லை. அதனால் அவரும் சொன்னதில்லை.

ஊரின் எல்லையில் அவர் குரல் கேட்டாலே, எங்கோ கோலிக்குண்டு விளையாடிக்கொண்டிருக்கும் நாங்கள் ஜாலியாகிவிடுவோம். அவர் ஊருக்குள் நுழையவும் நாங்கள் ஓடிச்சென்று வரவேற்போம். சந்தோஷத்தில் அவர் முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு. ‘என்னடா, பயல்களா!’ என்பார். காது கொஞ்சம் மந்தம் அவருக்கு.வண்டியை அவரோடு சேர்ந்து தள்ளிக்கொண்டு ஊருக்குள் வருவோம். ‘உப்போ… உப்பு !’ என்று கம்பீரமாக ஊரெங்கும் சிதறிப் பரவும் பாயின் குரல். நாங்களும் சேர்ந்து ’உப்போ .. உப்பு..!’ என்று கத்துவோம். சில பொடிசுகள் வண்டியின் பின்புறத்துக் குச்சியைப் பிடித்துக்கொண்டு தவ்வி ஏற முயற்சிக்கும். ’டேய், இறங்குங்கடா! போட்டேண்ணா..’ என்று தார்க்குச்சியை ஓங்குவார். வாண்டுகள் பயந்துபோய் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாய் குதித்துவிடுங்கள். சிரித்துக்கொள்வார் பாய்.

சின்னச் சின்னத் தெருக்களில் உப்பு வண்டி ஆங்காங்கே நிற்கும். இவரது கூப்பாடு கேட்டு கிராமத்துப் பெண்கள் அலர்ட் ஆகிவிடுவார்கள். ’உப்பு ராவுத்தர் வந்துட்டார்டி!’ என்று பேசிக்கொள்வார்கள். வீடுகளிலிருந்து சின்னச் சின்னப் பெண்டுகள் சிறுகூடை, கொட்டான்களோடு வெளியே ஓடிவருங்கள். ஒரணாவுக்கு ஒரு படி உப்பு. கல் உப்பு. கும்பாச்சியா அளப்பார் பாய். ரெண்டு படி வாங்கினா, ஒரு கை நிறைய உப்பு எக்ஸ்ட்ராவா அள்ளிப்போடுவார். அவர் கை பார்க்கப் பெரிசா இருக்கும். நாங்கள் ஆச்சரியத்தோடு அவர் பேச்சையும், செய்கைகளையும் கவனிப்போம். கிராமத்துப் பெண்களுக்கும் அவரது பேச்சும், தாராள மனசும் பிடிக்கும். அவரும் ஏதாவது சொல்லி அவர்களைச் சீண்டாதிருக்கமாட்டார். ’ஒரு படி போராதும்மா.. இந்தா! பிடி இன்னொன்னு!’ என்று மேலும் அளக்க ஆரம்பிப்பார். பெண்டுகள் பயந்துபோய் ’ஐயோ! ராவுத்தரே! போட்றாதீங்க.. வேணாம். எங்கிட்ட காசு இல்ல!’ என்று பின்வாங்க முயற்சிக்குங்கள். ’அட! விடு புள்ள! காசு..பெரிய காசு! இல்லாட்டி என்ன. அடுத்த வாரம் குடு. இப்ப பிடி கூடையைச் சரியா!’ என்று செல்லமாக அதட்டுவதோடு, கூடையில் நிறைய உப்பைப் போட்டுவிடுவார் பாய். வாங்கவந்த பெண்களும் ’ஐயய்ய! இந்த பாய் சொன்னா கேக்கமாட்டாருல்ல!’ என்று சிணுங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டு எடுத்துக்கொண்டுபோவதைப் பார்த்து லேசாக சிரித்துக்கொள்வார் பாய். நாங்களும் அங்கு நடப்பதையெல்லாம் அதிசயமாய்ப் பார்த்து ‘பார்றா! நம்ம பாய் காசு வாங்காமயே அள்ளிப்போடறாரு!’ என்று பேசிக்கொள்வோம்.

மாதம் ஒரு முறை என்பதாக வருவார். வந்தால், ஊருக்குள் இரண்டு மூன்று மணிநேரம் சுற்றிக்கொண்டிருப்பார். அப்புறம் மெதுவாக வண்டியைத் தள்ளிக்கொண்டு அடுத்த கிராமத்தை நோக்கிச் செல்வார். நாங்கள் அவர் பின்னாடியே ஊரின் வெளிச்சாலை வரை சென்று வழியனுப்புவோம். அவரும் பின்வரும் எங்களைத் திரும்பிப் பார்த்து ’போங்கடா கண்ணுங்களா! போய் வெளயாடுங்கடா!’ என்று சொல்லிவிட்டுப் போவார். அவரது வண்டி மெல்ல அசைந்து அசைந்து போவதை சோகத்தோடு பார்த்துக்கொண்டு கொஞ்சநேரம் நின்றிருப்போம்.

பார்க்கணும்போல இருக்கு. இப்போது இருக்காரா அந்த பாய்? அப்போதே நாப்பத்தஞ்து ஐம்பது வயசிருக்குமே அவருக்கு?

*

இப்படி என்னென்னவோ சொல்லிவிட்டு, எல்லாவற்றுக்கும் காரணமாகும், ஒத்துழைக்கும் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாவிட்டால் எப்படி? மனிதனைப் பொறுத்தவரையில், என்ன நினைத்து ஆண்டவன் இதனைப் படைத்தானோ? ஒவ்வொரு முகத்திலேயும், மூக்குக் கீழே ஒரு பிரதான துவாரம். வெறும் ஓட்டை என்று அலட்சியப்படுத்திவிடக்கூடாதே என்று மேலும் கீழுமாக உதடுகள் எனும் சங்கதிகளைப் பொருத்தி அலங்கரித்துவைத்தான் அவன். உதடுகள் பிரிந்தால், பார்க்கும் கண்களை மேலும் கவரவென வெள்ளையாக, வரிசையாக சிலவற்றை அடுக்கிக் கவர்ச்சி கூட்டினான். மற்றவர்களால் கொஞ்சம் பார்த்து ரசிக்கப்படட்டும் என்றுதான், வேறென்ன. சிலர் விஷயங்களில், இதுவே பெரும்பிரச்னையாகப் போகும் என்பதை அவன் அறிந்திருந்தானில்லை. வெள்ளைவரிசை திறந்தால், ஒரு அப்பாவிபோல் உள்ளே பிங்க் கலரில் ஒன்று படுத்துக் கிடக்கும். ஆனால், சமயத்துக்கு ஏற்றபடி, எந்தப் பக்கமும், திடீரெனப் புரளும் சாமர்த்தியம் இதற்குண்டு. சில சமயங்களில் பெரும் தாக்குதலுக்கும் இது உள்ளாகிவிடும்: ‘அப்படிப் பேசின அந்த நாக்க இழுத்துவச்சு அறுக்கணும்!’ (கடவுள், அதான் அந்த படைப்பாளி – ஒரு காம்ப்ளிகேட்டட் கேரக்டர் என்பதற்கு இதனுடைய சாகசங்களை கவனித்தாலே போதுமானது). இப்பேர்ப்பட்ட மனித வாயைப் படைத்தபின், அதன் வழியாக மனிதன் சாப்பிடலாம், வேண்டுமானால், கொஞ்சம் சத்தமும் எழுப்ப வழி செய்திருக்கிறேன் என்பதாக அந்த சிருஷ்டிகர்த்தா நினைத்து திருப்திப்பட்டு, கால்நீட்டிப் படுத்துவிட்டான்போலும்.

படைத்தவன் என்ன நினைத்தாலென்ன? மனிதன் இந்த வாயை, இந்த லோகத்தில் பயன்படுத்தும் விதமிருக்கிறதே, அதை ஏன் கேட்கிறீர்கள்- சொல்லி மாளாது. ‘ஐயோ.. இவனுக்கும் வாயின்னு ஒன்னு இருக்கு. அது எப்போத்தான் மூடுமோ தெரியலையே !’ என்று சிலர் அங்கலாய்க்கும் அளவுக்குப்போய்விடும் சிலரது வேண்டாத வம்புப்பேச்சு. வாய்வீச்சு, வாய்ச்சவடால், வாய்க்கொழுப்பு என்றெல்லாம் விதவித விமரிசனங்களுக்கும் இதுவே காரணம். சிலருக்கு, குறிப்பாக அப்பாவிப் பெண்களுக்கு, ’வாயாடி’ என்றெல்லாம் பட்டம் வாங்கிக்கொடுத்த பெருமையும் இந்த வாய்க்கு உண்டு.

மேலும் சிலர் விஷயத்திலோ, வாயைத் திறந்தாலே போதும் – அபத்தக்குவியலாய், ஆபாசச் சிதறலாய் வார்த்தைகள் தெறிக்கும் – இடம், பொருள், ஏவல், இங்கிதம் எல்லாம் ஒரு பொருட்டில்லை இங்கே. அத்தகைய வாய்க்கெதிரே வருவதற்கே அஞ்சி ஓடுவார்கள் பலர். சிலநேரங்களில், சில சர்ச்சைக்குரிய விஷயங்களின்போது இது பெரியதொரு பரிமாணமெடுக்கும். அப்போது இதற்கு ’ஊர்வாய்’ என்றும் பெயர் வந்துவிடும். ‘ஊர்வாயை அடக்கமுடியுமா..’ என்று ஒருவருக்கொருவர், அதே வாயை வைத்தே, அதன் மூலமாகவே சொல்லிக்கொள்வார்கள்! வாய். மனிதனின் மகாவாய். தான் நினைத்ததையும் தாண்டி, தன் இஷ்டத்துக்கு இயங்கிக்கொண்டிருக்கும் இதைப் பார்த்துக் கதிகலங்கிப்போய்த்தான் கடவுள் கீழிறங்கி வருவதில்லை என்று சொல்லும் வாய்களுமுண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

**

14 thoughts on “அதுவும் இதுவும் – 2

  1. உப்பு ராவுத்தர் அதிசய மனிதராய்த்தான் இருந்திருக்கிறார். முக்கியமாய் மனிதராய் இருந்திருக்கிறார். என் சிறுவயது காய்கறிக்காரர் ஒருவரை நினைவு படுத்துகிறார்.

    வாய் சமாச்சாரம் புதுசா என்ன… புது தலைமுறைகளில் வாயால் கெட்டவர்கள் இருக்கிறார்களே…

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம் :

      சில மனிதர்கள் நம்மை அறியாமலேயே நம்முள் ஆழ்ந்து இறங்கிவிட்டவர்கள். அது வெகுநாட்களுக்குப் பிறகுதான் நமக்கே தெரியவருகிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படிச் சிலர் இருப்பார்கள்தான்.

      Like

  2. @ Sriram:

    Gulzar, RD Burman, Kishore – starred by Sanjeev Kumar ! What a marvelous combination in Namkeen ..
    பாட்டைக் கேட்டேன். சஞ்சீவ் குமாரின் சோகமுகத்தில்பட்டுத் தெறிக்கும் கிஷோர் குமாரின் குரல்.
    பாடலின் நடுவில் ஒரு வரி: ..गुजर जाती है बस उस पे गुजर करते है (The one who is gone, we live on that person’s memories.. we live on memories..)

    சஞ்சீவ் குமார் எனக்கு மிகவும் பிடித்த ஹிந்தி நடிகர்களில் ஒருவர். .கிடைத்தால் அவரது அங்கூர் (திராட்சை) பாருங்கள். குல்ஸார் பாடலெழுதி இயக்கிய 1982 படம்.

    Like

    1. கேட்டுக்கொண்டிருந்த இந்தப் பாடல் சற்று உங்கள் இன்றைய பதிவுக்கு ஒத்து வருவது போல இருந்ததால் உடனே லிங்க் கொடுத்தேன். அங்கூர் பார்த்ததில்லை. ‘ஆந்தி’யே கையிலேயே டிவிடி இருந்தும் பார்க்காமல் (ஆர்வமாக இருந்தேன். கொஞ்சம் இந்திரா காந்தி கதை என்று சொன்னார்கள்) டிவிடி காணாமலேயே போனது!

      Liked by 1 person

  3. வாயென்பது வடிவம் அன்று.
    வாய் தரும் சொற்களின் படிவம் அது.
    கலத்தின் வடிவே நீரின் வடிவாம்.
    சொற்களின் வடிவே வாயின் வடிவாம்.

    வாயென்பது அரிக்கஞ்சட்டியல்ல.
    அடுத்தவரை அரித்தெடுப்பதற்கு
    வாயென்பது வடைச்சட்டியுமல்ல
    வார்த்தைகளால் வறுத்தெடுப்பதற்கு..

    வாயென்பது ஓட்டைசால் அல்ல
    உள்ளதெல்லாம் உளறிக்கொட்டுதற்கு.
    வாயென்பது வானொலிப்பெட்டியல்ல
    கேட்பாரற்றுப் பேசித் திரிதற்கு

    வாயென்பது எரிமலையல்ல
    வெறுப்பெனும் நெருப்பைக் கக்குதற்கு.
    வாயென்பது இருள்குகையல்ல
    அருளின்றி மருளச் செய்வதற்கு.

    வாயென்பது தம்பட்டம் அல்ல
    பொல்லாப் பெருமை பிதற்றுதற்கு.
    வாயென்பது மயானமுமல்ல..
    பொழுதெலாம் மௌனம் காப்பதற்கு.
    வரிகள் உபயம் கீதா மதிவாணன் –வாய் தந்தென கூறுதியோ

    Liked by 1 person

    1. @Balasubramaniam G.M :
      அடடா! சுவாரஸ்யமாக எடுத்துப்ப் போட்டிருக்கிறீர்களே. இந்த கீதா மதிவாணன் யாரோ ?

      Like

  4. உங்கள் ஊர் பாய் சங்ககால உமணர்களை நினைவுபடுத்தினார்.

    ‘தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
    பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
    நெடுநெறி ஒழுகை நிலவுமணல் நீந்தி
    அவண் உறை முனிந்த ஒக்கலோடு புலம்பெயர்ந்து
    உமணர் போகலும்’
    அகநானுறு 183 : 1-5
    உமணர் என்னும் உப்பு வாணிகர் மாட்டு வண்டிகளில் நெல்லை ஏற்றிக் கொண்டு போய் பண்டமாற்று முறையில் உப்பிற்கு மாற்றினார்கள். காசு கொடுத்து வாங்காமல் பண்டங்களை மாற்றினார்கள். நெல்லுக்கு மாற்றிய உப்பை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போனார்கள்.

    ‘உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி
    அதர்படு பூழிய சேண்புலம் படரும்
    ததர்கோல் உமணர் போகும் நெடுநெறிக்
    கணநிரை வாழ்க்கை’

    உமணர் உப்பு வண்டிகளை ஒட்டிக் கொண்டு கூட்டங் கூட்டமாகச் சென்றார்கள்.

    இந்த வர்ணனைகள் எவ்வளவு சுவையானவை?

    Liked by 1 person

    1. @ முத்துசாமி இரா :

      ஆஹா! அகநானூறைக் கொண்டுவந்து அதகளப்படுத்திவிட்டீர்கள். உமணர் என்பது உப்பு வணிகர் என்று இப்போதுதான் புரிந்தது. சுவையான கருத்துக்கு நன்றி.

      Liked by 1 person

  5. ///இன்னொரு பாய் ஞாபகத்திற்கு வருகிறது. இல்லை, வருகிறார். இது பாய் (Bhai). /
    ஹா ஹா ஹா நான் பாய் என்றால் bye ,.. இதைத்தான் நினைப்பேன்..

    சின்ன வயசு நினைவுகள் என்றும் இனிமையானவை.. மனதில் அப்படியே பதிஞ்சிருக்கும்.. கண்ணை மூடிச் சிந்தித்தால், படம்போல விரியும்.

    நாக்குக்கு நரம்பில்லையாம், அதனால அது எப்படியும் பேசுமாமே:).

    Liked by 1 person

  6. @ athiramiya :

    நீங்கள்மாட்டுக்கு bye சொல்லிவிட்டு ஓடிப்போய்விடுவீர்கள் என்றுதான் Bhai என்று ப்ராக்கெட்டில் எழுதினேன்!

    புரள்வதற்கு வசதியாக இருக்கட்டுமே என்றுதான் பகவானும் படைத்திருப்பான் நரம்பில்லாமல்!

    Like

  7. உப்பு ராவுத்தர் போலவே ஒரு தாத்தா சைக்கிளில் உப்பு மூட்டை வைத்து கொண்டு வந்து விற்பார். உப்பு அவ்வளவு வெள்ளையாக இருக்கும், அவரும் சிரிக்கும் போது பற்கள் வெள்ளையாக இருக்கும். இப்போது சுத்தம் என்று யாரும் இது வருபவர்களிடம் உப்பு வாங்குவார்களோ?

    பழைய நினைவுகள் அருமை.

    கீதா மதிவாணன் பதிவர்.
    கவிதை, கட்டுரை, கதை, மொழிபெயர்ப்பு கதைகள் என்று எழுதுவார்,
    பூக்கள், பறவைகள், விலங்குகள் என்று எல்லாம் எழுதுவார். பன்முக திறமையாளர்.

    ஸ்ரீராம் பகிர்ந்த பாடல் முன்பு விவிதபாரதியில் கெட்டு மகிழும் பாடல்.

    வாய் பற்றி சொன்னது உண்மை.

    Liked by 1 person

    1. @ கோமதி அரசு:

      அவர்கள் ஒரு காலத்திய மனிதர்கள். இத்தகைய மனிதர்கள் இப்போது மறைந்துவருகிறார்களோ என்று கவலையாக இருக்கிறது.
      கீதா மதிவாணன்பற்றிச் சொன்னதற்கு நன்றி.

      Like

Leave a comment