ஆதவனின் ‘புகைச்சல்கள்’ சிறுகதை

அடுத்ததாக எழுத்தாளர் ஆதவனின் ‘புகைச்சல்கள்’ என்கிற சிறுகதைபற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.


ஆதவன்

பெயரிலேயே ஒரு கவர்ச்சி. பிறந்தது தமிழ்நாட்டின் கல்லிடைக்குறிச்சியில். டெல்லியில் ரயில்வே அமைச்சகத்திலும் பின்பு நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிலும் பணிபுரிந்தவர். மென்மையான மனிதர். (நான் பார்த்த முதல் தமிழ் எழுத்தாளர். என் அண்ணாவின் நண்பர். டெல்லியின் சரோஜினி நகரில் என் அண்ணாவின் வீட்டுக்கு ஒரு மாலையில் வந்தார். ஏதோ புத்தகம் கொடுத்தார். வாங்கிச் சென்றார். அப்போது பார்த்தது. எனக்கோ 20 வயது. இவருடைய அருமையை நான் அறிந்திருக்கவில்லை அப்போது!

தமிழ்ச்சிறுகதை உலகில் எழுபதுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர். இலக்கிய விமரிசகர்களையும், வாசகர்களையும் ஒருசேர திரும்பிப் பார்க்கவைத்த படைப்பாளி. எழுபதுகளில் கணையாழி போன்ற சிறு பத்திரிக்கைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்து இலக்கிய வாசகர்களைக் கவர்ந்தன. நகர்வாழ் மத்தியதர வகுப்பினரின் வாழ்க்கைப்போக்குகளைப் படம்பிடித்தாலும், குறிப்பாக இளைஞர்களின் உளவியல் சார்ந்த போக்குகளைக் கூர்மையாக சித்தரித்த, நளினமும் நேர்த்தியும் காட்டிய எழுத்து. இயற்கையும் இவரது எழுத்தினால் ஆகர்ஷிக்கப்பட்டதோ என்னவோ, 45 வயதிலேயே ஆதவனை அள்ளிக்கொண்டு போய்விட்டது. இவரது ‘என் பெயர் ராமசேஷன்’ நாவல் ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமாக விற்று தமிழ் இலக்கிய உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முக்கிய சிறுகதைத் தொகுப்புகள்: கனவுக்குமிழிகள் , ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் , புதுமைப்பித்தனின் துரோகம், முதலில் இரவு வரும் போன்றவை

குறுநாவல்கள்: இரவுக்கு முன்பு வருவது மாலை, மீட்சியைத்தேடி, நதியும் மலையும், ’பெண்,தோழி,தலைவி’ – மேலும் சில.

நாவல்கள்: காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன்
’புழுதியில் வீணை’ என்கிற நாடகத்தையும் இயற்றியவர் ஆதவன்.

விருது: சாஹித்ய அகாடமி விருது (1987) ‘முதலில் இரவு வரும்’ சிறுகதைத்தொகுப்பிற்காக (ஆசிரியரின் மறைவுக்குப்பின் வழங்கப்பட்டது)

’புகைச்சல்கள்’ சிறுகதையில் : அவன். அவள். இளம் தம்பதி. கல்யாணமாகி ஆறு மாதங்களே ஆகிறது. மணவாழ்வில் பெரிதாகப் பிரச்சினை ஏதும் தலைகாட்டவில்லைதான்.

ஆரம்ப நாட்களின் ஆண்-பெண் இளமைக் கவர்ச்சி இருவரையும் தன்வசம் ஈர்த்துக் கட்டிப்போட்டிருக்க, சின்ன சின்ன உரசல்களைத்தாண்டி எளிதாக நடைபோட்டது தாம்பத்யம். ஒருவர்மீது ஒருவர் காட்டும் அன்பு, உரிமை என்பதெல்லாம் இருவருக்குமே சந்தோஷம் தருகின்றன. ஆனால் மனம் என்று ஒன்று இருக்கிறதே.. அதனால் வெகுநாள் சும்மா இருக்க முடியாதே! எதையாவது கிளப்பவேண்டாமா? சுமுகமாகச் செல்லும் உறவுவெளியில், தன் ஆளுமையை முதலில் நிறுவ முயற்சித்தவள் அவள்தான். அவனிடம் உள்ள தனக்கு ஒவ்வாத சிறுசிறு பழக்கங்களை, குறைகளாகப் பார்த்து அவற்றை சரிசெய்ய தனக்கு உரிமை இருக்கிறதென மனதளவில் ஆரம்பித்து, நியாயம் கற்பித்துக்கொண்டு வார்த்தைகளுக்கு நகர்த்துகிறாள். ஆதவன் எழுதுகிறார்:

’இந்த உரிமையின் போதை முதலில் பிதற்றச் செய்தது அவளைத்தான். அவனுடைய பழக்கங்களைச் சீண்டத் தொடங்கினாள். முதலில் வேடிக்கையாக, பிறகு சீரியஸாக. அவனுடைய ஊதாரித்தனத்தை, அவனுடைய சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை.

முதலிலெல்லாம் சட்டையில் உட்காரும் பூச்சியைத் தட்டிவிடுவது போல அவன் அவளுடைய ஆட்சேபங்களை ஒரு புன்சிரிப்பால் அலட்சியமாகத் தட்டி உதறிவிட்டுத் தன்பாட்டில் இருந்தான். இது அவளுடைய அகந்தையைச் சீண்டியது. தன் அதிருப்தியை அவன் அங்கீகரிக்கும்படி செய்ய வேண்டும். அது அவனைக் காயப்படுத்தவேண்டும் என்பது அவளுக்கு ஒரு தீவிர தாகமாகவும் வெறியாகவும் ஆகி, தன் ஆட்சேபணைகளின் காரத்தை ஏற்றிக் கொண்டே போனாள்.
நிகழ்ந்து கொண்டிருப்பது வெறும் காதல் சீண்டல் அல்ல, தீவிரமான பலப்பரீட்சை; எறியப்படுபவை பூப்பந்துகள் அல்ல; பாணங்கள் – என அவன் உணரச் சிலகாலம் பிடித்தது. உணர்ந்ததும் அவன் எச்சரிக்கை அடைந்தான். .’

என வேகம்பிடிக்கிறது சிறுகதை. அவன் தன் மனைவியின்மீது அன்புடன்தான் இருக்கிறான். அவளும் அவன்மீது அப்படியே – கூடவே அவனிடமிருக்கும் குறைகள் என்னென்ன என்று பூதக்கண்ணாடிகொண்டு பார்ப்பதைப் பொழுதுபோக்காக ஆக்கிக்கொள்கிறாள். அவற்றை சீர்செய்து ஒழுங்குபடுத்துவதற்குத் தான் எடுக்கும் முயற்சிகளுக்கு அவன் உடன்படவேண்டும் என்கிற மனநிலையில் தினம் வளர்க்கிறாள் வார்த்தைகளை.. அவன் ஒவ்வொருமுறையும் அவளுடைய குறைகூறுதல்களுக்கு நிதானமாக பதில் சொல்ல முனைகிறான். அவளை ஆசுவாசப்படுத்த முயல்கிறான் :

‘ஹூம்!’ என்று அவன் பெருமூச்செறிந்தான். ‘இதோ பார், நான் சொல்ல விரும்புவதெல்லாம் அற்ப விஷயங்களை ஏன் பெரிதாக்குகிறாய், என்றுதான்… வாழ்க்கையில் துக்கத்துக்கான காரணங்களையே தேடி சதா துக்கத்தில் ஆழ்ந்திருப்பதும் சாத்தியந்தான். சந்தோஷத்துக்கான காரணங்கள் தேடி எப்போதும் சந்தோஷமாக இருப்பதும் சாத்தியந்தான். நாம் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போவோமே! உனக்காக நான் ஒரு செயற்கையான வேஷமணிந்தால்தான் உனக்குத் திருப்தியா? நான் நானாகவே இருக்க முயற்சி செய்கிற நேர்மையை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய், பாராட்டமாட்டேன் என்கிறாய்?’

‘ஹோ!’ என்று அவள் நொடித்தாள். ‘நல்ல நேர்மை… நான் ஒன்று கேட்கட்டுமா?’

‘ஒன்றென்ன, ஒன்பது கேள்’

‘நான் சிகரெட் குடித்தால் நீங்கள் பேசாமலிருப்பீர்களா?’

‘ஐ டோன்ட் மைன்ட் அட் ஆல்’

‘குடிக்க மாட்டேனென்ற தைரியம் – வேறென்ன?’

‘அதுதான் சொன்னேனே.. இது ரொம்பச் சின்ன விஷயம். நீ குடித்தாலும் சரி, குடிக்காவிட்டாலும் சரி, நம்முடைய உறவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.’

‘பொய்! சுத்தமான வடிகட்டின பொய்!’ என்றாள் அவள், ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரித்தவாறு.

இப்படி வாழ்க்கையில் ஒன்றுமில்லாதவற்றையெல்லாம் ஊதி ஊதிப் பெரிதாக்க முயலும் மனைவி. என்ன சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறாளே.. என்ன செய்வேன் நான்.. என தினம் அவளோடு அல்லாடும் கணவன். இப்படி ஒரு தம்பதியின் மனமுடிச்சுகளைக் காட்டிச் செல்லும் கதை. தொடர்ந்து படியுங்கள்
வாசகர்களே.

லிங்க்: http://azhiyasudargal.blogspot.in/2011/02/blog-post_26.html

நன்றி: ’அழியாச் சுடர்கள்’ இணையதளம். azhiyasudargal.blogspot.in
படம்: இணையம். நன்றி.

**

21 thoughts on “ஆதவனின் ‘புகைச்சல்கள்’ சிறுகதை

  1. வாசிக்கும் ஆவலை உண்டாக்கிய கதை. பகிர்வுக்கு நன்றி.

    Liked by 1 person

  2. உங்கள் எழுத்துகளில் நல்ல அறிமுகம். ஆதவன் கதைகளில் நான் படித்தது “என் பெயர் ராமேசேஷன்” மட்டுமே. அதுவும் பல வருடங்களுக்கு முன்னால்!

    ஒரு தாம்பத்யத்தில் வரும் பிணக்குகளை அழகாக இந்தக் கதையில் சொல்லி இருக்கிறார் ஆதவன். அங்கு சென்று படித்து விட்டேன்.

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம்: டெல்லியில் நான் முதன்முறை வந்திருக்கையில் -என் இருபதுகளில்- கனாட்ப்ளேஸில் மதராஸ் ஹோட்டலுக்கு முன்னான தமிழ்ச் சிறுகடை ஒன்றில் தமிழ்ப்பத்திரிக்கைகள் வரும். அங்கேதான் கணையாழியை முதன் முதலில் கண்டேன். காதல் கொண்டேன்.
      அதில் அப்போது எழுதிக்கொண்டிருந்தவர்களின் பெயர் ஞாபகத்தில் இல்லை. நானும் இலக்கிய வாசிப்புக்குப் புதிது. ஆதவன் கதையை படித்திருப்பேனோ? சுஜாதாவின் கடைசிப்பக்கம் நினைவில் இருக்கிறது.

      Like

  3. ஆவ்வ்வ் நானும் முன்பு ஆதவன் எனும் தலைப்பில் ஒரு போஸ்ட் போட்டேனே:).. அது பட ரிவியூ ஆக்கும்:)… இப்போது வந்து உங்கள் எழுத்தைப் படித்தேன், பின்பு நேரம் ஒதுக்கிக் கதை படிச்சிட்டு வந்துதான் என் மின்னல் முழக்கமெல்லாம்.

    படிக்க மிக சுவாரஸ்யமாகவே இருக்கு… குடும்பத்தில் ஈகோ வந்துவிட்டால்ல்.. எப்படி கணவனை/மனைவியை மட்டம் தட்டலாம் எனத் தேடித்தேடி அதிலேயெ சந்தோசத்தைத் தொலைப்பார்கள் சிலர்.

    ///‘நான் சிகரெட் குடித்தால் நீங்கள் பேசாமலிருப்பீர்களா?’

    ‘ஐ டோன்ட் மைன்ட் அட் ஆல்’///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. தாம் சரியாக நடப்பதில்லை எனில்.. அடுத்தவர் நடக்கும்போதும் தட்டிக் கேட்க முடியாதுதானே… ஏற்றுக்கொள்ளத்தான் வேணும் என்பதை தெளிவாச் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்..

    Liked by 1 person

    1. @ அதிரா: நிதானம்..நிதானம்! நேரம் எடுத்துக்கொண்டு மெல்லப் படிக்கவேண்டிய இலக்கியப்படைப்பு. படித்துவிட்டு வாருங்கள் அடுத்த ரவுண்டு..

      Like

      1. ///@ அதிரா: நிதானம்..நிதானம்! //

        ஆவ்வ்வ் ஏகாந்தன் அண்ணன்.. என்னுள்ளே எழுந்த புயலை.. இப்பூடிச் சொல்லி அடக்கி விட்டீங்கள்.. எதுக்கும் முன் எச்சரிக்கையாக ஒரு கப் மோர் குடித்து விட்டுப் போய்த்தான் படிச்சேன்.

        மிக அருமையான உரையாடல்கள்.. சரி பிழை பிச்சல் பிடுங்கலைத்தாண்டி.. ஒரு இளம் சோடியை … ரகசியக் கமெரா பூட்டி ஒட்டுக் கேட்பதுபோல இருந்தது.. நேரில் பார்ப்பதைப்போல… ஆனா முடிவில எனக்கொரு டவுட்…

        இருவரும் கொஞ்சமும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கிலேயே இல்லை.. முடிவில் குழந்தைக்காகவே இருவரும் விட்டுக் கொடுத்து ஒரு ஒற்றுமையான சூழலை உருவாக்குகின்றனர்… அப்போ ஒரு வேளை குழந்தை கிடைத்திருக்கா விட்டால்ல்ல்??

        Liked by 1 person

      2. @ அதிரா:

        //..ஒரு வேளை குழந்தை கிடைத்திருக்கா விட்டால்ல்ல்??//

        பழைய குருடி.. கதவத் திறடி.. கேஸ்தான்! இதில் கவனிக்கவேண்டியது என்னவெனில், சில மனிதர்கள் -ஆணோ, பெண்ணோ- அழுத்தமானவர்கள். மாறுவதில்லை; விட்டுக்கொடுப்பதில்லை. அவரவர் கொடியை உயர்த்திப்பிடித்தவண்ணமே இருப்பார்கள்! நமது நாயக-நாயகி இந்தமாதிரி கேஸ்கள்போல!

        Like

  4. ஏகாந்தன் சகோ உங்களுக்குப் பின்னூட்டம் கம்ப்யூட்டர் மக்கர் பண்ணி ஆஃப்ட் செய்து செய்து உயிர்ப்பித்து…. காலைல ருந்து இட்டு இட்டு பதியாம மீண்டும் போட்டா ட்யூப்ளிகேட் நு சொல்லி போட மாட்டேங்குது……என்ன செய்யணும்னு தெரில….போய்ட்டு அப்பாலைக்கா வாரேன்……

    கீதா

    Liked by 1 person

  5. இதோ பார், நான் சொல்ல விரும்புவதெல்லாம் அற்ப விஷயங்களை ஏன் பெரிதாக்குகிறாய், என்றுதான்… வாழ்க்கையில் துக்கத்துக்கான காரணங்களையே தேடி சதா துக்கத்தில் ஆழ்ந்திருப்பதும் சாத்தியந்தான். சந்தோஷத்துக்கான காரணங்கள் தேடி எப்போதும் சந்தோஷமாக இருப்பதும் சாத்தியந்தான். நாம் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போவோமே! உனக்காக நான் ஒரு செயற்கையான வேஷமணிந்தால்தான் உனக்குத் திருப்தியா? நான் நானாகவே இருக்க முயற்சி செய்கிற நேர்மையை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய், பாராட்டமாட்டேன் என்கிறாய்?’//

    இதே கருத்தில் ஆனால் ஆங்கிலமும், தமிழும் கலந்த கான்வர்சேஷன்ஸ் என் கதை ஒன்றில் எழுதி முடிக்காமல் (இப்படி நிறைய இருக்கு…!!!! கட்டுரைகளும், கதைகளும்) அதே போன்று உறவுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என்றும் சொல்வதாய்…காதலிக்கும் போது தெரியாதவை கல்யாணம் முடிந்து ஆரம்பிக்கும் சமயம் குறைகள் தெரிவதை எழுதியிருக்கேன்..மாற்றணுமோ..??!! இப்படித்தான் எங்கள் கிர்யேஷன்ஸுக்கு ஒரு கதை முன்பு எழுதியிருந்ததை கொஞ்சம் மாற்றி ஸ்ரீராமுக்கு அனுப்பினேன் அவர் நம்ம தலைவர் சுஜாதா இதே போன்று எழுதியிருக்கார் படமாகவும் வந்தது என்று காயத்ரி படத்தைச் சொன்னார். நான் அந்தக்கதையும் வாசித்ததில்லை, படமும் பார்த்ததில்லை. ஸ்ரீராம் சொன்னதும் காயத்ரி படம் பார்த்தென்…கதி இனிதான் வாசிக்கணும்…. அப்புரம் நம்ம தலைவர் ஏற்கனவே சொல்லிட்டார்னா வேண்டாம் போட வேண்டாம் என்று நானும் சொல்லிட, ஸ்ரீராமும் அதேயே நினைத்ததால் வெளியிடவில்லை. ஆனால் என்னுடைய கதை முடிவு வேறு…

    ஆதவனின் கதை லிங்க் போய் பார்க்கிறேன். …மிக்க நன்றி சகோ இப்படிக் கதைகள் பகிர்வதற்கு…இன்னும் வரும்னு தோணுது சூப்பர் (இப்ப புதுஸா இந்த லைன் ஆட் பண்ணீருக்கேன் ஸோ ட்யூப்ளிகேட்னு சொல்லாதுனு நினைக்கிறேன் ஹாஹாஹா…..நாங்களும் சித்து வேலை பண்ணூவோம்ல….வேர்ட் ப்ரெஸ் மட்ட்டும்தான் பண்ணுமோ!!!).

    கீதா

    Liked by 1 person

  6. @ கீதா:

    உங்களை கம்ப்யூட்டர் , வர்ட்ப்ரெஸ் இரண்டும் சேர்ந்து தொல்லை செய்வதாய்த் தெரிகிறதே! Anyway, you have smartly sorted it out !

    இதுமாதிரியான சில கதைகளில் ஆண்-பெண் மனங்களின் உள்ளடுக்குகளில் புகுந்து விளையாடியிருக்கிறார் ஆதவன். அதனால்தான் அவரது எழுத்து தனித்துவமானது என்கின்றனர்.
    (இரண்டு முறை அவரை மிக அருகில் சந்தித்தும் பேச முடியவில்லையே என்றிருக்கிறது இப்போது. அப்போது நான் பேசாமடந்தையாக, கூச்சஸ்வபாவியாக இருந்த காலம்!)

    உங்களிடம் உள்ள கதையைக் கொஞ்சம் எடிட் செய்து, போக்கை லேசாக மாற்றி எழுதிப்பாருங்கள். விஷயம் ஆழமானதெனில் வார்த்தைகள் வந்து சேர்ந்துகொள்ளும்.

    வாசித்துத் திரும்புக..

    Like

  7. கதை வாசித்துவிட்டேன். அருமை…தலைப்பு செம….முடிவுக்கு ஏற்ற தலைப்பும்…..கணவன் மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளை ரொம்ப அழகா சொல்லிருக்கார். …பாரலெல் ட்ராக்காகப் பயணிப்பார்களோ.ம்ம்ம்ம்

    கீதா

    Liked by 1 person

  8. கமென்ட் மாடெரேஷன் வைச்சிருக்கீங்களா என்ன? இப்ப போட்டது வெயிட்டிங்க் ஃபார் கமென்ட் மாடரேஷன்னு சொல்லுது.

    கணீனி ரொம்பவே படுத்துது…

    கதை வாசித்துவிட்டேன். அருமை…தலைப்பு செம….முடிவுக்கு ஏற்ற தலைப்பும்…..கணவன் மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளை ரொம்ப அழகா சொல்லிருக்கார். …பாரலெல் ட்ராக்காகப் பயணிப்பார்களோ.ம்ம்ம்ம்

    கீதா

    Like

  9. கமென்ட் மாடெரேஷன் வைச்சிருக்கீங்களா என்ன? இப்ப போட்டது வெயிட்டிங்க் ஃபார் கமென்ட் மாடரேஷன்னு சொல்லுது.

    கணீனி ரொம்பவே படுத்துது..வேர்ட் ப்ரெஸ் கூட இப்ப சமாளிச்சுடலாம்னு தோனுது…ட்ரபிளிங்க்தான்..

    கதை வாசித்துவிட்டேன். அருமை…தலைப்பு செம….முடிவுக்கு ஏற்ற தலைப்பும்…..கணவன் மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளை ரொம்ப அழகா சொல்லிருக்கார். …பாரலெல் ட்ராக்காகப் பயணிப்பார்களோ.ம்ம்ம்ம்

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா:

      இந்த வர்ட்ப்ரெஸ் உங்களை மட்டுமல்ல, என்னையும் குழப்பிடுது சிலசமயங்களில். நேற்றிரவு 9 மணிவரை எனது பக்கத்தை செக் செய்தேன் உங்களது, மற்றும் அதிராவின் ’படித்தபின்னான கமெண்ட்’ வந்திருக்கான்னு. நார்மலி, வலது பக்க உச்சி மூலையில் எனக்க்கு மணியடித்து சிகப்புப் புள்ளி காண்பிக்கும். மணியையும் காணோம். புள்ளியையும் காணோம். சரி, புது கமெண்ட் நாளைக்குத்தான் என்றிருந்தேன். காலையில் அட்மின் – க்கத்தை திறந்தால் 3 கமெண்ட் பெண்டிங் என்றது! பார்த்தால் உங்களின் நேற்றிரவு 7 மணி கமெண்ட்டுகளை ஓரமாக வைத்திருந்து எனக்குக் காண்பிக்குதாம். உங்கள் மீது தனிப் ப்ரியமோ! வர்ட்ப்ரெஸ் சிலசமயங்களில் இப்படி லூட்டி அடிக்கிறது. அடிக்கட்டும்!
      ஆதவனின் இதுபோன்ற சில கதைகளை (உறவு-உளவுச் சிக்கல்கள்) படித்திருக்கிறேன். மேலும் ஒன்றை பிறகு போடுவோம். அடுத்தாற்போல் ஒரு பெண் எழுத்தாளரின் படைப்பைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

      Like

  10. எத்தனையோ கதைகள் படித்திருப்பேன் ஆனால் சிறிது கோடி காட்டினாலும் மனதில் மின்னல் பளிச்சிடும் இதைப் படித்தும் ஏதும் நேராததால் படித்திருக்க வாய்ப்பில்லை வாழ்த்துகள்

    Liked by 1 person

    1. @Balasubramaniam G.M :

      சிலரைப்போல் வாரப்பத்திரிக்கைகளில் வந்த பிரபல எழுத்தாளரில்லை இவர். தேடித்தான் படிக்கவேண்டியிருக்கிறது

      Like

  11. அழியா சுடரை என் படிக்கும் லிஸ்டில் வைத்து இருக்கிறேன் . பலர் கதைகளை அருமையான கதை ஆசிரியர்களை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.
    ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது தான்.கருத்து வேறுபாடுகளை களைந்து , குற்றங்களை பொறுத்துக் கொண்டால் வாழ்க்கை வசந்தம்.
    அங்கு போய் படிக்கிறேன்.

    Like

Leave a reply to துளசிதரன், கீதா Cancel reply