டெல்லியின் குளிர்காலம்.. காய்கறி, பழங்களின் உத்சவம்

உலகமயமாதலின், பொருள்வயமாதலின் உன்னத விளைவினால், கடந்த 10-15 வருடங்களாக வேகமாக மாறிவருகிறது நகரின் வணிகத்தோற்றம். தலைநகர் டெல்லி காளான்களாய்ப் புறப்பட்டிருக்கும் ஷாப்பிங் மால்களால், அன்னிய ப்ராண்டுகளின் ஷோரூம்களால் மினுமினுக்கிறது. இது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் பேச வந்தது இதை அல்ல.

சராசரி ஜனங்கள் சாப்பிட்டு ஜீவிக்க அரிசி, கோதுமை, பருப்புவகைகளோடு காய்கறிகள், பழங்கள் வேண்டுமல்லவா? கோடைகாலத்தில் சிக்கல்கள் உண்டு. எனினும், குளிர்காலத்தில் நகரெங்கும் கிடைக்கின்றன செழுமையான, கண்ணைப்பறிக்கும் காய்கறிகள், பழங்கள். ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும், சனி, செவ்வாய் அல்லது ஞாயிறு, புதன் என வாரத்தின் ஏதோ இரண்டு நாட்களில் போடப்படும் காய்கறிக்கடைகள் மத்தியதர வர்க்கத்தினருக்கு ஒரு வரப்பிரசாதம். போக்குவரத்து நெரிசல் அதிகமில்லாத ஆனால், பிரதான தெருவொன்றின் இருமருங்கிலும் பரப்பப்படுகின்றன மாலைநேரத்தில். காய்கறிகள், பழங்கள். தரையிலோ அல்லது தள்ளுவண்டியிலோ அவை காட்சியளிக்கும். பச்சைப்பசேல் என்று முட்டைக்கோசு, பாலக், பீன்ஸ், பாகற்காய், பச்சைப்பட்டாணி(காய்), சுரைக்காய், பறங்கி போன்றவை, வெள்ளை வெளேர் என்று உருண்டு திரண்டிருக்கும் காலிஃப்ளவர், முள்ளங்கி, செக்கச் செவேல் என்று நீள, நீளமாய்க் கேரட்டுகள். பளபளக்கும் மஞ்சளில் பெரிசுபெரிசாய் எலுமிச்சைப் பழங்கள். சாலையோரங்களில் வந்து இறங்கியிருக்கும் புத்தம்புது காய்கறிகளின் சிறு, சிறு குன்றுகள். மின்னும் வண்ணங்கள், சீன தேசத்து மலிவு எல்.இ.டி.(LED) விளக்குகளின் ஜொலிப்பில் மேலும் மெருகு பெறுகின்றன. ஒன்றும் வாங்காவிட்டாலும் பரவாயில்லை. சும்மாவாவது அந்தப் பக்கம் இரவில் ஒரு ரவுண்டு போய்வருவோம் என எண்ணத்தோன்றும். மாலை 6 மணிப்போல் ஆரம்பித்து, இரவு 11 மணி வரை செல்லும் இந்த வாராந்திர மார்க்கெட்டுகள். கூவிக்கூவி விற்கும் இளம் வியாபாரிகள்.

இப்போது தலைநகரில் ஜனங்கள், குறிப்பாக மத்தியவர்க்கத்தினர் ஒரேயடியாக diet-conscious-ஆக மாறிவிட்டார்கள். எதை சாப்பிடவேண்டும் என்பதைவிடவும், எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று ஓயாது உளறிக்கொட்டும் டிவி நிகழ்ச்சிகள்வேறு அவர்களின் மூளையை நன்றாக சலவை செய்துவைத்துள்ளன. கண்ணெதிரே மலிவு விளையில் காய்கறிகள். வாங்கத் தயங்கும், குழப்பங்கள் நிறைந்த மனம். இத்தகையோர் உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளிலிருந்து தூரச் செல்கிறார்கள். பீன்ஸ், முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர், கீரை , காரட் போன்றவை இவர்கள் பயமின்றி வாங்க முனையும் காய்கறிகள்.

விலைவாசி எப்படி? ஒரு கிலோ ஃப்ரெஷ் பாலக் 10 ரூபாய். அதே விலையில் புத்தம்புது முட்டைக்கோசு. 15 ரூபாயில் செழிப்பாக மலர்ந்துள்ள காலிஃப்ளவர். பளிச்சென்று முள்ளங்கி (கிலோ 10 ரூ). 20 ரூபாய் கிலோ என பச்சைப்பட்டாணி மற்றும் சிவப்பு நிறக் கேரட். (தென்னிந்தியாவில் கிடைப்பது போன்ற மங்கிய ஆரஞ்சு நிறமல்ல. இங்கு கிடைப்பது ரத்தச்சிவப்பில் புத்தம்புதிய , ஜூஸியான கேரட். இந்தவகை கேரட் வடநாட்டில் குளிர்கால ஸ்பெஷல் வரவு. கேரட் அல்வாவுக்குப் பிரமாதமாக இருக்கும்). உருண்டை, உருண்டையாக அழகிய முட்டைக்கோசு, காலிஃப்ளவர், பாலக், முள்ளங்கி வகைகள் டெல்லியின் யமுனா நதிதீரப் பகுதியின் விளைச்சல்கள்.

இங்கு கிடைக்கும் காய்கறிகளில், அருமையான உருளைக்கிழங்கு வகைகளும் உண்டு. சிறிய, பெரிய சைஸ்களில் ஜாதி உருளைக்கிழங்குகள். உத்திரப்பிரதேசத்தின் ஃபரூக்காபாத்-இல் விளைந்து டெல்லி மார்க்கெட்டுகளைத் தேடி மூட்டை, மூட்டையாய் வந்து இறங்குபவை. கண்ணெதிரே நல்லதொரு பொருள் இருந்தும், விழிபிதுங்கப் பார்த்துக்கொண்டு, தொப்பையைத் தடவிக்கொண்டு, வாங்க பயப்படும் மத்தியவர்க்கம். என்னத்துக்கு பயம்? வெயிட் போட்டுருவாங்களாம்! ஆதலால் அதன் விலை மேலும் கீழே இறங்கிவிட்டிருக்கிறது. 10 ரூபாய்க்கு 2 ½ கிலோ –கண்ணைத் தேய்த்துக்கொள்ளவேண்டாம்; சரியாகத்தான் படிக்கிறீர்கள்- 10 ரூபாய்க்கு 2 ½ கிலோ உருளைக்கிழங்கு டெல்லியில்! கூவிக்கூவி விற்றும் ஆசையாக வாங்குபவர் வெகு சிலரே!

புதினா, கொத்தமல்லிக் கட்டுகளும் மார்க்கெட்டுகளில் கொட்டிக் கிடக்கின்றன. கிளிப்பச்சையில், கொத்துக்கொத்தாக, குட்டையாக விளையும் `பாலக்` எனப்படும் கீரைவகைதான் இங்கு பிரபலம். வட இந்தியாவில் இதைத் தனியாகவோ, உருளையுடன் சேர்த்து ஆலு-பாலக் என்றோ, பன்னீருடன் சேர்த்து பாலக்-பன்னீர் என்றோ வடநாட்டு கரம் மசாலா(gharam masala) போட்டு அருமையாகச் சமைப்பார்கள். சுடச்சுட சப்பாத்தியுடன் உள்ளே தள்ள சுவாரஸ்யமாக இருக்கும். நம்மூர் முளைக்கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை, அகத்திக்கீரை வகைகளை இங்கே வாழும் தமிழர்களே கிட்டத்தட்ட மறந்துபோய்விட்டார்கள். அப்படியே எப்போதாவது கிடைத்தாலும் கொஞ்சம் விலை அதிகம் என்பதால் வாங்குவதில்லை. தென்னிந்தியா பக்கமே போயிராத வடநாட்டுக்காரர்களுக்கு, இப்படியெல்லாம்கூட கீரை வகைகள் நாட்டில் உண்டு என்பதும் தெரிய வாய்ப்பில்லை. பெரிய சைஸில் எலுமிச்சை பழங்கள், நெல்லிக்காய்களும் இந்த மார்க்கெட்டுகளில் கிடைக்கும். விலை அதிகம்தான் எனிலும் காரசாரமான ஊறுகாய்களுக்குப் பிரமாதமாக ஒத்துப்போகும் வகைகள்.

பழங்களில், ஆப்பிள் (கிலோ ரூ.60- ரூ;130), திராட்சை(பெரும்பாலும் பச்சைவகை), மாதுளம்பழம் (கிலோ ரூ.50-60), ச்சீக்கு எனப்படும் சப்போட்டா பழம் (கிலோ ரூ.40-50), நல்ல இனிப்புவகை வாழைப்பழங்கள் குளிர்காலத்தில் நிறையக் கிடைக்கின்றன. வட இந்தியர்கள் பொதுவாக பழங்களை – அவை சற்றே விலை அதிகமாக இருப்பினும்- வெகுவாக விரும்பி வாங்குவார்கள். பன்னீரும் நிறைய உணவில் சேர்த்துக்கொள்ளுவார்கள். தென்னிந்தியர்களுக்கு இந்த மாதிரி நல்ல பழக்கமெல்லாம் இல்லை. அவர்கள் எதையும் மினிமம்-ஆக வாங்கிக்கொண்டு வேகமாக வீடு திரும்பிவிடுவார்கள். வீட்டில் புள்ளைக்கு ஹோம்-ஒர்க் செய்யணும், தமிழ் சேனல்ல சினிமா, சீரியல், எத்தனை காரியமிருக்கு!

இப்போது நகரங்களில் அலையும், டிவி சேனல்களில் வந்து புலம்பும் விதவிதமான ஸ்பெஷலிஸ்ட்டுகள்- குறிப்பாக டையட்டீஷியன்கள் (dietitians), நியூட்ரிஷனிஸ்ட்டுகள்(nutritionists) ஆகியோர், நமது அப்பாவி ஜனங்களை, சாப்பாட்டு விஷயத்தில், இப்படிப் பேயாக ஆட்டிவைக்காமல் இருப்பது நல்லது. நாட்டின் ஆரோக்கியத்துக்கே மிகவும் நல்லது. இந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விளையும், விற்கப்படும் காய்கறிகள், பழங்கள் போன்றவை விஷங்களல்ல. சத்தில்லா சக்கைகள் அல்ல. மாறாக, நோய்தீர்க்கும் அல்லது தடுக்கும், உடலுக்கு வலிவு சேர்க்கும், ஆரோக்கியம் கூட்டும் நல்ல விவசாய விளைபொருட்கள் அவை. ஏனெனில் நமது பூமி பொன்விளையும் புண்ணிய பூமி. இத்தகையவற்றை நமது மண்ணில் விளைவித்து, உண்டு களித்து, சீராகக் குடும்பம் நடத்தி, வாழ்வாங்கு வாழ்ந்தார்கள் நமது முன்னோர்கள். அவர்களது சந்ததிகள்தான் நாம். அவர்களுக்கு ஒத்துப்போன, நன்மை செய்த காய்கறிகளும், பழங்களும் நமக்கும் நன்மையே செய்யும். நல்லாரோக்கியம் தரும். நிச்சயமாக இந்தவிஷயத்தில், வெளிநாட்டு அறிவு நமக்குத் தேவையில்லை.
**