நாட்டைவிட்டே ராமனை – அந்த பகவான் ஸ்ரீராமனைத்தான் சொல்கிறேன் – ஒருவழியாக விரட்டிவிடுவது எப்படி என சில ‘தீய சக்திகள்’ திட்டமிட்டு, திட்டமிட்டு மண்டைகாயும் வேளையில், ஒரு ஓவியக் கண்காட்சி நடக்கிறதாம். எதைப்பற்றி? தசரத ராமன், சீதாராமன், simply ஸ்ரீராமன்பற்றி. உலகின் சிலபல பகுதிகளில் ஆர்வமாகப் பேசப்படும், கொண்டாடப்படும் இதிகாசமான ராமாயணம் விவரித்த, இந்த தேசத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளவரசனின் வாழ்க்கைச் சித்திரங்களெனக் காட்சிகளை கண்முன்னே விரிக்கும் ஓவியங்கள் (சில சிற்ப வேலைப்பாடுகளும் கூடவே) மட்டும் அடங்கிய ஒரு கண்காட்சி. துவங்கி, நடந்து வருகிறது 13-ஆம் தேதி வரையில் (காலை 11 – மாலை 6 மணிவரை). எங்கே? இதென்ன கேள்வி? ராமபிரானை ஏசியும், அவன் உருவப்படத்தின் மீது சிலவற்றை வீசியும் வெறுப்பு ஊர்வலம் எடுத்த வரலாறும், சிறப்பும் மிக்க தமிழ்நாட்டிலா இதெல்லாம் நடக்கும்?
தனித்துவமான காவியக்கருத்து, கலாச்சார உட்பொருளைத் தாங்கி, அழகு ஓவியங்களாகக் காட்சிப்படுத்தும் இந்தக் கலைக்கண்காட்சி தேசத்தலைநகரான புதுதில்லியில் நடந்து வருகிறது என்கிறது The Statesman நாளிதழ். ’ஜெய் ஸ்ரீராம்’ எல்லாம் கூடாது… இங்கே அது எடுபடாது’ எனக் கொக்கரித்த மட ’மமதா’வின் வங்காளத்திலும் இப்போது தேர்தல் நடக்கிறதே.. அங்கே கதை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை அங்கேயிருந்தே வெளிவரும் இந்தியாவின் பழம்பெரும் நாளிதழ் ஒன்றிலிருந்தே படிப்போம், கொஞ்சம் லோக்கல் ஃப்ளேவரைத் தெரிந்துகொள்வோம் எனச் சென்றபோது… கண்ணில்பட்டான் – இப்போதெல்லாம் எல்லோர் வாயிலிருந்தும் விழுந்து புறப்படும் அப்பாவி ராமன்! புருஷர்களில் உத்தமன் எனச் சொல்லிக்கொண்டால் இந்தக்காலத்தில் யாருக்குப் புரியும்? புரிந்தால்தான் போற்றப்படுவானா, உத்தம வில்லன்கள் உலவித் திரியும் இந்த இந்தியப் பெருநாட்டில்?
இப்படியான சூழலிலும், ’சன்ஸ்கார் பாரதி கலா சங்குல்’ (Sanskar Bharati Kala Sankul) எனப்படும் டெல்லியின் புதிய கலைமேம்பாட்டு நிறுவனம் ஒன்று, ’லோக் மே(ன்) ராம்’ (லோகத்தில் ராமன்) எனத் தலைப்பிடப்பட்ட இந்தக் கலைக்கண்காட்சியை, ’இந்திய லலித் கலா அகாடமி’யின் உதவியுடன் முன்னெடுத்து நடத்திவருகிறது. பிரதானமாக 25 ஓவியங்கள் ராமபிரானின் இதிகாசகால பாரதத்தை மீட்டெடுத்துக் கண்முன் வைக்கப் பிரயத்னப்படுகின்றன. அவற்றில் சில:

முதலில் கவர்வது மரம்/கண்ணாடியினாலான ’ராம் சேது’ ராமர் கட்டிய பாலம். ராம்.. ராம்.. என்கிற வார்த்தைகள் கூட்டமாக ஊர்ந்து அவன் பாதவழி காட்டுகின்றன. அருகில் ராம பாதுகைகள். டெல்லியின் National Gallery of Modern Art -ன் இயக்குநர் அத்வைதா கதநாயக் உருவாக்கிய சிற்பம். (மேலே). ‘சபரியின் தபஸ்’ மற்றும் ‘அகலிகை சாபவிமோசனம்’ ஆகிய காட்சிகளைத் தரும் குத்லயா ஹீரேமத்தின் (Kudlaya Heeremath) அழகு மிளிரும் ஓவியங்கள். புகழ்பெற்ற ஓவியர் பாலாஜி உபாலே (Balaji Ubale)-யின் ஓவியங்கள் இரண்டு : ‘சபரியுடன் ஸ்ரீராம்’ – சபரி ருசி பார்த்துக்கொடுத்த பழத்தை ராமன் சாப்பிடப்போகிறான்.. அடுத்தது, ’ஆதிவாசி ராம்நாமியும் ஸ்ரீராமனும்’. இதில் : தன்னை வனத்தில் சந்தித்துப் பரவசப்பட்ட ’ராம்நாமி’ எனும் ஆதிவாசியை அன்போடு அணைத்துக்கொள்ளும் ராமன்! தத்ரூப ஓவியங்கள். இன்னொன்று இப்படி ஒரு காட்சியைத் தருகிறது: அழகு ஆபரணங்களை அணிந்துகொண்டு குறுகுறுவெனத் தெரியும் குழந்தை ராமன், அரண்மனைத் தோட்டத்தில் யானை, குதிரை என மரப்பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறான். அவனது கொள்ளை அழகை அருகிருந்து பிரமிப்போடு பார்க்கும் தோட்டத்துக் கிளிகள் ! – கிஷன் ஸோனி எனும் கலைஞரின் கைங்கரியம். ’காணாமற்போன சீதை’ என்கிற தலைப்பில் பார்கவ் குமார் குல்கர்னி வரைந்த ஒரு ஓவியம்: மனைவியை இழந்த, தேடித் தேடிக் கலைத்த கணவனாக ராமன்.. சோகம் ததும்பும் முகத்தோடு ஆகாசத்தைப் பார்க்கிறான் – கடவுளின் துணைக்காக ஏங்குகிறானா? அருகில் ஒரு மரக்கிளையில் கையை வைத்துக்கொண்டு விரக்தியோடு அண்ணாவைப் பார்க்கும் லக்ஷ்மணன். இன்னொன்று அபிஷேக் ஆச்சார்யாவின் ‘ஷிவ் தனுஷ்’ எனும் ஓவியம் மஹாவீரன் ராமன் சிவ தனுஷை அலட்சியமாகத் தூக்குகிறான்.. அரண்மனை சபையின் ஆச்சரியப் பார்வை. சீதா ஸ்வயம்வரக் காட்சி கண்முன்னே. விஜய் சந்த்ரகாந்த் எனும் ஓவியர் ’ராவண்-ஜடாயு யுத்’ காட்சியை பிரமாதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறாராம்: சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒருகாலகட்டத்தின் வான் யுத்தத்தில், சூர்யக்கதிர்கள் பொன்னொளி பரப்ப, சீதையைக் கவர்ந்து செல்லும் அரக்கர் தலைவன் ராவணன் மீது ஆக்ரோஷமாகப் பாய்ந்து தாக்கும் ஜடாயு! சிலிர்க்கவைக்கும் போர்க்காட்சி. பிறிதொரு ஓவியம்: ராவணனின் தலைநகரம் கோபக்கார அனுமனால் தீக்கிரையாக்கப்படுகிறது..தலைப்பு: ‘லங்கா தஹன் (Lanka Dahan) – லால் சந்த்ர சூர்யவன்ஷி-யின் கைவண்ணம். இப்படி, கடந்துபோன காலத்தைக் கலையழகோடு மீட்க முனையும் ஆக்கங்கள், அயோத்தியில் கடந்த இரண்டு வருடங்களாக வரையப்பட்ட சித்திரங்களாக. லலித் கலா அகாடமியின் அருமையான முயற்சி/பங்களிப்பு.
டெல்லியில் இருந்தால் இப்போது அங்குபோய் இத்தகைய அபூர்வ ஓவியக் கண்காட்சியைக் கண்டுகளித்திருக்கலாம். பெங்களூரில் இருந்துகொண்டு என்ன செய்ய? சரி, இரவில் ஐபிஎல் பார்ப்போம்… சூர்யகுலத் தோன்றல் – மும்பை இண்டியன்ஸின் சூர்யகுமார் யாதவ் எப்படி ஆடுவாரோ !
**