கிரிக்கெட்: சூர்ய குமாரன் !

 

ஆர்ச்சரிடமிருந்து தான் சந்தித்த முதல் பந்தை, நடராஜராக ஒற்றைக்காலைத் தூக்கியவாறு சிக்ஸருக்குத் தூக்கியது, அடுத்து சவால் விட்ட ஆதில் ரஷீதிற்கு அதிரடியாகப் போட்ட சூடு .. என சூர்யகுமார் நிகழ்த்திக்காட்டிய  ரகளையான பேட்டிங் அந்த இரவில். ரோஹித் அவுட்டாகியிருக்க, ராஹுல் பேட்டிங்கை மறந்து குழம்பியிருந்த நிலை. புதியவரிடமிருந்து வந்த எதிர்பாரா விளாசல். கூடவே அவர் அம்பயரினால் தவறாக அவுட்டாக்கப்பட்டதும் மைதானத்துக்கு வெளியேயும் சூட்டைக்கிளப்பிவிட்டது. ஆன் -ஃபீல்ட் அம்பயரின் ‘சாஃப்ட் சிக்னல்’ – கடும்  சர்ச்சையில். 50 மீட்டர் தொலைவையும் தாண்டி ஒரு லோ-கேட்ச் பிடிக்கப்படுவதை விக்கெட்டுக்கருகில்  நிற்கும் அம்பயர் சரியாகப் பார்க்க வாய்ப்பில்லை. ‘அவுட்’ கொடுத்துவிட்டு மூன்றாவது அம்பயருக்கு ரெஃபரென்ஸ் எதற்கு? அந்த ஆள் என்னடான்னா 4 நிமிஷம் வீடியோவை உருட்டோஉருட்டென விட்டு ’எனக்கு ஒன்னும் தெளிவாகல! ஆன் -ஃபீல்ட் அம்பயர் சொன்னதே (அவுட்) இருக்கட்டும்’ எனச் சொன்னது நவீன கிரிக்கெட்டின் அபத்தங்களில் ஒன்று – visual idiocy. கேலிக்கூத்தாக மாறிவரும் கிரிக்கெட்டின் புதுப்புது ரூல்ஸ். ஆங்கிலேய ரசிகர்களுக்காக போட்டியை ’கவர்’ செய்யும் ‘ஸ்கை ஸ்போர்ட்ஸ்’ சேனலில் ‘நான்சென்ஸ்!’ என்று எரிந்துவிழுந்திருக்கிறார்கள் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக் ஆர்தர்ட்டனும், தினேஷ் கார்த்திக்கும். கேட்ச் சரியாகத் தெரியாத நிலையில், ‘சாஃப்ட் சிக்னலில் ‘அவுட்’ என ஏன் சொல்லவேண்டும். ஐ டோண்ட் நோ! -எனச் சொல்லலாமே’ – இது நம்ப கோஹ்லி! இப்படியாகத்தானே 14-ஆவது ஓவரில் இனிதாக முடிந்தது சூர்யகுமார் யாதவின் முதல் இந்திய இன்னிங்ஸ்.  டி-20 உலகில் உதித்திருக்கும் இன்னுமொரு ப்ரகாச நட்சத்திரம்  சூர்யா. 

சூர்ய நர்த்தனம் !

முதலில் பேட் செய்யும் டீம் தோற்கும் என்கிற நம்பிக்கை 4-ஆவது மேட்ச்சில் பொய்த்துப்போனதால், வியர்த்துப்போனது அன்று இங்கிலாந்துக்கு. இந்தியா ஜெயித்ததற்கு 15-ஆவது ஓவரின் முடிவில் கோஹ்லி பெவிலியனுக்குப்போய் சாஸ்திரிக்குப்பக்கத்தில் உட்கார்ந்ததும், ரோஹித் கேப்டன்சியை ஏற்றதும்தான் காரணம் என்கிறார்கள் ரசிகர்கள்! இருக்கும். வைஸ்-கேப்டன் ரோஹித் அணியின் பௌலிங்/ஃபீல்டிங்கை கையில் எடுத்துக்கொண்டதும் கைமேல் கிடைத்ததே பலன்.  ஷர்துல் டாக்குரிடம் பந்தைக்கொடுத்து, ஃபீல்டிங்கை மாற்றி அமைத்து, ஏதேதோ அவருக்கு சொல்லிக்கொண்டிருந்தார் ரோஹித் ஓவரின்போது. அதுவரை இடிமுழக்கம் செய்துகொண்டு, இங்கிலாந்தை வெற்றிக்கருகில் கொண்டுவந்து விட்டிருந்த பென் ஸ்டோக்ஸ் 16-ஆவது ஓவரின் முதல் பந்திலேயே  ஷர்துல் டாக்குரிடம் காலி. அடுத்த பந்தில் கேப்டன் மார்கன் போனார் வீட்டிற்கு. தோற்கும் நிலையிலிருந்த இந்தியா வெற்றியை நோக்கி வேகமாகத் திரும்பியது. கடைசி ஓவரில் 23 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில், ஆர்ச்சர் பௌண்டரி, சிக்ஸர் என ஆரம்பிக்க, டாக்குர் அழுத்தத்தில் வைட் போட்டுக் கலவரப்படுத்த ஒரே படபடப்பு!  இறுதியில் ஜார்டனின் விக்கெட்டும்  விழ, 8-ரன் வித்தியாசத்தில் வெற்றி இந்தியாவுக்கு. ’ப்ரெஸ்’ முன் வாயைத்திறக்க வந்துவிட்டார் கோஹ்லி!

சரி விடுங்கள் – ரோஹித்துக்கும், ரஹானேக்கும் ‘க்ரெடிட்’ கொடுக்கமாட்டார்கள்தான். சாஸ்திரியின் மூளையினாலும், கோஹ்லியின் ‘வியூகங்களாலும்’, உத்வேகத்தினாலும்தான் இந்தியா முன்னே வென்றது, நேற்று வென்றது, நாளையும் அவ்வாறே வெல்லும் என வைத்துக்கொள்வோம்.

இன்று பேசாமல் ராஹுலை கையில் ஒரு லால்லிபாப்பைக் கொடுத்து உட்காரவைத்துவிட்டு, இஷானை ரோஹித்துடன் ஓப்பன் செய்ய விட வேண்டும். சுந்தர் போன மேட்ச்சில் ரன் ஓவராகக் கொடுத்தவிட்ட பின்னணியில், அக்ஷர் பட்டேல் அல்லது சாஹல் வரலாமோ? இன்று (20-3-21) கடைசியும், தொடரின் விதியை எழுதப்போவதுமான மேட்ச்.. சர்ச்சைகள் இல்லாது நன்றாக விளையாடப்படுமாக!

**