வலை எழுத்து

தமிழில் வலைப்பூக்கள், வலைத்தளங்கள் அலைஅலையாகக் கிளம்பியிருக்கின்றன கடந்த சில வருடங்களாகவே. எழுதுவோரின் திறமைக்கேற்பவும், எழுதுபொருள் பொருத்தும் அவை ப்ராபல்யத்துடன் வலையில் சலசலக்கின்றன. எல்லாமே வீறுநடை போடுவதில்லை. இங்கும் சார்லஸ் டார்வினின் கோட்பாட்டுப்படிதான் நடக்கும்: Survival of the fittest. மொழித்திறனும், அகச்செறிவும் கொண்ட பதிவுகள் வலைவீதியில் தொடர்ந்து உலா வரும். மற்றவை கால நதியின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படும். புலம்பிப் பிரயோஜனமில்லை.

இருக்கிறது இண்டர்நெட்டு என்று எதை எதையோ எழுதி வலையேற்றி வைக்காதீர்கள் அன்பர்களே. எழுதுபொருள், எழுத்துப்பாணி (writing style), மொழி வல்லமை(command of the language) ஆகியவற்றில் முதலில் கவனம் செலுத்துங்கள். இதற்கு நிறையப் புத்தகங்கள் படிக்கவேண்டியிருக்கும். தமிழின் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், பிறமொழியிலிருந்து சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் எனத் தேடிப்பிடித்து வாசிக்க முயலுங்கள். படிப்பின்றிப் பயன்பெறாது தமிழ். வலை எழுத்தாளர்கள் தங்களின் வாசிப்பனுபவத்தில், எழுதுதமிழில் சீரிய கவனம் செலுத்தவேண்டிய காலகட்டம் இது.

வலை எழுத்து தரமான எழுத்தாக மாறினால், படைப்பாளிகளின், இலக்கிய விமரிசகர்களின் கவனத்துக்கு அது தன்னாலே வரும். வலையில் எழுதுவோர் மின்னூலாகவும், அச்சுப்பிரதியாகவும் தங்களது நூல்களை வெளியிட்டு வருகிறார்கள். நல்ல, தரமான படைப்புகள் பெருகினால் வலைத்தமிழ் சிறக்கும். இணைய வாசிப்பு இனிதாக அமையும்.

**