டி-20 தொடர் கையில்.. இனி டெஸ்ட் அரங்கம் !

மூன்றாவது டி-20 ஐ 12 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.  மேத்யூ வேடின் (Mathew Wade)அதிரடி பேட்டிங்கிற்கு கொஞ்சம் மேலேயே போய் பதில் தந்தார் கேப்டன் கோஹ்லி. Class act. ஆனால் போதவில்லை. மிடில்-ஆர்டர் நொறுங்க, பாண்ட்யாவும் 20 ரன்னில் விழுந்ததால், இந்தியா வெல்ல இயலவில்லை. சுருக்கமாகச் சொன்னால், ஆஸ்திரேலிய பௌலர்கள் (குறிப்பாக ஸ்பின்னர் ஸ்வெப்ஸன்) அபாரமாக வீசி இந்தியர்களைத் தடுமாறவைத்தார்கள். அவர்கள் இந்தியாவைவிட ஒரு படி மேலேயே இருந்தார்கள். ஜெயித்ததே நியாயம்!

2-1 என்று தொடர் இந்தியாவின் கையில் வந்தது. தொடர் நாயகன் ஹர்திக் பாண்ட்யா நடராஜனின் கையில் தன் விருதைக் கொடுத்து ’நீ தாம்ப்பா இந்த விருதுக்கேற்ற ஆளு!’ என்று உணர்ச்சி வசப்படுகிறார். தொடர் கோப்பையை கேப்டன் கோஹ்லியும் அவரிடம் கொடுத்து நிற்க, வீரர்கள் வெற்றிமுகம் காட்டிப்படம் எடுத்துக்கொள்கின்றனர். நடராஜனுக்குத் தலை சுற்றியிருக்கும்!  Natarajan is the find of the series, no doubt என்கிறார் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர். இப்படியே இவர் தொடர்ந்தால், அடுத்த ஆண்டின் டி-20 உலகக்கோப்பைக்கான அணியின் வியூகங்களில் இவர் இடம்பெறலாம் என்கிறார் கோஹ்லி. ஆஸ்திரேலிய மைதானத்தில் ஷமி, பும்ராபோன்ற அனுபவ வீரர்களே தத்தளிக்கையில், எதிரி யார் எனத் தலையைப் பிய்த்துக்கொள்ளாமல், துல்லியம், variations, கடின உழைப்பு என மட்டும் மனதைக் குவியவைத்து விக்கெட்டுகளைச் சாய்த்தார் நடராஜன். சாய்த்தபின்பு? கூச்சலோ, கொண்டாட்டமோ ஏதுமில்லை. பந்தை எடுத்துக்கொண்டு அடுத்து வீசப்போவதைப்பற்றி சிந்தித்தவாறே செல்லும் நடராஜன். இதில் கபில்தேவின் சாயல். இந்தியர்கள் புகழ்வது இருக்கட்டும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் பெரிசுகளும், இந்தக்காலத்தில் காணக்கிடைக்காத அந்த எளிமையை, பண்பை கவனிக்கத் தவறவில்லை.

Mohammed Siraj

டெஸ்ட் மைதானத்திற்கு கதை மாறுகிறது டிசம்பர் 17-லிருந்து. முதல் டெஸ்ட் அடிலெய்ட் (Adelaide) மைதானத்தில் இரவு-பகல் ஆட்டம். இந்திய பேட்டிங் கோஹ்லி, புஜாரா, ரஹானே, ராஹுல் என மையம் கொள்ளும். துவக்கத்தில் ப்ரித்வி ஷா அல்லது மயங்க் அகர்வால் – இருவரில் ஒருவர் நுழைய வாய்ப்பு. அனேகமாக வ்ருத்திமான் சாஹா விக்கெட்கீப்பராக பங்களிப்புசெய்வார். இந்தியாவின் பௌலிங் ஆஸ்திரேலியாவின் வலிமையான பேட்டிங்கிற்குப் பெரிதாக சவால் விடுக்கும் எனத் தோன்றவில்லை. வேகப்பந்தில் முகமது ஷமி, பும்ராவோடு, உமேஷ் யாதவ் மற்றும் அனுபவம் இல்லாத, ஆனால் சாதிக்க ஆசைப்படும் முகமது சிராஜ் (ஐபிஎல் பெங்களூர் அணி) இருக்க வாய்ப்பு. ஒருவேளை சிராஜ் சேர்க்கப்படவில்லை எனில், நவ்தீப் செய்னி வரலாம். ஒரே ஒரு ஸ்பின்னர்தான் இந்திய அணியில் இருப்பார். அந்த நிலையில் அனுபவ வீரர் அஷ்வினுக்கு வாய்ப்பு. சிட்னி டெஸ்ட்டில் இரண்டு ஸ்பின்னர்கள் ஆடலாம். அப்போது அஷ்வினோடு ஜடேஜா சேர்ந்துகொள்வார். ஜடேஜாவின் வலிமையான பேட்டிங் அணிக்கு உகந்தது. காயத்திலிருப்பதால், முதல் டெஸ்ட்டிற்குள் அவர் நுழைவதற்கான வாய்ப்பில்லை எனத் தோன்றுகிறது.

முதல் டெஸ்ட்டிற்குப் பின் கோஹ்லி விடுவிக்கப்படுவதால், அவரிடத்தில் ரிஷப் பந்த் அல்லது ஷ்ரேயஸ் அய்யர் இடம்பெறலாம். கோஹ்லியில்லாத இந்திய அணிக்கு அஜிங்க்யா ரஹானேதான் கேப்டன். இந்தத் டெஸ்ட் தொடர், இந்தியாவுக்கு வேறொரு கதையைச் சொல்லக்கூடும்.

**

ஐபிஎல் – CSK & RR : மீண்ட சொர்கம் ?

இன்று (7-4-18) மும்பையில் கோலாகலமாகத் தொடங்குகிறது இந்த வருடத்தின் க்ரிக்கெட் விழா – ஐபிஎல். முதல் போட்டியில், மும்பை இண்டியன்ஸ் (MI) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகள் மோதக் காத்திருக்கின்றன.

சூதாட்டவெளியில் சிக்கியதால் தடை செய்யப்பட்டு, இரண்டு வருடங்களாக வெளியில் உட்கார்ந்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்(RR), சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த வருடம் மைதானத்துக்குள் நுழைகின்றன. போட்டிகள் அதகளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் ஏலத்தின்போது, சீட்டுக்கட்டுகளைக் கலைத்து ஆளாளுக்குப் புதிதாகப் பகிர்வதுபோல, போனவருடத்து அணிகளின் வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்டார்கள் (சில சீனியர் வீரர்களைத் தவிர்த்து). ஐபிஎல்-இன் எட்டு அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை எடுத்து, புதிய கட்டமைப்புடன் தங்கள் அணியை வைத்திருக்கின்றன.

பெரும்பாலான அணிகள், இந்தவருட ஏலத்தின்போது, குறிப்பாகத் தனக்கு வேண்டிய பௌலர்களை தேர்ந்தெடுப்பதில் நேரம் மற்றும் பணம் செலவழித்ததைக் காணமுடிந்தது. சரியான ஸ்பின் பௌலர்களைத் தங்கள் அணிக்கு வாங்குவதில், ஒவ்வொரு அணியின் பிரதிநிதிகளும் பேப்பரில் கூட்டல் கழித்தல் போட்டுக்கொண்டு ஏலமெடுத்தனர். இந்த வருடத்திய ஐபிஎல் ஏலத்தில் ரூ.11 கோடி, 12 கோடி எனப் பெற்ற கே.எல்.ராஹுல், மனிஷ் பாண்டே, ஜெயதேவ் உனாத்கட், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) போன்ற வீரர்கள் உண்டு. ஏகப்பட்ட பணத்தை விழுங்கிவிட்டு உட்கார்ந்திருக்கும் இந்த வீரர்கள், போட்டிகளில் உயர உயரப் பறப்பார்களா அல்லது காற்றுப்போன பலூனைப்போல கீழே சுருண்டு விழுவார்களா என்பதை வரவிருக்கும் நாட்கள் தெளிவாகச் சொல்லிவிடும்.

வனவாசத்திலிருந்து மீண்டு ஐபிஎல்-லுக்கு வந்திருக்கும் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் சாதித்துக்காட்டவேண்டும் எனத் துடித்துக்கொண்டிருக்கின்றன. சென்னை அணிக்கு வழக்கம்போல மகேந்திர சிங் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானுக்கு ஆஸ்திரேலியரான ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தென்னாப்பிரிக்காவுக்கெதிரான போட்டியில் பந்து சிதைப்பு சர்ச்சையில் மாட்டி ஆஸ்திரேலிய அணியிலிருந்தே நீக்கப்பட, ராஜஸ்தான் தலைமைப்பதவியும் கூடவே பறிபோனது. ராஜஸ்தான் அணிக்கு இப்போது இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மனான அஜின்க்யா ரஹானே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸும் எத்தகைய வெற்றி தோல்விகளைப்பெறும் என்பதனை அந்தந்த அணிகள் ஒவ்வொரு மேட்ச்சிலும் இறக்கவிருக்கும் வீரர்களின் காம்பினேஷன் மற்றும் களவியூகம் முடிவுசெய்யும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எப்படி அமைந்திருக்கிறது? இந்த அணியின் பௌலிங் வலிமையானதாகத் தெரிவதால், முக்கிய போட்டிகளில் கேப்டன் ரஹானேயின் தலைபாரம் பாதியாகக் குறைந்துவிடும் வாய்ப்பு உண்டு. வேகப்பந்துவீச்சாளர்களாக ஜெயதேவ் உனாத்கட், தவல் குல்கர்னி, பென் ஸ்டோக்ஸ், துஷ்மந்தா சமீரா முன்னிலைப்படுத்தப்படலாம். இந்த அணிக்கு வாய்த்திருக்கும் ஸ்பின் பௌலிங் காம்பினேஷன்தான் ரஹானேக்கு மிகவும் கைகொடுக்கும் எனத் தோன்றுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சேர்ப்பு ஆஃப்கானிஸ்தானின் ஜஹீர் கான். 18 வயதான லெக்-ப்ரேக் பௌலர். இவரிடம் எதிரி விக்கெட்டுகள் வேகமாக சரியலாம். ப்ரஷாந்த் சோப்ரா, ஷ்ரேயஸ் கோபால், கே.கௌதம் போன்ற ஸ்பின்னர்களின் பலமும் கூடவே உண்டு.
இங்கிலாந்தின் இரண்டு குறிப்பிடத்தகுந்த ஆல்ரவுண்டர்கள் ராஜஸ்தானுக்கு விளையாடுகிறார்கள். ஒருவர் பென் ஸ்டோக்ஸ், நல்ல மிடில்-ஆர்டர் பேட்ஸ்மனும் கூட. இன்னொருவர் இன்னும் இங்கிலாந்து அணிக்கே ஆடாதவர்! என்னையும் எப்படி ஏலத்தில் கேட்டார்கள் என எனக்கே புரியவில்லை எனும் 22-வயதான ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer). இங்கிலாந்தின் சிறப்புத் திறமையாக விமரிசகர்களால் கருதப்படும் இவரை, ராஜஸ்தான் ஆர்வமாய் வாங்கிப்போட்டிருக்கிறது. என்ன செய்யப்போகிறார் ஆர்ச்சர் ?

விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்ஸன், ராஹுல் த்ரிபாட்டி அல்லது ஜதின் சக்ஸேனாவோடு ராஜஸ்தானின் ஆட்டத்தைத் துவக்கலாம். ஸ்மித்திற்குப்பதிலாக சேர்க்கப்பட்டிருக்கும் ஹெண்ட்ரிக் க்ளாஸன் (Henrich Klassen) அணியின் இன்னொரு விக்கெட் கீப்பருமாவார். சாம்ஸனுடன் துவக்கத்தில் இறக்கப்படுவதற்கான வாய்ப்பு இவருக்கும் கிட்டலாம். மிடில் ஆர்டரில் கேப்டன் ரஹானே, ஜோஸ் பட்லர், ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் வலுசேர்ப்பார்கள். லோயர் ஆர்டரில் ஜோஃப்ரா ஆர்ச்சரை வேகமாக அறிமுகப்படுத்துவார்கள் எனத் தோன்றுகிறது. இவருக்குப்பின் ஷ்ரேயஸ் கோபால் அல்லது கே.கௌதம் வருவார்கள் எனத் தோன்றுகிறது. சிறந்த பௌலர்கள் அணியில் இருப்பினும், அணியின் கேப்டனாக ரஹானேயின் களவியூகம் எப்படி ராஜஸ்தானின் வெற்றிக்கு ஒத்துப்போகும் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் கடந்த வருடங்களில் காணப்பட்டதுபோல வலிமையானதுதானா என்பது பெரும் கேள்வி. துவக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய், ஷேன் வாட்ஸன் அல்லது தூ ப்ளஸீ (Faf du Plessis) இறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. ஸ்டார் இடதுகை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா 3-ஆம் இடத்திலும், அம்பத்தி ராயுடு அல்லது கேப்டன் தோனி 4-ஆவது, 5-ஆவது இடத்திலும் இறங்க வாய்ப்புள்ளது. 6-ஆவது 7-ஆவது இடங்களில் வருபவர்களுக்கு விளையாட இரண்டு மூன்று ஓவர்களே கிடைக்கும். ஆதலால் அவர்கள் பந்துகளை வீணாக்காது, வேகமாக அடித்து ஆடும் திறனுள்ளவர்களாக இருக்கவேண்டும். இந்த இடங்களில் இடம்பெறும் வீரர்களாக வெஸ்ட் இண்டீஸின் ஆல்ரவுண்டர் டுவேன் ப்ராவோ(Dwayne Bravo), ரவீந்திர ஜடேஜா அல்லது கேதார் ஜாதவ் இருக்கக்கூடும். வேகப்பந்துவீச்சுக்கு யார், யாரை நம்புவார் தோனி? இங்கிலாந்தின் மார்க் உட், டுவேன் ப்ராவோ மற்றும் ஷர்துல் டாக்குர் இந்த வேலையைச் செய்யலாம். மற்ற அணிகளோடு ஒப்பிடுகையில் சென்னையிடம் ஸ்பின்னர்கள் குறைவு. ரவீந்திர ஜடேஜா, மற்றும் தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் ஆகியோரின் திறனையே தோனி முக்கிய கட்டங்களில் நம்பவேண்டியிருக்கும். இவர்கள் அடிவாங்கினால், சென்னையும் வாங்கும்! போன வருடம் மும்பைக்கு விளையாடிய பழைய புலியான, ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் அணியில் உண்டு. அஷ்வினை ஏலத்தில் எடுக்கமுடியாத சென்னை அணி, ஹர்பஜனிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கும். அவரை அடிக்கடி இறக்க முயற்சிக்கும். அது குறிப்பிடத்தகுந்த பலனைத் தருமா என்பதை ஏப்ரல், மே மாதங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும்.

சென்னையின் முதல் சவால் இன்றே மும்பையில் காத்திருக்கிறது. லோக்கல் ஹீரோக்களான மும்பை இண்டியன்ஸ் அணி, சென்னையின் மஞ்சள் ஜெர்ஸிகளுக்குக் கடும் சோதனையைக் கொடுக்கும். ரோஹித் ஷர்மா, கரன் போலார்ட், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, பென் கட்டிங் (Ben Cutting) ஆகியோர் அணியின் பேட்டிங் பலம். பௌலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா, பேட் கம்மின்ஸ் (Pat Cummins), மெக்லெனெகன் (McClenagan), முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வேகப்பந்துவீச்சையும், க்ருனால் பாண்ட்யா, ஸ்ரீலங்காவின் அகிலா தனஞ்சயா, தென்னாப்பிரிக்காவின் ஜே.பி. டுமினி (JP Duminy) ஸ்பின்னையும் கவனித்துக்கொள்வார்கள். சென்னையைவிட மும்பை அணி குறிப்பாக பௌலிங்கில் வலிமையானதாய்த் தோன்றுகிறது. ஆனால் நடக்கப்போவது டி-20 மேட்ச். சில ஷாட்டுகளில், சில கேட்ச்சுகள், திடீர் விக்கெட்டுகளில் மேட்ச்சின் கதையே மாறிவிடும். ரோஹித்தா, தோனியா? நீலமா, மஞ்சளா ? இன்றைய இரவு சொல்லிவிடும் புதுக்கதையை.

**

க்ரிக்கெட்: இந்தியாவின் தொடர்வெற்றியும், சர்ச்சைகளும்

இரண்டு மாதங்களாக ரசிகர்களைப் பெரும் எதிர்பார்ப்பில், பேரார்வத்தில் உறையவைத்த நான்கு போட்டிகள்கொண்ட இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தரம்ஷாலாவில்(Dharamshala, Himachal Pradesh) இந்தியாவுக்கு வெற்றியாக நேற்று (28-3-17) முடிவடைந்தது. கோஹ்லி இல்லாத இந்தியா எதிர்த்துவிளையாட, எளிதில் வெற்றிகொள்ள ஏதுவாக இருக்கும் என ஆஸ்திரேலியா கணக்கிட்டிருந்தால் அது தப்புக்கணக்காக அங்கே மாறிப்போனது. தற்காலிகக் கேப்டனான அஜின்க்யா ரஹானே இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி, இந்தியாவை வெற்றிமேடையில் ஏற்றிவிட்டார். தொடர் 2-1 என்று இந்தியாவின் கணக்கில் வர, பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி (Border-Gavaskar Trophy) ஆஸ்திரேலியாவிடமிருந்து மீட்கப்பட்டது.

தரம்ஷாலா மேட்ச்சை ஜெயித்தால்தான் தொடர் என்கிற நிலையில் இரு அணிகளும் மோதின. ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் பக்கமே முள் சாய்ந்திருப்பதாய்த் தோன்றியது. காயம் காரணமாக விராட் கோஹ்லி ஆடமாட்டார் என்பதே ஸ்மித்தை ஏகமாகக் குஷிப்படுத்தியது. தொலஞ்சான்யா! டாஸையும் வென்றது ஆஸ்திரேலியா. தரம்ஷாலா பிட்ச் இதுவரை அமைந்த பிட்ச்சுகளில் அருமையானதாகத் தோன்றியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா வேகவேகமாக ரன் எடுத்தது. விக்கெட்டுகளும் விழுந்துகொண்டிருந்தன. இதுவரை தொடரில் ஃபார்ம் காண்பிக்காத டேவிட் வார்னர் அரைசதத்தைப் பூர்த்திசெய்தார். சர்ச்சைகள் ஒருபுறமிருக்க பேட்டிங்கில் பின்னி எடுத்தார் ஸ்டீவ் ஸ்மித். இன்னுமொரு சதம் இந்தத்தொடரில். 144-க்கு 1 விக்கெட் என ஆஸ்திரேலியா கம்பீரமாக முன்னேறியது.

லஞ்சுக்குப் போகுமுன்தான் ரஹானேக்கு முதன்முறையாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவின் முகம் நினைவில் வந்ததுபோலும். கொஞ்சம் போடச்சொன்னார். லஞ்ச்சில் என்ன சாப்பிட்டாரோ! குல்தீப் வெகுவாக மாறிவந்திருந்தார். அவரது சினமன்(chinaman) பந்துகள் ஆஸ்திரேலியர்களிடம் விளையாட ஆரம்பித்தன! முதலில் ஆபத்தான வார்னரைத் தூக்கி எறிந்து ஆர்ப்பரித்தார். தொடர்ந்து ஹாண்ட்ஸ்காம்ப்(Peter Handscomb), மேக்ஸ்வெல், கம்மின்ஸ் (Cummins) என ஒவ்வொருவராக குல்தீப்பின் ஜாலத்தில் சரிந்தார்கள். ஒருவழியாக 300 வந்து ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இந்தியா தனது முதல் இன்னிங்ஸை இரண்டாவது, மூன்றாவது நாட்களில் ஆடியதால் ஆஸ்திரேலிய பௌலர்களைக் கையாள்வதில் சிக்கல் எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இந்தத் தொடர் முழுதும் சிறப்பாக ஆடிவரும் கே.எல்.ராஹுல் மீண்டும் ஒரு அரைசதம் எடுத்துக் கைகொடுத்தார். அருமையாக ஆடிய புஜாராவும் அரைசதம். ஆஸ்திரேலிய ஸ்கோரை எப்படியும் தாண்டிவிட மிகவும் மெனக்கெட்டது இந்தியா. ஃபார்மில் இல்லாத கேப்டன் ரஹானே 46 எடுத்தார். பின் வந்த விக்கெட்கீப்பர் சாஹாவும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் பெரிதும் உழைத்தார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட் ஓவராக அவரைச் சீண்ட, கம்மின்ஸ் எகிறும் வேகப்பந்துகளினால் ஜடேஜாவைத் தாக்கப் போர்மூண்டது! சூடாகிவிட்ட ஜடேஜா தான் ஒரு ராஜ்புட் என்பதை வீரமாய் விளக்கினார் ! அடுத்தடுத்த கம்மின்ஸ் பந்துகளை பௌண்டரி, சிக்ஸர் எனச் சீறவிட்டு பெவிலியனில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கோஹ்லியையும், ரசிகர்களையும் குஷிப்படுத்தினார். சாஹா 31, ஜடேஜா 63 என அசத்தினர், சிறப்பாக வீசிய ஆஸ்திரேலியாவின் நேத்தன் லயனுக்கு 5 விக்கெட்டுகள். இந்தியா எடுத்த 332 ஆஸ்திரேலியாவின் மனதில் கிலியை உண்டுபண்ணியிருக்கவேண்டும்.

தொடரைக் கோட்டைவிட்டுவிடக்கூடாதே என்கிற அழுத்தத்தில் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா ஆரம்பித்தது. உமேஷ் யாதவ் வேகத்தினாலும், ரிவர்ஸ் ஸ்விங்கினாலும் ஆஸ்திரேலியர்களை அதிரவைத்தார். ரென்ஷா, வார்னர் இருவரையும் அதிரடியாக வெளியேற்றினார். நிதான ஆட்டத்திற்குப் பேர்போன ஆஸ்திரேலியக் கேப்டனை பீதி கவ்வியது. புவனேஷ்குமாரின் ஸ்விங் பௌலிங்கிற்கு உடனே பலியாகி ஆஸ்திரேலியாவின் வயிற்றில் புளியைக் கரைத்தார் ஸ்மித். மேக்ஸ்வெல்லின் அதிரடி 45-ஐத் தவிர சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. 137 ரன்களில் பரிதாபமாக இந்தியாவிடம் சரண் அடைந்தது ஆஸ்திரேலியா. இந்திய பௌலர்களின் உத்வேகப்பந்துவீச்சு மிகவும் பாராட்டுக்குரியது. உமேஷ், ஜடேஜா மற்றும் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ரன் அதிகமாகக் கொடுத்துவிடக்கூடும் என்கிற பயத்தில் ரஹானே அவருக்கு ஐந்து ஓவருக்குமேல் தரவில்லை.

இந்தியாவுக்கு இலக்கு 106. இத்தகைய சிறிய இலக்குகள் 4-ஆவது நாளில் பெரும் ப்ரச்சினையை பேட்டிங் அணிக்குத் தரவல்லது. இதுவோ இறுதிப் போட்டி. தொடரின் தலையெழுத்தை நிறுவப்போவது. எனவே இந்தியா இலக்கை நோக்கி வழிமேல் விழிவைத்து நகர்ந்தது. இருந்தும் முரளி விஜய் தடுமாறி கம்மின்ஸிடம் வீழ, அதே ஓவரில் இந்தியாவின் Mr.Dependable-ஆன புஜாரா ரன்–அவுட் ஆகிவிட, 46-க்கு இரண்டு விக்கெட்டுகள்; இந்தியாவுக்குத் தலைவலி ஆரம்பித்துவிட்டதோ எனத் தோன்றியது, ஆனால் ராஹுல் தன் நிதானத்தை இழக்காது ரன் சேர்த்துக்கொண்டிருந்தார். அவருடன் ஜோடிசேர்ந்த ரஹானேயை முகத்துக்கெதிரே எகிறும் வேகப்பந்துகளினால் மிரட்டப் பார்த்தார் கம்மின்ஸ். ஆனால் தடுத்தாடி, தடுமாறிவிழும் மனநிலையில் ரஹானே இல்லை. கம்மின்ஸின் எகிறும் பந்துகளை விறுவிறு பௌண்டரிகளாக மாற்றினார். போதாக்குறைக்கு, கம்மின்ஸின் 146 கி.மீ. வேகப்பந்தொன்றை மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு அனுப்பி ரசிகர்களுக்கு போதையூட்டினார் ஒல்லி உடம்பு ரஹானே! ஆஸ்திரேலியா நிலைகுலைந்தது. இந்தத் தொடர் நமக்கில்லை என்று அதற்குப் புரிந்துவிட்டது. ராஹுல் தன் ஆறாவது அரைசதத்தைப் பூர்த்திசெய்து வெற்றி ரன்களையும் எடுத்தவுடன், மைதானத்தில் ஆட்டம் ஆடி, கோஹ்லி அங்கில்லாத குறையை ரசிகர்களுக்காக நிவர்த்தி செய்தார். வெற்றிக்கு அடையாளமாக ஒரு ஸ்டம்ப்பை மட்டும் பிடுங்கி எடுத்துக்கொண்டு அமைதியாக நடந்தார் அஜின்க்யா ரஹானே. இளம் ரசிகர்களின் கூச்சல், ஆரவாரத்தில் தரம்ஷாலா அதிர்ந்து எழுந்தது. கோஹ்லி மைதானத்துக்குள் ப்ரவேசித்து வீரர்களோடு கைகுலுக்கி மகிழ்ந்தார். தொடரின் விதியை நிர்ணயித்த தரம்ஷாலா மேட்ச்சில் ரஹானே காட்டிய அமைதியான ஆனால் அழுத்தமான தலைமை மறக்க இயலாதது.

இத்தொடர் பற்றிய முதல் கட்டுரையில் நான் கூறியபடி இது ஒரு அபாரத் தொடராக நடந்துமுடிந்தது. இருதரப்பிலிருந்தும் அபரிமித ஆட்டத் திறமைகளின் வெளிப்பாடுகள், மைதானத்துக்குள்ளும் வெளியேயும் அதிரடிச் சச்சரவுகள் என ரசிகர்களையும், விமர்சகர்களையும் இறுதிவரை சீட்டின் நுனியில் வைத்திருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்மித்தின் DRS தப்பாட்டம்பற்றி பெங்களூரில் விராட் கோஹ்லி வீசிய குண்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும், ஏன் ஐசிசி-யையும்கூட அதிரவைத்தது. பதிலாக, தன் மூளை ஒருகணம் மழுங்கிவிட்டதாகவும் அது தவறுதான் என்றும் ஸ்மித் வழிந்த கோலாகலக் காட்சி அரங்கேறியது! ஹேண்ட்ஸ்காம்ப் தனக்கு DRS-பற்றி சரியாகத் தெரிந்திருக்கவில்லை எனத் தன் கேப்டனோடு ஒத்து ஊதி ஹாஸ்யத்தை அதிகப்படுத்தினார். இந்தியக் கிரிக்கெட் வாரியம் வீடியோ ரெகார்டிங்கோடு ஸ்மித்திற்கு எதிராக ஐசிசி-யிடம் குற்றம்சாட்டப்போய், திக்குமுக்காடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் இந்தியாவிடம் உடனடியாகப்பேசி சமரசம் செய்துகொள்ளுமாறு நேர்ந்தது. விவ் ரிச்சர்ட்ஸ், டேல் ஸ்டெய்ன், டூ ப்ளஸீ ஆகியோரிடம் தனது ஆவேச அதிரடிகளுக்காகப் பாராட்டுப்பெற்றார் கோஹ்லி. நேர்மாறாக, ஆஸ்திரேலியா மீடியா விராட் கோஹ்லியை அவமதிப்பதில், குறைசொல்வதில் முனைப்பு காட்டியது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியவீரர்களை மைதானத்தில் வார்த்தைகளால் சீண்டுவது, பழித்துக்காட்டுவது கடைசிப் போட்டிவரை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தோல்விபயம் தங்களைப் பற்றிக்கொள்ள என்ன செய்வதெனத் தெரியாதுவிழித்த ஸ்மித் குழுவினர் எப்பாடுபட்டாகிலும் இந்தியர்களின் ஆட்டகவனத்தைக் குலைக்க முற்பட்டனர். விளைவு தரம்ஷாலாவின் இந்திய முதல் இன்னிங்ஸில் ஜடேஜாவின் அபார பேட்டிங்கின்போது ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் மேத்யூ வேட் (Mathew Wade) விஷம வார்த்தைகளினால் ஜடேஜாவின் கவனம் கலைக்கமுயன்றது, முரளிவிஜய்யின் லோ-கேட்ச் அனுமதிக்கப்படாதபோது பெவிலியனில் உட்கார்ந்திருந்த ஸ்மித் விஜய்யை கெட்டவார்த்தைகளால் திட்டி, டெலிவிஷன் கேமராவில் சிக்கியது என ஒரே ரணகளம். தொடரின் இறுதியில் தன்னுடைய சில நடத்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டார் ஸ்மித். ’‘ஆஸ்திரேலிய வீரர்கள் எனது நண்பர்கள் என ஆரம்பத்தில் நான் சொன்னது உண்மைதான். ஆனால் அது இப்போது மாறிவிட்டது; இனி நான் அப்படிச்சொல்வதை நீங்கள் கேட்க வாய்ப்பில்லை !’’ என்று மனதில் உள்ளதைப் போட்டுடைத்தார் கோஹ்லி. மொத்தத்தில் பெரும் ஆர்வத்தை உலகெங்குமுள்ள க்ரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள், நிபுணர்களிடையே கிளர்ந்தெழவைத்த டெஸ்ட் தொடர் இது. Most riveting Test series ever played in recent times.

2016-17 க்ரிக்கெட் சீஸன் இந்தியாவுக்கு இனிதாக முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் விராட் கோஹ்லி, முரளி விஜய், கே.எல்.ராஹுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 6 அரைசதங்களை எடுத்து அசத்தினார்கள். கோஹ்லி 3 இரட்டை சதங்களையும், புஜாரா ஒரு இரட்டை சதத்தையும் விளாசி முத்திரை பதித்தனர். இங்கிலாந்துக்கெதிராக சென்னையில் கருண் நாயர் அடித்த முச்சதமும் இந்த சீஸனின் மகத்தான அம்சங்களில் ஒன்று. பௌலிங்கில் உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜாவின் பங்களிப்பு மகத்தானது. தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜா முதன்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தைப்பெற்றுள்ளார். அஷ்வினுக்கு இரண்டு ஐசிசி விருதுகள். இந்திய அணி அபாரமாக டெஸ்ட்டுகளை ஆடி 4 தொடர்களைக் கைப்பற்றிய காலமாக இது பேசப்படும். இனி வெளிநாட்டு மைதானங்களிலும் தன் திறமை காட்ட இது அணியினை உற்சாகப்படுத்தும். எனினும், அதற்கு இன்னும் நாளிருக்கிறது. அதற்குள் கொஞ்சம் ஐபிஎல் ஆடலாம் !

**

உலகக்கோப்பை : இந்தியாவை நிறுத்திய வெஸ்ட் இண்டீஸ் !

இந்தியாவின் உலகக்கோப்பைக் கனவை வெஸ்ட் இண்டீஸ் நேற்று (31-3-16) தகர்த்துவிட்டது. மும்பையில் நடந்த கடுமையான செமி ஃபைனல் போட்டியில் இந்தியாவின் 192-என்கிற ஸ்கோரை அனாயாசமாகத் தாண்டி, ஃபைனலில் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்.

க்றிஸ் கேய்ல் vs விராட் கோஹ்லி, அஷ்வின் vs சாமுவேல் பத்ரீ என்றெல்லாம் ரசிகர்கள் கற்பனை செய்திருந்தார்கள். கதை எப்படியோ ஆரம்பித்து எங்கேயோ முடிந்தது. Typical T-20 !

முக்கியமான டாஸைத் தோற்ற இந்தியா, முதல் பேட்டிங் செய்யவேண்டியிருந்தது. ஆனால் ஆச்சரியமாக ரோஹித் ஷர்மா விழித்திருந்தார். முதல் 6 ஓவர் பவர்-ப்ளேயில் ரோஹித்தின் அட்டகாசம்! 3 பௌண்டரி, 3 சிக்ஸர். 31 பந்துகளில் 43 ரன்கள்.சாமுவேல் பத்ரீயிடம் ரோஹித் விழுந்தவுடன் இறங்கினார் கோஹ்லி. கோஹ்லியும், ஷிகர் தவனுக்கு பதிலாக இறங்கியிருந்த ரஹானேயும் பொறுப்புடன் ஓடி, அவ்வபோது பௌண்டரி ஆடி ரன் சேர்த்தனர். ர்ஹானே 40 ரன்களில் அவுட்டாக, தோனி இறங்கி கோஹ்லியுடன் சேர்ந்து ஆடினார். டெத்-ஓவர்களில்(death-overs) கோஹ்லி 16 பந்துகளில் 45 ரன் விளாசினார். 47 பந்துகளில் 89 நாட்-அவுட். ஒரே ஒரு சிக்ஸர்! Masterclass. இந்தியா 192-ஐத் தொட்டது.

பொதுவாக ரன்கள் குவியும் மும்பை மைதானத்தில் 192 என்பது நல்லதொரு ஸ்கோர்தான். ஆனால் இந்தியாவின் பௌலிங்கும் ஃபீல்டிங்கும் மிகக் கறாராக இருந்திருக்கவேண்டும். அதிரடி வெஸ்ட் இண்டீஸை அடக்குவது கஷ்டம். க்றிஸ் கேய்லை குறிவைத்த இந்தியா இரண்டாவது ஓவரில் அவரைச் சாய்த்தது. ஜஸ்பிரித் பும்ரா தன் யார்க்கரால் அவரை க்ளீன்-போல்ட்(clean-bowled) செய்து ரசிகர்களைக் குதிக்க வைத்தார். ஆனால் இன்னொரு ஓபனரான சார்ல்ஸ் ஜான்சன் சிறப்பாக ஆடினார். 3-ஆவதாக இறங்கிய சாமுவேல்ஸ் விரைவிலேயே வீழ்ந்தார். இந்தியர்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை. அடுத்து வந்தவர்தான் இந்தியாவுக்கு சனியனாக மாறினார். லெண்டல் சிம்மன்ஸ் (Lendl Simmons). ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதே பிட்ச்சில் ஐபிஎல். ஆடிய அனுபவம் உண்டு. மும்பை என்றால் அவருக்கு வெல்லக்கட்டி! கேய்ல் செய்யவேண்டிய வேலையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார் இந்திய பௌலிங்கை துவம்சம் செய்ய ஆரம்பித்தார் சிம்மன்ஸ். சார்ல்ஸ் ஜான்சனும் சேர்ந்துகொண்டார். Effortless pulls and fiery hooks. பௌண்டரிகளும், சிக்ஸர்களும் பறக்க ஆரம்பித்தன. இந்திய ஃபீல்டர்கள் தடுமாறினர். தோனியின் தலைவேதனை ஆரம்பித்தது.

இக்கட்டான இந்த நிலையில் அஷ்வின் பந்துபோட்டார். அவருடைய முதல் ஓவரிலேயே சிம்மன்ஸ் விழுந்திருக்கவேண்டும். ஆஃப் சைடில் ப்ரமாதமாக லோ-கேட்ச் பிடித்தார் பும்ரா. அம்பயரின் செக்-அப்பில் அது நோ-பால் எனத் தெரிந்தது! ஸ்பின்னரான அஷ்வினிடமிருந்து மேட்ச்சின் ஒரு முக்கியமான தருணத்தில் விக்கெட் எடுத்த பந்து நோ-பால்! தோனியின் முகத்தில் ஈயாடவில்லை. அப்போதே பிடித்தது அனர்த்தம். துரதிருஷ்டத்தின் கோணல் வாய், இந்தியாவைப் பார்த்துச் சிரித்தது.

ஆஷிஷ் நேஹ்ரா மட்டுமே சிக்கனமாக பந்துபோட்டார். கோஹ்லிக்கு ஓவர் கிடைக்க முதல் பந்திலேயே ஜான்சனை வீழ்த்தினார்! மிடில்-ஓவர்களை வீசிய ஜடேஜா செம்மையாக அடி வாங்கினார். ஹர்தீக் பாண்ட்யா ஷார்ட் பிட்ச் பந்துகளைத் தெளித்தார். சிம்மன்ஸும் ஆந்த்ரே ரஸ்ஸலும் அட்டகாசமாக ஆடினர். ஸ்கோர் சீறியது. பாண்ட்யாவின் கடைசி ஒவரின்(15), கடைசி பந்தில் அஷ்வினின் ஷார்ப் கேட்ச். விக்கெட் விழுந்தது – அதாவது, அப்படி நினைத்து ரசிகர்கள் எம்பிக் குதித்தார்கள். ஆனால் அதுவும் ஒரு நோ-பால்! செமி-ஃபைனலில் பௌலிங் இப்படி இருந்தால், நாம் ஃபைனலுக்குப் போக ஆசைப்படலாமா?

நம்பிக்கை போய்விட்டது. வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்க 20 ரன்கள். வேறுவழியின்றி, 19 ஓவரை ஜடேஜாவிடம் தோனி கொடுக்க, சிம்மன்ஸ், ரஸ்ஸல் ஆவேசம் காட்டினர். கடைசி ஓவர். 8 ரன்கள். அஷ்வினுக்கு ஓவர் தரப்பட்டிருக்க வேண்டும். ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக கோஹ்லியிடம் தந்தார் தோனி. அவர் என்ன செய்வார், பாவம்! அவர் ஒரு ரெகுலர் பௌலர் கூட இல்லை. விண்ணை முட்டிய சிக்ஸரில், இந்தியாவின் கதையை முடித்தார் ரஸ்ஸல். 7 பௌண்டரி, 5 சிக்ஸர்களுடன் நாட்-அவுட்டாக இருந்தார் சிம்மன்ஸ். ரஸ்ஸல் 20 பந்துகளில் 43 நாட்-அவுட். India – simply outplayed and outsmarted by the West Indies.

ஏப்ரல் 3-ஆம் தேதி கல்கத்தா ஃபைனலில், இங்கிலாந்தை சந்திக்கிறது வெஸ்ட் இண்டீஸ். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை உருவாக்கிய, கிரிக்கெட்டை உயிர்நாதமாகக் கொண்ட சிறு கரீபிய நாடுகள்(Carribean countries) குதூகலித்து மகிழும். எண்ணற்ற வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் பீர் அடிப்பார்கள். பாடுவார்கள். ஆடி மகிழ்வார்கள். வாழ்த்துவோம்!

**

இந்தியாவின் அபார கிரிக்கெட் வெற்றி (India-SA)

டெல்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா (Feroz Shah Kotla) மைதானத்தில் சுவாரஸ்யமான ஒரு கிரிக்கெட் போட்டி நேற்று (7-12-2015)முடிவுகண்டது. டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின் 5-ஆவது நாளன்று, உலகின் நம்பர் 1 அணியான தென்னாப்பிரிக்காவை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் அபரிமித சந்தோஷம் புரிந்துகொள்ளக்கூடியதே. ஒருநாள் தொடர், டி-20 போட்டிகளில் இந்தியாவை எளிதில் சாய்த்துப்போட்ட தென்னாப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரில் இவ்வளவு தடுமாறும், சிதறும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தியாவை இந்திய மண்ணிலேயே வீழ்த்துவதென்பது எந்த ஒரு வெளிநாட்டு அணிக்கும் பெரிய சவால்தான். (கடந்த வருடம்தான் வலிமையான ஆஸ்திரேலிய அணி 0-4 என டெஸ்ட் தொடரை இந்தியாவிடம் தோற்று, தொங்கிய முகத்துடன் வெளியேறினார்கள்).

டி வில்லியர்ஸ்(de Villiers), ஹஷிம் ஆம்லா, ஃபாஃப் டூப்ளஸீ (Faf du Plessi), ஜே.பி.டூமினி (JP Duminy) போன்ற, ஸ்பின் பௌலிங்கிற்கு எதிராக நன்றாக விளையாடக் கூடியவர்களைக்கொண்ட அணி இது. விக்கெட்கீப்பர் விலாஸ், டேன் பீட்(Dane Piedt), வான் ஸில்(Van Zyl) போன்ற அனுபவமற்ற புதியவர்களும் தென்னாப்பிரிக்க அணியில் இருந்தார்கள். மொஹாலியில் தோற்றபின் பெங்களூரில் அவர்கள் நன்றாக விளையாடியிருக்கலாம். ஆனால் வருண பகவான் பெங்களூர் போட்டியை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டார். நாக்பூரின் மந்தமான பிட்ச் தென்னாப்பிரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. மனதில் அதைரியம். பயந்து கொண்டே இந்திய சுழல்பந்துவீச்சை சந்தித்தார்கள். விளைவு படுமோசமாக ஆனது. பிட்ச் ஸ்பின்னுக்குத் துணைபோன நிலையில் ஜடேஜாவும், அஷ்வினும் விஸ்வரூபம் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசியும் கதை நடக்கவில்லை. டி வில்லியர்ஸ் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தும், துவக்க வீரர்கள், கேப்டன் ஆம்லா, டூ ப்ளஸீ, டூமினி ஆகியோரின் தடுமாற்றத்தினால், தென்னாப்பிரிக்கா 3-ஆவது நாளிலேயே ஆட்டத்தைப் பறிகொடுத்தது.

டெல்லியிலோ, பிட்ச் வேகப்பந்துவீச்சு, ஸ்பின் இரண்டிற்கும் வசதியாக அமைந்தது. பேட்ஸ்மன்கள் முனைப்புடன் நிலைத்து ஆடவும் வழிசெய்தது. அஜின்க்யா ரஹானேயின் 127, அஷ்வினின் 56 எனச் சேர்த்து, முதல் இன்னிங்ஸில் இந்தியா 334-ஐ எட்டியது. தனது முதல் இன்னிங்ஸை தென்னாப்பிரிக்க அணி வெகு ஜாக்ரதையாகத்தான் ஆட ஆரம்பித்தது. இந்தப் பிட்ச்சிலும் எந்தப் பேய், பிசாசு அவர்கள் கண்ணில் பட்டதோ தெரியவில்லை; ஜடேஜா, அஷ்வின், யாதவ்-போன்றோரின் துல்லியமான பந்துவீச்சிற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல், 121-ல் ஆல் அவுட் ஆகி சோர்ந்துபோனது.

இந்தியா எளிதாக தென்னாப்பிரிக்காவுக்கு ஃபாலோ-ஆன்(follow-on)கொடுத்திருக்கலாம். ஆம்லாவை சங்கடப்படுத்த கோஹ்லி விரும்பவில்லை போலும். இந்தியா 2-ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. முரளி விஜய் தவறாக அவுட் கொடுக்கப்பட, தவண், ரோஹித் ஆகியோர் நிலைக்கவில்லை. ஆனால் இந்தப் பிட்சில் ஒரு ஆபத்தும் இல்லை என நிரூபித்தார் ரஹானே. கோஹ்லியுடன் சேர்ந்து அருமையாக ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி, 88-ல் அவுட் ஆனார். ரஹானேயின் ஸ்கோர் 100-ஐ எட்டியவுடன், கோஹ்லி இந்திய இன்னிங்ஸை 267க்கு 5 விக்கெட் என டிக்ளேர்(declare) செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டின் அருமையான விஷயங்களில் சில, இந்த `இன்னிங்ஸ் டிக்ளரேஷன்` (Innings declaration), `ஃபால்லோ-ஆன்` (follow-on) ஆகியவை !

வெற்றிக்கு 480 ரன் என்கிற ஹிமாலய இலக்குடன், தென்னாப்பிரிக்கா தனது இறுதி இன்னிங்ஸை ஆடியது. இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா முதன் முறையாக சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக கேப்டன் ஆம்லாவும், டி வில்லியர்ஸும் 5 மணிநேரத்திற்கும் மேலாகக் கட்டை போட்டு விளையாடினார்கள். இந்திய பௌலர்கள் மெய்டனுக்குமேல் மெய்டன் ஓவராக வீசிச் சலித்துக்கொண்டார்கள். ஆம்லாவை ஒருவழியாக ஜடேஜா தூக்கியபின், டூப்ளஸீ வந்தார். இரண்டு மணிநேரம் கடுமையான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு, டிவில்லியர்ஸுடன் சேர்ந்து உழைத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு இறுதி டெஸ்ட்டில் எப்படியாவது `டிரா` வாங்கித்தர, இந்த மூவரும் கடுமையாக முயன்றனர். தேனீர் இடைவேளையின்போது 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா.

மிச்சமிருக்கும் 2 மணிநேர ஆட்டத்தை எப்படியாவது கட்டைபோட்டுக் காப்பாற்றிவிடுவார்கள், இந்தியாவை ஜெயிக்கவிடமாட்டார்கள் எனத் தோன்ற ஆரம்பித்தது. கோஹ்லியின் முகத்தில் சிந்தனைக்கோடுகள்.
தேனீர் இடைவேளைக்குப்பின் ஆடவந்த தென்னாப்பிரிக்காவுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. இதுவரை அருமையாக வேகப்பந்து வீசிய உமேஷ் யாதவ், அடுத்தடுத்த ஓவர்களில், விலாஸையும், ஆபோட்டையும்(Abbot) க்ளீன் போல்ட் செய்துவிட்டார். தென்னாப்பிரிக்காவின் சக்கரங்கள் கழன்றுகொள்ள ஆரம்பித்தன. அஷ்வின் மறுமுனையில் பிரமாதமாக வீசி, நவீன கிரிக்கெட்டின் அதிரடி ஆட்டக்காரரும், தென்னாப்பிரிக்காவின் எதிர்ப்புத் தூணுமான டி வில்லியர்ஸின் விக்கெட்டைச் சாய்த்து, இந்திய அணியின் பேட்டரியைச் சார்ஜ் செய்தார். அடுத்து வந்தவர்கள் அதிர்ந்துபோய் ஓட்டமெடுக்க, இந்தியா, தென்னாப்பிரிக்காவை 143 ரன்களுக்குள் சுருட்டித் தூக்கி எறிந்தது.

337 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி, டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் மிகப் பெரிய வெற்றியாகும். அணியின் கடுமையான உழைப்பு, முனைப்புக்குக் கிடைத்த வெற்றி இது. தொடரில், முரளி விஜய், ரஹானே, புஜாரா, கோஹ்லி ஆகிய பேட்ஸ்மன்கள், அஷ்வின், ஜடேஜா, மிஷ்ரா ஆகிய பௌலர்களின் சிறப்பான பங்களிப்பு இந்தியாவிற்குப் புத்துணர்ச்சி ஊட்டியது. கோஹ்லியின் தலைமையும் பாராட்டத்தக்க வகையில் அமைந்தது. ஆட்ட நாயகனாக, இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த அஜின்க்யா ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்நாயகன் விருது, 31 தென்னாப்பிரிக்க விக்கெட்டுகளைச் சாய்த்த அஷ்வினுக்குக் கிடைத்தது. முதலாவது காந்தி-மண்டேலா Freedom Cup-ஐ கோஹ்லியின் தலைமையில் இந்தியா தட்டிச் சென்றது.

சென்னை வெள்ள நெருக்கடியில், தங்கள் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்களோ என்கிற மன உளைச்சல் நிலையிலும், தமிழக வீரர்களான முரளி விஜய், அஷ்வின் ஆகியோர் டெல்லி டெஸ்ட்டில் நாட்டிற்காக முனைப்புடன் ஆடியதை, கேப்டன் கோஹ்லி நேர்காணலில் பெருமையாகக் குறிப்பிட்டார், கோப்பையை வென்ற கேப்டனும், விருது வென்ற வீரர்கள் ரஹானே, அஷ்வின் ஆகியோரும், தங்கள் வெற்றி/விருதுகளை, சென்னையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணித்துப் பேசியது, ட்விட்டரில் எழுதியது நெகிழவைத்தது.

**