வந்திருப்பது வெஸ்ட் இண்டீஸோ, ஸ்ரீலங்காவோ அல்ல என்பது முதல் சில ஓவர்களிலேயே விராட் கோஹ்லியின் இந்திய அணிக்குத் தெரியவரும்! சதமடிப்பது, ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்துவது, சிக்ஸர்களில் ரெகார்ட், ஐசிசி டாப்-ரேங்கிங் என்பதெல்லாம் பழையகதையாகிவிடும். கவனமாக ஆடாவிட்டால், கந்தல்தான் இந்தியா என்கிற நிதர்சனம் எதிரே…
ஒருநாள் தொடர் ஆடுவதற்காக ஆரோன் ஃபின்ச்சின் (Aaron Finch) தலைமையில் இந்தியா வந்து, இன்று முதல் போட்டியை மும்பையில் ஆடும் ஆஸ்திரேலிய அணி முழுபலத்துடன் இருக்கிறது. வெகுநாட்களுக்குப்பின் அவர்களுக்கு வேண்டிய காம்பினேஷன் அமைந்திருக்கிறது. பேட்டிங்கில் டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், லபுஷான் (Marnus Labuschagne), ஸ்மித் போன்ற சிங்கங்கள். பௌலிங்கில் கம்மின்ஸ், ஸ்டார்க் போன்ற வேகப்புயல்களோடு ஆஷ்டன் ஏகார் (Ashton Agar), ஆடம் ஜாம்ப்பா (Adam Zampa) போன்ற திறன்காட்டும் ஸ்பின்னர்களும். இந்திய மீடியா சில மாதங்களாக ஆஹா.. ஓஹோ.. எனக் கொண்டாடிவரும் இந்திய பேட்டிங்கின் முதுகைப் பிரிக்க ஆஸ்திரேலிய பௌலர்களால் முடியும். இந்தியா கவனித்து சரியாக ஆடாவிட்டால் தொடர் ஆஸ்திரேலியாவுக்குப் போய்விடும்.
இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்களில் ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராஹுல், ரிஷப் பந்த் ஆகியோர் பெரும் அழுத்தத்துடன் விளையாடவேண்டியிருக்கும். இளம் வீரர்களான ஷ்ரேயஸும், ரிஷப்பும் இங்கே நிரூபித்தே ஆகவேண்டும் தாங்கள் யார் என்பதை. ஆஸ்திரேலிய வேகத்தில், ஆரம்ப விக்கெட்டுகள் எளிதில் சரியும் வாய்ப்பு அடிக்கடி வரும் என்பதால், பின் வரிசையில், ஜடேஜாவுக்கு நிறைய வேலை இருக்கிறது. பௌலர்களில் பும்ரா, ஷமி, டாக்குர், குல்தீப் யாதவ் எப்படி ஆஸ்திரேலியர்களை சமாளிப்பார்கள் எனப் பார்க்க ரசிககர்கள் ஆவலாகிறார்கள். பும்ரா காயத்திலிருந்து மீண்டதற்குப்பின், முதல் கடினமான தொடரை ஆடவிருக்கிறார். ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா இல்லாத நிலையில், ஷிவம் துபே (Shivam Dube) ஆஸ்திரேலிய தாக்குதலைத் தாக்குப்பிடிப்பாரா? சாதித்தால் புகழ். இல்லையேல் வாசல்தான்.
An exciting one-day series is here. பட்டாசுகள் வெடிக்கும். எந்தப் பக்கத்திலிருந்து என்பதைத்தான் பார்க்கவேண்டும்!
**