Melukote temples – மலைமேலமர்ந்து யோகம் செய்யும் ஸ்வாமி

மேலக்கோட்டை பயணம் – இறுதிப் பகுதி

‘ஒரு கொடியவிலங்காய் கதிகலங்கவைத்து, உறுமி ஆர்ப்பரித்து மலைப்பிரதேசங்களில் அலைபவன் !’ என்கிறது ரிக்வேதம். யாரைப்பற்றி இப்படி ஒரு வர்ணனை? மகாவிஷ்ணுவைப்பற்றி. விஷ்ணுவா? அவர் சாந்த ஸ்வரூபன், ஆபத்பாந்தவன், காக்கும் கடவுளாயிற்றே! இந்தக் கடுமையான வர்ணனை அவரைப்பற்றியா? ஆம், மகாவிஷ்ணுவின் நரசிம்ஹ அவதாரக் காட்சியை இப்படிக் குறிப்பிடுகிறது ரிக்வேதம், இதுவன்றி, பிரும்ஹ புராணம், வாயு புராணம், அக்னி புராணம், சிவபுராணம், லிங்க புராணம், ஸ்கந்த புராணம் போன்றவைகளும் நரசிம்ஹ அவதாரத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. அதர்வணவேதத்தில் வரும் நரசிம்ஹ தபனி உபநிஷதம், கோபால தபனி உபனிஷதம் ஆகியற்றிலும் நரசிம்ஹ அவதாரம் குறிப்பிடப்படுகிறது. தபனி (Tapani –austerity) என்பது இங்கு ஒரு சன்னியாசியின் அகத்தூய்மை, புலனடக்கம் பற்றியது. இவற்றின் துணையுடன் ஒரு துறவி நரசிம்ஹமாகிய பரப்பிரும்ஹத்தில் தன்னை முழுமையாகச் சரணடையச் செய்வது, முற்றிலுமாகக் கரைப்பது என்றாகிறது.

Yoga Narasimha Swamy Temple, Melukote

வேதபுராணங்கள் இப்படியெல்லாம் குறிப்பிடமுயலும் நரசிம்ஹ ஸ்வாமி மேலக்கோட்டையில் திருநாராயணர் கோவிலுக்கருகிலேயே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடிக்கும் மேலாக உயர்ந்து நிற்கும் ஒரு குன்றின் மேல் எழிலாகக் காலங்காலமாய் அமர்ந்திருக்கிறார். யோகநரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் இந்தியாவின் மிகவும் ப்ரசித்திபெற்ற நரசிம்ஹர் கோவில்களில் ஒன்று. காலை 9 மணியிலிருந்து 1 மணிவரை, மாலை 5.30-யிலிருந்து 8 வரை பக்தர்களுக்காகத் திறந்திருக்கிறது. வருடாந்திர நரசிம்ஹ ஜெயந்தியன்று விசேஷ பூஜை உண்டு.

அடிவாரத்திலிருந்து மலையின் மேல் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை கார் செல்ல சாலை இருந்தது. அதுவரை சென்று மற்ற வண்டிகளுடன் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு மேலே பார்த்தோம். மலைப்பாக இருந்தது. இவ்வளவு உயரம் ஏறிவிடமுடியுமா? வெறுங்காலோடு பக்தர்கள் முன்னேறுவதைப் பார்த்து, ‘செருப்புகளைக் காரில போட்றுங்க சார்!’’ என்றார் ஓட்டுனர். அப்படியே செய்தோம். சாலையிலிருந்து கோவிலுக்கான அடிவாரப் படிகளை நெருங்குவதற்குள்ளேயே சாலையில் கிடந்த பொடிக்கற்கள் பாதங்களைக் கடும் சோதனைக்குள்ளாக்கின. வீட்டிலேயே ஹவாய் சப்பல்களுடன் பழக்கப்பட்ட பாதங்கள், கட்டாந்தரைக்கும் கற்களுக்கும் வருஷக்கணக்கில் அந்நியப்பட்டிருந்ததுதான் காரணம். பாதசுகத்தைப் பார்த்திருந்தால் பகவான் தரிசனம் தருவானா? அந்தக்காலத்தில் ஆழ்வார்களெல்லாம் வெறுங்காலோடும், வெறும் வயிற்றோடும் அல்லவா ஒவ்வொரு தலமாக அலைந்தார்கள் ?

படிகளில் கால்வைக்குமுன் கோவிலின் திவ்ய சரித்திரத்தை கொஞ்சம் நோட்டம் விடலாமா? மேலக்கோட்டை யோகநரசிம்ஹ ஸ்வாமி திருக்கோவில் இருக்கிறதே, அது பழையது, பழையது அத்தனைப் பழையது. புராணங்களிலும் இதனைப்பற்றிய குறிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த யோகநரசிம்ஹர் சாக்ஷாத் பிரஹலாதனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம். பிற்காலத்தில் ஹோய்சல அரசர்கள் இந்தக் கோவிலை புனரமைத்துக் கட்டினார்கள். நாம் இப்போது பார்ப்பது அவர்களது கட்டிடக் கலைநுட்பம் கலந்து காட்சியளிக்கும் அழகுக்கோவில்தான். மைசூர் மகாராஜாக்களின் வம்சத்தில் வந்த மூன்றாவது கிருஷ்ணராஜ உடையார் இந்த நரசிம்ஹப்பெருமானுக்குத் தங்கக் கிரீடம் உபயம் செய்து வணங்கியிருக்கிறார். திப்பு சுல்தானால் வழங்கப்பட்ட பெரிய தப்பு (பறை- drum) ஒன்றும் இந்தக் கோவிலில் உள்ளது.

தற்காலக் கதை கொஞ்சம்: மேலக்கோட்டையில் ISKCON அமைப்பு, வேத உபதேசத்திற்காக ஒரு பள்ளியை ஆரம்பித்து நடத்திவருகிறது. இது தன் கோஷாலாவில் 6 பசுக்களை வளர்க்கிறது. இவைதரும் பால் தினமும் யோகநரசிம்ஹரின் அபிஷேகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது.

பழங்காலத்தில் நம்மை பயணிக்க அழைக்கும் கோவிலின் படிகள் கரடு, முரடாக, கோணல்மாணலாக அமைந்திருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு 15-20 படி தாண்டியவுடன் நிற்பதற்கு கொஞ்சம் விஸ்தாரமான அகன்ற கடப்பைக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன; வயோதிக, மற்றும் கால் ப்ரச்னைகளோடு படியேறும் பக்தர்கள் சற்றே உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள வலதுபுறமாகக் கல்லிலேயே பெஞ்சுபோல் அமைத்துக் கட்டியிருந்தார்கள் அந்தக்காலத்து மனிதர்கள். படி ஏறிபவர்களுக்கு களைப்பு ஏற்படாதிருக்க, தாகம் தீர்க்கவென படிகளின் இரு பக்கங்களிலும் பெண்கள் மோர் விற்றுக்கொண்டு அமர்ந்திருந்ததைக் காணமுடிந்தது. அந்தக்காலத்து நல்ல பழக்கங்கள் சில இன்னும் மாறாதிருப்பதில் ஒரு திருப்தி.

முதலில் மலைப்பு ஏற்பட்டாலும், படிகளில் கால்வைத்து ஏற ஏற எப்படியும் மேலே கோவிலுக்குள் நுழைந்துவிடலாம் என்கிற நம்பிக்கையை நரசிம்ஹ ஸ்வாமி மனதில் விதைத்துக்கொண்டே இருந்தார். வயதான பெண்கள், சில ஆண்கள், இளம் வயதினர் என ஒரு சிறுகூட்டம் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. ஆங்காங்கே மற்றவர்களுக்கு வழிவிட்டு சற்று நின்று, மெதுவாக ஏறினோம். மொத்தம் 300 படிகள். சில இடங்களில் 45 டிகிரி கோணத்தில் ஏறுவதற்கு வசதியாகவும், வேறு சில இடங்களில் சற்றே செங்குத்தாகவும் இருந்து எங்களைக் கொஞ்சம் சோதித்து மேலனுப்பிவைத்தன படிகள். 270-280 படிகள் கடந்தவுடன் ஒரு நுழைவு வாசல் காலத்தைத் தாண்டியதாய் நின்றது. அங்கே இடதுபுறத்தில் ஒரு சிறிய ஆஞ்சனேயர் பக்தர்களைச் சற்றே இளைப்பாறவைத்து தன்னை வணங்கவைத்து அனுப்பினார். அவரை சிலநிமிடங்கள் வணங்கிவிட்டு வளைந்து மேலேறும் படிகளில் தொடர்ந்து ஏறினோம் . இதோ வந்துவிட்டது நரசிம்ஹர் கோவிலின் முகப்பு. மலைப்பு, களைப்பெல்லாம் போன இடம் தெரியவில்லை. உற்சாகமாக நுழைந்தோம் கோவிலுக்குள்.

காலங்காலமாய் எத்தனை எத்தனை ராஜாக்கள், ராணிகள், துறவிகள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து யோகநரசிம்ஹ ஸ்வாமியை வணங்கியிருப்பர்? அத்தகையை யுகாந்திரப் பெருமை வாய்ந்த ஒரு கோவிலுக்குள் நுழைகிறோம் என்கிற எண்ணம் ஒரு பெரும் வியப்பும், ஆச்சரியமுமாய் மனதை நிறைத்தது. கூட்டம் அதிகமில்லை . காலை 11 மணியைத் தாண்டி இருக்கும். நிதானமாக உள்ளே சென்று இடதுபுறம் திரும்பி கர்ப்பகிருஹத்தை வந்தடைந்தோம். எதிரே, துறுதுறு கண்களுடன் யோகப்பட்டை அணிந்து அமர்ந்தகோலத்தில் யோகநரசிம்ஹரின் கம்பீரக் காட்சி. இரண்டு அர்ச்சகர்கள் பக்தர்களைக் கவனித்துக்கொள்ள நின்றிருந்தார்கள். ஒருவரிடம் கொண்டுவந்திருந்த தேங்காய், பழத்தைக்கொடுத்து நைவேத்தியம் செய்யச் சொன்னோம். வாங்கியவர் வலதுபுற மூலைக்குச் சென்று தேங்காயை உடைத்து வாழைப்பழம், தேங்காயை யோகநரசிம்ஹருக்குக் காட்டிவிட்டு நொடியில் எங்களிடம் கொடுத்துவிட்டார். எந்த ஃப்ளைட்டைப் பிடிக்கவேண்டியிருந்ததோ அவருக்கு. ஒரு அர்ச்சனை இல்லை, மந்திரமோ, ஸ்லோகமோ முணுமுணுக்கக்கூட இல்லை. இங்கே கன்னடக் கோவில்களில் இப்படித்தான் வழக்க்மோ? தீர்த்த வட்டிலைப் பார்த்தோம். கையை நீட்டினோம். எங்களோடு நின்றுகொண்டிருந்த 10-12 பக்தர்களும் சாமியைக் கும்பிட்டு கை நீட்டினார்கள். நல்லவேளை. தீர்த்தம் கிடைத்தது. கூடவே துளசியும். மீண்டும் ஒருமுறை ஆசையோடு நரசிம்ஹரைப் பார்த்து நமஸ்கரித்து பிரஹாரத்தை நிதானகதியில் சுற்றிவந்தோம்.. இவ்வளவு பிரசித்திபெற்ற அருள்மிகு ஆண்டவனின் திருக்கோவிலைவிட்டு அவ்வளவு விரைவில் விலகிவிட மனம் வருமா! மற்றவர்களுக்கும் இப்படித்தான் தோன்றித்தோ என்னவோ, அவர்களும் மெதுவாகப் பார்த்துக்கொண்டே வந்தார்கள்.

இப்படி பிரகாரச்சுற்று முடியும் தருவாயில் சுவற்றில் ஏதோ பளபளத்தது. பார்த்தால் திருமாலின் பத்து அவதாரங்கள் வரையப்பட்டு நடுவில் பிரதானமாய் யோகநரசிம்ஹர் பித்தளைத் தகட்டில் ஜொலித்துக்கொண்டிருந்தார். என் மகளிடம் ’உன் RedMi-யின் கேமராவினால் ஒரு தட்டுத் தட்டிவிடு!’ என்றேன். யாராகிலும் தடை சொல்வார்கள் அல்லது திட்டுவார்கள் என்று தயங்கினாள். ’கோவிலிலிருந்து வெளிவரும் நிலையில் பிரகாரச்சுவரில்தான் இருக்கிறது சும்மா எடு. ஒன்றும் ஆகாது!’ என்றேன். அவசரமாக மொபைலை நரசிம்ஹஸ்வாமியின் முன்னே ஒருகணம் காண்பித்து லாவகமாக க்ளிக்கிவிட்டுத் வேகமாகத் திரும்பினாள். நரசிம்ஹரைத் தவிர வேறு யாரும் கவனித்ததாகக்கூடத் தெரியவில்லை.

பிரிய மனமில்லாமல் பிரிந்து, கோவிலுக்கு வெளியே வந்து, படிகளில் இறங்க ஆரம்பித்தோம். எதிரே சில வெளிநாட்டவர்கள் ஏறி வந்துகொண்டிருந்தார்கள். அயல்நாட்டு டூரிஸ்ட்டுகள். கோவில் வெளிக்கோபுர வாசலின் முகப்பில் இடதுபுறம் கொஞ்சம் உயரத்தில் கல்சுவற்றின் சித்திர வேலைப்பாடுகளுக்கிடையில், இப்போது கண்ணில்பட்டார் ஒரு குட்டி வினாயகர். கண்களை சுற்றுப்புறமாக ஓடவிட்டுக் காட்சிகளை ரசித்துக்கொண்டே கீழே இறங்கினோம். இளைஞர்கள், பெண்கள் என சிலர் மேலேறி வந்துகொண்டிருந்தார்கள்.

சில இடங்களில் கோவிலின் அருகே இடதுபுறமாக, விதவித உருவங்களில் பெரும்பாறைகள், பாறைகளின் வெடிப்பிலிருந்து கிளம்பியிருக்கும் பாரிஜாத மரங்கள். கீழ்விழுந்துகிடக்கும் அவற்றின் ஆரஞ்சுக்காம்புடன் கூடிய வெள்ளை மலர்கள், காற்றுவெளியின் லேசான சுகந்தம், குளுகுளுப்பு என ஒரு out of the world அனுபவமாகத் தோன்றியது. புதிரும் அழகும் மிளிரும் அந்தப் பிரதேசமே வருபவர்களிடம் கடந்தகால ரகசியங்கள்பற்றிக் கொஞ்சம் சொல்ல முயன்றதாகத் தோன்றியது. என் பெண் முன்சென்று திரும்பி, கோவிலைப் பார்த்துக்கொண்டு சில ஃபோட்டோக்களை கொஞ்சம் சாவதானமாக க்ளிக்கினாள். படிகளில் கைப்பிடிக் குழாயைப் பிடித்தவாறு இறங்கிவரும் ஒரு மத்திம வயதுப் பெண்ணின் கையிலிருக்கும் பையை ஆர்வமாகப் பார்த்து அருகிலுள்ள கைப்பிடிச் சுவரில் குதித்து நெருக்கம் காட்டியது ஒரு இளம் குரங்கு. நல்லவேளை, அந்தப் பெண் கவனிக்காததால் பதறவில்லை. குரங்காரும் என்ன நினைத்தாரோ, பறிக்கும் முடிவினைத் தள்ளிப்போட்டுவிட்டார் ! இன்னும் சில குரங்குகள் அங்கும் இங்குமாகத் தவ்வி சேட்டைகள் செய்தவண்ணமிருந்தன. சில மலை முகடுகளிலிருந்து தூரப்பார்வையில், மேலக்கோட்டையில் எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதுபோல் ஆழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தன.

பாரிஜாத மரங்களின் கீழ் கொஞ்சம் நின்றோம். எடுத்துப் பார்த்தேன் – கீழே விழுந்துகிடந்த பூக்கள் இன்னும் வாடாதிருந்தன. மேலே பல மரங்களில் இலைகளைக் காணோம். சில இளம் மொட்டுக்கள் இருந்தன. இந்தப் பாரிஜாதம் இருக்கிறதே… ஒருகாலத்தில் தேவலோகத்தில்தான் பூத்துக் குலுங்கியது ! அதுபற்றிய புராணக் கதை ஒன்றுண்டு:

பூலோகத்தில் இரவு தீண்ட ஆரம்பித்த ஒரு மாலைப்பொழுதில், கிருஷ்ணனின் மீது ஒயிலாகச் சாய்ந்திருந்தாள் ருக்மணி. மெல்லத் தலை உயர்த்தி, அவன் காதில் மிருதுவாகச் சொன்னாள்: ’’எனக்கு பாரிஜாதம் வேண்டும்!’’

கிருஷ்ணன் அவளைப் ப்ரியத்தோடு பார்த்தான். மெல்லிய புன்னகையோடு சொன்னான்: ‘எங்கே வந்து என்ன கேட்கிறாய் ருக்மணி! இது பூலோகம். பாரிஜாதம் தேவலோகத்தில்தானே இருக்கும்!’’

’’அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு அது வேண்டும்!’’ என்றாள் அவள்.

ருக்மணி பிடித்தால் விடமாட்டாள். கிருஷ்ணனும் வார்த்தைகளை வீணாக்குபவன் அல்ல. ‘உனக்காக தேவலோகம்போய் கொண்டுவருகிறேன் !’ என்றான்; மறைந்தான்.

உடன் பூலோகத்துக்குத் திரும்பியவன், அவளுக்குப் பிடித்த புஷ்பத்தைக் கொடுத்து சந்தோஷப்படுத்தினான். கூடவே தேவலோகத்திலிருந்து சிறிய பாரிஜாதச் செடி ஒன்றையும் கொண்டுவந்திருந்தான். ருக்மணியின் மாளிகைத் தோட்டத்தில் நட்டான். ‘இது பெரிசாகி நிறையப் பூக்கும் ! உனக்கு சந்தோஷம்தானே!’. என்றான். ருக்மணி கிருஷ்ணனின் அன்பில் மிகவும் நெகிழ்ந்துபோனாள்.

செடி மரமானது காலப்போக்கில். கிளைகள் அடர்ந்து படர்ந்தன. மொட்டுக்கள் தோன்றி இரவில் மலர்களாய்ச் சொரிந்தன. ஒரு இரவில் கிருஷ்ணனுடன் தன் தோட்டத்திற்கு வந்த ருக்மணி தான் கண்ட காட்சியில் அதிர்ச்சியுற்றாள். பாரிஜாத மரம் தன் பெரிய கிளைகளில் பலவற்றைப் பக்கத்து மாளிகையின் தோட்டத்துக்கு அனுப்பி அங்கே பூவாய் சொரிந்திருந்தது. பேருக்கு சில புஷ்பங்கள் மட்டுமே ருக்மணியின் தோட்டத்தில். பக்கத்து மாளிகையில் வசித்த அந்த அடுத்தவீட்டுப்பெண் யார்? சத்யபாமா ! பாரிஜாதத்தின் விஷமத்தை என்னவென்று சொல்வது!

கிருஷ்ணனும் கவனித்தான். ‘என்ன ருக்மணி!’ என்றான் மிக இயல்பாக.

‘நீ கொண்டுவந்து வைத்த அழகு மரம் என்ன காரியம் செய்திருக்கிறது? நீயே பார்!’ என்றாள் கடுப்புடன்.

’அதான் நன்றாகப் பூத்திருக்கிறதே!’ என்று அவளது முகத்தைப் பார்த்து முறுவலித்தான் அவன். .

‘எங்கே போய் பூத்திருக்கிறது? கவனித்தாயா!’ – ருக்மணி.

‘ஓ! கிளைகள் உன் தோட்டத்தைவிட்டு வெளியே போய்விட்டதா? அதனால் என்ன! உன் தோட்டத்திலும் பூத்துத்தானே இருக்கிறது!’ என்றான் மிக இயல்பாக. ருக்மணி அவனைப் பார்த்தாள். ’மகா கள்ளன் இவன்! உண்மையில் இதில் இவனுக்கு சந்தோஷமாகக் கூட இருக்கும்!’ என நினைத்தாள். அவனைப் பார்த்திருந்தவளுக்கு ஏனோ கோபம் தணிந்தது. ‘விடு இந்த மரத்தை! இதற்காக என் அன்பனைக் கோபித்துக்கொள்வேனா!’ என்று ஒருவழியாக சமாதானமுற்றாள் ருக்மணி.
இப்படி ருக்மணியையே சீண்டிப்பார்த்த புஷ்ப மரம் பாரிஜாதம். அதாவது நமது பூலோகத்தின் பவழமல்லி.
பாரிஜாதத்தின் கதை ஓடி நிற்க, தொடர்ந்து இறங்கி அடிவாரத்திற்கு வந்தோம். கார் நின்ற இடம் நோக்கி வருகையில் ஒரு ஆச்சரியம். ஒரு சர்வதேச சைக்கிள் பயணி போன்ற ஒருவர் அதற்கான headgear, shorts எல்லாம் அணிந்து நின்றிருந்தார். பக்கத்தில் அவரோடு ஊர்சுற்றும் வாகனம், பைகள், தண்ணீர் பாட்டில் இத்தியாதிகளுடன் அலங்காரமாய் நின்றிருந்தது. வயதானவர். யாருக்காகவாவது காத்திருக்கிறாரா? கொஞ்சம் பேச்ச்சுக் கொடுத்துப்பார்ப்போம் என்றது மனது. நெருங்கி, ’Can you speak in English?’ என்றேன். வெளிநாட்டவரெல்லாம் ஆங்கிலம் பேசவேண்டும் என்று யார் சொன்னது?

’Yes, I can !’என்றார் உற்சாகத்துடன்.

‘எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள்? உங்கள் பெயர்?’ என்று கேட்டேன்.
’France! I am Michelle ‘என்றார் அவர். துருக்கி, க்ரீஸ், மொராக்கோ என்றெல்லாம் ஒரு ரவுண்டடித்து- சைக்கிளில் பிரதானமாக – இப்போது இந்தியா வந்திருப்பதாக சொன்னார்.

ஆச்சரியப்பட்டு ‘எப்போது புறப்பட்டீர்கள் ஃப்ரான்ஸிலிருந்து? -கேட்டேன். ’மூன்றுவருடங்களாயிற்று!’ என்றார். நெடும் பயணம் அவரை வதக்கி புடம் போட்டிருந்தது நன்றாகவே தெரிந்தது. ’நீங்கள் மட்டுமா கூட யாரும் வந்திருக்கிறார்களா?’ –மேலும் விஜாரித்தேன். ’என் மனைவி! மேலே ஏறிக் கோவிலுக்குப்போயிருக்கிறாள் !’ என்று சொல்லி மேலும் ஆச்சரியப்படுத்தினார்.

கோவில் என்றவுடன் இவருக்குக் கொஞ்சம் சொல்லவேண்டியதுதான் என நினைத்து ஆரம்பித்தேன். ’மிகவும் புகழ்பெற்ற மலைக்கோவில் இது. நீங்கள் கேள்விப்பட்டு இங்கு வந்திருப்பது சந்தோஷமாயிருக்கிறது’ என்றேன். ’மும்பையிலிருந்து பெங்களூர் வந்து தங்கியிருக்கிறோம். கர்னாடக சுற்றுப்புறங்களில் சுற்றுகிறோம்’ என்றவர், ’இது ஒரு ஜெயின் கோவிலா?’ என்றார்.

போச்சுடா! விடிய விடிய கதைகேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்கிறாற்போல்…என்று மனம் நினைக்கையில், இல்லை, இவர் கதை கேட்கவில்லை. தன் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார் என நினைவு எச்சரித்தது. பரவாயில்லை. நரசிம்ஹர் இவரை எப்படியோ இங்கே இழுத்துவந்துவிட்டார். கொஞ்சமாகச் சொல்வோம் என நினைத்து ‘இது ஒரு ஹிந்து கோவில். ஹிந்து கடவுள் விஷ்ணு என்று கேள்விப்பட்டிருக்கிறீரா?’ என்று கேட்டேன். ’யெஸ்..யெஸ்..!.விஷ்ணு!’ என்றார்.

அந்த விஷ்ணுவுடைய கோவில் இது. ஆனால் இங்கே விஷ்ணு மனித உடம்பு, சிங்கத் தலையோடு காட்சிதருகிறார். அவருடைய அவதாரங்களில் ஒன்றில் இப்படி அவரது தோற்றம்!’ என்றேன். வியப்போடு அவர் கேட்டுக்கொண்டிருக்கையில் வந்து சேர்ந்தார் அவரது மனைவி. ‘உங்கள் கணவரோடு பேசிக்கொண்டிருந்தேன். உங்கள் நீண்ட பயணம் ஆச்சரியமளிக்கிறது. உங்களுக்கு ஆரோக்கியம், மனோதிடம் இவற்றைக் கடவுள் நிறைய தந்திருக்கிறார்!’ என்றேன். அவர் சந்தோஷப்பட்டார். ’உங்கள் பயணத்தில் தமிழ்நாடு, சென்னை இப்படி ஏதாவது ? ’ என்று இழுத்தேன்.

‘சென்னை!’ என்றார் வியப்புடன். ’ஆம் அங்கு போகிறோம். அங்கிருந்து கப்பல் வழியாக மியன்மார் (பர்மா) செல்கிறோம். (சில பகுதிகளில் கப்பல்வழி சென்று அந்தந்த நாடுகளில் இறங்கியவுடன் நாட்டுக்குள் சைக்கிளில் பயணிக்கிறார்கள் எனப் புரிந்துகொண்டேன்). ‘சுற்றிப் பார்க்கப்போவதில்லையா சென்னையை? பார்ப்பதற்கு நிறைய இருக்கிறதே!’ என்றேன். ’பார்க்கவேண்டும் ஆனால் விசா 3 மாதத்துக்குதான் கொடுத்திருக்கிறார்கள். மிகவும் குறைவாக இருக்கிறது. மியன்மாரில் ஒரு நண்பரைப் பார்த்துவிட்டு மேற்கொண்டு பயணிப்போம்!’ என்றார்.

’நான் விசா ஆஃபீஸராக தூதரகத்தில் பணியாற்றி இருக்கிறேன். அப்போது என்னிடம் நீங்கள் வந்திருக்கக்கூடாதா! இந்தியாவில் ரவுண்டடிக்க ஒரு வருட விசா கொடுத்திருப்பேனே. உங்கள் போன்றோருக்குத்தானே இந்திய விசா அதிகமாகக் கொடுக்கவேண்டும்!’ என்றேன். இந்த எதிர்பாராத தகவலால் அவர் அசந்துபோனார். நன்றி சொன்னார். அவர்கள் இருவருக்கும் வாழ்த்துச் சொல்லி படங்கள் சிலவற்றை க்ளிக் செய்து அகன்றோம்.

மேலக்கோட்டை செலுவநாராயண ஸ்வாமிடமிருந்தும், யோகநரசிம்ஹ ஸ்வாமியிடமிருந்தும் பிரியாவிடை பெற்று பெங்களூர் நோக்கிப் பயணமானோம்.

**