பாலகுமாரன்

‘சாவி’ வாரஇதழ் என்று நினைக்கிறேன். அப்போது எழுத்தாளர் சாவியே ஆசிரியராக இருந்து நடத்திய பத்திரிக்கை. அதில் வந்துகொண்டிருந்தது அந்த நாட்களில் ’மெர்க்குரிப்பூக்கள்’ என்ற தொடர்கதை. பாலகுமாரன் எனும் புதிதாக அறிமுகமாகி எழுத ஆரம்பித்திருந்த ஒரு எழுத்தாளர் எழுதிக்கொண்டிருந்தது. முதல் அத்தியாயத்திலேயே, ஏதோ போராட்டக்களத்தில் ஹீரோ காலி. போய்விட்டான் மேலே. இருந்தும் கதையின் சுவாரஸ்யம் தொடர்ந்தது. தீயாய்ப் பிடித்துக்கொண்டது. அதிலிருந்த பெண் கதாமாந்தர்கள் அழுத்தமாக, ப்ரகாசமாக வெளிப்பட்டிருந்தார்கள். ஒருவித ஆச்சரியத்துடன் படித்தேன். இப்படித்தான் பாலகுமாரனை ஒரு எழுத்தாளராக இளவயதில் அவதானிக்கத் தொடங்கியிருந்தேன். மெர்க்குரிப்பூக்களுக்கு 1980-ல் ’இலக்கியசிந்தனை விருது’ கொடுக்கப்பட்டது. பிறகு அவர் எழுதிய ’இரும்பு குதிரைகள்’ வித்தியாசமாகத் தோன்றியது அப்போது. ஏனோ சுஜாதாவின் பக்கம் வராத ’சாகித்ய அகாடமி விருது’, அவரது காலத்தவரான பாலகுமாரனை நாடிவர, இரும்பு குதிரைகள் நாவல் வழிவகுத்தது.

இப்படி ஆரம்பித்த பாலகுமாரனின் ஆரம்ப எழுத்தில் ஒரு இலக்கியத் தரம் தென்பட்டது. (விருதுகளை வைத்துச் சொல்லவில்லை இதை). இன்னும் நல்ல எழுத்து இவரிடமிருந்து வரும் என வாசகர்களின் எதிர்பார்ப்பு மேலெழுந்தவேளையில், போக்கு மாறியது. எழுத்துத்தடம் விலகி வேறானது. வேகவேகமாக வணிகப் பத்திரிக்கைகளில் எழுதி ப்ராபல்யம் அடையவேண்டும் என்கிற, சக எழுத்தாளர்களுடனான போட்டி முனைப்பில் எழுத ஆரம்பித்தார். ஜனரஞ்சகப் பத்திரிக்கைகள் அவருடைய கதைகள், தொடர்களை வெளியிட்டன. பிரபலமடைந்தார்தான். ஆனால் எழுத்தின் இலக்கிய தரம் எதிர்ப்பக்கமாகச் சென்று, மலையேறிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

பாலகுமாரன்
சமூகச்சூழலில், குடும்பப் பின்னணியில் உறவுகளின் ஆழங்கள், அபத்தங்கள், சிக்கல்கள் எனப் பின்னிச் சென்ற இவரது எழுத்து, குறிப்பாக குடும்பம் என்கிற பெயரில் பெண்ணின்மீது சமூகம் காட்டிய தாங்கவொண்ணா அழுத்தம், மனவன்மத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது. இதனால் பெண்வாசகரைப் பெரிதும் ஈர்த்தது எனலாம். சராசரித் தமிழ்வாசகரிடையே ஒருகாலகட்டத்தில் மிகவும் பிரசித்தமாக ஆகிப்போனது. குமுதம், ஆனந்தவிகடன், கல்கிபோன்ற வணிகப் பத்திரிக்கைகளின் விற்பனை எகிறுவதற்கு துணைபோனது. எண்பது, தொண்ணூறுகளில் அவரிடமிருந்து சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் புற்றீசலாய்ப் புறப்பட்டு வந்தன. அவையே வாழ்வையும் வளத்தையும் தந்ததால், ஒரு திருப்தியும் அவருக்கு அதில் ஏற்பட்டிருக்கவேண்டும். அதனைத் தொடர்ந்துசென்றார் பாலகுமாரன். அவரைத் தொடரவில்லை அதன் பின்னர் நான்.

வெகுகாலத்திற்குப் பின் ஒருமுறை இந்தியா திரும்பியிருந்தபோது, குமுதத்தின் ’பக்தி’ இதழைப் பார்க்க நேர்ந்தது. (பக்தி, சக்தி என்றெல்லாம் பெயர்வைத்து விற்று, மேலும் மேலும் காசு சேர்ப்பதற்கான யுக்தியை தமிழ்ப் பத்திரிக்கை முதலாளிகள் கையாள ஆரம்பித்திருந்தனர்). அந்த பக்தி இதழிலும் பாலகுமாரன்! என்னடா இது, இங்கேயும் அவரது ஸ்டீரியோ-டைப் குடும்ப மசாலாவா? குடும்பம் எப்படி சாமி கும்பிடவேண்டும் என்று எழுதுகிறாரா? ’காதலாகிக் கனிந்து’ என்கிற தொடர் என்று ஞாபகம். தயக்கத்துடன் படித்துப் பார்த்தேன். ஆன்மீகப் பாதையில் காலூன்றியிருந்தார். அதில்தான் அவர் தன் குருவாகக் கொண்டாடிய யோகி ராம் சூரத்குமார் அவர்களைப்பற்றி எழுத ஆரம்பித்திருந்தார் என ஞாபகம். அல்லது அதில்தான் நான் யோகியைப்பற்றி பாலகுமாரன் எழுதியிருந்ததை முதன்முதலாகப் படித்தேன். யோகியுடனான அவரது சந்திப்பு, அனுபவங்களுக்குப்பின் அவரது எழுத்து பெரும் மாறுதல் கண்டதாகக் கூறியிருக்கிறார். எப்படியிருப்பினும், ஒரு தனிமனிதனாக அவர் யோகியால் வெகுவாக மாற்றப்பட்டிருந்தார், ஆன்மீக வெளியில் பெரிதும் முன்னேறியிருந்தார் என்பதை அவரோடு நெருங்கிப் பழகிய வாசகர்களும், நண்பர்களும் அறிந்திருந்தனர். சொல்லியும் வந்தனர். உடையார், கங்கைகொண்ட சோழன் போன்ற சரித்திரப் புனைவுகளையும், மெய்ஞானிகளான ரமணமகரிஷி, யோகி ராம் சூரத்குமார் ஆகியோரைப்பற்றிய நூல்களையும் அந்தக் காலகட்டத்தில் பாலகுமாரன் எழுதினார். ஏற்கனவே அவருக்கு நிறைய அமைந்துவிட்டிருந்த பெண்வாசகர்களோடு, ஆன்மீக நாட்டமுடைய வாசகர்களும் சேர்ந்துகொண்டார்கள். ’இதுபோதும்’ என்கிற தலைப்பில் பிற்காலத்தில் தான் எழுதிய ஆன்மீக நூலை முக்கியமானதாகக் கருதினார் பாலகுமாரன். சக எழுத்தாளர் ஒருவரிடமும் அதனைக் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார்.

இலக்கியத் துளிர் காட்டிய இவரது ஆரம்ப எழுத்தை கவிஞர் ஞானக்கூத்தன் அடையாளம்கண்டு, ஊக்குவித்திருக்கிறார். வழிப்படுத்த முயன்றிருக்கிறார். துவக்கத்தில் மொழியின் கவிதை வடிவம் பாலகுமாரனை ஈர்த்திருந்திருக்கிறது. புதுக்கவிதைகள் நிறையப் புறப்பட்ட எழுபதுகளின் தமிழ்க்காலம். கணையாழியில் சில கவிதைகள் எழுதியிருக்கிறார். அப்படி வெளிவந்த பாலகுமாரன் கவிதை ஒன்று:

உனக்கென்ன கோவில் குளம்
சாமி பூதம் ஆயிரமாயிரம்
இனிமையாய்ப் பொழுதும் போகும்
வலப்பக்கம் கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்கணுக்கள்
வலிக்கின்றன
அடியே
நாளையேனும் மறக்காமல்
வா

இன்றைய தமிழ் எழுத்துச்சூழலில் இத்தகையக் கவிதை ஒன்றை பெரும்பாலானோர் அனாயாசமாக எழுதிவிடக்கூடும்!

ஞானக்கூத்தனின் மொழிலயம் காட்டும் பாலகுமாரனின் பழைய கவிதை ஒன்று – சற்றே நீளமானது எனினும் சுவாரஸ்யமானது – கிடைத்தது. கீழே:

பிழை

ஆயிரம் கவலைகள் இருந்தாலும்
காலை என்பது சந்தோஷம்
விடியல் என்பது நம்பிக்கை
காலைப்போலப் பரவசமாய்
கவலை மறக்கும் பெருமிதமாய்
பிறிதொரு விஷயம் பிள்ளைகள்
காலை நேரம் தெருவோரம்
கைகள்வீசி நான் நடக்க
பள்ளிப்பிள்ளைப் பலநூறு
போவார் வருவார் பூஞ்சிட்டாய்
வெட்டிப்போட்ட பெரும்வாழை
ஆற்றில்போக அதன்மீது
தத்தித் தத்தி இடமாறும்
பறவைகள்போலே கீச்சிட்டு
சைக்கிள் ரிக்ஷா தார் ரோட்டில்
பத்துப் பிள்ளைகள் அதனுள்ளே
அலையில் உருண்ட வாழைபோல்
வண்டி குலுங்கப் பள்ளத்தில்
புத்தகம் தாங்கிய பையொன்று
தெருவில் விழுந்தது ’சொத்’தென்று
போவோர் வருவோர் கூச்சலிட
அலைந்தது ரிக்ஷா நடுரோட்டில்
ஓரம் நின்றது கதறலுடன்
ரிக்ஷாக்காரன் கருமுதுகில்
கிழிசல் பனியன், அதன்மீது
கொடிகள் இரண்டு வியர்வையுடன்
வண்டிக்காரன் கீழிறங்கி
பையைப் பார்த்தான் ஆத்திரமாய்
எவனுது பையி, சோம்பேறி
எவண்டா விட்டான் நடுரோட்டில்
தினமும் எழவா ரோதனையாப்
போவுது போடா எம்பொழப்பு
பையைவிட்ட சிறுபிள்ளை
தரையில் குதிக்க, கைதூக்கி
தலையில் போட்டான் கொடிமுதுகு
வலியில் துடித்தது சிறுபிள்ளை

எனக்கும் உண்டு சிறுமதலை
அதுவும் போகுது பள்ளிக்கு
இதுபோல் தினமும் ரிக்ஷாவில்
எவனோ பிள்ளை விம்மியழ
எனக்குள் மூண்டது பெருங்கோபம்
சொடுக்கித் திருப்பிக் கொடிமுதுகை
‘டேய்’ என விளித்தேன் ஆத்திரமாய்
உன்னை நம்பி பல பெற்றோர்
பிள்ளையை அனுப்ப நடுரோட்டில்
தலையில் அடிக்கும் தைரியமா
எப்படி வந்தது கொடிமுதுகா
அவனும் பேச நான் பேச
வார்த்தை தடித்தது பிரம்பாக
நரம்புகள் திமிறின முறுக்காக
பறப்பன ஊர்வன எல்லாமே
திகைத்து நின்றது நடுத்தெருவில்
எனக்குத் துணையாய் பலபேர்கள்
அவனை மதித்தும் சிலபேர்கள்
இரண்டாய் மூன்றாய் பலநூறாய்
கூட்டம் சேர்ந்தது முற்பகலில்
தலையில் அடித்தக் கைவிரலை
ஒடித்துப்போட்டால் சரியாகும்
எவரோ தீர்ப்பை முன்மொழிய
என்னைத் தொட்டான் சிறுபிள்ளை
ஏனெனக் கேட்டேன் தலைகுனிந்து
ரிக்ஷா ஓட்டி என் தகப்பன்
பையை விட்டது என் தவறு
எனக்காய் தினமும் கால்வலிக்க
இத்தனைப்பேரை அவர் இழுக்க
தலையில் அடித்தது பெரிதில்லை
அப்பாமீது பிழையில்லை
மெல்லச் சொன்னான் தரை நோக்கி
வியந்து பார்த்தேன் கொடிமுதுகை
என்னை வெறுத்த கொடிமுதுகு
சோற்றுப் பொட்டலம் தரைவீசி
அதட்டிச் சொன்னான் பிள்ளையிடம்
நடந்து போடா பள்ளிக்கு
ரிக்ஷா சொகுசு உனக்கெதற்கு
கஷ்டப்படுடா கடன்காரா
அப்பத் தெரியும் ஊர் உலகம்
ஏறி மிதித்தான் வண்டியினை
குலுங்கிப்போச்சு தார் ரோட்டில்
சோற்றுப் பொட்டலம் இடக்கையில்
புத்தகச் சுமையோ வலத்தோளில்
கிழிந்த ஷூவை இழுத்தபடி
பிள்ளை போனான் தலைகுனிந்து
எனக்குள் மெல்லிய குறுகுறுப்பு
கூட்டைக் கலைத்த முட்டாளாய்
நடந்து பேசி அவனோடே
விபரம் அறியும் ஆசைகள்
ஏனோ என்னுள் வலிவில்லை
பிழையெது இங்கெனத் தெரியவில்லை

**

தமிழ்த்திரையுலகிலும் பிரவேசித்த பாலகுமாரன் சிறந்த வசனகர்த்தாவாக பல ஆண்டுகள் எழுதினார். சில படங்களில் முத்திரை பதித்தார். சுஜாதாவைப்போல, தமிழ்த் திரைவசனத்தின் தரத்தை பலபடிகள் மேலெடுத்துச்சென்றவர் பாலகுமாரன். ரஜினிகாந்தின் வெற்றிப்படங்களில் பாலகுமாரனின் ஒற்றைவரி வசனங்கள் திரையைத் தாண்டியும் ரசிகர்களின் மனதில் அதகளம் செய்தன. நினைவில் நீங்காது நீள்கின்றன. குணா, காதலன், ஜெண்டில்மேன், புதுப்பேட்டை, பாட்ஷா, நாயகன் போன்ற படங்கள் அவரது வசனத் திறனுக்கு எடுத்துக்காட்டு. 1995-ல் வெளியான பாட்ஷாவில் சில சுருக் சுருக் வசனங்கள் : ’’யுவராணி அவர் கிட்ட என்ன சொன்னீங்க ?’’ “உண்மையைச் சொன்னேன்!” ரஜினிகாந்த் வேறொரு இடத்தில் “டேய்! டேய்! நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்!” என்று கூறுவது சீனைத் தெறிக்கவிட்டது. பாலகுமாரன் –ரஜினிகாந்த் காம்பினேஷனில் ரசிகர்கள் சிலிர்த்தார்கள். காதலன் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம்: “சந்தோஷமோ, துக்கமோ.. பத்து நிமிஷம் தள்ளிப்போடு. நிதானத்துக்கு வருவ.” திரைவசனங்களில் ஒரு துடிப்பு, உக்கிரம், தெளிவு காட்டிய பாலகுமாரனை மறக்கமாட்டார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். கே.பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அவரது உதவியாளராகப் பணியாற்றிய பாலகுமாரன் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்: இது நம்ம ஆளு. ஆனால் படத்திற்கான விளம்பரங்களில் வணிக காரணங்களுக்காக ‘இயக்கம்: கே.பாக்யராஜ்’ என்றிருக்கும்! இப்படியும் நடந்திருக்கிறது பாலகுமாரனுக்கு.

**