ஐபிஎல்: 200 +களில் பஞ்சாப், ராஜஸ்தான் !

இதுவரை 3 போட்டிகளில் ஐபிஎல் டீம் ஸ்கோர் 200-ஐத் தாண்டியிருக்கிறது. ஷார்ஜாவில் நடந்த நாலாவது போட்டியில் இது முதலில் நடந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 216 எடுக்க, அதைத் தாண்ட முடியாமல் 200 ரன்னில்  இன்னிங்ஸை  முடித்து தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். இரண்டாவது தடவை கே.எல்.ராஹுல் தலைமியிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் இதனை பெங்களூர் அணிக்கு எதிராக செய்துகாட்டியது. பஞ்சாப் 206. கோஹ்லியின் பெங்களூர் பரிதாபமாக 109 மட்டுமே அடித்து மண்ணைக் கவ்வியது. 200-ஐ ஸ்கோர் தாண்டிய வைபவம், மூன்றாவது முறையாக நேற்று ஷார்ஜாவிலே நடந்தது.

பஞ்சாப் VS ராஜஸ்தான்.  பஞ்சாப் முதலில் பேட் செய்ய, கேப்டன் ராஹுலும், மயங்க் அகர்வாலும் ராஜஸ்தான் பௌலர்களை விரட்டி விரட்டித் தாக்கினர். சிறிய மைதானமான ஷார்ஜா சிக்ஸர்களை வாரிவாரி வழங்க, இருதரப்பிலும் பௌலர்கள் பெரும் சோதனைக்கு ஆளானார்கள். 50 பந்துகளில் 106 அடித்து (7 சிக்ஸர்கள்) ராஜஸ்தானைத் திணறவைத்தார் அகர்வால். ராகுல் 69. நிகோலஸ் பூரன் 8 பந்துகளில் 25 எனத் தூள்கிளப்ப பஞ்சாபின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 223 என உயர்ந்து, ராஜஸ்தானைத் துன்புறுத்தியது.

ஓப்பனர் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக அதிரடி விக்கெட்கீப்பர்/பேட்ஸ்மன் ஜோஸ் பட்லரை (Jos Butler) கேப்டன் ஸ்மித்துடன் இறக்கித் துவக்கியது ராஜஸ்தான். பட்லரை, (வெஸ்ட் இண்டீஸின்) காட்ரெல் 7 பந்துகளில் வீட்டுக்கு அனுப்பினார். சஞ்சு சாம்ஸன் இறங்குகையில் சிக்ஸர் எதிர்பார்ப்பு எகிறியது. சிஎஸ்கே-யை இதற்கு முந்தைய போட்டி ஒன்றில் இதே மைதானத்தில், 9 சிக்ஸர் விளாசி அலறவைத்த பேட்ஸ்மன்!  வேகமாக ஆடிய ஸ்மித் 50-ல் அவுட்டானவுடன், உத்தப்பாவுக்கு பதிலாக ராகுல் தெவாட்டியா (Rahul Tewatia, Haryana)வை அனுப்பியிருந்தார் ராஜஸ்தான் கேப்டன். ஒருபக்கம் சாம்ஸன் சிக்ஸர்-பௌண்டரி என வாணவேடிக்கை காட்டுகையில், தெவாட்டியா லெக்-ஸ்பின்னர் பிஷ்னோயை சிக்ஸர் அடிக்கமுயன்று முடியாமல், சிங்கிள் ஓடிக்கொண்டு வெறுப்பேற்றிக்கொண்டிருந்தார்.

Rahul Tewatia Vs Sheldon Cottrell

பேட்டிங் ப்ரொமோஷன் ஃப்ளாப் ஆகிவிட்டதா என ராஜஸ்தான் எண்ணுகிற வேளை. 17-ஆவது ஓவரில், 85-ரன் எடுத்து சாம்ஸன் அவுட்டாக, ஸ்கோர் 161-ல் இருந்தது. 224 என்கிற இலக்கு ஹிமாலய உச்சியாய் மின்னியது. ராஜஸ்தானுக்கு ஜெயிக்கிற ஆசையே போயிருக்கும். சாம்ஸனின் இடத்தில் இறங்கிய உத்தப்பா இரண்டு பௌண்டரி அடித்தார். தெவாட்டியா மட்டையும் கையுமாக முழித்துக்கொண்டிருக்க,  வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் (Sheldon Cottrell) பந்துவீச வந்தார். அந்த சில நொடிகளில் எந்த பூதம் வந்திறங்கியது தெவாட்டியாவுக்குள்? பஞ்சாப் எளிதாக ஜெயித்துவிடும் என்கிற தோரணையில், காட்ரெல் பௌன்சர் வீச, இதுவரை அரைத்தூக்கத்திலிருந்த தெவாட்டியா ஒரு சுழற்று சுழற்றி, பந்தை லாங்லெக் திசையில் சிக்ஸருக்கு அனுப்பினார்! அடுத்த ஆவேசப்பந்து, ஸ்கொயர்-லெக் திசையில் சிக்ஸர் என அலறியது. மைதானம் புரண்டு திரும்பிப் பார்த்தது. யாரிந்த ஹரியானா! மூணாவது பந்தை லெந்த்தில் வேகமாகக் காட்ரெல் வீச, லாங்-ஆஃப் திசையில் பறந்தது சிக்ஸ்! பௌலர் காட்ரெல்லுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போலிருந்தது. பஞ்சாப் கேப்டன் முழிக்க ஆரம்பித்திருந்தார். சாமியாட்டம் ஆடிய தெவாட்டியா 4-ஆவது, 6-ஆவது பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பிவிட்டார். ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்துக்கும், கோச்சிற்குமே ஒன்றும் புரியவில்லை. என்ன! ஜெயிச்சுடுவோம் போலிருக்கே!

31 பந்துகளில் 51 ரன்னில் 7 சிக்ஸர் விளாசி தெவாட்டியா வெற்றியின் விளிம்பில் ராஜஸ்தானைக் கொண்டுவந்தபின்,  அவுட்டானார். அடுத்துவந்த ஜொஃப்ரா ஆர்ச்சர் இரண்டு சிக்ஸர், டாம் கர்ரன் ஒரு பௌண்டரி என விளாசியதால் 224-ஐக் கடந்த ராஜஸ்தான் மறக்கமுடியாத வெற்றி பெற்றது.

அடிபட்ட புலியான கோஹ்லியின் பெங்களூர், இன்று (28/9/20) ரோஹித்தின் மும்பையைத் தகர்க்குமா, இல்லை தகர்ந்துவிடுமா என்பது கேள்வி!

**

Ind vs SA : கோஹ்லியின் .. ஆசை நிறைவேறுமா !

 

இந்தியா தென்னாப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச் சீரியஸாகப் போய்க்கொண்டிருக்கிறது.. சீரியஸ்லி! முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பில், 502 ரன் அடித்து டிக்ளேர் செய்து, இரண்டாம் நாளின் இறுதியிலேயே தென்னாப்பிரிக்காவின் மூன்று விக்கெட்டுகளை சாய்த்துவிட்ட குஷியில் இருந்தார் கேப்டன் கோஹ்லி. ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால் ஜோடியின் ப்ரமாத துவக்க ஆட்டம், ஒரு மதமதப்பைக் கொடுத்திருக்கவேண்டும், கோஹ்லிக்கும், கோச்சு சாஸ்திரிக்கும் (ரோஹித் 176, மயங்க் 215) !

Virat Kohli

மூன்றாம் நாள், ஸ்க்ரிப்டை மாற்றியது-செமயாகத் திருப்பிக்கொடுத்தது தென்னாப்பிரிக்கா. இன்று (5/10/19 நான்காவது நாள்) காலை 431-ல் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் முடிவுக்கு வந்தது (எல்கர் 160, டி காக் 111, டூ ப்ளஸீ 55). தென்னாப்பிரிக்காவின் (தமிழ்நாட்டு) முத்துசாமி, தங்கள் அணி 400-ஐக் கடப்பதில் பெரிதும் துணையாக இருந்தார், இறுதி வரை அவுட் ஆகாமல்(33 ரன்) கட்டைபோட்டு. முதல் இன்னிங்ஸில் கோஹ்லியை caught & bowled – எனக் காலி செய்திருந்தார் மனுஷன்!

கடைசி நாளான நாளை (6-10-19) மழைவரலாம் என வானிலை மையம் முணுமுணுக்கிறது. எவ்வளவு தூரத்துக்கு சரியாக இருக்கும் இது என்பது, வருண பகவானுக்கே வெளிச்சம். இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இந்தியா வேகமாக அடித்து டிக்ளேர் செய்தது. ரோஹித் எக்ஸ்ப்ரெஸ் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி (7 சிக்ஸர்கள்) தூள்கிளப்ப, பாசெஞ்சர் ட்ரெயினான புஜாராவும் கொஞ்சம் வேகமாக ஓட்டி, 81 எடுத்துவிட்டார். பின் வந்தவர்கள் கொஞ்சம் தட்டிவைக்க, ஸ்கோர் 323க்கு 4 விக்கெட்டுகள் என இருக்கையில், பேட்டிங் செய்துகொண்டிருந்த கோஹ்லி திடீர் டிக்ளேர் செய்து பெவிலியனுக்குள் ஓடிவிட்டார்! விசாகப்பட்டின ரசிகர்களிடையே  சலசலப்பு.

நேரம் இருந்ததால், தென்னாப்பிரிக்கா சில ஓவர்களை இன்றே விளையாடவேண்டியிருந்தது. அதற்குள் இரண்டு விக்கெட்டைத் தூக்கிவிடலாம் என்றுதான் கோஹ்லியின் அந்த அவசரம்.  வேகப்பந்து வீச்சாளர் முதல் ஓவர், அஷ்வின் இரண்டாவது ஓவர் என ரசிகர்கள் அனுமானித்த நிலையில், அதிர்ச்சி. கையில் புதுப்பந்தோடு முதல் ஓவர் அஷ்வின், இரண்டாவது ஜடேஜா. ஸ்பின்னிலேயே டெஸ்ட் இன்னிங்ஸ் துவக்கம்.  காரணம், வெளிச்சம் போதாமையால்,  இந்தியா வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த அம்பயர்கள் அனுமதிக்கவில்லை.  நல்லதாப் போச்சு. ஸ்பின்னர்கள்தான் எப்படியும் அதிக ஓவர்கள் போடப்போகிறார்கள். அங்கேதான் தென்னாப்பிரிக்காவின் சிக்கலும்.  இப்படியான  ஸ்பின் ஆரம்பத்திற்கு,  பலனும் கிடைத்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஹீரோவான டீன் எல்கரை (Dean Elgar), வீட்டுக்கு அனுப்பிவிட்டார் ஜடேஜா. இந்த அதிர்ச்சியிலிருந்து  மீண்டு, நாளை ஒழுங்காக மட்டையை சுழற்றினால், தென்னாப்பிரிக்கா தப்பிக்கலாம். இலக்கு 395 ரன்கள். அஷ்வினின் சுழல் ஜாலம்,  ஜடேஜாவின் எரிச்சலூட்டும் துல்லியம் ஆகியவற்றை எதிர்த்து நிறைய கட்டை போடவேண்டியிருக்கும். முத்துசாமி மீண்டும் கைகொடுப்பாரா?  கடைசிநாள் இந்தியப் பிட்ச்சில் எந்த ஒரு வெளிநாட்டு அணிக்குமே அது எளிதல்ல. பெரும்பாலும் எதிரி மண்ணைக் கவ்வுவதுதான் வழக்கம். அப்படி நடந்தால் 40 பாய்ண்ட்டு இந்தியாவுக்கு -உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி என்பதால்.

போன இன்னிங்ஸில் வழிந்த, ஆய்டன் மார்க்ரம் (Aiden Markram), டி ப்ருய்ன் (de Bruyn) க்ரீஸில் இப்போது இருக்கிறார்கள். கேப்டன் டூ ப்ளஸீ (Faf du Plessis) மற்றும்  டி காக் (Quinton de Cock, பவுமா (Tenda Bavuma) ஆகியோர் நிறைய உழைக்கவேண்டியிருக்கும். முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தி அதிரவைத்த அஷ்வின், ஜடேஜாவோடு இணைந்து தென்னாப்பிரிக்கர்களுக்கு சிம்ம சொப்னமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை, விசாகப்பட்டினத்தில் மழைதேவன் நாளைக்கென்று, வேறு ஏதாவது ட்விஸ்ட் வைத்திருப்பாரோ?

**

டெஸ்ட் க்ரிக்கெட்:  முதலாட்டம் – மயங்க் அகர்வால்

நான்கு டெஸ்ட் தொடரில் ஆளுக்கொன்று ஜெயித்துவிட்டு ஒன்றைப்பார்த்து ஒன்று முறைத்துக்கொண்டு, மெல்பர்னில் (Melbourne) தற்போது 3-ஆவது டெஸ்ட் (Boxing Day Test -Dec 26-30)  விளையாடுகின்றன இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்.

முரளி விஜய், கே.எல். ராஹுல் மீது காட்டிய பொறுமை போய்விட்டது இந்திய அணிக்கு. போட்டிபோட்டுக்கொண்டு தடுமாறிக்கொண்டிருந்த இருவரும்  வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.  கர்னாடகாவின்(also in IPL 2019- King’s XI Punjab) மயங்க் அகர்வால் இந்தியாவுக்காக முதன்முதலாக ஆட,  தொடரின் 3-ஆவது டெஸ்ட்டில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்.  (இதற்கு முன்பு நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் சேர்க்கப்பட்டும், ஆட வாய்ப்பு கிட்டவில்லை).  இதுவரை  பேட்டிங் வரிசையில், ஆறாம் நம்பரில் ஆடிய  ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வாலுடன் துவக்க ஆட்டக்காரராக முதன்முதலாக இறங்கியிருக்கிறார் இந்த மேட்ச்சில். பொறுமையாக 66 பந்துகள் நின்று  ஆடிய விஹாரி, 8 ரன்னில் வெளியேறினார். அவரைக் குறைசொல்வதற்கில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு செம டைட், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே அதிதுல்லியம். குறிப்பாக விஹாரியைத் தூக்கிய பாட் கம்மின்ஸ் (Pat Cummins). ஃபீல்டிங் வழக்கம்போல ஷார்ப்.

ஆனால் மறுமுனையில், டெஸ்ட் வெளியில் தனது முதலாவது ஆட்டத்தை ஆடிய மயங்க் அகர்வால் மசிந்துகொடுக்கவில்லை. இயற்கையாகவரும் அதிரடி ஆட்டத்தைக் குறைத்து, வலிமையான தடுப்பாட்டம் காட்டினாலும், அவ்வப்போது பௌண்டரிகளைத் தெறிக்கவிட்டார். குறிப்பாக 44 ரன்னில் இருந்தபோது, நேதன் லயனின் (Nathan Lyon) ஆஃப் ஸ்பின்னை மிட்-ஆஃபில் தூக்கி அடித்தது, அடுத்த பந்தை straight drive-ஆக தரையில் கோடுபோட்டு பௌண்டரிக்கு அனுப்பியது அசத்தல் பேட்டிங்.  ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான பௌலரான நேதன் லயனை,  அவர் கேஷுவலாகக் கவனித்தது எல்லோரையும் கவர்ந்திருக்கிறது.  161 பந்துகளில் 8 பௌண்டரி, ஒரு சிக்ஸர் என 76 ரன் எடுத்து  மயங்க்  வெளியேறியபோது, மெல்பர்னின் எண்ணற்ற இந்திய ரசிகர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் போர்டிடமிருந்தும் அப்பாடா என்கிற பெருமூச்சையும் அது வரவழைத்திருக்கும். இந்த கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் துவக்க ஆட்டக்காரர் ஒருவரிடமிருந்து வந்திருக்கும் முதல் அரைசதம் இது.

உண்மையில் ஆஸ்திரேலியாவில் துவக்க ஆட்டக்காரராக தூள்கிளப்பப்போகிறவர் ப்ரிதிவி ஷாதான் என எதிர்பார்ப்பு இருந்தது ஆரம்பத்தில். ஆனால், துரதிருஷ்ட வசமாக பயிற்சி ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்கையில், அவர் கால்மடங்கி காயம்பட்டு குணமாக காலம்பிடிப்பதால், இந்தியாவுக்குத் திருப்பப்பட்டுள்ளார். ’நமக்கும் வாய்ப்பு வருமா அல்லது ரஞ்சி, இந்தியா ‘ஏ’ அணிகளோடு நம் சகாப்தம் முடிந்துவிடுமா’ என மயங்கிக்கிடந்த மயங்க் அகர்வாலைக் கவனித்த காலம், பிடித்துத் தூக்கி மெல்பர்னில் இறக்கிவிட்டது.  இந்திய ரஞ்சித் தொடர்களிலும் லிஸ்ட் ‘ஏ’ மேட்ச்சுகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக சாத்து சாத்து என்று சாத்திவரும் வலதுகை பேட்ஸ்மன். ஸ்ட்ராங் டெக்னிக் மற்றும் நேரத்துக்கேற்றபடி ஸ்விட்ச் செய்து அதிரடி காட்டும் திறமையுடையவர். ஆஸ்திரேலியாவில் முக்கியமானதொரு போட்டியில் அவரது பேட்டிங் அரங்கேற்றம் நிகழ்ந்திருப்பதும், சிறப்பாகத் தன் முதல் இன்னிங்ஸை விளையாடியிருப்பதும் மங்களகரம். மயங்க் மேலும் நன்றாக ஆடி, நாட்டிற்காக சாதிப்பார் என நம்புவோம்.

Picture courtesy: Internet

**