Russian Poetry : யேவ்துஷென்கோ

ரஷ்யாவின் புகழ்பெற்ற நவீனக்கவிஞர். ஜோசப் ஸ்டாலினின் கொடுங்கோலாட்சியின் கடுமையான சட்ட திட்டங்கள், கெடுபிடிகளுக்கு நடுவே ரஷ்யாவில் கவிஞனாகத் தன் இளமைக்காலத்தை வாழ முயற்சித்தவர். அதனால் பல இன்னல்களுக்குள்ளானவர். 1956-ல் தன் 23-ஆம் வயதில், ‘ஸீமா ஜங்க்ஷன்’ என்கிற புகழ் பெற்ற கவிதையை எழுதினார். உடனேயே இவரது பெயர் ரஷ்ய மக்களின் கவனம் பெற்றது. ஆனால், தனித்துவம், சுதந்திரத்தன்மை இவற்றைத் தன் கவிதைகளில் அதிகமாக வெளிப்படுத்துவதாகக் குற்றம் சாற்றப்பட்டு தான் படித்துவந்த ‘கார்கி இலக்கியக் கழக’த்திலிருந்து அடுத்த ஆண்டே, யேவ்துஷென்கோ (Yevgeny Yevtushenko)  வெளியேற்றப்பட்டார். ஸ்டாலினுக்குப் பிறகு ரஷ்யாவில் ஆட்சிக்கு வந்த குருக்ஷேவ்வின் காலத்தில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோருக்கு ஓரளவுக்கு கருத்துச்சுதந்திரம் அனுமதிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் புகழ்பெற்ற கவிதைகளை எழுதினார் யேவ்துஷென்கோ. 1961-ல் இவர் எழுதிய ‘பாபி யர்’ என்கிற கவிதை இவர் எழுதியவற்றிலேயே அதிகப் புகழடைந்தது. ரஷிய சிந்தனை, கலாச்சாரம், சமூக நிலை ஆகியவற்றை ஒருசேர, மேலைநாடுகளுக்குப் படம்பிடித்துக் காண்பித்தது. இரண்டாம் உலகப்போரின்போது யூதர்கள் ஜெர்மானியர்களால் கொல்லப்பட்டதைப்போலவே, ரஷ்ய அரசும் யூதர்களை வேரறுக்க முயன்றது, அதை ரஷ்யா தனது சரித்திரத்திலிருந்து நீக்கியிருந்தது. அது ஒரு சமூக, சரித்திரக் குற்றம் என விவரிக்கிறது இந்தச் சர்ச்சைக்குரிய கவிதை. இதனால் இன்னல்களுக்குள்ளானார் யேவ்துஷென்கோ. இந்தக் கவிதை ரஷ்யாவிலிருந்து கடத்தப்பட்டு மேலை நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டது. முறையாக இசை அமைக்கப்பட்டு யேவ்துஷென்கோவின் மற்ற கவிதைகளோடு மேலை நாட்டு அரங்கங்களில் பாடப்பட்டு புகழ் அடைந்தது.
இது ரஷிய அரசிற்கும் பெரும் சர்வதேச நெருக்கடியைப் பெற்றுத்தந்தது. 1984வரை இந்தக் கவிதை ரஷ்யாவில் அதிகாரபூர்வமாகப் பிரசுரிக்க அனுமதிக்கப்படவில்லை.

In ‘Time’ magazine’s cover

ஏகப்பட்ட சர்ச்சைகளின் ஊடே எழுதிக்கொண்டிருந்த யேவ்துஷென்கோ, போரிஸ் பாஸ்டர்னாக், ராபர்ட் ஃப்ராஸ்ட் போன்ற சமகால எழுத்தாளர்களால் பாராட்டப்பெற்றார். 2000-க்குப்பின்தான் இவருக்கு உரிய மரியாதையும் கௌரவமும் இவரது தாய்நாட்டிலேயே கிடைக்க ஆரம்பித்தது. 2000-ல் ரஷ்ய விஞ்ஞானக் கழகத்தினர் தாங்கள் கண்டுபிடித்த நட்சத்திரம் ஒன்றிற்கு இவரது பெயரை வைத்தனர். 2001-ல் ரஷ்ய அரசாங்கம் சைபீரியாவிலுள்ள இவரது பிறந்த நகரான ஸீமாவிலுள்ள இவரது பூர்வீக வீட்டைப் புனரமைப்பு செய்து, அதனை ஒரு கவிதை மியூசியமாக மாற்றிக் கௌரவித்துள்ளது.

யேவ்துஷென்கோ 1933-ல் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் ஸீமா என்னும் நகரத்தில் பிறந்தவர். இயற்பெயர்: யேவ்ஜெனி அலெக்சாண்ட்ரோவிச் காங்னஸ். விவாகரத்தின் காரணமாக தந்தையை சிறுவயதிலேயே பிரிய நேர்ந்தது. தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். தன் அம்மாவின் பெயரான யேவ்துஷென்கோ என்கி்ற பெயரையே தன் பெயராகக்கொண்டு கவிதைகள் எழுதினார். முதல் கவிதை அவரது 16 ஆவது வயதில் பிரசுரமானது.

யேவ்துஷென்கோவின் ‘பொய்கள்’ என்று தலைப்பிடப்பட்ட கவிதையைக் கீழே, மொழியாக்கம் செய்து தந்திருக்கிறேன்:

பொய்கள்

இளைஞர்களிடம் பொய் சொல்வதெல்லாம் தவறானது
அந்தப் பொய்களை உண்மைதான் என
அவர்களிடமே நிரூபிக்க முயல்வது
அதைவிடவும் தவறு
சொர்க்கத்தில் கடவுள் இருக்கிறார்
உலகத்தில் எல்லாம் சரியாகவே இருக்கின்றன
என்றெல்லாம் அவர்களிடம் சொல்லாதீர்கள்
அவர்களுக்கு எல்லாம் தெரியும்
அவர்களும் மனிதர்கள்தானே
மாறாக, வாழ்வில்
எண்ணற்ற துன்பங்கள் வரவிருப்பதைப்பற்றிக்
கூறுங்கள் அவர்களிடம்
எதிர்காலத்தில் எதைஎதையெல்லாம்
எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதோடு
நிகழ்காலத்தையும் அவர்கள்
நன்றாகப் புரிந்துகொள்ளட்டும்
வாழ்வில் பெருந்தடைகள் இருப்பது உண்மைதான்
அவற்றை எதிர்கொண்டே ஆகவேண்டும்
கஷ்டமும் சோகமும் கூடவே வரும்தான்
என்பதையெல்லாம் தெளிவாக
அவர்களிடம் சொல்லிவிடுங்கள்
இதில் என்ன வந்துவிடப்போகிறது
சந்தோஷத்திற்காகத் தரவேண்டிய விலை என்ன
என்பதை அறியாதவன் ஒருநாளும் வாழ்வில்
சந்தோஷமாக இருக்க மாட்டான்
அவர்களிடம் நீங்கள் காணும் தவறுகளை
ஒருபோதும் மன்னித்துவிடாதீர்கள்
பன்மடங்காக அவைகள் உருவெடுத்து
நம்மை நோக்கியே நிச்சயம் திரும்பி வரும்
அப்படி வந்த பிறகு
நாம் அவர்களை மன்னித்தது போல
நமது மாணாக்கர்கள், நமது பிள்ளைகள்
நம்மை மன்னிக்க மாட்டார்கள்

யேவ்துஷென்கோ