உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG முதல் டெஸ்ட் !

வந்தால் எல்லா முகூர்த்தங்களும் சேர்ந்தார்ப்போல வரும்! வழக்கம் தான் இது. இன்று விளையாட்டு ரசிகர்களுக்கு அப்படி ஒரு நாள். FIFA உலகக் கால்பந்துக்கோப்பை ரஷ்யாவில் இன்று துவங்குகிறது. முதல் போட்டி (ரஷ்யா-சௌதி அரேபியா), ரஷ்யத்தலைநகர் மாஸ்கோவில் இந்திய நேரம் இரவு 8.30க்கு நிகழ்கிறது. அதற்கு 11 மணி நேரம் முன்பு அதாவது காலை 9.30 மணிக்கு பெங்களூரில் நிகழவிருக்கிறது இந்தியா –ஆஃப்கானிஸ்தான் இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க முதல் கிரிக்கெட் டெஸ்ட். கிரிக்கெட் உலகின் பெரிசுகள் லிஸ்ட்டில், அதாவது ’டெஸ்ட்’ போட்டிகள் விளையாடும் நாடுகளின் அணியில் முதன்முதலாக ஆஃப்கானிஸ்தானும், அயர்லாந்தும் இந்த வருடம் ஐசிசி-யினால் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கெதிராக இன்று விளையாடவிருக்கும் போட்டி மூலம், தன் ‘டெஸ்ட்’ சகாப்தத்தைத் தொடங்குகிறது ஆஃப்கானிஸ்தான். அதுதான் விசேஷம். என்ன மாதிரியான நாள் இது பார்த்தீர்களா, இந்திய ரசிகர்களே ..

பெங்களூர் டெஸ்ட்டில் ஆஃப்கானிஸ்தான் குறைந்த பட்சம் மூன்று ஸ்பின்னர்களை மைதானத்தில் இறக்கிவிடும். சுழல்பந்துவீச்சு அவர்களின் அசுர பலம். வரிசையாக வைத்திருக்கிறார்கள். கேப்டன் அஸ்கர் ஸ்தனிக்ஸாய் (Asghar Stanikzai), ஆஃப்கன் ஸ்பின்னர்கள் இந்திய ஸ்பின்னர்களைவிட சிறந்தவர்கள் என ஒரு அதிரடி ஸ்டேட்மெண்ட்டை பத்திரிக்கையாளர்முன் நேற்று வீசியிருக்கிறார். உலகப் புகழ்பெற்றுவிட்ட (ஒரு-நாள், டி-20 போட்டிகளில்) ரஷித் கான், ஐபிஎல்-புகழ் முஜிபுர் ரஹ்மான், முகமது நபி போன்ற ஸ்பின் பௌலர்கள் அவர்களிடம் இருப்பதால் ஒரு குஷி! ஆஃப்கானிஸ்தானின் வேகப்பந்துவீச்சு இந்தியாவிற்கு பெரிய பிரச்னை ஏதும் செய்துவிடாது எனத் தோன்றுகிறது. டெஸ்ட் கத்துக்குட்டிகளின் பேட்டிங் எப்படி? முகமது நபி, முகமது ஷேஹ்ஸாத் (Mohamed Shahzad), கேப்டன் அஸ்கர் ஸ்தனிக்ஸாய் மற்றும் ரஹ்மதுல்லா. ஸமியுல்லா ஷென்வாரியும் மிடில்-ஆர்டரில் நின்று ஆடக்கூடும். முதல் இன்னிங்ஸில் ஒரு மரியாதைக்குரிய ஸ்கோரை ஆஃப்கானிஸ்தான் எட்டவேண்டுமெனில் இவர்களில் குறைந்த பட்சம் இரண்டு பேராவது இந்திய பௌலிங்கை சரியாக எதிர்கொண்டு திறனாக ஆடவேண்டும். பொறுமையை மிகச் சோதிக்கும் டெஸ்ட் விளையாட்டு இவர்களுக்கு புதிதாகையால், நிச்சயம் சிரமப்படுவார்கள். இருப்பினும் ஓரிருவர் நிதானம் காட்டி ஆடினால், அரை சதம் தட்டலாம்.

இந்திய அணிக்கு அஜின்க்யா ரஹானே தலைமை தாங்குகிறார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில், உமேஷ் யாதவோடு, புதிய பௌலராக நவ்தீப் செய்னி (Navdeep Saini) இறக்கப்படுவாரா அல்லது இஷாந்த் ஷர்மா ஆடுவாரா? காலையில்தான் தெரியும். இந்திய ஸ்பின்னர்கள் ஜடேஜாவும் அஷ்வினும் நிறைய பெங்களூர் பிட்ச்சில் களியாட்டம் போடுவார்களோ? இந்தியா இன்னிங்ஸை ஆரம்பிக்கையில், எதிர்த்துவிளையாடுவது புதுமுகங்கள்தானே என்ற மிதப்பில் ஆட ஆரம்பித்தால், ஆஃப்கானிஸ்தானின் தரமான ஸ்பின்னர்கள் பெண்டெடுத்துவிடுவார்கள். புஜாரா, ரஹானே, விஜய் நின்று, நிதானம் காட்டி ஆடவேண்டியிருக்கும். வ்ருத்திமான் சாஹா காயத்தினால் விலகியதால், 2010-க்குப்பின் இந்தியாவிற்காக டெஸ்ட் ஆட வந்திருக்கிறார் தமிழ்நாட்டின் விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக். அபூர்வமாக வந்திருக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டால், அவருக்கும் அணிக்கும் நல்லது. மொத்தத்தில் ஒரு சுவாரஸ்யமான போட்டி காத்திருக்கிறது.

சரி, இப்போது. ரஷ்யாவில் ஆரம்பமாகவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து. போட்டிகளை இவ்வருடம் நடத்தும் ரஷ்யா மிகவும் எளிதான க்ரூப்பான ‘ஏ’ குரூப்பில் வைக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் சௌதி அரேபியா அதன் எதிரி. ஐரோப்பாவின் ஏனைய வலிமையான அணிகளோடு ஒப்பிடுகையில், ரஷ்ய கால்பந்து அணி அவ்வளவு சிறப்பான நிலையில் இல்லை. ரஷ்யா கவனமாக ஆடாவிட்டால், சௌதி அரேபியா தூக்கி எறிந்துவிடும்.

ஆர்வத்துடன் கவனிக்க வேண்டிய கால்பந்து வீரர்கள்: ரஷ்யாவின் இகோர் அகின்ஃபீவ் (Igor Akinfeev) அபாரமான கோல்கீப்பர். அவரைத்தாண்டி பந்தை கோலுக்குள் அனுப்புவது எதிர் அணிக்குப் பெரும் சவாலாகும். அணியின் செண்டர்-பேக் (Centre-back) ப்ளேயரான ஸெர்கெய் இக்னாஷெவிச் (Sergei Ignashevich) 38 வயதிலும் அபாரமாக ஆடிவருபவர். அணியின் 22-வயது இளம்புயல் அலெக்ஸாண்டர் கோலொவின் (Aleksandr Golovin). அருமையாகத் தாக்கிவிளையாடி ரஷ்யாவுக்கு கோல் வாய்ப்புகளைத் தரும் வீரர்.

சௌதி அரேபிய அணியில் முக்கியமான வீரர்களாக கோல்கீப்பர் அப்துல்லா அல் மயோஃப் (Abdullah al Mayouf), மற்றும் அணியின் கருப்பின வீரர்களான ஒஸாமா ஹவ்ஸாவி (osama hawsawi), ஒமர் ஹவ்ஸாவி(Omar Hawsawi), யாஸர் அல்-ஷாரானி (Yasser Al Shahrani) போன்றோரைக் குறிப்பிடலாம். திறன்மிகு இளம் வீரர்கள் சிலருமுண்டு.

ரஷ்யாவா, சௌதி அரேபியாவா – உலகக்கோப்பையின் ஆரம்ப மேட்ச் யாருக்கு? இரவில் தெரியும். ரஷ்ய மற்றும் உலகளாவிய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரே கோலாகலம்தான் இனி!

**

11 thoughts on “உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG முதல் டெஸ்ட் !

  1. காலை முதல் செஷனிலேயே தவான் சதம் அடித்துவிட்டார். டெஸ்ட் போல விளையாடாமல் ஒருநாள் போட்டி போல விளையாடுகிறார். ரஷீத்கான் இதுவரை பந்துவீச்சில் மிரட்டவில்லை! அவர்கள் பேட்ஸ்மேன்களில் குண்டாக அர்ஜுனா ரணதுங்காவை நினைவுபடுத்துவது போல விளையாடுபவர் நன்றாக விளையாடுவார் போல… பங்களாதேஷை அவர் கிழித்தபோது கொஞ்சம் பார்த்தேன்!

    Liked by 1 person

  2. உலகக்கோப்பை கால்பந்து தொடங்குகிறது. ஆனால் எனக்கு அதில் சுவாரஸ்யம் இல்லை. மகன்கள் பார்ப்பார்கள்.

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம் : தவன், வஃபாதாரின் (Wafadar) வேகப்பந்துவீச்சில் காட்-பிஹைண்ட்! ரெவ்யூ கேட்காமல் விட்டுவிட்டார்கள். அப்போது 20-களில் இருந்தார் அவர்! அதற்கப்புறம் சிக்ஸர், பௌண்டரி எனப் பறக்க ஆரம்பித்துவிட்டது. ரஷீத் கானுக்கு தோன்ற ஆரம்பித்திருக்கும் – இது ஏதோ வேறு உலகம் போலிருக்கேன்னு !

      கால்பந்து மேட்ச்சுகளை என் பெண் ஆசையாகப் பார்ப்பாள். அவ்வப்போது தன் பெங்காலித் தோழியிடம் கலந்து பேசிக்கொள்வாள்! நானும் ஜெர்மனி, ப்ரஸீல், அர்ஜெண்ட்டினா, ஸ்பெய்ன் மற்றும் ஆப்பிரிக்காவின் நைஜீரியா, செனகல் போன்றவை விளையாடும் போட்டிகளை விடப்போவதில்லை. இன்று ரஷ்யாவின் லட்சணம் எப்படி இருக்கிறதெனப் பார்ப்பேன்.

      Like

  3. @ஸ்ரீராம் : அது அர்த்தமில்லை. வஃபாதார் (Wafadar) என்றால் ‘விசுவாசமுள்ளவன்’ என்றர்த்தம். வஃபாதாரி (wafadari) என்றால் ’விசுவாசம்’.

    யாரையாவது மட்டம்தட்ட (குறிப்பாக தனக்குப் பிடிக்காதவனிடம் நம்பிக்கையாக இருப்பவனை) வடக்கத்தியர்கள் சொல்வது ‘வஃபாதாரி குத்தா (wafadari kuththa) ! ( ஹிந்தி, உருது, ஆஃப்கனி) – அதாவது ‘நன்றியுள்ள நாய்’ (இவன்) -என்று கேலியாக..

    Like

  4. கிரிக்கெட் அளவு கால்பந்து பார்ப்பதில்லை கால்பந்து ஆட்டக்காரர்கள் பெயர்கள் ஓரிருவரைத் தவிரதெரியாது என்பேரன் கால்பந்து ஆட்டங்களை ரசித்துப்பார்ப்பான் ஒருநாள் ஆட்டம்போலோ 20 20 ஆட்டம்போலோ அல்ல டெஸ்ட் போட்டிகள் ஆஃப்கானிஸ்தான் பாவம் முதல் டெஸ்டே உலக நம்பர் ஒன் டீமுக்கு எதிராக

    Liked by 1 person

  5. @Balasubramaniam G.M :
    கிரிக்கெட் பிரதானம் என்றாலும், டென்னிஸ், கால்பந்து, பேட்மிண்ட்டன், ஹாக்கி, என பல விளையாட்டுகளில் ஆர்வம், கவனம் எனக்கு அப்போதிருந்தே உண்டு. ஸ்விட்ஸர்லாந்தில் போஸ்ட் ஆகியிருந்த 90-களில் European Soccer அதிகம் பார்த்ததுண்டு. உலகக்கோப்பை வந்துவிட்டால் மீண்டும் re-connect ஆகிவிடுவேன். என் மகளுக்கு டென்னிஸ், கால்பந்து, பேட்மிண்ட்டனில் ஆர்வமுண்டு. கிரிக்கெட் மேம்போக்காக ஸ்கோர் கேட்டுத் தெரிந்துகொள்வாள்.

    //ஆஃப்கானிஸ்தான் பாவம் முதல் டெஸ்டே உலக நம்பர் ஒன் டீமுக்கு எதிராக//
    அவர்கள்தான் விரும்பிக்கேட்டது! இந்திய கிரிக்கெட் போர்டு பெரியமனதுடன் சம்மதித்தது- அடுத்தமாதம் துவங்கவிருக்கும் இங்கிலாந்து டூருக்கு முன்னதாக.

    Like

  6. @ கில்லர்ஜி தேவகோட்டை:

    கருத்தில்லை எனும் கருத்திற்கு நன்றி.

    Like

    1. @கோமதி அரசு :
      Excellent. கற்றுக்கொடுங்கள். குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்தலே நல்லது.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s