நேற்றும் நாளையும்

காலைக் காஃபியை மெதுவாக ஸிப் செய்துகொண்டு வலையில் மேய்ந்துகொண்டிருந்தேன். தினமும் ஒருமுறையாவது விமலாதித்த மாமல்லன், ஜெயமோகன், சாரு நிவேதிதா என்று எட்டிப் பார்த்துவிடுவது வழக்கம். இலக்கிய தாகம் என்றெல்லாம் ஜல்லியடிக்க விருப்பமில்லை. ஏதாவது சண்டை, சர்ச்சை, சுவாரஸ்யம் நிகழ்ந்திருக்கிறதா என்று அப்டேட் செய்துகொள்ளத்தான். சில சமயங்களில் அப்படியே நல்ல வாசிப்பனுபவமும் அமைந்துவிடுவதுண்டு. உதாரணம்: மாமல்லனின் ‘படித்த டாக்டர்களும் படிக்காத மெக்கானிக்கும்’ மற்றும் சாருவின் ’அசோகமித்திரனின் தத்துவம்’ எனும் சமீபக் கட்டுரைகள்.

ஜெயமோகன் பக்கத்தில் இருந்தபோது, இளம் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின்பற்றி அவர் குறிப்பிட்டிருந்தது பட்டது கண்ணில் : ‘நேற்றும் நாளையுமில்லாத பித்து’. என்ன சொல்கிறார் இவர்? நேற்றும் நாளையும் ‘இல்லாத’…. அப்படி ஒரு நிலை சாத்தியமெனில், அது நமக்குள் நிஜமாகவே நிகழ்ந்துவிட்டால் எப்படி இருக்கும்? பித்தா அது? அதுவல்லவோ தெளிவு!

எதிரே என்ன நடக்கிறது, தனக்குள்ளேயும் இந்த க்ஷணத்தில் என்னதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்கிற தெளிவான ப்ரக்ஞை ஏதும் மனிதனுக்கிருப்பதில்லை. எப்போதும் ஏதாவதொரு பழசைப்பற்றியோ, எதிர்காலம்பற்றியோ – அப்படி ஒன்று ஒருவேளை இல்லாமல் போகும் சாத்தியமும் உண்டு – நினைத்துக்கொண்டு நிலைகொள்ளாத மனதுடன் நாளெல்லாம் அலைந்துகொண்டிருக்கிறான். நிஜத்தில் வாழ்வைப்பற்றிய எந்தப் புரிதலும் பெரும்பாலும் அவனுக்கில்லை. அதற்கான சிரத்தையோ, ஏன் சிந்தனையோகூட அவனிடம் இருப்பதில்லை. உள்ளும் வெளியுமாக உண்மையில் ஏதோ நடக்கிறது என்பதை உணருமுன்னேயே, அவனுடைய கதை முடிந்துவிடுகிறது.

இருந்தும் மனிதன், தான் இவ்வுலகில் ’வாழ்ந்துகொண்டிருப்பதாக’ நம்புகிறான். நம்பிக்கையில் உழல்கிறது உலகம் . .

**

3 thoughts on “நேற்றும் நாளையும்

  1. நேற்றும் நாளையும் இல்லாத? அந்த வார்த்தையின் தாக்கம் என்னுள் இறங்கவில்லை. எனக்கும் இலக்கியத்துக்கும் சற்று தூரம். உங்கள் விளக்கமே யோசிக்க வைக்கிறது.

    Liked by 1 person

  2. இலக்கியம் என ஆரம்பித்தாலும், இது தத்துவம், ஆன்மீகம் என உயரும் விஷயம்.. கடந்தகால உளைச்சல்கள், எதிர்கால ஏக்கங்கள் என ஈடுபடாத – விலகியிருக்கும் மனநிலை. ஆதலால் அது நிகழ்காலத்திலேயே எப்போதும் இருக்கிறது. அப்போது அது ஒரு தூய்மை நிலை வாய்க்கிறது..என்று போகும். நான் இன்னும் கொஞ்சம் நீட்டி எழுதியிருக்கலாம்.

    குறைவாக எழுதியிருப்பதன் நோக்கம், ஒரு சிந்தனைப்பொறியை எழவைத்து மேலும் அந்தத் தளத்திற்கு- புரியாத ஒரு ப்ரதேசத்துக்கு வாசகரைத் தள்ளுவதுதான்…

    Like

Leave a comment