ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி

நியூயார்க்கைத் தலைமையகமாகக் கொண்ட ஐக்கியநாடுகள் சபையின் ’நிரந்தர இந்தியப் பிரதிநிதி’யாக (Permanent Representative of India to the UN) (ஐ.நா.வுக்கான இந்திய தூதர்),  இந்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரியான திரு. டி.எஸ்.திருமூர்த்தி மத்திய அரசினால் நியமிக்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளார். மத்திய அரசில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிலரில் ஒருவர். ஏற்கனவே அப்படிப் பணியாற்றிய ஒருவர்தான் இன்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் – டாக்டர் ஜெய்ஷங்கர்!

இந்திய தூதர் திரு. திருமூர்த்தி

பிரதமர் நரசிம்மராவின் ஆட்சியில், மத்தியகிழக்கில் பாலஸ்தீனத்துடனான வெளியுறவு மேம்படுத்தப்பட்டபோது,  இந்திய தூதராலயம் அங்கு 1996-ல் திறக்கப்பட்டது. அதன் முதல் இந்தியப் பிரதிநிதியாக(1996-98) பாலஸ்தீனிய தலைநகர் காஸா (Gaza)வில் பணியாற்றியிருக்கிறார் இவர். டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில், ஆரம்பத்தில் பூடான் தொடர்பாகவும், பின்னர் பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மாலத்தீவுகள் சார்ந்த துறைக்குத் தலைமை வகித்தும் பணியாற்றியுள்ளார். மலேஷியாவில் இந்தியாவின் ஹைகமிஷனராக (தூதுவராக) ஐந்து வருடங்கள்(2013-18) சீரிய பணியாற்றிய பெருமையும் உண்டு. பதவிக்காலம் முடிந்து இந்தியா திரும்பியதும் வெளியுறவுத்துறையில் உயர்பொறுப்புகளில் ஒன்றான ‘செயலர்(பொருளியல் உறவுகள்) (Secretary (Economic Relations) -ஆக பணியாற்றியபின், மோதி அரசு ஐநா-வில் இந்தியாவின் தூதராக திரு. திருமூர்த்தியை நியமித்துள்ளது.

உயர் செயல்திறன், நளினம், மேன்மை என்கிற விரும்பத்தகுந்த குணாதிசயங்களோடு, பழகுவதற்கு மிக இனிமையானவராக, மென்மையானவராக அறியப்படுபவர் அம்பாஸடர் திருமூர்த்தி. தனது அலுவலகப் பயணங்கள், பணி நெருக்கடிகளைத் தாண்டியும், இளநிலையில் உள்ளோரின் குறைதீர்க்க அவர்களை அவ்வப்போது சந்தித்துப் பேசியவர். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் துறை ரீதியாகப் பலருக்கும் தகுந்த சமயத்தில் உதவிய உன்னத உள்ளம் கொண்ட மனிதர்.

ஐ.நா.விற்கான இந்திய தூதராகப் பதவி ஏற்றுக்கொண்டபின், ’ஐ.நா.வின் சர்வதேச அமைதிப்படை நாள்’-ஐ (மே 29) முன்னிட்டு அவர் வெளியிட்ட செய்தியில்,  ஐ.நா.வின் சர்வதேச அமைதிப் படையில் (UN Peacekeeping Force), பலவருடங்களாக இந்தியாவின் மகத்தான பங்கு குறித்துப் பேசியிருக்கிறார். ”இந்திய அமைதிப்படையினர் (Indian Peace Keeping Force (IPKF)) உலகின் பல்வேறு சவாலான, நெருக்கடியான பகுதிகளில் போர்நிறுத்தம்,  அமைதிக்காகக் கடுமையாக உழைப்பவர்கள். வீரத்திற்கும், தன்னலம் கருதாத் தியாகத்திற்கும் பேர்போனவர்கள். உலகின் அமைதிப்படையினரிடையே, மற்றநாடுகளைவிட இந்தியாதான் அதிக உயிர்த்தியாகங்கள் செய்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்” எனக் குறிப்பிட்டார். சர்வதேச அமைதிக்காகப் போரிட்டு, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த இந்திய மாவீரர்களுக்கு அப்போது உருக்கமாக அஞ்சலி செலுத்தினார் இந்திய தூதர் திருமூர்த்தி.

2018-ல் பிரதமர் மோதியின் வருகையின்போது, தென்னாப்பிரிக்காவுடனான ‘விண்வெளி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்’ இந்தியாவின் தரப்பில் கையொப்பம் இடும் திரு. திருமூர்த்தி

சமீபத்தில், ஐ.நா.வின் சர்வதேச ஒத்துழைப்பு, மேம்பாட்டுத் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசுகையில்,  “கொரோனாவைரஸ் பரவலால் உலகெங்கும் பல்வேறு வகை மக்கள், குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரப் பிரச்னை எங்கும் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியாகவும் உருவெடுத்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாக விரைந்து உதவுவதில், டிஜிட்டல் தொழில்நுட்பம் வெகுவாகக் கைகொடுத்திருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மகத்துவத்தை கொரோனா நமக்குக் காட்டியிருக்கிறது. மக்கள்நலத் திட்டங்கள் அனைத்திலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் இப்போது தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் உலக நாடுகள் பலவற்றிற்கு, சர்வதேசவெளியில் ஒரு பொறுப்புமிகு நாடாக இந்தியா மருத்துவ, உபகரண ஏற்றுமதி மற்றும் கொரோனா-தகவல் பரிமாற்றம் என தக்கநேரத்தில் பல உதவிகளைச் செய்திருக்கிறது” என்று ஐ.நா. சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்து பேசியிருக்கிறார் இந்திய தூதர்.

தாய்நாட்டின் சிறப்பு, பெருமையை நிலைநாட்டும்விதமாக, அதன் மென்னுணர்வுகளை சர்வதேச ராஜீயவெளியில் தகுந்தவிதமாக வெளிக்கொணர்ந்து இந்திய நலனைப் பாதுகாக்கும் வகையில், ஐ.நா.வில் நமது நாட்டின் தூதராக சிறப்பான பங்களிப்பை அவர் அளிப்பார் என்பதில் ஐயமேதுமில்லை

திருமூர்த்தி ஒரு எழுத்தாளரும்கூட. அவருடைய முதல் ஆங்கில நாவல் ‘Clive Avenue’ (2004)  Penguin India-வினால் பிரசுரிக்கப்பட்டது. ’கைலாஷ்-மானசரோவர் யாத்திரை’ பற்றிய பயணக் கட்டுரை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது மனைவி கௌரி கிருஷ்ணன்-திருமூர்த்தி, புகழ்பெற்ற அந்நாளைய இந்திய டென்னிஸ் ஜாம்பவான் ராமனாதன் கிருஷ்ணனின் மகள். 1982-ல் கௌரி கிருஷ்ணன் இந்திய தேசீய ஜூனியர் பேட்மிண்ட்டன் டைட்டிலை வென்றிருக்கிறார்.

ஒரு சிறு காலகட்டத்தில் ஸ்விட்ஸர்லந்தின் ஜெனீவாவில் உள்ள இந்திய தூதரகத்தில், அவரோடு இளநிலையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததை, கொஞ்சம் பழகநேர்ந்ததை மகிழ்வோடு நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.

**

6 thoughts on “ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி

    1. @ Balasubramaniam GM :
      ..பரிச்சயமானவரா?!//
      அதான் கடைசி பாராவில் குறிப்பிட்டிருக்கிறேனே. நல்ல பழக்கமுண்டு. வீட்டுக்கு வந்திருக்கிறார். நான் டெல்லி திரும்பியபோது அவர் மலேஷியாவில் பணிபுரிந்ததால், சந்திக்கமுடியவில்லை.

      Like

  1. @ ஸ்ரீராம்: திறமையோடு குணநலன்களும் உடையவர். ஒரு தமிழர் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

    Like

  2. திறமைகளும், நல்ல குணமும் கொண்ட ஒருவர் அதுவும் தமிழர் என்ற பெருமையும். உங்களுக்கும் பரிச்சயமானவர். பற்றிய தகவல்களை அறிகிறோம்.

    துளசிதரன்

    கீதா

    Liked by 1 person

    1. @ துளசிதரன், @ கீதா :

      கருத்துக்கு நன்றி.
      திறமை, தேசபக்தி, நல்ல குணம் இப்படிச் சேர்ந்து ஒருவரில் பார்ப்பது இந்தக் காலத்தில் அரிது!

      Like

Leave a comment