CWC 2019 :  செமிஃபைனலில் இந்தியா !

 

ஒரு பக்கம் குட்டையான பௌண்டரியினால் சர்ச்சைக்குள்ளான அதே பர்மிங்காமில் நேற்று (2-7-19) நடந்தது இன்னுமொரு போட்டி. அதில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா, உலகக்கோப்பையின் அரையிறுதியில் பிரவேசித்துவிட்டது. 2015-ல் நடந்ததைப்போலவே, உலகக்கோப்பையின் Top-4-ல் பங்களாதேஷ் நுழைய முடியாமல்போனதற்கு இந்தியா காரணமானது.

Birmingham: இந்திய அணியின் சீனியர் ரசிகை, 87-வயது சாருலதா பட்டேல் !

நீலவண்ணம் அலையலையாக அசைந்துகொண்டிருந்த மைதானத்தில், 350 என்கிற ஸ்கோரை நோக்கிய ஆர்வத்தில் இந்தியா முதலில் பேட்செய்ய இறங்கியது. ஆனால் முஸ்தாஃபிஸுர் ரஹ்மானின் (5 wickets) ப்ரமாத வேகப்பந்துவீச்சும், ஷகீப்-அல்-ஹஸனின் கூரிய ஸ்பின்னும் இந்தியாவைத் தடுமாறச்செய்து, 314-ல் தன் கதையை முடித்துக்கொள்ளவைத்தது. ரோஹித் ஷர்மா (104) (7 பௌண்டரி, 5 சிக்ஸர் – இந்தக்கோப்பையில் அவரது 4-ஆவது சதம்), கேஎல்.ராஹுல் (77) க்ரீஸில் இருக்கையில் இந்தியா 340 -ஐக்கூட எட்டக்கூடும் எனத் தோன்றியது. ஆனால், கோஹ்லி, பாண்ட்யா, தோனி், (ஜாதவுக்குப் பதிலாக நுழைந்த) கார்த்திக் ஆகியோர்கள் கைகொடுக்கவில்லை. மிடில்-ஆர்டரின் ஒரே விதிவிலக்கு, பங்களா பௌலிங்கை நொறுக்கிய ரிஷப் பந்த்(48). முஸ்தாஃபிசுர் ஒரே ஓவரில் கோஹ்லி, பாண்ட்யா என சாய்த்தும் அசராமல், அதற்கடுத்த ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 3 பௌண்டரிகளை விளாசினார் பந்த். இந்தப் பையனிடம் சரக்கு இருக்கிறது!  இன்னிங்ஸின் கடைசி ஓவரை தோனி விளையாடியவிதம், கிரிக்கெட்டில் தற்போது எந்த நிலையில் அவர் இருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தியது. அவரால் கொஞ்சம் அடிக்கமுடியும்; கொஞ்சம் ஓடமுடியும்.. மேட்ச்சை ஜெயித்துக் கொடுக்கமுடியாது. அந்தக் காலம்.. மலையேறிவிட்டது.

பிட்ச், பேட்டிங்கிற்கு சிரமம் தர ஆரம்பிக்கையில் பங்களாதேஷ் 315 என்கிற இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. பும்ராவும், (குல்தீப் யாதவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டிருந்த) புவனேஷ்வர் குமாரும் டைட்டாகப் போட்டு நெருக்கினார்கள்.  பங்களாதேஷ் வீரர்கள்,  ஷமி, பாண்ட்யா, சஹல் ஆகியோரைத் தாக்கி ரன் குவிக்க முயன்றார்கள். ஒரு கட்டத்தில், ஷகீப்-அல்-ஹஸனின்(66) திறமையான பேட்டிங், கோஹ்லிக்குக் கவலையைக் கொடுத்திருக்கவேண்டும். பாண்ட்யாவை ஒரு பக்கம் கொளுத்திப்போடவைத்தார். தேவைப்படும் ரன் ரேட் ஏறிக்கொண்டிருக்கையில், பங்களாதேஷ் அடித்துத்தானே ஆகவேண்டும். பாதிப் பிட்ச்சில் குத்தி எகிறிய பாண்ட்யாவின் பந்துகள் லட்டுகளாகத் தோன்ற, பௌண்டரிக்குத் தூக்க முற்பட்டனர் ஷகீப்பும், லிட்டன் தாஸும்.  ஆனால் அவர்களை ஒருவர்பின் ஒருவராகக் காலிசெய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார் பாண்ட்யா (3 விக்கெட்டுகள்). பங்களாதேஷ் ஸ்கோர் 179/6. தள்ளாடியது.  ரசிகர்கூட்டத்தின் முகம் வாட ஆரம்பித்தது. விக்கெட்டுகள் மேலும் சரிய,  8-ஆம் எண் பேட்ஸ்மனான முகமது சைஃபுதீன்(51 நாட்-அவுட்) மட்டும் கடுமையாக எதிர்த்தாடினார். பங்களாதேஷுக்கு எதிர்காலத்தில் ஒரு நல்ல ஆல்-ரவுண்டராகப் பரிமளிப்பாரோ சைஃபுதீன் ?

48-ஆவது ஓவரில், தன்னை எல்லோரும் ஏன் இப்படிப் புகழ்கிறார்கள் என பங்களாதேஷுக்குக் காண்பித்தார் ஜஸ்ப்ரித் பும்ரா. தன் கடைசி ஓவரின் ஐந்தாவது, ஆறாவது பந்துகளாக துல்லிய யார்க்கர்களில்,  ரூபெல் ஹுசைன், முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் ஆகிய கடைசி  விக்கெட்டுகளை நெம்பித் தூக்கி எறிந்து, இந்தியக் கொடிகளை உயரத்தில் அசையவைத்தார் பும்ரா (4 விக்கெட்டுகள்). இந்திய வெற்றி, சொற்ப ரன் வித்தியாசத்தில், நிகழ்ந்தது. இருந்தும், அரையிறுதி மேடையில் இந்தியாவைத் தூக்கிவைத்தது.

ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் அரையிறுதிக்குள் வந்துவிட்டன. மற்ற இரு இடங்களுக்காக – இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளிடையே போட்டி. 1992-ஐப் போல், இப்போதும் கடைசிக் கட்டத்தில் பாக். உள்ளே நுழையுமா! பார்ப்போம்..

**

 

8 thoughts on “CWC 2019 :  செமிஃபைனலில் இந்தியா !

  1. இந்தியாவின் கடைசி இரண்டு வெற்றிகளும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. கோலி அவுட்டானால், ஆடுவதற்கு ஆட்களே இல்லை. கோச்சாக/மேனேஜராக இருக்கவேண்டிய தோனியை வைத்துக்கொண்டு ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். இதில், 8 பேட்ஸ்மன்கள் என்ற பெயர் வேறு நேற்றைய ஆட்டத்தில்.

    கோஹ்லி கொஞ்சம் ஆணவம் ஜாஸ்தியாக இருப்பதுபோல் தோன்றுகிறது. இந்த உலகக்கோப்பைக்கு அப்புறம் ரோஹித்திடம் தலைமை போகும், சரியான நபர் சாஸ்திரி இடத்தில் வருவார் என்று நினைக்கிறேன்.

    அடுத்து செமி ஃபைனலில் இங்கிலாந்துடன் தோற்குமா?

    Liked by 1 person

    1. @ நெல்லைத்தமிழன்: சரிதான். தோனியைப்பார்க்கையில் Dhoni Uncle என்று அழைக்கலாம் எனத் தோன்றுகிறதுதான். சாஸ்திரியை உலகக்கோப்பைக்கு முன்னாலேயே தூக்கிவிட்டெறிந்திருக்கவேண்டும். பட்டாலும் புரியாதோ போர்டிற்கு?=

      இப்போது 305 அடித்திருக்கிறது இங்கிலாந்து. பார்ப்போம் நியூஸி எப்படி ஆடுகிறது என. பாக்.கும் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.. எங்காவது இடுக்கு கிடைக்குமா என..

      Like

    1. @ஸ்ரீராம் : பும்ராவின் ஹாட்ரிக்கா? அவ்வளவு நம்பிக்கையா !

      Like

  2. ஜெர்சி நிறம் மாறமலிருந்தால் ஒரு வேளை இந்தியா தோற்றிருக்கலாம் அல்லது இங்கிலாந்துடன் ஆடிய பொது நீல ஜெர்சி இருந்திருந்தால் இந்தியா ஜெயித்திருக்கலாம் ஜெர்சியல் சதி நடக்கிறது போல !

    Liked by 1 person

    1. ஜெர்சி நிறம் எதுவா இருந்தாலும் செமி ஃபைனலோடு இந்தியா நாடு திரும்புகிறது.

      வெறும் வாய்க்கு அவலாக, இந்தியா இங்கிலாந்துடன் செமி ஃபைனலில் விளையாடித் தோற்கும். உடனே அது ஜெர்சி நிறம்தான் காரணம் என்று சொல்லவந்திடுவார்கள்.

      அப்புறம் ஏன் நீல நிற ஜெர்சியில் நாயடி பேயடி இந்தியாவிலேயே ஆஸ்திரேலியாவுடனான மேட்சில் வாங்கியது என்று கேட்கத்தான் இங்கு ஆட்கள் இல்லை.

      Liked by 1 person

      1. @ நெல்லைத்தமிழன்:

        ஆரஞ்சு ஜெர்ஸியை வைத்து டைம்ஸ் நௌ சேனலில் சமாஜ்வாதி பார்ட்டியும், காங்கிரஸும் வாள் வாள் எனக் கத்தின. மோதியின் சதியாம் இது! மோதியின் மீது வசைமழை பொழிய புதுப்புதுக் காரணங்கள்!
        என்ன இப்படிச் சொல்கிறீர்கள் – இந்தியா செமிஃபைனலில் இங்கிலாந்திடம் தோற்றுவிடுமா! அவநம்பிக்கை வேண்டாம். பாக்.கிற்கு எரிச்சலூட்டும் வகையில், இந்தியா ஃபைனலில் ஆஸ்திரேலியாவை சந்திக்கக்கூடும்..!

        Like

  3. @ ஜி.எம்.பாலசுப்ரமணியம்: ஜெர்ஸி நிறம் ? ஓ, நீங்களும் மெஹ்பூபாவின் கருத்தை ஆதரிக்கிறீர்களா !

    Like

Leave a comment