கிரிக்கெட்: இஷான் ஷோ !

முதல் டி-20 போட்டியை அஹமதாபாதில் இந்தியா பரிதாபமாகத் தோற்றபின், இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக் வாகன் (Mike Vaughan) சொன்னது: ’இந்திய அணியைவிட மும்பை இந்தியன்ஸ் சிறப்பான டி-20 டீம்!’ மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன் சூர்யகுமார்  நேற்றைய மேட்ச்சில் உள்ளே வருவதாயிருந்தது. வாகனின் கமெண்ட்டைப் படித்ததும் இந்தியா நினைத்திருக்கும்: ’சரி, ரெண்டு ’மும்பை இந்தியன்ஸ்’களை உள்ளே அனுப்புவோம்!’ வந்திறங்கினார்கள் சூர்யகுமார் யாதவும், இஷான் கிஷனும்!

Ishan Kishan,
the new blade !

சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயருக்கு அடுத்தாற்போல் பேட்டிங் வரிசையில் வந்திருக்கவேண்டும். நேற்று அந்த வாய்ப்பு வரவில்லை. ஒரு கேட்ச் பிடித்ததோடு அவரது நேற்றைய பணி நின்றது.  ஆனால் ஷிகர் தவனுக்கு பதிலாக ராஹுலுடன் இந்திய ஆட்டத்தை துவக்கிய மும்பை இந்தியன்ஸின் 22 வயது ஓப்பனர் இஷான் கிஷன், மொட்டேரா மைதானத்தை பிள்ளையார் கோவில் வாசலாக்கிவிட்டார். சதிர்த் தேங்காய்களாய் வரிசையாகப் போட்டு உடைத்தார், எதிரே கேப்டன் கோஹ்லியை முழிக்கவைத்துக்கொண்டு! சந்தித்த முதல் பந்து ஆர்ச்சரிடமிருந்து ஒரு 140+ kph. பௌண்டரி. தொடர்ந்து கண்மண் தெரியாத் தாக்குதல். புதுவரவின் விளாசலை சற்றும் எதிர்பார்த்திராத எதிரி கேப்டன் மார்கன். இவன் யாருடா இன்னொரு ரிஷப் பந்த்! – எனக் குழம்பியிருப்பாரோ? ஸ்பின்னர் ஆதில் ரஷீதைக் கொண்டுவருவதைத் தள்ளிப்போட்டுப் பார்த்தார். ஆனால் 8-ஆவது ஓவரில் வேறுவழியின்றி பந்தை ரஷீதிடம் கொடுக்க, இஷான் அதற்காகவே காத்திருந்ததுபோல் ரஷீதை வானத்தில் பறக்கவிட்டார். ’பறக்கும்.. பந்து பறக்கும்..’ எனத் தமிழில் பாடியிருப்பாரோ! ரஷீதின் 10 பந்துகளில் 21.  2 சிக்ஸர்கள். டாம் கர்ரனுக்கும் இதே பரிவட்ட மரியாதை – ரசிகர்களுக்குப் பந்துபொறுக்கி மைதானத்துக்குள் திருப்பி  வீசும் குஷியான வேலை. முதல் மேட்ச்சிலேயே இஷானின் அரைசதம். 5 பௌண்டரி. 4 சிக்ஸ். ரிஷப் பந்த் வந்தவுடன் தன் வேலையைக் காண்பிக்க, கோஹ்லியும் சேர்ந்தடிக்க, இலக்கு எளிதாக இந்தியாவின் பிடிக்குள் வந்தது. இந்திய டாப் ஸ்கோர்கள்: இஷான் கிஷன் 56 (32 balls), கோஹ்லி 73 (49 balls).

முன்னதாக இங்கிலாந்து பேட் செய்கையில், இந்திய மிதவேகப் பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், ஹர்தீக் பாண்ட்யா, ஷர்துல் டாக்குர் அருமையாகப் பந்து வீசினார்கள். Death overகளில் ஷர்துல் டாக்குர் அபாரமாகப் போட்டு இங்கிலாந்து 160+ ஐத் தாண்டவிடாது அழுத்தி உட்காரவைத்தார். வாஷிங்டன் சுந்தரும், யஜுவேந்திர சஹலும் ஸ்பின் சாதுர்யமாகப் போட்டார்கள். சுந்தரின் முதல் பந்தை சிக்ஸருக்குத் தூக்கிய ஜேஸன் ராய், மிடில் ஓவர்களில் சுந்தர் திரும்பி வந்தபோது, அவரிடமே பலியானார்!  ஜானி பேர்ஸ்டோவையும் தூக்கினார் சுந்தர். ராயுடையதுதான் அணியின் டாப் ஸ்கோர்:46. சுந்தரும், டாக்குரும் தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்கள். Identical analysis: 4-0-29-2. இஷான் கிஷன் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச்; கோஹ்லியிடமிருந்து புகழ்ச்சி.

தொடர் ஸ்கோர் 1-1. இன்னும் 3 மேட்ச்சுகள் பாக்கி. புதுப்புது வீரர்களாக இந்தியா இறக்கும் வேகத்தைப் பார்த்தால், டி-20 உலகக்கோப்பைக்குத் தயாராவதை உணரமுடிகிறது. அடுத்த மேட்ச்சில் சூர்யகுமாரைக் கவனிக்கலாமா..

**

CWC 2019: உலகக்கோப்பை … இங்கிலாந்துக்கு!

 

இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது! என்னப்பா சொல்ல வர்றே! -என்கிறீர்கள். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை காணாத அதிசயமாய் கதை விசித்திரமாய் விரிந்து அப்படித்தான் முடிந்தது. நியூஸிலாந்து வீரர்களுக்கு தங்களுக்கு ஏன் உலகக்கோப்பை கொடுக்கப்படவில்லை என்றே புரிந்திருக்காது என்று தோன்றியது. அப்படி ஒரு அதிர்ச்சியில் நியூஸிலாந்து வீரர்கள் ஓரமாய் நின்றிருந்தார்கள்.

பந்து பந்தாக விவரிக்காமல், சுருக்கமாகச் சொல்வோம்.   லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (14/7/19) நடந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்றது, முதலில் பேட் செய்தது நியூஸிலாந்து. பிட்ச் மந்தமாக செயல்பட, நியூஸிலாந்து நினைத்த அளவுக்கு தாக்கி ஆட இயலவில்லை. ஹென்றி நிக்கோல்ஸ் 55, டாம் லேத்தம் 47, வில்லியம்சன் 30 என்றுதான் போனார்கள். இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 எடுத்தார்கள்.  இங்கிலாந்தின் தரப்பில் க்றிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் ப்ளங்கெட் சிறப்பாக வீசினார்கள்.

242 ஐ நோக்கி நன்றாகத் துவங்கியது இங்கிலாந்து. இதற்கு முந்தைய மேட்ச்சில் அம்பயரோடு(ஸ்ரீலங்காவின் குமார் தர்மசேனா) குஸ்திபோட்ட ஜேஸன் ராய் எளிதில் தூக்கப்பட்டார். ஜானி பேர்ஸ்டோ நிதானம் காட்டினார். விக்கெட்டுகள் சில விழுந்தன. த்டுமாற்றம். அப்போது  பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (59) சேர்ந்து ஸ்க்ரிப்ட்டை மாற்றி எழுதினர். ஒரு கட்டத்தில், இங்கிலாந்து எளிதாக கோப்பையைத் தட்டிச் செல்லும் எனவே தோன்றியது. 84/4 என்றிருந்த ஸ்கோரை 196 க்கு 5 விக்கெட்டுகள்(45 ஆவது ஓவர்) என வேகமாக அவர்கள் உயர்த்தியது, நியூஸிலாந்துக்கு பீதியைக் கிளப்பியது. அவ்வப்போது குதித்துக் காண்பித்த நியூஸி ரசிகர்கள் அடங்கிக் கிடந்தார்கள்.

அடுத்த பக்கத்தில் விக்கெட்டுகள் சரிய, ஸ்டோக்ஸ் மட்டும் அஞ்சாது ரன் சேர்த்துக்கொண்டிருந்தார்.  அவரது துணிச்சலும், இலக்கில் குவிந்த கவனமும் பாராட்டத்தக்கது. 9 பந்துகளில் இங்கிலாந்து 22 ரன் அடித்தாகவேண்டிய நிலையில், ஸ்டோக்ஸ் உயர அடித்த ஷாட்டை பௌண்டரி லைனுக்கு முன்னாள் எம்பிப் பிடித்த நியூஸி ஃபீல்டர் ட்ரெண்ட் போல்ட், அதனை உள்ளே  எறிவதற்குள் தடுமாறி வெளியே காலை வைத்துவிட்டார். சிக்ஸர்! கடைசி ஓவரில் மேலும் ஒரு பயங்கரம். 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை. ஸ்டோக்ஸ் இருக்கிறாரே..அவரடித்த பந்து ஃபீல்டாகிவிட இரண்டாவது ரன்னுக்காக விக்கெட்கீப்பர் பக்கம் மட்டையைத் தூக்கிக்கொண்டு பாய்ந்தார். நியூஸி ஃபீல்டர் ஃபீல்ட் செய்து வீசிய பந்து ஸ்டோக்ஸின் மட்டையைப் பதம்பார்த்து, கோபித்துக்கொண்டு பௌண்டரியை நோக்கி ஓடிவிட்டது! அம்பயர் தர்மசேனா ஆனந்தமாகி, 2+4=6 ரன் என விரல்களைக் காண்பித்துவிட்டார். இப்படியெல்லாமா ஒரு துரதிருஷ்டம் வரும் நியூஸிலாந்துக்கு. கடைசி பந்தில் இரண்டு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பேட்ஸ்மன் மார்க் உட் ரன் -அவுட் ஆகிறார். ஸ்கோர் இங்கிலாந்து 241 ஆல் அவுட் (பென் ஸ்டோக்ஸ் 84 நாட்-அவுட்). நியூஸிலாந்தின் ஸ்கோர் 241/8.  உலகக்கோப்பையின் முதல் Tie!

இங்கேதான் காரியத்துக்கு வருகின்றன ஐசிசி-யின் விதிமுறைகள் – இந்த உலகக்கோப்பைக்காக விசேஷமாகத் தயாரித்தவை! ஃபைனலில் ஸ்கோர் ‘டை’ஆனால், சூப்பர் ஓவர் விளையாடி முடிவு செய்யவேண்டும். ஒவ்வொரு அணியும் ஒரு ஓவர் விளையாட, எந்த அணி அதிகபட்ச ஸ்கோர் செய்கிறதோ அதுதான் சேம்ப்பியன்.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அவர்களது ராசிக்காரர்களான ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோரை அனுப்பியது. இங்கே பௌலரைத் தேர்ந்தெடுப்பதில் நியூஸி. கேப்டன் வில்லியம்சன் தப்பு செய்துவிட்டார் எனத் தோன்றுகிறது. ட்ரென் போல்ட் நியூஸிலாந்தின் டாப் பௌலர் என்றாலும், நேற்று அவர் வீசிய லட்சணம் சரியில்லை. ஏகப்பட்ட ரன் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை. பழைய ரெப்யூட்டேஷனை மனசில் கொள்ளாமல், ஃபெர்குஸன், மேட் ஹென்றி ஆகிய இருவரில் ஒருவருக்கு சூப்பர் ஓவரைத்தந்திருந்தால் இங்கிலாந்து இப்படி அடித்திருக்காது எனத் தோன்றுகிறது. ஆளுக்கொரு பௌண்டரி அடித்த இங்கிலாந்து ஜோடி, 15 ரன்கள் எடுத்துவிட்டது. இருபக்கத்து ரசிகர்களும் உலைபோல் கொதித்துக்கொண்டிருந்தனர்.

இங்கிலாந்து உலக சேம்பியன் !

நியூஸிலாந்து சூப்பர் ஓவர் ஆட, மார்ட்டின் கப்ட்டில் (ஃபார்மில் இல்லாதவர்) மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோரை அனுப்பியது. இவர்கள் 16 எடுத்துவிட்டால் நியூஸிலாந்து உலக சேம்ப்பியன். ஆனால், விதிக்கு பிடித்த ஆட்டமாயிற்றே கிரிக்கெட்! அது 23-ஆவது ப்ளேயராக மைதானத்தில் ஏற்கனவே இறங்கியிருந்தது. இங்கிலாந்து தன் சூப்பர் பௌலராக,  உலகக்கோப்பைக்கு சில மாதங்கள் முன்புதான் அணியில் சேர்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சரை பந்துபோடச் சொன்னது.  ஆர்ச்சருக்கு இது முதல் இண்டர்னேஷனல் டூர்னமெண்ட். பதற்றம் முகத்தில். அடிக்கடி அருகில்போய் கேப்டன் மார்கன் ஏதேதோ சொல்கிறார். ஆர்ச்சரின் ஒரு பந்தை ஆவேசமாகத் தூக்கி சிக்ஸருக்கு அனுப்பிவிட்டார் நீஷம். நியூஸியின் பல்ஸ் ஏறியது! ஆனால் அனுபவசாலியான கப்ட்டில் ஒன்று, இரண்டு என்று ஓடினார். நியூஸியின் வேதனை. கடைசி பந்து. 2 ரன் தேவை நியூஸிலாந்துக்கு. ஆர்ச்சருக்கு அட்வைஸ் கேப்டனிடமிருந்து. கீழே குனிந்து தலையாட்டிய ஆர்ச்சர் வேகமாக ஓடி வந்து, எதிர்த்துத் தாக்கமுடியாத லெந்த்தில் பந்தை இறக்கினார். கப்ட்டில் பதறி லெக்சைடில் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார். ரெண்டு ரன் வேண்டுமே..திரும்பிப் பாய்ந்தார். அந்தோ! இங்கிலாந்து ஃபீல்டிங் நேராக  விக்கெட் கீப்பருக்கு அனுப்ப, பட்லர் பெய்ல்ஸைத் தட்டி,  ரன் -அவுட் செய்துவிட்டார். என்ன ஃபைனல்டா இது.. ஒரே பேஜாராப்போச்சே. சூப்பர் ஓவரும் டை Tie). இரு அணியும் எடுத்தது , தலா 15 ரன்கள்!

சோகமே உருவாக நியூஸிலாந்து

வேறொரு ஸ்போர்ட்டாக இருந்திருந்தால், இந்த இடத்தில் முடிவு வந்திருக்கும். நியூஸிலாந்து, இங்கிலாந்து இரு அணிகளும் ஜாய்ண்ட்-வின்னர்ஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும். அதுவே நியாயமானதாகவும் இருந்திருக்கும். ஆனால் ஐசிசி-யின் குதர்க்கம் நிற்காதே. சூப்பர் ஓவர் பற்றி அவர்கள் அசரீரி கேட்டு, மேலும் ஒன்று எழுதிவைத்திருந்தார்கள். சூப்பர் ஓவர் ’டை’ ஆனால், எந்த அணி நிறைய பௌண்டரிகள் அடித்ததோ அதுவே வின்னர்.. கோப்பை அதற்குத்தான். வேகவேகமாக எண்ணி, இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றதாக அறிவித்துவிட்டார்கள். நியூஸிலாந்து உறைந்து நின்றது. இவ்வளவு சிறப்பாக ஃபைனலிலும் ஆடி என்ன பயன்? வெறும் ரன்னர்ஸ்-அப் தானே கடைசியில்.  நியூஸிலாந்துக்கு இல்லையே கோப்பை..

’’எல்லாம் ‘டை’, ‘டை’ என்றானபின், அடித்த பௌண்டரிகளை எண்ணி, உலகக்கோப்பையை அறிவிக்கிறார்களே.. என்னால் ஜீரணிக்கமுடியவில்லை’’ என்றார் சோகம் ததும்பும் குரலில் நியூஸி. கேப்டன் வில்லியம்சன்.  மிகவும் மென்மையானவர். மேற்கொண்டு சொல்லமாட்டார்.  ‘’உலகக்கோப்பையில் 22 ஹீரோக்கள். யாருக்கும் வெற்றியில்லை!” என்று தலைப்பு கொடுத்த ’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு, மேலும் கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)-விற்கு 5 ரன் தானே தரவேண்டும். 6 ரன் ஏன் கொடுக்கப்பட்டது?’’ நியூஸிலாந்தின் இன்னுமொரு பத்திரிக்கை, ’பௌண்டரி எண்ணுகிறேன் என்று சொல்லி, எங்களது கோப்பையைத் திருடிவிட்டார்கள்!’ என்கிறது.

ஆட்டத்தை அந்த நாட்டில் விடிய விடிய பார்த்துக்கொண்டிருந்த நியூஸிலாந்தின் பெண் பிரதமர்  ஜஸிண்டா ஆர்டன் (Jacinda Ardern) சொல்கிறார். ’’என்ன ஒரு நம்பமுடியாத மேட்ச். இப்படி ஒன்றை வாழ்நாளில் பார்த்ததில்லை. கிரிக்கெட் சரித்திரத்தில்  ஒரு அருமையான போட்டியாக இது நிற்கும். ஆயினும் முடிவு கண்டு, என் நாட்டினரைப் போலவே நானும் புத்தி பேதலித்துப்போயிருக்கிறேன். என்ன செய்வது? எங்களது அணி நாடு திரும்பட்டும். அவர்களுக்கு நியூஸிலாந்தின் உயர் ஹீரோக்களுக்கான சிறப்பான வரவேற்பைத் தருவேன்!’’

**

Pictures courtesy: Google

க்ரிக்கெட்: கல்கத்தா மேட்ச்- இங்கிலாந்தின் வெற்றி

கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று(22-1-17) நடந்த ஒரு-நாள் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இங்கிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்தது.

முதலில் இங்கிலாந்து பேட் செய்கையில். ஜேசன் ராய் வழக்கம்போல் சிறப்பாக ஆடி 65 ரன் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவும் (Jonny Bairstow), பென் ஸ்டோக்ஸும்(Ben Stokes) அருமையான ஆட்டத்தில் அரை சதம் கடந்தனர். கேப்டன் மார்கன், ஆல்ரவுண்டர் க்றிஸ் வோக்ஸ் ஆகியோரும் கைகொடுக்க இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 321 எடுத்து அசத்தியது. இந்திய தரப்பில் ஹர்தீக் பாண்ட்யா அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜாவுக்கு 2. தனது இரண்டாவது கட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியும் பும்ராவுக்குக் கிடைத்தது ஒரு விக்கெட் தான். புவனேஷ்வரையும் அஷ்வினையும் புரட்டி எடுத்துவிட்டார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மன்கள்.

பதில் கொடுக்க இறங்கிய இந்திய பேட்ஸ்மன்களை இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்களான க்றிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜேக் பால்(Jake Ball), லியாம் ப்ளங்கெட் ஆகியோர் வேகத்தினாலும், துல்லியத்தினாலும் கடுமையாக சோதித்தார்கள். கல்கத்தாவின் மைதானம் அவர்களுக்கு குஷியூட்டியதுபோலும். அளவுகுறைந்த பந்துகள் (short pitched balls) வேகம் காட்டி, முகத்துக்கு முன்னே எழும்பித் திணறவைத்தன. இந்தத் தொடரின் இந்திய அபத்தம் நமது ஆரம்ப ஆட்டக்காரர்கள். அவர்களை ஆட்டக்காரர்கள் என்பதை விடவும் ஓட்டக்காரர்கள் எனச் சொல்லலாம். அதாவது மைதானத்தைவிட்டுவிட்டு ஓடுவிடுபவர்கள்! ஷிகர் தவணுக்குப்பதிலாக இறங்கிய ரஹானே எப்போது வந்தார், எங்கே சென்றார் எனவே தெரியவில்லை. போதாக்குறைக்கு அளவுகுறைந்து வேகம் எகிறிய ஜேக் பாலின் பந்தைத் தூக்குகிறேன் பேர்வழி என்று புஸ்வானம் கொளுத்தினார் கே.எல்.ராஹுல். பந்து விக்கெட்கீப்பருக்கு மேலே சிகரம் தொடமுயன்று கீப்பரின் கையில் சரணடைந்தது. ரஹானேயும் ராஹுலும் விளையாடிய ஆட்டத்தைப் பார்க்கையில் முரளி விஜய்யையே ஒரு-நாள் போட்டியிலும் சேர்த்திருக்கலாமோ என்கிற எண்ணம் தலைகாட்டியது.

மூன்றாவதாக இறங்கிய கேப்டன் கோலி சில நல்ல ஷாட்டுகள் – இடையிடையே இங்கிலாந்து ஃபீல்டருக்குக் கேட்ச்சிங் பயிற்சி கொடுக்க முயற்சி என்று பொழுதை ஓட்டினார் முதலில். பிறகு சுதாரித்து அரைசதமெடுத்து நம்பிக்கை ஊட்டிய தருணத்தில், ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் வீழ்ந்தார். மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நினைத்துவிட்டாரா கேப்டன்! ஆரம்பத்தில் வோக்ஸினால் அதிகம் சோதிக்கப்பட்ட யுவராஜ் சிங், பின் நிதானித்து ஆடியும் ரன் விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. ப்ளன்க்கெட்டை(Liam Plunkett) மிட்விக்கெட்டுக்குத் தூக்க முயற்சித்து அங்கு தனக்காகவே காத்திருந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்னில் வெளியேறினார் யுவராஜ். தோனி வந்ததிலிருந்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பிற்கு கேதாருடன் இணைய முயல்வதாய்ப்பட்டது. அந்தோ! அதுவும் ஒரு கனவானது. இங்கிலாந்து பௌலர்கள் நனவாக்க விடவில்லை. 25 ரன் தான் முன்னாள் தலைவரால் முடிந்தது.

விடாது போராடிய பாண்ட்யா-கேதார்:
அடுத்த முனையில் கேதார் கவனித்து ஆடி, பந்துக்கு ஒரு ரன் என்கிற வேகத்தில் ஏறிக்கொண்டிருந்தார். ஹர்தீக் பாண்ட்யா கேதார் ஜாதவுடன் ஜோடி சேர, இந்தியா இலக்கை இனிதே நெருங்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பார்ட்னர்ஷிப் அருமையாக அமைய, வெற்றிக்கற்பனைக்கு உயிரூட்டப்பட்டது. இந்த ஜோடியை எப்படியும் பிரித்தாலே வெற்றி என்கிற நிலையில் இங்கிலாந்து வெகுவாக முனைந்தது. இருவரும் வேகமாக ஓடி ரன் சேர்ப்பது, அவ்வப்போது ஒரு பெரிய ஷாட் என வெற்றி ஆர்வத்துக்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தனர். ஒருநாள் போட்டிகளில் தன் முதல் அரைசதத்தை 38 பந்துகளில் அதிரடியாகக் கடந்தார் பாண்ட்யா. ஆனால் பாண்ட்யாவை 47-ஆவது ஓவரில் ஸ்டோக்ஸ் நீக்கிவிட, இங்கிலாந்தின் முகம் மலர்ச்சிகண்டது. வெற்றியின் வாடிவாசல் அதற்குத் தெரிய ஆரம்பித்துவிட்டதோ!. இடையிலே ஜடேஜாவும், அஷ்வினும் இருக்க, கேதாரும் இன்னும் விடுகிறபாடில்லை. இந்த இக்கட்டான நிலையில் இங்கிலாந்தின் ஃபீல்டிங் கூர்மை காட்டியது. கேப்டன் மார்கன் வோக்ஸ், ஸ்டோக்ஸ் என பந்துவீச்சாளர்களை வேகவேகமாக மாற்ற, பலன் கிட்டியது. இருவரும் அபாரமாகப்போட்டு, ஜடேஜாவையும் அஷ்வினையும் நிற்கவிடாது விரட்டிவிட்டார்கள். இங்கிலாந்தின் மிகச்சிறந்த பௌலரான வோக்ஸ் கடைசிஓவரை வீச, ஆடினர் கேதாரும் புவனேஷ்வரும். 6 பந்துகளில் 16 எடுத்து வென்றுவிடுமா இந்தியா? பெவிலியனில் தோனி, கோலி, ஜடேஜா, பாண்ட்யா என வீரர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கத் தயாராக, முதல் இரண்டு பந்துகளை அனாயசமாக சிக்ஸர், பௌண்டரி எனத் தூக்கி ஜல்லிக்கட்டுக் காளையாகத் தூள் கிளப்பினார் கேதார். ரசிகர்கள் உற்சாக மழையில். ஆனால் அடுத்த இரண்டு பந்துகளை ரன் தராத டாட் பந்துகளாய் (dot balls) வீசி, இந்தியாவை இறுக்கினார் வோக்ஸ். வேறுவழியில்லை என 5-ஆவது பந்தை கேதார் உயரமாகத் தூக்கப்போய், அந்த ஷாட்டிற்காகவே வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஃபீல்டரான சாம் பில்லிங்ஸ் (Sam Billings) கேட்ச்சை லபக்கினார். 90 ரன் எடுத்த கேதார் சோர்ந்த முகத்துடன் வாபஸ் பெவிலியனுக்கு. கடைசி பந்து புவனேஷ்வருக்கு. ம்ஹூம். புண்ணியமில்லை. இந்திய இன்னிங்ஸ் 316-லேயே முடிவுகண்டது. தொடர் முழுதும் இங்கிலாந்து காட்டிய கடும் உழைப்புக்குப் பரிசாக கல்கத்தா தந்தது ஐந்து ரன்னில் ஆறுதல் வெற்றி.

3 விக்கெட்டுகளை சாய்த்ததோடு, அடித்து விளையாடி அரைசதமும் கண்ட பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன். கேதார் ஜாதவ் தொடர் நாயகன். 2-1 என்கிற கணக்கில் ஒரு-நாள் தொடர் இந்திய வசமானது. இந்தத் தொடரில் இந்தியாவுக்குக் கிடைத்த வெகுமதிகளாக ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா மற்றும் கேதார் ஜாதவின் சிறப்புப் பங்களிப்புகளைச் சொல்லலாம். இந்தியா இன்னும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கும், வரவிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கெதிரான தொடர்களில். ஆனால் இந்தியாவின் பரிதாப ஆரம்ப ஜோடியை என்னதான் செய்வது?

**

க்ரிக்கெட்: இந்திய வெற்றியில் யுவராஜ் – தோனி ஷோ !

ஒதிஷாவின் கட்டக்கில் (Cuttack) நேற்று (19-1-17) நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ்-தோனி ஜோடியின் மறக்கமுடியாத மட்டையாட்டம், கடுமையாகப் போராடிய இங்கிலாந்துக்கெதிராக, இந்தியாவுக்குத் தொடர் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

முதலில் பேட் செய்த இந்தியா வழக்கம்போல் தடுமாறியது. ராஹுல், தவண், கோஹ்லி ஆகிய புலிகள் ஆட ஆரம்பிக்கும் முன்னரே, துல்லிய வேகம் காட்டிய இங்கிலாந்தின் க்றிஸ் வோக்ஸினால் (Chris Woakes) பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியா 25, மூணு விக்கெட் காலி! இந்த நேரத்தில், அந்தக் காலத்திய கனவு ஜோடி களத்தில் இறங்கியது. யுவராஜ் சிங்-எம்.எஸ்.தோனி! ரசிகர்களிடத்தில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஏனோதானோவென 30, 40 அடித்து இவர்களும் மூட்டை கட்டிவிடுவார்கள் என்கிற நினைப்புதான் மேலோங்கியிருந்தது. இந்தியா 300-ஐத் தொட்டுவிடுமா? தொட்டாலும் போதுமா இங்கிலாந்தை வீழ்த்த? விடைதெரியாக் கேள்விகள் காற்றில் மிதந்தன.

யுவராஜிற்கு இதுவே கடைசி சான்ஸ். இதில் அல்ப ஸ்கோரில் வீழ்ந்தால் அடுத்த மேட்ச்சில் இல்லை. இனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை. வாழ்வா, சாவா? இன்று நான் என்ன செய்யப்போகிறேன்? பஞ்சாப் வீரரின் மூளை கதகதத்து விடை தேடியது. வழக்கத்துக்கு மாறாக ஜாக்ரதையான ஆட்டம். அடுத்த முனையிலோ, அதைவிட மிதமாகன ஆட்டத்தை வெளிப்படுத்தினார் முன்னாள் கேப்டன் தோனி. இங்கிலாந்தின் குஷி வெளிச்சம் காட்டியது: ஃபார்மில் இல்லாத இவர்கள் எந்த நிலையிலும் அவுட் ஆகிவிடுவார்கள் !

ஆனால், கட்டக்கின் மாலைப்பொழுது வேறொரு கதை எழுத ஆரம்பித்திருந்தது. காலம் யுவராஜ், தோனியை மீண்டும் திரைக்குக் கொண்டுவந்து காட்ட விரும்பியதுபோலும். அரைசதத்தை நிதானமாகக் கடந்த யுவராஜ், தன் வழக்கமான ஷாட்டுகளுக்குத் திரும்பினார். தோனியும் அவ்வப்போது விளாசிப் பார்த்தார். 30 டிகிரி மிதமான வெப்பத்தில், கட்டக் கூட்டம் கூல்ட்ரிங்ஸ், ஐஸ்க்ரீம் ஏந்தி உற்சாகமாகி, எதிர்பார்க்க ஆரம்பித்தது: பெரிசுகள் ரெண்டும் இன்னிக்கு ஏதோ செய்யப்போறதுகள் !

அதிரடிக்குத் திரும்பிய யுவராஜ் முன்னேறி, வெகுநாட்களுக்குப்பின் சதம் கண்டார். மேலே நிமிர்ந்து சிலநொடிகள் ஆகாசத்தைப் பார்த்தார். தோனி அருகில் வந்து தட்டிக்கொடுக்க, தன் மார்பில் டார்ஜான் போல பேட்டினால் குத்திப் பெருமைப்பட்டு க்ரீஸுக்குத் திரும்பினார் யுவராஜ். (கைதட்டிப் பாராட்ட அவரது இளம் மனைவி ஏனோ மைதானத்தில் இல்லை!) பழைய யுவராஜ் கம்பீரமாய் ப்ரசன்னமாகியிருக்க, இங்கிலாந்து திடுக்கிட்டது. இதுவரை பொறுமையாக ஆடிய தோனியும் தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். பௌலர்கள் வேகவேகமாக மாற்றப்பட்டனர். ஃபீல்டர்கள் இந்தக்கோடிக்கு அந்தக்கோடி எனப் பறந்தனர். பலனில்லை. பார்ட்னர்ஷிப் 200 ரன்களைக் கடந்து இங்கிலாந்தைக் கலவரமாக்கியது.

45-ஆவது ஓவரில் இந்தியா 300-ஐத் தாண்டி சீறியது. ப்ரமாதமாக ஆடிய யுவராஜ் 150 ரன்களில் அவுட்டானார். தோனி 134 ரன்கள் (6 சிக்ஸர்கள்) எடுத்து ஸ்கோரை வெகுவாக ஏற்றிவிட்டார். பிறகு வந்த கேதார் ஜாதவ் (22), அவுட் ஆகாமல் இருந்த ஹர்தீக் பாண்ட்யா(19), ரவீந்திர ஜடேஜா(16) என பௌண்டரி, சிக்ஸராகப் படபடக்க, இந்தியா சற்றும் எதிர்பாராவிதமாக ஸ்கோரை 381 க்கு 6 விக்கெட் என உயர்த்தி, ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

கட்டக்கின் பிட்ச் பேட்ஸ்மன்களின் சொர்க்கம். பௌலர்களின் நரகம். சிறிய மைதானமாதலால் இங்கிலாந்து சவாலை ஏற்று சிறப்பாக ஆடியது. துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் (82), ஜோ ரூட் (54) மூலம் எகிற ஆரமபித்தது இங்கிலாந்து. ரன் சராசரியை 7-க்கு அருகில் ஆரம்பத்திலிருந்தே வைத்திருந்து போராடியது. இங்கிலாந்து கேப்டன் ஆய்ன் மார்கன் (Eoin Morgan) சிறப்பான எதிர்ப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது அவரிடமிருந்து ஆக்ரோஷமான ஷாட்டுகள் பௌண்டரி, சிக்ஸர் எனப் பதம் பார்த்தன. இங்கிலாந்தின் நம்பிக்கை வளர்ந்தது. ஆல்ரவுண்டர் மோயின் அலி தன் பங்கை சிறப்பாகச் செய்து ரன் வேகத்தை மேலேற்றினார். அவர் 55 ரன்னில் அவுட்டானதும் இங்கிலாந்து தடுமாற ஆரம்பித்தது. ஆயினும் மார்கன் நம்பிக்கை இழக்காது இந்திய பௌலர்களைத் தொடர்ந்து தாக்கினார். 82 பந்துகளில் சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன் 49-ஆவது ஓவரில் ரன் –அவுட் ஆனார். லியாம் ப்ளன்கெட் ( Liam Plunkett) சிறப்பாக ஆடியும், டெத் ஓவர்களில் (death overs) பந்துவீசிய புவனேஷ்வர் குமாரும், ஜஸ்ப்ரீத் பும்ராவும் வெகு பிரயாசைப்பட்டு இங்கிலாந்தை இலக்கை நெருங்கவிடாமல் தடுத்துவிட்டனர். இறுதியில் கோஹ்லியின் இந்தியா 15 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரையும் கைப்பற்றியது. இடையிடையே நெருக்கடியில் இருந்த கட்டக் ரசிகர் கூட்டம், நிம்மதிப்பெருமூச்சு விட்டது !

இங்கிலாந்திடம் இந்திய பௌலர்கள் செம்மையாக அடிவாங்கிக்கொண்டிருந்தவேளையில், ரவீந்திர ஜடேஜா மிகவும் பிரமாதமாக வீசி 45 ரன் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அஷ்வின் 63 ரன் கொடுத்தாலும், 3 விக்கெட்டுகளை சாய்த்தார். புவனேஷ்வருக்கு ஒன்று; பும்ராவுக்கு இரண்டு விக்கெட்டுகள். இங்கிலாந்தின் தரப்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றவர்களை பெண்டெடுத்துவிட்டார்கள் இந்திய பேட்ஸ்மன்கள். யுவராஜ் எதிர்பார்த்தபடி ஆட்டநாயகனானார்.

கோஹ்லி & கோ., கல்கத்தாவில் தொடரின் இறுதி போட்டியை 22 ஜனவரியில் விளையாடவிருக்கிறது. கே.எல்.ராஹுல், ஷிகர் தவன் ஆகியோர் அங்கே ஏதேனும் செய்யும் உத்தேசமுண்டா ?

**

கோஹ்லியின் கீழ் தோனி !

மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பைத் துறந்தபின், விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி பங்கேற்கும் முதல் ஒரு-நாள் தொடர் இன்று (15-01-2017) புனேயில் ஆரம்பமாகிறது. கடந்த மாதம் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரில் படுதோல்வி கண்ட இங்கிலாந்து எதிரணி; ஒரு-நாள் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் அய்ன் மார்கன் (Eoin Morgan) தலைமையில்.

இந்தியாவிற்கு இரண்டு கிரிக்கெட் கேப்டன்கள் இருப்பது பொருந்தி வரவில்லை. டெஸ்ட் கேப்டனான விராட் கோஹ்லியும் ஒரு-நாள் மற்றும் டி-20 அணிகளின் தலைமையை ஏற்கப் போதிய பக்குவம் அடைந்துவிட்டதால், நான் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டேன் என்றார் இந்தியாவின் முன்னாள் கேப்டன். தோனியின் இந்திய கிரிக்கெட் அணித் தலைமை சகாப்தம் இவ்வாறாக முடிவடைந்தது. இந்தியாவின் மறக்கமுடியாத, மக்கள் மனதில் இடம்பெற்ற கேப்டன் தோனி என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்கமுடியாது. அவரது தலைமைப்பண்புகளும், பக்குவமும், வெற்றி வியூகங்களும் வெகுநாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களால் ஸ்லாகிக்கப்படும்.

விராட் கோஹ்லியோ முற்றிலும் வித்தியாசமான மனிதர். தோனியிடம் காணப்பட்ட குளிர்ச்சியான சுபாவம் அரவே இல்லாதவர். ஆதலால் தோனியிலிருந்து வெகுவாக விலகிய பிம்பம் உடையவர். டெஸ்ட் கேப்டனாக அவரது உணர்ச்சிக்கொந்தளிப்புகள், வியூகங்கள், அணியைக் கையாளும் விதம், குறிப்பாக அனுபவமற்ற இளம் வீரர்களில் முகிழ்த்து நிற்கும் திறமையை ஊக்குவிக்கும் திறன் ஆகியவை ஏற்கனவே கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்களின் கவனத்துக்கு வந்துவிட்டவை. கூடவே, கடுமையான போட்டி மனப்பான்மை கொண்ட கோஹ்லி எந்த எதிரணியையும் வெகுவாக சோதிக்கும், திகைக்கவைக்கும் இயல்புகள் கொண்ட ஒரு கேப்டன். ஒரு-நாள் மற்றும் டி-20 வகைக்கிரிக்கெட்டில் அவரது கூரிய, ஆக்ரோஷத் தலைமைத் திறன் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

கோஹ்லிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு-நாள் இந்திய அணி, திறமையான வீரர்களோடு சர்வதேச விளையாட்டுக்கு திரும்பிவரும் சில வீரர்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக மிடில் ஆர்டர் அதிரடி யுவராஜ் சிங். ரஞ்சி ஃபார்மை வைத்து சர்வதேசக் கிரிக்கெட்டில் ஒருவரின் விளையாட்டு எப்படி இருக்கும் என கணிப்பது அவ்வளவு எளிதானதல்ல. எப்படி இருப்பினும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து கோஹ்லி யுவராஜை முதல் போட்டியில் ஆடவிடுவார் என எதிர்பார்க்கலாம். இதே போன்று ஷிகர் தவன், கே.எல்.ராஹுல்-உடன் துவக்க ஆட்டக்காரராக இறங்கவாய்ப்பு உள்ளது. முன்னால் கேப்டன் தோனி அனேகமாக நம்பர் 4-ல் கோஹ்லிக்கு அடுத்தபடியாக இறங்குவார் எனத் தோன்றுகிறது. தோனியின் அனுபவ பேட்டிங் பலம் சேர்க்கும். 5-ஆவதில் யுவராஜ் என்றால், 6-ஆவது இடம் மிகவும் முக்கியமானது. இந்த இடத்தில் மனீஷ் பாண்டே ஆடுவது அணிக்கு-ஒருவேளை விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பட்சத்தில்- ஒரு ஸ்திரத்தன்மையைத் தரும். ஸ்பின் போடும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான கேதார் ஜாதவ் ஒருவேளை கோஹ்லியின் கணக்கில் நுழையக்கூடும். 7, 8, 9-ஆவது இடங்களில் ஹர்தீக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் இறங்குவதே உசிதம். ஜஸ்ப்ரீத் பும்ரா, உமேஷ் யாதவ் வேகப்பந்து வீச்சைக் கவனித்துக்கொள்வார்கள் என யூகிக்கவேண்டியிருக்கிறது.

யுவராஜ் சிங்கின் ஸ்பின் திறன் கோஹ்லிக்கு இந்தத் தொடரில் உதவலாம். டெஸ்ட் தொடரைப்போலவே, ஒரு-நாள், டி-20 போட்டிகளிலும் அஷ்வின் கோஹ்லியின் வெற்றி வியூகத்தில் முதலிடம் வகுப்பார் என்றே தெரிகிறது. அமித் மிஷ்ரா முதல் மேட்ச்சில் இருப்பாரா என்பது சந்தேகமே. இந்த ஒரு-நாள் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்கள் அஜின்க்யா ரஹானே, அம்பத்தி ராயுடு இல்லாதது ஆச்சரியம்.

கடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து இந்தியாவில் படுதோல்வி கண்டதால், இங்கிலாந்தின் ஒரு-நாள் கதையும் அதே கோட்டில் செல்லும் என எதிர்பார்ப்பது அசட்டுத்தனம். மார்கன் தலைமையில், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), பேர்ஸ்டோ (Jonny Bairstow), பட்லர் என பேட்டிங் ஆழம் நிறைந்த அணி இது. பயிற்சிப் போட்டியில் 93 அடித்த சாம் பில்லிங்ஸையும் (Sam Billings) இங்கே குறிப்பிடவேண்டும். ஸ்பின் ஆல்ரவுண்டர்களான மோயின் அலியும், ஆதில் ரஷீத்தும்(Adil Rashid) வேகபந்துவீச்சாளர்களுக்குத் துணைநின்று இந்திய பேட்ஸ்மன்களைத் திணற அடிக்க முயல்வார்கள். அவர்களது முயற்சிகள் எப்படி இருப்பினும், இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு முன், மிகவும் திறமையான ஃபீல்டிங் அணி என்பது உண்மை. இந்திய ஃபீல்டிங்கில் ரவீந்திர ஜடேஜா, மனீஷ் பாண்டே, ஹர்தீக் பாண்ட்யாவைத் தவிர்த்துக் குறிப்பிட்டு சொல்லும்படியாக யாரும் இல்லை. யுவராஜின் ஃபீல்டிங் காலம் மலையேறி வருடங்களாகிவிட்டது.

கேப்டனாகப் பொறுப்பேற்றபின், இந்தியாவிற்கான தன் முதல் ஒரு-நாள் தொடரைக் கைப்பற்ற கோஹ்லி நிறைய முனைவார். உழைக்கவேண்டிவரும். தோனி, யுவராஜ் போன்ற சீனியர்களின் ஒத்துழைப்பும் அவசியம். மொத்தத்தில், அணியில் மிகச்சரியான காம்பினேஷன் அமைப்பதிலேயே பாதி வெற்றி கைக்குள் வந்துவிடும் எனத் தோன்றுகிறது. வெற்றிமுகம் காண்பாரா விராட் கோஹ்லி?
**