அர்ச்சகர்கள், குருக்கள்கள் – சில அனுபவங்கள்

டெல்லியிலோ, பெங்களூரிலோ எங்கிருக்கிறேனோ அங்கே, அக்கம்பக்கத்திலுள்ள கோவில்களுக்கு பொதுவாக சனிக்கிழமைகளில் செல்வது வழக்கம். டெல்லியில் தங்குகையில் சில வாரங்களில் சனியோடு, செவ்வாய், வியாழனும் சேர்ந்துகொண்டுவிடுகிறது. கோவிலில் ஏதாவது விசேஷம், ஏகாதசி, ப்ரதோஷம், சகஸ்ரநாமப் பாராயணம் என ஆன்மிக நண்பர்களின் அழைப்புவேறு இந்த ஃப்ரிக்வென்ஸியை அதிகப்படுத்திவிடுகிறது. இதனால் பக்திப் பரவசமாகிவிட்டதாக அர்த்தமில்லை. எப்போதும்போல்தான் இருக்கிறேன்.

வயதான அனுபவஸ்தர்களும் இளைஞர்களுமென அர்ச்சகர்களும், குருக்கள்களும், சிவாச்சார்யார்களும் முறையே அந்தந்தக் கோவில்களுக்கேற்றபடி, கோவில், ஊர்வழக்கப்படி அமைக்கப்பட்டிருக்கும் கடமைகளை/ தினப்பூஜைகளைச் செய்கின்றனர், பேருக்கு ஏதோ சம்பளம் என வாங்கிக்கொண்டு. பல சிறிய கோவில்களில் மாத சம்பளம் என ஒன்றும் தரப்படுவதுமில்லை. பெரும்பாலான கோவில்களில் திருவிழாச்சமயம் தவிர வேறு கூட்டமோ அது தரும் வருமானமோ அர்ச்சகர்களுக்கு இருப்பதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏழ்மை நிலையிலும் கண்ணியம் காத்து தங்கள் கடமையைச் செவ்வனே செய்துவருகின்றனர். இவர்களில் சிலர் தள்ளாடும் வயதினர். போற்றுதலுக்குரிய இறைத்தொண்டர்கள்.

இதுபோன்றே கிராமங்களில் இருக்கும் அய்யனார், முனீஸ்வரன், கருப்பர், பிடாரி, மாரியம்மன் கோவில்களிலும், இன்னபிற தேவதைகளுக்கான கோவில்களிலும் பரம்பரைப் பூசாரிகளும் அவர்கள் வழிவந்தோரும் காலங்கலமாகப் பணியாற்றிவருகிறார்கள். (நான் கிராமத்தில் என் இளம்பிராயத்தைப் போக்கியவன்; கிராம வாழ்வின் பல்வேறு தளங்களில் விருப்பத்தோடு சஞ்சரித்தவன், ஆதலால் அறிவேன்.) இவர்களில் பலர், இக்கட்டில், மன உளைச்சலில் இருக்கும் ஒன்றுமறியா ஏழை, எளியோருக்கு வேண்டிய நல்போதனை செய்து, உரிய தெய்வங்களுக்கான பரிகார பூஜைகள் செய்வித்து, அந்த ஏழைகளுக்காகப் பிரார்த்தித்து அவர்களுடனே வாழ்பவர்கள்; சம்பளம் என்பதாக இவர்களுக்கும் ஒன்றும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் நாள், கிழமைகளில் பார்த்து ஏதாவது கொடுத்தால்தான் உண்டு. இவர்களது இறைப்பணி/சமூகப்பணி அவ்வளவாகக் கவனிக்கப்படாதது. ஆனால் கவனிக்கப்படத்தக்கது; மெச்சப்படவேண்டியது.

கோவிலில் நாம் அர்ச்சனை செய்ய நேர்கையில், அல்லது அர்ச்சனை நடந்துகொண்டிருக்கும்போது அங்கிருக்கையில் நமக்கு ஏற்படும் அனுபவம் சில சமயங்களில் புதுமையானதாக, இதுவரை அனுபவித்திராததாக அமையக்கூடும். சில ஸ்தலங்கள், சில கோவில்கள் காலங்காலமாக தன்னுள் விசேஷ அதிர்வலைகள் கொண்டவையாக இருக்கும். மந்திரங்கள் கர்ப்பகிருஹத்தில் பக்தி பாவனையோடு ஒலிக்கும்போது, மொழி தெரியாத நிலையிலும் அஞ்ஞானிகளான நாம் அதன் சக்தியை ஓரளவாவது உணரமுடியும். அல்லது எப்போவாவது பரவசமாய் உணர்ந்து ஒருவித அமைதியோடு, திருப்தியோடு வெளிவந்திருப்போம். மனித அனுபவங்கள் ஒருவருக்கொருவர், சமயத்துக்கு சமயம், சூழலுக்கு சூழல் மாறுபட்டது. ஆதலால் ஒப்பிட முடியாதது. அதிலும் இறை அனுபவம் என்பது, ஒருபோதும் தர்க்கத்தின் கீழ் வருவதல்ல. விவாதத்தினால் அறியப்படுவதல்ல. ஒன்று, உணர்ந்தீர்கள், அல்லது, இல்லை. அவ்வளவுதான். Period.

புதுக்கோட்டைக்கருகிலுள்ள, தென்னைமரங்கள் அணிவகுக்கும் செம்பாட்டூர் என்கிற அழகான கிராமத்தில் இளமைக்காலத்தின் பெரும்பகுதி சென்றிருக்கிறது. அங்கே அய்யனார், முனீஸ்வரர் கருப்பர் கோவில்களோடு, அம்பாள், சிவன், எல்லைப்பிடாரி கோவில்களுமுண்டு. எங்கள் வீட்டின் பின்புறம் திருக்கோடி அம்பாள் கோவிலும் , சிவன் கோவிலும் அமைந்திருந்தது. நான் சிறுவனாயிருந்தபோது பெரியசாமி குருக்கள் என்று ஒரு பெரியவர் அங்கே நாள், கிழமைகளில் அபிஷேகம், அர்ச்சனை செய்வதற்காக அயலூரிலிருந்து சைக்கிளில் வருவார். பக்கத்திலிருந்த வெள்ளைக்காரர்கள் காலத்துக் கேணியிலிருந்து குடம், குடமாய் தண்ணீர் எடுத்து கோவில் கர்ப்பகிருஹம், பிரஹாரங்கள் என எல்லாவற்றையும் அலம்பிவிடுவார். சிறுவர்களாகிய, இளைஞர்களாகிய சிலர் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொடுத்து உதவி செய்வோம். கிராமத்துப் பொடியன்கள் கோவிலுக்கு வெளியே கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்வார்கள். பக்கத்தில் மஞ்சள் அரளியும் மற்ற செடிகள் எல்லாம் வளர்ந்திருக்கும். அபிஷேகம் முடிந்தபின், விக்ரஹங்களுக்கு வஸ்திரம் உடுத்தி, சந்தனம், குங்குமம் இட்டு சின்ன அலங்காரம் செய்வார். அரளிப்பூக்களை ஒவ்வொரு சன்னிதியாக வைத்து, கல் அகல்விளக்குகளை ஏற்றுவார். ஊதுபத்தி ஏற்றிவைத்து, சாம்பிராணிக் கரண்டியோடு சன்னிதி சன்னிதியாக வேகமாக வலம் வருவார். சிலமணி நேரத்திற்குள் கோவில் கமகம என்றாகிவிடும். கோவிலின் தென்பகுதியில் சிறு வாசலில் கருங்கற்களை அடுக்கி அடுப்பாக்கி, விறகு, பட்ட முள்குச்சிகளை வைத்து அடுப்புமூட்டி கொஞ்சமாக சாதம் வடிப்பார். ஏழையாயினும், அதற்கேற்ற அரிசியை அவரே வீட்டிலிருந்து கொண்டுவருவார். வெறும் சாதம்தான் நைவேத்யம் சிவனுக்கும் அம்பாளுக்கும் மற்ற தெய்வங்களுக்கும். பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் ஊர்ப் பெரிய மனிதர்களின் பங்களிப்பு இருப்பதால், சிறப்பான அலங்காரங்கள், பூஜைகள் நடக்கும். சர்க்கரைப்பொங்கல், எலுமிச்சை சாதப் பிரசாதங்கள்.

அப்போதெல்லாம் தைமாதம் நடக்கும் ஊர்த்திருவிழாவின்போது அம்பாளுக்கு, சிவனுக்கு சந்தனக்காப்பு நடைபெறும். திரையைப்போட்டுவிட்டு, வெறும் வயிற்றோடு, மணிக்கணக்காக உள்ளே அமர்ந்து வியர்க்க, விறுவிறுக்க அலங்காரம் செய்வார் பெரியசாமி குருக்கள். அலங்காரம் முடிந்தபின், திரை விலக்குமுன், என்னை உள்ளே அழைத்து பத்தடி தூரத்தில் நிற்கவைத்து உள்ளே டியூப்லைட்டைப் போட்டுப் பார்க்கச் சொல்வார். ‘சரியா வந்திருக்காடா! தலையிலிருந்து பாதம் வரை சரியாகக் கவனி. கண்ணப் பாரு! உதடு சரியா இருக்கா? சந்தனப்பொட்டு செண்டர்ல வந்திருக்கா?’ என்பார். அவரும் விக்ரஹத்திலிருந்து விலகி வெளியே வந்து பலவேறு கோணங்களில் பார்த்து திருப்தி ஏற்பட்டபின்தான், காத்திருக்கும் ஊர்மக்களுக்காகத் திரைவிலக்குவார். சிவலிங்கம், வில்வமரத்தின் பின்னணியில் அட்டனக்கால் போட்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கும் சிவபெருமானாக மாறி சிலிர்க்கவைக்கும். அம்பாளும் அவர்செய்த சந்தன, புஷ்ப அலங்காரத்தில் அழகாய் ஜொலிப்பாள்.

இங்கே என்ன சொல்லவருகிறேன் எனில், சாப்பாட்டிற்கே வசதியில்லாமல் இன்னொரு குக்கிராமத்தில் குடும்பத்துடன் சிரமப்பட்டவர் பெரியசாமி குருக்கள். அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டு தன்னை முழுதாய் ஈடுபடுத்திக்கொண்டு உருகி, உருகி, பார்த்துப்பார்த்து அலங்காரம் செய்வார். பண்டிகை நாட்களில் கோவில் தீபத்தட்டில் அவருக்காக கால் அணா, அரையணா போடுவோர் சிலர் உண்டு. மொத்தம் 5, 6 ரூபாய் சேர்ந்தாலே பெரிசு. ஒரு குறை சொல்லமாட்டார். வாயார வாழ்த்தி கிராமமக்களை ஆசீர்வாதம் செய்வார். கிராமத்துக்காரர்கள் ‘சாமி, சாமி!’ என்று அவர்மீது பிரியமாயிருப்பார்கள். அவர் கையால் வீபூதி வாங்கிக்கொள்ளப் போட்டிபோடுவார்கள். எல்லாம் முடிந்தபின், ஒட்டியவயிறோடு துண்டை மேலே போர்த்திக்கொண்டு பழைய சைக்கிளை ஓட்டிக்கொண்டு போவார். அப்படி ஒருகாலம். அங்கே ஏழ்மை இருந்தது. திருவிழா இருந்தது. தர்மம், நியாயம் கூடவே விலகாது இருந்தன. இப்போது எப்படி இருக்கிறதோ ஊரும், அதன் கோவில், குளங்களும்? மனிதரும்தான் மாறிவிட்டனரோ என்னவோ?

திருச்சியிலிருந்து சமீபமாக குணசீலம் என்னும் கிராமத்தில் இருக்கும் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு, அப்பா காலத்தில் வருஷா வருஷம் போவது வழக்கம். அந்தக்கோவிலில் காலையில் அர்ச்சனை சீட்டு/தட்டு வாங்குகையில் அஷ்டோத்திரத்திற்கு பதிலாக சகஸ்ரநாம அர்ச்சனைக்கு வாங்கிவிடுவார் அப்பா. நின்று நிதானமாக பெருமாளை சேவிப்போம் என்கிற ஆசை. ஒரு வயதான அர்ச்சகர் அந்தக் கோவிலில். அப்போதே சுமார் 75 வயதிருக்கும். காது சரியாகக் கேட்காது. ஆனால், அவர் அர்ச்சனை செய்கையில் மந்திரங்கள், ஸ்லோகங்கள் அபாரமான லயத்தில் அவரது வாயிலிருந்து வெளிப்படும். அடடா! ’ஓம்’ என்கிற பிரணவ சப்தம் நமக்குள் ஏற்படுத்தும் பரவசம். இதே ’ஓம்’ என்கிற சொல்லை எத்தனையோ பேர் சொல்லக் கேட்டிருக்கிறோமே. இவர் சொன்னால்மட்டும் ஏன் இப்படி? என்று அசந்திருக்கிறேன். அவர் செய்யும் அர்ச்சனை ஒரு இனிய சூழலாக அந்த இடத்தை நொடிக்குள் மாற்றிவிடும். உன்னத ஆன்மிக அனுபவம்.

சிலவருடங்களுக்கு முன் ஒருமுறை ஸ்ரீரங்கம் கோவிலில் – எந்த சன்னிதியில் என்று நினைவில்லை – வணங்கிக்கொண்டிருந்தேன். அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டினார் ஒரு அர்ச்சகர். 80-85 இருக்கும் அவருக்கு வயது. பக்தர்களுக்கு குங்குமம் கொடுத்துவிட்டு, சடாரியை சாதிப்பதற்காக எடுத்துவந்தார். அவரின் தள்ளாமை கண்டும், உணர்வுபூர்வமாகவும், அவர் சடாரியை தலையில் வைப்பதற்கு ஏதுவாகத் தலையை நன்றாகத் தாழ்த்தினேன் அப்போது அவர்தான் எவ்வளவு பக்திபூர்வமாக ஆசீர்வதித்து சடாரியைத் தலையில் வைத்தார். உடம்பு சிலிர்த்தது. அப்பேர்ப்பட்ட பழையகாலத்து அர்ச்சகர், மனிதர் அவர்.

சில புகழ்பெற்ற கோவில்களில் தீபாராதனை காண்பிப்பதற்கு முன் அந்தக்கோவிலின் பெருமாள்-மூலவரின் பெருமைபற்றிக் கொஞ்சம் ஸ்தல புராணமாக சொல்லிவிட்டு அர்ச்சகர் தீபத்தைக் காட்டுவார். பக்தர்களும் தாங்கள் நிற்கும் கோவிலின் விசேஷத்தை, பெருமாள் அல்லது ஸ்வாமியின் கீர்த்தியை ஓரளவு மனதில் வாங்கிக்கொண்டு, பக்தியோடு கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். தீர்த்தம்/குங்குமம்.வீபூதி வாங்கிக்கொள்வார்கள். அரியக்குடி ஸ்ரீனிவாஸர் கோவில், உப்பிலியப்பன் கோவில் போன்ற கோவில்களில் இத்தகைய அனுபவம் எனக்குண்டு. திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணர் கோவிலில், பெருமாள் சேவித்தபின் கோவிலின் முதல்மாடத்திற்குச் செல்லவேண்டுமெனில், குறுகியபடிகளாக, குனிந்து செல்ல வழி உண்டு. அப்போது ஒரு இளைஞர் நம்மைப் பின் தொடர்ந்து திருக்கோஷ்டியூர் கோவிலில் நடந்த ஒரு சமபவத்தை –ராமானுஜர் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கத்தை- உணர்வுபூர்வமாக விவரிப்பார். ராமானுஜர் தன் குருவிடமிருந்து நாராயண மூலமந்திரத்தை தீக்ஷையாகப் பெற்றது அந்த ஊரின் கோவிலுக்கெதிரே உள்ள அக்ரஹார வீடொன்றில்தான். சொல்வோருக்கு மோட்சம் தரும் அந்த மந்திரத்தை தான் அனுபவித்தால்மட்டும் போதாது, இதோ எதிரே செல்கிறார்களே தினம்தினம் அல்லாடும் அப்பாவி ஜனங்கள் –அவர்களுக்கும், ஏன், கேட்கும் எல்லோருக்கும் தெரியவைப்போம்; அனைவருக்கும் கிடைக்கட்டும் மோட்சம் என நினைத்த இளம் ராமானுஜர் அந்தக் கோவிலின் மாடத்தின் மேலேறித்தான் அங்குமிங்குமாகச் சென்றுகொண்டிருந்தவர்களை அன்புடன் அழைத்தார்; மந்திரத்தின் மகிமையைச் சொல்லி அவர்களைத் திருப்பிச் சொல்லவைத்தார். இந்தக் கதையை அங்கிருந்த கிராமத்து இளைஞர் – guide-ஆகப் பணியாற்றுபவர்போலும் – மிக நேர்த்தியாகச் சொன்னார் நான் சென்றிருந்த தினத்தன்று.

பெங்களூரில் சில கோவில்களுக்குத்தான் போக நேர்ந்துள்ளது. சனிக்கிழமைகளில் செல்வது ப்ரூக்ஃபீல்டில் இருக்கும் வெங்கடரமணர் கோவில். ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராய் வெங்கடரமணர் அருளும் அழகான, சுத்தமான கோவில். அங்கே பணிசெய்யும் அர்ச்சகர்களின் அலங்காரத் திறமை, கலைநேர்த்தி பாராட்டப்படவேண்டிய விஷயம். குறிப்பாக சனிக்கிழமை காலை தீபாராதனைக்காக அவர்கள் செய்யும் மலரலங்காரம் மனதை மயக்கக்கூடியது. தாயார்களுடன் பெருமாளின் நின்ற திருக்கோலத்தை பார்த்துக்கொண்டே அங்கேயே உட்கார்ந்துவிடலாம்போல் தோன்றும்.

டெல்லி கோவில்களிலும் நல்ல அனுபவங்கள் சில உண்டு. கிழக்கு டெல்லி மயூர்விஹார்-3-ல் இஷ்டசித்தி வினாயகர் கோவிலுக்குப் போவது வழக்கம். அங்கு வினாயகர், சிவன், ஐயப்பன் போன்ற சன்னிதிகளோடு சிறிய லக்ஷ்மிநாராயணர் சன்னிதியும் உண்டு. அதனைப் பார்த்துக்கொள்ளும் அர்ச்சகர் பத்ரிநாராயணன். எம்.சி.ஏ. படித்தவர். விருப்பத்தினால் தன் அப்பா பார்த்த பகவத்கைங்கரியத்துக்கு வந்துவிட்டதாகச் சொல்வார். பெருமாளுக்கு அலங்காரம் சிரத்தையாக செய்வார். நன்றாக குரலை உயர்த்தித் தெளிவாக தமிழின் நாலாயிரத் திவ்யப்பிரபந்த பாடல்களைப் பாடுவார். பக்தர்களுக்குக் கேட்க சுகமாயிருக்கும். அவருடைய பழகும் முறையினால் தமிழர்களோடு, வட இந்திய பக்தர்களும் அடிக்கடி அந்த கோவிலுக்கு வருவதைக் கவனித்திருக்கிறேன். அதே கோவிலில் கணேசன் என்கிற சிவாச்சாரியார் சிவன், துர்க்கை, வினாயகர் போன்ற சன்னிதிகளைக் கவனிக்கிறார். நாராயணர் சன்னிதியில் விசேஷ பூஜை, சனிக்கிழமைகளின் சகஸ்ரநாம பாராயணம் போன்றவைகளின்போது, ஓரத்தில் நின்றுகொண்டு கிருஷ்ண பக்திப்பாடல்களை தமிழ், மலையாளத்தில் உருக்கமாகப் பாடுவார். தெற்கு டெல்லி ஆர்.கே.புரம் செக்டர்-3 வெங்கடேஸ்வரர் கோவிலில் வயதான அர்ச்சகர் ஒருவர், வேதமந்திரங்களோடு பெருமாளுக்குத் திருமஞ்சனம் சிறப்பாக செய்விப்பார். வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் நிதானமாக உட்கார்ந்து ரஸிக்கலாம்.

எல்லாக் கோவில்களிலும் இப்படியான அனுபவங்கள் நிகழ வேண்டும் என எதிர்பார்க்கலாகாது. எனினும், இப்படி ஆங்காங்கே சிலராவது, தினம் செய்யும் இறைப்பணியை மனம் உவந்து, செயல் நேர்த்தியுடன் செய்வதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இதில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்/சிவாச்சாரியாருக்கு, பகவத் கைங்கரியத்தைத் தான் நன்றாகச் செய்கிறோம் என்கிற ஆத்ம திருப்தி ஏற்படுவதோடு, அதன் நற்பலன் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் கிடைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

**