பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா ..

தேடி நான் போனதில்லை. பால்யத்தில், அவ்வப்போது கோவிலில், கல்யாணவீட்டில் கட்டப்பட்டிருக்கும் லௌட் ஸ்பீக்கரில் இருந்து கணீர் என ஒலிக்கும்; இசையோ, பாடலோ சிந்தையை ஆட்கொள்ளும். இப்படித்தான் முருகன் பாடல்கள் என்னையறியாமலேயே எனக்குப் பழக்கமானது. எத்தனையோ பக்திப் பாடல்களைக் கேட்டிருப்பினும் முருகன் பாடல்கள்தான் என்னை வசீகரித்தவை. கவர்ந்தவை. பாடல் வரிகளும், பாடிய குரலும், இசையும் இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கவேண்டும்.

ஆத்மார்த்த முருக பக்தர்களுக்கும், என்னைப்போல் அரைகுறைகளுக்கும் டி.எம்.சௌந்தரராஜன், கேட்காது அளித்த அருட்கொடை இந்தப் பக்திப்பாடல்கள். சிலபாடல்கள் மிகச் சாதாரண வரிகளை உடையவைதான் என்பதனையும் கவனித்திருக்கிறேன். ஆனால் டி.எம்.எஸ். தன் குரலினால், பக்தியினால் அவற்றிற்கு உயிரூட்டி கேட்பவர்களின் மனதில் உலவிக்கொண்டிருக்குமாறு செய்துவிட்டு சென்றுவிட்டார். சம்பந்தப்பட்ட பாடலாசிரியர், இசை அமைப்பாளரையும் (சில பாடல்களுக்கு டி.எம்.சௌந்திரராஜனே இசை அமைத்திருக்கிறார்) இங்கு பாராட்டவேண்டும்.

என் நினைவில், சிறுவனாய் சுற்றிக்கொண்டிருக்கையில் அடிக்கடிக் கேட்டு எனையறியாமல் முணுமுணுத்த பாடல்கள்: ’உள்ளம் உருகுதைய்யா..முருகா உன்னடி காண்கையிலே..’ மற்றும் ’வினாயகனே வினை தீர்ப்பவனே..’ (அம்பியைச் சொல்கையில் அண்ணனை சொல்லாது விட்டால் எப்படி?). பிறகு நாளாக ஆக, ஆழமாக வரிகளைக் கவனித்து ரசிக்க ஆரம்பித்தேன். குரலின் உருக்கம் என் சிறுவயது மனதைப் பாடாய்ப்படுத்தும். டி.எம்.எஸ். என்னைத் துரத்தித் துரத்திப் பாடிச் சென்றாரோ? இல்லை, கேட்டவருக்கெல்லாம் இப்படித்தானா? பாட்டுபாட்டாகப் போட்டுக் கேட்கவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்தானா அந்த முருகன் ?

அழகென்ற சொல்லுக்கு முருகா… உன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா…

-டி.எம்.எஸ். கரைந்துவிட்டார் இந்தப் பாட்டில்.

சொல்லாத நாளில்லை ..
சுடர்மிகு வடிவேலா..,
சுவையான அமுதே
செந்தமிழாலே..

என்று ஆரம்பிக்கும் இன்னொரு டி.எம்.எஸ். பாடலும் இதே போன்று நம்மை அள்ளிச்செல்லும்.

‘முருகனைப்பற்றி ஒரு பக்திப்பாட்டு எழுதிக்கொடுய்யா’ என்றார்கள். நானும் அவசர அவசரமாய் எழுதிக் கொடுத்தேன். அது டி.எம்.சௌந்திரராஜனிடம் போய்ச்சேர, அவர் அதைப் படித்துப்பார்த்துப் பிடித்துப்போக, தானே அதற்கு இசை அமைத்து தன் இனிய குரலால் பாடி, யாரும் அறிந்திராத என்னை தமிழ்கூறும் உலகத்துக்கெல்லாம் அறிமுகப்படுத்திவைத்தார் என்பதாக ஆனந்தவிகடன் தொடரில் எழுதியிருந்தார் கவிஞர் வாலி. அந்தப் பாடலின் ஆரம்பம் இது:

கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே.. உனை மறவேன்…

இவற்றைப்போன்றே இன்னொரு முருகன் பாடலும் மனதை வருடிப்பார்த்தது சிறுபிராயத்தில். சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அப்பாடலை இப்போதும் சிலசமயங்களில் கேட்கிறேன் ஆனந்தமாக:

பன்னிரு விழிகளிலே..
பரிவுடன் ஒரு விழியால்
எனை நீ பார்த்தாலும் போதும் – வாழ்வில்
இடரேதும் வாராது எப்போதும்…
முருகா…

கீழ்வரும் பாடலைக் கேட்டும் யாரும் மயங்காதிருக்க முடியுமா:

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் – முருகா
திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்…
திருச்செந்தூரிலே வேலாடும் – உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்…

இளமை தவழும் ஜெயலலிதாவும் கே.ஆர்.விஜயாவும் வள்ளி, தெய்வானையாக மின்னும் 1967-ல் வெளியான ‘கந்தன் கருணை’ படத்தில் வரும் பாடலிது.. பூவை செங்குட்டுவனின் பாடலை ஆனந்தமாகப் பாடியிருக்கிறார்கள் சூலமங்கலம் ராஜலக்ஷ்மியும், பி.சுசீலாவும். இசை தந்து அன்பு காட்டியவர்: கே.வி.மகாதேவன்.

காங்கோவின் தலைநகர் கின்ஷாஸாவில் ஒரு ஹிந்துக்கோவில் உள்ளது. அங்கே உள்ள கடவுள்களில் பாலமுருகனும் ஒன்று. வாரம் ஒரு முறை அல்லது திருநாள் எனத் தமிழர்கள் கூடி, ஒரு மணிநேரம் பக்திப் பாடல்களைப் பாடுவது உண்டு. நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் தொண்டையை சரிசெய்துகொண்டு சில பக்திப்பாடல்களைப் பாட முயன்றிருக்கிறேன். என் பால்யப்பிராயத்து நினைவுகளைக் கிளறி நெட்டில் வரிகளைத்தேடி பாடிய காங்கோ நாட்கள் அவை. தமிழ்நாட்டில் சிறுவயதில் கேட்கவைத்து, காங்கோவில் போய் பாடவைத்துள்ளான் அந்தக் கார்த்திகேயன் !

அழகென்ற சொல்லுக்கு முருகா.. உன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா –என்கிற பாட்டில் இப்படி சில வரிகள் வரும்:

ஹர ஹரா ஷண்முகா முருகா..
ஹர ஹரா ஷண்முகா முருகா – என்று
பாடுவோர் எண்ணத்தில்
ஆடுவாய் முருகா..!

குழந்தையே முருகா! இப்படிக் குதூகலமாய் ஆடிக்கொண்டிரு எப்போதும்..

**

18 thoughts on “பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா ..

  1. அருமையான பகிர்வு.
    ஈனக்கும் பிடித்த பாடல்கள், அடிக்கடி கேட்டு மகிழ்வேன்.
    மலரும் நினைவுகளில் முருகன் அருமை.
    எப்போதும் ஆடிகொண்டிருக்க வேண்டும் பக்தர்கள் மனதில்

    Liked by 1 person

    1. @ கோமதி அரசு :

      முருகனைப்பற்றிய நினைவு வந்தது. பழையபாடல்கள் ஒன்றிரண்டை யூ-ட்யூபிலும் கேட்டேன்.. அப்படியே சிறிய பதிவாக ஒன்றைப்போட்டேன். கருத்துக்கு நன்றி.

      Like

  2. சொல்லாத நாளில்லை ..
    சுடர்மிகு வடிவேலா..,
    சுவையான அமுதே
    செந்தமிழாலே.. .yes, he is always on our heart. I do have the same experience like you, when I was young, songs fall on your ears and goes to you your brain than registered there for ever.

    Liked by 1 person

    1. @ Nalini :

      நீங்கள் சொல்வது சரி.

      சின்ன வயதில் உள்ளே சென்றவை அங்கே கிடந்து உறங்குவதில்லை. அவ்வபோது மேலெழுந்து நம்மை உருக்குகின்றன. இழந்துவிட்ட வேறொரு உலகத்துக்கு நம்மை மீண்டும் கொண்டுபோய்விடுகின்றன.

      Like

  3. @ முனைவர் ஜம்புலிங்கம் :

    உண்மைதான். மனம் நிர்மலமாயிருந்தால் ஒரு சொல்லே போதும்.

    Like

  4. என் சிறு வயதில் எங்கள் தந்தையார் பாடும் பாடலே நினைவுக்கு வருகிறது
    வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும் உள்ளமுருகுதடி கிளியே ஊனும் உருகுதடி ….. என்று போகும்பாட்டு

    Liked by 1 person

    1. @ Balasubramaniam G.M :

      நீங்கள் குறிப்பிட்ட வரிகள் ப்ரமாதமாயிருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்டதில்லை.

      Like

  5. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
    கந்தனே உனை மறவேன்

    மண் ஆனாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்

    ஓராறு முகமும் ஈராறு கரமும்

    மறக்கமுடியாத டி.எம்.எஸ்ஸின் பாடல்கள்

    மலரும் நினைவுகள்… சிறப்பான பதிவு.. நன்றி

    அகரம் http://agharam.wordpress.com

    Liked by 1 person

    1. @ முத்துசாமி இரா :

      முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Like

  6. எனக்கு(ம்) முருகன் பாடல்கள் அந்தக்கால வானொலியில் காலை ஒலிக்கும் பக்தி மாலைகளினால் அறிமுகம். சூலமங்கலம் சகோதரிகள், டி எம் எஸ், சீர்காழி…

    நல்ல பாடல்களின் வரிகளை பகிர்ந்துள்ளீர்கள்.

    ‘பன்னிரு விழிகளிலே’ பாடலைப் பாடியிருப்பவர் சீர்காழி கோவிந்தராஜன்.

    ஒருமுறை ராஜீவ் காந்தி நினைவு நாளுக்காக திருப்பெரும்புதூர் வந்திருந்த சோனியா காந்தி டி எம் எஸ் பாடல் ஒன்றை (உள்ளம் உருகுதையா என்று நினைவு) கேட்டு அர்த்தம் புரியா விட்டாலும் கடன் உருக்கத்தில் கரைந்ததாகப் படித்த நினைவு.

    கேசெட் காலத்தில் என்னிடம் டி எம் எஸ், சீர்காழி, சூலமங்கலம் ஆகியோர் பாடல்கள் தனித்தனியாக வைத்திருந்தேன். சிடி கூட அப்புறம் வாங்கியிருந்தேன். இப்போது அவ்வப்போது இணையத்தில் கேட்பதோடு சரி.

    Liked by 1 person

  7. @ ஸ்ரீராம்:

    ‘பன்னிரு விழிகளிலிலே..’ கோவிந்தராஜன் பாடியது எனத் திருத்திவிட்டேன். ஜி.எம்.பி.யின் பதிவில் நேற்று நெல்லைக்கு பதிலெழுதியபோது கோவிந்தராஜன் என்றேன். உடனே சந்தேகம் வந்தது. நமது பதிவில் சரியாகத்தான் எழுதியிருக்கிறோமா என்று. ஆனால் சரிபார்க்கவில்லை அப்போது. குறித்ததற்கு நன்றி.

    உண்மைதான் கேசட் காலத்தில் இசையின்மீது தாகம் அதிகமாக இருந்தது. இப்போது அவ்வளவாக இல்லையோ? அதான் யூ-ட்யூபில் பார்க்கலாமே என்கிற டெக்-அலட்சியம் காரணமாக இருக்கலாம்!

    இந்த சோனியா கதை நம்பும்படி இல்லையே! Sonia Maino என்கிற பெயரில் இன்னும் இத்தாலிப் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டிருப்பதாக நம்பப்படுபவர் (அனேகமாக சரியான இன்ஃபர்மேஷன்தான்) , சோனியா காந்தியாக அரசியலுக்காக, புகழுக்காக, வசதிக்காக என இந்தியாவில் மட்டும் வலம்வருபவர், முருகன்பாடலில் மயங்கினாரா? அன்னை சோனியா என்று தினம் சூடம், சாம்பிராணி காண்பிக்கும் தமிழ்நாட்டு அடிவருடிகள் கிளப்பிவிட்டதாக இருக்கும் இது!

    அழகன் முருகனைப்பற்றிப் பேசப்போய் அரசியல் புகை வருகிறதே!

    Like

  8. துளசி: மிக மிக அருமையான பாடல்கள்! தமிழ்நாட்டில் இருந்தவரை கேட்டதுண்டு. கேரளம் சென்றபின் கேட்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பதிந்து தரச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

    Liked by 1 person

    1. @துளசிதரன், கீதா :
      @ துளசி: வாங்க! இந்தப் பாடல்கள் என்னைக் காங்கோவிலும் வந்தழைக்கும் என நினைக்கவில்லை. எல்லாம் அவன் செயல்!

      Like

  9. நான் பெரிய கமென்ட் அடித்து….போடும் போது துளசியின் கருத்தும் சேர்த்துப் போடும் போது பாஸ்வேர்ட் கேட்டு போட்டுவிட்டு வந்தால் கமென்ட் வரலை..சரி காப்பி பண்ணி வைச்சதை மீண்டும் போட்டால் ட்யூப்ளிகேட் கமென்ட் என்று வந்துவிட்டது!!! என்னது இது ட்யூப்ளிகேட்னு சொல்லுது நாம ஒரிஜினல்தானேனு கமென்டை காப்பி பண்ணி வேர்ட்ல போட்டு வைச்சுட்டு பின்னடி வருவோம்னு பார்த்தா துளசியின் கமென்ட் மட்டுமே காப்பி ஆகி என்னோடது போயே போச்…அழுவாச்சியா வருது….ஏற்கனவே கம்ப்யூட்டரோட போராடிட்டுருக்கேன்….போங்க சகோ….திரும்ப என் கமென்ட் அடிக்கணும்…சரி அடிக்கறேன்…திரும்ப வரேன்…

    கீதா

    Liked by 1 person

  10. நீங்க இங்க பகிர்ந்திருக்கும் பாடல்கள் எல்லாமே அருமை இனிமை. சிறுவயதில் நிறைய கேட்டுக் கற்றதும் உண்டு. இப்போதும் கேட்பதுண்டு… மனதிற்கு மிகவும் பிடித்தவர் லார்ட் முருகன்!!
    காவடி ஆடி வந்தால், அறுபடை வீடு கொண்ட திருமுருகா….எல்லாமும் கூட அருமையான பாடல்கள்.
    அதென்னவோ தெரியவில்லை தமிழ்க் கீர்த்தனைகள் கற்பதில் ஆர்வம் உண்டு எளிதாகக் கற்கலாம் என்பதால்…(தியாகு, தீஷு, சியாமு எல்லாம் கேட்டாலும்…) அதுவும் முருகன் பாடல்களைத் தேடிக் கற்றதுண்டு. ஏகலைவிதான் ஹிஹிஹிஹி பல ஃபேமஸ் பாடகர்கள் எனக்குக் குரு!!!!! முருகா முருகா என்றால் உருகாதோ பாடல் – டி எம் கிருஷ்ணா, கண்டநாள் முதலாய் பாடல் – சுதா/உன்னி, கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் – பாம்பே ஜெயஸ்ரீ, வேலவன் துணை இருக்க வேறென்ன வேண்டும் இந்தப் பாடல் யார் பாடியது என்று தெரியவில்லை எங்கள் வீட்டு பழைய காசெட்டில் இருக்கு….

    சரி நீங்க பாடுவீங்களா!!ஹை!! சூப்பர் அப்படினா நீங்க, பாடி பதிவு போடலாமே!! பதிவில் உங்கள் குரலையும் இணைத்து…!!

    Liked by 1 person

    1. துளசிதரன், கீதா :

      @கீதா: மாலையில் எங்கள் ப்ளாகில் உங்கள் பதில்கள் வருகிறதா எனப்பார்த்துக்கொண்டிருந்தேன்! நீங்கள் இங்குவந்து போட்ட கமெண்ட் வேறு காணாமற்போய் டென்ஷன் கொடுத்துவிட்டதா! அடடா.. சோதனை மேல் சோதனை..

      கந்தசஷ்டியன்று மாலை முருகன் கோவிலுக்குப்போனேன். வீட்டுக்கருகில்தான் (பெங்களூரில்) கோவில். போவதற்கு சோம்பல். அன்று பழையபாடல்களை நினைத்திருக்கையில் காங்கோவின் கோவிலில் பாடியதும் நினைவுக்கு வந்தது. அதுபற்றி ஃபாஸ்ட் ஃபுட் போல ஒரு பதிவை படபடவெனப் போட்டேன்.

      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களும் கேட்டிருக்கிறேன். கூடவே ஞாபகத்தில் வருகிறது: ’திருப்புகழைப்பாடப் பாட வாய் மணக்கும்.. எதிர்ப்புகழை முருகா.. உன் வேல் தடுக்கும்..!’ நான் பதிவில் குறிப்பிட்ட பாடல்களை மாறி, மாறிப் பாடியிருக்கிறேன் காங்கோவில் . இப்போது நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. செயற்கரிய செய்துவிட்டோமோ?

      என் குரலை இணைத்து பதிவில் போடலாமா! ஏன், ஏதோ ஒன்றிரண்டு பேர் இந்தப்பக்கம் வந்து கொஞ்சம் படிப்பது பிடிக்கவில்லையா!
      சரி, நீங்கள் பாடியதுண்டா? உங்கள் வீட்டில், பிறர் வீட்டில் ஒரு அக்கேஷனுக்காக.. இப்படி?

      Like

Leave a comment