நரகத்துக்குத்தான் போவாய் நீ !

யதிகளின் ராஜா -2 (தொடர்ச்சி)

சந்தோஷம் மனதில் பரவ, மெல்லக் காலடி எடுத்துவைத்து உள்ளே சென்றார். அவர் வருவதை கவனமாகப் பார்த்திருந்த திருக்கோட்டியூர் நம்பியின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பலமுறை வணங்கினார் ராமானுஜர்.

அவரை எழுந்திருக்கச் சொல்லி ஆசீர்வதித்தார் திருக்கோட்டியூர் நம்பி. வந்த காரியம் என்ன என்று வினவினார்.
தன் மனதில் வெகுநாட்களாகவே நாராயண மந்திரத்தின் அர்த்தத்தை அறிந்துகொள்ள ஆவல் இருந்ததாகவும், அதற்காகவே ஸ்வாமியிடம் வந்ததாகவும் மிகவும் பவ்யமாகச் சொன்னார். தனக்கு அதனை உபதேசித்தருளுமாறு பிரார்த்தித்து நின்றார் ராமானுஜர்.

ராமானுஜரின் வேண்டுதலுக்கு செவி மடுத்தார் திருக்கோட்டியூர் நம்பி.
அவருக்கு அந்த விசேஷ மந்திர அர்த்தத்தை உபதேசம் செய்தார். பரப்ரும்ஹமான (பரம்பொருளான) அந்த மஹாவிஷ்ணுவையே சதா பக்தியுடன் நினைந்துருகி, இந்த மந்திரத்தை சிரத்தையுடன் தொடர்ந்து சொல்லி தியானிப்பவர் வைகுண்டத்தை (மோட்சத்தை) அடைவது நிச்சயம் என்றார். இறுதியில் ஒரு அபாயகரமான எச்சரிக்கையையும் இணத்தார். `உனக்காக மட்டும், நீ வேண்டிக்கொண்டதால், இது தரப்பட்டுள்ளது. இதனை வேறு எவரிடமும் பகிர்ந்துகொண்டாயானால், நீ நரகத்துக்குத்தான் போவாய்!` என்பதே அது.
`ஆச்சார்ய ஆக்ஞைப்படியே அனைத்தும்` என்று சம்மதித்து, ஸ்வாமி நம்பியை மீண்டும் வணங்கி ஆசிபெற்று விடைபெற்றார் ராமானுஜர்.

வெளியே வந்தவர் எதிரே இருந்த திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணர் திருக்கோவிலுக்குள் நுழைந்தார். ஆனந்தமாய்ப் பெருமாளை வணங்கி மகிழ்ந்தார். கோவிலில் காணப்பட்ட படிகளில் ஏறி, கோபுரம் நிமிர்ந்து நின்ற முதல்தள மாடத்திற்குச் சென்றார். வெளியே பார்க்கலானார். எதிரே பெரிய தெரு. விவசாயிகள், வணிகர்கள், கூலி ஆட்கள், எளியோர்கள், செல்வந்தர்கள் எனப் பலவகைப்பட்ட மனிதர்கள். அன்றாட அல்லல்களில் ஆழ்ந்து அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த ராமானுஜரின் மனதில் பெரும் கருணை பாலாய்ச் சுரந்தது. மானிடராய்ப் பிறந்தவருக்குத்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள், துக்கங்கள்.. ஜனனம், மரணம்..ஜனனம்…என்று அந்த விஷ வளையத்திலிருந்து விடுபடமுடியாமல், காலமெல்லாம் தவித்துக் கிடக்கிறார்களே? இவர்களுக்கு பகவத் விஷயத்தைப்பற்றி, பகவானின் திருவடியை நாடினால்தான் இந்த சம்சார சாகரத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்கிற மனிதவாழ்க்கை ரகசியத்தை, உன்னதமான உண்மையை எடுத்துச் சொல்வோர் யாருமில்லையே? அப்படி ஒரு வழி இருக்கிறது என்பதுகூட இவர்களுக்குத் தெரியாதே? இவர்கள் எத்தனை காலம் காத்திருக்க நேரும்? எந்த ஜன்மத்தில், யாரிடம், என்ன உபதேசம் பெற்று உய்வார்கள்? ஜீவனாகிய சமுத்திரத்தைக் கடந்து கரையேறுவார்கள்? அதுவரை இப்படியே உழன்று, உழன்றுத் தவிக்கவேண்டியதுதானா என அவர் மனம் அரற்றியது.

அப்போது திருக்கோட்டியூர் நம்பியிடம் பெற்ற நாராயண மந்திரத்தின் சக்தி அவரை மெல்ல வருடியது. நான்தான் இருக்கிறேனே என்றது ! அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த மனிதர் கூட்டத்தைக் கொஞ்சம் நிற்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டார் ராமானுஜர். தான் கூறுவதைக் கவனமாக செவிமடுக்கச் சொனனார். கோவில் மாடத்தில் நின்றிருந்த அவரின் தலைக்குப் பின்னே காலைச்சூரியன் தகதகத்தது. ராமானுஜர் அப்போது ஒரு தேவதூதன் போல ஒன்றுமறியாப் பாமரர்களுக்கும், வைஷ்ணவ பக்தர்களுக்கும் ஒருசேரத் தோன்றினார். பிறப்பு இறப்பு என்று மாறி மாறி நிகழும் துன்பச்சுற்றிலிருந்தும், இடையே தொடரும் துன்பமயமான, அல்லல் மிகுந்த வாழ்க்கையிலிருந்தும் பரிபூரண விடுதலையை அந்த பரம்பொருள் ஒன்றே அருளமுடியும் என்றார். ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே புருஷோத்தமன். அவனே பரப்பிரும்மம். அந்த பரம்பொருளே கதி என மனதார நம்பி, எப்போதும் அன்போடு அவனை நாடி, அவனுடைய திருவடித்தாமரையை தியானித்து, நாராயண மந்திரத்தை பக்தி சிரத்தையுடன் சொல்லி வந்தால் உங்களுக்கெல்லாம் வைகுண்டம் என அழைக்கப்படும் பரம்பொருளின் திருவடி நிச்சயம் கிடைக்கும். அதுவே அனைத்து விதமான துன்பங்களிலிருந்தும் உங்களையெல்லாம் விடுவித்துக் காக்கும் என்று எடுத்துரைத்தார். திருக்கோட்டியூர் நம்பியிடம் தான் சற்றுமுன் கற்ற புனித மந்திரமான `ஓம் நமோ நாராயணாய` என்கிற மந்திரத்தை, ஜாதி பேதமின்றி, உயர்வு, தாழ்வு பாராட்டாது, கூடி இருந்த அனைவருக்கும் அன்புடன் வழங்கினார். அந்த மந்திரத்தைத் தான் சொல்ல, அதனை அவர்களைத் திருப்பிச் சொல்ல வைத்தார் ராமானுஜர். அவர்களுக்கு இடப்பட்ட கடமை, தொழில், வாழ்வாதாரம் எதுவாயினும் அதனை முறையாகச் செய்துகொண்டு, நாராயணமந்திரத்தை மனதில் எப்போதும் நம்பிக்கையோடு ஜெபித்து வருமாறு வலியுறுத்தினார்; அதுவே இறுதியில் அவர்களை உய்விக்கும், கரைசேர்க்கும் என்று ஆசி கூறினார். கூடியிருந்தவர்கள் மிகுந்த பக்திப் பரவசமாகி, அவரை நோக்கிக் கைகூப்பி வணங்கினர். அவருடைய அனுமதியுடன் கலைந்து, தத்தம் வேலைகளைப் பார்க்க உற்சாகமாகக் கிளம்பினர்.

திருக்கோஷ்டியூர் கோவில் மாடமேறி ராமானுஜர் செய்த, குடியானவர், வணிகர், அந்தணர் என்கிற பாகுபாடற்ற எல்லோருக்குமான அந்த மந்திர உபதேசம் பற்றிய செய்தி, உடனே திருக்கோட்டியூர் நம்பியின் காதுகளுக்கு எட்டியது. கோபத்துடன் அலறிப்புடைத்துக்கொண்டு ராமானுஜரை நோக்கி வந்தார் அவர். சுற்றிலும் சிலர் பார்த்திருக்க, `ராமானுஜா! என்ன காரியம் செய்தாய்! இதைப் பிறரிடம் பகிர்ந்துகொண்டால் நீ நரகத்துக்குத்தான் போவாய் என்று சொன்னேனே? மறந்துவிட்டாயா? என்னிடம் சத்தியம் செய்து கொடுத்தபின்னும் இப்படி ஏன் நடந்துகொண்டாய்? பதில் சொல்` என்று சீறினார் நம்பி.

ராமானுஜர் ஸ்வாமி நம்பியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார். பணிவுடன் பதில் சொல்லலானார்: ”தங்கள் வாக்குப்படி இந்த மந்திரத்தை பக்தி சிரத்தையோடு சொல்பவர்கள், அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுபட்டு, வைகுண்டம் சென்றடைவார்கள் அல்லவா? ஒன்றுமே அறியாத இந்த அப்பாவி ஜனங்களுக்கு நல்வழிகாட்டுவோர் யாருமில்லையே? இவர்களுக்கு இந்த மந்திர உபதேசத்தை நாமே செய்தாலென்ன? இவர்களும் அதனை பக்தியுடன் சொல்லி வருவார்களேயானால், எல்லாக் கர்மவினைகளிலிருந்தும் அவர்கள் விடுபடுவார்கள். பரம்பொருளின் திருவடி அவர்களுக்கு நிச்சயம். ஆச்சார்யனின் வாக்குப் பொய்க்காதல்லவா? இவ்வாறான சிந்தனை என் மனதைத் தாக்கியது; அதனாலேயே வேறுவழியின்றி, அடியேன் அப்படி செய்ய நேரிட்டது“ என்றார் ராமானுஜர்.

`அவ்வளவு பெரியவனாகிவிட்டாயா நீ ராமானுஜா? குருவுக்கு செய்துகொடுத்த சத்தியத்தை மீறிய நீ, நரகத்துக்குத்தான் போவாய். நினைவில் கொள்!` என்று கொதித்தார் திருக்கோட்டியூர் நம்பி.

ராமானுஜர் கூப்பிய கையுடன் குருவுக்குமுன் தலைதாழ்த்தி நின்றார். மென்மையான குரலில் பதில் வந்தது: ”ஆகட்டும் ஸ்வாமி! தங்கள் வாக்குப்படி, இந்த மந்திரத்தைச் சொல்லித் தியானிக்கும் அனைவரும் வைகுண்டம் எனும் அந்த மோட்சத்தை அடையட்டும். அதற்குப்பதிலாக, அடியேன் மட்டும் நரகம் செல்வதாயின், அது எனக்குச் சம்மதமே. அதுவே என் பாக்யம்! தங்கள் ஆக்ஞைப்படியே நடக்கட்டும் ஸ்வாமி!“ என மெதுவாக, நிதானமாகச் சொன்ன ராமானுஜர், தன் ஆச்சாரியனின் பாதங்களில் விழுந்து வணங்கி அவருடைய ஆசியைக்கோரி நின்றார்.

அந்தக்கணத்தில் திருக்கோட்டியூர் நம்பியின் மனம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. தான் நெருப்பினால் சூழப்பட்டதுபோல் துடித்தார். தன் முன் எந்தக் கள்ளமும் கபடுமின்றி, நிர்மல்யமாய் நிற்கும் சிஷ்யன் ராமானுஜனைப் பார்த்து உடல் நடுங்கியது அவருக்கு. ராமானுஜரை நோக்கி, செய்வதறியாமல், தாங்கமுடியாமல் அரற்றினார் நம்பி: ”இத்தனை வேத சாஸ்திரம் படித்தும், இத்தனைக் காலம் ஓதியும் எனக்கு அந்த அகம்பாவம் இன்னும் போகவில்லையே! உன்னிடமோ அகத்தையே காணவில்லையே! மற்றவரெல்லாம் வைகுண்டம் செல்லவேண்டும். பெருமாளின் திருவடியைச் சேரவேண்டும் என ஏங்கும் ஒருவனை இன்றுதான் முதன்முதலாய்க் கண்டேன். என் அகக்கண்ணைத் திறந்துவிட்டாய்….ஆ! உன்னையா சிஷ்யன் என்றேன்.? நீர் அல்லவோ எம்பெருமான்!” என்று உணர்ச்சிவசப்பட்டார்; ராமானுஜரை ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினார் நம்பி.

குருவின் இந்தச் செய்கையால், ராமானுஜரும் மெய்சிலித்தார். `ஸ்வாமி! தங்களுக்குக் கொடுத்த வாக்கை மீற நேர்ந்த அடியேனை மன்னித்து ஆசீர்வதிக்கவேண்டும்` எனப் பிரார்த்தித்தார். ராமானுஜரை ஆசீர்வதித்த திருக்கோட்டியூர் நம்பி, பரவசத்துடன் அவரைப் பார்த்து நின்றார். சுற்றிக்கூடியிருந்த அக்ரஹாரத்து அந்தணரும், ஊர்க்காரர்களும் கண்முன்னே இந்த அதிசய நிகழ்ச்சியைக்கண்டனர். இருவரையும் பார்த்துக் கைகூப்பி வணங்கினர். திருக்கோட்டியூர் நம்பியிடம் பிரியா விடை பெற்று ஸ்ரீரங்கம் திரும்பினார் ராமானுஜர். (தொடரும்)

Leave a comment