மேதமையின் பேதமை

கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா? இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ராமானுஜம் அளவிற்கு ஒப்பிடமுடியாதெனினும், சுதந்திர இந்தியாவில் கணித மேதைகள் எனப் புகழ்பெற்றவர்கள் என இருவர்  குறிப்பிடப்படுவர். ஒருவர் புகழ்பெற்ற பெண் – சகுந்தலா தேவி. கணிதத்தோடு ஜோஸ்யத்திலும் கொஞ்சம் விளையாடியவர். இன்னொருவர் அவருக்கிருந்த மேதமைக்கேற்றவாறு கவனிக்கப்படாமல் குறிப்பாகக் கடைசி நாட்களில்,  குடத்திலிட்ட விளக்குபோல் கேட்பாரற்று  ஒரு மூலையில் வாழ்ந்த வசிஷ்ட நாராயண் சிங் எனும் கணித அறிஞர்.

யாரிந்த வசிஷ்ட நாராயண் சிங்? பீஹாரில் பசந்த்பூர் எனும் குக்கிராமத்தில், ஒரு ஏழைக் குடும்பத்தில் 1942-ல் பிறந்து, வறுமையின் காரணமாக இளம் பிராயத்தில் தடுமாறியவர். அவரது கணிதத்திறன் யாரும் அறியாத ஒன்றாக அவரிடமே பதுங்கிக் கிடந்தது. ஏழைக்கு என்ன சிறப்பு? சொன்னாலும் எவன் கேட்பான்? யாரும்  கேட்கமாட்டார்கள். நம்பமாட்டார்கள். அப்படிப்பட்ட அசட்டுச் சமூகத்தில் வளர்ந்துவந்தான் சிறுவன் நாராயண் சிங். எப்படியோ ஆரம்பப் பள்ளிப்படிப்பை கிராமத்தில் முடித்து, ராஞ்சியில் உள்ள அந்தக்காலத்தில் நல்லபேர் வாங்கியிருந்த ஒரு அரசுப்பள்ளியில் சேர்ந்துவிட்டான். கடுமையாகப் படித்திருக்கிறான் பையன்.  அங்கேதான் அவனுக்குள் பம்மியிருந்த சிறப்பு கணிதத்திறன் உற்சாகித்து, வெளியில் தலைகாட்டியது. மெட்ரிகுலேஷனிலும், இண்டர்மீடியட் வகுப்பிலும், முதலாவதாகத் தேறினான் நாராயண் சிங். ’கௌன் ஹை ஏ காவ்(ன்)வாலா!’ – யாரிந்த கிராமத்துப்பயல் ! – என்று உற்றுப்பார்த்தனர் மற்றவர்.  யார், யாரோ உதவிசெய்ய, பீஹார் தலைநகர் பாட்னாவில் ’பாட்னா சோஷியல் காலேஜ்’ என அழைக்கப்பட்ட, ஒரு நல்ல கலைக்கல்லூரியில் கணிதம் (ஹானர்ஸ்) பட்டவகுப்பில் சேர்ந்து படித்தான் நாராயண் சிங். அவனைப் பெற்ற,  படிப்பறிவில்லா கிராமம், பட்டணத்திலிருந்து அவனது கல்விபற்றி  வந்த செய்திகளை இப்போது கொஞ்சம் காதுகொடுத்துக் கேட்க ஆரம்பித்தது.

1961 -இல் பாட்னாவின் ’பீஹார் காலேஜ் ஆஃப் இஞ்ஜினீயரிங்’ (தற்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (NIT, Patna)-இல் ஒரு கணித வல்லுநனர் கலந்தாய்வு, கூட்டம் நடந்தது. அதற்கு ஒரு உயர்கணிதம் பயிலும் மாணவன் என்கிற நிலையில் தன் கல்லூரியிலிருந்து ஒரு பார்வையாளராக அனுப்பப்பட்டான் மாணவன் நாராயண் சிங். பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்ட கற்றோரின் சிறப்பு அரங்கில் பிரபல அமெரிக்க கணித மேதையான பேராசிரியர் ஜான் கெல்லி-யுடன் ( Prof. John Kelly, University of California, Berkeley (UCB)), யாரோ ஒரு புண்ணியவான் நாராயண் சிங்கை அறிமுகப்படுத்தியிருக்கிறார். துறுதுறுவென்றிருந்த மாணவனைப் பார்த்த ஜான் கெல்லி, ஐந்து கடுமையான கணக்குகளை சிங்கிடம் கொடுத்து, ’போடு இதையெல்லாம், விடை எழுது பார்க்கலாம்’ என்றிருக்கிறார். விறுவிறுவென அந்த ஐந்து கணக்குகளையும் போட்டு விடை காண்பித்தான் நாராயண் சிங். அதோடு விட்டானா? இதை வேறு சில வழிகளில் போடலாம், இதே விடையைக் கொண்டுவரலாம் என்றிருக்கிறான். நொடிகளில் செய்தும் காட்டியிருக்கிறான். ஆ.. இப்படி ஒரு பயலா இந்த நாட்டில்..! அசந்துபோனார் அமெரிக்க ப்ரொஃபஸர்! அதோடு நிற்காமல், அமெரிக்கா திரும்பியதும், தான் பணியாற்றிய கலிஃபோர்னியா பல்கலையின் (UCB) ’Summa cum laude’ எனும் கணித PhD படிப்பில் தன் மேலான சிபாரிசுடன் நாராயண் சிங்கிற்கு இடம் வாங்கிக்கொடுத்துவிட்டார் ஜான் கெல்லி.

நாராயண் சிங்கிற்கு அவரது முழுத்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு. அதற்கான நேரம், வசதிகள். கடுமையாக உழைத்தார் சிங்.  1969-ஆம் வருடம், ‘Reproducing Kernels and Operators with a Cyclic Vector’ (Cycle Vector Space Theory) – எனும் உயர்கணிதப் பிரிவில், பி.ஹெச்.டி. பட்டத்தை வசிஷ்ட நாராயண் சிங்கிற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வழங்கி கௌரவித்தது. அதைத் தொடர்ந்து அவர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராக சேர்ந்து பணியாற்றினார். தொடர்ச்சியாக. அமெரிக்க விண்வெளிக் கழகமான நாஸா, நாராயண் சிங்கை அழைத்து,  அவரை தன்னோடு ஒரு ஆய்வுத்திட்டத்தில் இணைத்துக்கொண்டது. சில வருடங்கள் நாஸாவில் பணிபுரிந்த நாராயண் சிங்கிற்கு, முழுநேர ஆய்வாளர் பொறுப்பை நாஸா வழங்க முயற்சித்ததாம். ஆனால் தான் இந்தியா திரும்ப விரும்புவதாக சொல்லி மறுத்த சிங், தாய்நாடு திரும்பிவிட்டார். முதலில் ஐஐடி, கான்பூர் (உ.பி)-யிலும், பின்னர் டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம் (Tata Institute of Fundamental Research, Bombay) மற்றும், இந்திய புள்ளியியல் கழகம், கல்கத்தா (Indian Statistical Institute, Calcutta) ஆகியவற்றிலும் சிறப்புப் பேராசிரியராக  பணியாற்றினார் வசிஷ்ட நாராயண் சிங்.

எழுபதுகளில், நாராயண் சிங்கின் அகவை முப்பதுகளில், அவரது மேதமை உச்சத்தில் இருந்தது. 1974-ல், நாராயண் சிங்கின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை ஒன்று ‘Quantum Mechanics and Optimisation Theory’-பற்றி, வெளியாகியிருந்தது. அப்போது உலகப்புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ’சார்புக்கொள்கை’ (Theory of Relativity)-யிலிருந்து வெகுவாக மாறுபட்டு சில கருத்துக்களை முன்வைத்திருந்தார் நாராயண் சிங். அந்தக் காலகட்டத்தில்தான் உள் மன ரீதியாக அவருள் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. அவ்வப்போது சில விசித்திர உணர்வு வெளிப்பாடுகளும் அவரிடம் காணப்பட்டன; அல்லது அவ்வாறு மற்றவர்களால் பார்க்கப்பட்டன.

அவரினுள் இடையறாது பொங்கிக்கொண்டு, வெளிவரக் குறுகுறுத்துக்கொண்டிருந்த கணித மேதமை, ஒரு புறம். மனதின் வேறொரு ஆழடுக்கிலிருந்து அவ்வப்போது வெளிப்பட்ட, புரிந்துகொள்ளமுடியாத  நடத்தைகள், கோப வெளிப்பாடுகள் என எதிராக்கங்கள் தலைகாட்ட, கூட இருந்தவரையும் குழப்பின. இந்த நிலையில்  அவரது இளம் மனைவிவேறு, துக்கத்திலிருந்தார். என்ன பிரச்னை? நாராயண் சிங் அமெரிக்காவிலிருந்தபோது அவரைக் கல்யாணம் செய்துகொண்ட வசதியான வீட்டுப் பெண். கணவருக்கு அமெரிக்காவில் வேலை. அங்கேயே செட்டில் ஆகி சுகபோகமாய் வாழலாம் என வசந்தகாலக் கனவுகள். இந்த மனுஷன் என்னடா என்றால், அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிவிட்டான். தாய்நாட்டில்தான் பணிசெய்வானாம். பைத்தியம்.. இவனைக் கட்டிக்கொண்டு நான் என்னத்தைக் கண்டேன்? ஒரு நகை, நட்டு உண்டா? சொத்து, சுகம் உண்டா? நாளெல்லாம் ஒக்காந்து கணக்குப் போட்றானாம்.. கணக்கு.. ம்ஹ்ம்… அவளது ஓயா எரிச்சல். வெறுப்பின் உச்சத்தில், அந்தப் பெண் ஒருநாள், இவரது கணித ஆய்வுக்கட்டுகளை எடுத்து வீட்டின் பின்புறம் வைத்தாள். கொளுத்தினாள். போய்விட்டாள். நாராயண் சிங்கிற்கு அடுத்த நாள் மனைவியைக் காணாத கடும் அதிர்ச்சி. அதற்குமேலும், தன் ஆய்வுக் கட்டுரைகள், கணித ஃபார்முலாக்கள். இங்கேதானே கிடந்தது..எங்கே போச்சு அந்த கட்டு ? மனம் பிறழாமல் என்ன செய்யும்  மனிதனுக்கு? சில வருடங்களில் அவரது தந்தையின் மறைவும் தொடர,  துக்கச் சுழல் அவரை அணைத்து, அணைத்து ஏதோ ஒரு ஆழத்திற்குள் உள்ளிழுத்தது. இந்தக் கட்டத்தில் சிங்கின் இயல்பு வாழ்வு பெரிதும் நிலைகுலைந்து கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனாக ஆகிவிட்டார்.

Schizophrenia எனச் சொன்னார்கள் மருத்துவ நிபுணர்கள். அடிக்கடி மருத்துவமனை, வீடு, மருத்துவமனை என அலைக்கழிக்கப்பட்டார் சிங். மேதை என்கிற உச்சத்திலிருந்து சீக்காளி என்கிற பரிதாபநிலை வாழ்வின் வேண்டாத எதிர் துருவமாய் அவரை மிரட்டியது. துவட்டிப்போட்டது. அவரை சார்ந்த வெகுசிலரையும் அதிரவைத்தது. தூரத்தே செல்லவைத்தது. ஒன்றும் செய்வதற்கில்லை. மனநிலை மருத்துவம் வருடக்கணக்கில் தொடர்ந்தது. சிலவருடங்களுக்குப்பின்  வீட்டுக்கு அனுப்பப்பட்டார். உடல் நலம் வெகுவாகக் குன்றிப்போய்விட்டிருந்தது. இடையிலே (1988) தன் தம்பியொடு ஒரு ரயில் பயணித்திலிருந்த நாராயண் சிங் எங்கோ இறங்கிச் சென்றவர்தான். காணாமற்போய்விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நான்கு வருடங்கள். பின் பீஹாரின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் கிழிந்த சட்டையும், பரட்டைத் தலையுமாய் ஒரு பிரேதம்போல் அவர் உலவிக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து (1992), வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். மீண்டும், மீண்டும் மனநல மருத்துவமனை. பேர்தெரியா மருந்துகள். நான்கு வருடங்கள் பெங்களூரிலுள்ள சிறப்புமிகு ஆய்வுகேந்திரமான NIMHANS-ல் அரசு உதவியுடன்

சிகிச்சையில் இருந்திருக்கிறார். குணம் தெரிந்திருக்கிறது. அவரது குடும்பத்தினால் தொடர்ந்து அவரை பெங்களூரில் வைத்துக்கொண்டிருக்கமுடியாது என, திருப்பி  அழைத்துச் சென்றுவிட்டார்களாம்.

பீஹாரில் அவரது கிராமத்தில் அம்மாவுடனும், தம்பி குடும்பத்தினருடனும் வசித்து வந்தார் சிங். சில சமயங்களில் இயல்பு நிலை. பேச்சு, தொடர்ந்த சிந்தனை, எழுத்து. வேறு சில சமயங்களில் சொல்லவொண்ணா மனத் தடுமாற்றம் என வருடங்கள் வலியோடு நகர்ந்தன. லோக்கல் அரசியல்வாதிகள் சிலர் அவ்வப்போது வந்து பார்த்து இதை, அதைச் செய்கிறேன் என்று சொல்லிச் சென்றார்கள். ஏமாற்றமே மிஞ்சியது. வாஜ்பாயி அரசின் முன்னாள்  அமைச்சர் ஷத்ருகன் சின்ஹா அந்தக் குக்கிராமத்துக்கு வந்து நாராயண் சிங்கை பார்த்ததில், நல்லது கொஞ்சம் நடந்தது. நாராயண் சிங்கின் சகோதரர் பையனுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தில் ஒரு வேலை தரப்பட்டது. அதன் காரணமாக,  குறைந்த பட்ச விலையில் நாராயண் சிங்கிற்கு மருந்துகள் வாங்க முடிந்திருக்கிறது. இருந்தும் மாதாமாதம் 1200 ரூபாய் மருந்துக்கே செலவாகிறது எனக் கஷ்டப்பட்டிருக்கிறது அந்த ஏழைக் குடும்பம். இவ்வளவு பெரிய கணித மேதைக்கு மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் என பீஹார் அரசு ஏதோ கொஞ்சம் வழங்கியிருக்கலாம். அப்படியெல்லாம் சிந்திப்போர் அரசாங்கத்தில் இல்லை. தனிப்பட்டோரிடமும் தாட்சண்யம் இல்லை.

அவருக்கும் தன் கிராமத்தில் என்னதான் இருந்ததோ, அதைவிட்டுப் பிரிய மனமில்லை. மேற்கொண்டு கவனிப்பாரின்றி மூலையில் கிடந்தார் நாராயண் சிங். வயதான மெலிந்த உடல், தலையில் குரங்குக் குல்லாய் என,  ஒரு சராசரி கிராமத்தானாக அங்குமிங்கும் உலவிக்கொண்டிருக்க, அவரது முதுமையும் அவரை ஆட்கொண்டிருந்தது. அவ்வப்போது ஏதேதோ சிந்தனையில், அவசரமாக வீடு திரும்பி காகிதத்தில் வேகவேகமாகக் கிறுக்கிவைப்பார். மூலையில் காகிதக் கட்டு.. முகவரியில்லா மேதமை.

எப்போதாவது யாராவது அவரைப்  பார்க்க வந்தால், பேச்சின் ஊடே கேட்பாராம். ’பேனா கொண்டு வந்திருக்கியா?’ (பீஹார் போன்ற ஒரு மாநிலத்தில், அதுவும் கிராமத்தில் பேனா, பேப்பர் என்பது பேரதிசயம் என அறிக). வந்தவர் தற்செயலாக பேனா வைத்திருந்து அதை அவரிடம் கொடுத்தால், வந்தவரின் உள்ளங்கையில் ஏதோ கணித ஃபார்முலா ஒன்றை எழுதிக் காட்டுவாராம் நாராயண் சிங். வந்தவருக்கு ஒன்றும் புரியாது. ஆனால் ஒரு  சந்தோஷம் – பெரிய கணித மேதை தன் கையில் ஏதோ எழுதியிருக்கிறார் என! பிறிதொரு சமயம் யாராவது வந்து பேச ஆரம்பித்தால், தன் தம்பியிடம் சொல்வாராம் நாராயண் சிங். ’போகச்சொல்லு இவனை. ஏதோ எண்டர்டெய்ன்மெண்ட்டுக்காக வந்திருக்கான்..’ அந்த அதிர்ச்சியில் சில நல்லவர்களும் படபடத்து வெளியேறியிருக்கிறார்கள். மனம் கேட்கமாட்டாமல், மீண்டும் சிலர் தயங்கியவாறு அவரது வீட்டுக்கு மரியாதை நிமித்தம் வந்தபோது, நாராயண் சிங் ஒன்றும் நடக்காததுபோல் பேசிக்கொண்டிருப்பாராம். பின்னர் வந்தவரிடம் கேட்பாராம்: ’கேமரா இருக்கா ஒங்கிட்ட! என் தம்பியோடு என்னை சேத்து ஒரு ஃபோட்டு எடுத்துக்கொடேன்..!’  தம்பியின் தோளில் கைபோட்டுக்கொண்டு போஸ் கொடுப்பாராம். அப்போது அவரைப் பார்த்தால் மனநிலை குலைந்தவர்போல் தோன்றியதில்லையாம். அவரது வயசான அம்மாவோடு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு நண்பர் நாராயண் சிங்கின் சமீபத்திய வாழ்க்கைபற்றி கேட்டபோது அவர் சொல்லியிருக்கிறார். ”அவன் இப்போ சாதாரணமாத்தான் இருக்கிறான். தினமும் காலையில் கீதை படிப்பான். மாலையில் கொஞ்சம் ராமாயணம். இடையிடையே மூலையில் உட்கார்ந்துகொண்டு,  பேப்பரில் எதைஎதையோ எழுதிக்கொண்டே இருக்கிறான். என்ன எழுத்தோ.. என்னமோ.. ஏதோ..?  யாருக்குப்  புரியுது இதெல்லாம்.” என்று அங்கலாய்த்திருக்கிறார் அந்த மூதாட்டி. இப்படி பலவேறாக மாறுபட்ட மேதமையின் மனநிலைகள். துணைக்கு என ஓயாத மருந்துகள், மாயங்கள். ஒரு சிந்தனையாளனின் கடைசிகாலம்.

சமீபத்தில் பாட்னா மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலில் வசிஷ்ட் நாராயண் சிங் காலமானார். அவரது குடும்பத்தினர் என்று சிலர் மருத்துவமனை வாசலில் அன்று, அவரது பூத உடலை வைத்துக்கொண்டு ஆம்புலன்சிற்காக இங்குமங்குமாக அல்லாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது திடீரென வீறிட்டது அரசு அறிவிப்பு. ‘பீஹாரின் மறைந்த கணித மேதை வசிஷ்ட் நாராயண் சிங், அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படுவார்!” இருக்கும்போது அவரைக் கொண்டாடாத, போற்றாத, உதவிகளை ஒழுங்குமுறையாகச் செய்யாத அரசாங்கம், அவருக்கான இறுதி வழியனுப்புதலை மாலை, மரியாதைகளுடன் நிறைவேற்றி தன் பாவமூட்டையிலிருந்து கொஞ்சம் குறைத்துக்கொண்டது. சமூகம் ?

**