Melukote temples – மலைமேலமர்ந்து யோகம் செய்யும் ஸ்வாமி

மேலக்கோட்டை பயணம் – இறுதிப் பகுதி

‘ஒரு கொடியவிலங்காய் கதிகலங்கவைத்து, உறுமி ஆர்ப்பரித்து மலைப்பிரதேசங்களில் அலைபவன் !’ என்கிறது ரிக்வேதம். யாரைப்பற்றி இப்படி ஒரு வர்ணனை? மகாவிஷ்ணுவைப்பற்றி. விஷ்ணுவா? அவர் சாந்த ஸ்வரூபன், ஆபத்பாந்தவன், காக்கும் கடவுளாயிற்றே! இந்தக் கடுமையான வர்ணனை அவரைப்பற்றியா? ஆம், மகாவிஷ்ணுவின் நரசிம்ஹ அவதாரக் காட்சியை இப்படிக் குறிப்பிடுகிறது ரிக்வேதம், இதுவன்றி, பிரும்ஹ புராணம், வாயு புராணம், அக்னி புராணம், சிவபுராணம், லிங்க புராணம், ஸ்கந்த புராணம் போன்றவைகளும் நரசிம்ஹ அவதாரத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. அதர்வணவேதத்தில் வரும் நரசிம்ஹ தபனி உபநிஷதம், கோபால தபனி உபனிஷதம் ஆகியற்றிலும் நரசிம்ஹ அவதாரம் குறிப்பிடப்படுகிறது. தபனி (Tapani –austerity) என்பது இங்கு ஒரு சன்னியாசியின் அகத்தூய்மை, புலனடக்கம் பற்றியது. இவற்றின் துணையுடன் ஒரு துறவி நரசிம்ஹமாகிய பரப்பிரும்ஹத்தில் தன்னை முழுமையாகச் சரணடையச் செய்வது, முற்றிலுமாகக் கரைப்பது என்றாகிறது.

Yoga Narasimha Swamy Temple, Melukote

வேதபுராணங்கள் இப்படியெல்லாம் குறிப்பிடமுயலும் நரசிம்ஹ ஸ்வாமி மேலக்கோட்டையில் திருநாராயணர் கோவிலுக்கருகிலேயே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடிக்கும் மேலாக உயர்ந்து நிற்கும் ஒரு குன்றின் மேல் எழிலாகக் காலங்காலமாய் அமர்ந்திருக்கிறார். யோகநரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் இந்தியாவின் மிகவும் ப்ரசித்திபெற்ற நரசிம்ஹர் கோவில்களில் ஒன்று. காலை 9 மணியிலிருந்து 1 மணிவரை, மாலை 5.30-யிலிருந்து 8 வரை பக்தர்களுக்காகத் திறந்திருக்கிறது. வருடாந்திர நரசிம்ஹ ஜெயந்தியன்று விசேஷ பூஜை உண்டு.

அடிவாரத்திலிருந்து மலையின் மேல் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை கார் செல்ல சாலை இருந்தது. அதுவரை சென்று மற்ற வண்டிகளுடன் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு மேலே பார்த்தோம். மலைப்பாக இருந்தது. இவ்வளவு உயரம் ஏறிவிடமுடியுமா? வெறுங்காலோடு பக்தர்கள் முன்னேறுவதைப் பார்த்து, ‘செருப்புகளைக் காரில போட்றுங்க சார்!’’ என்றார் ஓட்டுனர். அப்படியே செய்தோம். சாலையிலிருந்து கோவிலுக்கான அடிவாரப் படிகளை நெருங்குவதற்குள்ளேயே சாலையில் கிடந்த பொடிக்கற்கள் பாதங்களைக் கடும் சோதனைக்குள்ளாக்கின. வீட்டிலேயே ஹவாய் சப்பல்களுடன் பழக்கப்பட்ட பாதங்கள், கட்டாந்தரைக்கும் கற்களுக்கும் வருஷக்கணக்கில் அந்நியப்பட்டிருந்ததுதான் காரணம். பாதசுகத்தைப் பார்த்திருந்தால் பகவான் தரிசனம் தருவானா? அந்தக்காலத்தில் ஆழ்வார்களெல்லாம் வெறுங்காலோடும், வெறும் வயிற்றோடும் அல்லவா ஒவ்வொரு தலமாக அலைந்தார்கள் ?

படிகளில் கால்வைக்குமுன் கோவிலின் திவ்ய சரித்திரத்தை கொஞ்சம் நோட்டம் விடலாமா? மேலக்கோட்டை யோகநரசிம்ஹ ஸ்வாமி திருக்கோவில் இருக்கிறதே, அது பழையது, பழையது அத்தனைப் பழையது. புராணங்களிலும் இதனைப்பற்றிய குறிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த யோகநரசிம்ஹர் சாக்ஷாத் பிரஹலாதனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம். பிற்காலத்தில் ஹோய்சல அரசர்கள் இந்தக் கோவிலை புனரமைத்துக் கட்டினார்கள். நாம் இப்போது பார்ப்பது அவர்களது கட்டிடக் கலைநுட்பம் கலந்து காட்சியளிக்கும் அழகுக்கோவில்தான். மைசூர் மகாராஜாக்களின் வம்சத்தில் வந்த மூன்றாவது கிருஷ்ணராஜ உடையார் இந்த நரசிம்ஹப்பெருமானுக்குத் தங்கக் கிரீடம் உபயம் செய்து வணங்கியிருக்கிறார். திப்பு சுல்தானால் வழங்கப்பட்ட பெரிய தப்பு (பறை- drum) ஒன்றும் இந்தக் கோவிலில் உள்ளது.

தற்காலக் கதை கொஞ்சம்: மேலக்கோட்டையில் ISKCON அமைப்பு, வேத உபதேசத்திற்காக ஒரு பள்ளியை ஆரம்பித்து நடத்திவருகிறது. இது தன் கோஷாலாவில் 6 பசுக்களை வளர்க்கிறது. இவைதரும் பால் தினமும் யோகநரசிம்ஹரின் அபிஷேகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது.

பழங்காலத்தில் நம்மை பயணிக்க அழைக்கும் கோவிலின் படிகள் கரடு, முரடாக, கோணல்மாணலாக அமைந்திருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு 15-20 படி தாண்டியவுடன் நிற்பதற்கு கொஞ்சம் விஸ்தாரமான அகன்ற கடப்பைக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன; வயோதிக, மற்றும் கால் ப்ரச்னைகளோடு படியேறும் பக்தர்கள் சற்றே உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள வலதுபுறமாகக் கல்லிலேயே பெஞ்சுபோல் அமைத்துக் கட்டியிருந்தார்கள் அந்தக்காலத்து மனிதர்கள். படி ஏறிபவர்களுக்கு களைப்பு ஏற்படாதிருக்க, தாகம் தீர்க்கவென படிகளின் இரு பக்கங்களிலும் பெண்கள் மோர் விற்றுக்கொண்டு அமர்ந்திருந்ததைக் காணமுடிந்தது. அந்தக்காலத்து நல்ல பழக்கங்கள் சில இன்னும் மாறாதிருப்பதில் ஒரு திருப்தி.

முதலில் மலைப்பு ஏற்பட்டாலும், படிகளில் கால்வைத்து ஏற ஏற எப்படியும் மேலே கோவிலுக்குள் நுழைந்துவிடலாம் என்கிற நம்பிக்கையை நரசிம்ஹ ஸ்வாமி மனதில் விதைத்துக்கொண்டே இருந்தார். வயதான பெண்கள், சில ஆண்கள், இளம் வயதினர் என ஒரு சிறுகூட்டம் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. ஆங்காங்கே மற்றவர்களுக்கு வழிவிட்டு சற்று நின்று, மெதுவாக ஏறினோம். மொத்தம் 300 படிகள். சில இடங்களில் 45 டிகிரி கோணத்தில் ஏறுவதற்கு வசதியாகவும், வேறு சில இடங்களில் சற்றே செங்குத்தாகவும் இருந்து எங்களைக் கொஞ்சம் சோதித்து மேலனுப்பிவைத்தன படிகள். 270-280 படிகள் கடந்தவுடன் ஒரு நுழைவு வாசல் காலத்தைத் தாண்டியதாய் நின்றது. அங்கே இடதுபுறத்தில் ஒரு சிறிய ஆஞ்சனேயர் பக்தர்களைச் சற்றே இளைப்பாறவைத்து தன்னை வணங்கவைத்து அனுப்பினார். அவரை சிலநிமிடங்கள் வணங்கிவிட்டு வளைந்து மேலேறும் படிகளில் தொடர்ந்து ஏறினோம் . இதோ வந்துவிட்டது நரசிம்ஹர் கோவிலின் முகப்பு. மலைப்பு, களைப்பெல்லாம் போன இடம் தெரியவில்லை. உற்சாகமாக நுழைந்தோம் கோவிலுக்குள்.

காலங்காலமாய் எத்தனை எத்தனை ராஜாக்கள், ராணிகள், துறவிகள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து யோகநரசிம்ஹ ஸ்வாமியை வணங்கியிருப்பர்? அத்தகையை யுகாந்திரப் பெருமை வாய்ந்த ஒரு கோவிலுக்குள் நுழைகிறோம் என்கிற எண்ணம் ஒரு பெரும் வியப்பும், ஆச்சரியமுமாய் மனதை நிறைத்தது. கூட்டம் அதிகமில்லை . காலை 11 மணியைத் தாண்டி இருக்கும். நிதானமாக உள்ளே சென்று இடதுபுறம் திரும்பி கர்ப்பகிருஹத்தை வந்தடைந்தோம். எதிரே, துறுதுறு கண்களுடன் யோகப்பட்டை அணிந்து அமர்ந்தகோலத்தில் யோகநரசிம்ஹரின் கம்பீரக் காட்சி. இரண்டு அர்ச்சகர்கள் பக்தர்களைக் கவனித்துக்கொள்ள நின்றிருந்தார்கள். ஒருவரிடம் கொண்டுவந்திருந்த தேங்காய், பழத்தைக்கொடுத்து நைவேத்தியம் செய்யச் சொன்னோம். வாங்கியவர் வலதுபுற மூலைக்குச் சென்று தேங்காயை உடைத்து வாழைப்பழம், தேங்காயை யோகநரசிம்ஹருக்குக் காட்டிவிட்டு நொடியில் எங்களிடம் கொடுத்துவிட்டார். எந்த ஃப்ளைட்டைப் பிடிக்கவேண்டியிருந்ததோ அவருக்கு. ஒரு அர்ச்சனை இல்லை, மந்திரமோ, ஸ்லோகமோ முணுமுணுக்கக்கூட இல்லை. இங்கே கன்னடக் கோவில்களில் இப்படித்தான் வழக்க்மோ? தீர்த்த வட்டிலைப் பார்த்தோம். கையை நீட்டினோம். எங்களோடு நின்றுகொண்டிருந்த 10-12 பக்தர்களும் சாமியைக் கும்பிட்டு கை நீட்டினார்கள். நல்லவேளை. தீர்த்தம் கிடைத்தது. கூடவே துளசியும். மீண்டும் ஒருமுறை ஆசையோடு நரசிம்ஹரைப் பார்த்து நமஸ்கரித்து பிரஹாரத்தை நிதானகதியில் சுற்றிவந்தோம்.. இவ்வளவு பிரசித்திபெற்ற அருள்மிகு ஆண்டவனின் திருக்கோவிலைவிட்டு அவ்வளவு விரைவில் விலகிவிட மனம் வருமா! மற்றவர்களுக்கும் இப்படித்தான் தோன்றித்தோ என்னவோ, அவர்களும் மெதுவாகப் பார்த்துக்கொண்டே வந்தார்கள்.

இப்படி பிரகாரச்சுற்று முடியும் தருவாயில் சுவற்றில் ஏதோ பளபளத்தது. பார்த்தால் திருமாலின் பத்து அவதாரங்கள் வரையப்பட்டு நடுவில் பிரதானமாய் யோகநரசிம்ஹர் பித்தளைத் தகட்டில் ஜொலித்துக்கொண்டிருந்தார். என் மகளிடம் ’உன் RedMi-யின் கேமராவினால் ஒரு தட்டுத் தட்டிவிடு!’ என்றேன். யாராகிலும் தடை சொல்வார்கள் அல்லது திட்டுவார்கள் என்று தயங்கினாள். ’கோவிலிலிருந்து வெளிவரும் நிலையில் பிரகாரச்சுவரில்தான் இருக்கிறது சும்மா எடு. ஒன்றும் ஆகாது!’ என்றேன். அவசரமாக மொபைலை நரசிம்ஹஸ்வாமியின் முன்னே ஒருகணம் காண்பித்து லாவகமாக க்ளிக்கிவிட்டுத் வேகமாகத் திரும்பினாள். நரசிம்ஹரைத் தவிர வேறு யாரும் கவனித்ததாகக்கூடத் தெரியவில்லை.

பிரிய மனமில்லாமல் பிரிந்து, கோவிலுக்கு வெளியே வந்து, படிகளில் இறங்க ஆரம்பித்தோம். எதிரே சில வெளிநாட்டவர்கள் ஏறி வந்துகொண்டிருந்தார்கள். அயல்நாட்டு டூரிஸ்ட்டுகள். கோவில் வெளிக்கோபுர வாசலின் முகப்பில் இடதுபுறம் கொஞ்சம் உயரத்தில் கல்சுவற்றின் சித்திர வேலைப்பாடுகளுக்கிடையில், இப்போது கண்ணில்பட்டார் ஒரு குட்டி வினாயகர். கண்களை சுற்றுப்புறமாக ஓடவிட்டுக் காட்சிகளை ரசித்துக்கொண்டே கீழே இறங்கினோம். இளைஞர்கள், பெண்கள் என சிலர் மேலேறி வந்துகொண்டிருந்தார்கள்.

சில இடங்களில் கோவிலின் அருகே இடதுபுறமாக, விதவித உருவங்களில் பெரும்பாறைகள், பாறைகளின் வெடிப்பிலிருந்து கிளம்பியிருக்கும் பாரிஜாத மரங்கள். கீழ்விழுந்துகிடக்கும் அவற்றின் ஆரஞ்சுக்காம்புடன் கூடிய வெள்ளை மலர்கள், காற்றுவெளியின் லேசான சுகந்தம், குளுகுளுப்பு என ஒரு out of the world அனுபவமாகத் தோன்றியது. புதிரும் அழகும் மிளிரும் அந்தப் பிரதேசமே வருபவர்களிடம் கடந்தகால ரகசியங்கள்பற்றிக் கொஞ்சம் சொல்ல முயன்றதாகத் தோன்றியது. என் பெண் முன்சென்று திரும்பி, கோவிலைப் பார்த்துக்கொண்டு சில ஃபோட்டோக்களை கொஞ்சம் சாவதானமாக க்ளிக்கினாள். படிகளில் கைப்பிடிக் குழாயைப் பிடித்தவாறு இறங்கிவரும் ஒரு மத்திம வயதுப் பெண்ணின் கையிலிருக்கும் பையை ஆர்வமாகப் பார்த்து அருகிலுள்ள கைப்பிடிச் சுவரில் குதித்து நெருக்கம் காட்டியது ஒரு இளம் குரங்கு. நல்லவேளை, அந்தப் பெண் கவனிக்காததால் பதறவில்லை. குரங்காரும் என்ன நினைத்தாரோ, பறிக்கும் முடிவினைத் தள்ளிப்போட்டுவிட்டார் ! இன்னும் சில குரங்குகள் அங்கும் இங்குமாகத் தவ்வி சேட்டைகள் செய்தவண்ணமிருந்தன. சில மலை முகடுகளிலிருந்து தூரப்பார்வையில், மேலக்கோட்டையில் எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதுபோல் ஆழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தன.

பாரிஜாத மரங்களின் கீழ் கொஞ்சம் நின்றோம். எடுத்துப் பார்த்தேன் – கீழே விழுந்துகிடந்த பூக்கள் இன்னும் வாடாதிருந்தன. மேலே பல மரங்களில் இலைகளைக் காணோம். சில இளம் மொட்டுக்கள் இருந்தன. இந்தப் பாரிஜாதம் இருக்கிறதே… ஒருகாலத்தில் தேவலோகத்தில்தான் பூத்துக் குலுங்கியது ! அதுபற்றிய புராணக் கதை ஒன்றுண்டு:

பூலோகத்தில் இரவு தீண்ட ஆரம்பித்த ஒரு மாலைப்பொழுதில், கிருஷ்ணனின் மீது ஒயிலாகச் சாய்ந்திருந்தாள் ருக்மணி. மெல்லத் தலை உயர்த்தி, அவன் காதில் மிருதுவாகச் சொன்னாள்: ’’எனக்கு பாரிஜாதம் வேண்டும்!’’

கிருஷ்ணன் அவளைப் ப்ரியத்தோடு பார்த்தான். மெல்லிய புன்னகையோடு சொன்னான்: ‘எங்கே வந்து என்ன கேட்கிறாய் ருக்மணி! இது பூலோகம். பாரிஜாதம் தேவலோகத்தில்தானே இருக்கும்!’’

’’அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு அது வேண்டும்!’’ என்றாள் அவள்.

ருக்மணி பிடித்தால் விடமாட்டாள். கிருஷ்ணனும் வார்த்தைகளை வீணாக்குபவன் அல்ல. ‘உனக்காக தேவலோகம்போய் கொண்டுவருகிறேன் !’ என்றான்; மறைந்தான்.

உடன் பூலோகத்துக்குத் திரும்பியவன், அவளுக்குப் பிடித்த புஷ்பத்தைக் கொடுத்து சந்தோஷப்படுத்தினான். கூடவே தேவலோகத்திலிருந்து சிறிய பாரிஜாதச் செடி ஒன்றையும் கொண்டுவந்திருந்தான். ருக்மணியின் மாளிகைத் தோட்டத்தில் நட்டான். ‘இது பெரிசாகி நிறையப் பூக்கும் ! உனக்கு சந்தோஷம்தானே!’. என்றான். ருக்மணி கிருஷ்ணனின் அன்பில் மிகவும் நெகிழ்ந்துபோனாள்.

செடி மரமானது காலப்போக்கில். கிளைகள் அடர்ந்து படர்ந்தன. மொட்டுக்கள் தோன்றி இரவில் மலர்களாய்ச் சொரிந்தன. ஒரு இரவில் கிருஷ்ணனுடன் தன் தோட்டத்திற்கு வந்த ருக்மணி தான் கண்ட காட்சியில் அதிர்ச்சியுற்றாள். பாரிஜாத மரம் தன் பெரிய கிளைகளில் பலவற்றைப் பக்கத்து மாளிகையின் தோட்டத்துக்கு அனுப்பி அங்கே பூவாய் சொரிந்திருந்தது. பேருக்கு சில புஷ்பங்கள் மட்டுமே ருக்மணியின் தோட்டத்தில். பக்கத்து மாளிகையில் வசித்த அந்த அடுத்தவீட்டுப்பெண் யார்? சத்யபாமா ! பாரிஜாதத்தின் விஷமத்தை என்னவென்று சொல்வது!

கிருஷ்ணனும் கவனித்தான். ‘என்ன ருக்மணி!’ என்றான் மிக இயல்பாக.

‘நீ கொண்டுவந்து வைத்த அழகு மரம் என்ன காரியம் செய்திருக்கிறது? நீயே பார்!’ என்றாள் கடுப்புடன்.

’அதான் நன்றாகப் பூத்திருக்கிறதே!’ என்று அவளது முகத்தைப் பார்த்து முறுவலித்தான் அவன். .

‘எங்கே போய் பூத்திருக்கிறது? கவனித்தாயா!’ – ருக்மணி.

‘ஓ! கிளைகள் உன் தோட்டத்தைவிட்டு வெளியே போய்விட்டதா? அதனால் என்ன! உன் தோட்டத்திலும் பூத்துத்தானே இருக்கிறது!’ என்றான் மிக இயல்பாக. ருக்மணி அவனைப் பார்த்தாள். ’மகா கள்ளன் இவன்! உண்மையில் இதில் இவனுக்கு சந்தோஷமாகக் கூட இருக்கும்!’ என நினைத்தாள். அவனைப் பார்த்திருந்தவளுக்கு ஏனோ கோபம் தணிந்தது. ‘விடு இந்த மரத்தை! இதற்காக என் அன்பனைக் கோபித்துக்கொள்வேனா!’ என்று ஒருவழியாக சமாதானமுற்றாள் ருக்மணி.
இப்படி ருக்மணியையே சீண்டிப்பார்த்த புஷ்ப மரம் பாரிஜாதம். அதாவது நமது பூலோகத்தின் பவழமல்லி.
பாரிஜாதத்தின் கதை ஓடி நிற்க, தொடர்ந்து இறங்கி அடிவாரத்திற்கு வந்தோம். கார் நின்ற இடம் நோக்கி வருகையில் ஒரு ஆச்சரியம். ஒரு சர்வதேச சைக்கிள் பயணி போன்ற ஒருவர் அதற்கான headgear, shorts எல்லாம் அணிந்து நின்றிருந்தார். பக்கத்தில் அவரோடு ஊர்சுற்றும் வாகனம், பைகள், தண்ணீர் பாட்டில் இத்தியாதிகளுடன் அலங்காரமாய் நின்றிருந்தது. வயதானவர். யாருக்காகவாவது காத்திருக்கிறாரா? கொஞ்சம் பேச்ச்சுக் கொடுத்துப்பார்ப்போம் என்றது மனது. நெருங்கி, ’Can you speak in English?’ என்றேன். வெளிநாட்டவரெல்லாம் ஆங்கிலம் பேசவேண்டும் என்று யார் சொன்னது?

’Yes, I can !’என்றார் உற்சாகத்துடன்.

‘எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள்? உங்கள் பெயர்?’ என்று கேட்டேன்.
’France! I am Michelle ‘என்றார் அவர். துருக்கி, க்ரீஸ், மொராக்கோ என்றெல்லாம் ஒரு ரவுண்டடித்து- சைக்கிளில் பிரதானமாக – இப்போது இந்தியா வந்திருப்பதாக சொன்னார்.

ஆச்சரியப்பட்டு ‘எப்போது புறப்பட்டீர்கள் ஃப்ரான்ஸிலிருந்து? -கேட்டேன். ’மூன்றுவருடங்களாயிற்று!’ என்றார். நெடும் பயணம் அவரை வதக்கி புடம் போட்டிருந்தது நன்றாகவே தெரிந்தது. ’நீங்கள் மட்டுமா கூட யாரும் வந்திருக்கிறார்களா?’ –மேலும் விஜாரித்தேன். ’என் மனைவி! மேலே ஏறிக் கோவிலுக்குப்போயிருக்கிறாள் !’ என்று சொல்லி மேலும் ஆச்சரியப்படுத்தினார்.

கோவில் என்றவுடன் இவருக்குக் கொஞ்சம் சொல்லவேண்டியதுதான் என நினைத்து ஆரம்பித்தேன். ’மிகவும் புகழ்பெற்ற மலைக்கோவில் இது. நீங்கள் கேள்விப்பட்டு இங்கு வந்திருப்பது சந்தோஷமாயிருக்கிறது’ என்றேன். ’மும்பையிலிருந்து பெங்களூர் வந்து தங்கியிருக்கிறோம். கர்னாடக சுற்றுப்புறங்களில் சுற்றுகிறோம்’ என்றவர், ’இது ஒரு ஜெயின் கோவிலா?’ என்றார்.

போச்சுடா! விடிய விடிய கதைகேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்கிறாற்போல்…என்று மனம் நினைக்கையில், இல்லை, இவர் கதை கேட்கவில்லை. தன் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார் என நினைவு எச்சரித்தது. பரவாயில்லை. நரசிம்ஹர் இவரை எப்படியோ இங்கே இழுத்துவந்துவிட்டார். கொஞ்சமாகச் சொல்வோம் என நினைத்து ‘இது ஒரு ஹிந்து கோவில். ஹிந்து கடவுள் விஷ்ணு என்று கேள்விப்பட்டிருக்கிறீரா?’ என்று கேட்டேன். ’யெஸ்..யெஸ்..!.விஷ்ணு!’ என்றார்.

அந்த விஷ்ணுவுடைய கோவில் இது. ஆனால் இங்கே விஷ்ணு மனித உடம்பு, சிங்கத் தலையோடு காட்சிதருகிறார். அவருடைய அவதாரங்களில் ஒன்றில் இப்படி அவரது தோற்றம்!’ என்றேன். வியப்போடு அவர் கேட்டுக்கொண்டிருக்கையில் வந்து சேர்ந்தார் அவரது மனைவி. ‘உங்கள் கணவரோடு பேசிக்கொண்டிருந்தேன். உங்கள் நீண்ட பயணம் ஆச்சரியமளிக்கிறது. உங்களுக்கு ஆரோக்கியம், மனோதிடம் இவற்றைக் கடவுள் நிறைய தந்திருக்கிறார்!’ என்றேன். அவர் சந்தோஷப்பட்டார். ’உங்கள் பயணத்தில் தமிழ்நாடு, சென்னை இப்படி ஏதாவது ? ’ என்று இழுத்தேன்.

‘சென்னை!’ என்றார் வியப்புடன். ’ஆம் அங்கு போகிறோம். அங்கிருந்து கப்பல் வழியாக மியன்மார் (பர்மா) செல்கிறோம். (சில பகுதிகளில் கப்பல்வழி சென்று அந்தந்த நாடுகளில் இறங்கியவுடன் நாட்டுக்குள் சைக்கிளில் பயணிக்கிறார்கள் எனப் புரிந்துகொண்டேன்). ‘சுற்றிப் பார்க்கப்போவதில்லையா சென்னையை? பார்ப்பதற்கு நிறைய இருக்கிறதே!’ என்றேன். ’பார்க்கவேண்டும் ஆனால் விசா 3 மாதத்துக்குதான் கொடுத்திருக்கிறார்கள். மிகவும் குறைவாக இருக்கிறது. மியன்மாரில் ஒரு நண்பரைப் பார்த்துவிட்டு மேற்கொண்டு பயணிப்போம்!’ என்றார்.

’நான் விசா ஆஃபீஸராக தூதரகத்தில் பணியாற்றி இருக்கிறேன். அப்போது என்னிடம் நீங்கள் வந்திருக்கக்கூடாதா! இந்தியாவில் ரவுண்டடிக்க ஒரு வருட விசா கொடுத்திருப்பேனே. உங்கள் போன்றோருக்குத்தானே இந்திய விசா அதிகமாகக் கொடுக்கவேண்டும்!’ என்றேன். இந்த எதிர்பாராத தகவலால் அவர் அசந்துபோனார். நன்றி சொன்னார். அவர்கள் இருவருக்கும் வாழ்த்துச் சொல்லி படங்கள் சிலவற்றை க்ளிக் செய்து அகன்றோம்.

மேலக்கோட்டை செலுவநாராயண ஸ்வாமிடமிருந்தும், யோகநரசிம்ஹ ஸ்வாமியிடமிருந்தும் பிரியாவிடை பெற்று பெங்களூர் நோக்கிப் பயணமானோம்.

**

மேலக்கோட்டை பயணம் – 2


மங்கையின் மனம் புகுந்த மாயன் !

டெல்லி சுல்தானின் அரண்மனைக் கிடங்கு. தென்னாட்டிலிருந்து கொள்ளையடித்துக் கொணரப்பட்ட இந்து கோவில்களின் விலை மதிக்கமுடியாத உத்சவ விக்ரஹங்கள் குன்றாய்க் குவிந்து கிடந்தன. அவற்றை அரண்மனைக் கொல்லர்களிடம் கொடுத்து உருக்கி, ஆபரணங்கள் போன்றவை செய்துகொள்வது டெல்லி தர்பாரின் வழக்கம். அவ்வாறு அவை அரண்மனைக்கிடங்கிலிருந்து அகற்றப்படும் வேலையை அன்று சுல்தான் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது அங்குவந்தாள் சுல்தானின் இரண்டாவது மகள் சூரத்தானி பீவி (லச்சமார் சுல்தானி பீவி என்று குறிப்பிடுவோரும் உண்டு). பருவ வயதெய்தி அழகாக இருந்தும் குழந்தை மனம் கொண்டவள். விக்ரஹங்களை வியப்பான கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். எத்தனை விசித்திர உருவங்கள், எத்தனை வடிவங்கள், எத்தனைக் கலைநுட்பம் ! அப்போது அவளது பார்வை அந்தக் குவியலின் மேல்கிடந்த, மேலக்கோட்டையின் உத்சவப் பெருமாளின் மீது விழுந்தது. கண்கள் மலர்ந்தன. உடனே அதனைக் கையில் எடுத்து உச்சியிலிருந்து பாதம் வரை ஆசையாகப் பார்த்தாள். பார்த்தாள். . பார்த்துக்கொண்டிருந்தாள். சுல்தான் அதனைக் கவனித்தான். ’’சூரத்தானி! அதனை மற்றவைகளோடு போடு. உருக்குவதற்கு போய்க்கொண்டிருக்கின்றன. உனக்கு அழகழகான ஆபரணங்கள் அதிலிருந்து செய்யலாம் !’’ என்றான்.

உத்சவ மூர்த்தியின் அழகில் உற்சாகித்திருந்த சூரத்தானி பீவி பதறினாள். உருக்குவதா! நிச்சயம் இல்லை என்று படபடத்தது அவள் மனம். ’இது எனக்கு வேண்டும். நான் தரமாட்டேன் !’ என்றாள். சுல்தான் பார்த்தான். ஆள்தான் வளர்ந்திருக்கிறாளே தவிர பொம்மை வைத்து விளையாடும் வழக்கம் இவளைவிட்டு இன்னும் சென்றபாடில்லை. ஹ்ம்.. இவளிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை. ‘சரி! நீயே வைத்துக்கொள்!’ என்றான். மற்றவைகளை எடுத்துப்போகச்சொல்லி உத்திரவிட்டுத் தானும் நகன்றான்.

குஷியான சூரத்தானி செல்வப்பிள்ளையைத் தூக்கிக்கொண்டு தன் அறைக்கு வந்தாள். கதவைத் தாழிட்டாள். பஞ்சலோக விக்ரஹத்தைப் பாசத்தோடு பார்த்தாள். அதற்குத் தன் கையாலே குளிப்பாட்டிவிட்டாள். பார்த்துப்பார்த்துப் பட்டுத்துணியால் துடைத்துவிட்டாள். அழகழகான வஸ்திரங்களால் அலங்காரமாய் உடுத்திவிட்டு, தலைக்கு கிரீடம் போன்றெல்லாம் மனம்போனபடி சிங்காரித்து ஆனந்தமடைந்தாள். அழகன் மஹா அழகனான். அவள் கண்களைப் பறித்ததோடு மனதினுள்ளும் சென்றான். வசதியாக அங்கே உட்கார்ந்துகொண்டான். இப்படித் தினம் அதனைக் குளிப்பாட்டிச் சிங்காரிப்பதும், தான் உண்ணுமுன் அதற்குப் ப்ரியமாய் ஊட்டிவிடுவதுமாய் லயித்திருந்தாள் இளவரசி. கண்ணன் வந்தபின் காலை, பிற்பகல், மாலை என்கிற காலக்கிரமங்கள் அவளைக் கடந்துபோயின. அந்த உலோகச்சிலை தாண்டி உலகமில்லை என்றானது அவளுக்கு. இரவிலும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, கையை அதன்மேல் போட்டுக்கொண்டு தூங்கினாள். அகமகிழ்ந்தான் அனந்தன். கனவிலும், கனவு, நினைவு என்கிற நிலைகளுக்கு அப்பாற்பட்ட கணங்களிலும் காட்சிகள் தோன்றின அவளுக்கு. விந்தைகள் பல செய்யும் மாயன். விதவிதமான கோலங்களில் அவள்முன் தோன்றி வசீகரப்படுத்தினான். அந்த தர்ஷன்களின் முக்கியத்துவத்தை குழந்தை மனத்தினளான அவள் அறிந்தாளில்லை. ஆயினும், அவனில் தன்னை முழுமையாக இழந்துவிட்டாள் சூரத்தானி பீவி.

இப்படி எல்லாம் சுகமாகப் போய்க்கொண்டிருக்கையில்தான் டெல்லி அரண்மனையில் தன் சிஷ்யர்களோடு பிரவேசித்தார் அந்த ஹிந்து சன்னியாசி. மேல்கோட்டையிலிருந்து கால்கடுக்க வந்திருந்த ராமானுஜர். டெல்லி சுல்தான் அவர்களை சந்திக்க சம்மதித்துவிட்டான். பிற மதத்துத் துறவிகளை அவன் சந்திப்பதே அவர்களை ஏளனம் செய்து மகிழத்தான். ராமானுஜரிடமும் அப்படித்தான் ஆரம்பித்தான் முதலில். ஆனால் யதிராஜரின் கருணைப்பார்வையும், அன்புமொழியும், 80-ஐ நெருங்கிய வயதிலும் அவரிடம் காணப்பட்ட கம்பீரம், தேஜஸ் போன்றவையும் அவனை வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் மென்மையாக நடந்துகொள்ளவைத்தன.

’எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்ற சுல்தானின் கேள்விக்கு ராமானுஜர் சூறையாடப்பட்ட மேல்கோட்டைக்கோவில், அங்கிருந்து எடுத்துவரப்பட்ட நாராயண விக்ரஹம், அதன் மகிமை, அது இல்லாது நின்றுபோன கோவில் உத்சவங்கள், பூஜிக்க வழிதெரியாது தவிக்கும் ஜனங்கள் என சுருக்கமாகச் சொன்னார். அந்த பெருமாள் விக்ரஹம் சுல்தானின் அரண்மனையில் இருப்பதாக அறிந்து அதனை வாங்கிப்போகவே இத்தனை தூரம் கால்நடையாக வந்திருப்பதைக் கூறினார். ’தயைகூர்ந்து பாதுஷா அதனை எங்களிடம் திருப்பித் தரவேண்டும்’ என வேண்டினார் ராமானுஜர்.

’வேறேதும் கேட்க விரும்புகிறீர்களா?’ என வினவினான் டெல்லியின் சுல்தான். ’விக்ரஹத்தைத் தவிர வேறெதுவும் வேண்டாம்!’ கம்பீரமாக பதில் வந்தது ராமானுஜரிடமிருந்து.
ஆச்சரியப்பட்டான் அவன். ’’உங்களுடைய நாலுகை தெய்வங்கள் பல எங்கள் கிடங்கில் கிடக்கின்றன. அவற்றில் உங்களதை எப்படி அடையாளம் காண்பீர்கள்?’’ கேட்டான்.

’’ஒவ்வொன்றாய்த் தயவுசெய்து காட்டுங்கள். அடையாளம் காண்கிற வேலையை என்னிடம் விட்டுவிடுங்கள் !’ என்று தெளிவாக்கினார் ராமானுஜர்.

ஆட்களை அனுப்பி அரண்மனைக் கிடங்கிலிருந்து தேடி எடுத்துவர உத்திரவிட்டான். அவர்கள் திரும்பி வந்து காண்பித்த விக்ரஹங்களில் செல்வப்பிள்ளை இல்லை! வேறெந்த சிலையும் கிடங்கில் இல்லை என்றனர். ’உருக்குவதற்குப் போய்விட்டதோ இவர் கேட்பது?’ – சிந்தித்தவனுக்குள் அந்தக் காட்சி தோன்றியது : ’இளவரசி தனக்கு வேண்டும் என்று அன்று ஒரு சிலையை எடுத்துச்சென்றாளே! ஒரு வேளை…’ சூரத்தானியை தர்பாருக்கு உடன் வரச் சொல்லிக் கூப்பிட்டனுப்பினான். அவளும் வந்தாள் – கையில் மேல்கோட்டை விக்ரஹத்தோடு !

அவள் கையில் தாங்கியிருந்த விக்ரஹத்தைப் பார்த்ததும் புரிந்துகொண்டார் ராமானுஜர். ‘இதுவா நீங்கள் தேடி வந்தது?’ என சுல்தான் முடிக்குமுன் ’இதுதான்! இதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்!’ என்றார் உடையவர். சுல்தான் உடனே ’’சூரத்தானி! அந்த விக்ரஹம் இவருடைய கோவிலைச் சேர்ந்ததாம். வாங்கிச் செல்வதற்காக இத்தனை தூரம் வந்திருக்கிறார். நானும் தருவதாக வாக்குக் கொடுத்துவிட்டேன். அதை இந்த சந்நியாசியிடம் கொடுத்துவிடு. தன் ஊர்க் கோவிலுக்கு எடுத்துச் செல்லட்டும்’’ என்றான்.

சூரத்தானி பீவி அதிர்ச்சியடைந்தாள். விக்ரஹத்தின் மீதிலிருந்து கண்ணெடுக்காமல் ’‘இது என்னுடையது. இதனைப் பிரியமாட்டேன்; தரமாட்டேன்’’ என்றாள் அழுத்தமாக.
சுல்தானின் உத்தரவுக்கு மறுபேச்சா? அவனது கோபம் உச்சத்தைத் தொட்டது. ‘சொன்னபடி கேள்! கொடுத்துவிடு அதை!’ எனப் பெரிதாக உறுமினான். அவையிலிருந்தோர் பயத்தில் கிடுகிடுத்தார்கள். சுல்தானின் கோபத்தில் நடுங்கினாள் இளவரசி. தலைகுனிந்து நின்றாள். பொங்கிய கண்ணீர்த்துளிகள் தரையில் விழுந்தன.செல்வப்பிள்ளையை அவள் கைகள் இறுக்கிப் பிடித்துக் கொண்டன.

ராமானுஜர் நிலைமையின் தீவிரத்தை உடனே உள்வாங்கிக்கொண்டார். வளர்ந்து பெரியவளாகத் தோன்றுகிறாளே தவிர பாவம், குழந்தை இவள். சுல்தானிடம் கோபத்தைத் தணிக்குமாறு கேட்டுக்கொண்டு தான் அவளிடம் நேரடியாகக் கேட்க விரும்புவதாகக் கூறினார். அவனும் சம்மதிக்க, கேட்டார் உடையவர்:

’குழந்தாய்! நீ வைத்திருப்பது எங்கள் பிள்ளை. எங்களூர்க் கோவிலில் இருந்தது. எங்களை எல்லாம் காத்து ரட்சிக்கும் தெய்வம். அவரை என்னிடம் வந்துவிடுமாறு நான் உன் முன்னேயே அழைக்கிறேன். அவர் தானாக வந்துவிட்டால், நான் எடுத்துக்கொண்டு போகலாம் அல்லவா? அதில் ஆட்சேபம் இல்லையே உனக்கு !’ என்றார் இதமாக.

சூரத்தானி இப்போது கொஞ்சம் சாந்தம் அடைந்தாள். முதன்முறையாக எதிர் நின்ற ஹிந்து சந்நியாசியை நேராக நோக்கினாள். ’என்ன! இவர் கூப்பிட்டால் இது இவரிடம் போய்விடுமா! இது நடக்காது. பாவம் இந்தத் தாத்தா! ஏதோ சொல்கிறார்.. இதற்கு சம்மதித்துவிடுவோம்.’ என உள்ளுக்குள் எண்ணமிட்டாள். மிக மிருதுவாக ’சரி!’ என்றாள் இளவரசி. சுல்தான் ஆச்சரியமானான். என்ன நடக்கிறது என் தர்பாரில் !

ராமானுஜர் கண்களை மூடி திருநாராயணனை தியானித்தார். ’அப்பா! ஏனிந்த விளையாட்டு இப்போது? நீ இங்கிருந்தது போதும். சொன்னால் கேள்! திரும்ப வந்துவிடு உன் இடத்துக்கு..’. என்று மனதில் கெஞ்சினார்; அரற்றினார். கண்திறந்து இளவரசியின் கைகளிலிருக்கும் மேல்கோட்டைப் பெருமாளை வாஞ்சையோடு பார்த்தார். கண்களில் நீர்முட்ட, ’’நாராயணா ! ரகுநாதா! வா ! என்னிடம் வந்துவிடு! உன் ஊருக்கே திரும்பிப் போய்விடலாம். என் செல்வப்பிள்ளையே.. கண்ணா! நீ வாராய்…!’’ என்றார் உருக்கத்துடன்.

சுல்தான் அதிசயித்துப் பார்த்திருக்க, சூரத்தானி குழப்பத்திலிருக்க, அவளது கையில் அசைந்தார் நாராயணன். விடுபட்டது விக்ரஹம். மெல்ல நகர்ந்து சென்று ராமானுஜரின் ஏந்திய கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. ஆச்சரியமும் பதற்றமுமாய் செய்வதறியாது நின்றாள் சூரத்தானி பீவி. பேயறைந்தது போலானான் சுல்தான். ‘என்ன ஒரு சித்து வேலை! என் அரண்மனையில்.. அதுவும் என் கண்முன்னாலேயே.. இந்த சந்நியாசியை இன்னும் இங்கே இருக்கவிட்டால் எதுவேண்டுமேனாலும் நடந்துவிடும்’ என அவன் நினைத்திருக்கையில், அவனது மகளின் விசும்பல் ஈனமாய்க் கேட்டது. அவன் அவள் பக்கம் திரும்ப, ‘வாப்பா! அது என்னுடையது. அதில்லாமல் நான் இருக்கமாட்டேன்!’ என்று தாங்கமுடியாது விம்மினாள். .

கோபத்தில் முகம் சிவக்க, ‘போ உள்ளே!’ என்று கர்ஜித்தான் சுல்தான். நடுக்கமும் அழுகையுமாய் அந்த இடத்தை விட்டு ஓடினாள் சூரத்தானி பீவி.

ராமானுஜர் தான் கொண்டுவந்திருந்த பட்டுத்துணியில் செல்வப்பிள்ளையை சுற்றி எடுத்துக்கொண்டு, சுல்தானைக் கனிவோடு பார்த்தார். வந்தனம் தெரிவித்தார். தன் குழாமுடன் அரண்மனையை விட்டு வேகமாக வெளியேறினார்.

அடுத்த நாள் தன் மகளைப் பார்க்க நேர்ந்த சுல்தான் மனம் கலங்கினான். வெளிறிய முகத்துடன், தலைவிரிகோலமாய் பித்துப்பிடித்தவள்போல் தனக்குத்தானே பேசிக்கொண்டு அரண்மனையில் அலைந்துகொண்டிருந்தாள் சூரத்தானி.

அவளிடம் சென்று ’‘மகளே! கவலைப்படாதே..இந்த சிற்பத்தைவிடவும் அழகான சிற்பத்தை உனக்காகச் செய்யச்சொல்கிறேன். வருந்தாதே!’’ என மன்றாடினான் அந்த அப்பன். மகளோ மறுத்துவிட்டாள். ’’அதைத்தவிர வேறெதையும் மனம் நாடாது’’ என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு. ஒருகணம் மனம் சிதறியவனாய் சுல்தான் தன்னவர்களை அழைத்து ’அந்த ஹிந்து சந்நியாசியைத் துரத்திச்சென்று அந்தச் சிலையைப் பறித்துவாருங்கள்’ எனச் சீறினான். அவனது ஆலோசகர்கள் சொன்னார்கள்: ‘பாதுஷா! இரவு கடந்துவிட்டது. நம் எல்லையை அவர்கள் வேகமாகக் கடந்திருப்பார்கள். அடர்ந்த வனங்களுக்குள் இன்னேரம் எங்கோ போயிருப்பார்கள். இனி அவர்களைக் காண்பது எளிதல்ல!’ என்றனர். குழம்பிய சுல்தானிடம் சூரத்தானி பீவி சொன்னாள்: ’’வாப்பா! நான் போய் அதனை மீட்டு வருகிறேன். எனக்குத்துணையாக ஓரிரு வீரர்களை மட்டும் அனுப்புங்கள்!’’ ‘ஒருபக்கம் தன் பொம்மையை விட்டுத் தராத குழந்தையாக அடம்பிடிக்கிறாள். இன்னொரு பக்கம் பெரியமனுஷியாய்ப் பேசுகிறாளே! இவளை எந்தவகையில் சேர்ப்பேன் நான்’ எனக் குழம்பினான் டெல்லி சுல்தான். வேறுவழி தெரியா நிலையில் ‘ சரி! ஜாக்ரதையாகப் போய்வா !’ என்று சிலவீரர்களுடன் அனுப்பிவைத்தான். குதிரையில் பாய்ந்து ஏறிய சூரத்தானி பீவி, சிட்டாகப் பறந்தாள் தெற்குத் திசை நோக்கி.

ராமானுஜரும் அவருடைய சீடர்களும் பாதுகாப்பு கருதி பாதையை மாற்றி மாற்றி முன்னேறிப் பயணித்தனர்; பெருவனங்களை, பேராவேசமாய்க் கடந்து, ஒரு வழியாகத் தென்னாடு திரும்பினர். மேலக்கோட்டைக்குள் நுழையும் தருவாயில் கொள்ளைக்காரர்களாலும் இடைமறிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து தப்பிக்க அருகிலிருந்த கிராமத்தின் சேரிக்குள் புகுந்தார் ராமானுஜர். மறைந்திருக்க இடம் கேட்டார். நெற்றியிலே திருமண்ணுடன் தங்கள் இருப்பிடத்துக்கு வந்திருக்கும் சாமியாரைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அந்த ஊர்ப் பறையர் இனத்தவர் அவரை வணங்கி, ஒதுங்கியிருக்க வீடு திறந்துவிட்டனர். ஊருக்குள் புகமுயன்ற வழிப்பறிக்கொள்ளையர்களையும் போக்குக்காட்டித் திருப்பிவிட்டனர். அவர்கள்போனபின் ராமானுஜரை வெளிவரச்சொன்ன அந்த ஏழை ஜனங்கள், அவர் கையிலிருக்கும் துணிமூட்டையைப்பார்த்து ’அதுல என்ன சாமி இருக்குது?’ என்று வினவினர். அவர் திறந்து காண்பிக்க, கண்களில் பரவசம் மின்ன ‘அட! இது நம்ம ஊரு சாமிடா !’ என்று கூவி வீட்டிற்குள் வேகமாகச் சென்றனர். கம்பங்கூழையும், பச்சைக்காய்கறிகளையும் கொண்டுவந்து சாமி அருகில் வைத்துவிட்டுத் தள்ளி நின்று கைகூப்பினர். ஏழை ஜனங்களின் கள்ளமில்லா பக்திகண்டு கண்கலங்கினார் ராமானுஜர்.

’’நாராயணனையே பாதுகாத்தவர்கள். அதனால் அவன் மனைவி லக்ஷ்மியின் குலத்தைச் சார்ந்தவரே நீங்கள். திருக்குலத்தோர்! வாருங்கள் என்னுடன் . நம் சாமியை கோவிலுக்குள் வைத்துக் கும்பிடுவோம்!’’ எனக் கூறி அவர்களையும் கோவிலுக்குள் வர அழைத்தார் ராமானுஜர். ’என்ன சொல்றீங்க சாமீ!’ என்று அதிர்ச்சியும் தயக்க்கமுமாய் நின்ற அவர்களைத் தைரியமூட்டி, உற்சாகத்துடன் கோவிலுக்குள் இட்டுச் சென்றார் அவர். செலுவநாராயணர் கோவிலில் உரிய இடத்தில் செல்வப்பிள்ளையை வைத்து, மந்திர கோஷங்களோடு திருமஞ்சனம் செய்வித்து, அலங்காரம் செய்து, நைவேத்தியம் , தீபாராதனை என்று கிரமப்படி எல்லாம் செய்வித்தார் உடையவர். பக்தர்கள் கூடி நின்று ‘கோவிந்தா! கோவிந்தா!; என்று கோஷமிட்டனர். கும்பிட்டுக் குதூகலித்தனர்.

இத்தகைய தருணத்தில் அங்கு வந்து சேர்ந்தாள் சூரத்தானி பீவி. தன் உயிருக்கும் உயிரானதை இழந்துவிட்ட துக்கம், தூக்கமின்மை, சரியான சாப்பாடின்மை, நெடும்பயணக் களைப்பு என்று தேய்ந்து ஓடாகியிருந்தாள் இளவரசி. கோவிலுக்குள் வேகமாய் நுழைந்து உள்சென்றவளுக்கு அங்கே கண்ட காட்சி முதலில் சந்தோஷத்தைக் கொடுத்தது. செல்வப்பிள்ளையின் எதிரே போய் நின்றாள். என்ன நடக்கிறது எனக் கவனித்தவள் பெரும் சோர்வுக்குள்ளானாள். மாலையும் அலங்காரமுமாய்க் காட்சியளித்த அவளுடைய மனம் கவர்ந்த கள்வனுக்கு தீபாராதனை நடந்துகொண்டிருந்தது. கூப்பிய கைகளுடன் பக்தர்கள் ‘நாராயணா’ நாராயணா!’ எனக் கூறியவாறிருந்தனர். அவள் புரிந்துகொண்டாள். உடல் நடுங்கியது. கண்கள் நிரம்பின. ‘இனி என்னிடம் நீ வரமாட்டாய், இல்லையா!’ என அவனைப் பார்த்து உருகினாள்; தேம்பினாள். அவளின் மனம் கவர்ந்த மாயன் கனிவோடு பார்த்திருந்தான். அவளை அறியாமல் அவளது மெலிந்த கைகள் தலைக்கு மேலே கூப்பியவாறு உயர்ந்தன. கால்கள் தள்ளாடி மடங்க மூர்ச்சையாகி, விக்ரஹமாய் நின்றிருந்த மாலவன் முன் தடாலென விழுந்தாள் சூரத்தானி பீவி. பக்தர் கூட்டம் பதறியது. பெண்கள் வரிசையிலிருந்து சிலர் உடன் முன்வந்து அவளை நிமிர்த்தி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். ஆனால் அவளது மூச்சு அடங்கிவிட்டிருந்தது. தனக்குப் பிடித்தமானவனுடன் இரண்டறக் கலந்துவிட்டிருந்தாள் அவள்.

நடந்ததைக் கேள்விப்பட்ட ராமானுஜர் விரைந்துவந்தார். அவளுக்கு உண்மையில் என்ன நடந்தது என்று அவருக்குத் தெரிந்துவிட்டிருந்தது. கண்ணனோடு கலந்துவிட்டவளுக்கு உரிய சடங்குகள், மரியாதைகளைக் குறைவின்றி செய்வித்தார். அவளது புகழை பக்தர்கள் புரிந்துகொள்ளுமாறு செய்தார். பெண்களுக்கான இஸ்லாமிய வழக்கப்படி தலையில் பர்தாவுடன் கூடிய அவளுடைய அழகிய பஞ்சலோக விக்ரஹம் ஒன்று செய்து திருநாராயணரின் (மூலவரின்) காலடியில் வைத்துப் பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்தார் ராமானுஜர். சூரத்தானி பீவி, பீவி நாச்சியார் ஆகிவிட்டாள். இன்றும் ஸ்ரீ பாதபூஜையின் போது, திருநாராயணனின் திருவடிக்கருகில் நின்றிருக்கும் பீவி நாச்சியாருக்கு தீபாராதனை காட்டப்படுகிறது.

பீவி நாச்சியாரின் ஆழமான பக்தியைப் பெரிதும் போற்றிய ராமானுஜர் வெவ்வேறு கோவில்களிலும் அவளுக்கென்று சிறப்பு பூஜை நியமங்களை உண்டாக்கினார். ஸ்ரீரங்கத்தின் துலுக்க நாச்சியாரும் இவளேதான். அரங்கனின் கோவிலின் கிளிமண்டபத்துக்கருகில் இவளுக்கான சிறிய சன்னிதி உள்ளது. உருவவழிபாட்டில் நம்பிக்கை வைக்காத இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவளாதலால், இவளது ஒவியம் மற்றுமே சன்னிதியில் இருக்கிறது. கூடவே இஸ்லாமிய சின்னங்களும், ராமானுஜர் சித்திரமும் அங்கு காணப்படுகின்றன. முகலாய முறைப்படி சமைக்கப்பட்ட நெய் சேர்த்த ரொட்டி (Roti) எனப்படும் சப்பாத்தியும், சர்க்கரையும், பருப்பு சேர்த்த கிச்சடியும் இவளுக்கான நைவேத்யம். துலுக்க நாச்சியாருக்கு நைவேத்யம் ஆனபிறகுதான் அரங்க நாதனுக்கு நைவேத்யம் நடக்கிறது ஸ்ரீரங்கத்தில். ஆந்திரத்துக் கோவில்களில் இவளது சன்னிதிக்கு வரும் விஷ்ணுபக்தர்கள், இவளை ’பீவி நாஞ்சாரம்மா’ என்று ப்ரியத்துடன் வணங்குகிறார்கள்.
(தொடரும்)

**

Melukote Temple மேலக்கோட்டை பயணம் (பகுதி 1)

”பெங்களூரிலா இருக்கிறீர்கள்? மேலக்கோட்டை போய்வந்தீர்களா? என்ன? இன்னும் போகவில்லையா? அவசியம் ஒரு தடவை குடும்பத்தோடு போய்ட்டு வந்திருங்க சார். ராமானுஜர் 12 வருஷம் அங்கே இருந்திருக்கார். திருநாராயணபுரம்னு அந்த ஸ்தலத்துக்கு பேரு..!” என்றெல்லாம் என்னை சந்திக்கும்போதெல்லாம் சொல்லித் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தார் ஒரு நண்பர் டெல்லியில். சரி, ஒரு ட்ரிப் போயிட்டுவந்துடவேண்டியதுதான் என்று நினைத்துக்கொள்வேன்.

கடந்த வாரம் என் பெண்ணிற்கு சேர்ந்தாற்போல் விடுமுறை. வெள்ளிக்கிழமையில் புறப்படலாம் எங்கேயாவது என்றாள். மேலக்கோட்டை! மணியடித்தது மனம். பெங்களூரிலில் நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து. சுமார் 150 கி.மீ. தூரத்திலிருக்கும் அந்த ஊருக்கு, மைசூர் ரோடில் மாண்ட்யா போய்ப் போகலாம் எனத் தெரியவந்தது. கார் காத்திருக்கிறது. ஒரு டிரைவரை ஏற்பாடு செய்தோம். வந்துவிடப்பா காலையில் 6 ½ மணிக்கு என்று சொல்லியாயிற்று. வழக்கம்போல் லேட்டாக ஓட்டுனர் வர, ஒருவழியாக காலை 7 மணிக்கு பெங்களூரின் ஹென்னூர் விட்டுப் புறப்பட்டோம். 8 மணிக்குள் பெங்களூர் அவுட்டர் போய்விட்டோம். இருந்தும் பஸ்களும் பெரிய ட்ரக்குகளும் சாலையை இடது வலதாக மேய்ந்துகொண்டிருந்தன. வோக்ஸ்வாகனை 100-க்கு மேல் சீறவிட்டு அவைகளுக்குள் புகுந்து வெளியேறி மாண்ட்யா நோக்கி முன்னேறினோம். பிதாதி (Bidadi), ராம்நகர், மத்துரு (Madduru) ஆகிய ஊர்களைக் கடந்து 9.35-க்கு மாண்ட்யா வந்துசேர்ந்தோம். காஃபி குடிக்கக்கூட கீழே இறங்கவில்லை.

ஜிபிஎஸ் போட்டுப்பார்த்ததில், மாண்ட்யாவிலிருந்து வடகிழக்கு நோக்கிச் செல்லும் சாலை மேலக்கோட்டை போகிறது என்றது. மாண்ட்யாவிலிருந்து 36 கி.மீ. தூரம்.(மைசூரிலிருந்து வடக்காக 51 கி.மீ.-ல் இருக்கிறது). நாங்கள் பயணித்த சாலை முதலில் குறுகலாகி பயமுறுத்தியது. பின் விசாலமாகிப் பளபளத்தது புதிதாகப் போடப்பட்டிருந்த தார் சாலை. எங்களது காரும் புத்தம்புதிது. கேட்கவா வேண்டும்? போக்குவரத்து நெரிசலில்லாத மலைப்பகுதியின் வழுவழு சாலையில் இருபுறமும் காடுகள் சூழ்ந்திருக்கக் சீரான வேகத்தில் காலையில் பயணித்தது மனதுக்குப் பிடித்திருந்தது. பெங்களூரின் கான்க்ரீட் குவியலிலிருந்து, போக்குவரத்து நெருக்கடிகளிலிருந்து தற்காலிக விடுதலை. இடையிடையே தென்பட்டன குக்கிராமங்கள். மாடுகள், ஆடுகள், கோழிகள், சாலையின் இருமருங்கிலும் யூகலிப்டஸ் மரங்கள் என இயற்கைச் சூழல் ரம்யமாயிருந்தது. 45 நிமிடத்திற்குப்பின் வந்துசேர்ந்தோம் நாங்கள் தேடிய ஊருக்கு. யதிராஜர் என்று அழைக்கப்பட்ட ராமானுஜரை தன்னகத்தே 12 வருடங்களுக்கு மேலாக வசியப்படுத்தி வைத்திருந்த முக்கிய வைஷ்ணவ ஸ்தலமாக அறியப்படும் மேலக்கோட்டை. (கன்னட மொழியில் மேலுக்கோட்டே(Melukote). கடல்மட்டத்திலிருந்து 3589 அடிக்கு மேல், க்ரானைட் குன்றுகளின் இடையே குளுகுளுவென ஒரு அழகுப் பிரதேசம். யாதவகிரி என்று கிருஷ்ணர் காலத்தில் அழைக்கப்பட்ட மலைப்பகுதி. ராமானுஜர் காலத்து வனம் சூழ்ந்த கிராமம், தற்போது மாண்ட்யா மாவட்டம், பாண்டவபுரா தாலுக்காவில் ஒரு சிறிய டவுனாக உருமாறியிருந்தது.

கால ஊர்தியில் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றுவருவோம். 11-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி. இந்து சமயம் சைவம், வைஷ்ணவம் எனச் செங்குத்தாகப் பிரிந்திருந்தது. அதில் ஒன்றும் குற்றமில்லை. ஆனால் சோழமன்னன் ஒரு சைவமதத் தீவிரவாதி! சிவன் தான் கடவுள். மற்ற தெய்வத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு எதிரே நில்லாதே! வைஷ்ணவர்களை விரட்டிவிரட்டி அடித்தான். நெற்றியில் திருமண் இட்டுக்கொண்டு அவனது பிரதேசத்தில் யாரும் உலவக்கூடாது. அவனுடைய அட்டூழியங்கள் தாங்கமுடியவில்லை. நித்யகர்மாக்களை செவ்வனே தொடரவென, வைஷ்ணவத் துறவியான ராமானுஜர் ஸ்ரீரங்கத்தைவிட்டு வெளியேறி, தம் சிஷ்யர் சிலரோடு தற்போதைய கர்னாடகாவின் மேலக்கோட்டைப் பகுதிக்கு வந்தார். அந்தப்பிரதேசத்து மக்கள் அப்போது மழையின்றி வறுமையில் தவித்துவந்தார்கள். மேலக்கோட்டைக்கு அருகிலிருந்த தொண்டனூருக்கு முதலில் சென்ற ராமானுஜர், அந்த ஊர்க் குளங்களெல்லாம் கேட்பாரின்றி வற்றிக் கிடப்பதைப் பார்த்துப் பரிதவித்தார். அப்பாவி மக்களுக்கு முதலில் ஏதாவது செய்யமுயல்வோம். ஆண்டவனைப் பிறகு கவனிக்கலாம் என கிராம மக்களைச் சேர்த்துக்கொண்டு நீர்வளச் சீரமைப்பில் ஈடுபட்டார். தொண்டனூர் நம்பி என்னும் சீடரின் தலைமையில் கடும் உழைப்புக்குப்பின், கல்யாணிகுளம் என்கிற பெரியகுளத்தை வெட்டி, பக்கத்துக்கால்வாய் வழி நீர் வந்துசேர வழி செய்தார். பருவமழை வந்தால் நிரம்ப என ஏனைய சிறுகுளங்களும் தூர்வாரப்பட்டன. ஸ்ரீரங்கத்து சாமியின் அன்பும், சேவையும் பாமர மக்களை மகிழ்வித்தன. அவர்கள் சற்று ஆசுவாசப்பட்டவுடன், மேலக்கோட்டைக் கோவில் பற்றி விஜாரித்தார் உடையவர். சுல்தானின் படைகளால் சூறையாடப்பட்டு சிதைந்துபோய்விட்டது என்றனர். ’’சாமீ! எங்களுக்குக் கும்பிடக்கூட சாமி இல்ல!’’ என்றனர் சோகமாய், அந்த ஊர் ஜனங்கள்.

புதர்களும் புற்றுக்களுமாய் மண்டிக்கிடந்த வெளியில் பகலெல்லாம் சுற்றித் திரிந்தார் ராமானுஜர். பாழடைந்த பெருங்கோவிலின் சிதிலங்கள் ஆங்காங்கே தெரிந்தன. அந்தப் பகுதியின் வேறுசில கிராமங்களிலும் மேலும் சில கோவில்கள் பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த கதையை ஊர் மக்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டார். அருகில் ஆண்டுகொண்டிருந்த சிற்றரசனை சந்தித்தார் அவர். ராமானுஜர்பற்றிக் கேள்விப்பட்டு அவர் மீது மிகுந்த மதிப்புகொண்டிருந்தான் மன்னன். அவனிடம், மேலக்கோட்டைக் கோவிலையும் மற்ற சிதிலமடைந்த கோவில்களையும் மீட்டுப் புதிதாய்க் கட்டித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் உடையவர். மன்னன் அதற்கு உடன் இணங்கினான். முதலில் காணாமற்போயிருக்கும் மூலவர் விக்ரஹத்தைக் (செலுவநாராயணர்) கண்டுபிடிப்போம் என எண்ணியவன், தன் படைவீரர்களை விட்டு மேலக்கோட்டை கோவிலின் சிதிலங்களை அலசச் செய்தான். அவர்களும் ராமானுஜரின் மற்றும் கிராமத்துப்பெரியவர்களின் உதவியோடு தேடினர். மேலக்கோட்டை மூலவரான திருநாராயாணப் பெருமாள் பெரும்புதரும் புற்றுமாய்ப் உயர்ந்திருந்த ஒரு பகுதியில் மறைந்து கிடப்பதைக் கண்டனர். சேதமேதுமின்றி பெருமாளை வெளியே எடுத்து மன்னனுக்குத் தெரியப்படுத்தினர். மன்னன் உற்சாகமானான். சொன்னபடி மேலக்கோட்டை செலுவநாராயண ஸ்வாமி கோவிலை சிறப்பாகக் கட்டி முடித்தான். இதைப்போலவே அடுத்த சில ஆண்டுகளில் தொண்டனூர், பேலூர்(Belur), தலக்காட் (Talakad), கடக் (Gadag) ஆகிய ஊர்களில் நாராயணர் திருக்கோவில்களை மீண்டும் கட்டுவித்தான். விஷ்ணு கோவில்களை கொடுத்த வாக்குப்படி அவன் சிறப்பாகக் கட்டிக் கொடுத்ததால், மனமகிழ்ந்தார் ராமானுஜர். அவனுக்கு விஷ்ணுவர்தன் என்கிற பெயரைச் சூட்டி சிறப்பித்தார். பிற்காலத்தில் அவன் அவ்வாறே அழைக்கப்பட்டான்.

Sri Selvanarayana Swamy Temple, Melukote

மேலக்கோட்டைக்கு வந்த ராமானுஜர், புதிதாகக் கட்டப்பட்ட செலுவநாராயணர் கோவிலில் பூஜைக்கிரமங்களை ஏற்படுத்தி மூலவருக்கு நித்ய பூஜைகளை ஆரம்பித்துவைத்தார். மக்கள் பெருமகிழ்வுடன் சாமி கும்பிட்டனர். மூலவர் வந்துவிட்டார். உத்சவர் இல்லாமல் ஒரு கோவிலா? எங்கே போய்விட்டார் அவர்? ராமானுஜர் பெரிதும் விசனப்பட்டார்.ஒரு இரவில் உடையவரின் கனவில் தோன்றிய உலகலந்த பெருமாள், தான் சுல்தானின் அரண்மனையில் இருப்பதாகச் சொல்லி மறைந்தார்.  அவ்வளவுதான் . இருப்புக்கொள்ளவில்லை ராமானுஜருக்கு. சுல்தானை சந்தித்தே ஆகவேண்டும். தன் சிஷ்யர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு டெல்லிக்கு நெடும்பயணம் மேற்கொண்டார், தன் வயோதிகம் பற்றிய சிந்தனை ஏதுமின்றி.

ராமானுஜரைப் பரபரப்புக்குள்ளாக்கிய ’செல்வப்பிள்ளை’ என்று அழைக்கப்படும், செலுவநாராயண ஸ்வாமி கோவிலின் இந்த உத்சவர் விக்ரஹம் புராண காலத்தோடு தொடர்புடையது. இதன் மஹாத்மியமே வேறு! இந்த உத்சவ மூர்த்தியின் ஆரம்பப் பெயர் ‘ராமப்ரியா’. ஏனெனில் ராமபிரானால் முதலில் பூஜிக்கப்பட்டது இது. அவருக்குப்பின் வந்த சூர்ய வம்சத்தினராலும் தொடர்ந்து வணங்கப்பட்டுவந்தது. பிறகு இது சந்திரவம்சத்திற்கு கைமாறியது. கிருஷ்ணராலும், ஏனைய சந்திரவம்சத்தினராலும் பூஜிக்கப்பட்டது. ராமனாலும், கிருஷ்ணனாலும் பூஜிக்கப்பட்ட சிறப்புடைய மூர்த்தி இந்த செல்வப்பிள்ளை ! இதை விட்டுவிட்டு எப்படி நிம்மதியாய் இருக்க முடியும் ராமானுஜரால் ?

**