விஷ்ணுபுரம் விருது விக்ரமாதித்யனுக்கு

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு 2021-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. நண்பர் ஸ்ரீராம் மூலம் தெரிந்துகொண்டபின்னரே, ஜெயமோகன், சிலிகான் ஷெல்ஃப் தளங்கள் சென்று சற்றுமுன் பார்க்க நேர்ந்தது. 24/8/2021 – ஆம் தேதியே இது அறிவிக்கப்பட்டுள்ளது ஜெயமோகனின் தளத்தில்.

சுமார் 40 வருட காலம் கவிதையில், கவிதை வெளியில் மட்டுமே பிரதானமாக இயங்கிவரும் ஒரு உன்னதக் கலைஞனுக்கு அங்கீகாரம், பாராட்டு என உரக்கச் சொல்லும் ஒரு விருது என்பது மனதிற்கு சந்தோஷம் தருகிறது. காலை நன்றாக விடிந்தது. தமிழ்நாட்டில் வெளிச்சம் பரவினால் நல்லது…

சரி, கொஞ்சம் விக்ரமாதித்யன், அவரது ’சுடலைமாடன் வரை’ தொகுப்பிலிருந்து. என்ன இது – பாம்பு.. பாம்பு என அலறுகிறாரா.. குதூகலிக்கிறாரா ? :

பாலியலின் குறியீடு

பாம்பு

எப்போது வருகிறது

தமிழில் ?

**

வாசுகியா ஆதிசேஷனா?

வாசுகியைக்கொண்டுதான்

திருப்பாற்கடல் கடைந்தது

ஆதிசேஷன் அவதாரம்தான்

ஸ்ரீ ராமானுஜர்

**

எல்லாப் பெண்களுமே

பாம்புகள்தாம்

எந்த நேரத்தில்

எங்கே கொத்துமோ

**

சிவலிங்கத்துக்கு

குடைபிடிக்கிறது ஐந்துதலை நாகம்

அரவணையில்

பள்ளிகொண்டிருக்கிறான் திருமால்

பாம்புகளைக் காட்டியே

பயமுறுத்துகிறார்கள்

**

ஒரு நல்ல பாம்பு

யாரையும் தீண்டாது

ஒரு நல்ல மனுஷன்

பாம்பு கடித்துச் சாவதில்லை

**

பாம்புகள்

பேரழகு

பாம்புகளைக் கட்டியாள்பவன்

பேரழகன்

***

விக்ரமாதித்யன் கவிதைகள்

விக்ரமாதித்யன் நம்பி என ஆரம்பத்திலும், இப்போது விக்ரமாதித்யன் எனவுமே அறியப்படும் தமிழுக்கு நேர்ந்த, தேர்ந்த சமகாலக் கவிஞன். படிமங்கள், உருவகங்கள் எனச் சுமைதாங்கி வராமல், பேச்சுமொழியின் சாதா வார்த்தைகளாலேயே சாகசம்  காட்டும் வரிகளைத் தந்துவரும் ஆளுமை. சில சமகால இலக்கியப் பெரிசுகளுக்கு (அப்படித் தங்களை வரித்துக்கொண்டு அழகு பார்க்கும் அசடுகளுக்கு) நேரடிமொழியில் வளர்ந்தது கவிதையேயில்லை எனத் தோன்றுகிறது போலும். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவரவர் இலக்கியவிதிவழி அவரவர் செல்கின்றனரே!

விக்ரமாதித்யனின் சில கவிதைகளை இங்கே ப்ரிய வாசகர்களுக்காகத் தருகிறேன்..:

நான்
யாருடைய தற்கொலைப் படையிலும் இல்லை

வசந்தம் தவறியபோதும்
வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கையில்
வன்கொலைச் சாவுக்கு இடமில்லை

வெயில் காயும்
மழை புரட்டிப்போடும்
அல்பப் புழுக்களும் வாழ்ந்து
கொண்டிருக்காமல் இல்லை

நீ கலகக்காரன் இல்லை?

நல்லது நண்ப
நானும் கூடத்தான்
எனது இருபதுகளில்.

**

பாமரன்

பாடுபடுகிறான்

மேஸ்திரி

வேலை வாங்குகிறான்

மேலாளன்

நிர்வாகம் செய்கிறான்

முதலாளி

லாபம் சம்பாதிக்கிறான்

பொதுவில்

காய்கிறான் சூரியன்

பொதுவாகப்

பெய்யவும் பெய்கிறது மழை

**

கோயிலுக்கு

வாசல் நான்கு

சன்னிதி இரண்டு

சுயம்புலிங்கம்

சொல்ல ஒரு விசேஷம்

அம்மன்

அழகு சுமந்தவள்

ஐந்து கால

பூஜை நைவேத்யம்

பள்ளியறையில்

பாலும் பழமும்

ஸ்தல விருக்ஷம் பிரகாரம்

நந்தவனம் பொற்றாமரைக் குளம்

வசந்தோற்சவம் தேரோட்டம்

நவராத்திரி சிவராத்திரி

பட்டர் சொல்லும் மந்திரம்

ஓதுவார் பாடும் தேவார திருவாசகம்

சேர்த்துவைத்த சொத்து

வந்துசேரும் குத்தகை

ஆகமம் ஆசாரம்

தவறாத நியமம்

தெய்வமும்

ஐதிகத்தில் வாழும்

**

(மேலே இருப்பவை ‘உள்வாங்கும் உலகம்’ தொகுப்பிலிருந்து)

ஜெயிப்பதற்கு

சில சூதுகள்

தோற்பவன் துயரம்

பிரபஞ்ச நாடகம்

**

தப்பித் தப்பிப்

போக

தப்புத் தப்பாக

ஆக

**

சாமி மலையேறி

எங்கே போகும்

தேவி மடியில்

விழுந்து கிடக்கும்

**

சூரியனின் தேருக்கு

ஏழு குதிரைகள் போதுமா?

**

ஆரஞ்சுவர்ணப் புடவை

ஆகாசவர்ணப் புடவை

எதுக்கும் பொருந்திப்போகிறது

இந்தப் பிச்சிப்பூ.

**

விதியை நம்பியபோதும்

வெறுமே இருப்பதில்லை யாரும்

**

இருளில் புதைந்திருக்கிறது

ஏராளமான நட்சத்திரங்கள்

**

(குறுங்கவிதைகள் ‘கிரகயுத்தம்’ எனும் விக்ரமாதித்யனின் தொகுப்பிலிருந்து).

விக்ரமாதித்யன் கவிதைகள் | சித்திரவீதிக்காரன்
கவிஞர் விக்ரமாதித்யன்

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் முனைப்பில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்போது அமேஸான் தளத்தில் கிடைக்கிறது இலவசவாசிப்புக்கென, விக்ரமாதித்யனின் கவிதை மின்னூல்கள். அந்த வரிசையில் விக்ரமாதித்யனின் சிறுகதைத் தொகுப்பொன்றும்  இப்போது இலவச வாசிப்பில் இருக்கிறது : 25-8-2021. பகல் 11:29 வரை(IST). பெயர்: ‘அவன் அவள்‘. 16 சிறுகதைகள் உள்ளன. அமேஸான் அக்கவுண்ட் இருக்கும் வாசகர்கள், கூடவே அமேஸான் தளத்தின் ‘Free Kindle app’-ஐத் தரவிறக்கம் செய்திருந்தால், இலவசமாக மின்னூலைத் தரவிறக்கம் செய்து இந்த சிறுகதைத் தொகுப்பை ஆனந்தமாக வாசிக்கலாம்.

லிங்க்: https://www.amazon.in/dp/B078SNBTCB

அமேஸானில் விக்ரமாதித்யனின் மின்னூல்கள் இலவசமாக சில நாட்களுக்குக் கிடைப்பதுபோக, மற்ற நாட்களில் உலகெங்கும் குறைக்கப்பட்ட விலையில் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. அதாவது, அமேஸான் மின்னூலின் மிகக் குறைந்த விலையான ரூ.49/-க்கே அவை இனி கிடைக்கும் என எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனிடமிருந்து தற்போது தகவல் கிடைத்ததால் இங்கே சேர்க்கிறேன், வாசகர்களின் வசதிக்காக.

**

கிண்டிலில் கிண்டிய கவிதைகள் !

சமீபத்தில் கிண்டிலைக் குடைந்துகொண்டிருந்தபோது கவிதைத் தொகுப்புகளால் கவரப்பட்டேன். நல்ல கவிதையைப் பார்த்தவுடன் நம்ப விக்கெட் விழுந்துவிடுவது வழக்கம்தானே! கல்யாண்ஜியின் ‘மூன்றாவது முள்’ மற்றும் ஆத்மாநாமின் கவிதை இதழ் ‘ழ’ -15 ஆகியவற்றை வாங்கிப் புரட்டினேன். மற்ற வாசிப்புகளிடையே, கவிதைகளுக்குள்ளும் புகுந்து ‘ரெஃப்ரெஷ்’ பண்ணிக்கொள்வது வழக்கமாகியிருக்கிறது.  ரசித்த கவிதைகளில்  –

‘ழ’ இதழிலிருந்து :

தோற்றம்     -ஆத்மாநாம்

தோற்றம் சாதாரண விஷயமில்லை
ஒவ்வொருவருக்கும்
தோன்றத் தெரிந்திருக்கவேண்டும்
நிஜவாழ்க்கையில் மட்டுமல்ல
கற்பனை வாழ்க்கையிலும்தான்
நிஜவாழ்க்கையில் தோன்றுவது சுலபம்
ஏனெனில் அங்கு அனைவரும்
தோற்றம் அளிக்கிறார்கள்
டீ கொடுப்பதில்
சாப்பாட்டுக்கு அழைப்பதில்
திருமணங்கள் நடத்துவதில்
ஆபீஸ் போவதில்
சினிமா போவதில்
நாடகங்கள் போவதில்
இசை கேட்பதில்
இப்படிப் பல்வேறாக.
கற்பனை உலகில் தோன்றுவது கஷ்டம்
அங்கும் சில உண்மைகள் இருக்கிறார்கள்
ஒரு விஞ்ஞானியாக
ஒரு தத்துவவாதியாக
ஒரு சிற்பியாக
ஒரு ஓவியனாக
ஒரு கவிஞனாக
ஒரு இசை ரசிகனாக
ஒரு நாடக இயக்கக்காரராக
ஒரு கூத்துக்காரராக
ஒரு நாட்டிய ரசிகராக
ஒரு திரைப்படக்காரராக -
இவற்றில் நாம் யார்
கண்டுபிடிப்பது கஷ்டம்
ஏனெனில் எல்லாவற்றிலும்
கொஞ்சம் கொஞ்சம் உள்ளது
அதன் கண்டுபிடிக்கும் காலத்தில்கூட
நாம் கண்டுபிடிக்கமாட்டோம்
மீண்டும் இவ்வாறு இருக்க..
**
சமூக ப்ரக்ஞை     -நிமல. விஸ்வநாதன்

சாலையில்
என் எதிரில் வந்த
நீயும் கவனமாகயிருந்தாய்
நானும் கவனமாகயிருந்தேன்
நல்லவேளை, ஒரு விபத்திலிருந்து
நான் தப்பித்தேன்
**
கல்யாண்ஜி-யின்(வண்ணதாசன்) ‘மூன்றாவது முள்’ தொகுப்பிலிருந்து:
1.
ஒரு நொடிகூட ஆகாது.
என் மணிக்கட்டில் ஊரும் பூச்சியை
சுலபமாய்க் கொன்றுவிடலாம்.
கொல்லும் அந்த ஒரு நொடி அற்ற
காலத்துடன் அல்லவா
ஓடிக்கொண்டிருக்கிறது என் கடிகாரம்.
கருணையின் பாடலைப் பாடி அல்லவா
குதித்துக் குதித்துச் செல்கிறது
அந்த மூன்றாவது முள்
**
2.
விருந்தாளியின் பையன்களில் சிறிய பையனுக்கு
கதைகள் சொல்வது என் பொறுப்பாக இருந்தது
அவன் மறந்துவிட்டுப் போன
சிரிப்பு முகமூடி ஒன்று
தலையணைக்குக் கீழ் இருந்து
அதற்குக் கதை சொல்லச் சொன்னது.
உடனடியாக பதில் சொல்லிவிட்டேன்,
எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிற,
எப்போதும் இன்னொரு முகத்தை
மூடுகிற ஒன்றுக்கு
கதைகள் அவசியமில்லை என்று
கதைகள் சொல்வதில்லை என்று.
**
விக்ரமாதித்யன் படைத்து 1982-ல் வெளிவந்த முதல் கவிதைத் 
தொகுதியான ’ஆகாசம் நீல நிறம்’ என்கிற நூலும் கிண்டிலுக்குள் 
நுழைந்திருக்கிறது. நகுலன், ஆர்.சூடாமணி, தஞ்சை ப்ரகாஷ், 
பிரும்மராஜன்   ஆகியோரால் ஸ்லாகிக்கப்பட்ட 
தொகுப்பு. எட்டிப் பார்த்ததில் கிடைத்த ஒன்றிரண்டு :

1. வாழ்க்கை

பறத்தல்
சந்தோஷமானது
ஆனால்
பட்டுப் பூச்சிகள்
மல்பரி இலைகளில் தூங்கும்
**

2. ஏகாதசி

யாசகத்திற்கென்று
ஏழெட்டு வீடுகள் சென்று
இருந்த நிலையைப் பார்த்ததில்
திருவோட்டைத் தூக்கித்
தூர எறிந்தேன்
திரும்பி வருகையில்
**
3.
நீச்சலுக் கென்றே
ஆற்றுக்கு வந்தவனை
உள் வாங்கும் சுழல்
பார்த்தபடி
தன் போக்கில் போகும் நதி
** 
*