நினைந்து நினைந்து நெஞ்சம் . . !

நேற்றைய கவிதையின் (அந்தம்) தாக்கம் தொடர,
மேலும் ஒன்று கீழே முளைப்பது தவிர்க்கமுடியாததாகிறது !

ப்ராப்தம்

வெந்ததா .. வேகாததா ..
வெம்மையே போதாததா
என்னதான் சிந்தையோ
வாழ்வெனும் சந்தையோ
முதுகிலே ஆசையின்
முடிவிலா சவாரியோ
முதுமையின் கனவினில்
முறுவலிக்கும் விதியினில்
முக்தியென்றும் மோட்சமென்றும்
மோகம் கூட்டும் வேகமோ?

வெந்ததா.. வேகாததா ..
வெம்மையே போதாததா ?

**

பராமரிப்பு

முந்திக்கொண்டு முதுமை
சந்துக்குள்ளே புகுந்து
சிந்து பாடிவிடாதிருக்க
இளமை என்றும் ஓங்கியே
எழிலாய் மயக்கி நிற்க
தேர்ந்தெடுத்த உணவுவகை
முடிக்கு மென்மையான ஷாம்பு
முகத்துக்கு சுகமான ஃபேஷியல்
கைகளுக்கும் பாந்தமாக ஒரு லோஷன்
வாளிப்பான உடம்புக்கென
வகைவகையான மசாஜ்
மூலிகைஎண்ணெய்க் குளியல்
ஆசையாக அதீதமாகத்தான்
தங்களைக் கவனித்துக்கொள்கிறார்கள்
சோப்புத் தண்ணீரை வீணாக்காது
செடிகளுக்கு ஊற்றும் மனிதர்கள்

**

எங்கே நிம்மதி ?

சமீபத்தில் சென்னையில் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் செல்கையில் வழியைத் தவறவிட்டு, அவரையே நான் நிற்கும் இடத்துக்கு அழைக்கும்படி ஆனது. நம்மால் மற்றவருக்குக் கஷ்டத்தைத் தவிர வேறென்ன! நான் அடையாளம் சொன்ன சந்திப்பில் அவர் ஸ்கூட்டரில் வர, அவர் என்னைப் பார்த்து வண்டியை நிறுத்தியதாக நினைத்தேன். என்னை நோக்கிக் கையசைத்துவிட்டு, எதிரே வந்துகொண்டிருந்தவரை நிறுத்திப் பேசலானார். ரொம்பவும் நெருக்கமானவரோ?

விஷயம் வேறுவிதமானது என்று அவர்கள் பேசுகையில் புரிந்தது. எதிரே நடந்துவந்துகொண்டிருந்தவர் என் உறவினரின் உற்ற நண்பர். வயது 80-ஐ நெருங்கிக்கொண்டிருக்கவேண்டும். சோர்ந்த முகம். மெல்லிய தேகம். லேசான தள்ளாடல். கூடவரும் ஒருவருடன் எங்கோ வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறார். என் உறவினர் அவரிடம் கவலையோடு,

இந்த வெயில்ல எங்க கெளம்பிட்டீர்?

மடிப்பாக்கம் போறேன்..

ஏன், ஏதாவது விசேஷமா?

என்னோட இன்னொரு பிள்ளை வீட்டுக்கு போறேன்

வயசான காலத்துல, ஏன் இப்பிடி அலையறீர்? ஒரு இடத்தில இருந்தா என்ன? சின்னப் பையன் வீட்ல என்ன ப்ராப்ளம் ஒமக்கு?

நிம்மதி இல்ல இங்கே.. நான் அங்கே போறேன்!

ஹ்ம்..! நிம்மதியைத் தேடி இங்கிருந்து அங்கே. அங்கே போனால் கிடைத்துவிடுமா? சொன்னால் புரியாது; போய்ப் பார்த்தால் தெரியலாம். இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சையாய்த்தான் எப்போதும் தெரியும்.
வாழ்வின் ஒரு இடத்திலிருந்து, ஒரு புள்ளியிலிருந்து இன்னொன்றுக்கு, நிம்மதியைத் தேடி தீராப்பயணம். இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது இந்தப் பூமியில் மனித வாழ்க்கை. இது மனித இயல்போடு சம்பந்தப்பட்டது. இயல்பு என்பது மனம் சார்ந்ததல்லவா? மனமோ சஞ்சலமானது. சதா சர்வகாலமும் ஆடிக்கொண்டே இருப்பது. எந்த நிலையிலும் ஒரு contentment –நிறைவு, திருப்தி காணாதது. எதிலும் குறைகாணும் இயல்புடையது. இத்தகைய மனதை வைத்துக்கொண்டு காலட்சேபம் செய்யும் மனிதன் வேறு என்ன செய்வான்? அங்கும் இங்குமாய் அல்லாடுவதைத்தவிர ?

வயதானவர்களைக் கொஞ்சம் உற்று நோக்குகையில், அவர்களது நடவடிக்கைகளைக் கவனிக்கையில், மனம் கவலை கொள்கிறது. வயதாகிவிடுவதின் மூலமாய் இவர்களில் பெரும்பாலானோர் அடைந்ததென்ன? தலையிலே நரை. முகத்திலே வாட்டம். உடம்பிலே சோர்வு, தள்ளாடல். இது உடம்புக்கு நிகழும் இயற்கை. அவர்களின் மனதுக்கு? ஏதாவது நிகழ்ந்ததா? உடம்பு முதுமை அடைந்ததைப்போல், மனதும் முதிர்ச்சி அடைந்துள்ளதா? இல்லையே. பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் – வயதாகிவிட்ட சின்னப்பிள்ளைகள் ! இறுகிவிட்ட பிடிவாதம். மற்றவரின் கருத்தையோ, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையையோ ஏற்க, தாங்கிக்கொள்ள, அனுசரித்துப்போக இடம்கொடுக்காத மனநிலை கொண்ட சராசரி மனிதர்கள். பெரியவர்கள் என்கிற சமூக அந்தஸ்து இவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதில் குளிர்காய விரும்புகிறார்கள். ஆனால் அதற்கேற்ற மனப்பக்குவம், தகுதி இல்லை. அப்படி இல்லையே என்கிற பிரக்ஞையும் இல்லை.

காலத்தின் தவிர்க்க இயலாத வாழ்வியல் மாற்றங்கள் (lifestyle changes), பெற்றோர்-பிள்ளைகளிடையே நாளுக்குநாள் அதிகமாகிவரும் தலைமுறை இடைவெளி (ever-increasing generation gap) போன்றவைகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடுகின்றன. குடும்ப வாழ்க்கை என்பது தீவிர பரிணாம மாற்றம் கொள்ளும் காலகட்டத்தில், நிலைமையைப் புரிந்துகொள்ளாது, பக்குவமின்றி, கிணற்றுத்தவளைகளாக வாழும் முதியோரின் அந்திமக்காலம், அவர்களுக்கே பெரும் சோதனைக்கட்டமாக ஆகிவிடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

“மாறும் உலகில், மாறா இளமை அடைவோம் கண்ணா!“ என்று நாயகி பாடுவதாக வரும், ஒரு பழைய திரைப்படப் பாடலில். மாறா இளமைகொண்ட மார்க்கண்டேயனாக ஒவ்வொருவரும் ஆனால் – ஆஹா, ஜோராகத்தான் இருக்கும். ஆனால் அப்படி எழுதப்படவில்லையே நம் விதி! ஹாலிவுட் லெஜெண்ட்களில் ஒருவரும், அவரின் காலகட்டத்தில் பேரழகி எனக் கருதப்பட்டவருமான மர்லின் மன்ரோ (Marilyn Monroe), தன் இளமையின் உச்சத்தில், வாழ்வின் தவிர்க்கமுடியாத முதுமைநிலை பற்றி யோசித்துப் பார்க்கிறார். சொல்கிறார்: “சில சமயங்களில் நான் இப்படி நினைக்கிறேன்: முதுமையை எளிதாகத் தவிர்த்துவிடலாம்… இளமையிலேயே இறந்துவிட்டால் என்ன! ஆனால் ஒரு சிக்கல். வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவில்லை என்றாகிவிடும். நம்மை நாமே முழுதாகப் புரிந்துகொள்ளமுடியாது போய்விடுமே!“ அந்த இளம் வயதிலும், பக்குவ அறிவின் ஒளிக்கீற்றுகள் – flashes of brilliance at a relatively tender age…

**