ஓ! அப்பவே இப்பிடித்தானா?

’அன்றும் இன்றும் என்றும்’ என்கிற முந்தைய பதிவின் கமெண்ட்டிற்கு ஏதோ சொல்லப்போய், ‘உலகம்போறப் போக்கப் பாரு’ என்கிற வரி மனதில் தங்கி, குறுகுறுவென ஊர ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் ஆழத்தில் ஊடுருவி தங்கமே தில்லாலே.. டிங்கிரி டிங்காலே என்று முணுமுணுத்துக்கொண்டது. சின்ன வயதிலேயே கேட்டிருக்கிறோமே ஆல் இந்தியா ரேடியோவில், ரேடியோ சிலோனில். இது எந்தப் படத்தில்தான் வருகிறது, யார் எழுதியது என்கிற சங்கீத ஆராய்ச்சி ’அன்பு எங்கே?’ என்று கேட்டு ஸ்தம்பித்தது.

டி.ஆர்.ராமச்சந்திரன், பாலாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா நடித்த 1958-ல் வெளியிடப்பட்ட தமிழ்ப்படம் இது. தஞ்சை ராமையா தாஸ் புகழ்பெற்ற பாடலாசிரியர் அப்போது. அந்தக்காலப்படம் என்றால் முதல் சீனிலேயே பாட்டு வந்துவிடும். பாட்டுக்காகத்தானே ஜனங்கள் உயிரைவிட்டார்கள். கொட்டகைக்கு –சினிமாக் கொட்டகைக்குப் போனதே அதுக்குத்தானே! படத்திற்கு இசை வேதா. மொத்தம் ஒன்பது பாடல்களில் ஐந்தை ராமையாதாஸ் எழுதியிருக்கிறார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், விந்தன், கண்ணதாசன், வி.சீத்தாராமன் ஆகிய கவிஞர்களுக்குப் போனால் போகிறதென்று ஆளுக்கு ஒரு பாட்டெழுத சான்ஸ் கொடுத்திருக்கிறார்கள். யாரிந்த வி. சீத்தாராமன் எனத் தேடித் தேடி மண்டை காய்ந்ததுதான் மிச்சம். மனுஷனைப்பற்றி தகவல் ஏதும் அகப்படவில்லை. சரி விடுங்கள். அந்தப் படத்தில் சீத்தாராமன் எழுதி டி.எம்.சௌந்திரராஜன் (அப்போது புகழ்பெற்றிருக்கவில்லை) பாடிய பாடல்: டிங்கிரி டிங்காலே.. மீனாட்சி டிங்கிரி டிங்காலே..! போர்ச்சுகீசிய இசையில் கொஞ்சம் தோய்த்து, தமிழ் சினிமாப் பாட்டுக்கு மெட்டமைத்திருக்கிறார் வேதா. 60 வருஷங்கள் ஆகிவிட்டன இந்தப்பாடல் திரையைத் தொட்டு. நம்மை விடமாட்டேன் என்கிறது இன்னும்..

அந்தக்கால உலகத்தைப்பற்றி, சமூகச்சூழல்பற்றி ரொம்பத்தான் கவலைப்படுகிறது இந்தப் பாடல். மனிதனின் அடாவடித் தயாரிப்பான அணுகுண்டு ஜப்பானிய மண்ணில் விழுந்து வெடித்து சர்வநாசம் விளைவித்து 13 வருடங்களே ஆகியிருந்த கால கட்டம். நமக்குத்தான் மூளையிருக்குன்னு விஞ்ஞானிகள் எதையாவது செஞ்சிகிட்டே போகப்படாது. அதன் விளைவு எப்படிப்போகும்கிற சமூகப்பொறுப்பு வேண்டாமா எனக் கேட்காமல் கேட்கிறார் கவிஞர். சீத்தாராமனின் ஃபௌண்டெய்ன் பேனா அந்தப்பாட்டில் ஒரு இடத்தில் இப்படி விளையாடுகிறது:

அதிகமாகப் படிச்சிப் படிச்சி மூளை கலங்கி போச்சு
அணுகுண்டைத்தான் போட்டுகிட்டு அழிஞ்சுபோகலாச்சு
அறிவில்லாம படைச்சிப்புட்டா மிருகமுன்னு சொன்னோம்
அந்த மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம் !

அட, அப்படியா சங்கதி! சரி, அந்தக்கால சமூகச்சூழல்.. அதாவது குடும்பப்பொறுப்பில்லாம கையில் காசு இருக்குன்னு இஷ்டத்துக்கு அலையும் ஆம்பிளைகள், அல்டாப்பு அடாவடிகள், மைனர்கள் எப்படிப் பொழுது போக்கினார்களாம்? சொல்கிறார் இப்படி:

கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சிபோன ரொட்டித் துண்டு தோக்கும் இவர் டின்னர்ர்..
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆசை
குதிரை வாலில் கொண்டுபோயி கட்டிடுவார் காசை !

ஓ! கிண்டி ரேஸுக்குப்போய் குதிரை குதிச்சுக் குதிச்சு ஓடுவதைப் பாத்து போதை தலைக்கேறி, பணத்தை ஊதித்தள்ளுவதே வேலயாப்போச்சாமா? ம்.. அப்பறம்?

ஐயா வரவைப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா
அந்த ஐயா இங்கே கும்மாளம்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
அய்யா வாயில் புகையுது பார்.. ஐயாம் வெரி ஸாரி !

ஓஹோ, கவிஞரே ஸாரி சொல்லவேண்டிய நிலைமையா! சரி, அப்போதெல்லாம் இளசுகளாவது இடம், ஏவல் பாத்து இங்கிதமா, ஒழுங்கு மரியாதையா நடந்துகிச்சுங்களாமா, இல்லையா? சீத்தாராமன்கிட்டேயே கேட்டுருவோம். இந்தா சொல்லிட்டாரு :

கண்ணும் கண்ணும் பேசிக்குது.. மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடிபோட்டு கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டை எல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பை எல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது !

உலகம்போறப் போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே !

அடக்கஷ்டமே! நேரு காலத்திலேயே இப்பிடியெல்லாம் கெட்டுக் குட்டிச்சுவராயிருச்சா நாடு? என்னமோ நரேந்திர மோதி வந்தபின்னாலேதான் நாசமாப்போச்சு எல்லாம்னு இவனுங்க சொல்றதக் கேட்டுகிட்டு நானும் நம்பிக்கிட்டு இருந்தேனே ..

**