இடமிருக்கா ?

**

நீண்டுசெல்லும் சாலைக்கு
நெருக்கமாக அமையவென
மூர்க்கமாய்க் குழி தோண்டி
முறுக்குக்கம்பியெல்லாம் நட்டு
கான்க்ரீட் கலவையோடு
கலந்தூற்றிய தண்ணீருமாய்
என்னென்னவெல்லாமோ செய்து
எழுப்புகிறார்கள் வேகவேகமாய்
பூதாகாரமாகக் கான்க்ரீட் குன்று
ஒட்டிய வயிறும் கவலை
தட்டிய முகமுமாய்ப் பரபரக்கும்
மனித ஆச்சரியங்களைக்
காத்து நிற்கிறாற்போல்
முன்னே வரிசையாக நாலைந்து
ஒடிசலாக உயர்ந்து நின்று
ஒருமண்ணும் புரியாமல்
மலங்க மலங்க விழிக்கின்றன

அயல்நாட்டுப் பனைதானே மனிதனின்
ஆசை மாளிகைகளுக்கு
அழகுக் கட்டிடங்களுக்கு
மதர்ப்போடு முன்னின்று அழகு சேர்க்கும்?
அப்பாவித் தென்னையாயிற்றே
விட்டுவைப்பார்களா பெரிய மனுஷர்கள்?

**

கதவைத் திறந்தபோது

. . . . .

கல்தான் கடவுள் என்றில்லை
புல்லும் பூவும்
நெருப்பும் நீரும்
ஆடும் மாடும்
கோழியும் குருவியும்கூட
கடவுளேதான்
தெருவில் போகிற மனுஷன்கூட
தெய்வந்தான்
பூமியும் சாமியே
அம்பரமும் ஆண்டவனே
அதிசயமா என்ன
பார்க்கிறபடி பார்த்தால்
பரம்பொருள்தான் எல்லாமே

**