ஐபிஎல்: 200 +களில் பஞ்சாப், ராஜஸ்தான் !

இதுவரை 3 போட்டிகளில் ஐபிஎல் டீம் ஸ்கோர் 200-ஐத் தாண்டியிருக்கிறது. ஷார்ஜாவில் நடந்த நாலாவது போட்டியில் இது முதலில் நடந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 216 எடுக்க, அதைத் தாண்ட முடியாமல் 200 ரன்னில்  இன்னிங்ஸை  முடித்து தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். இரண்டாவது தடவை கே.எல்.ராஹுல் தலைமியிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் இதனை பெங்களூர் அணிக்கு எதிராக செய்துகாட்டியது. பஞ்சாப் 206. கோஹ்லியின் பெங்களூர் பரிதாபமாக 109 மட்டுமே அடித்து மண்ணைக் கவ்வியது. 200-ஐ ஸ்கோர் தாண்டிய வைபவம், மூன்றாவது முறையாக நேற்று ஷார்ஜாவிலே நடந்தது.

பஞ்சாப் VS ராஜஸ்தான்.  பஞ்சாப் முதலில் பேட் செய்ய, கேப்டன் ராஹுலும், மயங்க் அகர்வாலும் ராஜஸ்தான் பௌலர்களை விரட்டி விரட்டித் தாக்கினர். சிறிய மைதானமான ஷார்ஜா சிக்ஸர்களை வாரிவாரி வழங்க, இருதரப்பிலும் பௌலர்கள் பெரும் சோதனைக்கு ஆளானார்கள். 50 பந்துகளில் 106 அடித்து (7 சிக்ஸர்கள்) ராஜஸ்தானைத் திணறவைத்தார் அகர்வால். ராகுல் 69. நிகோலஸ் பூரன் 8 பந்துகளில் 25 எனத் தூள்கிளப்ப பஞ்சாபின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 223 என உயர்ந்து, ராஜஸ்தானைத் துன்புறுத்தியது.

ஓப்பனர் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக அதிரடி விக்கெட்கீப்பர்/பேட்ஸ்மன் ஜோஸ் பட்லரை (Jos Butler) கேப்டன் ஸ்மித்துடன் இறக்கித் துவக்கியது ராஜஸ்தான். பட்லரை, (வெஸ்ட் இண்டீஸின்) காட்ரெல் 7 பந்துகளில் வீட்டுக்கு அனுப்பினார். சஞ்சு சாம்ஸன் இறங்குகையில் சிக்ஸர் எதிர்பார்ப்பு எகிறியது. சிஎஸ்கே-யை இதற்கு முந்தைய போட்டி ஒன்றில் இதே மைதானத்தில், 9 சிக்ஸர் விளாசி அலறவைத்த பேட்ஸ்மன்!  வேகமாக ஆடிய ஸ்மித் 50-ல் அவுட்டானவுடன், உத்தப்பாவுக்கு பதிலாக ராகுல் தெவாட்டியா (Rahul Tewatia, Haryana)வை அனுப்பியிருந்தார் ராஜஸ்தான் கேப்டன். ஒருபக்கம் சாம்ஸன் சிக்ஸர்-பௌண்டரி என வாணவேடிக்கை காட்டுகையில், தெவாட்டியா லெக்-ஸ்பின்னர் பிஷ்னோயை சிக்ஸர் அடிக்கமுயன்று முடியாமல், சிங்கிள் ஓடிக்கொண்டு வெறுப்பேற்றிக்கொண்டிருந்தார்.

Rahul Tewatia Vs Sheldon Cottrell

பேட்டிங் ப்ரொமோஷன் ஃப்ளாப் ஆகிவிட்டதா என ராஜஸ்தான் எண்ணுகிற வேளை. 17-ஆவது ஓவரில், 85-ரன் எடுத்து சாம்ஸன் அவுட்டாக, ஸ்கோர் 161-ல் இருந்தது. 224 என்கிற இலக்கு ஹிமாலய உச்சியாய் மின்னியது. ராஜஸ்தானுக்கு ஜெயிக்கிற ஆசையே போயிருக்கும். சாம்ஸனின் இடத்தில் இறங்கிய உத்தப்பா இரண்டு பௌண்டரி அடித்தார். தெவாட்டியா மட்டையும் கையுமாக முழித்துக்கொண்டிருக்க,  வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் (Sheldon Cottrell) பந்துவீச வந்தார். அந்த சில நொடிகளில் எந்த பூதம் வந்திறங்கியது தெவாட்டியாவுக்குள்? பஞ்சாப் எளிதாக ஜெயித்துவிடும் என்கிற தோரணையில், காட்ரெல் பௌன்சர் வீச, இதுவரை அரைத்தூக்கத்திலிருந்த தெவாட்டியா ஒரு சுழற்று சுழற்றி, பந்தை லாங்லெக் திசையில் சிக்ஸருக்கு அனுப்பினார்! அடுத்த ஆவேசப்பந்து, ஸ்கொயர்-லெக் திசையில் சிக்ஸர் என அலறியது. மைதானம் புரண்டு திரும்பிப் பார்த்தது. யாரிந்த ஹரியானா! மூணாவது பந்தை லெந்த்தில் வேகமாகக் காட்ரெல் வீச, லாங்-ஆஃப் திசையில் பறந்தது சிக்ஸ்! பௌலர் காட்ரெல்லுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போலிருந்தது. பஞ்சாப் கேப்டன் முழிக்க ஆரம்பித்திருந்தார். சாமியாட்டம் ஆடிய தெவாட்டியா 4-ஆவது, 6-ஆவது பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பிவிட்டார். ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்துக்கும், கோச்சிற்குமே ஒன்றும் புரியவில்லை. என்ன! ஜெயிச்சுடுவோம் போலிருக்கே!

31 பந்துகளில் 51 ரன்னில் 7 சிக்ஸர் விளாசி தெவாட்டியா வெற்றியின் விளிம்பில் ராஜஸ்தானைக் கொண்டுவந்தபின்,  அவுட்டானார். அடுத்துவந்த ஜொஃப்ரா ஆர்ச்சர் இரண்டு சிக்ஸர், டாம் கர்ரன் ஒரு பௌண்டரி என விளாசியதால் 224-ஐக் கடந்த ராஜஸ்தான் மறக்கமுடியாத வெற்றி பெற்றது.

அடிபட்ட புலியான கோஹ்லியின் பெங்களூர், இன்று (28/9/20) ரோஹித்தின் மும்பையைத் தகர்க்குமா, இல்லை தகர்ந்துவிடுமா என்பது கேள்வி!

**