வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதை

தமிழின் முதல் சிறுகதை என அறியப்படும் கதை ‘குளத்தங்கரை அரசமரம்’. இது சுதந்திரப்போராட்ட வீரரும், தமிழ் எழுத்தாளருமான வ.வே.சு. ஐயரால் எழுதப்பட்டது. அவருடைய மேலும் சில கதைகளுடன் ’மங்கையர்க்கரசியின் காதல்’ எனும் ஒரு சிறுதொகுதியாக அவரால் 1910-ல் வெளியிடப்பட்டது.

வ.வே.சு. ஐயர்

ஆங்கிலேயர் ஆட்சி கால இந்தியா. தமிழ்நாட்டின் ஒரு ஊரின் பிரதான குளத்தின் கரையில் வெகுகாலமாக இருந்துவரும் அரசமரம் ஒன்றே நமக்குச் சொல்கிறது இந்தக் கதையை. குறிப்பாக நாயகி ருக்மிணியின் கதையை உருக, உருகச் சொல்கிறது. அந்தக்காலத்துப் பாட்டி, தாத்தாக்களிலிலிருந்து இந்தக்கால யுவர்கள், யுவதிகள் வரை அந்தக் குளத்தங்கரைக்கு வராமலிருந்திருக்க முடியுமா? பெரியவர்கள் வம்படிக்கவும், குழந்தைகள் விளையாடவும் அந்த அரசமரம்தானே துணைபோயிருக்கிறது. எத்தனை கதைகள் கண்முன்னே நடப்பதைப் பார்த்திருக்கும், எத்தனைச் சங்கதிகளை அது கேட்டிருக்கும்? இருந்தும், தன் குழந்தைபோல் வாஞ்சையாக அவளது சிறு பிராயத்திலிருந்தே பார்த்துவரும் ருக்மிணியைப்பற்றித்தான் அதன் மனமெல்லாம் நினைவு. அவளுடைய வாழ்வை நமக்கு விரிவாகச் சொல்ல ஆரம்பிக்கிறது அந்த அரசமரம். முதலில் அவளது குழந்தைப் பருவத்து அழகை வர்ணிக்கிறது. வ.வே.சு. ஐயரின் வார்த்தைகளில் அரசமரம் :

...சுவர்ண விக்கிரகம் போலிருப்பாள் குழந்தை. அவளுடைய சிரிச்ச முகத்தை நினைச்சால் அவளே எதிரில் வந்து நிற்பது போலிருக்கிறது எனக்கு. அவள் நெத்தியின் அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். நல்ல உயரமாக இருப்பாள். அவள் கையும் காலும் தாமரைத் தண்டுகள் மாதிரி நீளமாயிருக்கும். அவள் சரீரமோ மல்லிகைப் புஷ்பம் போல் மிருதுவாக இருக்கும். ஆனால் அவள் அழகெல்லாம் கண்ணிலேதான். என்ன விசாலம்! என்ன தெளிவு! என்ன அறிவு! களங்கமற்ற நீல ஆகாசம் ஞாபகத்துக்கு வரும். அவள் கண்களை பார்த்ததும் நீலோற்பலம் நிறைஞ்ச நிர்மலமான நீரோடையைப் போலிருக்கும். பார்வையிலுந்தான் எத்தனை அன்பு! எத்தனை பரிவு!..

பெரியவளாகிவிட்ட நமது ஹீரோயின் ருக்மிணி எப்படி வலம் வந்தாள் அந்த ஊரில், எப்படிப் பழகினாள் தன் தோழியரோடு, எவ்வளவு கனிந்த மனம் அவளுக்கு என ஆசிரியர் அரசமரத்தையே சொல்லவைக்கிறார்:

..அவளுக்கு வயசாக ஆக, அவளுடைய அன்பு வளர்ந்த அழகை என்ன என்று சொல்லுவேன்? குழந்தையாக இருக்கும்போதே யாரிடத்திலும் ஒட்டுதலாக இருப்பாள். இந்தக் குணம் நாளுக்கு நாள் விருத்தியாய்க் கொண்டே வந்தது. தோழிகள் வேறு, தான் வேறு என்கிற எண்ணமே அவளுக்கு இராது. ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, பணக்காரர் வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, அவளுக்கு எல்லா தோழிகள் பேரிலும் ஒரே லயந்தான். இன்னும் பார்க்கப்போனால் ஏழைக் குழந்தைகள் பேரில் மற்றவர்கள் பேரில் விட அதிக பாசம் காட்டுவாள். பிச்சைக்காரர்கள் வந்தால் கை நிறைய அரிசி கொண்டு வந்து போடுவாள். கண் பொட்டையான பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போது அவளை அறியாமலேயே அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகுவதை பார்த்திருக்கிறேன்! அவர்களுக்கு மற்றவர்களுக்குப் போடுவதை விட அதிகமாகவே போடுவாள். இப்படி அளவு கடந்த தயையும் இரக்கமும் அவளுக்கு..

ருக்மிணியின் அப்பா வசதியானவர். அவர் சீராட்டி வளர்த்த பெண்ணுக்கு 12 வயதாகிவிட்டது. அதாவது கல்யாணம் செய்யும் வயது! ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்த வேண்டாம். இது ஒரு நூற்றாண்டுக்கு முன் உள்ள சமூகம் என்பதை கதைபடிக்கும் அவசரத்தில் மறந்துவிடாதீர்கள். ருக்மிணியின் கல்யாண வாழ்வைப்பற்றி அரசமரம் பெருமையாய்ச் சொல்கிறது :

ருக்மிணிக்கு பன்னிரண்டு வயசானதும் அவள் அப்பா அவளை ஊர் மணியம்
ராமசுவாமி ஐயர் குமாரன் நாகராஜனுக்கு கன்னிகாதானமாகக் கொடுத்தார். கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. தோழிப் பொங்கலன்னிக்கும், ஊர்கோலத்தன்னிக்கும் அவள் வருவதைப் பார்த்தேன். கண்பட்டுவிடும், அத்தனை அழகாயிருந்தது. அவள் தோழிகளுக்கு மத்தியில் இருந்ததை பார்க்கும்போது, மின்னற் கொடிகளெல்லாம் சேவித்து நிற்க மின்னரசு ஜொலிக்குமே அந்த மாதிரியேதான் இருந்தது. காமேசுவரையர் ருக்மிணிக்கு கல்யாணப் பந்தலில் நிறைய சீரும் செனத்தியும் செய்திருந்தார். ருக்மிணியின் மாமியாருக்கும் மாமனாருக்கும் ரொம்ப திருப்தியாயிருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் அவளை அடிக்கடி அழைச்சுக் கொண்டுபோய் அகத்திலேயே வைச்சுக் கொள்ளுவாள். ஆசையோடு அவளுக்கு தலை பிண்ணிப் பூச்சூட்டுவாள். தன் பந்துக்களைப் பார்க்கப் போகும்போது அவளை அழைச்சுக் கொண்டு போகாமல் போகவே மாட்டாள். இப்படி சகல விதமாகவும் ஜானகி (அதுதான் ருக்மிணி மாமியார் பேர்) தனக்கு ருக்மிணியின் பேரிலுள்ள அபிமானத்தை காட்டி வந்தாள். மாப்பிள்ளை நாகராஜனும் நல்ல புத்திசாலி. அவனும் ருக்மிணியின் பேரில் மிகவும் பிரியமாய் இருப்பான். கிராமத்தில்அவர்கள் இருவருந்தான் ரூபத்திலும், புத்தியிலும், செல்வத்திலும் சரியான இணை என்று நினைக்காதவர், பேசிக்கொள்ளாதவர் கிடையாது..

இப்படி அந்த ஊரிலேயே பிரசித்திபெற்ற இளம், லட்சிய தம்பதிகளின் வாழ்வில் திடீரெனப் புயல் வீசியது. ருக்மிணியை சொல்லவொண்ணா அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது. யாருக்கும் கெடுதல் நினைக்காத அந்த அப்பாவிப் பெண்ணுக்கு இப்படி எல்லாமா துன்பம் வரும்? சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அவள் தவித்த தவிப்பு.. வேகமாக, உணர்வுபூர்வமாக சொல்கிறது குளத்தங்கரை அரசமரம் – அது கண்டு, கேட்ட வகையில். என்னதான் நடந்தது இறுதியில்? தொடர்ந்து வாசியுங்கள் அன்பர்களே.. வ.வே.சு.ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்

லிங்க்: http://azhiyasudargal.blogspot.in/2009/07/blog-post_9627.html

நன்றி: அழியாச்சுடர்கள் இணையதளம்/ ராம்பிரசாத்.

**

Advertisement

11 thoughts on “வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதை

 1. அக்கால எழுத்து நடையின் வசீகரம் தனி. பகிர்வுக்கு நன்றி.

  Liked by 1 person

  1. Dr B Jambulingam Dr B Jambulingam :
   அந்தக்கால எழுத்திற்கு ஒரு தனி அழகு. ப்ளாக்&ஒயிட் படம்போல.

   Like

 2. நாகராஜன் ருக்மணியை படிக்க முடியாமல் போய்விட்டான். தாமதித்த கணம் கொடுமையாகிவிட்டது. சுலபநீதியில் நாகராஜன் துறவு பூண்டுவிட்டான்.

  Liked by 1 person

  1. @ஸ்ரீராம் :
   வேகவேகமாகத் தவறு செய்யும் மனிதன் நீங்கள் சொல்வதுபோல் சுலபநீதியை நாடுகிறான். அதிலும் ஒரு வேகம். கூடவாழ்பவர்களைப் படிக்காமலேயே பெரும்பாலானோர்க்குக் காலம் ஓடிவிடுகிறது. என்ன செய்ய?

   Like

 3. கதையின் தலைப்பு, கதை படிக்கத் தூண்டுது… விடியட்டும் வந்து படித்துவிட்டுச் சொல்கிறேன்.

  Liked by 1 person

  1. சொன்ன சொல் மீறமாட்டேன்:)).. பெரீய கதை, படிக்க ரைம் ஆச்சு:).. இரு தரம் படிச்சுத்தான் தெளிந்தேன்.. விஜகாந்த் படம் நினைவுக்கு வந்தது… ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு….

   அழகிருந்தாலும் அறிவிருந்தாலும் பெண்கள் எனில் என்னவும் பண்ணிடலாம், ஆண் பிள்ளையை எப்படியும் வாழ வைக்கலாம் எனும் எண்ணம்தான் அனைத்துக்கும் காரணம்..

   ருக்மணிக்கு செய்த துரோகத்தால், இவர்களுக்கும் மகன் இல்லாதது போலாகிட்டே.

   Liked by 1 person

   1. @ அதிரா :

    மெதுவாகப் படிக்கவேண்டிய கதைதான். அந்தக்கால நடை பிடிபடவும் நேரமாகும்.
    பெண்ணுக்குத் துன்பமிழைத்தவர்களுக்கு நிம்மதியில்லை.

    Like

 4. சகோ நீங்கள் அன்று வ வே சு பற்றி சொல்லி இக்கதையைப் பற்றிச் சொல்லியதுமே வாசித்துவிட்டேன். கருத்தும் இட்ட நினைவு.

  இறுதியில் முடிவு ரொம்ப மனசைப் படுத்தியது. என்ன விளையாட்டோ அந்த நாகராஜனுக்கு…சொல்லவும் நினைத்துச் சொல்லாமல் அது என்ன சஸ்பென்ஸ்…நண்பனும் சொல்லியும் அவன் தவறுகிறான்…பின்னர் வருந்தி என்ன பயனோ….

  ஆசிரியர் எழுதும் போது மரம் அவர்களின் சம்பாஷணையிக் கேட்பது போல் மரம் கதை சொல்வது போலவே போகும் இல்லையா அப்போ அவர்கள் கொஞ்சம் தள்ளிச் சென்/ரதும் அப்புறம் சம்பாஷணைக் கேட்கவில்லை என்பதையும் மரம் சொல்லுவது போல் சொல்லி ஆனால் தான் கேட்டதை வைத்து அதை விவரிக்கும் விதமாய் ருக்மனியின் மனதைப் பற்றிச் சொல்வதாய் நகரும்…..

  நல்ல கதை…

  கீதா

  Liked by 1 person

 5. @கீதா:
  நீங்கள் படித்துவிட்டதாக ஏற்கனவே சொல்லியிருந்ததைப் பார்த்து பதிலும் எழுதியிருந்தேன்.
  அந்தக்காலத்தமிழில் அப்போதிருந்த உரைநடையோடு ஒப்பிடுகையில் ப்ரமாத ஃப்லோ-வில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். அப்போதிருந்த துன்பமிகு நெருக்கடி காலகட்டத்தில் இது வெகுவாக வாசகர் கைக்குப்போய்ச்சேர்ந்திருக்காது. தமிழின் தலையெழுத்தே இதுதான். எழுத்து வாசகரைத் தேடி அலையும் நிலை. வாசகருக்காகக் காத்திருக்கும் அவஸ்தை. இப்போதும் கிட்டத்தட்ட அதுதான் பெரும்பாலான கலைப்படைப்புகளுக்கு.
  ஐயரின் ஆரம்பக்கதையான இதுவே இப்படியென்றால் அவர் இன்னும் நிறைய எழுதப் படைப்புத்திறன் இருந்தது. அவகாசம், ஆயுள் ஏனோ தரப்படவில்லை அவருக்கு.

  Like

 6. இது மணிக்கொடி சேகரத்தில் படிச்சேன். ரொம்ப வேதனையா இருந்தது. அந்தக் கால வாழ்க்கையை அப்பட்டமாக எடுத்துக் காட்டும் கதைகளில் இதுவும் ஒன்று.

  Liked by 1 person

 7. @Geetha Sambasivam :

  மனித வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை, அதன் சித்திர, விசித்திரத்தைப் படம்போட்டுக் காட்டுவது இலக்கியம். அதை இந்தக் கதை செய்திருக்கிறது

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s