விசாகப்பட்டினத்தில் விராட்டுக்குக் கிடைத்துவிட்டது வெற்றி. கடைசி நாளில் பௌலர்கள் முகமது ஷமியும், ரவீந்திர ஜடேஜாவும் போட்டுத் தாக்கியதில் நிலைகுலைந்து போனது தென்னாப்பிரிக்க பேட்டிங். முதல் இன்னிங்ஸில் திறமைகாட்டிய எல்கர், டி காக் (de Cock), டூ ப்ளஸீ (du Plessis) எளிதில் சரிந்துவிட, மார்க்ரம், பவுமா (Bavuma), டி ப்ருய்ன் போன்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பு இருந்தது. மார்க்ரம் அடித்த 39 போதவில்லை. அவர், ஜடேஜாவின் சுழல் பந்தை பௌலரின் தலைக்குமேல் தூக்க, ஜடேஜா ஒரு எம்பு எம்பி, இடது கையால் கேச்சை லவட்டிய விதம், விசாகப்பட்டினத்தின் மறக்கமுடியாக் காட்சி. (ஜடேஜா சராசரி உயரம்தான் என்பது இங்கே கவனிக்கப்படவேண்டியது.) ரசிகர்களும் சீட்டிலிருந்து எம்பிவிட்டார்கள்..
ஷமியின் ஒரு அருமையான பந்தில் பவுமா க்ளீன் -போல்ட். டி ப்ருய்ன் (de Bruyn) அஷ்வினின் வேகமாக உள்ளே திரும்பிய பந்தில் ஏமாந்து போல்டானார். பேட்டிங் வரிசையில் ஏழாவதாக இறங்கிய முத்துசாமியும், பத்தாம் நபராக உள்ளே வந்த டேன் பீட் (Dane Piedt)- உம் கடுமையாகப் போராடி தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 150-ஐக் கடந்து செல்ல உதவினர். பீட் அரைசதம். முத்துசாமி 49 நாட் அவுட். வரவேண்டிய மழையும் காலை வார, அவ்வளவுதான் கதை. 191-ல் ஆல் அவுட். 203 ரன் வித்தியாசத்தில் தோற்றது தென்னாப்பிரிக்கா.
இரண்டாவது இன்னிங்ஸில் வேகப்பந்துவீச்சாளர் ஷமி அசத்திவிட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட 11-க்கும் குறைவான ஓவர்களில் 5 விக்கெட். பழைய பந்தைப் பயன்படுத்துகையிலும், துல்லியமும், ஸ்விங்கும் காண்பிக்கமுடிந்தது அவரால். அடுத்த பக்கத்திலிருந்து தாக்கிய இடது கை வீச்சாளர் ஜடேஜாவுக்கு, 4 பேர் பலி. அஷ்வினுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்தான் எனினும், அவர் 350 -ஆவது டெஸ்ட் விக்கெட் எனும் சாதனை அளவை அடைய, அதுவே போதுமானதாக இருந்தது.

கிரிக்கெட் ஒரு டீம் விளையாட்டுதான். எனினும், மயங்க் அகர்வால் (முதல் இன்னிங்ஸ் 215), ரோஹித் ஷர்மா ( ஆட்டநாயகன், இரு இன்னிங்ஸிலும் தலா சதம்), அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்கள், ஷமியின் இரண்டாவது இன்னிங்ஸ் 5 விக்கெட், ஜடேஜா வேகமாக எட்டிய 200-ஆவது டெஸ்ட் விக்கெட், என தனிப்பட்ட இந்திய மைல்கற்கள் மின்னின இந்த டெஸ்ட்டில். அனேகமாக அடுத்த டெஸ்ட்டுக்கான (பூனே, 10 அக்.), இந்திய அணியில் மாற்றம் இருக்காது.
தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸ் சோகம் அவர்களைத் தடுமாறவைத்தாலும், எழுந்து வருவார்கள் பூனேயில். வேகப்பந்துவீச்சாளர் வெர்னன் ஃபிலாண்டர் (Vernon Philander) சரியாக வீசாத நிலையில், லுங்கி இங்கிடி {Lungi Ngidi (IPL-CSK)}, ககிஸோ ரபாடாவுடன் (Kagiso Rabada) ஜோடி சேர்ந்து பூனே பிட்ச்சில் உறுமக்கூடும். அனேகமாக டேன் பீட், ஸெனுரன் முத்துசாமி (Senuran Muthusamy) தொடர்வார்கள் எனத் தோன்றுகிறது. முத்துசாமி இரண்டு இன்னிங்ஸிலும் அவுட் ஆகாமல், ஸ்பின்னர்களின் கடுமைக்கெதிராக அழுத்தமாக நின்று ஆடியவிதம், ’he is technically very sound’ என்று தென்னாப்பிரிக்க கேப்டனைப் புகழவைத்துள்ளது. ஸ்பின் பௌலிங்கில் முத்துசாமி, நமது ஹனுமா விஹாரி மாதிரி. சில ஓவர்கள் மட்டுமே தரப்படும். விக்கெட் விழுந்தால் சரி. விழாவிட்டாலும் சரி.
பூனேயில் பார்ப்போம் – கோஹ்லியின் சுக்ர தெசை தொடருமா என்று !
**