கந்தர்வன் சிறுகதை ’மைதானத்து மரங்கள்’

எழுத்தாளர் கந்தர்வன் பற்றிய குறிப்பை முந்தைய பதிவில் பார்த்தோம். அவரது சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றான ‘மைதானத்து மரங்கள்’ கதைபற்றிக் கீழே பார்ப்போம்:

சிறுவயதிலிருந்தே, தன் வீட்டருகே இருந்த பெரிய மைதானத்தையும், அதனைச் சூழ்ந்திருந்த அடர்மரங்களையும் பார்த்து வளர்ந்தவனின் கதை. மைதானம், மரங்களை வைத்துக்கொண்டு என்னய்யா பெரிய்ய கதை என்கிறீர்கள். உங்களுக்கு கந்தர்வனே சொன்னால்தான் சரிப்படும்.. படியுங்கள்:

அம்மா கூடப்போய் பெண்கள் துறையில் குளிக்க வெட்கப்பட்டு, அவளோடு சண்டை போட்டு இவன் தன்னோடு சேர்த்துக் குஞ்சு குளுவான்களோடு ஊருணிக்கு குளிக்கப் புறப்பட்ட காலத்திலிருந்து , இந்த மைதானத்தோடு இவனுக்கு ரகசிய சம்பந்தம் உண்டு. அப்பா, அம்மா கைகளை உதறிவிட்டு இவன் தானே நடக்கத் துவங்கி, கைகளை வீசி நடந்து வந்ததே, அருகிலிருந்த இந்த மைதானத்திற்குத்தான். அப்போதிலிருந்து இந்த மைதானந்தான் இவனுக்கு ஆதரவு.
மதுரை செல்லும் சாலையின் ஓரத்தில் இந்த மைதானம் பரந்து கிடந்தது. மைதானத்தின் சிறப்பு அதன் பரப்பளவினால் வந்ததல்ல. அதன் இவ்வளவு மகிமைக்கும் காரணம் அதன் கிழக்கு, மேற்கு ஓரங்களில் ஆஜானுபாகுவாய்க் கிளைகள் விரித்து நிற்கும் அந்தப் பெரிய பெரிய மரங்கள்தான். அவைகளைச் சாதாரணமாய் மரங்கள் என்றழைப்பதே சிறுமைப்படுத்தியதாகிவிடும். நெடுநெடுவென்று வளர்ந்து வீடுகள்போல் தூர்கட்டி, மைதானத்து ஓரங்களைக் கருகருவென்று இருள் போர்த்திக்கொண்டு, பூவும் பிஞ்சும் காயும் பழங்களுமாய் நிற்கும் அந்தப் புளிய மரங்களை ‘விருட்சங்கள்’என்றுதான் யதார்த்தமாக சொல்லவேண்டும்.

சரி, இவன் மட்டுந்தானா அங்கே சுற்றித் திரிந்தது? விதவிதமான மனிதர்கள் வந்து மரநிழலில் உட்கார்ந்து நேரம் போவது தெரியாமல் அரட்டை அடிப்பார்கள். மாடுமேய்க்கும் சிறுவர்களும், அங்கே உட்கார்ந்து தாயம், ஆடுபுலி என ஆடிக்களித்துப் பொழுதைக் கழிப்பதுண்டு. எத்தனையோ பேருக்கு கோடையில் ஒரு குளுமையையும், மனசுக்கு ஒரு சந்தோஷத்தையும் , அமைதியையும் தந்தன, ஓங்கி வளர்ந்திருந்த அந்த பெருமரங்கள். மேலும் எழுதுகிறார் கந்தர்வன்..

இவன் சிறுபிள்ளையாயிருந்தபோது மைதானத்து மரத்தடிகளில் அதிகமாய் உட்கார்ந்ததே இல்லை. இவனைக் கவர்ச்சித்ததெல்லாம் சூரியனை நேராகப் பார்த்துக் கிடந்த அந்த மைதான வெளிதான். மரத்தடி என்பது உட்காருபவர்களுக்குண்டானது. இவனால் அந்த வயதில் வாலைச் சுருட்டிக்கொண்டு ஐந்து நிமிடங்கள் கூடத் தொடர்ந்து ஒரு இடத்தில் உட்கார முடியாது. மைதான வெளியிலென்றால் ஆடிக்கொண்டேயிருக்கலாம். ஓடிக்கொண்டேயிருக்கலாம். ஒவ்வொரு சமயம் விளையாட்டு உச்சத்திலிருக்கையில் மரத்தடியிலிருந்து ‘அப்படிப் போடுரா சபாசு’ என்ற உற்சாகக் குரல்கள் சிறுவர்களை எட்டும். அந்த நாட்களில் அவர்களின் அடுத்தடுத்த ஏவல் குரல்களுக்காகவும், உற்சாக ஒலிகளுக்காகவும் ஆட்டம் தூள்படும். இறங்கு வெயில், மஞ்சள் வெயில், லேசிருட்டு என்ற பொழுது மாற்றங்கள் ஆட்ட மும்முரத்தில் புத்திக்கு உறைக்காது. இருட்டுக் கனமாகி கனமாகி, அடித்த கிட்டிப்பிள்ளையைத் தேடமுடியாமற் போனாலும், உருண்ட கோலிகளைக் குனிந்து குனிந்து கண்களை இடுக்கி இடுக்கிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியாமற் போனாலும், ஆட்டத்தை மாற்றி வேறு விளையாட்டில் முனைவார்கள். கடைசியாய் ஓடி வருவது தெரியாமல் முட்டி மோதி, எதிரே வருபவனை பெயர் மாற்றிக் கூப்பிட்டு, எல்லோரும் அதற்காக ஓவென்று சிரித்து அந்தச் சிரிப்புகளிலும் அயர்ச்சி வந்து அப்புறந்தான் அந்த மைதான வெளியில் ஆட்டபாட்டங்கள் முடியும்.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள், மனதில் பட்ட அடி, அவமானம் தாளாமல், வேதனையிலிருந்து விடுபடமுடியாமல் தவித்துத் தத்தளித்த இவனை, இந்த மரங்கள் தங்கள் காலடியில் அமரவைத்து ஆசுவாசப்படுத்த முயன்றன. இவன் மீதிருக்கும் பிரியத்தை மரங்களும்தான் வேறெப்படிக் காட்டும்? மேலே படியுங்கள்:

இவன் எட்டாம் வகுப்பு படிக்கையில்தான் முதன் முறையாக மைதான வெளியிலிருந்து ஒதுங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். அன்று அவன் காலையில் பள்ளிக்கூடம் போய் இறைவணக்கம் முடிந்து வரிசையில் வந்து வகுப்பில் உட்கார்ந்தான். ஆங்கிலம்தான் முதல் பீரியட். ஆங்கில ஆசிரியர்தான் வகுப்பாசிரியர். வெள்ளை பேண்ட்டும், வெள்ளை சட்டையும், வெள்ளை மனசுமாய் மிகுந்த கவர்ச்சியோடிருப்பார். வகுப்பிற்குள் நுழையும்போதே ஒரு காகிதத்தைக் கொண்டு வந்தார். அவர் முகத்தில் கவலை நிறைந்திருந்தது. நாற்காலியில் உட்காருமுன்பே அதைப் பார்த்துப் படிக்க ஆரம்பித்தார். “ இன்னும் ஸ்கூல் பீஸ் கட்டாதவர்கள் வகுப்பை விட்டு வெளியேற வேண்டும். பீஸ் கட்டி ரசீது வாங்கிக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும். இந்த வகுப்பில் இன்னும் பீஸ் கட்டாதவர்கள் ராகவன், முத்து…” அடுத்தடுத்த பெயர்கள் அவன் காதில் விழவில்லை. ‘முத்து… முத்து… முத்து…’ என்றுதான் எல்லாமே இவன் காதில் விழுந்தன.

அம்மாதான் வீட்டிலிருப்பாள். அப்பா வேலைக்குப் போயிருப்பார். ஆதீன ஆபிஸ் நாற்காலியைத் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். பத்து நாளாய்ப் பன்னிப் பன்னிச் சொல்லியும் ‘இந்தா தாரேன், அந்தா தாரேன்’ என்று சொல்லிக்கொண்டே தினமும் ஓடிவிடுகிறார். அம்மாவோடு சண்டை போட்டுப் புண்ணியமில்லை. அஞ்சறைப் பெட்டியைத் தடவிப் பார்த்துவிட்டு மஞ்சள் சீரகம் இல்லையென்றாலும், சீசாவைப் பார்த்துவிட்டு எண்ணெய் இல்லையென்றாலும், தம்பி தங்கைகள் நேரங்கெட்ட நேரத்தில் ‘பசிக்கிறது’ என்றாலும் “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்றுதான் குரலெடுப்பாள்….

அவன் அன்றுதான் மைதான வெளியை மறந்துவிட்டு, மரத்தடியில் உட்கார்ந்து மைதானத்தை வெறித்து நோக்கினான். ஆங்காங்கு சில மரத்தடிகளில் அந்த வெயில் நேரத்தில் ஒன்றிரண்டுபேர் உட்கார்ந்திருந்தார்கள். வேளை கெட்ட வேளைகளில் இப்படி வந்து உட்காருபவர்கள், உளைச்சல் தாளாமல்தான் வருகிறார்கள் என்பது அவனுக்கு அருவலாய்ப்பட்டது. வகுப்பில்பட்ட அவமானம், இவன் உடலை நடுக்கியது. இவனால் செய்யக்கூடியது அப்போதைக்கு வேறெதுவுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. வகுப்பை விட்டு வெளியே வருகையில் மாணவர்கள் இரக்கத்தோடு பார்த்த பார்வைகள், இன்னும் இவன் உடல் முழுதும் ஈக்களாய், எறும்புகளாய் மொய்த்துக் கிடந்தன. உக்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.

சாலைகளும் மைதான வெளியும் ஊர் முழுவதும் வெயிலின் உக்கிரத்தில் கொப்பளித்துக் கொண்டிருக்கையில், உடல் நடுங்கி இவன் உட்கார்ந்த இந்த மரத்தடி மட்டும் இளங்காற்றுச் சிலுசிலுப்பும், இதமான நிழலுமாய் குளுகுளுவென்றிருந்தது. நெடுநேரம் அப்படியே சிலையாயிருந்தான். இந்தச் சிலுசிலுப்பும், குளுமையும் இவனின் மனப்பாரத்தை லேசு லேசாய் கரைத்துவிட்டன. இவன் மரத்தடியிலிருந்து எழுந்தபோது குழப்பமும், நடுக்கமும் குறைந்திருந்தன.

ஒருவழியாக, இவனும் தட்டுத்தடுமாறிப் படிப்பை முடித்தான். வேலைக்கு நாயாய் அலைந்து
கிடைக்காமல், மரத்தடியில் வந்து விழுந்துகிடந்தான். அப்பா போனபின், ஆச்சு, ஏதோ ஒரு வேலை, பொண்டாட்டி பிள்ளைனு ஏதேதொ நடந்து, சம்சாரியானான். ஆனால், சந்தோஷம், நிம்மதி என்பதெல்லாம் கிடைக்கக் கொடுத்துவைத்திருக்கவேண்டாமா? வாழ்க்கையின் தீராத பிரச்சினைகள், இந்த ஏழையைப் புரட்டி எடுக்க, மாலை வேலைகளில் மரங்களிடம் மீண்டும் தஞ்சமானான். தொடர்கிறார் கந்தர்வன்:

கல்யாணமாகிப் பிள்ளைகள் வந்து, கூடவே தம்பி தங்கைகள் என்று இவன் சுமை அதிகரித்து, ஒரு பழைய செல்லரித்துப்போன கப்பலாய் மாறிப்போனான். மனைவி, பிள்ளைகள், தம்பி, தங்கைகள் எல்லோருடைய தேவைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்கள் இவனை எதிரியாக்கியே நடந்தன. அப்போதும் இவன் அந்தச் சிலுசிலுவென்றும், குளுகுளுவென்றுமிருந்த மரத்தடிகளிலேயே மருந்து வாங்கித் தேய்த்துவிட்டான்…

அக்கம் பக்கத்தில் சொல்வார்கள், “ முத்துக்கு இந்த மைதானத்திலே பாதியாவது பள்ளிக்கூடக்காரக குடுத்திரணும். அனுபவ பாத்தியதைனு வந்தா பள்ளிக்கூடப் புள்ளைகளைவிட, இவந்தான் ரொம்ப இதை அனுபவிச்சுட்டான்.”

வீட்டுக்குப் பக்கத்தில் இந்த மைதானம், வாழ்விலே ஏதோ ஒரு துணைபோல இருக்கிறதென காலந்தள்ளிய அப்பாவி மனிதனை, ஒரு நாள் மாலை கண்ட காட்சி, அடித்துத் துவைத்துப்போட்டது.. ஏழைகளுக்குத்தானே கஷ்டத்துக்குமேல் கஷ்டம்? பட்டகாலிலே படுவதெல்லாம் அப்பாவி ஜென்மங்களுக்குத்தானே.. படியுங்கள் அன்பர்களே, கந்தர்வனின் சிறுகதை ‘மைதானத்து மரங்கள்’

லிங்க்: http://azhiyasudargal.blogspot.in/2010/11/blog-post_22.html

நன்றி: அழியாச்சுடர்கள் இணையதளம்

**

17 thoughts on “கந்தர்வன் சிறுகதை ’மைதானத்து மரங்கள்’

  1. @ ஸ்ரீராம்:
   ஆம் , ஒன்றுமில்லாததிலிருந்து உண்டான பிரபஞ்சத்தைப்போலே, நல்ல எழுத்தாளன் ஒன்றுமில்லாத விஷயத்திலிருந்தும் படைப்பைத் தந்துவிடுவான். அதனால்தானே அவன் படைப்பாளி.

   உங்கள் பள்ளிக்கூடக்கதை -மாதா கோவிலின்பின் மறைந்திருந்து தின்றது – சுவாரஸ்யமானது. அந்த அமலநாதரை மீண்டும் போய்ப்பார்த்ததுண்டா?

   Like

 1. மைதானம் எனக்கும் பழைய நினைவைக் கிளறி விட்டது. தஞ்சையில் மாதாந்திர கட்டணம் இருபது ரூபாயைக் கட்ட முடியாமல் நானும் வெளியேற்றப் பட்டிருக்கிறேன். முதல் தரம்தான் அவமானம். அப்புறம் அப்புறம் உல்லாசம் பூக்கத் தொடங்கியது. ஆனால் மைதானத்தில் அமரமாட்டேன். மைதானத்தின் கோடியில் இருந்த மாபெரும் மாதா கோவிலின் பின்னே தஞ்சம். அம்மாவிடம் சொல்லி சாதத்தைக் கலக்காமல் கட்டி கட்டியாய் போட்டு அதன் மேல் மோரூற்றித் தரச் சொல்வேன். வீட்டில் அப்படி ஒருமுறைகலந்தும் கலக்காமல் சாப்பிட்டது பிடித்துப்போக, மாதா கோவிலின் பின்னே அமர்ந்து ஆவக்காய் ஊறுகாயுடன் சாப்பிட்டு பள்ளி முடியும் நேரம் வீடு கிளம்புவேன். முன்னதாகப் போனால் அப்பா காதுக்கு விஷயம் போய், திட்டுவார். பணமும் கொடுக்க மாட்டார். பள்ளியை விட்டும் செல்லக் கூடாது!

  Liked by 1 person

 2. ஒருமுறை வகுப்பை விட்டு வெளியேற்றப்பட்டு வளரும்போது தலைமை ஆசிரியர் அமலநாதர் பார்த்துவிட, “கழுத… கழுத… இவன் இப்படியே போயிடுவான். இவன் அப்பாவை எனக்குத் தெரியும். நான் பணம் கட்டிடறேன். உள்ள அனுப்பு. ஏய் கழுத… அப்பாட்ட நான் கட்டிட்டேன்னு சொல்லு” என்று உள்ளே அனுப்பி விட்டார்! இந்தச் சம்பவத்துக்குப்பின் அப்பா ஐந்தாம் தேதிக்குள் பணம் கொடுத்து விடுவார்!

  Like

  1. ஹா ஹா ஹா ஸ்ரீராமின் கதையை ரசித்தேன், இப்போ ரசனையாக இருக்கு ஆனா அப்போ மனதுக்கு எவ்வளவு கஸ்டமாக இருந்திருக்கும்..

   Liked by 1 person

 3. கமென்ட் வந்ததா என்று தெரியவில்லை ஒரு வேளை நீண்டதால் வர மறுக்கிறதோ…தெரியவில்லை..மீண்டும் வேர்ட் ப்ரெஸ் படுத்துது…

  கீதா

  Like

 4. மைதானத்து மரங்கள்..சகோ நீங்க முந்தைய பதிவில் சொன்னதும் எடுத்து வாசித்துவிட்டேன்…மரங்கள் என்றாலே எனக்கு உடனே வாசிக்கத் தோன்றிடும்…

  என் பள்ளியில் பல மரங்கள் உண்டு. தனியாக அமர்ந்து சாப்பிட்டதுண்டு. ஏனென்றால் என் தோழிகள் நல்லவர்கள் என்றாலும் ..கீழே வருகிறது அந்த பார்ட்… பெரும்பாலும் ஸ்டடி க்ளாஸ்தான் மரங்களின் கீழ் நடக்கும்…

  கல்லூரியில் நாங்கள் முந்திரித் தோப்புக்குள் சென்றுதான் நாடகம் ப்ராக்டீஸ் செய்தது…சாப்பிடுவது.. சில மரங்களின் கிளைகள் கீழே மண்ணோடு சேர்ந்து வளர்ந்திருக்கும் அதில் எல்லாம் அமர்ந்து ..கதைத்து அருமையான காலம்…இப்போதும் மரங்கள் என்றால் அதைத் தொட்டுப்பார்த்து…ரசித்து என்று தொடர்கிறது…மரங்கள் பேசுவது போலவும் கற்பனை செய்வதுண்டு…

  ஸ்ரீராம் உங்கள் கருத்தைப் பார்த்து மனம் வருந்திவிட்டது. ரொம்பவே…

  Liked by 1 person

  1. //ஸ்ரீராம் உங்கள் கருத்தைப் பார்த்து மனம் வருந்திவிட்டது. ரொம்பவே…//

   இதில் என்ன இருக்கிறது கீதா? எல்லோருக்கும் இதுபோல பழைய நினைவுகள் இருக்கும். காசு டப்பா என்கிற எங்கள் பதிவொன்றில் அப்பாவின் பணமேலாண்மை பற்றி எழுதி இருந்த நினைவு!

   Liked by 1 person

 5. தொடர்ச்சி…என் கருத்து நீண்ட்தால் வேர்ட் ப்ரெஸ் ஏற்கவில்லை போலும் எனவே ப்ரித்துப் போடுகிறேன்

  எனக்கும் நான் கொண்டு சென்ற பழையது நினைவுக்கு வந்தது. அலுமினிய தூக்கில் பழையது தண்ணீருடன், கொஞ்சமாக மோர் விட்டு தண்ணியாகவெ இருக்கும். கூடவே வீட்டில் செய்யும் ஒரே ஒரு கூட்டு மட்டும் தான் அதையும் அதில் கலந்து வைத்துவிடுவார்கள்..ஏழ்மை…. பல சமயங்களில் தூக்கிலிருந்து வழியும். பள்ளி யில் என் தோழிகள் வட்டம் நலல்வர்கள் என்றாலும் என்னை சாப்பிடும் போது மட்டும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் நான் வெஜ் கொண்டு வந்தாலும், நான் சாப்பிட மாட்டேன் என்ராலும்… எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் அவர்களுக்கு என் ப்ழையது மோருடன் கூட்டுடன் கஞ்சி போல இருக்கு… ஒரு ஸ்மெல் வருது என்று …எனவே தனியாகத்தான் சாப்பிடுவேன்….அப்புறம் நான் மதியச் சாப்பாட்டையே கொண்டு செல்வதைத் தவிர்த்தேன்….மதியம் சாப்பிடவே மாட்டேன்….தோழிகள் வருந்தி எனக்கு என்று அவர்கள் வீட்டில் நான் வெஜ் சமைக்காத பாத்திரத்தில் தனியாகச் சமைத்து டிஃபன் கொண்டு வருவார்கள்…வகுப்பிலேயே கடைசி பெஞ்சில் இருந்து வகுப்பு ந்டக்கும் போதே சாப்பிட்டதுண்டு…புட்டும், இடியாப்பமும், கப்பை புழுக்கும்…அப்புறம் நானும் அவர்களோடு மரத்தடியில் கதைத்துக் கொண்டே சாப்பிடும் பழக்கம்…

  இக்கதை இப்படியான நினைவுகளை எழுப்பியது…அன்றே இதை எழுத நினைத்து…அப்புறம் எப்படியும் நீங்கள் மீண்டும் கதை பற்றிச் சொல்லுவீர்கள் அப்போது எழுதலாம் என்று விட்டேன்…

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா:

   நீங்கள் முதலில் கதை வாசித்துப்போட்ட கமெண்ட்டுக்கும் பதில் போட்டிருக்கிறேனே.

   எப்படிப்பட்ட நினைவுகளை மனதின் கீழடுக்குகளிலிருந்து கொண்டுவந்திருக்கிறது இந்தக் கதை. நீங்கள் அலுமினியத் தூக்கு, பழையது என்றவுடன் என் பள்ளி அனுபவம் ( அடுத்த கிராமத்துக்கு 2 கி.மீ. நடந்து சென்று 6 முதல் 8 வரை படித்தது) நினைவில் தட்டியது. கிட்டத்தட்ட இதே கதைதான் என்னுடையதும். மோர்சாதத்துக்குள் ஊறுகாய் ஒளிந்திருக்கும். மோர் வெளியே வழிந்து என் மானத்தை வாங்கியிருக்கும்!

   கல்லூரியில் சேர்ந்ததும், கிராமத்திலிருந்து சைக்கிளில் ( 13+13 , 26 கி.மீ) தினம் புதுக்கோட்டை சென்று படித்திருக்கிறேன். அப்போது லஞ்ச் – எவர்சில்வர் டிஃபன் பாக்ஸிற்கு என முன்னேறியிருந்தது!

   Like

 6. //அந்த அமலநாதரை மீண்டும் போய்ப்பார்த்ததுண்டா?//

  அவர் நான் அங்கு இருந்தபோதே தூத்துக்குடி மறைமாவட்டப் பேராயர் ஆனார். பின்னர் பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை. ரெகார்ட் நோட்டில் இன்னும் அவர் கையெழுத்தை பாதுகாத்து வைத்திருக்கிறேன்! நீண்ட நாட்களுக்குப் பிறகு நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் படித்த அந்தப் பள்ளிக்குச் சென்றபோது எனக்குப் பாடம் எடுத்த பல ஆசிரியர்கள் மறைந்து விட்டார்கள் என்று அறிந்தபோது வருத்தமாக இருந்தது.

  Like

  1. @ ஸ்ரீராம்:

   நாம் பார்க்க நினைக்கையில், தேடிப்போகையில், காலம் கடந்துவிட்டிருக்கும்தான். என்ன செய்வது?
   எனக்கு கிராமத்தில் வாத்தியாராக இருந்த ஒருவர், கிராமத்தில்தான் இருக்கிறார். எப்போதாவது போனால் பார்ப்பதுண்டு. ஆனால் நினைவில் நிற்பவரில்லை அவர்!

   புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சில அபாரத் திறன்கொண்ட பேராசிரியர்கள் தமிழிலும், இங்கிலீஷிலும் எனக்குக் கிடைத்திருந்தனர். அவர்களில் ஒருவரை சிலவருடங்கள் தாண்டியபின் தற்செயலாகப் புதுக்கோட்டையில் சந்திக்க நேர்ந்தது. ஹெர்பர்ட் மோரிஸ். ஆங்கிலோ-இந்தியர். ஆங்கிலத் துணைப்பேராசிரியர். அருமையான மனிதர். என்னில்
   அடர் தலைமயிர், கருகரு மீசை, நடைஉடை பாவனைகள் என அதிரடி மாற்றங்கள் பார்த்து (எண்பதுகள்) ஆச்சரியப்பட்டார் :You have changed .. Changed for the better! என்றார். நான் கூச்சத்துடன் சிரித்தேன். இப்படி சிலரைப் பார்க்க இப்பவும் ஆசையாகிறேன்.

   Like

 7. சென்று வாசித்து தேம்பி அழுதுகொண்டே வருகிறேன் ..மனிதன் குரூர மிருகம் 😦 எனக்கு மரங்களை வெட்டுவது பிடிக்கவே பிடிக்காது .அதுவும் உயிர்தானே .அதில் எத்த்னை பறவைகள் குடியிருந்திருக்கும் அதுகளை வீடற்று போகப்பண்ண பாவம் மனிதரை விடாது .ஏழ்மையின் வலியை கம்பியால் கீரியதுபோல இருந்தது கதாசிரியரின் சில வரிகள் .எ .கா //
  தம்பி தங்கைகள் நேரங்கெட்ட நேரத்தில் ‘பசிக்கிறது’ என்றாலும் “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்றுதான் குரலெடுப்பாள்…//

  அருமையான கதையை வாசிக்க தந்தீர்கள் நன்றி சார்

  Like

  1. @ ஏஞ்சலின்:

   கதையை உள்வாங்கிப் படித்திருக்கிறீர்கள். அதனால்தான் தேம்பி அழ நேர்ந்திருக்கிறது ஒரு குழந்தைபோல். மரங்களை நாம் கனிவுடன் பராமரிக்கவேண்டும். ஆல், அரசு போன்ற பெருமரங்களை , வயதான மரங்களை மூத்தவர்களைப்பார்ப்பதுபோல் மரியாதையாக மனதில் நினைக்கவேண்டும். இப்படியெல்லாம் சொன்னால், பைத்தியக்காரன் என்பார்கள் இந்தக் காலத்தில். ஆனாலும்
   புரியவேண்டியவர்கள், அவர்கள் மிகக் குறைவாகவே இருப்பினும், புரிந்துகொள்வார்கள்.

   Like

 8. வழமையாக இங்கு சைன் பண்ணிவிட்டு, பின்பு இன்னொருதடவைதான் கதை படிச்சுச் சொல்லுவேன், இன்று நேரே களமிறங்கி நானும் அந்த மரத்தடியில் இருந்து படிச்சுப்போட்டே இங்கு வந்தேன்…

  ஒவ்வொரு பழைய மரத்தடியிலும் ஒவ்வொரு நினைவுப்பொட்டலம் இருக்கும்.. அதுவும் கிராமங்கள் எனில் நிட்சயம் இருக்கும்…

  கதை மனதுக்க்கு மிக வேதனை. ஆனா ஒருவேளை இனியாவது அவர் கொஞ்சம் திருந்தி வாழ அந்த மரம் தறிப்பு வழிவகுக்குமோ என்னமோ.

  Like

 9. இந்த பணம் கட்டிப் படிக்கும் முறையை ஏன் தான் அங்கு கொண்டுவந்தார்களோ தெரியவில்லை கொடுமை.

  இலங்கையில் இப்படி இல்லை, கல்வி முறை அனைத்தும் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கும்… சில பிரைவேட் அதாவது இண்டநாசனல் ஸ்கூல் என இருக்கும்.. அது விரும்பினால் பணம் கட்டிச் சேர்க்கலாம் ஆனா அதில் சேர்க்க விரும்புவதில்லை ஏனெனில் யூனிவசிட்டி என வரும்போது, இலங்கையில் கிடைக்காது.

  மற்றப்படி யூனிவசிட்டிகூட அங்கு ஃபிரீதானே… அதே முறைதான் இப்போ இங்கு ஸ்கொட்லாந்திலும்:).. அதிரா வந்திருப்பதாலயோ:)..

  Liked by 1 person

  1. @ அதிரா:
   கதையை வேகவேகமாக படித்துவிட்டீர்கள். நல்லது. ஏழ்மையின் காரணமாக பணம் கட்டமுடியாமல், நோட்புக் வாங்கமுடியாமல் குழந்தைகள் வாசலில் நிற்பது, முட்டிக்கால் போடுவது , கையை மேலே உயரத்தூக்கி பீரியட் முழுக்க நிற்பது, அவமானப்படுவது இப்படி எத்தனையோ சோகங்கள் பள்ளிப்பருவத்திலும். என்ன செய்வது?

   ஸ்ரீலங்காவிலும், நீங்கள் இருக்கும் ஸ்காட்லாந்திலும் இலவசக் கல்லூரிப் படிப்பு என்பது உங்களுக்கு அடித்த யோகம்!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s