கடந்த நாலு வாரங்களாக இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் குஷிப்படுத்திவரும் பெண்களின் முதல் இந்திய டி-20 லீக் ஆன WPL (Women’s Premier League), இறுதிக் கட்டத்தை வந்தடைந்திருக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் பெண்கள் அணி, மும்பை இந்தியன்ஸ் மகளிர் குழாமுடன் WPL கோப்பைக்காக மோதத் தயாராய் உறுமிக்கொண்டு நிற்கிறது.
Meg Lanning (DC) & Harmanpreet Kaur (MI) posing with the WPL Cup
இதுவரை நடந்த சுவாரஸ்யமான போட்டிகளில் இந்த இரு அணிகள்தான் டாப்கிளாஸ் என்பதில் எந்த சந்தேகமும் எவருக்குமில்லை. மூன்றாவது இடத்தில் உ.பி.வாரியர்ஸ். 4,5 ஆவது இடங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் ஜயண்ட்ஸ்! அணியின் பலம் என்று பார்த்தால் மும்பை இண்டியன்ஸ்தான் மனதில் முதலில் வருகிறது. டெல்லியும் சளைத்ததில்லை. முதலில் ஃபைனலில் நுழைந்த டீம் அதுதானே. உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டனான மெக் லானிங் (Meg Lanning) தலைமையிலான டெல்லி அணியில் இந்தியாவுக்கு U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த ஷெஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues), ஷிகா பாண்டே, மரிஸான் காப், அலைஸ் கேப்ஸி(Alice Capsey), ஜெஸ் ஜோனஸன் எனத் திறன்வாய்ந்த வீராங்கனைகள்.
Alice Capsey (centre) being congratulated for a wicket by Delhi Capitals’ girls.
இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமை தாங்கும் மும்பை இண்டியன்ஸில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஹேலி மாத்யூஸ், WPL -ல் முதல் ஹாட்ரிக் வீழ்த்திய இஸ்ஸி வோங், முன்னேறிவரும் இந்திய வீராங்கனை சைகா இஷாக் (Saika Ishaque), யஸ்திகா பாட்டியா (Yastika Bhatia), ஆல்ரவுண்டர்கள் அமேலியா கர் (Amelia Kerr), நாட் ஸிவர்-ப்ரண்ட் (Nat Sciver-Brunt), ராதா யாதவ் போன்ற in-form players.
Hayley Mathews – Mumbai Indians’ opener
மும்பையின் ப்ராபர்ன் (Brabourne) ஸ்டேடியத்தில் மகளிர் கிரிக்கெட்டின் கடும்போட்டி ஒன்று நிகழவிருக்கிறது நாளை இரவு (26-3-23). மும்பையின் அந்தத் திகிலான இரவில், அழகுமிகு WPL கோப்பை யார் கைகளில் அமர்ந்து மின்னுமோ!
சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில், இங்கிலாந்தைப் போட்டுத்தள்ளிவிட்டது இந்தியா. தொடரின் தற்போதைய ஸ்கோர் 1-1. சரி, இப்போது அடுத்த காட்சி !
இன்று சென்னையில் கோலாகலமாக வருகிறது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம்(18-2-21 மதியம், Star Sports 1 சேனல்). எட்டு IPL அணிகள், கடந்த ஆண்டின் தத்தம் லிஸ்ட்டிலிருந்து முக்கியமான சிலரைத் தக்கவைத்துக்கொண்டு, நிறையப்பேரைக் கழட்டிவிட்டிருக்கிறார்கள். அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2020-இல், கொடுத்த காசுக்கு ஏற்ற, சரியான ஆட்டம் காண்பிக்கவில்லை அவர்கள். சிலருக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை! அவர்களில் சிலர்: க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் ஃபின்ச், நேதன் கூல்ட்டர்-நைல் (ஆஸ்திரேலியப் புலிகள்), மொயீன் அலி (இங்கிலாந்து) ஜிம்மி நீஷம் (நியூஸிலாந்து). வெளியேற்றப்பட்ட இந்திய சீனியர்களில் சிலரும் இன்றைய ஏலத்தில் முழித்துக்கொண்டு நிற்கிறார்கள் (ரூவா போச்சே.. இன்னிக்கு என்ன கெடைக்குமோ, கெடைக்காதோ?) : ஹர்பஜன் சிங், பியுஷ் சாவ்லா, கேதார் ஜாதவ், ஷிவம் துபே, முரளி விஜய், உமேஷ் யாதவ். இவர்களில் சிலர் திரும்பவும் வாங்கப்படலாம். ஆனால் முன்பு கிடைத்த ’பணப்பெட்டி’ நிச்சயம் கிடைக்காது! சொற்ப பணத்தில் ஒரு குறிப்பிட்ட அணிக்குள் வரலாம்.
Arjun Tendulkar
ஆரம்பத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் தங்களை ஐபிஎல் 2021 ஏலத்திற்காகப் பதிவு செய்திருந்தார்கள். அவர்களை ‘ஆராய்ந்த’ இந்திய கிரிக்கெட் போர்டு பலரை, லாயக்கில்லை என நீக்கிவிட்டது. 298 பெயர்களை மட்டுமே ஏலத்தில் இருக்கிறார்கள். இவர்களில் உள்நாட்டு வீரர்கள், அந்நியநாட்டவர் கலவை. பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, நேபாளம், ஆஃப்கானிஸ்தான் போன்ற குட்டிநாடுகளின் வீரர்களும் உண்டு. இது அல்ல சுவாரஸ்யம். சில இளம் இந்திய வீரர்கள், நாட்டிலேயே அதிகமாக அறியப்படாதவர்கள், சமீபத்திய ’முஷ்டாக் அலி 20-ஓவர் கோப்பை’யில் சிறப்புப் பங்களிப்பு செய்தவர்கள் – தங்களின் big break-ற்காகக் காத்திருக்கிறார்கள், ஏல லிஸ்ட்டில். அவர்களில் அதிர்ஷ்டக்காரர்கள் யார், யார்? இன்று மாலை வெளிச்சம் விழும்.
Khrivitso Kense, Nagaland Spinner
ஐபிஎல்-இல் ’நுழைய முயற்சிக்கும்’ இளம் இந்திய வீரர்கள் : பேட்ஸ்மன்கள் முகமது அஜருத்தீன் (கேரளா), விவேக் சிங் (பெங்கால்), விஷ்ணு சோலங்கி (பரோடா). ஆல்ரவுண்டர்கள் ஷாருக் கான் (தமிழ்நாடு), அர்ஜுன் டெண்டுல்கர் (மும்பை). லெக்-ஸ்பின்னர் க்ரிவிட்ஸோ கென்ஸே (Khrivitso Kense) (நாகாலாந்து). இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் சேத்தன் ஸகாரியா (சௌராஷ்ட்ரா), லுக்மன் மேரிவாலா (குஜராத்), மிதவேகப் பந்துவீச்சாளர் ஜி.பெரியசாமி (தமிழ்நாடு -கடந்த TNPL-ன் man of the series, நடராஜனின் ஊர்க்காரர், ஊக்குவிக்கப்பட்ட நண்பர்!) போன்றோர்.
மேலே சொன்னவர்களில் சுவாரஸ்யமானவர்கள் சச்சின் டெண்டுல்கரின் 21-வயது மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இடதுகை வேகப்பந்துவீச்சாளர், பயனுள்ள லோயர்-ஆர்டர் பேட்ஸ்மன். மும்பை அணியின் நெட்-பௌலராக அபுதாபி ஐபிஎல்-இல் இருந்தவர். எந்த அணியாவது இன்று இவரைக் ’கவனிக்குமா’! இன்னொரு sensation : கென்ஸே! 16-வயது நாகாலாந்து லெக்-ஸ்பின்னர். கடந்தமாதம்தான் சென்னையில், நாகாலாந்து அணிக்காக தன் முதல் டி-20 போட்டியை விளையாடினார் – முஷ்டாக் அலி கோப்பையில். நாலே போட்டிகளில் இவர் காண்பித்த ’ஸ்பின்’ சாகஸம், ‘மும்பை இண்டியன்ஸ்’ அணியைக் கவர்ந்திருக்கிறது. நாகாலாந்தில் எங்கோ ஒரு மூலைக்கிராமத்தில் சுற்றிக்கொண்டிருந்த இந்த இளைஞனை மும்பை இண்டியன்ஸ் தொடர்புகொண்டு போனமாத இறுதியில் தங்கள் அணிக்கான புதியவர்களின் பயிற்சிகளில் சேர்த்திருக்கிறது. உண்மையில் இவரை ‘ஏலத்தில்’ மும்பை வாங்குமா? அல்லது வேறு ஏதாவது அணியின் கண்ணில் படுவாரா? மாலையில் தெரியலாம்.
இன்னொரு விஷயம்! Kings XI Punjab தன் பெயரை ’பஞ்சாப் கிங்ஸ்’ என்று மாற்றிக்கொண்டுவிட்டது. பெயர் ‘ராசி’ எப்படியோ!
மிச்சமிருக்கும் அணிகளிடையே நடக்கவிருக்கும் கடும்போட்டிகளை இனி, ‘ஆராம்ஸே’ உட்கார்ந்து ரசிக்கலாம். சாதிப்பவர்களைக் கொண்டாடலாம்! சென்னை அணிக்காக இரவு பகலென உருகிய, முணகிய, மனதுக்குள் கிரிக்கெட் ஆடிய சிஎஸ்கே ரசிகர்களே.. துடித்தது, துவண்டது போதும். கிரிக்கெட் எனும் மாபெரும் விளையாட்டை ஆராதியுங்கள், ஆனந்தியுங்கள். இனிவரும் IPL போட்டிகளில் உயிர்த்துடிப்புடன் யார் யார் விளையாடுகிறார்கள் என pure cricketing pleasure-க்காகப் பார்த்து மகிழுங்கள். You deserve better things..
ஏதோ வெறுப்பில், அலுப்பில், சொரணை ஏதுமில்லாமல், புதிய வீரர்களை, பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்களை, இதுகாறும் மைதானத்துக்குள் டவல், ட்ரிங்க்ஸ் எடுத்துவந்தவர்களை, ஒரே மேட்ச்சில் உள்ளே தள்ளிப் பதறவைத்து அணியையும் வீரர்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடப் பார்த்தாரா மஹீந்தர் சிங் தோனி? அதாவது சென்னையின் ‘தல’? இவரைப்போய் ஓவராக ’போற்றி போற்றி’ எனப் பாடி, தலையில் தூக்கிவைத்து ஆடி – கொண்டிருந்த தமிழர்களுக்கு இது தேவைதான். தோல்வி எதிர்வந்து முட்டி மோதி சாய்த்தபின், கீழேபோட்டு மிதித்தபின் குறை சொல்லி, குற்றம்சாட்டிப் பிரயோஜனம் இல்லை. தோனியின் ‘ஆட்டம்’ ஆட்டம்கண்டுவிடவில்லை. முற்றிலுமாக முடிந்துவிட்டது. ரோஹித் ஆடாத, கேப்டனாக இல்லாத மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக 30 ரன்களில் 6 விக்கெட்டுகள் வீழ்ந்தது- கேப்டன் தோனி உட்பட- என்பது, ’கண்முன்னே தெரிந்தது, தெரியாதது’ என எல்லாவற்றையும் சேர்த்தே சொல்கிறது. விளக்கவேண்டியதில்லை.
2019-ல், உலக்கோப்பைத் தோல்விக்கப்புறம் உடனடியாக ஓய்வை அறிவித்திருக்கவேண்டும் தோனி. வயசாகிவிட்டது என்பது அப்போதே ஸ்க்ரீனில் தெரிந்ததே. செய்யமாட்டாரே.. ஒரு வருடத்துக்கு ஆடாமல் ஆறப்போட்டு, மற்றவர்களைத் தன் ரிடையர்மெண்ட் பற்றிப் பேசவைத்து, கேட்டு மகிழ்ந்து, முடிவேதும் எடுக்காமலும் காலம் கடத்துவதில் ஒரு கர்வம். ’தல’க்கனம். தனி சுகம். கூடவே நிறைய ’டைமும்’ கிடைத்தது அல்லவா ‘தல’க்கு. எதுக்கு? விதவிதமான விளம்பரப்படங்களில் ஆனந்தமாக நடித்து, கூவிக்கூவி சாமான்களை விற்க. விளம்பர உலகிலும் நான்தான் சூப்பர்ஸ்டார் என வணிக உலகிற்குக் ’காண்பிக்க’வேண்டாமா? இதுவரை சேர்த்த சொத்தும் போதாதே. இன்னும்.. இன்னும்..
ஒருகாலத்தில்.. ஒரு காலத்தில் இந்தியாவுக்காக நன்றாக ஆடியவர். இரண்டு உலகக்கோப்பை வெற்றிகளுக்குக் காரணமானவர். மஞ்சள் சட்டைகளைப் பெரும் அணியாக ஐபிஎல் -இல் நிலைநாட்ட ஒத்துழைத்தவர். நிலைகுலைந்ததற்கும் அவரேதான் பிரதான காரணமெனினும்….
19 டிசம்பர் 2019-ல், கொல்கத்தாவில் கோலாகலமாக நடந்த ஐபிஎல் (IPL-Indian Premier League) ஏலத்தை ஸ்டார் நெட்வொர்க்கில் பார்த்துக் களித்தேன். 8 ஐபிஎல் அணிகளும் முக்கியமெனத் தாங்கள் கருதிய போனவருடத்திய வீரர்கள் 10-15 பேரைத் தக்கவைத்துக்கொண்டு, மீதமுள்ளவர்களை ஏலத்தில் தூக்குவதில் போட்டிபோட்டன. ஏலத்தில் இருந்த 338 கிரிக்கெட் வீரர்களில் இந்திய மற்றும் அந்நியநாட்டு வீரர்கள் பலர். அதிரடி பேட்ஸ்மன்கள், ஆக்ரோஷ பௌலர்கள், ஆல்ரவுண்டர்களோடு, விக்கெட்கீப்பர்கள் சிலர் என சுவாரஸ்யக் கதம்பம். ஏலத்தில் எடுக்கப்படவேண்டியவர்கள்இந்த 338-லிருந்து, 73 பேர்கள்தான். சிறந்த வீரர்கள் அல்லது அணியின் தேவைக்கேற்றவர்கள் எனக் கருதப்பட்டவர்களுக்காக நான், நீ என போட்டாபோட்டி ஆரம்பமானது.
SRH -இன் காவ்யா !
அந்தந்த அணியின் ஜெர்ஸி நிறத்திற்கேற்ப அணியின் உரிமையாளர்கள் அல்லது தேர்வாளர்கள், ஆலோசகர்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகள்-மேஜைகள் – ஒரே வண்ணமயம்தான். பளிச்சென்று தெரிந்தவை பஞ்சாபின் சிவப்பு மேஜை, சென்னை(CSK)யின் மஞ்சள், கொல்கத்தா(KKR)வின் பர்ப்பிள், மும்பை(MI)அணியின் நீலம். மும்பை அணிக்கென நீத்தா அம்பானி (Nita Ambani) பிரதானமாக பளபளவென அமர்ந்திருந்தார்! பஞ்சாபிற்காக ஒவ்வொரு வருட ஏலத்தின்போதும் வந்து, கூந்தலை இடது வலதாகக் கோதி அலையவிடும் , அணி உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ரீத்தி ஜிந்த்தா (Preity Zinta) வராதது ஏமாற்றம் வேடிக்கை பார்ப்பவருக்கு. கொல்கத்தா அணிக்கானவர்களில் முன்னாள் பாலிவுட் பிரபலம் ஜூஹி சாவ்லா வெள்ளையில் வந்து அமர்ந்திருந்தார். இருந்தும் டிவி பார்ப்போர் மற்றும் பார்வையாளர்களின் கண்கள் அடிக்கடி மேய்ந்தது ஹைதராபாத் அணியின் பக்கம்தான். என்ன விசேஷம்? அங்கே ஒரு மஞ்சள் முகம். துறுதுறு யுவதி! யாரது என்கிற க்யூரியாஸிட்டி இந்தியர்களின் மண்டையைப் பிளந்துவிடுமே! பின்னர் தெரிந்தது. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் சொந்தக்காரரான கலாநிதி மாறனின் மகள். காவ்யா. வெள்ளைப்பல்வரிசை மின்ன அடிக்கடி சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும், ஏலத்தைத் தூக்கிவிட்டுக்கொண்டும் ஆனந்தமாக இருந்தார். கிரிக்கெட்டில் ஏகப்பட்ட ஆசை என்பதோடு, ‘ஸன் குழும’த்தில் மியூஸிக் இன்-சார்ஜாம் காவ்யா. உபரி தகவல்.
மேடையில் ஏலம்கூவுபவர் (auctioneer) ஒவ்வொரு செட் செட்டாக அமைக்கப்பட்ட வீரர்களின் பெயர்களிலிருந்து ஒரு சீட்டை வாங்கி, குறிப்பிட்ட வீரரின் பெயரை, ஏற்கனவே அணிகளுக்குக் கொடுக்கப்பட்ட பட்டியல்படி வரிசைஎண்ணோடு மைக்கில் அறிவிக்கிறார். சில சமயங்களில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என (அவருக்குப் பிடித்த?) நாட்டின் பெயரையும் சொல்வதுண்டு. மற்றபடி ஏலத்திற்கு விடப்படும் வீரர் ஒரு பௌலரா, பேட்ஸ்மனா என்று சொல்வதில்லை. புகழ்பெற்ற வீரர் பெயர் வரும்போது இது பிரச்னையில்லை. 22-23 வயதிற்குக்கீழ்ப்பட்டவர்கள், Under-19 அணிவீரர்கள் பெயர் தலைகாட்டும்போது, யாரப்பா இது, பேட்ஸ்மனா, பௌலரா எனக் குழப்பம் ஏற்படுகிறது. டிவியில் ஓரத்து விண்டோவில், இதுவரை அவர் ஆடிய ஆட்டம்பற்றி கொஞ்சம் புள்ளிவிபரம் தெரிகிறது! அணிக்காரர்கள், வீரரின் எண்ணை வைத்து, தங்கள் பட்டியலில் அவரின் விளையாட்டுக் கதையைப் பார்த்துக்கொள்கிறார்கள். உடனே ஒவ்வொரு மேஜையைச்சுற்றிலும் படபட ஆலோசனை, லேப்டாப்பில் அந்த வீரர் பற்றிய புள்ளிவிபரங்களை ஆராய்தல், தலையைச் சொறிதல், பக்கத்திலிருப்பவர் காதில் ஓயாத கிசுகிசு, யார் முதலில் கையைத் தூக்குகிறார்கள் என நோட்டம்விடல், தானும் 10, 20 லட்சமெனத் தூக்கிவிட்டுப் பார்த்தல், நேரம் பார்த்து அமுங்கிவிடல் – என ஒரே அமர்க்களம். இந்த மாதிரிக் கூத்துகளிடையே இந்திய, அந்நிய வீரர்கள் விலைபோனார்கள்.
சின்னப்பையன் ஜெய்ஸ்வால் !
ஏலத்தின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் க்றிஸ் லின் (Chris Lynn)-ஐ மும்பை இண்டியன்ஸ் ஆரம்பத்தொகையான (player’s base price) ரூ.2 கோடிக்கே வாங்கியது. நீத்தா அம்பானியின் முகத்தில் மலர்ச்சி! கடந்த சீசனில் KKR-அணிக்கு விளையாடிய அதிரடி வீரர் இந்த லின். ராபின் உத்தப்பா, மற்றும் ஜெயதேவ் உனாட்கட்டை (Jayadev Unadkat) ராஜஸ்தான் ராயல்ஸ், தலா ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. Good buys. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) இங்கிலாந்து கேப்டன் அய்ன் மார்கனுக்கு(Eoin Morgan) ரூ.5.25 கோடி கொடுத்தது அதிகம்தான். பார்க்கலாம். ஆஸ்திரேலிய டி-20 கேப்டன் ஆரோன் ஃபிஞ்சை(Aaron Finch), விராட் கோஹ்லி தலைமை தாங்கும் பெங்களூரு அணி ரூ.4.4 கோடிக்கு வாங்கியது. அவரது திறமைக்கு அது சரியான விலை. இங்கிலாந்தின் ஜேஸன் ராய், டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.1.5 கோடிக்கு மலிவாகத் தூக்கப்பட்டார். இந்திய டெஸ்ட் வீரர்களாக முத்திரை குத்தப்பட்ட புஜாரா, விஹாரி ஆகியோரை எந்த அணியும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஸ்டூவர்ட் பின்னி, மனோஜ் திவாரி ஆகியோரும் ஏலம் போகவில்லை. Sad.
இரண்டாவது ரவுண்டிலிருந்து, ஏலம் வெகுவாக சூடுபிடித்தது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) பெங்களூர், டெல்லி அணிகளுக்கிடையே புகையைக் கிளப்பினார். மாறி மாறி இரு அணிகளும் விலையை உயர்த்த, 14.75 கோடிவரை ஏற்றிவந்த டெல்லி, தடாலென்று விலகிக்கொண்டது! உள்ளே புகுந்தது கொல்கத்தா. பெங்களூரோடு கடும்போட்டி போட்டு, ரூ.15.5 கோடிக்கு கம்மின்ஸை வாங்கியது. இந்த அளவுக்கு இவருக்கு hype தேவைதானா? கம்மின்ஸ் தன் வேகத்தை ஆட்டத்தில் காண்பிப்பாரா? விக்கெட்டுகள் விழுமா, இல்லை, KKR-ன் ஷாருக் கானுக்கு நாமம் தானா!
அதிக விலைக்குப்போன மேலும் சில வெளிநாட்டு வீரர்கள்: போனவருடம் ஐபிஎல் ஆடாத, ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்(Glenn Maxwell) ரூ. 10.75 கோடி (பஞ்சாப்), தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் க்றிஸ் மோரிஸ் (Chris Morris) ரூ. 10 கோடி (பெங்களூர்), முதன்முதலாக ஐபிஎல் ஏலத்தில் பங்குபெற்ற வெஸ்ட் இண்டீஸின் பௌலர், ‘சல்யூட்’ புகழ் ஷெல்டன் காட்ரெல் (Sheldon Cottrell) ரூ. 8.25 கோடி (பஞ்சாப்), ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நேத்தன் கூல்டர்-நைல் (Nathan Coulter-Nile) ரூ.8 கோடி(மும்பை), வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மன் ஹெட்மயர் (Shimron Hetmyer) ரூ. 7.75 கோடி (டெல்லி).
போனவருட வீரர்களை அதிகமாகக் கழட்டிவிடாமல் வைத்துக்கொண்டதால், கொஞ்ச இருப்புப் பணத்துடன் உட்கார்ந்து, மற்றவர்கள் பணத்தை விசிறி ஏலம் எடுப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), திடீரென ஒரு சமயத்தில் உள்ளே புகுந்து, இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் சாம் கர்ரன் (Sam Curran)-ஐ ரூ.5.5 கோடிக்கு வாங்கியது. நல்ல பர்ச்சேஸ்தான். ஆனால் சென்னை, ஸ்பின்னர் பியுஷ் சாவ்லாவுக்கு ரூ.6.75 கோடி கொடுத்தது அசட்டுத்தனம். சென்னையிடம் ஏற்கனவே ஜடேஜா, ஹர்பஜன், கரன் ஷர்மா ஆகிய ஸ்பின்னர்கள் உண்டு. இறுதியில் பணம் கரைந்துவிட்ட நிலையில், முதல் ரவுண்டில் ஏலம்போகாத TNPL ஸ்டாரான ஸ்பின்னர் சாய் கிஷோரை, 20 லட்ச ரூபாய்க்கு மலிவாக வாங்கிப் போட்டது சென்னை. தமிழ்நாட்டின் இன்னுமொரு TNPL ஸ்பின்னரான, வித்தியாச ஆக்ஷன் காட்டும் வருண் சக்ரவர்த்தி ரூ.4 கோடிக்கு, கொல்கத்தா அணியினால் வாங்கப்பட்டார். கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் ‘சாய்ஸ்’ ஆக இருந்திருக்கும்.
பெரிசு: ப்ரவீன் டாம்பே
இந்தியாவின் 19-வயதிற்குக் கீழ்ப்பட்டோரின் கிரிக்கெட் அணியிலிருந்து சில வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டது நேற்றைய விசேஷம். இந்திய U-19 கிரிக்கெட் கேப்டன் 19-வயது ப்ரியம் கர்க் (Priyam Garg) மற்றும் 22-வயது அதிரடி ஜார்கண்ட் பேட்ஸ்மன் விராட் சிங் ஆகியோர் தலா ரூ. 1.90 கோடிக்கு ஹைதராபாத் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டார்கள். கோச் வி.வி.எஸ். லக்ஷ்மணுடன் பேசியபின், நம்ப காவ்யா செய்த வேலை! மேலும், லெக்-ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் பஞ்சாப் அணியினால் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். ராஜஸ்தான் பார்த்துக்கொண்டிருக்குமா? இந்திய U-19-அணிக்காகத் தேர்வாகியிருக்கும் 17-வயது பேட்ஸ்மன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashaswi Jaiswal) -ஐ ரூ.2.40 கோடிக்கும், வேகப்பந்துவீச்சாளர் 19-வயது கார்த்திக் தியாகியை ரூ.1.30 கோடிக்கும் வாங்கியது. எதிர்காலத்தை மனதில் கொண்டு இரு இளைஞரையும் அணியில் இணைத்துக்கொண்டதாக ராஜஸ்தான் விளக்கியது. உத்திரப்பிரதேசத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்து, 15 வயதுவரை பானி-பூரி விற்றுவந்த சின்னப்பையன் ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது எனச் சொல்லலாமா?
இளசுகளா பார்த்து அணிக்குள் அள்ளிப்போட்டா எப்படி? பழுத்த பழத்தை யாராவது வாங்கவேண்டாமா? ப்ரவீன் டாம்பே (Pravin Tambe) என்கிற லெக்-ஸ்பின்னரை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா அணி. டாம்பேக்கு வயசு? சும்மா 48-தான்!
நேற்று (24-4-18) ஐபிஎல்-இல் குறைந்தபட்ச ஸ்கோர் போட்டியொன்று, காண சற்று விசித்திரமாக இருந்தது. மும்பை இண்டியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பையில் மோதிய போட்டி. எப்போதும் தோற்பதே நமக்கு வழக்கமாப் போச்சே..இந்தத் தடவையாவது ஜெயிச்சு, சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளில் அவருக்கு ஒரு வெற்றிப்பரிசு தரலாம் என நினைத்து மும்பை இண்டியன்ஸ் இறங்கியதாகத்தான் தோன்றியது ஆரம்பத்தில். நினைத்ததெல்லாம் ஒருவேளை, வாழ்க்கையில் நடந்துவிடலாம். ஆனால் ஐபிஎல்-இல் அப்படியெல்லாம் நடக்காது!
முதலில் ஆடிய ஹைதராபாத், ஆரம்பத்திலிருந்தே தடுமாறி ஒவ்வொரு விக்கெட்டாகப் பரிதாபமாகப் பறிகொடுத்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. முதல் மூன்று போட்டிகளை கம்பீரமாக வென்ற ஹைதராபாத், தோற்பதையே பொழுதுபோக்காகக்கொண்டிருக்கும் மும்பையை எதிர்த்து ஆடுகிற லட்சணமா இது? நம்பமுடியவில்லை. மிட்செல் மெக்லனகனின் (Mitchel McClenaghan) முதல் ஓவரிலேயே ஹைதராபாத்துக்கு மணி அடித்திருக்கவேண்டும். ஷிகர் தவனையும் சாஹாவையும் ஒரே ஓவரில் அவர் அலட்சியமாகத் தூக்க, கேப்டன் வில்லியம்சனும், மனிஷ் பாண்டேயும் பௌண்டரி அடிக்க ஆரம்பித்தனர். இந்த வருட ஐபிஎல்-லில் தன் முதல் மேட்ச் விளையாடிய ஆஃப்கானிஸ்தானின் முகமது நபியும், யூசுஃப் பட்டானும் இன்னும் ஆடவேண்டியிருக்க, ஒரு மதிக்கத்தக்க ஸ்கோரை ஹைதராபாத் எட்டும் எனவே தோன்றியது. ஆனால் பாண்டே, ஷகிப்-உல்-ஹசன், வில்லியம்சன் என அடுத்தடுத்து சரிந்து விழ, ஹைதராபாத் எக்ஸ்ப்ரெஸ் ஆட்டம் கண்டது. மும்பையின் தரப்பில் நன்றாக பந்துவீசிய மெக்லனகன், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் மார்க்கண்டே தலா 2 விக்கெட்டுகள் எனப் பலிவாங்கினர். ஹைதராபாத் 118 ரன் மட்டுமே எடுத்து, இன்று தொலைந்தோம் நாம் என மும்பையின் இரவு வானைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டது.
மும்பைக்கான இலக்கு 119 ரன் மட்டுமே. பூ! இவ்வளவுதானா..ஊதிருவோம்! என நினைத்து ஆட இறங்கியது மும்பை. ஹைதராபாதின் பௌலிங், வேகப்பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர்குமார், பில்லி ஸ்டான்லேக் (Billy Stanlake) இல்லாததால், பலகீனமாகத் தெரிந்ததும் ஒரு காரணம். ஆனால் அந்த இரவு மும்பை இண்டியன்ஸுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை மடியில் வைத்துக் காத்திருந்தது. பந்துவீச்சை ஆரம்பித்த சந்தீப் ஷர்மா அபாரமாக ஸ்விங் செய்ததோடு, கஞ்சத்தனமாக 3 ஓவரில் 9 ரன் மட்டும் கொடுத்து, மும்பையை தொடக்கத்திலேயே மூச்சுத் திணறவைத்தார். கூடவே எவின் லூயிஸையும் காலி செய்தார். ஸ்பின்னர்கள் ரஷித் கான், முகமது நபி, ஷகிப்-உல்-ஹசன் என ஹைதராபாத் குத்தாட்டம் போட, மும்பைக்கு அவசர ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. துவக்க ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 34, ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்ட்யா 24, என்பதைத் தவிர மும்பையிடம் காட்டிக்கொள்ள ஸ்கோர் ஏதுமில்லை. ரோஹித் ஷர்மா உட்பட யாருக்கும் பிட்ச்சில் என்ன நடக்கிறதென்றே கடைசிவரை புரியவில்லைபோலும். ஒரு கட்டத்தில் 78 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதவிக்க, ஹர்திக் பாண்ட்யா இன்னும் இருக்கிறார்..இலக்கை அடைந்துவிடலாம் என்கிற நப்பாசை மும்பை கேம்ப்பில் அப்போது கொஞ்சம் இருந்தது. ஆனால் டெஸ்ட் மேட்ட்ச்சிலேயே அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா இங்கே செய்ததென்ன? 19 ரன்களில் வெறும் 3 ரன். இலக்குப் பக்கம் வரவே முடியாமல், 19-ஆவது ஓவரில் 87 ரன்னில் ஆல்-அவுட்டாகிக் கேவலமாகத் தோற்று தன் தோல்விப் பட்டியலை நீட்டிக்கொண்டது மும்பை இண்டியன்ஸ். ஒரு கடினமான போட்டியை, 31 ரன் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத்.
இறுதியில் பார்த்தால், அப்படி என்னதான் நடந்தது? 118-க்குள் ஹைதராபாதைக் கட்டுப்படுத்தியதை, மும்பைக்கு அதனாலேயே நம்பமுடியவில்லை! தான் ஆடவரும்போது, பிட்ச்சில் ஏதோ பேய், பூதம் ஒளிந்திருக்கிறது என ஒரேயடியாகப் பயந்துவிட்டது. விளைவாக மிகையான ஜாக்ரதை உணர்வோடு அவ்வப்போது மும்பை பேட்ஸ்மன்கள் தடுப்பாட்டம் காண்பிக்க, ஹைதராபாத் பௌலர்கள் உள்ளே புகுந்து, பின்னிப் பெடலெடுத்துவிட்டார்கள். சித்தார்த் கௌல் 3 விக்கெட் சாய்க்க, பஸில் தம்பி, ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான் –தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 17 –ஆவது ஓவரை வீசிய ரஷீத், ஒரு ரன்னும் கொடுக்கவில்லை-அப்போது விளையாடிக்கொண்டிருந்தது ஹர்திக் பாண்ட்யா! இதிலிருந்தே எந்த மனநிலையில் இலக்கைத் துரத்தவந்தது மும்பை என்பது புரிந்துவிட்டிருக்கும். முடிவாக வெற்றிஇலக்கு, மும்பையைத் துரத்தி விரட்டிவிட்டது!