எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதை ‘தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை’


எம்.வி.வெங்கட்ராம். (படம்:இணையம். நன்றி)

தமிழ் முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகளில் சிலவற்றைக் கொஞ்சம் பார்ப்போம். இங்கு வரவிருக்கும் கதைகளில் சில, கதைக்கரு, கதையாடல் அல்லது அவை வாசகனுக்குள் எழுப்பிச்செல்லும் மன உணர்வு போன்றவைகளில் வித்தியாசமாக இருக்கலாம். திறந்த மனதோடு இவற்றை அணுகினால்தான் கதைகளை ஓரளவாவது ரசிக்கமுடியும்.

எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதை ஒன்றிலிருந்து துவங்குவோம். முதலில் சிறுகுறிப்பு ஆசிரியர்பற்றி. பின் கதைபற்றிக் கொஞ்சம் கதைப்போம் !

எம்.வி.வெங்கட்ராம் (1920-2000) : கும்பகோணத்தில் பிறந்தவர். சுதந்திரத்துக்கு முன்னிருந்த காலத்திலேயே பி.ஏ.(பொருளாதாரம்). புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்ற மணிக்கொடி எழுத்தாளர்களோடு அடையாளம் காணப்பட்டவர். ’காதுகள்’ என்கிற தலைப்பிலான இவரது நாவல் தமிழின் முதல் ‘மாய எதார்த்தவாத’ (magical realism) நாவல் என விமர்சகர்களால் அறியப்பட்டது.

இவரது நாவல்களில் சில : நித்திய கன்னி, ஒரு பெண் போராடுகிறாள், உயிரின் யாத்திரை, இருட்டு, காதுகள், அரும்பு.

சில சிறுகதைத்தொகுப்புகள்: உறங்காத கண்கள், அகலிகை முதலிய அழகிகள், குயிலி, மாளிகை வாசம், எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள்.

விருது: சாகித்ய அகாடமி விருது 1993. (‘காதுகள்’ நாவலுக்காக).

‘தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை’ சிறுகதைபற்றி :

கும்பகோணத்தில் ஒரு மத்தியவர்க்க குடும்பம். காலகட்டம் 1950-கள் எனலாம். குடும்பத்தில் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் அப்படி ஒரு அன்னியோன்யம். அப்பாவுக்குப் பிடித்த பிள்ளை. கதையின் ஆரம்பத்திலிருந்து அப்பா தன் மூத்த மகன் சந்திரனைப்பற்றி சொல்லிச் செல்கிறார். ‘நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச்சொன்னதில்லை என்பதும்’ என்கிறார் தன் அருமைப் பிள்ளைபற்றி.

சட்டப்படிப்பு முடித்தான். ப்ராக்டீஸுக்கு செல்லவில்லை. அப்பாவின் வியாபாரத்தை கவனித்து ஒத்தாசையாக இருக்கிறான். பத்திரிக்கை நடத்த ஆசைப்பட்டான். நடத்தினான். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஆறுமாசக் கணக்கைப் பார்த்தால் நஷ்டம். சரிப்பட்டு வராது என்கிறார் அப்பா. ‘இப்போ என்ன? பத்திரிக்கையை நிறுத்திவிடு என்கிறீர்கள் அதுதானே..’ராக’த்துக்கு மங்களம் பாடிவிட்டேன், சரிதானே?’ என்கிறான் மகன்.

இப்படி, சொன்ன பேச்சைக் கேட்கும் பிள்ளைபற்றி அவருக்கு ஒரே பெருமை. என் அபிப்ராயத்தில் என் மகன் நல்லவன். கல்லூரியில் நன்னடத்தைப்பரிசும் அவனுக்குத்தான். சிகரெட், பொடி, புகையிலை வகையறா தெரியாது. பெண்களிடம் சங்கோஜம் இல்லாமல் பழகுவான். ஆனால் வேலி தாண்டியது கிடையாது. நான் கண்டிக்கும்படியாக அவன் ஒன்றும் செய்யவில்லையே என்று அவன்மேல் எனக்குக் குறை! – பாசமாய்ப் பொங்கும் அப்பா.

இப்பேர்ப்பட்ட பிள்ளை கல்யாணவிஷயத்தில் மட்டும் தன் அப்பாவிடம் மனம்விட்டுப் பேசாமல் மர்மமாக ஏன் இருக்கிறான்? அவரோ அந்தக்காலத்துக்கேற்ப, மகாலட்சுமி என்கிற ஒரு பெண்ணை தன் மகனுக்கேற்றவள் என்று மனதில் திட்டமிட்டுவைத்திருக்கிறார்! 22 வயதான இவனோ பேசாதிருக்கிறான். ’இவன் 40 வயதில்கூட கல்யாணம் செய்யலாம். மகாலட்சுமி ஒரு பெண். அவளை ஊறுகாய் போடமுடியுமா..’ என்கிற நியாயமான சிந்தனை அப்பாவின் மனதில்.

ஒருநாள், வெளியே போயிருந்த மகன் திரும்புகையில், அவனைக் கோபித்துக்கொண்டு கேட்டுவிடுவது என்று முடிவுசெய்கிறார் அப்பா. ஆனால் அதிலும் பிரச்சினை. கோபம் என்றால் முகத்தை ’உர்’ரென்று வைத்திருக்கவேண்டுமே.. அவர் ‘உர்’என்று வைத்திருந்த நேரத்தில் அவன் வரவில்லை. அவர் தன் கடைசிப்பையனோடு (3 வயது) சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கையில் சந்திரன் வருகிறான். எப்படிக் கோபிப்பது என்று அவருக்கு கவலை. (இடையிலே அப்பா தன்னைப்பற்றி: 22-ல் ஒரு பையன், 3 வயதில் ஒரு பையனா என்று கேட்கிறீர்களா? இதற்கென்ன வெட்கம்! எனக்கும் கட்டுப்பாட்டில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. கட்டுப்பாடு செய்துகொண்ட ஒரே காரணத்தினால் அதை நானும் அவளும் மீறிவிட்டோம்!’ – அடடா அப்பா!)

திரும்பிவந்த சந்திரனை ’எங்கே சுற்றிவிட்டு வருகிறீர்கள்!’ எனக் கோபம் காண்பிக்க முயல்கிறார் அப்பா. அவன் தான் மகாலட்சுமி வீட்டுக்குப்போனதாகவும், அவளுடன் பேசிக்கொண்டிருந்ததில் நேரம்போனது தெரியவில்லை என்றும் கூறுகிறான். அவருக்கு உள்ளூர சந்தோஷம் – பயல் சரியான ட்ராக்கில்தான் செல்கிறான்!
’அப்படி என்றால் மகாலட்சுமியை உனக்குப் பிடிக்கிறது என்று சொல்..’ என்று பையனை சீண்டுகிறார். முகூர்த்தத்துக்கு நாள் பார்க்கலாமா என்று கேட்ட அப்பாவிற்கு, அவன் ‘வேண்டாம்!’ என்கிறான். ’ஏன் நாள் பார்க்காமல்? சீர்திருத்த திருமணமா?’ என்கிறார் அப்பா.

‘அது இல்லை அப்பா. மகாலட்சுமியை வேண்டாம் என்கிறேன்’ என்று குண்டை வீசுகிறான் மகன். அப்பா அதிர்கிறார்.’ஆரம்பித்துவிட்டாயே! என்ன விளையாட்டு இது. இரண்டுபேரும் சேர்ந்து கும்மாளமடிக்கிறீர்கள்..கல்யாணப்பேச்சில் மகாலட்சுமியைப்பற்றி விளையாடாதே!’ என எச்சரிக்கிறார் அப்பா.

இருவருக்கிடையிலான உரையாடல் சுர்.. சுர்.. :

சந்திரன் தொடர்கிறான்: நிஜமாய்த்தான் சொல்கிறேன்.

ஏன் கருப்பாய் இருக்கிறாள் என்பதாலா?

அதுக்காக இல்லை..

ஒன்னரைக்கண் என்றா?

வந்து..அப்பா..

சதா நாட்டியம் ஆடுகிறாளே அதனாலா?

நான் சொல்லவந்தது…

அவள் ஆண்பிள்ளைக் குரலில் பேசுகிறாள் என்றுதானே சொல்லப்போகிறாய் !

நீங்கள் இப்படிப் பேசிக்கொண்டே போனால் நான் எப்போது பேசுவது? –கேட்கிறான் சந்திரன்.

’மனதுக்குப்பிடிக்கிறது என்று கல்யாணம் வேண்டாம் என்றால் என்னடா அர்த்தம்? போடா! போடா! கல்யாணம் என்றால் இவ்வளவு வெட்கமா! போ, போ, நாள் வைத்துவிட்டுச் சொல்லிவிடுகிறேன்’ – கதையை சுமுகமாக முடிக்கப்பார்க்கும் அப்பா.

’இரண்டுநாள் தவணை கொடுங்கள் அப்பா, முடிவாகச் சொல்லிவிடுகிறேன்..’ என்கிறான் சந்திரன்.

சந்திரன் இறுதியாக என்னதான் சொன்னான்? அப்பாவின் இஷ்டப்படி மகாலட்சுமியைக் கல்யாணம் செய்துகொண்டானா ?
மேற்கொண்டு தொடர்ந்து படிக்கவேண்டுகிறேன் வாசக அன்பர்களை.

எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதை ‘தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை
இணைப்பு: http://www.sirukathaigal.com/tag/எம்.வி.வெங்கட்ராம்/

நன்றி: ’சிறுகதைகள்’ வலைத்தளம் http://www.sirukathaigal.com/

**

10 thoughts on “எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதை ‘தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை’

  1. இந்த தளத்திலிருந்து ஐந்தாறு வருடங்களுக்கு முன் பல சிறுகதைகளை இறக்கி பி டி எப் ஆக்கி வைத்திருந்தேன். ஆனால் கணினியில் படிப்பது சிரமமாய் இருந்தது. ஒரு புத்தகத் திருவிழாவில் எம் வி வி சிறுகதைகள் தொகுப்பு வாங்கினேன். அந்தப் புத்தகம், கடல்புறா இரண்டாம், மூன்றாம் பாகம், மௌனி சிறுகதைகள், ஜீவி ஸார் புத்தகம் என்று ஒரு செட்டே காணாமல் போனது! தேடாத இடமில்லை… இன்னும் கிடைக்கவில்லை.

    ரகுவோடு மகா இணைந்த கதை படித்தேன். எம் வி வியின் படைப்புகளில் நித்திய கன்னியும் காதுகளும் ஸ்பெஷல் என்று படித்த நினைவு. நித்திய கன்னிதான் மகாபாரதக் கதையை ஒட்டியதா என்றும் தெரியவில்லை.

    Liked by 1 person

  2. @ ஸ்ரீராம்:

    ஒரு செட் புத்தகங்கள் காணோமா! கடையிலிருந்து வீட்டுக்குவந்தது வேறெங்கே போகும்? யாருக்காவது இரவல் தந்திருந்தால் தவிர.

    எம்.வி.வெங்கட்ராமைப் பற்றி சிலவருடம் முன்பு கேள்விப்பட்டேன். அவருடைய கதைகளில் (காதுகள் தானோ) ஆன்மிக, அமானுஷ்ய சித்திரங்கள் வருவது சுராவுக்குப் பிடிக்கவில்லையாம். அதனால் அவர் எம்.வி.வி.-யைப்பாராட்டி எழுதவில்லையாம்! அடக் கஷ்டமே..

    Like

  3. இவருடைய சிறுகதைகளை படித்துள்ளேன். அதிகம் ரசித்துள்ளேன். இவரை கும்பகோணத்தில் தோப்புத்தெருவில் அவருடைய வீட்டில் நேரில் ஒரு முறை சந்தித்தது மறக்க முடியாத நிகழ்வாகும்.

    Liked by 1 person

  4. @முனைவர் ஜம்புலிங்கம்:

    எம்.வி.வி.-யை நீங்கள் படித்துள்ளதோடு நேரிலும் சந்தித்திருக்கிறீர்கள் என்பது சந்தோஷம் தருகிறது. நல்ல எழுத்தாளர்; அபூர்வமான மனிதரும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    Like

  5. ஏகாந்தன் சகோ எம் வி வி பற்றி சொல்லி அவரது கதையின் லிங்கும் கொடுத்துருக்கீங்க. இதுவரை வாசிச்சதில்லை. இதோ லிங்க் போய் வாசிச்சுட்டு வரேன்.

    கீதா

    Liked by 1 person

  6. எம் வி வி யின் கதையை வாசித்தேன்! ரொம்ப நன்றாக இருக்கிறது. ஒரு சில வார்த்தைகள் தான் புரியவில்லை. அக்காலத்து தமிழ்!! நடை அப்படியே நம்மிடம் சொல்லுவது போன்று. அருமை. அப்பா பிள்ளை நட்புடனான பாசம் மனதில் தங்கியது இப்போதைய தலைமுறையை நினைத்துக் கொண்டேன். இப்போதும் நட்பு ரீதியில் என்றாலும் காலகட்டத்திற்கேற்றாற் போல் மாற்றங்கள். லிங்கை குறித்துக் கொண்டுவிட்டேன். அவரது அடுத்த கதையும் வாசிக்கிறேன், மிக்க நன்றி ஏகாந்தன் சகோ..

    கீதா

    Liked by 1 person

  7. @ கீதா:

    அவருடைய அந்தக்கால பாஷையும் எளிதான கதையாடலும் கவர்கிறது. முடிந்தால் அவரது ‘காதுகள்’ நாவலை வாசிக்கவேண்டும்.
    தேனீ என்கிற சிறுபத்திரிக்கையும் நடத்தியிருக்கிறார். அதில் மௌனியின் இரு கதைகளை இவர் பிரசுரித்துள்ளார்.

    ஏழ்மையில் உழலுகையில் இவரது எழுத்துக்கு பணம் கொடுக்காமல் முதலாளி ஏய்க்கப்பார்க்க, இவர் பட்ட கொடுமைதான் ஜெயமோகனின் ‘அறம்’ கதையின் மூலம். காதுகள் சரியாகக் கேட்காமல் தள்ளாடும் வயதினில் எம்.வி.வி.யை சந்திருக்கிறார் ஜெமோ.

    Like

  8. மீண்டும் லாண்டட்:).. அன்றே போஸ்ட் படிச்சிட்டேன்.. கதை சொன்னவிதம் அந்த லிங்கைப் பிடிச்சுப் போய் முடிவு படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தைத்தூண்டுது.. படிக்கிறேன் போய்.. இப்போ உள்ளே வர முடியுதோ என முதலில் செக் பண்ணிடுறேனே:)..

    Liked by 1 person

  9. @ அதிரா:

    வாங்க! ஒரு வழியா லாண்ட் ஆகிட்டீங்க! கன்கிராட்ஸ்!
    எம்.வி.வி.-யைப் படிச்சுட்டுத் தட்டுங்க அடுத்த கமெண்ட்டை..

    Like

    1. ஒரே மூச்சில் படிச்சு முடிச்சேன்.. புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை மிக அருமையான கதை, ஆனா சட்டென முடிந்து விட்ட முடிவு. பல விசயங்கள் அதில் எனக்கு ஒத்துப் போவதைப்போல இருந்தன, டக்கூஊஊ டக்கெனக் கொப்பி பண்ணித் தூக்கிட்டு இங்கு ஓடிவந்தேன் அதை வச்சு எழுத.. ஆனா கொப்பி பண்ண முடியல்லியே கர்ர்ர்:))… அதனால ரைப் பண்ணுகிறேன்.

      1. நான் சொல்லி அவன் மீறியதில்லை, அவன் மீறும் படியான விசயம் நான் சொல்வதில்லை….
      *இதேபோலதான் நானும், கிடைக்கும் எனத் தெரிந்தால் மட்டுமே கேட்க நினைப்பேன், கிடைக்காதெனத் தெரிவதைக் கேட்கப்போகமாட்டேன்:)..

      2. ஆண்பெண் பேதமின்றி எல்லோரோடும் சகஜமாகப் பழகுவது..
      *எங்கள் அப்பா எனக்கு அடிக்கடி சொல்வது, ஆண் பிள்ளைகள் என நினைச்சு ஒதுங்கி ஓடிடாதே.. ஆனா எதுவரை பழகலாம் எனும் எல்லை உனக்குத் தெரிஞ்சிருக்கோணும் என…

      3. முகத்தை கோபமாக்க வெளிக்கிட்டு.. கஸ்டப்பட்டு உர்ர்ர்ர்ர் என வச்சிருப்பது:)..
      * ஹா ஹா ஹா நானும் பல நேரம் இப்படித்தான்:)

      Liked by 1 person

Leave a comment