இருட்டான விபத்தொன்றில்.. சிறு வெளிச்சம்

அதிகாலையின் டெல்லி – ரூர்கி நெடுஞ்சாலை. இருட்டை விரட்டிக்கொண்டு சீறிய மெர்சிடிஸ் திடீரென தடமிழந்து சாலையின் டிவைடரில் மோதி, இம்பாக்ட்டில் தாறுமாறாகத் திரும்பி உருண்டு உருண்டு 200மீ வரை சென்று நிற்கிறது. பற்றி எரிய ஆரம்பிக்கிறது.  

தீப்பற்றி எரியும் காரில்..

உடம்பெல்லாம் காயம். தீக்காயம். முகத்திலும் ரத்தமாய் விபத்தாளி ஜன்னல்வழி போராடி, பாதி வெளிவந்த நிலை. எதிரில் வந்த பஸ் க்ரீச்சிட்டு  நின்றது. நிறுத்திய டிரைவர் குதிக்கிறார். ஓடி வருகிறார். விபத்தாளியை வெளியே இழுத்து ஆபத்பாந்தவனாகிறார்.

கண்டக்டர், மற்றவர்களோடு சேர்ந்து ஆம்புலன்ஸையும் கூப்பிட்டுவிட்டார்.

வந்தது.

ஏற்றப்பட்டார். முதலுதவிகள்.

ஆம்புலன்ஸின் ஃபார்மஸிஸ்டிடம் விபத்தாளி:

வலி தாங்கமுடியவில்லை. முதலில் ஒரு பெய்ன் கில்லர் இஞ்செக்‌ஷன் கொடுத்துவிடுங்கள்.

கொடுக்கப்பட்டது.

அவசரமாக என்னை ஒரு ப்ரைவேட் ஆஸ்பத்திரியில் தயவுசெய்து சேர்த்துவிடுங்கள்.

ஆம்புலன்ஸில் செல்கையில், விபத்தாளியைக் கேட்கிறார் ஃபார்மஸிஸ்ட்:

யாருக்காவது ஃபோன் செய்யவேண்டுமா? நம்பர் சொல்லமுடியுமா?

மொபைல் நம்பர் ஏதும் ஞாபகம் இல்லை. ம்ஹ்ம்…அ.. அம்மாவின் நம்பர் ஞாபகத்திலிருக்கிறது.

சொன்னார்.

நம்பர் அழைக்கப்பட்டது.

அந்த அதிகாலையில் ஸ்விட்ச் ஆஃபில் மொபைல் இருந்தது தெரியவந்தது.

மேலும் சோர்வு.

இவ்வளவு தூரத்தை (200 கி.மீ.க்கும் மேல்) கடக்க, ஏன் தனியாக காரை ஓட்டி வந்தீர்கள்? கூட யாராவது இருந்திருக்கலாமே – ஃபார்மஸிஸ்ட்.

மெர்சிடிஸை நானே ஓட்ட வெகுநாளாய் ஆசை.. வாய்ப்பே கிடைத்ததில்லை. அதனால்தான்..

விபத்து எப்படி நடந்தது ?

நினைவுக்கு வரவில்லை. அசந்துவிட்டேன்.. தூங்கிவிட்டேன்போல. விழிக்கையில் சுற்றிலும் ஒரே காந்தல்.. நெருப்பு! உடம்பில் தாங்கமுடியா எரிச்சல், வலி…

ஆம்புலன்ஸில் ஏற்றப்படுமுன், காலத்தால் செய்த உதவியோடு நின்ற ஹரியானா அரசு பஸ் டிரைவருக்கு, இந்த பயங்கர விபத்தில் சிக்கிய இந்த ஆள் யாரென்று அடையாளம் தெரியவில்லை. கேட்கிறார்:

ஆப் கௌன் ஹோ? நாம் க்யா ஹை? (யார் நீங்கள்? பெயரென்ன?)

ரிஷப் பந்த். இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவன்.

பஸ் டிரைவர் கிரிக்கெட்டெல்லாம் பார்ப்பவரல்ல. புரியவில்லை.

அதற்குள் ஓடிவந்து எட்டிப்பார்த்த பஸ் பயணிகளில் சிலர் :

ஆ.. ஏ (த்)தோ ரிஷப் பந்த் ஹை! கிரிக்கெட் ப்ளேயர்!

**

மேலே: உதவிய பஸ் டிரைவர் சுஷில் குமார்

பிகு: எரிந்து சாம்பலான மெர்சிடிஸ் காரின் படத்தை மீடியாவில், வீடியோவில் பார்க்கையில் இதில் பயணித்தவர் பிழைத்துவிட்டாரா ..அதிர்ச்சியில் ஆச்சர்யப்படுகிறது மனது. முகத்தில் கட்.. முதுகில் தீயில் தோலுரிந்த நிலை. தலையிலும், முட்டியிலும் காயம். இருந்தும் பெரிய ஆபத்தில்லை. ஃப்ராக்ச்சர் இல்லை. முதுகெலும்பில் காயமில்லை. ப்ளாஸ்டிக் சர்ஜரி இஸ் ஆன்..- டேரா டூன் மேக்ஸ் ஹாஸ்பிடல் டாக்டர்கள்.

தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போச்சு. யாரோ, எப்போதோ செய்த புண்யம்..

இந்தியா-பாகிஸ்தான் சூப்பர் க்ளாஷ்!

துபாயில் குதிக்கும்  ஆர்ப்பரிக்கும் ரசிகர்களின் முன்னிலையில் பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதுகிறது இன்று(28-8-22). இது ஆசியகோப்பை 2022-ன் (டி-20) கிரிக்கெட்டின் இரண்டாவது போட்டி. நேற்றைய முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் ஸ்ரீலங்காவை அடித்துச் சாப்பிட்டுவிட்டது, பத்தே ஓவரில்!

அபூர்வமாகவே இப்போதெல்லாம் மோதும் இரண்டு வலிமையான கிரிக்கெட் நாடுகளின் அணிகளில், இரண்டுபக்கமும் பார்த்து ரசிக்கவேண்டிய ஆட்டக்காரர்கள் சிலர் இருக்கிறார்கள். ரசனை என்று பார்த்தால் pure cricketing pleasure. ஒரு நல்ல ரசிகன் இப்படித்தான் இந்த ஹை-வோல்ட்டேஜ் போட்டியை பார்த்து குதூகலிப்பான்.  

இந்திய கிரிக்கெட் மீடியா என்னடா என்றால் ஒருமாதகாலமாகவே கோஹ்லி.. கோஹ்லி என்று புலம்பிக்கொண்டிருக்கிறது. கோஹ்லிக்கு ஃபார்ம் போயிடுச்சாம். வருஷக்கணக்கா அவரிடமிருந்து ஒரு செஞ்சுரி இல்லை. வருவதும் போவதுமாயிருக்கிறார். ஆசியக்கோப்பையிலாவது அடிப்பாரா? ஒரு அரைசதம் போதும்..அதுக்கப்புறம் அவரைப் பிடிக்கமுடியாது!.. -இப்படி விதவிதமான பேத்தல்கள். கோஹ்லியை நம்பியா  தற்போதைய இந்திய அணி இருக்கிறது? அல்லது ரோஹித்தையோ, ராஹுலையோ நம்பித்தானா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அடிக்கவும் ஜெயிக்கவும் அருமையான வீரர்களுண்டு என்று கடந்த சில மாதங்களில் நடைபெற்ற டி-20, ஒரு-நாள் தொடர்கள் காட்டியிருக்கின்றன. இந்தியாவின் ரிஸர்வ் ப்ளேயர்களின் அணிவகுப்பு மற்ற அணிகள் பொறாமைகொள்ளவைப்பது.

Pak’s present Captain & India’s former Captain !

கடந்த இரண்டு வருடங்களாக (மாதங்களல்ல) பெரிதாக ஸ்கோர் செய்யாத விராட் கோஹ்லி ஆசியாகோப்பைக்கான இந்திய அணியிலே சேர்க்கப்பட்டிருக்கவேண்டிய அவசியமில்லை. அவருக்கு பதிலாக ஃபார்மில் இருக்கும் இளம் வீரர்களான சஞ்சு சாம்ஸன், இஷான் கிஷன் போன்றவர்களில் ஒருவர் இணைக்கப்பட்டிருக்கலாம். எந்த ஒரு அணியும் ஃபார்மை முன்வைத்தேதான் வீரர்களை அணியில் சேர்க்கும். அப்போதுதானே எதிரியை அடித்து நொறுக்கி  வெற்றிபெற முடியும்? எவ்வளவு பெரிய வீரனாயினும்  பழைய ரெப்யுட்டேஷனில் எத்தனை நாள் -இங்கே வருடங்கள்-  வண்டி ஓட்டமுடியும். அடித்து ஆடமுடியாத வீரருக்கு அணியில் என்ன வேலை என்று யார் கேட்டாலும் நியாயமான கேள்விதானே. இப்படியான பின்னணியில் விராட் கோஹ்லி. பாவமாகவும் இருக்கிறது ஒருபக்கம்.

சரி விடுங்கள். இந்திய அணியின் பலமென்ன? பேட்டிங். ரோஹித், ராஹுல், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ். கூடவே ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. ம்… தீபக் ஹூடா! சமீபத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த ஜெம். எந்த நிலையிலும் எதிரியை விளாசக்கூடிய வெள்ளைப்பந்து வீரர். ஃபினிஷர் என அழைக்கப்படும் தினேஷ் கார்த்திக் ஒரு சில போட்டிகளில் சேர்க்கப்படலாம். இப்படிப்பட்ட வரிசையில் ஃபார்மில் இல்லாத கோஹ்லியும் இருக்கவேண்டும் என்றால் யாராவது ஒரு முக்கியமான வீரர் பெஞ்சில் இருக்கவேண்டியிருக்கும். என்ன கஷ்டம்டா இது!

பௌலிங்கில் இந்தியா வீக் எனப் பார்ப்பவருக்குத் தோன்றும். வேகப்புலிகள் பும்ரா, ஹர்ஷல் பட்டேல், ஷமி இல்லாதது பளிச்செனத் தெரிகிறது. பெரும்பாலும் புவனேஷ்வர் குமார், இளம் அர்ஷ்தீப் சிங் ஆகியோரையே விக்கெட் எடுக்க, ரன்னை கட்டுப்படுத்த -குறிப்பாக பாகிஸ்தானுக்கெதிரான போட்டிகளில்- இந்தியா நம்பவேண்டியிருக்கும். ஆவேஷ் கான் ரன்களை வாரி வழங்கிவிட்டால் ஆபத்தாகிவிடும். பாண்ட்யாவின் பந்துவீச்சு கூர்மையாக கவனிக்கப்படும். ஸ்பின்னர்களில் ஜடேஜா ரன்னைக் கட்டுப்படுத்துபவர். யுஸி சாஹலும், ரவி அஷ்வினும் எதிரி விக்கெட்டை எந்நேரமும் தூக்க வல்லவர்கள். ஆனால் 3 ஸ்பின்னர்கள் ஒரே போட்டியில் ஆடும் வாய்ப்பு குறைவு.

இந்தியாவுக்கு சவால் விடும் பாகிஸ்தானின் அணி? அவர்களுக்கும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன்ஷா அஃப்ரீடி காயம் காரணமாக இல்லை. ஹாசன் அலி அனுபவ பௌலர். கூடவே இரண்டு கத்துக்குட்டி பௌலர்கள். முன்னாள் பாக் ஸ்பின்னர் (டெண்டுல்கர் புகழ்!) அப்துல் காதிரின் மகன் உஸ்மான் காதிர் லெக்ஸ்பின்னராக அணியில். இவரோடு ஹாரிஸ் ரௌஃப், வைஸ்கேப்டன் ஷதாப் கான் போன்றவர்களும் ஸ்பின் போடுவார்கள். எவ்வளவு தூரம் இவர்களின் பௌலிங் இந்திய வீரர்களிடம் எடுபடும் என்பது இன்று இரவு தெரிந்துவிடும். பாகிஸ்தானின் பலம் என்பது சந்தேகமின்றி அவர்களது பேட்டிங். கேப்டன் பாபர் ஆஸம் அபார ஃபார்மில் இருக்கிறார். மீடியாவுக்குத் தீனி போட்டுக்கொண்டிருக்கும் விராட் கோஹ்லி நேற்றைய இண்டர்வியூவில் பாபரை தற்போதைய உலகின் தலைசிறந்த பேட்ஸ்மன் எனப் புகழ்ந்திருக்கிறார். அவருடன் ஆட்டத்தை துவக்கும் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மன் முகமது ரிஸ்வான் ஆவேச ஆட்டக்காரர். அடுத்தாற்போல் வரும் ஃபகர் ஸமன் ஒரு க்ளாசிக் பேட்ஸ்மன். இந்தியாவுக்கெதிராக இவரது பேட்டிங் தடுமாறும் வாய்ப்பு குறைவு. பின் வருபவர்கள் ஹாரிஸ் ரௌஃப், ஆசிஃப் அலி, ஷதப் கான், குஷ்தில் ஷா..- இந்திய பௌலிங்கை அவ்வளவு தொந்திரவு செய்ய மாட்டார்கள் எனத் தோன்றுகிறது. என்றாலும் டி-20 கிரிக்கெட்டில் எப்ப என்ன நடக்கும் என்று கணிப்பது கஷ்டம். அதுதான் இங்கே த்ரில்லே !

தூள்பறக்கும் ஆட்டம் காணக் கிடைக்கும் என நம்பலாம். முடிவு? யாருக்குத் தெரியும்!

Captains in today’s match : Rohit Sharma (India), Babar Azam (Pakistan)

Star Sports , 1930 hrs (IST)

**   

கிரிக்கெட்: சுழலில் மூழ்கிய எதிரி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா தாராள வித்தியாசத்தில் வென்றாயிற்று. கடைசி போட்டியும் 3-ஆவது நாளிலேயே முடியக் காரணம்? இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான்களே.. பிட்ச்தானா? இல்லை! இந்திய பந்துவீச்சாளர்கள் அக்ஷர், அஷ்வின் இருவரும் இந்தத் தொடரில் எப்படிச் சுழற்றினார்களோ, என்னத்தை வீசினார்களோ.. இங்கிலாந்து பேட்ஸ்மன்களுக்கு சிம்மசொப்பனமாகிப்போனார்கள் என்பதே உண்மை. இன்னிங்ஸின் ஆரம்பத்திலிருந்தே மாறி, மாறி இருவரையும் எதிர்கொள்ள நடுங்கி வியர்க்க, விறுவிறுக்க விக்கெட்டுகளைப் பரிகொடுத்துவிட்டு பெவிலியனில் போய் உட்கார்ந்துகொண்டார்கள். ரூட், ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ (Jonny Bairstow)போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களின் கதியே இப்படி. மற்றவர்கள், அதில் சிலர் புதியவர்கள்.. பாவம், அவர்களால் முடியவில்லை. ரிசல்ட்: 3-1 மரண அடி. அடுத்த இந்திய டூர்பற்றி இன்னும் சில மாதங்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு கற்பனைகூட செய்யாது.

இந்தியாவைப் பொறுத்தவரை, அக்ஷர் பட்டேல் find of the tour. நான்கே போட்டிகளில் 27 இங்கிலாந்து விக்கெட்டுகள் பையில். அபாரம். நன்றாக, இடதுகை சுழல் போடுவார் என்பதால்தானே சேர்க்கப்பட்டார். ஆனால் இப்படி ஒரு  அதகளமா? ‘அக்ஷர் இவ்வளவு நன்றாக வீசுவார் என எதிர்பார்க்கவில்லை’ என உண்மையைச் சொல்லிவைத்தார் சஞ்சய் மஞ்ச்ரேகர். அக்ஷரின் அட்டகாசம், இன்னொரு முனையிலிருந்து போட்டுக்கிழிக்க  வசதியாகப் போயிற்று அஷ்வினுக்கு. அவரால் சரிந்த 32  விக்கெட்டுகள். இந்தத் தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கிட்டத்தட்ட வேலையில்லை எனலாம். அப்படி இருவர் அணியில் இருந்ததையே கோஹ்லி அவ்வப்போது மறந்துபோயிருப்பார்.

தொடரின் சாகஸ ஆட்ட  வெளிப்பாடுகளாக சிலவற்றை நினைவுகூரலாம்.  மூன்றே டெஸ்ட்டுகளில் அக்ஷர் நான்கு முறை நிகழ்த்திக்காட்டிய ’5-விக்கெட்’ சாதனைகள். அஷ்வினின் 400-ஆவது டெஸ்ட் விக்கெட். அதில் 30-தடவை நிகழ்த்திய இன்னிங்ஸில் ’5-விக்கெட்’ சாதனை. போதாக்குறைக்கு அடித்த சதம் ஒன்று. இஷாந்த் ஷர்மா ஆடிய 100-ஆவது டெஸ்ட். வீழ்த்திய 300-ஆவது விக்கெட் (ஒரு வேகப்பந்துவீச்சாளர் இத்தனை நாள் நீடித்து சாதிப்பது இப்போதெல்லாம் மிகவும் கடினமானது). துவக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மாவின் நல்ல பேட்டிங் – குறிப்பாக அந்த Cool 161. கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலித்துக் களித்த ரிஷப் பந்த் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அபார ஆட்டங்கள்.

ஒரு டெஸ்ட் விக்கெட்கீப்பராக முன்னேற்றம் காண்பித்த ரிஷப். சில அபார கேட்ச்சுகள், ஸ்டம்பிங்குகளையும் நிகழ்த்தினார். கடந்த 2-3 வருடங்களாக அவர்மீது வைக்கப்பட்ட விமரிசனங்களில் அவர் ஒரு பொறுப்பற்ற வீரர் – reckless and irresponsible  என்பதும் ஒன்று. இந்தியா தோற்ற முதல் மேட்ச்சில் , நெருக்கடியான சமயத்தில் ரிஷப் பந்த் புகுந்து விளையாடிய 91 (88 பந்து) தனியாக ஒளிர்ந்தது. இடையிலே ஒரு  அரைசதம். இறுதியில் கைக்கு வந்த சதம்! 118 பந்தில் மைதானத்தை சிதறடித்த 101. நம்பர் அல்ல, ரன்களை எடுத்தவிதம்தான் அவர்  எத்தகைய வரப்பிரசாதம் இந்திய அணிக்கு என்பதைத் தெளிவாக்கியது. 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்துவிட்டிருந்த நிலையில் உள்ளே வந்து, நிலமையை அவதானித்து தன் இன்னிங்ஸின் முதல் பகுதியில் காட்டிய நிதானம். 33 பந்துகளில் இரண்டாவது அரைசதத்தைக் கடந்த விதம். அஹமதாபாத் ரசிகர்கள் மட்டுமில்லை, உலகெங்கிலும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் பெரிசுகள் கவனித்தார்கள் என்பது பின்னால்  வந்த ட்வீட்டுகளில் தெரியவந்தது. குறிப்பாக புதுப்பந்தோடு சீறிய, 600 விக்கெட்டுகளைக் கடந்துவிட்ட ஆண்டர்சனை விளாசிய அந்த ‘ரிவர்ஸ் ஸ்வீப்’.. (Aahaa.. This is my boy! – Virender Sehwag) இதுவல்லவா நவீன கிரிக்கெட்.  அஞ்சாத இளம் ரத்தம், உத்வேகம் என்பதன் குறியீடு.. வைரலாகிப்போன வீடியோ அது. தன் காலம் முழுமைக்கும் ஆண்டர்சன் மறக்கமாட்டார்: ஒரு பொடிப்பயல் என் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப்பில், ஸ்லிப் கும்பலுக்கு மேலே தூக்கி அடித்துவிட்டான்.. எல்லாம் நேரம்…!

Sundar & Axar

பந்த்தின் இந்த ரகளைக்குத் துணையாக அடுத்த முனையில் ஒருவர் நின்று ஆடவேண்டுமே.. 1983 உலகக் கோப்பை போட்டியில் கபில்தேவ் 175 என வானவேடிக்கை நிகழ்த்த, மறுமுனையில் நின்று ஆடிய இந்திய விக்கெட்கீப்பர் சையது கிர்மானியை மறக்கலாகுமா? அதுபோல ரிஷப்பிற்குக் கிடைத்தார் இளம் வாஷிங்டன். தன் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் பார்த்துக்கொண்டு (குறிப்பாக ஆண்டர்சனும், ஸ்டோக்ஸும் அபாரமாக வீசிய நெருக்கடி நேரமது), ரன்களையும் கூடவே சேர்த்துக்கொண்டு முன்னேறிக்கொண்டிருந்தார் சுந்தர். முதலில் பந்த்- உடன், பிறகு அக்ஷருடன் சதம் என பார்ட்னர்ஷிப் கொடுத்த வாஷிங்டன் தன் முதல் சதத்திற்கான எதிர்பார்ப்புடன் ஒரு முனையில் நிற்க, மறுமுனையை நொறுக்கினார் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes). அக்ஷரின் ரன் -அவுட்டிற்குப் பின்,  நாலே பந்துகளில் இஷாந்தும், சிராஜும் க்ளீன் -போல்ட். அவ்வளவுதானா நம் கதை என மனதில் பட்டுத் தெறிக்க, மெல்ல பெவிலியன் நோக்கி சுந்தர் நடக்கையில், மைதானம்  கைதட்டி ஆரவாரித்தது. ஏற்கனவே முதல் போட்டியில் பார்ட்னர் கிடைக்காமல் 85-ல் நாட் -அவுட்டாக நின்றிருந்த பாக்யமும் அவருக்குண்டு.  தொடரில் அவரது பேட்டிங்கைக் கூர்மையாகக் கவனித்த The Guardian நாளிதழ், ‘எட்டாவதில் வரும் இந்தியாவின் இன்ஷூரன்ஸ் பாலிசி!’ என வாஷிங்டனை வர்ணித்திருக்கிறது. ’தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்தா வென்றது? ஆச்சரியமாச்சே!’ எனக் கிண்டல் செய்கிறது The Sun.

3-1 என்கிற தொடர் வெற்றி இந்தியாவை உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் கொண்டுபோய்விட்டுவிட்டது.  உலகக் கோப்பைக்காக ஜூன் 18-ல் இங்கிலாந்தில், நியூஸிலாந்தோடு  மோதும்.

அதற்குமுன் மேலும் சில. 12-ஆம் தேதி அஹமதாபாதிலேயே ஆரம்பிக்கிறது இந்தியா-இங்கிலாந்து டி-20 தொடர்(5 போட்டிகள்). இரு அணிகளிலும் மாற்றங்கள் உண்டு என்பதால் (இங்கிலாந்தின் டி-20 கேப்டன் ஆய்ன் மார்கன்),  என்ன நடக்கும், எப்படிப் போகும் எனக் கணிப்பதற்கில்லை.  மேலும்,  புனேயில் 3 ஒரு-நாள் போட்டிகள்…

**

BCCI – புதிய ஒப்பந்த வீரர்கள்

 

வருடம் 2020-சீசன்களில் வெவ்வேறு வகை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடுவதற்காக, ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களை இந்திய கிரிக்கெட் போர்டு (BCCI) இன்று (16/01/2020) அறிவித்தது. Grade A+, Grade A, Grade B, Grade C என வீரர்களை அவர்களின் திறன், முந்தைய சாதனை, தற்போது காட்டிவரும் ‘ஃபார்ம்’ போன்றவற்றின் அடிப்படையில், வகைமைப்படுத்துவது வழக்கம். ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் :

Grade A+ வீரர்கள் : விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா -மூன்றே மூன்று!

Grade A : பேட்ஸ்மன்கள்: (ச்)செத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஷிகர் தவன், கே.எல்.ராஹுல், ரிஷப் பந்த்.  

பௌலர்கள்: ஆர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா

Grade B : பேட்ஸ்மன்கள்: வ்ரித்திமான் சாஹா, ஹர்தீக் பாண்ட்யா, மயங்க் அகர்வால். பௌலர்கள் : உமேஷ் யாதவ், யஜுவேந்திர சாஹல்.

Grade C : பேட்ஸ்மன்கள் : ஹனுமா விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், மனீஷ் பாண்டே. கேதார் ஜாதவ். பௌலர்கள்: வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் செய்னி, தீபக் சாஹர், ஷர்துல் டாக்குர்

இவர்களில் வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் செய்னி, ஷ்ரேயஸ் ஐயர், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு முதன் முறையாக இந்த வருடம் BCCI Central Contract கிடைத்துள்ளது. Grade A-ல் காணப்படும் ரிஷப் பந்த்,  Grade B -க்குத் தள்ளப்பட்டிருக்கவேண்டும்.  மாறாக, Grade C  -ல் இருக்கும் ஹனுமா விஹாரிக்கு  Grade B தரப்பட்டிருக்கலாம். 

மேற்கண்ட வருடாந்திர காண்ட்ராக்ட்களின்படி,  யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கும் BCCI ? இதோ:

’A+’ : ஒவ்வொருவருக்கும் ரூ. 7 கோடி

‘A’  :  தலா ரூ. 5 கோடி

‘B’  :  தலா ரூ. 3 கோடி  

‘C’  :  தலா ரூ. 1 கோடி

கடந்த வருடம்வரை Grade ‘A’ -ல் இடம்பெற்றிருந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, இந்த வருட Central Contract List-லிருந்து தூக்கிவிட்டது BCCI.  உலகக்கோப்பைக்கு அப்புறமாக அவர் எந்த மேட்ச்சிலும் விளையாடவில்லை. விதம்விதமான விளம்பரப்படங்களுக்கான ஷூட்டிங்குகளின் கால அட்டவணைப்படி அங்குமிங்குமாகப் பறந்துகொண்டிருக்கிறார் மனுஷன்! இன்னும் இரண்டு மாதங்களில் துவங்கவிருக்கும் 2020 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மஞ்சளாய்  இறங்கி ஆடுவார். கவலை வேண்டாம் ’தல’ ரசிகர்களே!

விட்டு விளாசிய விண்டீஸ் !

 

நேற்று (15/12/19) சென்னையில், வெஸ்ட் இண்டீஸ் தன் பழைய ஸ்வரூபத்தைக் காண்பித்து இந்தியாவை மிரட்டியது. கரன் போலார்ட் (Kieron Pollard) தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி உயிரூட்டம் பெற்றுவருகிறது – குறிப்பாக short format -களில், என்பதில் சந்தேகம் தேவையில்லை.

வெகுநாட்களுக்குப் பின் சென்னைக்கு வந்தது சர்வதேச கிரிக்கெட். சில நாட்களாகவே மழையின் தாக்கத்திலிருந்தது சென்னை. சேப்பாக் மைதானத்திலும் ஒரே கொட்டாகக் கொட்டி, ரசிகர்களின் மானத்தை வாங்குமோ என அஞ்சியிருந்த நிலையில்,  வருண்தேவ் அப்படியெல்லாம் ஒன்றும் விஷமம் செய்யாமல் விலகியே இருந்தான்!  அவன் கருணையே கருணை.. ஒரு கடுமையான ஒரு-நாள் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்க முடிந்தது. முடிவு இந்தியாவுக்கு எதிராகத் திரும்பிவிட்டபோதிலும்.

வெஸ்ட் இண்டீஸினால் முதல் பேட்டிங்கிற்கு அனுப்பப்பட்ட இந்தியா, சேப்பாக்கின் ஸ்லோ பிட்ச்சில், தன் இஷ்டத்துக்கு ஷாட் அடிக்கமுடியாமல் தடுமாறியது. முதலில் ராகுலையும், அடுத்து கேப்டன் கோஹ்லியையும் தூக்கிக் கடாசினார் வேகப்பந்துவீச்சாளரான ஷெல்டன் காட்ரெல்  (Sheldon Cottrell). அவுட் ஆக்கியபின் ஒரு சல்யூட் அடித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார். அவரது கொண்டாட்ட ஸ்டைல்! நின்று ஆடமுயன்ற ரோஹித் ஷர்மா, 36 ரன்களே எடுத்து ஜோஸஃபின்  (Alzarri Joseph) துல்லிய வேகத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்துத் திரும்பினார். ஃபார்மில் இல்லாததால், எல்லோருடைய வாயிலும் விழுந்து புறப்படும் இடதுகை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மன் ரிஷப் பந்த் இப்போது க்ரீஸில் ! கூடவே வலதுகை டாப்-ஆர்டர் பேட்ஸ்மன் ஷ்ரேயஸ் ஐயர். பெரிசுகள் வேகமாக விழுந்துவிட்ட இக்கட்டான சூழலில், இருவரும் ஒருவருக்கொருவர் கலந்துபேசி, எழும்பாத வேகப்பந்துகளுக்கெதிராக வியூகம் அமைத்து, நிதானமாக நின்று ரன் சேர்த்தது ரசிகர்களுக்குக் குஷியூட்டியது. நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தபின், முதலில் ஐயர் (70), பிறகு பந்த் (71) வெஸ்ட் இண்டீஸினால் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர்.  தல தோனியின் சென்னை மைதானத்தில் ரசிகர்கள் பந்த்! பந்த்! எனக் கோஷமிட்டது ரிஷப் பந்திற்கு ஆச்சரிய அனுபவமாயிருந்திருக்கும்.

இந்த நிலையில்,  ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே (Shivam Dube)-ஐ கோஹ்லி இறக்கியிருக்கலாம். ஆனால் அனுபவசாலியான கேதார் ஜாதவை அனுப்பினார். சரியான முடிவு. ஜாதவ், ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து ஒன்று, இரண்டு என விரட்டி ரன் சேர்த்ததால் ஸ்கோர் கௌரவமான நிலைக்கு வந்து சேர்ந்தது. கேதார் விழ, கூடவே ஜடேஜா ஒரு சர்ச்சையான ரன் -அவுட்!  முதலில் நாட் அவுட் என்ற தென்னாப்பிரிக்க அம்பயர்  ஷான் ஜார்ஜ், போலார்டின் அழுத்தத்தில் மூன்றாவது அம்பயரிடம் போக, கோஹ்லி கொதித்தார்! ஆனால் அவுட் அவுட்தானே.. ஒரு சமயத்தில் 240-ஐத் தாண்டாது என்றிருந்த நிலை. 287 / 8 என்பது, இந்தியா இந்த பிட்ச்சில் வெஸ்ட் இண்டீஸைக் காலிசெய்யப் போதுமானது என்பதே அனைவரின் யூகமும். ஆனால்..  நேற்று நடந்தது வேற !

Shimron Hetmyer

 வெஸ்ட் இண்டீஸ் மாலை-இரவுப் பகுதியில் ஆட ஆரம்பிக்கையில்,  நிலைமை மாற்றம் கண்டது. ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் வெஸ்ட் இண்டீஸின் அனுபவம் குறைந்த பேட்ஸ்மன்களை அடித்துத் தூக்கிவிடுவார்கள் என்று இந்தியர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ற ஃபீல்டிங் வியூகங்களும் அமைக்கப்பட்டு ஆடினர்.  ஆரம்பத்தில் சுனில் ஆம்ப்ரிஸ் (Sunil Ambris) தீபக் சாஹரின் (Deepak Chahar) மந்தகதிப் பந்தில் காலியானாரே தவிர, அடுத்து நின்ற ஜோடி உஷாரானது.  வெஸ்ட் இண்டீஸ் நம்பர் 3-ஆன ஷிம்ரன் ஹெட்மயரும் (Shimron Hetmyer) , க்ரீஸில் இருந்த ஷாய் ஹோப் (Shai Hope) -உம் சேர்ந்து, இலக்கை நோக்கிய பாதையை சீர்செய்துகொண்டு ஆடினர். இருவரும் பேட்டிங்கில் நேர்-எதிர் அணுகுமுறை கொண்டவர்கள் என்பது இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம். ஹோப், வழக்கம்போல் sheet anchor ரோலில் , அவசரம் காட்டாது, பௌண்டரி தவிர்த்து,  ஓடி, ஓடி ரன் சேர்த்தார். ஆனால், ஆரம்பத்தில் நிதானம் காட்டிய ஹெட்மயர், விரைவிலேயே மூன்றாவது, நாலாவது கியருக்கு மாற்றினார் வண்டியை. ஒரு பக்கம் குல்தீப் யாதவ், மறுபக்கம் ஜடேஜா என ஸ்பின் போட்டு ரன் கொடுக்காமல் நெருக்கப் பார்த்தார் கோஹ்லி. ஹெட்மயரிடம் அவருடைய பருப்பு வேகவில்லை. ரன் கொடுக்க மறுத்து இறுக்க முயன்ற ஜடேஜாவின் ஒரு பந்தை, முன்னே பாய்ந்து நேராகத் தூக்கி சிக்ஸர் விளாசினார் ஹெட்மயர். அடுத்த பந்திலும் அசராமல் ஒரு மிட்-விக்கெட் ஸிக்ஸ்! கூட்டம் மிரண்டது. என்னடா ஆச்சு இன்னிக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு! கோஹ்லியின் நெற்றியில் கவலைக் கோடுகள். முகமது ஷமியையும், தீபக் சாஹரையும் மாற்றி மாற்றி நுழைத்து, பார்ட்னர்ஷிப் போட்டு ஆடிக்கொண்டிருந்த ஹோப்-ஹெட்மயர் ஜோடியைப் பிரிக்கக் கடும் முயற்சி செய்தார் இந்தியக் கேப்டன். வேகம் காட்டிய ஷமியையும் அனாயாசமாக பௌண்டரி விளாசி, தான் ஃபார்முக்குத் திரும்பிவிட்டதை உறுதி செய்தார் ஹெட்மயர். இந்திய அணிக்கு வயிறு கலங்கியது.  பெவிலியனில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கேப்டன் போலார்ட் மற்றும் இதர வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குதூகலமாகினர். ரசிகர்கள், இந்திய பௌலர்கள் அடிவாங்கியதால் முதலில் அயர்ந்தாலும், பின் பகுதியில் இளம் ஹெட்மயரின் ஆக்ரோஷ பேட்டிங்கை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். அடுத்த பக்கம், பொறுமையே உருவாக ஷாய் ஹோப், பௌண்டரி, சிக்ஸர்களை மறந்தும்கூட அடித்து அவுட்டாகிவிடக்கூடாது என, ஒன்று, இரண்டு என்று சென்னையின் இறுக்கமான இரவில் ஓடி, ஓடி வியர்த்துக்கொண்டிருந்தார். ஆவேசமாக பேட்டை சுற்றிக்கொண்டிருந்த ஹெட்மயரின் ஜெர்ஸியும் தொப்பலாக வியர்வையில் நனைந்து பளபளத்தது. இடையே புது பேட் மாற்றிக்கொண்டு இந்திய பௌலிங் மீதான தன் தாக்குதலைத் தொடர்ந்தார் அவர்.

களத்துக்கேற்ற வியூகமும், அசாத்திய திறமையும் காண்பித்த பேட்டிங்கை, வெஸ்ட் இண்டீஸிடமிருந்து கேப்டன் கோஹ்லி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் அடிக்கடி விழித்துக்கொண்டிருந்ததில், முகவாயைத் தடவிக்கொண்டிருந்ததில் தெரிந்தது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபேயை அவர் பௌலிங்கில் செலுத்தியபோதெல்லாம் வெஸ்ட் இண்டீஸிடமிருந்து பௌண்டரிகள், சிக்ஸர்கள் அலட்சியமாக எகிறின. போதாக்குறைக்கு ஜடேஜாவின் இன்னொரு ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள்.. யாரு? ஹெட்மயர்தான்! இந்த வேகத்தில் தொண்ணூறுகளுக்குள் வந்த ஹெட்மயர், தன் இயல்பான ஆவேசத்தைக் கொஞ்சம் அடக்கி சிங்கிள், சிங்கிளாகத் தட்டி நூறைக் கடந்து பேட்டை உயர்த்திக் காட்டினார் பெவிலியன் பக்கம். 106 பந்துகளில் 139 ரன். அவர் அவுட் ஆகையில், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி இலக்கை வெகுவாக நெருங்கிவிட்டிருந்தது. அடுத்து வந்த பூரன் (Nicholas Pooran) சிங்கிள்களில் ஆரம்பித்து நிதானம் காட்டியது, வெஸ்ட் இண்டீஸின் அதிஜாக்ரதை அணுகுமுறையைக் காண்பித்தது. பரபரப்பு ஏதுமின்றி ஆடிய ஹோப், ஷிவம் துபேயின் ஒரு ஓவரில் வெடித்தார். சிக்ஸர், தொடர்ந்து பௌண்டரி. சதமும் கடந்து அசத்தினார். இறுதியில் பௌண்டரிகளில் இலக்கைக் கடந்தார் பூரன். வெஸ்ட் இண்டீஸ் 291 எடுத்தது, இரண்டே இரண்டு விக்கெட்களை மட்டும் இழந்து.  போலார்ட் & கோ. ஆர்ப்பரித்து உள்ளே வர,  சோர்வோடு பெவிலியனுக்குத் திரும்பினர் இந்திய வீரர்கள். அவர்கள் எதிர்பாராத தோல்வி…

வெகுகாலத்திற்குப் பின் வெஸ்ட் இண்டீஸ், பழைய வெஸ்ட் இண்டீஸ் அணிபோல், திறமையையும், புத்திசாலித்தனத்தையும் கலந்து சிறப்பான ஆட்டத்தைக் காண்பித்தது. அடுத்த மேட்ச்சில் (விசாகப்பட்டினம், டிசம்பர் 18), கோஹ்லி பதிலடிகொடுக்கும் வேகத்தில் இறங்கி ஆடுவார் என எதிர்பார்க்கலாம். வேகப்பந்துவீச்சில் மாறுதல் இருக்கும். சுழலில், யஜுவேந்திர சாஹல் உள்ளே வருவார் எனத் தோன்றுகிறது.

**

IND Vs SA First Test : இந்திய அணியில் மாற்றங்கள்?

 

தென்னாப்பிரிக்காவுடன் நாளை (அக். 2) விசாகப்பட்டினத்தில் தொடங்க இருக்கும் முதல்போட்டியில், இந்திய அணியில் சில மாறுதல்கள் எனப் பேச்சு அடிபட ஆரம்பித்திருக்கிறது. கோஹ்லி-சாஸ்திரி குழப்பக் கூட்டணியின் சிந்தனையில் நிஜமாகவே  தெளிவு ஏற்பட ஆரம்பித்துவிட்டிருக்கிறதா? இல்லை, வீரர்-தேர்வுபற்றி விமரிசனம் நாலா திசைகளிலும் சூடுபிடித்திருக்கிறதே, உள்நாட்டுத் தொடர்வேற.. கொஞ்சம் உஷாராக இருப்போம் என்கிற தற்காப்பு எண்ணமா?

முதன்முறையாக ‘உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி’களை, இந்த ஆகஸ்டில் நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரிலிருந்து ஆரம்பித்திருக்கிறது ஐசிசி. 9 நாடுகள் கலந்துகொள்ளும் டெஸ்ட் தொடர் போட்டிகளாதலால் (5-day matches), இவை மெல்லச் செல்லும். வெற்றி, டிரா, டை(Tie) என, போட்டிகளின் கதிக்கேற்றபடி பாய்ண்ட்டுகள் உண்டு.  2021 ஜூன் மாதம் இங்கிலாந்தில் நிறைவுபெறும். ஏற்கனவே 2-போட்டி டெஸ்ட் தொடரில் பலவீனமான வெஸ்ட் இண்டீஸைத் தோற்கடித்த மிதப்பில், கோஹ்லியின் இந்தியா இருக்கிறதோ! இருந்தால், தென்னாப்பிரிக்காவிடம் அது வேலைக்காவாது. இது, கோஹ்லி-சாஸ்திரி ஜோடிக்குத் தெரியும். இந்த நிதர்சனம் கொடுத்த உதறலினால்தான், அணியில் மாற்றம்பற்றிய சிந்தனைகள் இப்போது. சிந்தனை செய் மனமே … செய்தால்…!

ரோஹித் ஷர்மா-மயங்க் அகர்வால், இந்தியாவின் துவக்க பேட்டிங் ஜோடி என்பது கிட்டத்தட்ட நிரூபணமாகிவிட்டது. ஒருவேளை, கோஹ்லி-சாஸ்திரி தலைக்குள் ஏதாவது பூச்சி ஊறித்தென்றால், போட்டி துவங்குவதற்கு முன் இதுவும் மாறிவிடும். திடீரென்று ஷுப்மன் கில் (Shubman Gill, another Kohli-favourite, but talented), ரோஹித்தை பெஞ்சில் உட்காரவைத்துவிட்டு, மயங்குடன் இறங்கினாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை!

Saha in action !

கோஹ்லி இப்போது சொல்லியிருப்பது ரிஷப் பந்த் (சொதப்பல் கீப்பிங்)- க்குப் பதிலாக, நாட்டின் நம்பர் 1 டெஸ்ட் விக்கெட் கீப்பர் வ்ருத்திமான் சாஹா விளையாடுவார் என்பது. நம்புவதற்கு சிரமமாக இருக்கிறதா ரசிகர்களே! எதிரி வெஸ்ட் இண்டீஸ் இல்லையே, தென்னாப்பிரிக்கா அல்லவா?

அனேகமாக 2+2 என்பது, நமது பௌலிங் அட்டாக்-ஆக இருக்கும் எனத் தோன்றுகிறது. 2 வேகப்பந்துவீச்சாளர்கள். 2 ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்கள். அஷ்வின் ஆட்டோமேட்டிக் சாய்ஸ் இல்லை என்று மூன்று நாள் முன்னால் தான் அந்த கோச்சு சொல்லித்து! இப்போது தலையில் வேறுவிதமாக மணி அடிக்க ஆரம்பித்திருக்கிறதுபோலிருக்கிறது. கோஹ்லி pre-match press briefing-ல், திடீரென அஷ்வினின் முக்கியத்துவம்பற்றிப் பேசுகிறார். ”நிலைமைக்கேற்றபடி தேர்வு செய்கிறோம். இந்திய மைதானங்களில் ஆஷ் எப்போதுமே எதிரிக்குப் பெரும் சவாலாக நிற்பவர். அவரது பேட்டிங்கும் கைகொடுக்கும். ஆஷ் மற்றும் ஜட்டுதான் (Ashwin and Jadeja) எங்கள் ப்ரிமியர் ஸ்பின் ஜோடி! தேவைப்பட்டால் ஹனுமா விஹாரியை மூன்றாவது ஸ்பின்னராகப் பயன்படுத்துவோம்..” ஹ்ம்… என்னமோப்பா, புத்திவந்தால் சரி..

இந்த நிலையில், இஷாந்த் ஷர்மாவும், முகமது ஷமியும் நாளை ஆரம்பிக்கவிருக்கும் போட்டியில், வேகப்பந்துவீச்சாளர்களாக இறக்கப்படக்கூடும். Red ball cricket -லும் சிறப்பாகவே வீசியிருக்கும், புவனேஷ்வர் குமார், இவர்களின் சிந்தனை ராடாரில் சிக்கவில்லையோ.. Poor Umesh Yadav! அணிக்குள் வந்தபின்னும், பெஞ்சுதாம்ப்பா இப்போதைக்கு, உனக்கு!

**

CWC 2019 :  செமிஃபைனலில் இந்தியா !

 

ஒரு பக்கம் குட்டையான பௌண்டரியினால் சர்ச்சைக்குள்ளான அதே பர்மிங்காமில் நேற்று (2-7-19) நடந்தது இன்னுமொரு போட்டி. அதில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா, உலகக்கோப்பையின் அரையிறுதியில் பிரவேசித்துவிட்டது. 2015-ல் நடந்ததைப்போலவே, உலகக்கோப்பையின் Top-4-ல் பங்களாதேஷ் நுழைய முடியாமல்போனதற்கு இந்தியா காரணமானது.

Birmingham: இந்திய அணியின் சீனியர் ரசிகை, 87-வயது சாருலதா பட்டேல் !

நீலவண்ணம் அலையலையாக அசைந்துகொண்டிருந்த மைதானத்தில், 350 என்கிற ஸ்கோரை நோக்கிய ஆர்வத்தில் இந்தியா முதலில் பேட்செய்ய இறங்கியது. ஆனால் முஸ்தாஃபிஸுர் ரஹ்மானின் (5 wickets) ப்ரமாத வேகப்பந்துவீச்சும், ஷகீப்-அல்-ஹஸனின் கூரிய ஸ்பின்னும் இந்தியாவைத் தடுமாறச்செய்து, 314-ல் தன் கதையை முடித்துக்கொள்ளவைத்தது. ரோஹித் ஷர்மா (104) (7 பௌண்டரி, 5 சிக்ஸர் – இந்தக்கோப்பையில் அவரது 4-ஆவது சதம்), கேஎல்.ராஹுல் (77) க்ரீஸில் இருக்கையில் இந்தியா 340 -ஐக்கூட எட்டக்கூடும் எனத் தோன்றியது. ஆனால், கோஹ்லி, பாண்ட்யா, தோனி், (ஜாதவுக்குப் பதிலாக நுழைந்த) கார்த்திக் ஆகியோர்கள் கைகொடுக்கவில்லை. மிடில்-ஆர்டரின் ஒரே விதிவிலக்கு, பங்களா பௌலிங்கை நொறுக்கிய ரிஷப் பந்த்(48). முஸ்தாஃபிசுர் ஒரே ஓவரில் கோஹ்லி, பாண்ட்யா என சாய்த்தும் அசராமல், அதற்கடுத்த ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 3 பௌண்டரிகளை விளாசினார் பந்த். இந்தப் பையனிடம் சரக்கு இருக்கிறது!  இன்னிங்ஸின் கடைசி ஓவரை தோனி விளையாடியவிதம், கிரிக்கெட்டில் தற்போது எந்த நிலையில் அவர் இருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தியது. அவரால் கொஞ்சம் அடிக்கமுடியும்; கொஞ்சம் ஓடமுடியும்.. மேட்ச்சை ஜெயித்துக் கொடுக்கமுடியாது. அந்தக் காலம்.. மலையேறிவிட்டது.

பிட்ச், பேட்டிங்கிற்கு சிரமம் தர ஆரம்பிக்கையில் பங்களாதேஷ் 315 என்கிற இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. பும்ராவும், (குல்தீப் யாதவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டிருந்த) புவனேஷ்வர் குமாரும் டைட்டாகப் போட்டு நெருக்கினார்கள்.  பங்களாதேஷ் வீரர்கள்,  ஷமி, பாண்ட்யா, சஹல் ஆகியோரைத் தாக்கி ரன் குவிக்க முயன்றார்கள். ஒரு கட்டத்தில், ஷகீப்-அல்-ஹஸனின்(66) திறமையான பேட்டிங், கோஹ்லிக்குக் கவலையைக் கொடுத்திருக்கவேண்டும். பாண்ட்யாவை ஒரு பக்கம் கொளுத்திப்போடவைத்தார். தேவைப்படும் ரன் ரேட் ஏறிக்கொண்டிருக்கையில், பங்களாதேஷ் அடித்துத்தானே ஆகவேண்டும். பாதிப் பிட்ச்சில் குத்தி எகிறிய பாண்ட்யாவின் பந்துகள் லட்டுகளாகத் தோன்ற, பௌண்டரிக்குத் தூக்க முற்பட்டனர் ஷகீப்பும், லிட்டன் தாஸும்.  ஆனால் அவர்களை ஒருவர்பின் ஒருவராகக் காலிசெய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார் பாண்ட்யா (3 விக்கெட்டுகள்). பங்களாதேஷ் ஸ்கோர் 179/6. தள்ளாடியது.  ரசிகர்கூட்டத்தின் முகம் வாட ஆரம்பித்தது. விக்கெட்டுகள் மேலும் சரிய,  8-ஆம் எண் பேட்ஸ்மனான முகமது சைஃபுதீன்(51 நாட்-அவுட்) மட்டும் கடுமையாக எதிர்த்தாடினார். பங்களாதேஷுக்கு எதிர்காலத்தில் ஒரு நல்ல ஆல்-ரவுண்டராகப் பரிமளிப்பாரோ சைஃபுதீன் ?

48-ஆவது ஓவரில், தன்னை எல்லோரும் ஏன் இப்படிப் புகழ்கிறார்கள் என பங்களாதேஷுக்குக் காண்பித்தார் ஜஸ்ப்ரித் பும்ரா. தன் கடைசி ஓவரின் ஐந்தாவது, ஆறாவது பந்துகளாக துல்லிய யார்க்கர்களில்,  ரூபெல் ஹுசைன், முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் ஆகிய கடைசி  விக்கெட்டுகளை நெம்பித் தூக்கி எறிந்து, இந்தியக் கொடிகளை உயரத்தில் அசையவைத்தார் பும்ரா (4 விக்கெட்டுகள்). இந்திய வெற்றி, சொற்ப ரன் வித்தியாசத்தில், நிகழ்ந்தது. இருந்தும், அரையிறுதி மேடையில் இந்தியாவைத் தூக்கிவைத்தது.

ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் அரையிறுதிக்குள் வந்துவிட்டன. மற்ற இரு இடங்களுக்காக – இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளிடையே போட்டி. 1992-ஐப் போல், இப்போதும் கடைசிக் கட்டத்தில் பாக். உள்ளே நுழையுமா! பார்ப்போம்..

**

 

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் முதல் தோல்வி

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில், தன் முதல் தோல்வியை இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் இந்தியா தழுவியது நேற்று(30-6-19). வரிசையாக வந்த வெற்றிகளால் ஒரு மிதப்பில் இருந்திருக்கக்கூடிய இந்திய அணிக்கு இப்படி ஒரு அடி விழுந்தது சரிதான். கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைவதற்குமுன், தன்னை சரியாக நிமிர்த்திக்கொள்வது இந்தியாவுக்கு முக்கியம்.

ஒரு பெரிய ஸ்கோரை நோக்கியே இந்த ஆட்டம் செல்லும் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகியிருந்தது. இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராயும் (66), ஜானி பேர்ஸ்டோவும்(Jonny Bairstow) கொடுத்த அபார துவக்கமும், மேற்கொண்டு நடந்த ஆட்டமும் இங்கிலாந்து 370-380 வரை செல்லலாம் என நினைக்கத் தோன்றியது. இறுதியில் 337-ஐ ஸ்கோர் தாண்டவில்லை என்பதே கொஞ்சம் ஆச்சரியம்தான். பேர்ஸ்டோ சதம் (111), ராய் (66), ஸ்டோக்ஸ் (79) என முக்கிய தனிப்பட்ட ஸ்கோர்கள்.

இந்தியாவின் துவக்கத்தை அபத்தமாக ஆக்கிய ராகுல், தடவித் தடவி பூஜ்யஸ்ரீ ஆகி வெளியேறினார். ரோஹித் (102), கோஹ்லி(66) முதலில் மெதுவாக ஆரம்பித்து (அந்த பவர்-ப்ளேயில் இங்கிலாந்தின் பௌலிங் டாப்),  பின்னர் வேகம்பிடித்தனர். நாலாம் நம்பர் விஜய் ஷங்கரை பெஞ்சில் உட்காரச்சொல்லிவிட்டு, மைதானத்துக்குள் வந்த ரிஷப் பந்துக்கு கேப்டனின் உற்சாக சப்போர்ட் இருந்தது – தன் இஷ்டத்துக்கு அடித்து ஆட. அப்படித்தான் துவக்கினார் தன் முதல் மேட்ச்சை அவரும். ஆனால் இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்,  அவரை 32 ரன்களில் காவு வாங்கிவிட்டது. தோனிக்கு முன்பாக இறக்கப்பட்ட ஹர்தீக் பாண்ட்யா(45), அவரது வழக்கமான பாணியில் ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்த முயன்றார். தோனி டெஸ்ட் மேட்ச்போல் ஆட ஆரம்பித்து, பின் வேகம் ’காட்டி’ , ஒன்றையும் சாதிக்கமுடியாமல் நாட்-அவுட்டாக(42) நின்றார். அவருடைய தனிப்பட்ட சராசரி  சரி! ஆனால், 338-ஐத் துரத்திய இந்தியக் கதை, 306-ல் சோகக்கதையாக முடிந்தது.  தோனியும், ஜாதவும் இன்னும் கொஞ்சம் முனைந்திருந்தால் அந்த இலக்கு கிட்டியிருக்கும். இங்கிலாந்து வீழ்ந்திருக்கும் என்று தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை.

பொதுவாக கிரிக்கெட் மைதானத்தின் பௌண்டரி நீளம் நாலாதிக்கிலும் சுமார் 70 மீட்டரிலிருந்து 89-90 மீட்டர் வரை இருக்கும். பர்மிங்காம் மைதானத்தின் ஒரு பக்க பௌண்டரி நீளம் 59 மீட்டர்தான். ரொம்பவே குட்டையான பௌண்டரி ஒரு பக்கத்தில்.  Bizarre and Crazy என்றார் தோற்றுவிட்ட கேப்டன் கோஹ்லி.  தோற்றதற்கு சறுக்கினது சாக்கா? அப்படியும் கொள்ளலாம்தான். இங்கிலாந்து பேட்டிங்கின்போது, அதாவது இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சின்போது என்ன நடந்தது? இந்தியாவின் வலிமைமுகமான ஸ்பின் பௌலிங்கை பலவீனப்படுத்தி அழித்துவிட்டது இங்கிலாந்து. குறுகிய பௌண்டரி வழியே இந்திய ஸ்பின்னரகளை அலாக்காகத் தூக்கி வீசிவிட்டார்கள் இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள். குறிப்பாக  லெக்-ஸ்பின்னர் யஜுவேந்திர சஹலைக் குறிவைத்துத் தாக்கினார்கள். பேர்ஸ்ட்டோவின் 6 சிக்ஸரிகளில் ஐந்து, இப்படி அடிக்கப்பட்டதுதான். குல்தீப் யாதவும் பெரிசாக ஒன்றும் செய்ய முடியவில்லை. பொதுவாக எதிரி டீமைத் திணறவைக்கும் சஹல்-குல்தீப் ஜோடி, நேற்றைய போட்டியில் இப்படி ரன் தானம் செய்தது: சஹல் 10-0-88-0.   குல்தீப் : 10-0-72-1. அதாவது இங்கிலாந்தின்  ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்த, 20 ஓவர்களில் 160 ரன்கள் எதிர் அணிக்கு இந்திய ஸ்பின்னர்கள் தாரைவார்க்கும்படி நேர்ந்தது. இந்தியா தன் ஸ்பின்னர்களுக்கு 20 ஓவர்கள் நிச்சயம் கொடுக்கும் என்பது இங்கிலாந்துக்குத் தெரியாதா? குட்டையான பௌண்டரியைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

ஆரஞ்சு-நீல இந்திய அணி !

இந்திய பேட்ஸ்மன்களும், நீளக் குறைவான பௌண்டரிவழியே இங்கிலாந்தின் ஸ்பின்னர்களைத் தூக்கி அடித்திருக்கலாமே.. ரன் சேர்த்திருக்கலாமே.. எனக் கேட்கும் புத்திசாலிகள் கவனிக்க: அவர்கள் அணி சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களால் ஆனது – மார்க் உட், லியாம் ப்ளங்கெட், க்றிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) என நீள்கிறது லிஸ்ட். அணியில் ஒரே ஒரு ஸ்பின்னரை (ஆதில் ரஷீத்)- சாஸ்திரத்துக்காக-வைத்திருந்தார்கள். அவருக்கு 10 ஓவர் கொடுத்தால் ரோஹித், பந்த், பாண்ட்யா போன்ற அதிரடிப் பேய்கள் பின்னிவிடுவார்கள் எனத் தெரிந்தே, அவருக்கு வெறும் 6 ஓவர்கள் கொடுத்து விலக்கிக்கொண்டார்கள். நிறைய வேகப்பந்துவீச்சாகப் போட்டு இந்தியாவைத் தாளித்துவிட்டார்கள்.

பேட்ஸ்மன்கள், பௌலர்களின் தனிப்பட்ட திறமைகளினால் மட்டும், ஆட்டத்தின் வெற்றி, தோல்வி எப்போதும் நிகழ்வதில்லை என்பது இங்கே ஓரளவு புரிந்திருக்கும். ஒருபக்கம் குட்டையான பௌண்டரி உள்ள மைதானமாகவைத்து, ஸ்பின் பௌலிங்கில் சிறந்த அணிக்கெதிராக அதிகபட்ச ஸ்கோர் கொடுத்து ஜெயிக்கமுடியும். இது ஒரு வியூக மிக்ஸர்:  நல்ல கிரிக்கெட் + கொஞ்சம் குள்ளநரித்தனம். லேட்டாகத்தான்  தலைக்கு மேலே பல்ப் எரிந்திருக்கிறதுபோலிருக்கிறது, ரவி சாஸ்திரி, விராட் கோலி கூட்டணிக்கு!  அதனால்தான் போட்டியின் இறுதியில் பொறுக்கமுடியாமல் வாயைத் திறந்து, கொஞ்சம் மேட்டுக்குடித்தனமாக, அல்லது நாகரீகமாக, பர்மிங்காம் மைதானத்தை bizarre, crazy என்றெல்லாம் சொன்னார் கோஹ்லி! ’ஆடத்தெரியாத நங்கைக்கு மேடை கோணலாகத் தெரிந்ததோ..!’ என நாமும் நாகரீகமாக நமது கேப்டனைத் திட்டலாம்தான்.. அவர் சொன்னதிலும் பாய்ண்ட் இருக்கிறது என்பதைத் தவறவிடலாகாது.

கொசுறு:  தன்னுடைய இரண்டாவது ஜெர்ஸியான ஆரஞ்சு-நீலத்தில் இந்தியா நேற்று விளையாடியது. ஜெர்ஸி பிரகாசம்.  ஆட்டம்.. ம்ஹூம்..!

**

கிரிக்கெட் : ஆஃப்கானிஸ்தானுக்கெதிராக ரிஷப் பந்த் ?

 

இந்திய துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன்  அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். விரல் காயம். 15-பேர் கொண்ட இந்திய அணியில், தவனின் இடத்தில், டெல்லியின் அதிரடி பேட்ஸ்மன் ரிஷப் பந்த். ஒரு-நாள் போட்டியில் அப்படியொன்றும் அனுபவம் ரிஷப்-இற்கு இல்லை. வெறும் ஐந்து சர்வதேசப் போட்டிகள். சராசரி 23.2 ரன்கள். எனினும், தவனைப்போல இவர் ஒரு இடதுகை ஆட்டக்காரர். எதிரி டீமின் ஸ்பின்னர்கள் ஆளநினைக்கும் மிடில்-ஓவர்களில் கடுமையாக எதிர்த்துத் தாக்கும் இயற்கைத்திறன் உள்ள இளம்வீரர். இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு வலு சேர்ப்பார் என்பது  கணிப்பு.  ஆஃப்கானிஸ்தானுக்கெதிரான இன்றைய (22-6-19) போட்டியில் ரிஷப் பந்த் இறக்கப்படலாம். ஒருவேளை, நான்காம் இடத்தில் இறங்கப்பட்டால், ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான், முஜீப்-உர்-ரஹ்மான் ஆகிய உலகத் தரமான ஸ்பின்னர்களை எப்படி ஆடுகிறார் என்பது கிரிக்கெட் நிபுணர்கள்/வர்ணனையாளர்களால் கூர்மையாகக் கவனிக்கப்படும்.

ரிஷப் பந்த் (Rishab Pant)

சரி,  யாருடைய இடத்தில் இவர்? அனேகமாக விஜய் ஷங்கர் அல்லது கேதார் ஜாதவ்,  ரிஷப்-இற்கு வழிவிடவேண்டியிருக்கும். பாகிஸ்தானுக்கெதிரான  ஹை-ஆக்டேன் மேட்ச்சில் ஷங்கரின் பங்களிப்பை மனதில் கொண்டு,  அவரை இன்றைய போட்டியிலிருந்து நீக்க, விராட் கோஹ்லிக்கு மனம்வராமல்போகலாம்!

மேலும் மாற்றங்கள் இருக்குமா?  இருக்கும். இந்தியாவின் ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விளையாடாத நிலை. 140+ கி.மீ. -யில் பந்து வீசும் முகமது ஷமி, புவனேஷ்வரின்  இடத்தில்  புகுந்துகொள்வார். பும்ரா, ஷமி, பாண்ட்யா என்பது அணிக்கு அமையும் ஒரு கூர்மையான வேகப்பந்துவீச்சு.

ரிசர்வ் பெஞ்சில் ஜடேஜாவும், கார்த்திக்கும்  பொறுமையாக உட்கார்ந்து உலகக்கோப்பையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய அல்லது அடுத்துவரும் வெஸ்ட் இண்டீஸுக்கெதிரான போட்டியில் இவர்களில் ஒருவராவது உள்ளே வரவேண்டும். ரிசர்வ் ஆட்டக்காரர்களை அவ்வப்போதாவது மைதானத்திற்குள் இறக்கினால்தான், அவர்களது நம்பிக்கையும் தளராது இருக்கும். டச்சிலும்  இருப்பார்கள். நாளைக்கு தேவைப்படுகையில், அவசரமாக அவர்களை உள்ளே இழுக்கமுடியும், என்பதை அறிந்தவர்தான் இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி.

இங்கிலாந்துக்கெதிரான கடந்த மேட்ச்சில் ஆஃப்கானிஸ்தான் – குறிப்பாக பௌலர்கள்-  கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.  ஆஃப்கன் சிறப்பு ஸ்பின்னரான ரஷீத் கானை இங்கிலாந்து பேட்ஸ்மன்கள் நொறுக்கித்தள்ளிவிட்டார்கள். அடிபட்ட பாம்பாக ஆஃப்கானிஸ்தான் இன்று சீறக்கூடும். புதிய வீரர்களை டெஸ்ட் செய்வதோடு,இந்தியா கவனத்தோடு விளையாடுவது உத்தமம். நேற்றைய (21-6-19) மேட்ச்சில், வலிமையாகத் தெரிந்த இங்கிலாந்து, ஸ்ரீலங்காவிடம் செமயா உதைபட்டதை, இந்தியா நினைவில் கொள்வது நல்லது.

**

கிரிக்கெட் உலகக்கோப்பை  அணி : தினேஷ் இன், ரிஷப் அவுட் !

2019-ன்  உலகக்கோப்பையைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகக் கருதப்படும் ஒருசில அணிகளில், இந்தியாவும் ஒன்று. ஐசிசி உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்படி அமையும் என்பதில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சியும், கிரிக்கெட் வல்லுனர்கள்/ வர்ணனையாளர்களின் சலசலப்பு அதிகமாக இருந்துவந்தது. நேற்று மாலை (15/4/19), ஐசிசி-க்குக் கொடுக்கப்பட்ட தேதிப்படி,  இந்திய கிரிக்கெட் போர்டு  அணியை அறிவித்துவிட்டது.

விராட் கோலி (டெல்லி) தலைமை தாங்கும் 15-பேர் அணிக்கு, ரோஹித் ஷர்மா (மும்பை) துணைக்கேப்டன். மற்றவர்கள்: ஷிகர் தவன் (டெல்லி), கே.எல். ராஹுல் (கர்னாடகா), எம்.எஸ்.தோனி (ஜார்க்கண்ட்), கேதார் ஜாதவ் (மஹாராஷ்ட்ரா), விஜய் ஷங்கர் (தமிழ்நாடு), ஹர்திக் பாண்ட்யா (பரோடா), ரவீந்திர ஜடேஜா (சௌராஷ்ட்ரா), முகமது ஷமி (மேற்கு வங்கம்), ஜஸ்ப்ரித் பும்ரா (குஜராத்), புவனேஷ்வர் குமார் (உத்திரப்பிரதேசம்), குல்தீப் யாதவ் (உத்திரப்பிரதேசம்), யஜுவேந்திர சஹல் (ஹரியானா), தினேஷ் கார்த்திக் (தமிழ்நாடு).

துவக்கத்தில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், மூன்றாவதில் விராட் கோலி எனப் போகும் இந்திய பேட்டிங் வரிசையில்,  நான்காவதாக வரப்போவது யார் என்பதே விவாதப்புள்ளியாக இருந்துவந்தது. இந்த இடத்தில், கடந்த சில தொடர்களின் அனுபவத்தைக் கருத்தில்கொண்டு, ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கரைத் தேர்வு செய்திருப்பதாக தேர்வுக் கமிட்டியின் சேர்மன் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கியிருக்கிறார். விராட் கோஹ்லியின் மனதுக்குப் பிடித்த கே.எல்.ராஹுல், ரோஹித்-தவன் ஜோடிக்கு ரிசர்வ் ஓபனராக இயங்குவார் என்பது தேர்வுக்கமிட்டியின் முடிவு. அணியின்  தேவைக்கேற்ப ராஹுல் மிடில்-ஆர்டரிலும் இறக்கப்படலாம் எனவும் கூறியிருக்கிறார் பிரசாத்.

வேகப்பந்துவீச்சு மூன்று திறமையான பந்துவீச்சாளர்களின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்விங் மாஸ்டர்களான புவனேஷ்வர் குமார், முகமது ஷமி. விராட் கோலியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களான, ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவும், இடதுகை லெக்-ஸ்பின்னரான யஜுவேந்திர சஹலும் ஸ்பின் டெபார்ட்மெண்ட்டை கவனித்துக்கொள்வார்கள். ஒரு எக்ஸ்ட்ரா : ஆஃப் ஸ்பின்னராக ரவீந்திர ஜடேஜா.

இந்திய விக்கெட்-கீப்பர்கள்: தோனி, கார்த்திக்

தினேஷ் கார்த்திக்கா இல்லை, ரிஷப் பந்த் (Rishab Pant)-ஆ – யாருக்குக் கொடுப்பது இடம் என்பதே, தேர்வுக்குழுவின் அதிகபட்ச விவாதநேரத்தை எடுத்துக்கொண்ட விஷயம் எனத் தெரியவருகிறது. 37 வயதாகும் தோனிக்குக் காயம்பட்டாலோ, வேறு காரணத்தினால் ஏதாவது மேட்ச்சில் விளையாடமுடியாமல் போனாலோ, முதல்தர விக்கெட்கீப்பர் ஒருவர் ரிஸர்வில் இருக்கவேண்டும். இந்தவகையில் நாங்கள் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இருவரது தகுதிகளையும் அலசினோம். இறுதியில், கார்த்திக்தான் ரிஸர்வ் விக்கெட்கீப்பருக்குத் தகுதியானவர் எனத் தேர்வு செய்தோம் என, ப்ரெஸ் மீட்டில் தெளிவுபடுத்தியிருக்கிறார் தேர்வுக்குழுத் தலைவர். 91 சர்வதேச ஒரு-நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம், இங்கிலாந்தில் ஏற்கனவே விளையாடிய அனுபவம், ஒரு ஃபீல்டராக எந்த இடத்திலும்  ஃபீல்ட் செய்யும் திறன் ஆகியவை கார்த்திக்கிற்குத் துணை வந்திருக்கும்

இந்திய அணியின் உலகத்தரமான ஃபீல்டர்களாக,  ரவீந்திர ஜடேஜா, விஜய் ஷங்கர், ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக்கைச் சொல்லலாம்.

2015-ல் நடைபெற்ற உலக்கோப்பைக்கான எம்.எஸ்.தோனி தலைமை தாங்கிய இந்திய அணியில், தமிழ்நாட்டிலிருந்து ஆர்.அஷ்வின் மற்றுமே இருந்தார். இந்த முறை ’வட போச்சே!’ என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் என இரு தமிழர்கள்  உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியப்படவேண்டிய விஷயமே.

பல இந்திய ரசிகர்களுக்கு, டெல்லியின் இளம் அதிரடி பேட்ஸ்மன் ரிஷப் பந்த் தேர்வு பெறாதது ஏமாற்றத்தைத் தரும். இருபத்தியோறே வயதான அவர், மனம் தளராது, அடுத்த வருடம் வரும் டி -20 உலகக்கோப்பை, பின்வரும் உலகக்கோப்பைகள் என  வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கவேண்டும் என ஆறுதல் சொல்லியிருக்கிறார் பிரசாத்.

கிட்டத்தட்ட செலெக்‌ஷன் நிச்சயம் என நம்பப்பட்ட மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன் அம்பாட்டி ராயுடு அணியில் இடம் பெறாதது பல வல்லுனர்கள்/ விமரிசகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் கோஹ்லி ராயுடுவை, ‘இவர்தான் எங்களது நம்பர் 4’ என்றார். இப்போது திடீரென அவரைக் கழட்டிவிட்டுவிட்டதேன்?  மேலும், ராஹுலை சேர்க்கவேண்டிய அவசியமென்ன? என்றெல்லாம்  விமரிசனக் கேள்விகள்.  ராயுடுவின் ஒரு-நாள் போட்டி ரன் சராசரி அதிகம். கூடவே, போட்டியின்  நிலைமைக்கேற்றபடி தன் ஆட்டத்தை மாற்றியமைத்து ஆடும் திறன் உண்டு அவரிடம். எல்லாம் இருந்தும்,  லண்டன் ஃப்ளைட்டில் இடமில்லை.

இப்படியெல்லாம் சில சர்ச்சைகள் எழுந்து கோடையைக் கடுமைப்படுத்தினாலும், தேர்வாகியிருக்கும் இந்திய வீரர்களை ’வென்று வருக!’ என வாழ்த்தி அனுப்பிவைப்போம்.

**