அம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ?

மனதுக்குப் பிடித்தமான, உன்னதமான ஒரு விஷயத்தை, நாம் நம் மனதிலேயேதான் சரியாக அனுபவிக்கமுடியும். அல்லது இணக்கமானவர்களோடு, நம்மோடு ஒத்திசைவு உள்ளவர்களோடு சரியான சூழலில் பகிர்ந்துகொள்ளலாம். அளவளாவி மகிழலாம். ஆனால் ஒருபோதும் உணர்வற்ற முட்டாள்களோடோ, அயோக்கியர்களோடோ இத்தகைய மென்னுணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது. ஆனால் நம்மை அப்படி நிம்மதியாக இருக்க விட்டுவிடுவார்களா, நம் நாட்டில்?

நமது பத்திரிக்கைகளை, டிவி சேனல்களை, தவிர்க்கமுடியாமலும் ஒரு வித தினசரி சலிப்புடனும்தான் படிக்கவேண்டியிருக்கிறது/ பார்க்கவேண்டியிருக்கிறது. செய்திகள் என்கிற பெயரில் காலையிலிருந்தே சுற்றிச்சுற்றி வரும் தினசரி அபத்தங்கள், கேலிக்கூத்துகள், வக்கிரங்கள், வன்ம விவரிப்புகள். குறிப்பாக இந்திய டிவி சேனல்கள், சினிமாக்கள் போன்ற பொதுஜன ஊடகங்கள் இத்தகைய செய்தி, பட வெளியீடுகளில் ஒப்பற்றவை. தனிமனித, குடும்ப உறவுகள் தொடர்பான நல்லுணர்வுகளை, ஒழுக்கமதிப்பீடுகளை திட்டமிட்டு சிதைப்பதில் ஈடுஇணையற்றவை. மீடியா சுதந்திரம் என்கிற லேபிளை நெற்றியில் ஒட்டிக்கொண்டு, சமுகச் சீரழிவை, உக்கிரமாக, வருடக்கணக்கில் செய்துவருபவை (எல்லாப் பத்திரிக்கைகளும், மீடியாவும் இப்படி மோசமில்லை எனும்போதும்).

இன்று காலை, கர்னாடகா எக்ஸிட்-போல், ஐபிஎல், அயர்லாந்து-பாகிஸ்தான், ஈரான் –இஸ்ரேல், மோதி-முக்திநாத் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு பத்திரிக்கைக் கதவைத் திறந்தேன். எந்த நேரத்தில் திறந்தேனோ.. எரிச்சலுற்றது மனது. எகிறியது BP.

என்ன அது? அன்னையர் தினம். இதில் எரிச்சலுற என்னப்பா இருக்கிறது? கொஞ்சம் பொறுங்கள். எரிச்சல் கொடுத்தது தினமல்ல, அப்பாவி அம்மாக்களுமல்ல. இந்த தினத்தின் மகிமையை தன் ‘ஸ்டைலில்’ குறிப்பிட்டுக் குதூகலித்தது ஒரு பத்திரிக்கை. அன்னை அல்லது அம்மா அல்லது தாயார் என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? ஒரு நெருக்கமான, அப்பாவித்தனமான அன்பு, அளவிலாப் பாசம், எப்போதும் பொங்கிநிற்கும் ப்ரியம், பிரிவு தரும் உருக்கம், கண்கலக்கம், நீங்காத நினைவு – இதெல்லாம்தானே? ஆனால் நமது பத்திரிக்கைகள் எதை, எந்தமாதிரி அம்மாக்களை இன்றைய தினம் நமக்கு நினைவுபடுத்த, நாம் மெச்சவேண்டும் என விரும்புகின்றன?

Power Moms! என்ன திடீரென்று ஆங்கிலத்துக்குத் தாவிக் குழப்புகிறீர்கள் என்கிறீர்களா? தமிழிலேயே வருகிறேன்: ’சக்திவாய்ந்த அம்மாக்கள்!’ இது சரிதானே. அம்மாவின் சக்திக்கு இணையாகுமா என்கிறீர்கள். இந்த அர்த்தத்தில் சொல்லியிருந்தால் நானும் மகிழ்ந்திருப்பேன். இவர்கள் குறிப்பிட்டது உங்க அம்மா, எங்க அம்மா போன்ற அப்பாவி அம்மாக்களைப்பற்றியல்ல. அவர்கள் தினம் காட்டி, புகட்டி வளர்த்த பாசத்தின் சக்தியைப்பற்றியல்ல, இந்தப்பத்திரிக்கைகள், குறிப்பிட்டுப் பீற்றிக்கொள்வது.

பின்னே? Power Moms என்று இவர்கள் குறிப்பிட்டு நம்மையும் உணர்ச்சிவசப்படச் சொல்வது, அரசியல்வாதிகளின் அம்மாக்கள், பாலிவுட்டின் அம்மாக்கள். இவர்கள்தான் சக்தி வாய்ந்த அம்மாக்களாம். இவர்களே அன்னையர் தினக் கொண்டாட்டத்திற்குத் தகுதியானவர்கள்! நீங்களும் நானும் இதை அப்படியே ஒத்துக்கொண்டு நமது அசட்டு அம்மாக்களைப்பற்றிய சிந்தனைகளை மூலையில் தூக்கிக்கடாசிவிட்டு, ’பவர் அம்மா’க்களைப் பற்றி இந்த நன்னாளில் சிந்தித்து மகிழவேண்டும். இந்திராகாந்தி, சோனியா காந்தி, ஷீலா தீக்ஷித் என்று கூவிக்கொண்டு பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டுமாம். எப்படி இருக்கிறது நமது மீடியா சொல்லும் அம்மாக் கதை? நம்மைப்போன்ற அசடுகளுக்கு இவ்வாறு விளக்கியும் புரியாமல் போய்விடுமே என்பதற்காக பாசக்கார அம்மா-பிள்ளை படங்கள் சிலவும் போட்டிருக்கிறார்கள். இந்திரா காந்தி-ராஜீவ் காந்தி, சோனியாகாந்தி-ராகுல், ஷீலா தீக்ஷித்-சந்தீப் தீக்ஷித், போறாக்குறைக்கு ராப்ரி தேவி !(ஊழல்திலகம் லாலு ப்ரசாத் யாதவின் அர்ருமை மனைவி). ராப்ரிதேவி தன் மகன் தேஜஸ்வி யாதவுடன். அடடா! எப்பேர்ப்பட்ட அம்மாக்கள் நம்நாட்டில் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். நாம் கொடுத்துத்தான் வைத்திருக்கவேண்டும். சந்தேகமில்லை. பாலிவுட் ரசிகர்களையும் விட்டுவிடக்கூடாதே! அதற்காக மேலும் படங்கள் போட்டுக்காண்பித்திருக்கிறது பத்திரிக்கை: ஹிந்திப்படங்களில் அம்மாக்களாக வந்து அம்மாவின் அன்பைப்பற்றி நமக்கு விபரமாகச் சொல்லித் தெளிவித்த நிருபா ராய் (அமிதாப் பச்சனுக்கு அம்மாவாக வந்து அழுதுகொண்டே இருந்தவர்), ரீமா லாகூ, ஃபரிதா ஜலால் ஆகிய புண்யாத்மாக்கள்.

என்ன புரிகிறதா ஏதாவது? இப்போதாவது? அன்னையர் தினம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பெற்றதாயை நினைத்து உணர்ச்சிவசப்படும் ஜீவன்களே, மேற்சொன்னதுபோன்ற ’பவர்-அம்மா’க்களை இன்று நீங்கள் நினைக்காவிட்டால், அன்னையர் தினம் கொண்டாடி என்ன ப்ரயோஜனம்?

**