அஜித் வாடேகர்

இந்திய கிரிக்கெட் என்றால் ரசிகர்கள் – குறிப்பாக ரசிகர்களில் இளைஞர்களும், முது இளைஞர்களும், 1983-ல் நாம் பெற்ற முதல் உலகக்கோப்பையைப்பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள். கூடவே, கபில்தேவ் என்பார்கள். அமர்நாத், ஸ்ரீகாந்த், பின்னி என்று கதைத்துச் செல்வார்கள், கிரிக்கெட்டின் பரிசுத்த வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்பற்றி ஓரளவு அறிந்த அதிரசிகர்களுக்கு –இதில் மத்திம வயதுக்காரர்கள், சீனியர் சிட்டிஸன்கள் அதிகம்- வருடம் 1971 இந்திய கிரிக்கெட்டிற்கு எவ்வளவு முக்கியமானது என்பது தெரிந்திருக்கும். அதைப்பற்றியெல்லாம் யாராவது காதுகொடுத்துக் கேட்க விரும்பினால், அவரை விடமாட்டார்கள். விரட்டி விரட்டிக் கதை சொல்வார்கள்!

வெளிநாடுகளில் போய்த் தோற்றுவிட்டு வருவதே வாடிக்கை என்றாகிவிட்டிருந்தது இந்திய கிரிக்கெட் அணிக்கு அப்போதெல்லாம். (இப்போதும் அப்படித்தான் என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது – நம்பிக்கை இழக்காதீர்கள், பொறுமை காட்டுங்கள் என்கிறார் கோஹ்லி!) 1971-ல் இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து இரட்டை டூர்களுக்காக, பட்டோடியிடமிருந்து கேப்டன்சியைப் பெற்றுக்கொண்ட அஜித் வாடேகரைப்பற்றி இந்தியா பெரிதாக அப்போது அறிந்திருக்கவில்லை. சரி, இன்னுமொரு மும்பைக்கர், வேறென்ன புதுசாக எனவே நினைத்திருந்தார்கள். அப்போதிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிபற்றி கூகில்பண்ணிப் பார்த்தால் தெரியும் – எப்பேர்ப்பட்ட புலிகள், சிங்கங்கள் இருந்தன எனப் புரிந்துவிடும். ஸர் கார்ஃபீல்ட் ஸோபர்ஸ் (Sir Garfield Sobers)-ஐக் கேப்டனாகக்கொண்ட அணியில் ரோஹன் கன்ஹாய் (Rohan Kanhai), ராய் ஃப்ரெடெரிக்ஸ் (Roy Fredericks), க்ளைவ் லாய்டு (Clive Lloyd) போன்ற அசகாய சூரர்கள் பேட்ஸ்மன்களாக ஆடினர். லான்ஸ் கிப்ஸ் (Lance Gibbs) ஷில்லிங்ஃபோர்டு (Shillingford), ஹோல்டர் (Holder) போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்டு தாக்கியது வெஸ்ட் இண்டீஸ். ஐந்து டெஸ்ட் மேட்ச்களைக்கொண்ட வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற தொடரை வாடேகர் தலைமையிலான இந்திய அணி 1-0 என்கிற கணக்கில் வென்று இந்திய ரசிகர்களைத் திக்குமுக்காடவைத்தது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இரண்டாவது டெஸ்ட்டில் வென்ற இந்தியா, மிச்சமுள்ள 4 போட்டிகளை ‘டிரா’ ஆக்கி வலிமையான வெஸ்ட் இண்டீஸைக் காலி செய்தது. தொடரில், இந்தியத் தரப்பில் முதன்முறையாக டெஸ்ட் ஆடவந்த சுனில் கவாஸ்கர் சதம் மாற்றி சதமாக விளாசி வெஸ்ட் இண்டீஸை கதிகலங்க வைத்தார். கூடவே சர்தேசாயின் பேட்டிங்கும் அபாரம். (நினைவில் கொள்ளுங்கள்: அப்போதெல்லாம் பேட்ஸ்மன்கள் ஹெல்மட் அணிவதில்லை). பௌலிங்கில், இந்திய இளம் ஸ்பின்னர்களை வெளிமண்ணில் திறம்படக் கையாண்டு இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த பெருமை கேப்டன் அஜித் வாடேகரையே சாரும். ப்ரசன்னா, வெங்கட் ராகவன், பிஷன் சிங் பேதி என மாற்றி மாற்றி இயக்கி வெஸ்ட் இண்டீஸின் முதுகைப் பிரித்தார் வாடேகர். கூடவே ஃபீல்டிங்கில் அஜித் வாடேகர், ஏக்னாத் சோல்கர், சையத் ஆபித் அலி, ஜெய்சிம்மா போன்றோர் அசத்தினர். ஃபீல்டிங்குக்காக மட்டுமே எந்த ஒரு சர்வதேச அணியிலும் விளையாடும் தகுதிபெற்றவர் அவர் என சோல்கரை ஆஸ்திரேலியர்கள் பிற்பாடு புகழ நேர்ந்தது. இத்தகைய சூப்பர் அணியாக அங்கிருந்து இங்கிலாந்து சென்றது இந்தியா.

ஆனால் இங்கிலாந்தோ இந்தியாவை ஒரு சீரியஸான டெஸ்ட் அணியாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஏதோ குருட்டாம்போக்கில் ஒரு மேட்ச் ஜெயித்துவிட்டு வந்திருக்கிறார்கள் பாவம், என்றே வாடேகரின் அணியைப்பற்றி நினைத்து அலட்சியப்படுத்தியிருந்தது இங்கிலாந்து. ரே இல்லிங்வர்த் (Ray Illingworth) தலைமை தாங்கிய அந்த அணியில் ஜெஃப் பாய்காட் (Geoff Boycott), ஜான் எட்ரிச் (John Edrich), டெனிஸ் ஏமிஸ், கீத் ஃப்ளெச்சர் (Keith Fletcher), ஆலன் நாட்(Allan Knott), பீட்டர் லீவர் (Peter Lever) போன்ற திறனான வீரர்கள். மூன்று போட்டித் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட்டுகளை டிரா செய்த இந்தியா, லண்டன் ஓவலில் நடந்த மூன்றாவது போட்டியை அனாயாசமாக வென்று அசத்தியது. கவாஸ்கர், சோல்கர், ஃபரூக் இஞ்சினீயர், சர்தேசாய் போன்ற பேட்ஸ்மன்களும், சுழல்வீரர்களான சந்திரசேகர், பிஷன் சிங் பேதி, வெங்கட் ராகவன் ஆகியோரும் சிறப்புப் பங்களிப்பு செய்தனர். அதுவும் கடைசிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், மிரண்டிருந்த இங்கிலாந்தின் மீது, சந்திரசேகர் எனும் சிங்கத்தை அவிழ்த்துவிட்டார் அஜித் வாடேகர். இங்கிலாந்து விரைவில் விழுங்கப்பட்டது! ஆறுவிக்கெட்டுகள் சந்திராவுக்கு. அவருடைய மேஜிக் இந்தியாவுக்கு தொடர்வெற்றியை முதன் முதலாக, இங்கிலாந்து மண்ணில் பெற்றுத் தந்தது. தேன் குடித்த நரியானார்கள் இந்திய ரசிகர்கள்! வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து இரண்டையுமே தூக்கிக் கடாசி விட்டதா இந்தியா! ஆஹா, இதுவல்லவோ கிரிக்கெட் டீம். அடடா, என்ன மாதிரி கேப்டன்யா இந்த அஜித் வாடேகர் என்று புகழ்ந்து தள்ளியது ஒட்டுமொத்த இந்தியாவும். பாம்பே திரும்பிய இந்திய அணி தங்கள் வாழ்நாளில் அப்படி ஒரு வரவேற்பை, அதற்குமுன்னர் கண்டதில்லை.

அந்தச் சின்னவயதில் நான் ஆசை ஆசையாக சேர்த்துவைத்திருந்த விதவிதமான தபால்தலைகளில், ஒரு தபால்தலை விசேஷமாக, மரியாதையாக வைக்கப்பட்டிருந்தது. ’கிரிக்கெட் வெற்றிகள், 1971’ என்று தலைப்பிட்டு, 1971-ல் இந்திய அரசு வெளியிட்ட கரும்பச்சை நிற தபால்தலைதான் அது.

இடதுகை பேட்ஸ்மனாக மிடில் ஆர்டரில் இந்தியாவுக்காக விளையாடிய அஜித் வாடேகர், தன் ஓய்வுக்குப்பின் ஒரு கட்டத்தில் இந்திய அணியின் மானேஜராகவும், பயிற்சியாளராகவும்கூடப் பணியாற்றியிருக்கிறார். நல்லதொரு கிரிக்கெட் நிர்வாகி என்ற பெயரும் அவருக்கிருந்தது. உடல் நலம் குன்றியிருந்து நேற்று மும்பையில் மறைந்த வாடேகர், கிரிக்கெட் ரசிகர்களால் என்றும் ஒரு சிறந்த கேப்டனாக நினைவு கூறப்படுவார்.

**