நரி பரியான கதை !

முந்தைய பதிவான “திருப்பெருந்துறை சிவபெருமான் பற்றி….“ படித்தபின் இங்கு தொடர்ந்தால், நன்றாக இருக்கும். எனினும், கொஞ்சம் முன்கதை சுருக்கம்:

அரிமர்த்தனப் பாண்டியன், நல்ல ஜாதிக்குதிரைகளை வாங்கவேண்டி தனது முதல் அமைச்சரான வாதவூரரை (மாணிக்கவாசகரை) திருப்பெருந்துறைக்கு அனுப்பினான். அங்கே குருவாய், சிவனடியாராய் வந்தமர்ந்திருந்த சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார் மாணிக்கவாசகர். சிவத்தில் ஆழ்ந்தார்; அங்கேயே தங்கிவிட்டார். (இனித் தொடர்ந்து படியுங்கள் . . )

திருப்பெருந்துறையில், மெய்மறந்து பக்திப்பெருக்கில் திளைத்திருந்த மாணிக்கவாசகரின் நாட்கள் வேகமாய் ஓடுகின்றன. ஒரு நாள், பாண்டிய மன்னனிடமிருந்து ஒரு தூதன் வரவிருப்பதாகச் செய்தி வந்தது. திடுக்கிட்டார் மாணிக்கவாசகர். `அடடா! அரச காரியத்துக்காக அல்லவா இங்கு வந்தோம்? என்ன செய்துவிட்டோம்? எனை ஆட்கொண்ட பெருமானே! என் செய்வேன் இனி?` எனக் கலங்கினார். அடியவரின் கவலையை உணர்ந்த சிவன் அவரது கனவில் வந்து, குதிரைகளுடன் விரைவில் திரும்புவதாக பாண்டியனுக்குச் சேதி அனுப்பச்சொன்னார். சிவன் சொன்னபடி செய்தார் மாணிக்கவாசகர். ஏற்கனவே தன்னோடு வந்து அங்கு தங்கியிருந்த படைவீரர்களையும் மதுரைக்குத் திருப்பி அனுப்பினார். மறுபடியும் சிவத்தில் ஆழ்ந்து, பாடிப் பரவிக்கொண்டிருந்த மாணிக்கவாசகரின் கனவில் மீண்டும் திரும்பினார் சிவபெருமான். `மதுரைக்கு நீ திரும்பிப்போ. குதிரைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்! ` என்று உத்தரவிட்டார். மதுரை திரும்பினார் மாணிக்கவாசகர் அதாவது, பாண்டியனின் முதன்மந்திரியான வாதவூரர். ஆனால், குதிரைகள் ஏதும் கூட வரவில்லை!

வெறுங்கையோடு திரும்பிய மாணிக்கவாசகரைப் பார்த்துக் கடுங்கோபம் கொண்டான் பாண்டியன். அவர்மீது, பாண்டிய அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்தது, ராஜ்யத்திற்கெதிரான மோசடி எனக் குற்றங்கள் சாட்டப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்டார். அவர் முதுகின்மேல் பாறைகள் ஏற்றப்பட்டன. அங்கும் இங்கும் சுமையோடு அலைய வைத்துக் கொடுமைப்படுத்தினர். சிறையில் தன் ஆண்டவனை நினைத்து அழுது புலம்பினார் மாணிக்கவாசகர். செவிமடுத்தார் சிவன். நந்திதேவரை அழைத்து அடுத்த நாளே, மதுரையைச் சுற்றிலும் உள்ள காட்டில் இருக்கும் நரிகளைப் பரிகளாக்கி (குதிரைகளாக்கி) மதுரைக்குள் அனுப்ப ஆணையிட்டார். நந்திதேவர் சிவன் ஆணையைச் செயல்படுத்தினார்.

கிடுகிடுவென மதுரைக்குள் நுழைந்த கம்பீரக் குதிரைகளைப் பார்த்த அரசன் ஆச்சரியமானான். என்ன வகையான ஜாதிக்குதிரைகள் இவை? எங்கிருந்து வந்தன இத்தனை! அவன் மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில், குதிரைகள் மீண்டும் நரிகளாயின. ஊளையிட்டு ஊரையே கூட்டியதால், உடன் விரட்டிவிடப்பட்டன. பாண்டியன் கோபம் எல்லை மீறியது. அரசனான என்னிடமே சித்துவேலையா! எனது மந்திரி இவ்வளவு தூரத்துக்குப் போய்விட்டாரா? மாணிக்கவாசகரைக் கடுமையாகச் சித்திரவதை செய்ய எண்ணி, அவரை வெறுங்காலுடன் ஆற்றின் சுடுமணல்படுகைக்கு அனுப்பினான். கொதிக்கும் மணலில், தலையில் பாறையுடன் நிற்கவைத்து வறுத்தெடுத்தார்கள் வீரர்கள். சூடும், சுமையும் தாங்கமுடியாது அவர் தள்ளாடியபோது, அடியும் சரமாரியாக விழுந்தது. மாணிக்கவாசகர் துவண்டார். மனதுக்குள் மருண்டார். தனக்கேன் இத்தகைய சோதனை, தண்டனை எல்லாம்? சித்தம் கலங்கி சிவபெருமானிடம் முறையிட்டார். `ஆட்கொள்வதுபோல் நாடகமாடி எனை அழவைத்து வேடிக்கை பார்க்கும் அருமையே, ஆதியே, சிவனே! உனையே நம்பிய உனது அடிமைக்கு உரிய பரிசா இது? ஆத்மநாதனே, அநியாயமாய் இல்லையா இதெல்லாம் உனக்கு?` அவரது கதறல் சீண்டியது சிவனை. சிரித்தார் இறைவன்.

கருணைபொங்க சிவன் கீழ்நோக்க, வெறும் மணல்படுகைகளாயிருந்த, நீர் காணா கோடையின் வறண்ட சுடுவெளியில், திடீரெனப் பெருவெள்ளம் பாய்ந்தது. பாண்டிய வீரர்கள் திடுக்கிட்டனர். மழையே இல்லை. வெள்ளம் எங்கிருந்து வருகிறது? எகிறிய வெள்ளநீர் மாணிக்கவாசகரைச் சுற்றிச் சுற்றிச் சென்றது. அவருக்கு ஆபத்து ஏதுமில்லை. மேலும், அவர் தலையில் கட்டியிருந்த பாறைகள், உடற்கட்டுகள் அறுந்து விழுந்து சிதறின. அப்பனின் அருள்விளையாடலை உணர்ந்த மாணிக்கவாசகர் பரவசமானார். அவன் புகழ்பாடி உருகினார். தள்ளி நின்று கவனித்த வீரர்கள் குலைநடுக்கம் கண்டனர். இதில் ஏதோ சூழ்ச்சி, அபாயம் இருக்கிறது என பயந்து, அவரை விட்டுவிட்டு ஓடினர். அரசனிடம் சென்று அலறினர். மன்னனின் குழப்பம் அதிகமாயிற்று. ஊரில், வெள்ள நீர் வெகுவாக உயர்வதாக வந்த செய்தி அவன் நிம்மதியைக் கெடுத்தது. வைகை அணை உடைந்துவிடக்கூடாதே எனப் பதறினான். தண்டோரா போட்டு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு ஆண்பிள்ளையை அணைக்கு வரச்சொன்னான். அணையின் கரைகளை அதிரடியாக உயர்த்த உத்தரவிட்டான். பணி ராப்பகலாக நடந்தது.

வந்திப்பாட்டி என்றழைக்கப்பட்ட நிராதரவான மூதாட்டி ஒருத்தி, மதுரையில் வசித்துவந்தாள். பரம ஏழை. எனினும் பரமனின் பக்தை. தினமும் கஷ்டப்பட்டுப் புட்டு சமைத்து சிவனுக்குப் படைத்துவிட்டு, அதனை எதிர்வரும் எவருக்கேனும் உண்ணக் கொடுத்தாள். தன்னால் முடிந்த சிவகாரியத்தை சிரத்தையோடு செய்துவந்தாள். அவளுக்கும் அரசனின் அவசர தண்டோரா செய்தி போய்ச்சேர்ந்தது. `நான் ஆண்பிள்ளைக்கு எங்கே போவேன்? மண் அள்ளிக் கொட்ட, என் உடம்பும் ஒத்துழைக்காதே. ஒன்றும் செய்யாவிட்டால், அரச குற்றம் வந்துவிடுமே.. ஐயோ! என் சிவனே !` என அழுது அரற்றினாள். அடிமையின் அழுகை ஒலி காதில் விழுந்தது, காலனை எட்டி உதைத்த சிவனுக்கு. அவர்தான் திருவிளையாடல் சக்ரவர்த்தி ஆயிற்றே! நகர்த்தினார் காய்களை வேகமாய். சிறிது நேரத்தில், பாட்டியின் வீட்டுக் கதவை ஒரு இளைஞன் தட்டினான். கதவு திறந்த வந்திப்பாட்டியிடம் கெஞ்சலாகச் சொன்னான்: ”பாட்டி! ராஜ உத்திரவு பற்றிக் கேள்விப்பட்டேன். நானோ அனாதை. ஏழை. பசியால் வாடுபவன். உன் வீட்டிலிருந்து நான் போய், அணையில் மண் அள்ளிப்போடவா? வேலை முடிந்து மாலையில் வந்தபின், நீ சமைத்த புட்டைக் கூலியாகக் கொடுத்தால் போதும்!” என்றான். பாட்டிக்கு ஒரே ஆச்சரியம். மனம் லேசானது. ”சரி! நீ அப்படியே மன்னனின் வேலையைக் குறையேதும் வைக்காமல் செய்துவிட்டு வா. மாலையில் உனக்குப் புட்டு சமைத்துப்போடுகிறேன்!” என்றாள். பாட்டியின் வேலைக்காரனாக, குடும்பத்து ஆளாகப் பெயர் கொடுத்துவிட்டு, தன் பணியை ஆரம்பித்தான் அந்த இளைஞன்.

அதிரடி வேலையின் நேரடி மேல்பார்வைக்காக, குதிரையேறி உலவினான் பாண்டியன். மன்னன் அந்தப்பக்கம் வருகிறான் எனத்தெரிந்து, அப்போது மரத்தின்மேல் சாய்ந்து, தூங்குவதுபோல் பாவனை செய்தான் அந்த இளைஞன். சில நொடிகளில் அதற்கான பலன் கிடைத்தது. விளாசிய சாட்டையடி பலமாய் அவன் முதுகில் விழுந்தது. வலியால் அதிர்ந்தான் இளைஞன். அதிர்ந்தது அகிலமும். தன்முதுகிலும் சுரீரென வலிபரவ, பாண்டியனும் நிமிர்ந்தான். தடுமாறினான். இருந்தும், `உம்..! `என இளைஞனைக் கோபமாய்ப் பார்த்து சாட்டையை மேலும் உயர்த்தினான். இளைஞன் பயந்து, அவசரமாய் மண்ணள்ளி எடுத்து ஓடினான். அவன் தன் சட்டியிலிருந்து, வெள்ளப்பகுதியில் மண்ணைக் கொட்ட, சீறிப் பாய்ந்துகொண்டிருந்த வெள்ளம், வேகம் தளர்ந்தது. வேகமாகப் பின்வாங்கி வடிய ஆரம்பித்தது. கூர்மையாகக் கவனித்திருந்த பாண்டியன், ஆச்சரியமும் அதிர்ச்சியுமானான். உடல் தனையறியாது, நடுக்கம் கண்டது. குதிரையில் மெல்ல முன்னேறி, இளைஞனை அழைத்து அருகில்வரச் சைகை செய்தான். வந்ததும் `யார் நீ!` என வினவினான். இளைஞன் வந்திப்பாட்டியின் பெயர், விலாசம் சொன்னான். தான் அவளுடைய ஏழை வேலைக்காரன் என்றான். அரசனின் குழப்பம் தலைக்குமேலேறியது. இளைஞன் வழிகாட்ட, வந்திப்பாட்டியின் வீடுநோக்கி விரைந்தான்.

வேலைக்காரனாக வந்து தன் பரமபக்தைக்கு உதவிய சிவபெருமான், அவளுக்கு மோட்சம் அளிக்க முடிவெடுத்தார். அவளைக் கைலாசத்துக்கு அழைத்துவர சிவகணங்களை அனுப்பியிருந்தார். விரைந்துவந்த சிவகணங்கள் வந்திப் பாட்டியிடம் விஷயம் சொல்லி, அவள் தயாராவதற்காக வீட்டின் வெளியே அரூபமாய்க் காத்திருந்தனர். பாட்டியின் வீடடைந்த மன்னன் திரும்பிப் பார்க்க, இளைஞன் அங்கில்லை. வெளியில் வந்த வந்திப்பாட்டியோ, தான் கைலாசம் சென்றுகொண்டிருப்பதாகச் சொன்னாள்! மன்னன் அதிர்ந்தான். கலங்கிய மனதுடன், அரண்மனை திரும்பினான். வெள்ளம் வடிந்துவிட்டதாக அவனுக்கு செய்தி காத்திருந்தது. குழப்பமும் அதிர்ச்சியும் வடிந்தபாடில்லை.

அந்த கொடும் இரவில் தூக்கமின்றிப் புரண்டான் அரிமர்த்தனப் பாண்டியன். நல்ல சிவபக்தன் அவன். அந்தச் சிவனிடந்தான் சொல்லி அவனும் அழுதான். “என்ன நடக்கிறது என் நாட்டில்? ஒன்றும் புரியவில்லையே அப்பனே! குதிரைகள் திடீரென வருகின்றன. கண்ணுக்கெதிரேயே பரிகள் நரிகளாகின்றன. மந்திரியின் சித்துவேலையோ என அவரைத் தண்டித்தால், வெள்ளம் பாய்கிறது தலைநகருக்குள். அணையை உயர்த்த உத்தரவிட்டால், யாரோ ஒருவன் வந்து மண்ணெடுத்துப் போடுகிறான். அடங்காத வெள்ளம் அவன் சொன்னபடி ஆடுகிறது! வயசான பாட்டியின் வீட்டுக்கு விஜாரிக்கப் போனால், அவளுக்கு அரசனைப்பற்றிய அக்கறை ஏதுமில்லை; கைலாசத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்கிறாள்! எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. என்ன ராஜ்யம் இது? என்ன மாதிரியான ராஜா நான்? இந்த ராஜ பதவிக்கு நான் தகுதியானவன்தானா! “ எனத் துவண்டுபோய் சிவனை நினைத்தான். குமுறினான். பின்னிரவின் கனவில், சிவபெருமான் தோன்றினார்: “பாண்டியனே! உன் முதன்மந்திரியான வாதவூரர் (மாணிக்கவாசகர்)பொருட்டுதான் நான் இப்படி எல்லாம் நாடகமாடினேன். உன் குற்றம் ஏதும் இதில் இல்லை. ஆதலால், நீ கலங்காது நல்லாட்சி செய்வாயாக!“ என்று ஆசீர்வதித்து மறைந்தார் ஆதிசிவன்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே மாணிக்கவாசகரை சிறையிலிருந்து விடுவித்தான் பாண்டிய மன்னன். அவரிடம் மனமாற மன்னிப்புக் கோரினான். அவரையே தன் ராஜ்யத்தின் முதன்மந்திரியாகத் தொடருமாறு வேண்டிக்கொண்டான். மாணிக்கவாசகர் நடந்ததெல்லாம் சிவன்விளையாடல் எனச்சொல்லி, தான் சிவபாதையில் தொடர்ந்து நடக்கவேண்டியிருப்பதை அவனுக்கு உணர்த்தினார். சிவசிந்தனையோடு, அங்கிருந்து வெளியேறினார்.

**

திருப்பெருந்துறை சிவபெருமான் பற்றி மாணிக்கவாசகர்

புதுக்கோட்டைப் பகுதியில் பிறந்து வளர்ந்து, புரட்சிக்குப் பேர்போன க்யூபா (அல்லது ஸ்பானிஷ் மொழியில் கூபா) வரை சென்றிருந்தும், அருகிலுள்ள ஆவுடையார் கோவில் பக்கம் போய்ப் பார்த்ததில்லை. `பக்கத்தில்தானே இருக்கு..எப்ப வேணும்னாலும் பாத்துக்கலாம்!` என்று மெத்தனமாய் விட்டுவிட்ட எத்தனையோ புண்ய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இப்போது தூரத்தில், புதுடெல்லியில் போய், குளிருக்கிதமாய் ஸ்வெட்டர் அணிந்துகொண்டு உட்கார்ந்து யோசிக்கிறேன் !

கொஞ்சம் பொறுங்கள், சொல்ல வந்தது என் புராணம் அல்ல. மார்கழிமாதப் பாடல்களான சிவபெருமானுக்கான திருப்பள்ளியெழுச்சியில், பாட்டுக்குப் பாட்டு திருப்பெருந்துறை மன்னா! .. திருப்பெருந்துறை உறை சிவபெருமானே…என்றெல்லாம் உருகுகிறாரே இந்த மாணிக்கவாசகர்? எங்கிருக்கிறது இந்த ஊர்? ஆவுடையார் கோவில் என இப்போது அழைக்கப்படும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகிலிருக்கும் ஊர்தான் மாணிக்கவாசகரின் சிந்தை குளிர்வித்த அந்த திருப்பெருந்துறை.

இளம் வயதிலேயே கல்வி ஞானத்திற்குப் பேர்போனவர், `வாதவூரர்` என முன்பு அழைக்கப்பட்ட மாணிக்கவாசகர். இவரது மொழிப்புலமை, ஆன்மிக அறிவு பற்றிக் கேள்வியுற்று அசந்து போன அரிமர்த்தன பாண்டியன், இந்த இளைஞரை தன் ராஜ்யத்தின் முதல் மந்திரியாக நியமித்தான். (அந்தக் காலத்தில் மந்திரி பதவிக்கு எப்பேர்ப்பட்ட ஆட்களைத் தேர்ந்தெடுத்தார்கள் அரசர்கள், கவனித்தீர்களா! `முதல்வர் வேட்பாளர்` என அறிவித்துக்கொண்டு இந்தக் காலத்தில் அலைகிறதுகளே சில தெள்ளுமணிகள்.. சரி, விடுங்கள், இது வேறெங்கோ கொண்டுபோய் விட்டுவிடும் !). திருப்பெருந்துறைப் பகுதியில் சிறந்த ஜாதிக்குதிரைகள் கிடைக்கின்றன எனக் கேள்விப்பட்டு, அவற்றை வாங்குவதற்காக, வாதவூரரை திருப்பெருந்துறைக்கு அனுப்புகிறான் பாண்டிய மன்னன். கஜானாவிலிருந்து கொஞ்சம் பொற்காசுகளும், துணைக்கு வீரர்களையும் அழைத்துக்கொண்டு திருப்பெருந்துறை வருகிறார் வாதவூரர் (மாணிக்கவாசகர்). ஊரில் நுழைந்ததுமே குளுகுளு வயல்களும், சுற்றியுள்ள குளங்களில் தாமரை மலர்களுமாய் ரம்யமான காட்சி மனதை அள்ளுகிறது. ஊரின் கோவிலில் சிவபெருமான் ஆத்மநாதராக அருள்பாலிக்கிறார். ஆத்மாவுக்கு ஸ்வரூபம் உண்டா? இல்லை. அதைப்போலவே இங்கே ஆத்மநாதர் அரூபமாயிருக்கிறார். கூடவந்த வீரர்களைத் தனியே தங்கச் சொல்லிவிட்டு, ஆற்றில் (வெள்ளாறு – முன்னாளைய ஸ்வேத நதி) குளித்துவிட்டு, நீறணிந்து கோவிலுக்குள் சென்று துதிக்கிறார் மாணிக்கவாசகர். கோவிலின் பிரகாரத்தைச் சுற்றிவருகையில் ஒருபக்கம், குருங்க மரத்தடியில் ஒரு சிவனடியார் அமர்ந்திருக்கிறார். வேறு யார், நம் அப்பன் சிவபெருமான்தான், இவரை ஆட்கொள்ள இந்த நாடகத்தை ஆரம்பித்தார் அங்கே. ஏற்கனவே சிவஞானத்தில் திளைத்திருந்தவரான மாணிக்கவாசகரை சிவனடியாரின் சாந்தமான தோற்றம் வசீகரிக்கிறது. இவர் சிவனடியாரோ, சிவனேதானோ! என மயங்கி அவருடைய பாதங்களில் சிரம் வைத்துப் பணிகிறார். தென்னாடுடைய சிவனும் மாணிக்கவாசகரின் தலையில் தன் திருப்பாதம் வைத்து தீட்சை அருள்கிறார். சிவனின் பாத ஸ்பரிசம் பெற்ற இளம் மாணிக்கவாசகர், பரவசமயமாகிறார். சிவன் இனிதே மறைய, இறைவனின் புகழை அப்போதே பாட ஆரம்பிக்கிறார் மாணிக்கவாசகர். திருப்பெருந்துறையிலேயே தங்கிவிடுகிறார். சிவபெருமானுக்குக் கோவில் கட்டுகிறார். சிவன் பெருமையைப் பாடிப் பூஜித்து நாட்களைக் கழிக்கிறார்.

மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில், அந்தக்கால (9-ஆம் நூற்றாண்டு) திருப்பெருந்துறையின் ஊர்ச்சூழல், அழகு பற்றி, ஒவ்வொரு பாசுரத்திலும் ஒரு வரி சொல்கிறார். பச்சைப்பசேல் என வயல்கள். எங்கும் குளிர்ந்த சூழல். தடாகங்களில் கிண்ணங்கள் போல் மலர்ந்த செந்தாமரைப் பூக்கள் என ஊர்க்கதையும் சொல்கிறது அவர் வர்ணனை. சிவபெருமானின் அருமை, பெருமைபற்றி ஒரு பாசுரத்தில் மாணிக்கவாசகர் :

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

(பொருள்: நீ எல்லா உயிர்களிலும் நிற்பவன், போகுதல், வருதல் (இறப்பு, பிறப்பு) இல்லாதவன் என்றெல்லாம் உனைப் புகழ்ந்து பாடி, ஆடி மகிழ்வோரைக் கண்டுள்ளோமே தவிர, உன்னையே கண்டறிந்ததாகக் கூறுபவரைப்பற்றி நாங்கள் இதுவரைக் கேட்டதில்லை ! குளிர்ச்சிமிகு வயல்வெளியால் சூழப்பட்ட திருப்பெருந்துறைக்கு அரசனே! சிந்தனைக்கும் எட்டாதவனே! எங்கள்முன் வந்து எங்களின் கர்மவினைகளை அழித்து, எங்களை ஆண்டு அருள்புரியும் எங்கள் தலைவனே! உறக்கத்திலிருந்து எழுந்தருள்வாயாக !)

`குதிரை வாங்கத்தானே திருப்பெருந்துறை வந்தார் இவர் ! அது என்னவாயிற்று? பாண்டிய மன்னன் கேட்கவில்லையா?` நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் கவலை உங்களுக்கு! சரி, `நரி பரியான கதை`யை அடுத்த பதிவில் பார்ப்போம்..

**