அதுவும் இதுவும் . .

‘தரமாட்டியா? நா ஒன்னோட காய்! பேசமாட்டேன் போ..’ பிஞ்சு வயதில் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்திய வார்த்தை. எத்தனையோ தடவை காயாகி, அடுத்த நாளே மறக்காமல் பழமாகி, சிரித்து, சேர்ந்து விளையாடிக் கழிந்த பொன்னான நாட்கள். பொன்னாள் அதுபோலே .. வருமா இனிமேலே.. என ஏங்கவைக்கும் ஒரு காலம்.

இன்னொரு காயும் உண்டு. மரத்தில், செடியில் காய்ப்பது. ஆனால், இதனைக் கண்டால் சிலருக்கே பிடிக்கும். பலருக்கோ சிரமமாக இருக்கும். பழம் சாப்பிடவே பிறந்தவர்கள் அவர்கள். அதுவும் யாராவது உரித்து, விண்டு வாயில்போட்டால், தோல் சீவிச் சின்ன சின்னத்துண்டுகளாகக் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று பழத்தின் மீது ஆசையிருந்தும், அடுத்தவரின் உதவியை நாடும் சோம்பேறிகள். இவர்களிடம் காயின் மகிமையைப்பற்றிப் பேசி என்ன பயன்? காய் தரும் சுகத்தைக் கனி தருமா? மாங்காய், கொய்யா, கலாக்காய், எலந்தை இவற்றையெல்லாம் காயாகவோ, செங்காயாவாகவோ –அதாவது பழுப்பதற்கான அறிகுறியுடன் சிவப்போ மஞ்சளோ மேலிடும் பச்சைக்காயாக-(குறிப்பாக எலந்தை) தின்று களித்தவர்க்கே அதன் தனி ருசி தெரியும். இதற்கெல்லாம் வாயில் பல்லும், மனதில் சின்னப்பிள்ளைகளின் துள்ளலும் இருக்கவேண்டும். அப்போதுதான் அனுபவிக்கமுடியும்! மற்றவர்கள் உட்கார்ந்து சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்க்கலாம்..

*

ஒருகாலத்தில் நம்நாட்டில், வீடுகள் என்பன அவை பழசோ புதுசோ, தனிவீடுகளாயிருந்தன. வீடுகளில் திண்ணையென்று ஒன்று, இரண்டு பக்கமும் பரந்திருந்தது. சிறிய முன்வாசற்பகுதியைக் கடந்து உட்சென்றால், கூடமும் வந்தது. கூடவே இத்தகைய வீடுகளில் பாயும் இருந்தது. இப்போதிருப்பதுபோல் ஃபர்னிச்சர், சோஃபா, குஷன் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. யாராவது வீட்டுக்கு வந்தால் திண்ணையிலேயே சந்தித்து, உட்கார்ந்து பேசி அனுப்பிவிடுவார்கள். ரொம்ப சொந்தமாக இருந்து, நெருக்கமானவர்களாக இருந்தால், நிலைமைக்கேற்றபடி கூடத்துக்குள் அழைத்துவரப்படுவார்கள். அங்கே அவசர அவசரமாக சாமான்களை ஓரமாக நகர்த்திவிட்டு, சுவரோரமாகப் பாய்விரித்து பவ்யமாகச் சொல்வார்கள்:’ அடடே! கீழே ஒக்காராதீங்கோ. ஒரே தூசி. இப்பிடிப் பாயில ஒக்காருங்கோ. காப்பி போடட்டுமா.. ?’ என்று வீட்டுப் பெண்கள் மென்மையாகக் கேட்பார்கள். இப்படியெல்லாம் ஒரு சமூகத்தின் கலாச்சார அடையாளமாகத் துணை வந்தது இந்தப் பாய். பாயில் ஓலைப்பாய், கோரைப்பாய், உட்காரத் தோதான தடுக்கு என்றெல்லாம் வகைவகையாக உண்டு. கல்யாணத்தின்போது ஸ்பெஷலாக கலர் கலராக மணமெக்கள் பெயரெழுதி ஆர்டர் கொடுக்கப்பட்டு செய்யப்படும் கல்யாணப்பாய்களும் இருந்தன. அப்புறம் நுழைந்தன ப்ளாஸ்டிக் பாய்கள். கோரைப்பாய்களும், ஓலைப்பாய்களும் பயந்துபோய் ஓடியே போய்விட்டன வீடுகளை விட்டு. துஷ்டனைக் கண்டதால் தூர விலகிவிட்டன போலும்.

– தொடரும்

*

30 thoughts on “அதுவும் இதுவும் . .

  1. பதிவைப்படித்துக்கொண்டுவரும்போதேநல்லபாடலொன்றைநினைவுபடுத்திவிட்டீர்கள். அதைக்கேட்டுவிட்டுவரவா?

    Liked by 1 person

    1. நோஓஓஓஓஓஓஒ இது ஞாயமில்லையாக்கும்:) மீ தான் 1ஸ்ட்டென ஓடி வந்தேன்ன்ன்:)) சரி போகட்டும் நீங்க டென்ஷனாகிடாதீங்க ஸ்ரீராம் ஹா ஹா ஹா:).

      Liked by 1 person

      1. @ athiramiya : அமைதி.. அமைதி.. ஃபர்ஸ்ட்டூ, செகண்டூ எல்லா நம்பரும் ஒங்களுக்குத்தான்!

        Like

  2. சமீபத்தில் எங்கள் குலதெய்வம் கோவிலுக்குப் போனபோது அங்கே இருந்த எங்கள் உறவினரின் இதுபோன்ற பழைய மாடல் வீட்டுக்குச் சென்றேன். ஆவலுடன் உள்ளே நுழைந்தால் நடுவே பெரிதாக இருந்த முற்றத்தை மூடி பெரிய ஹால் ஆக்கி விட்டிருந்தார்கள். தோட்டம் செல்லும் வழியும் மாறி ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. இப்போ… சமீபத்தில் 1997 இல் கூட மாறாதிருந்தது. அவர்கள் வீட்டில் ஹாலில் சுவரில் ஒரு துளை இருந்தது. அதன் வழியே பக்கத்து வீட்டு ஹால் தெரியும். பக்கத்து வீட்டில் அக்னிஹோத்திரம் செய்து கொண்டிருந்த ஒரு பழுத்த பெரியவர் இருந்தார் (அப்போது)

    Liked by 1 person

    1. @ Sriram:

      அந்தப் பழைய வீட்டினில் நுழைந்து பார்த்தபோது உங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் நன்றாகப் புரிகிறது. பழைய வீடுகள், பழைய மனிதர்கள் இவர்களெல்லாம் மீண்டு வரவே மாட்டார்களா ? நாமும் அவர்களைத் தேடிப் போய்விடவேண்டியதுதானா..

      நானும் ஏதேதோ எழுதிக்கொண்டிருந்தேன். ஒன்றும் பூரணத்திற்கு வரவில்லை. அங்கங்கே நின்று என்னைப் பார்த்து முழிக்கிறது. எப்போதோ ஆரம்பித்திருந்தது இது.. என்னவெல்லாம் எழுத நினைத்திருந்தேனோ.. முழுசோ அரைகுறையோ – ஒருதடவைக்கு இருதடவையாகப் படித்துப்பார்த்து உள்ளே போட்டுவிட்டேன்.

      இடையிலே ஒரு மணி நேரம் பழைய பாடல்களாய்க் கேட்டுக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் பி.சுசீலா, ஸ்ரீனிவாஸ், இப்படி.. அதனையும் சரியாகக் கேட்க விடாதவாறு பக்கத்து வீட்டில் அடி, இடி.. சுவரை உடைத்து உட்வர்க் செய்கிறார்களோ.. சுத்தியல் நின்றபோதெல்லாம், விடாமல் மேலே போர் விமானங்களின் பயிற்சி சத்தம்..

      ஏகப்பட்ட சத்தங்களுக்கிடையே நானும் என் பங்குக்கு, அவ்வப்போது சத்தமெழுப்ப முயற்சிக்கிறேன். வாழ்க்கை.

      Like

  3. என் பத்தாவது வயதில் நானிருந்த வீட்டை எங்கள் கிராமத்தில் குடும்பத்துடன் சென்று பார்த்தேன் வீடு அடையாளங்களை தொலைத்து புது மோஸ்தரில் இருந்தது பழைய அ டையாளங்களை நான் விளக்க முற்பட்டபோதுஎன்வீட்டினர்சிறிதும் ஆர்வம்காட்டவில்லை

    Liked by 1 person

    1. @Balasubramaniam G.M :
      என்ன செய்வது? எல்லோருக்கும் பழைய விஷயங்கள் பிடிப்பதில்லை. பழமையிலும் ஒரு க்ளாஸிக் லுக், அதற்கென்றே ஒரு அழகு உண்டு என்றெல்லாம் அவர்களுக்கு சொல்லி பிரயோஜனமில்லை.

      Like

    2. நானும் நான் வாழ்ந்த கிராமத்துக்கு, வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். இதில் நம் உணர்வை, நாம் பகிர நினைக்கும் சம்பவத்தின் தனித் தன்மையை யாருமே புரிந்துகொள்ள இயலாது, நம்முடன் அந்த வீட்டில் வசித்தவரைத் தவிர. அவர்கள், இவன் என்ன ப்ளாபர் பண்ணறான் என்றுதான் நினைப்பார்கள். நாம் வாழ்ந்த இடம், சூழல் நமக்குத்தான் புனிதம், அது நம் உணர்வைத் தட்டி எழுப்பும். மற்றவர்களுக்கல்ல.

      Like

  4. காலையில் வந்து விட்டு ஓடிவிட்டேன், இப்போதான் திரும்ப வர முடிஞ்சுது…

    நீங்க சொன்னது அத்தனையும் உண்மை, பலருக்கு பழத்தை வெட்டி கையில் குடுத்தால் மட்டுமே சாப்பிடுவார்கள்.

    எனக்கும் உண்மையில் காய்தான் அதிகமான பழங்களில் பிடிக்கும், ஆனா என்ன பண்ணுவது காய் சாப்பிடோணும் எனில் வீட்டில் மரம் இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்பிள் காய்கூட மாங்காய்போல சூப்பராக இருக்கும், ஆனா இப்போ எங்கள் வீட்டிலும் இந்த வருடம் 4 காய்கள் காய்ச்சிருக்கே.. ஆனா முதல் காய்கள் என்பதால பிஞ்சில் பிடுங்க மனமில்லை:)..

    Liked by 1 person

    1. @athira: பிஞ்சுக்காய்களை பறிக்காதீர்கள். இன்னும் வரும். மெல்ல பறிக்கலாம். பச்சை ஆப்பிளும் சாப்பிட அருமையானது.

      Like

  5. இன்னொன்று.. ஏ அண்ணன் டமிலில் பிழை விடுறார்ர்.. மீக்கு டமில்ல டி என்பதால கண்டு பிடிச்சுட்டேன்ன்..

    உறிக்கிறதில்லை.. உரிக்கிறது தோலை ஹா ஹா ஹா.

    இன்னொன்று அது கலா அக்கா இல்லையாமே.. களா அக்காவாம்[களாக்காய்] .. அடுத்து எலந்தை என்றா சொல்வது? நாங்க இலந்தைப்பழம் என்போம்ம் ஒரு வேளை இலங்கையில் இருப்பதாலோ?:)

    Like

    1. அதிரா இலந்தை சரியே. எலந்தம் பழம் நு தான் இங்கு சொல்லுறாங்க. எலந்தம் பழம் எலனதம் பழம்…எல் ஆர் ஈஸ்வரியின் பாட்டு கேட்டிருப்பீங்களே! ஒரு வேளை வழக்குமொழியா இருக்கலாம்.

      கீதா

      Like

      1. ஆஆங்ங் அது கீதா, மீயும் ஏ அண்ணனும் ஒரு சமாதானத்துக்கு வந்திட்டோம்:) 50:50 🙂 ஹா ஹா ஹா.

        Like

    2. @ athira: சரி, உரிக்கிறதெனத் திருத்திவிடுவோம். இதற்குமேல் எதையும் திருத்தமாட்டேன்!
      கலாக்காய்தான் நான் சாப்பிட்டது. நீங்க களாக்காய் சாப்பிட்டிருந்தால் நான் என்ன செய்வது?

      இலந்தைப்பழமோ? உங்களுக்கு ரெண்டு விஷயம் தெரியல:
      ஒன்னு: எல். ஆர். ஈஸ்வரி.
      இன்னொன்னு அவரோட பாட்டு: எலந்தப்பயம்.. எலந்தப்பயம்..
      ஒருதடவ கேட்டுட்டு வாங்க படிக்க..!

      Like

      1. ஆவ்வ்வ்வ் அப்போ சரி எனக்கு 50 உங்களுக்கு 50:) விட்டிடலாம் எலந்தையை:)))

        Liked by 1 person

      2. களாக்காய் இதுதான் சரி.

        Like

  6. பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே ஏ அண்ணன் வாழ்க்கை:))… நான் பாய்போட்டு இருக்கச் சொல்ல ரெடியாக இருக்கிறேன், எனக்கும் அது பிடிக்கும், ஆனா வீட்டுக்கு வருவோருக்கு அது பிடிக்காதே, தம்மை அவமதிச்சதாகவே எண்ணுவினம் ஹா ஹா ஹா.

    Liked by 1 person

    1. @athiramiya : ஆமாம், இப்போது பாய் போட்டு உட்காரச்சொன்னால் நம்மை ஒருமாதிரி பார்ப்பினம்!

      பழையன கழிதலும், புதியன புகுதலும் ஒரு வகைக்கு சரிதான். அதற்காக வளர்க்கின்ற பூனை, நாயை விரட்டிவிட்டு, நரியையும், ஓநாயையும் உள்ளே விடலாமா? புதியன இப்படியா புகுவது!

      Like

      1. /// ஒருமாதிரி பார்ப்பினம்!///

        ஆவ்வ்வ்வ் ஏ அண்ணனுக்கு சென்னைத்தமிழ் மறந்து போச்ச்ச்:)) யாழ்ப்பாணத்தமிழ் வந்திட்டுதூஊஊஊஊஊ ஹா ஹா ஹா:)..

        நரி ஓநாய் இல்ல ஏ அண்ணன்.. இப்போ பாம்பு பல்லி ஓணான் இவை வளர்ப்பதுதான் இங்கு பாஸன்ன்ன்ன்:)) ஹையோ ஹையோ… எங்கட மகனின் ஃபிரெண்ட் பாம்பு வளர்க்கிறார் வீட்டில் ஹையோ ஆண்டவா என்ன பண்ணுவது நாம்:)..

        Liked by 1 person

      2. @அதிரா:
        பாம்பும் வந்துவிட்டதா? சுத்தம். பேசாமல் பெரிய பாம்பைக் கழுத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சிவபெருமான் படத்தை வீட்டில் மாட்டிவிடுங்கள். சிவன் சொன்னால்தான் அவன் கேட்பான்!

        Like

  7. கும்பகோணத்தில் எங்கள் இல்லத்தில் திண்ணை இருந்தது. நாங்கள் இருந்த தெருவில் பெரும்பாலும் அனைவருடைய வீட்டிலும் திண்ணை இருந்தது. புதிய வீடுகள் கட்டக்கட்ட அவை தொலைந்துகொண்டிருக்கின்றன.

    Liked by 1 person

  8. @Dr B Jambulingam :

    நீங்கள் கும்பகோணத்துக்காரர். வீடு, வாசல், கோவில், குளமென அழகெல்லாம் ரசித்திருப்பீர்கள். திண்ணையின் அழகே அழகு. அடுக்குமாடி அந்தரங்கள் அதைப் புரிந்துகொள்ளமுடியுமா?

    Like

  9. யாரது ஃபரிஸ்டூஊஊஊஊஊஉனு சொல்லுறது….பதிவு வந்ததுமே பார்த்து நெட்டு பிரச்சனை பண்ணி அப்புறம் வேர்ட்ப்ரெஸ் ஓடு மோதி விளையாடி உள்ளே புக …ஹூம் அதென்னவோ எங்களுக்கு மட்டும் இப்படி ஆகுது இந்த வேர்ட்ப்ரெஸ்ஸோடு….சரி பூஸார் நீங்கதான் ஏகாந்தன் அண்ணா சொன்னது போல் எல்லா நம்பரும் ஹா ஹா ஹா (இதுல வேற என்னவோ குக்கி வேற கேக்குது ஹா ஹா ஹா

    சரி பதிவுக்கு வரேன். அண்ணா நீங்க இப்படி எல்லாம் என்னோட கிராமத்து ஃபீல் கொண்டு வந்துட்டீங்க. ரொம்பவே மிஸ் பண்ணறேன் அண்ணா. இத்தனையிலும் முற்றம் விட்டுட்டீங்களே…ஒரு வேளை தொடரும் ல வருமோ….

    ஆனா பாருங்க கிராமத்துல கூட இப்பலலம் திண்ணை வைச்சு கட்டறுது இல்லை. முற்றம் இல்லை. புதுசா வர வீட்டுல. பழைய வீடுகள்ல இன்னமும் அப்படியேதான் இருக்கு. கொல்லைப்புறம் கிணறு. எங்கூர் கிணத்துல கையால மொண்டு எடுக்கற அளவு தண்ணியாம். பேசாம சென்னைலருந்து ஊருக்கு பேக் பண்ணிடலாமானு பார்க்கறேன். அத்தனை மழை…அங்க.

    இப்பவும் என்னோட அத்தை வீட்டுல திருநெல்வேலில பாய் தான்….ப்ளாஸ்டிக் சேர் இருந்தாலும்….கோரைப்பாய். .. இதோ இங்க எங்க வீட்டுல பாய் உண்டு கோரைப்பாய். நான் தரைல தான் படுக்கும் பழக்கம் என்னை இன்னும் விட்டுப் போகலை. வயசாகும் போது பார்த்துக்கலாம் (இது அதிரா பாட்டிக்கு!!!!! ஹிஹிஹீ)

    சிவப்போ மஞ்சளோ மேலிடும் பச்சைக்காயாக-(குறிப்பாக எலந்தை) // ஹையோ ஹையோ இப்ப சமீபத்துல கூட சாப்பிட்டேனே…செமையா இருக்கும்…

    ரசித்தோம் பதிவை….தொடர்கிறோம்…

    கமென்ட் போச்சானே தெரியலை…என்னவோ போங்க …

    கீதா

    Liked by 1 person

    1. @கீதா:

      கமெண்ட் வந்துவிட்டது. கவலை வேண்டாம்.

      கிராம வாழ்க்கை அருளப்பட்ட பாக்யசாலிகளில் நீங்களும் ஒருவர் என்றறிந்ததில் பெருமகிழ்ச்சி.
      முற்றம். ஆஹா! அதை மறந்துவிட்டால் என்ன மனிதன் நான்! கொல்லைப்புறக் கிணறு..தோட்டம். பட்சிகள். போய்விட்டது அந்த வாழ்க்கை எனக்கு.
      நீங்கள் அவசரமாக கிராமம் போய் பார்த்துவிட்டு வாருங்கள்.

      தரையில்தான் படுக்கிறீர்களா? ப்ரமாதம் உங்கள் பர்ஃபார்மன்ஸ். தரையில் உருள்வதற்கும் தகுதிகள் வேண்டும் இந்தக்காலத்தில்!
      டெல்லி கோவிலில் சகஸ்ரநாம பாராயணத்தின்போது, ஐம்பதுகளின் மாமிகள் உட்கார்ந்தால் எழுந்திருக்கவே சிரமப்படுகிறார்கள் என்பதையும் கவனித்தேன். உடம்பும் ஒரு வரப்பிரசாதம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரித்தான் வந்து சேர்ந்திருக்கிறது!

      Like

      1. //யாரது ஃபரிஸ்டூஊஊஊஊஊஉனு சொல்லுறது//

        அது நாந்தேன் கீதா:), சிரீராம் இல்லை:)) ஹா ஹா ஹாஅ.

        Like

  10. நல்ல ரசனையான பதிவு. எங்கள் வீட்டில் இம்முறை மாங்காய், பழுக்க இருந்த மாங்காய், மாம்பழம் எல்லாம் சுவைத்தேன் அதுவும் வீட்டுத் தோட்டத்திலிருந்து. அதனால் கொஞ்சம் கூடுதல் இனியவன் ஆனேன். அதற்காக இதை விடவும் முடியவில்லை.

    நானும் தமிழ்நாட்டில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். அந்த கிராமமே இப்போது மாறியிருக்கிறது நான் விளையாடிய இடமே எங்கே என்று தேட வேண்டிய நிலை.

    கேரளத்தில் இன்னும் தனி வீடுகள் தான். நகரங்களில் கொஞ்சம் ஃப்ளாட் கல்சர் வந்துள்ளது. நான் இருக்கும் பகுதி மலை, ஆறு பள்ளத்தாக்கு..ஊட்டி 2 மணி நேரம் தான்…தமிழ்நாடு மலைப் பகுதி ஜஸ்ட் ஒரு மணி நேரத்தில் என்று பசுமையுடன் இருக்கிறோம்.

    நிறைய நினைவுகளைத் தூண்டும் பதிவு. தொடர்கிறோம்

    துளசிதரன்

    Liked by 1 person

    1. @ துளசிதரன்:

      நீங்கள் இருக்கும் இடமே மலை, ஆறு, பள்ளத்தாக்கா? யோகக்காரர் நீங்கள். சந்தேகமில்லை. உட்கார்ந்து கதை எழுத அருமையான பின்னணி. Ideal background for a creative mind..

      கேரளா இன்னும் பாரம்பர்ய வீடுகளைக் கழட்டிவிடாதிருப்பது நல்ல விஷயம். கிராமங்களாவது அப்படியே அழகாக இருக்கட்டும்.

      தமிழ்நாடு ஒரே கந்தர்வகோளம். எதுவும் சொல்வதற்கில்லை. நான் இருந்த கிராமத்தைப் போய்ப்பார்க்கவேண்டும். ரொம்பநாளாயிற்று. என் கதை, கட்டுரைகளில் அதன் ஒரு குறியீடாவது வந்துகொண்டுதான் இருக்கிறது. எப்படி இருக்கிறதோ இப்போது..

      Like

  11. இப்போதும் கொள்ளிடைக்கரையில் அழகான பாய் கிடைக்கிறது.
    கல்யாணத்திற்கு சாஸ்திரத்திற்கு இரண்டு பாய் கொடுக்க வேண்டும் , பட்டு மெத்தை வாங்கினாலும் பாய் கொடுக்க வேண்டும்.
    அங்கு மணமக்கள் பேரில் அழகாய் பெயர் நெய்து தருவார்கள்.
    இப்போது பாய் விரித்து வீட்டுக்கு வந்தவர்களை அமர சொன்னால் எவ்வளவு பேரால் கீழே உட்கார முடிக்கிறது ?

    திண்ணை வைத்த வீடு இல்லை. பழைய பெரிய வீடுகள் அடுக்குமாடி குடியிருப்பாய் போய் விட்டது.
    பழைமையை தேடி அது போன்ற தங்க்கும் விடுதிகள் போக வேண்டி இருக்கிறது.
    மகன் வந்து இருந்த போது கும்பகோணம் அருகில் அந்த மாதிரி விடுதியில் தங்கினோம்.

    இரட்டை திண்ணை பழைய காலத்து தாழ்ப்பாள் போட்ட கதவு என்று பழமையை மறக்காமல் அமைத்து இருக்கிறார்கள்.

    Liked by 1 person

  12. @ கோமதி அரசு:

    கொள்ளிடக்கரையில் இன்னும் அழகான பாய்கள் கிடைக்கின்றன என்பது நல்ல சேதி. கும்பகோணம் பாரம்பர்யம் இழக்காத ஒரு ஊர். நீங்கள் சொன்னபடி அங்கே பழையவீடுகளைப் பார்த்திருக்கிறேன். 2014-ல் உப்பிலியப்பன் கோவிலுக்குப் போயிருந்தபோது தங்கியிருக்கிறேன்.

    அந்தக்கால வீட்டு வாசல்கதவுகளின் பித்தளைக் குமிழ்கள், தாழ்ப்பாள்கள் நினைவில் பசுமையாக இருக்கின்றன. வீட்டின் வாசலில் திண்ணைக்கு மேலே, மாலையில் விளக்கேற்றி வைப்பதற்கான மாடங்கள். புதுக்கோட்டையில் இத்தகைய வீடுகள் நிறைய இருந்தன. இப்போது கதை வேகமாக மாறுவது ஒரு சோர்வைத் தருகிறது.

    Like

Leave a comment