விட்டு விளாசிய விண்டீஸ் !

 

நேற்று (15/12/19) சென்னையில், வெஸ்ட் இண்டீஸ் தன் பழைய ஸ்வரூபத்தைக் காண்பித்து இந்தியாவை மிரட்டியது. கரன் போலார்ட் (Kieron Pollard) தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி உயிரூட்டம் பெற்றுவருகிறது – குறிப்பாக short format -களில், என்பதில் சந்தேகம் தேவையில்லை.

வெகுநாட்களுக்குப் பின் சென்னைக்கு வந்தது சர்வதேச கிரிக்கெட். சில நாட்களாகவே மழையின் தாக்கத்திலிருந்தது சென்னை. சேப்பாக் மைதானத்திலும் ஒரே கொட்டாகக் கொட்டி, ரசிகர்களின் மானத்தை வாங்குமோ என அஞ்சியிருந்த நிலையில்,  வருண்தேவ் அப்படியெல்லாம் ஒன்றும் விஷமம் செய்யாமல் விலகியே இருந்தான்!  அவன் கருணையே கருணை.. ஒரு கடுமையான ஒரு-நாள் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்க முடிந்தது. முடிவு இந்தியாவுக்கு எதிராகத் திரும்பிவிட்டபோதிலும்.

வெஸ்ட் இண்டீஸினால் முதல் பேட்டிங்கிற்கு அனுப்பப்பட்ட இந்தியா, சேப்பாக்கின் ஸ்லோ பிட்ச்சில், தன் இஷ்டத்துக்கு ஷாட் அடிக்கமுடியாமல் தடுமாறியது. முதலில் ராகுலையும், அடுத்து கேப்டன் கோஹ்லியையும் தூக்கிக் கடாசினார் வேகப்பந்துவீச்சாளரான ஷெல்டன் காட்ரெல்  (Sheldon Cottrell). அவுட் ஆக்கியபின் ஒரு சல்யூட் அடித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார். அவரது கொண்டாட்ட ஸ்டைல்! நின்று ஆடமுயன்ற ரோஹித் ஷர்மா, 36 ரன்களே எடுத்து ஜோஸஃபின்  (Alzarri Joseph) துல்லிய வேகத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்துத் திரும்பினார். ஃபார்மில் இல்லாததால், எல்லோருடைய வாயிலும் விழுந்து புறப்படும் இடதுகை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மன் ரிஷப் பந்த் இப்போது க்ரீஸில் ! கூடவே வலதுகை டாப்-ஆர்டர் பேட்ஸ்மன் ஷ்ரேயஸ் ஐயர். பெரிசுகள் வேகமாக விழுந்துவிட்ட இக்கட்டான சூழலில், இருவரும் ஒருவருக்கொருவர் கலந்துபேசி, எழும்பாத வேகப்பந்துகளுக்கெதிராக வியூகம் அமைத்து, நிதானமாக நின்று ரன் சேர்த்தது ரசிகர்களுக்குக் குஷியூட்டியது. நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தபின், முதலில் ஐயர் (70), பிறகு பந்த் (71) வெஸ்ட் இண்டீஸினால் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர்.  தல தோனியின் சென்னை மைதானத்தில் ரசிகர்கள் பந்த்! பந்த்! எனக் கோஷமிட்டது ரிஷப் பந்திற்கு ஆச்சரிய அனுபவமாயிருந்திருக்கும்.

இந்த நிலையில்,  ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே (Shivam Dube)-ஐ கோஹ்லி இறக்கியிருக்கலாம். ஆனால் அனுபவசாலியான கேதார் ஜாதவை அனுப்பினார். சரியான முடிவு. ஜாதவ், ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து ஒன்று, இரண்டு என விரட்டி ரன் சேர்த்ததால் ஸ்கோர் கௌரவமான நிலைக்கு வந்து சேர்ந்தது. கேதார் விழ, கூடவே ஜடேஜா ஒரு சர்ச்சையான ரன் -அவுட்!  முதலில் நாட் அவுட் என்ற தென்னாப்பிரிக்க அம்பயர்  ஷான் ஜார்ஜ், போலார்டின் அழுத்தத்தில் மூன்றாவது அம்பயரிடம் போக, கோஹ்லி கொதித்தார்! ஆனால் அவுட் அவுட்தானே.. ஒரு சமயத்தில் 240-ஐத் தாண்டாது என்றிருந்த நிலை. 287 / 8 என்பது, இந்தியா இந்த பிட்ச்சில் வெஸ்ட் இண்டீஸைக் காலிசெய்யப் போதுமானது என்பதே அனைவரின் யூகமும். ஆனால்..  நேற்று நடந்தது வேற !

Shimron Hetmyer

 வெஸ்ட் இண்டீஸ் மாலை-இரவுப் பகுதியில் ஆட ஆரம்பிக்கையில்,  நிலைமை மாற்றம் கண்டது. ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் வெஸ்ட் இண்டீஸின் அனுபவம் குறைந்த பேட்ஸ்மன்களை அடித்துத் தூக்கிவிடுவார்கள் என்று இந்தியர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ற ஃபீல்டிங் வியூகங்களும் அமைக்கப்பட்டு ஆடினர்.  ஆரம்பத்தில் சுனில் ஆம்ப்ரிஸ் (Sunil Ambris) தீபக் சாஹரின் (Deepak Chahar) மந்தகதிப் பந்தில் காலியானாரே தவிர, அடுத்து நின்ற ஜோடி உஷாரானது.  வெஸ்ட் இண்டீஸ் நம்பர் 3-ஆன ஷிம்ரன் ஹெட்மயரும் (Shimron Hetmyer) , க்ரீஸில் இருந்த ஷாய் ஹோப் (Shai Hope) -உம் சேர்ந்து, இலக்கை நோக்கிய பாதையை சீர்செய்துகொண்டு ஆடினர். இருவரும் பேட்டிங்கில் நேர்-எதிர் அணுகுமுறை கொண்டவர்கள் என்பது இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம். ஹோப், வழக்கம்போல் sheet anchor ரோலில் , அவசரம் காட்டாது, பௌண்டரி தவிர்த்து,  ஓடி, ஓடி ரன் சேர்த்தார். ஆனால், ஆரம்பத்தில் நிதானம் காட்டிய ஹெட்மயர், விரைவிலேயே மூன்றாவது, நாலாவது கியருக்கு மாற்றினார் வண்டியை. ஒரு பக்கம் குல்தீப் யாதவ், மறுபக்கம் ஜடேஜா என ஸ்பின் போட்டு ரன் கொடுக்காமல் நெருக்கப் பார்த்தார் கோஹ்லி. ஹெட்மயரிடம் அவருடைய பருப்பு வேகவில்லை. ரன் கொடுக்க மறுத்து இறுக்க முயன்ற ஜடேஜாவின் ஒரு பந்தை, முன்னே பாய்ந்து நேராகத் தூக்கி சிக்ஸர் விளாசினார் ஹெட்மயர். அடுத்த பந்திலும் அசராமல் ஒரு மிட்-விக்கெட் ஸிக்ஸ்! கூட்டம் மிரண்டது. என்னடா ஆச்சு இன்னிக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு! கோஹ்லியின் நெற்றியில் கவலைக் கோடுகள். முகமது ஷமியையும், தீபக் சாஹரையும் மாற்றி மாற்றி நுழைத்து, பார்ட்னர்ஷிப் போட்டு ஆடிக்கொண்டிருந்த ஹோப்-ஹெட்மயர் ஜோடியைப் பிரிக்கக் கடும் முயற்சி செய்தார் இந்தியக் கேப்டன். வேகம் காட்டிய ஷமியையும் அனாயாசமாக பௌண்டரி விளாசி, தான் ஃபார்முக்குத் திரும்பிவிட்டதை உறுதி செய்தார் ஹெட்மயர். இந்திய அணிக்கு வயிறு கலங்கியது.  பெவிலியனில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கேப்டன் போலார்ட் மற்றும் இதர வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குதூகலமாகினர். ரசிகர்கள், இந்திய பௌலர்கள் அடிவாங்கியதால் முதலில் அயர்ந்தாலும், பின் பகுதியில் இளம் ஹெட்மயரின் ஆக்ரோஷ பேட்டிங்கை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். அடுத்த பக்கம், பொறுமையே உருவாக ஷாய் ஹோப், பௌண்டரி, சிக்ஸர்களை மறந்தும்கூட அடித்து அவுட்டாகிவிடக்கூடாது என, ஒன்று, இரண்டு என்று சென்னையின் இறுக்கமான இரவில் ஓடி, ஓடி வியர்த்துக்கொண்டிருந்தார். ஆவேசமாக பேட்டை சுற்றிக்கொண்டிருந்த ஹெட்மயரின் ஜெர்ஸியும் தொப்பலாக வியர்வையில் நனைந்து பளபளத்தது. இடையே புது பேட் மாற்றிக்கொண்டு இந்திய பௌலிங் மீதான தன் தாக்குதலைத் தொடர்ந்தார் அவர்.

களத்துக்கேற்ற வியூகமும், அசாத்திய திறமையும் காண்பித்த பேட்டிங்கை, வெஸ்ட் இண்டீஸிடமிருந்து கேப்டன் கோஹ்லி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் அடிக்கடி விழித்துக்கொண்டிருந்ததில், முகவாயைத் தடவிக்கொண்டிருந்ததில் தெரிந்தது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபேயை அவர் பௌலிங்கில் செலுத்தியபோதெல்லாம் வெஸ்ட் இண்டீஸிடமிருந்து பௌண்டரிகள், சிக்ஸர்கள் அலட்சியமாக எகிறின. போதாக்குறைக்கு ஜடேஜாவின் இன்னொரு ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள்.. யாரு? ஹெட்மயர்தான்! இந்த வேகத்தில் தொண்ணூறுகளுக்குள் வந்த ஹெட்மயர், தன் இயல்பான ஆவேசத்தைக் கொஞ்சம் அடக்கி சிங்கிள், சிங்கிளாகத் தட்டி நூறைக் கடந்து பேட்டை உயர்த்திக் காட்டினார் பெவிலியன் பக்கம். 106 பந்துகளில் 139 ரன். அவர் அவுட் ஆகையில், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி இலக்கை வெகுவாக நெருங்கிவிட்டிருந்தது. அடுத்து வந்த பூரன் (Nicholas Pooran) சிங்கிள்களில் ஆரம்பித்து நிதானம் காட்டியது, வெஸ்ட் இண்டீஸின் அதிஜாக்ரதை அணுகுமுறையைக் காண்பித்தது. பரபரப்பு ஏதுமின்றி ஆடிய ஹோப், ஷிவம் துபேயின் ஒரு ஓவரில் வெடித்தார். சிக்ஸர், தொடர்ந்து பௌண்டரி. சதமும் கடந்து அசத்தினார். இறுதியில் பௌண்டரிகளில் இலக்கைக் கடந்தார் பூரன். வெஸ்ட் இண்டீஸ் 291 எடுத்தது, இரண்டே இரண்டு விக்கெட்களை மட்டும் இழந்து.  போலார்ட் & கோ. ஆர்ப்பரித்து உள்ளே வர,  சோர்வோடு பெவிலியனுக்குத் திரும்பினர் இந்திய வீரர்கள். அவர்கள் எதிர்பாராத தோல்வி…

வெகுகாலத்திற்குப் பின் வெஸ்ட் இண்டீஸ், பழைய வெஸ்ட் இண்டீஸ் அணிபோல், திறமையையும், புத்திசாலித்தனத்தையும் கலந்து சிறப்பான ஆட்டத்தைக் காண்பித்தது. அடுத்த மேட்ச்சில் (விசாகப்பட்டினம், டிசம்பர் 18), கோஹ்லி பதிலடிகொடுக்கும் வேகத்தில் இறங்கி ஆடுவார் என எதிர்பார்க்கலாம். வேகப்பந்துவீச்சில் மாறுதல் இருக்கும். சுழலில், யஜுவேந்திர சாஹல் உள்ளே வருவார் எனத் தோன்றுகிறது.

**

ப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் ?


ஷா ஒரு Cricket prodigy-யா? அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. இதுவரை இந்த இளைஞனைப்பற்றி கேள்விப்பட்டு வருவதெல்லாமே – 14 வயது பையனாக மும்பையில் ஸ்கூல் கிரிக்கெட்டில் உலக சாதனை, இந்திய தேசிய சேம்பியன்ஷிப்களான ரஞ்சி மற்றும் துலீப் டிராஃபி தொடர்களில் முதல் மேட்ச்சிலேயே சதங்கள், U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்தது, இந்தியா-ஏ அணிக்காக வெளிநாடுகளில் காட்டிய திறன்மிகு ஆட்டம் போன்றவை- அவர் இந்தியாவின் ஒரு வருங்கால நட்சத்திரம் என்றே வெளிச்சக்கீற்றுகளால் கோடிட்டு வந்திருக்கிறது. 04-10-18 அன்று, குஜராத்தின் ராஜ்கோட்டில் ஆரம்பித்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாளே அவர் ஆடிய ஆட்டமும், அந்தவழியில்தான் சென்றுள்ளது – இன்னும் சர்வதேச அரங்கில் பையன் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்ற போதிலும்.

முதலில் இந்தியா பேட் செய்ததால் அன்று காலையிலேயே நிகழ்ந்தது ப்ரித்வி ஷாவின் அரங்கேற்றம். வெஸ்ட் இண்டீஸின் ஷனன் கேப்ரியல் (Shanon Gabriel) வீசிய தொடரின் முதல்பந்தை எதிர்கொண்டு ஆடத் துவங்கிய, சிறுவனாகத் தோன்றும் 18 வயதுக்காரரின் மீது அனைவரின் கவனமும் குவிந்திருந்தது. ஒரு பள்ளிப்பையனின் துறுதுறுப்பும், பதின்ம வயதிற்கே உரிய உற்சாகமுமே அவரிடம் மிளிர்ந்தது, பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. இன்னொரு துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராஹுல் முதல் ஓவரிலேயே கேப்ரியலிடம் விழுந்தது எந்த ஒரு தாக்கத்தையும் ஷாவிடம் ஏற்படுத்தவில்லை. ரன்கள் துள்ளிக்கொண்டு புறப்பட்டன அவருடைய பேட்டிலிருந்து. சிங்கிள், இரண்டு-ரன்கள் என வேக ஓட்டம் (அந்தப்பக்கம் ரன் –அவுட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா இருந்தது நமக்குத்தான் பயத்தைக் கொடுத்தது!). இடையிடையே ஸ்கொயர் கட், லேட்-கட், புல், ஹூக் ஷாட் என வெரெய்ட்டி காண்பித்தார் இந்த இளம் புயல். லன்ச் இடைவேளையின் போது 70+ -ல் இருந்தவர், திரும்பி வந்து 99 பந்துகளில் தன் முதல் சதத்தை விளாசி முத்திரை பதித்தார். முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காரராக ஒரு அதிரடி சதம் என்பது ஒரு பதின்மவயதுக்காரரிடமிருந்து வருகையில், அதைப் பார்ப்பதின் சுகமே தனி.

கூடவே, வெஸ்ட் இண்டீஸின் பௌலிங் தாக்குதல் அவ்வளவு தரமாக இல்லை என்பதையும் கவனித்தே ஆகவேண்டும். அவர்களின் இரண்டு டாப் வேகப்பந்துவீச்சாளர்களான கெமார் ரோச் (Kemar Roach) மற்றும் கேப்டன்/ஆல்ரவுண்டர் ஜேஸன் ஹோல்டர் (Jason Holder) –ஆகியோர் இந்த முதல் போட்டியில் வெவ்வேறு காரணங்களினால் ஆட இயலவில்லை. ஆதலால் பௌலிங்கில் ஆக்ரோஷம், தாக்கம் குறைவுதான். கூடவே ராஜ்கோட் பிட்ச்சும் பேட்டிங்கிற்கு வெகுவாகத் துணைபோகிறது. ஆனால், இதெல்லாம் தன் முதல் டெஸ்ட்டை ஆடுபவரின் தப்பில்லையே! டெஸ்ட் தொடர் என்கிற பெயரில் இந்தியா புலம்பிவிட்டு வந்த இங்கிலாந்து தொடரிலேயே, கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் ப்ரித்வி ஷா சேர்க்கப்பட்டிருந்தார்தான். ஆனால் நம்முடைய சூப்பர்கோச் ரவிசாஸ்திரியும், கேப்டனும் வாய்ப்பளித்தால்தானே விளையாடமுடியும்? ’நான் அப்போதே தயாராகத்தான் இருந்தேன். இப்போதுதான் வந்தது வாய்ப்பு’ என்கிறார் அவர்.

இப்போதிருக்கும் வெஸ்ட் இன்டீஸ் அணி, இந்தியாவின் டெஸ்ட் தரத்திற்கு அருகில்கூட வரமுடியாது என்பதும் உண்மை. ஆயினும் உன்னிப்பாகக் கவனித்தோருக்கு, ப்ரித்வி ஷாவின் முதல் டெஸ்ட் இன்னிங்ஸ் அவர் எத்தகைய பேட்ஸ்மன் என்பதற்கான அடையாளங்களைக் கொண்டிருந்தது தெரியவரும். இயற்கையாகவே அவருக்கு அமைந்திருக்கும், அலட்டிக்கொள்ளாத தன்மையும், அதே சமயத்தில் சரியான பந்தைத் தேர்ந்தெடுத்துத் தாக்கும் லாவகமும் பளிச்சிடுகின்றன. வெஸ்ட் இண்டீஸின் தரமான வேகப்பந்துவீச்சாளரான ஷனன் கேப்ரியல், ராஜ்கோட்டின் வெப்பத்திலும் அவ்வப்போது தன் வேகத்தினாலும் (140-143 கி.மீ), எகிறும் பௌன்ஸர்களாலும் அவரை சீண்டிப் பார்த்தார். ஆனால் ஷா அவரையும், ஸ்பின்னர் தேவேந்திர பிஷுவையும் ஒரு அதிகாரத்துடன் விளையாடியவிதம், ஏதோ இதற்குமுன்னர் ஏகப்பட்ட போட்டிகளின் அனுபவப் பின்னணியில் விளையாடியது போன்றிருந்தது.

ஷாவின் இந்த இன்னிங்ஸைக் கூர்ந்து கவனித்திருப்பார்போலும் வீரேந்திர சேஹ்வாக். தன் ட்விட்டர் பக்கத்தில், அவருக்கே உரிய பாணியில் இப்படி ஹிந்தியில் எழுதியிருக்கிறார்: லட்கே மே(ன்) தம் ஹை(ன்)! (பையனிடம் தெரியுது ஒரு வீரம் ! – என இதைத் தமிழ்ப்படுத்தலாம்). எகிறும் வேகப்பந்துகளை பாய்ண்ட் மற்றும் தேர்ட்-மேன் திசைகளில் அனாயாசமாகத் தூக்கி விளாசிய விதத்தில் சேஹ்வாக் தெரிந்ததாக சில வர்ணனையாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் முன்னாள் இந்தியக் கேப்டன் சௌரவ் கங்குலி எச்சரிக்கிறார்: ’சேஹ்வாக் ஒரு ஜீனியஸ். அவரோடு இந்தப் பையனை ஒப்பிட வேண்டாம். ஆனால் பதற்றமின்றி எளிதாக விளையாடிய விதம், சிலவித ஷாட்களை சர்வசாதாரணமாக ஆடிய முறை, லாவகம் இவற்றைப் பார்க்கையில் இவருள்ளிருக்கும் தரம் தெரிகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற மைதானங்களில் ஷா முதலில் ஆடவேண்டும். அப்போதுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும். இப்போதைக்கு, வரவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் ஷா நன்றாக விளையாடுவார் என்றே தோன்றுகிறது’ என்றிருக்கிறார்.

2008-லேயே இவரது ஜூனியர் லெவல் ஆட்டத்தைப் பார்த்த டெண்டுல்கர், ’இவன் ஒரு நாள் இந்தியாவுக்காக ஆடுவான்!’ என்றிருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் ஆரம்ப கிரிக்கெட்காலத்தோடு ப்ரித்வி ஷா-வின் கிரிக்கெட் ஆரம்பங்களும் ஏனோ கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன என்பது கொஞ்சம் வியப்பைத் தருகிறது! இருப்பினும், இப்போதே ஒரேயடியாக ஆஹா..ஓஹோ என நமது மீடியாவோடு சேர்ந்து புகழ்ந்து தள்ளாமல், அமைதியாக இவரைக் கவனிப்பதே உகந்தது. வாய்ப்புகள் இவர்முன் வரும்போது, வெவ்வேறு நாடுகளில், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் பிட்ச்சுகளில் ஆவேசமான வேகப்பந்துவீச்சுக்கெதிராக எப்படித் தன்னை நிறுவப்போகிறார் என்பதைக் காலம் நமக்குக் காட்டும். எனினும், இப்போதைக்குச் சொல்லிவைப்போம்: ‘Very well done, தம்பி!’
Picture courtesy: Internet
*

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதியில் இந்தியா

பஞ்சாபின் மொஹாலி நகரில் நேற்று இரவு (27-3-16) நடந்த கத்திமுனை கிரிக்கெட் போட்டியில், இந்தியா ஆஸ்திரேலியாவைத் தகர்த்தது. டி-20 உலகக்கோப்பை செமி-ஃபைனலில் நுழைந்தது. மீண்டும், விராட் கோஹ்லியின் இணையற்ற ஆட்டத்திறன், இந்தியாவின் மகத்தான வெற்றிக்கு வித்திட்டது.

ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் செய்யவந்து அதிரடியாக 51 ரன்களை 4 ஓவர்களிலேயே எடுத்துவிட்டது. ரவி அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற சாதுர்யமான பௌலர்களை ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் குறிவைத்துத் தாக்கினர். அஷ்வினின் முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்களைப் பறக்க விட்டார் ஆரோன் ஃபின்ச்(Aaron Finch). 5-ஆவது ஓவரில். நேஹ்ராவிடம் உஸ்மான் கவாஜா(Usman Khawaja) அவுட்டானார். ஃபின்ச் தொடர்ந்து விளாச, திருப்பிக்கொண்டுவரப்பட்ட அஷ்வின், டேவிட் வார்னரை வெளியே இழுத்து தோனியிடம் ஸ்டம்ப்ட் ஆகவைத்தார். திடீரென யுவராஜ் சிங்கை பௌலிங்கில் நுழைத்தார் தோனி. பலன் கிடைத்தது. முதல் பந்திலேயே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை தோனியிடம் கேட்ச் கொடுக்கவைத்துக் காலி செய்தார் யுவராஜ். ஆனால், பொதுவாக ஸ்பின்னர்களைத் தாக்கி ரன்னெடுக்க வேண்டும் என்கிற ஆஸ்திரேலிய விளையாட்டு வியூகத்தை (gameplan) உணர்ந்தார் தோனி. அஷ்வினுக்கு 2 ஓவர்களுக்கு மேல் தரவில்லை. ஜடேஜா, யுவராஜுக்கும் தலா 3 ஓவர்களே தந்தார். ரெய்னாவிடம் பந்தைக் கொடுக்கவேயில்லை!

சாமர்த்தியமாக தன் வேகப்பந்துவீச்சாளர்களைச் சுழற்றினார் இந்தியக் கேப்டன். திரும்பி வந்த பும்ராவும், ஹர்தீக் பாண்ட்யாவும், தங்கள் சாகஸங்களினால் பௌண்டரிகள் பறக்காமல் பார்த்துக்கொண்டனர். பேட்ஸ்மன்கள் ஓடி, ஓடியே ரன் சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம். ஃபின்ச் 43 ரன்னில் விழுந்தவுடன் வந்த க்ளென் மேக்ஸ்வெல் (Glen Maxwell), நன்றாக ஆடினார். அவரைத் தன் மந்தவேகப் பந்தொன்றில் ஏமாற்றி, பெயில்களை முத்தமிட்டார் பும்ரா. மேக்ஸ்வெல்லின் வீழ்ச்சிக்குப்பின் பாண்ட்யா, நேஹ்ராவிடம் ரன் எடுக்க ஆஸ்திரேலியர்கள் சிரமப்பட்டனர். ஒரு சமயத்தில் ஆஸ்திரேலியா 180-க்குக் குறையாமல் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவின் கெடுபிடி பௌலிங்கிற்கு முன்னால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வியூகம் வீழ்ந்தது. 160 ரன்களில் ஆஸ்திரேலியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மொஹாலியில், பந்து அதிகம் எழாமல் கீழேயே தங்கி சிரமம் தரும் மந்தமான பிட்ச்சில், 161 என்பது சிக்கலான இலக்கு. ஆனால், குவார்ட்டர் ஃபைனல் எனக் கருதப்பட்ட இந்த முக்கியமான போட்டியில், இந்தியாவின் துவக்க ஆட்டம் அபத்தமாக இருந்தது. 49 ரன்களில் 3 விக்கெட்டுகள். வழக்கம்போல், ரோஹித், தவன், ரெய்னா மைதானத்தில் நின்று ஆடவில்லை. அருமையாக பந்து வீசிய ஷேன் வாட்சன் (Shane Watson) ரோஹித், ரெய்னாவை வீட்டுக்கு அனுப்பிவைத்தார். இவர்களின் மோசமான ஆட்டத்தினால், விராட் கோஹ்லியின்மீது மனஅழுத்தம் மேலும் ஏறி உட்கார்ந்துகொண்டது. ஆஸ்திரேலிய பௌலிங் வெகுதுல்லியம். ஃபீல்டிங் அதிகூர்மையாக. யுவராஜ் கொஞ்ச நேரம் நின்றார். சிங்கிள்களில் ரன் எடுக்கமுயன்றார். கணுக்கால் பிரச்னையோ என்னவோ, கோஹ்லியோடு ஈடுகொடுத்து ஓடி ரன்னெடுக்க அவரால் இயலவில்லை. ஒரு சிக்ஸருக்குப்பின் அடுத்த பந்தை சோம்பேறித்தனமாக லெக்-சைடில் தூக்கப் பார்த்தார். வேகமாக நகர்ந்த வாட்சன், இறங்கிய பந்தை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். யுவராஜ் அவுட்டாகையில் இந்தியாவுக்கு 6 ஓவர்களில் 65 ரன்கள் தேவைப்பட்டது. மோசமான ஆட்டநிலை. பலருக்கு யுவராஜ் அவுட் ஆனது `அப்பாடா!` எனத் தோன்றியது.

பாண்ட்யாவை அனுப்புவதற்குப் பதிலாக மஹேந்திர சிங் தோனி தானே இறங்கினார். தோனியின் வருகை, ஏகப்பட்ட அழுத்தத்திலிருந்த கோஹ்லியின் உடம்புக்குள் மின்சாரம் பாய்ச்சியது. ஜோஷ் ஹேசல்வுட்டின் (Josh Hazlewood) ஓவரில், மின்னலாக இரண்டு, இரண்டு ரன்களாக நாலுமுறை பறந்தார்கள் தோனியும், கோஹ்லியும். பௌண்டரி ஒன்று சீறியது கோஹ்லியிடமிருந்து கடைசி பந்தில். இந்தியாவின் ஆட்டத்தில் உயிரோட்டம் தென்பட்டது.

ஜேம்ஸ் ஃபால்க்னர் (James Faulkner) ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த இறுதி-ஓவர் பௌலர்(death-over bowler). அவரை எந்தக் கொம்பனும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்கிறது அவரது ரெப்யுடேஷன். ஆனால் அந்த இரவில், கோஹ்லிக்குள் ஏதோ ஒரு பூதம் இறங்கியிருந்தது ஃபாக்னருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. முதல் 2 பந்துகளில் இடது, வலதாக பளார், பளார் எனப் பறந்தன பௌண்டரிகள். மொஹாலி அதிர ஆரம்பித்தது. ரசிகர்களின் மூவர்ண டர்பன்கள் மேலெழுந்தன. இளம் பஞ்சாபி யுவதிகளின் கீச்சுக்கீச்சுக் கூச்சல்கள் போதை ஏற்றியது. Surreal atmosphere! விளைவு? பதற்றம் கண்ட ஃபாக்னரின் அடுத்த பந்தின்மீது பாய்ந்தார் கோஹ்லி. லாங்-ஆன் திசையில் உயர்ந்து வானில் கோபம்காட்டிய பந்து, ரசிகர்களுக்கு மத்தியில் இறங்கியது. 19 ரன்கள் வந்தன ஃபால்க்னரின் ஓவரில்(18th over). வெற்றிப்பாதையில் தான் இருப்பதான கனவில் அதுவரை மிதந்திருந்த ஆஸ்திரேலியாவிற்குத் தரை தட்டுப்பட்டது; தடுமாறியது. 19-ஆவது ஓவரை வீசிய நேத்தன் கோல்ட்டர்-நைல் (Nathan Coulter-Nile)-ஐ கோஹ்லியும் தோனியும் தாவிக் கிழிக்க, 16 ரன்கள் இந்தியாவிடம் சேர்ந்தது. ஆஸ்திரேலிய வாபஸி பயணம் உறுதிசெய்யப்பட்டது!

மொஹாலி கொண்டாட ஆரம்பித்துவிட்டது. ஃபாக்னர் 20-ஆவது ஓவரின் முதல்பந்தை தோனியை நோக்கி வீசினார் என்று சொல்லிமுடிப்பதற்குள், பந்து லாங்-ஆன் பௌண்டரியைத் தாண்டிப் பாய்ந்தது. இந்தியா உலகக்கோப்பையின் செமிஃபைனலில் பிரவேசித்தது. விராட் கோலி தன் உணர்ச்சிகளுக்கு வடிகால் அமைக்க முற்பட்டார். கீழே மண்டியிட்டுக் குனிந்துகொண்டார். தோனி வந்து கொஞ்சநேரம் அப்படியே இருக்கவைத்துப் பின் தூக்கிக் கட்டிக்கொண்டார். 82 நாட்-அவுட். 9 பௌண்டரி, 2 சிக்ஸர். 39 பந்துகளில் அரைசதம், அடுத்த 12 பந்துகளில் 32 மின்னல் ரன்கள். விராட் கோஹ்லியிடமிருந்து வீறுகொண்ட இந்தியாவுக்காக.

தலைகொள்ளாப் பிரச்னைகளுக்கு நடுவிலும் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்துவதில்லை பிரதமர் நரேந்திர மோதி! மேட்ச் முடிந்த நொடிகளுக்குள் தான் அனுப்பிய ட்வீட்டில் கோஹ்லியின் அபார இன்னிங்ஸையும், தோனியின் பிரமாதமான தலைமையையும் புகழ்ந்திருக்கிறார். இந்தியாவின் அடுத்த மேட்ச்: 31 மார்ச். மும்பை. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் செமிஃபைனல். மேலும் பொங்கலாம் உணர்ச்சிகளின் பிரவாகம்.

**