கிரிக்கெட்: இந்தியாவின் 5-ஆவது தொடர்வெற்றி

நியுஸிலாந்தின் ஹாமில்டனில் (Hamilton, New Zealand) சற்றுமுன் முடிவடைந்த உலக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அயர்லாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த உலக்கோப்பையில் இது இந்தியாவின் 5-ஆவது தொடர்வெற்றியாகும்.

முதலில் பேட் செய்த அயர்லாந்தின் துவக்கவீரர்கள் கேப்டன் வில்லியம் போட்டர்ஃபீல்டும்(William Potterfield), பால் ஸ்டர்லிங்கும் (Paul Stirling) இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை நொறுக்குவதில் வேகமாக ஈடுபட்டார்கள். 15 ஓவர்களில் 89/1 என்கிற ஸ்கோர் அயர்லாந்தின் குவார்ட்டர் ஃபைனல் ஆசையைக் கோடிட்டுக் காட்டியது. கிட்டத்தட்ட ஓவருக்கு 6 ரன் வேகத்தில் போவதைப்பார்த்தால் 300-ஐத் தொட்டுவிடுவார்கள் போலிருந்தது. போட்டர்ஃபீல்ட் 67 ரன், நியால் ஓ’ப்ரியன்(Niall O’Brien) 75 பந்துகளில் 75 ரன்; அயர்லாந்தின் கொடியை அண்ணாந்து பார்க்க நேர்ந்தது; உயரத்தில் ஜொலித்தது.

கதையைக் கவனித்துவந்த இந்தியக் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மூளை வேகமாக வேலை செய்தது. இவர்களிடம் வேகப்பந்து வேலை செய்யாது. சுழலுக்குள் சிக்கவைக்க வேண்டியதுதான். திரும்பினார் அஷ்வினை நோக்கி. அஷ்வின் பந்துவீச ஆரம்பித்தவுடன் அயர்லாந்திடம் அயர்வு கண்டது. ரன்கள் ஏறுவதில் சிரமம் ஏற்பட்டது. முதல் 7 ஓவர்களில் கஞ்சத்தனமாக 18 ரன்கள் கொடுத்தார் அஷ்வின். அஷ்வினின் சுழல் வேலைசெய்வது கண்டு ஊக்கமாகி, அந்தப் பக்கம் ஜடேஜாவை இறக்கிவிட்டார் தோனி. ஒன்றிரண்டு முறை ஜடேஜாவைத் தூக்கி அடித்தாலும் பெரும்பாலும் சுழல் பந்துவீச்சாளர்களிடம் அதிகம் முண்ட முடியவில்லை அயர்லாந்து வீரர்களினால். விக்கெட்டுகள் ஒன்றிரண்டு இடையே விழுந்தன. அவர்களால் புதுசாக பார்ட்னர்ஷிப் போடமுடியவில்லை. பிடியை இறுக்க நினைத்து சுரேஷ் ரெய்னாவிடம் பந்தைக் கொடுத்தார் இந்தியக் கேப்டன். ரெய்னா ஒருநாள் போட்டிகளில் அவ்வபோது ஆஃப் ஸ்பின் போடுவதுண்டு. ரெய்னாவின் பகுதிநேர சுழல் வீச்சில் அயர்லாந்துக்கு வந்தது மூச்சுத்திணறல். அஷ்வின், ஜடேஜா, ரெய்னா என்று அயர்லாந்தை முறுக்கு சுத்தினார் தோனி. அவ்வப்போது அவர்கள் முண்டப் பார்க்கையில் மோஹித் ஷர்மா, முகமது ஷமி என இடையிலே செருகிப் படபடக்க வைத்தார். அயர்லாந்தின் விக்கெட்டுகள் பட்டுப்பட்டென தெறித்தன. 39-ஆவது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 என எடுத்திருந்த அயர்லாந்து, கிடுகிடுத்து 49 ஓவர்களில் 259 எனத் தன் கதையை முடித்துக்கொண்டது. நியால் ஓ’ப்ரையான் அதிகப்பட்ச ஸ்கோராக 75 ரன் எடுத்துத் தான் அயர்லந்தின் முன்னணி வீரர்களில் ஒருவர் என நிரூபித்தார். இந்தியத்தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஷமி 3 விக்கெட்டுகளையும், அஷ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலக்கு 260 என ஆட இறங்கியது இந்தியா. துவக்க வீரர்கள் ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவனும் ஆரம்ப ஓவர்களில் நிதானம் காட்டிப் பிறகு சாத்த ஆரம்பித்தார்கள். அயர்லாந்தின் வேகப்பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டார்கள். வேகம் காட்டிய ரோஹித் 66 பந்துகளில் 64 (3 fours, 3 sixers) எடுத்து முதலில் அவுட்டானார். தவனுடன் அவர் கொடுத்த பார்ட்னர்ஷிப் ரன்: 178. பெவிலியனில் உற்சாகமாகி, எப்போதடா மைதானத்துக்குள் இறங்குவோம் எனக் குதித்துக்கொண்டிருந்த விராட் கோஹ்லிக்கு வந்தது வாய்ப்பு. அவரும் ரன் சேர்ப்பதில் தவனுடன் இணைந்தார். பௌண்டரி, சிக்ஸர்கள் பறக்க ஆரம்பித்தன தவனிடமிருந்து. இந்திய ரன்குவிப்பு சீராக உயர்ந்தது. 84 பந்துகளில் 100 என, இந்த உலகக்கோப்பையில் தன் இரண்டாவது சதத்தைப்பூர்த்தி செய்தார் ஷிகர் தவன். இந்திய ரசிகர்களின் முகங்களில் பிரகாச வெளிச்சம். கைகளில் இடது வலதாக இழைந்தாடும் கொடிகள். அயர்லாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் தாம்ப்ஸனை (Stuart Thompson), கோஹ்லி சிக்ஸர் அடித்ததைப்பார்த்து மேலும் உத்வேகமானார் தவன். அவரைத் தானும் சிகஸருக்குப் பறக்கவிட நினைத்து ஒரு தூக்குத் தூக்கினார். பக்கவாட்டில் செல்லமாட்டேன் ; மேலே மேலேதான் உயர்வேன் என அடம்பிடித்தது அவரடித்த பந்து. அயர்லாந்து வீரரிடம் அவசரமாகக் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார் தவன்.(100 ; 11 fours, 5 sixers).

க்ரீஸுக்கு(Crease) வந்தவுடனேயே நேரத்தை வீணடிக்காது ஷாட் விளையாட ஆரம்பித்தார் அஜின்க்யா ரஹானே. Played some sweetly-timed off-drives that delicately bisected the fielders. Nostalgic memories of VVS ! அயர்லாந்து தன் பங்கிற்கு சுழல்பந்துவீச்சை முயற்சி செய்து பார்த்தது. பருப்பு வேகவில்லை! நிதானமாக பேட் செய்த ரஹானேயும், கோஹ்லியும், மேற்கொண்டு நஷ்டமின்றி இந்தியாவை வெற்றிபீடத்தை நோக்கி அழைத்துச்சென்றனர். இரண்டு விக்கெட்டு இழப்பிற்கு 260 என்று தனது 5-ஆவது போட்டியிலும் வெற்றிமுகம் கண்டது இந்தியா. இந்திய அணிக்கு வாழ்த்துக்கூறி அனுப்பிய பிரதமர் நரேந்திர மோதியின் Tweet-ம் அதிவேகத்தில் அங்கே நுழைந்தது!

ஜிம்பாப்வே என்றவுடன் இந்திய ரசிகர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது 1983 உலகக்கோப்பை. அந்தக்கோப்பையின் லீக் மேட்ச்சில், அப்போது முகவரி இல்லாதிருந்த இந்திய அணியின் 5 விக்கெட்டுகளை வெறும் 17 ரன்களில் சுருட்டி விழிபிதுங்கச் செய்தது ஜிம்பாப்வே. கபில்தேவ் வந்து ஜிம்பாப்வே பௌலர்களை நொறுக்கித் தள்ளியிராதிருந்தால் இந்தியாவின் காரியம் அங்கேயே முடிந்திருக்கும்! அதற்கப்புறம் இந்தியா உயிர்த்தெழுந்து வெகுவாக முன்னேறி உலகக்கோப்பையைத் தட்டிச்சென்றது, உலகக் கிரிக்கெட்டின் உன்னதமான சரித்திரம். அடுத்ததாக இந்தியா சந்திக்கவிருப்பது அதே ஜிம்பாப்வேயைத்தான். 5-ஐ வென்றுவிட்டோமே என அலட்சியமில்லாதிருப்பது அவசியம். இனி வரப்போகும் போட்டிகள் தீவிரமானவை. அதில் சிறிய நாடு, பெரிய நாடு என்றெல்லாம் பார்ப்பதற்கில்லை. ஒருகுறிப்பிட்ட நாளில், போட்டியில்- பிட்ச் எப்படியிருக்கிறது, எதிரணியின் பலம், பலவீனம் என்ன என்றறிந்து வியூகம் அமைத்துச் சரியாக விளையாடுவது அவசியமானது. நடக்கப்போவது என்ன என்று ஆவலோடு எதிர்நோக்குவோம்.

**

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s