எப்போதும் அருகிலிருக்கும் அன்னை

 

நாதனுக்குப் பக்கத்திலேயே இருக்கிறாள் எப்போதும். காதல் மட்டுமா காரணம், பதியைக் கணமும் பிரியாமல்  இருப்பதற்கு?  வேறொன்றும் இருக்கிறது.

இந்தப் பெருமாள்  இருக்கிறாரே, கடினமானவர். அழுத்தம் ஜாஸ்தி. அவர் இஷ்டத்துக்கு விட்டுவிட்டால் அவ்வளவுதான். ஏகப்பட்ட  கெடுபிடி காட்டக்கூடியவர். ஒரு ஜீவன் தவறுசெய்துவிட்டால்தான் என்ன?  போனால்போகிறது என அவனை விடுவதில்லை. பிடித்துத் தண்டித்து அவனை சரிப்படுத்தவேண்டும், திருத்தவேண்டும் எனும் பிடிவாதம் இவருக்கு.  இப்படிக் கறாராக இருக்கலாமா? பாவம், இந்த மனித ஜென்மங்கள். அவர்களும்தான் என்ன செய்வார்கள்.. ஏற்கனவே எத்தனையோ கஷ்டங்களில் வாழ்நாளெல்லாம் உழல்கிறார்களே. ஏதோ தெரியாமல் தப்புத்தண்டா  செய்துவிட்டார்கள் என்பதற்காக விரட்டி விரட்டியா  தண்டனை கொடுப்பது? அந்தக் குழந்தைகள்தான் பாவம் என்ன செய்யும், எங்கே போய் நிற்கும் ? –  என்று எப்போதும் தன் குழந்தைகளை நினைத்துக் கவலைப்படுகிறவள் தாயார். தன் குழந்தைகள், அவர்கள் யாராகிலும், எந்த நிலையில் இருப்பவர்களானாலும், அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டு அவளால் உட்கார்ந்திருக்கமுடியாது. அதனால் சிந்திக்கிறாள் – என்னுடைய நாதன் தண்டிப்பதிலேயே குறியாக இருந்தால், இந்தக் குழந்தைகளுக்கு அதுவே நித்திய ஆபத்தாகப்போய்விடுமே.  அவர்களைக் கொஞ்சம் பயமுறுத்திவைப்பதற்காக, ஏதாவது சின்னதாக ஒரு சோதனையைக் கொடுத்துவிட்டு, விட்டுவிடலாம் அல்லவா? அதுபோதுமே பாவம், அதுகளுக்கு..  என்று மனித ஜீவன்களுக்காக தன் மணாளனான மகா விஷ்ணுவிடம்  என்றும் மன்றாடுபவள் மகாலக்ஷ்மி.

இல்லைம்மா, உனக்கு இது புரியவில்லை.. அவன் அப்படியெல்லாம் சுலபமாகத் திருந்தமாட்டான். அவன் இருக்கும் மனநிலையே வேறே..  அவன் செய்துவிட்ட காரியத்துக்கு, ஏதாவது தண்டனை கொடுத்தால்தான், கடும் சோதனையில் புரட்டிப் புடம்போட்டால்தான் கொஞ்சமாவது புரியும். நல்லபடியாக மாறுவான்.. என்று பெருமாள் வாதிடும்போதெல்லாம் உடன்படமாட்டாள் தாயார். ’அதெல்லாம் அப்படி ஒன்றுமில்லை. அவன் நல்லவன்தான். ஏதோ தெரியாமல் அசட்டுத்தனமாகத் தப்புக் காரியம்  செய்துவிட்டான்.  தண்டனை அது இதுன்னு ஏதாவது பயங்கரமாகக் கொடுத்து அவனைப் படுத்தவேண்டாம். பேருக்கு ஏதாவது கொஞ்சம் கஷ்டம்கொடுத்து சோதித்துவிட்டு, விட்டுவிடுங்கள். இனிமேல் அப்படியெல்லாம் பண்ணமாட்டான் குழந்தை..’ என்று தன் குழந்தையாகிய மனித ஜீவனுக்காகப் போராடி பெருமாளின் மனம் இளகச் செய்கிறாள் அன்னை. இதையும் மீறி, தப்பு செய்த மனிதனுக்கு பெருமாள் தண்டனையே கொடுத்துவிட்டாலும், அதை அந்த ஜீவன் தாங்கிக்கொள்ளக்கூடிய வகையில் கொஞ்சம் எளிதாக்கிக்கொடுக்கிறாள்; கஷ்டப்பட்டாவது அந்த சோதனைக் கட்டத்தைக் அவன் தாண்டிச் செல்லுமாறு கருணைபுரிகிறாள்  தாயார். ஜீவர்கள், பெருமாளிடம் வகையாக மாட்டிக்கொண்டு, கடுமையாகத் தண்டிக்கப்பட்டுவிடாதபடி,  அவர்களுக்குக் கருணைகாட்டிக் காப்பதற்காகவே, பெருமாள்பக்கத்திலேயே எப்போதும் இருப்பவள்  பிராட்டி. நம் எல்லோரின் அன்னை.

வேதாந்த தேசிகன்,  ராமானுஜர்பற்றி எழுதிய  ’’எதிராஜ சப்ததி’-எனும் 74 பாசுரங்கள் அடங்கிய படைப்பின் ஆரம்பத்தில், ஆதி ஆச்சார்யர்கள் எல்லோருக்கும் முதலில் வணக்கம் சொல்கிறார். பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனை முதல் குருவாக, ஆச்சார்யராகக்கொண்டு வணங்கிவிட்டு, பிறகு தாயார் மகாலக்ஷ்மி, அதற்குப் பின் விஷ்வக்‌ஷேனர், நம்மாழ்வார் எனப் பின் தொடரும் ஆச்சார்யர்களை ஒவ்வொருவராக வணங்கிச் செல்கிறார். அப்போது அன்னை மகாலக்ஷ்மியை  வணங்கும்போது, இந்த உலகின்மீது, உயிர்கள்மீது அவள் காட்டும் கருணைபற்றி சிந்திக்கையில், மேற்கண்டவாறு உருகுகிறார், வேதாந்த தேசிகன்.

**

மனிதர்கள்

நகரமொன்றின் புறநகர்ப் பகுதி. ஒரு மத்திமவயது பெண்மணி மெல்ல நடந்துவருகிறார், நிழல்போல் ஒரு உருவம் தன்னைத் தொடர்வதை கவனிக்காமல். இதோ வந்தாயிற்று. ஏடிஎம்(ATM). யாருமில்லை அக்கம் பக்கம். உள்ளே நுழைந்து பணம் எடுத்து வெளியே வருகிறார். மறைந்திருந்த உருவம் திடீரென எதிரே.  கையில் மின்னும் கத்தி

‘கொண்டா இப்படி! சத்தம்கித்தம் போட்டே சொருகிருவேன்!’ பெண் மிரள்கிறார். உயிர் பயம். எடுத்த பணத்தை எதிர்ப்பு ஏதுன்றி, அப்படியே அந்த உருவத்திடம் கொடுத்துவிடுகிறார். உடம்பு நடுங்குகிறது. பணத்தை பறித்தாயிற்று. போகவேண்டியதுதானே. போகவில்லை. உருவம் மேலும் மிரட்டுகிறது. ;போ உள்ளே.. கார்டைப்போட்டு இன்னும் பணம் எடு. கொடு! ஜல்தி.. ம்..!’ அவரைப் பதில் சொல்லவிடவில்லை கத்தியின் மின்னல். உள்ளே போகிறார் அந்தப் பெண். கார்டைப்போட்டு, ஸ்க்ரீனில் விரலால் பாலன்ஸை (‘balance’)-ஐத் தொடுகிறார் நடுங்கிக்கொண்டே. திருடன் ஆவலாய் பார்த்திருக்க, ’பாலன்ஸ் மினிமம். மேற்கொண்டு எடுக்கமுடியாது’ என எச்சரிக்கிறது ஸ்க்ரீன்! அந்தப் பெண்ணுக்கு அவமானமாகவும் இருக்கிறது. திருடன் என்ன சொல்வானோ.. செய்வானோ.. பயம்வேறு. பதற்றத்துடன் முகம் வியர்க்க,  திருடன் பக்கம் திரும்புகிறார் அந்தப் பெண்.

‘ஆ! இவ்வளவுதானா உன்னிடம் பணம்?  இத்தனை ஏழையா நீ?’ கத்தியை மடக்கி உள்ளே வைத்துக்கொள்கிறான். ’சாரிம்மா! தெரியாமல் தொந்திரவு செஞ்சுட்டேன். இந்தா.. உன் பணம்!’ என்று அவ்வளவு பணத்தையும் அவளிடம் திருப்பிக்கொடுத்தான். அங்கிருந்து  நகர்ந்து ஒதுக்குப்புறமாக வேகமெடுக்கிறான் மென்மனத் திருடன்.

ஆனால் அவனுடைய நேரம் காலத்தைப்பற்றி என்ன சொல்ல. கெட்டகாலம். மறைந்திருந்து மோப்பம் பிடித்துக்கொண்டிருந்த போலீஸ், திடீரெனப் பாய்ந்து அவனை லபக்குகிறது. ’ஏய்.. எங்கடா ஓட்றே! பணத்தையும் திருடிட்டு, அந்தப் பொண்ணைக் கொலை செய்யவேறு பார்த்தியா?  ஏறு வண்டில..’

’சார்.. திருடப்போனது நெஜந்தான். ஆனா.. ஆனா.. அவங்ககிட்ட பணத்தத் திருப்பிக் கொடுத்துட்டேன்.. என்னிடம் இப்போ ஒன்னுமில்லை.. செக் பண்ணிக்கிங்க சார்.. ப்ளீஸ்..விட்ருங்க.’

’இந்தக் கதையை  ஸ்டேஷன்ல வச்சிப்போம். ஏறு.. இப்ப..!’ திருட்டு முயற்சி மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த முயற்சி  எனக் குற்றம் சாட்டி அவனை உள்ளே போட்டுவிட்டது சட்டம்.

*

கடந்த வருடம், இன்னுமொரு நகரில்.. படிக்க வந்திருக்கும் ஒரு மாணவி. லேப்டாப்பைத் தொலைத்துவிட்டாள். திருட்டுப்போய்விட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் தோழிகளிடம் சொல்லிக் கவலைப்படுகிறாள். அடுத்த நாள் அவளுடைய மெயிலில்:

’சாரி.. நீங்கள் ஒரு மாணவி.. படிக்கத்தான் இங்கே வந்திருக்கிறீர்கள். தெரியும். இருந்தாலும் எனக்கு பணம் அவசியமாகத் தேவைப்படுகிறது. வேறுவழி தெரியவில்லை. அதனால்தான் லேப்டாப்பைத் திருடிவிட்டேன். ஆனால், பணம் வேண்டும் என்பதற்காக ஒரேயடியாக ஆசைப்படவில்லை. உங்கள் வாலட், மொபைல் எல்லாவற்றையும் விட்டுவிட்டேனே.. பார்த்தீர்களா..

உங்களது லேப்டாப்பில் படிப்பு, ப்ராஜெக்ட் சம்பந்தமாக ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து, அப்படி ஏதேனும் இருந்தால் உங்களது மெயிலுக்கே அனுப்பிவிடுவேன். படிப்பு விஷயத்தில் உங்களுக்குக் கஷ்டம் வரக்கூடாதல்லவா.

மற்றபடி, சிரமத்திற்கு மன்னிக்கவும்.’

என்று வந்திருந்தது லேப்டாப் திருடியவனிடமிருந்து அந்த மெயில்.

’ஒன்னத்துக்கும் நீங்கள் லாயக்கில்லை. திருடியாவது பிழையுங்க.. போய்த் தொலைங்க!’  என்று, மேலே சொன்ன இருவரையும் வாழ்க்கை பின்பக்கம் ஒரு கிக் கொடுத்து விரட்டிவிட்டுவிட்டதுபோலும். முதலாமவன் ஷாங்காய், சீனாவிலிருந்து. இரண்டாமவன் பிரிட்டனின் பர்மிங்காமிலிருந்து. இது ஒரு ரெஃபரென்ஸுக்காக மட்டும்தான். ஊரும், நாடுமா முக்கியம்?

வாழ்க்கை எனும் மாபெரும் வெளியில், திருடிக் காலத்தைக் கழிக்கும்படி நேர்ந்துவிட்டவர்கள் அவர்கள். இருந்தாலும், மனிதர்கள்..

**

ஐதரேய உபநிஷதம் – 1

 

பூமாதேவியை வாழ்நாள் முழுதும் வணங்கி ஞானநிலையடைந்த ஐதரேய மகரிஷியினால் அருளப்பட்டது இந்த உபநிஷதம். ரிக்வேதத்தில் வருகிறது.  33 மந்திரங்களை மூன்று அத்தியாயங்களில் தருகிறது. அனைத்தையும் மிஞ்சும் அதிசயமான சிருஷ்டியின் (படைப்பின்) ரகசியம் பேசுகிறது.

முதல் அத்தியாயம் இப்படி ஆரம்பிக்கிறது: ஆதியில் ப்ரும்மம் என அழைக்கப்படும் இறை ஒன்றே இருந்தது’ ’நான் உலகங்களைப் படைப்பேன்!’ என அது ஒருகணம் நினைக்க பல உலகங்கள் தோன்றின. அவற்றில் குறிப்பாக ஐந்து உலகங்கள்பற்றிக் குறிப்பிடுகிறது இந்த உபநிஷதம். அம்பலோகம், சொர்க்கலோகம், மரீசீலோகம், மரலோகம், ஆபலோகம் ஆகியவை இவை. சொர்க்கலோகத்திற்கு மேலிருப்பதாக சொல்லப்படும் ’அம்பலோகம்’ தண்ணீர் உலகம் என அழைக்கப்படுகிறது. மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.  சொர்க்கலோகம் என்பது அடுத்தாற்போல் வருவது. தேவர்கள் வாழும் உலகம் இது. பூமிக்கு மேலிருப்பது ’மரீசீ’ என அழைக்கப்படும் ஒரு உலகம். ஒளியை ’மரீசீ’ என வடமொழியில் அழைப்பார்கள். சூரியன், சந்திரன், நட்சத்திரங்களென கிரகங்களின் ஒளியால் நிரம்பிய உலகம். அனைத்தும் ஒளிமயமாக இருக்கவேண்டும் இந்த உலகில் எனத் தெரிகிறது. மரீசீ லோகத்திற்கு அடுத்து வருவதுதான் ’மரலோகம்’. சமஸ்க்ருதத்தில் ’மர’ என்பதற்கு மரித்தல் என அர்த்தம் உண்டு. மரலோகம் என்பது இறப்பவர்கள், இறப்பவைகள் காணப்படும் உலகம். இதுவே  நாம் வாழும் பூமி. இதற்கடுத்து, ஐந்தாவதாக வருவது ’ஆபலோகம்’ எனச் சொல்லப்படுகிறது. இதுதான் பூமிக்குக் கீழிருப்பதாக கருதப்படும் ‘பாதாளலோகம்’.

உலகங்கள் படைக்கப்பட்ட பின் அவற்றிற்கான காவலர்களை உருவாக்க நினைத்தது பிரும்மம் (பரம்பொருள்). பிரும்மா என அழைக்கப்படும் படைக்கும் தேவனான பிரும்மதேவன் தண்ணீரிலிருந்து திரட்டப்பட்டு படைக்கப்பட்டதாக இது கூறுகிறது. ..

’தம் அப்யதபத்..’ என ஆரம்பிக்கும் முதல் அத்தியாயம்  பிரம்மதேவனைப்பற்றி, பிரும்மம் (அல்லது இறை) சிந்திக்க ஆரம்பித்ததைச் சொல்கிறது. பிரும்மம் சிந்தனை வயப்பட, பிரம்மதேவனின் வாய் பிளந்தது.. முதலில் பேச்சும், பேச்சிலிருந்து நெருப்பும் தோன்றின. பின்னர் மூக்கு, மூக்கிலிருந்து மூச்சு, அதிலிருந்து காற்று எனவும். இவ்வாறே கண்கள், காதுகள், இதயம் ஆகியவைகளும் தோன்ற ஆரம்பித்தன. இதயம் பிளந்தபோது அதிலிருந்து மனமும், மனதிலிருந்து சந்திரனும் உருவாகின என்கிறது. தொப்புளும், தொப்புளிலிருந்து அபானன், அபானத்திலிருந்து மரணம் என உருவாகியது. பின்னர் குறி தோன்றியது.. அதிலிருந்து விந்தும், விந்திலிருந்து நீரும் உண்டாகலாயிற்று. பிரும்மதேவனிடமிருந்து இவ்வாறு, உலகங்களும், இயற்கையும், உயிரினங்களும் உருப்பெற்றன என்றெல்லாம் சொல்லிச் செல்கிறது.

சிருஷ்டிபற்றி உருவகங்களாக, கவித்துவமாக  விவரிக்க முயல்கிறது இந்த உபநிஷதம். பல விஷயங்கள் சூட்சுமமாக மறைக்கப்பட்டிருப்பதால்,  பூடகமாக சொல்லப்பட்டிருப்பதால், புரிந்துகொள்வது கடினமாக அமைந்திருக்கிறது. ஏகப்பட்ட உயிரினங்களைப் படைத்த பிரும்மா ஒரு பசுவைப் படைத்தார். ஏற்கனவே படைக்கப்பட்ட மற்ற உயிரினங்கள் ’எங்களோடு சேர்ந்து வாழ இது போதாது. மேலும் பெரிதாக ஏதாவது தாரும்!’ என்றன. குதிரையைத் தோற்றுவித்தார் அவர். அவைகள் திருப்திப்படவில்லை. இந்நிலையில் மனிதனை லாவகமாகப் படைத்து அவைகளின் முன் நிறுத்தினார் பிரும்மதேவன். உயிரினங்கள் மகிழ்ந்தன. ’ஆஹா! அபாரம்! இவன் ஒரு உன்னதம்! ‘ என்று குதூகலித்தன.  இவ்வாறு படைக்கப்பட்ட மனிதன் உட்பட்ட உயிரினங்கள் யாவும் பிரும்மாவால் பெருங்கடலில் வீழ்த்தப்பட்டன. எந்தக் கடல் இது? – என்கிற  பிரமிப்பு உடனே  ஏற்படுகிறது.

ஆதிசங்கரர் இங்கே புகுந்து  விளக்குகிறார்: வாழ்க்கை எனும் நீண்ட, நெடுங்கடல்.  நித்யக்கடல். ஆசை, அறியாமை, செயல் என்பவை விளைவிக்கும் தீராதுக்கமே அந்தக்கடலின் அடங்கா நீர். இனந்தெரியாத் துன்பங்கள், நோய்கள், முதுமை, சாவு எனும் கொடிய ஜந்துக்கள் வாழும் கடலிது. அலைக்கழிக்கும் கவலைகள், உளைச்சல்கள், தீமைகள் என எகிறும் ஆயிரமாயிரம் அலைகள். புற உலகத்தோடு புலன்கள் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளால் விளையும், நீடிக்கா அற்ப இன்பங்கள்தாம் அவ்வப்போது கிடைக்கும் கொஞ்ச இளைப்பாறல்கள்.  வதைக்கும் முடிவிலா மாயக்கடலில் விழுந்தன உயிர்கள். விழுந்தவைகளை பிரும்மதேவன் உற்றுப் பார்த்தார். எடுத்துக்கொள்ளுங்கள் என பசி, தாகமென அவைகளுக்கு மேலும் வழங்கினார். பிரும்மம் அல்லது இறையிலிருந்து பிரும்மதேவன் (மற்றும் ஏனைய தேவர்கள்), பிரும்மதேவன் மூலமாக உலகங்கள், வெளி, இயற்கை, உயிரினங்கள் எனத் தோற்றம்பெற்றன. கூடவே, மனித ஜீவன், இவ்வாறு படைக்கப்பட்ட உயிர்களிலெல்லாம் மேலானது, உயர்ந்தது எனக் கோடிட்டு நகர்கிறது இந்த உபநிஷதம்.

மேலும் கவிதைவடிவில் இந்த உபநிஷதம். படைப்புக்காட்சிகளை விரிக்கிறது. பிரும்மதேவன் மூலமாக எல்லாவற்றையும் படைத்த பிரும்மம் எனும் இறை மேலும் சிந்தித்தது. இவர்களுக்கான உணவு? என நினைத்தது. அதன்முன் தென்பட்ட தண்ணீரை அது பார்க்க, அதிலிருந்து உணவு உருவாகியது .  இந்த இடத்தில் இந்த உபநிஷதத்தை எழுதிய ஐதரேய முனிவரின் கவிநயம் நம்மை ஆட்கொள்கிறது:

அவ்வாறு படைக்கப்பட்ட உணவு ஓடலானது!  எட்டாதது, எளிதில் கிட்டாததாயிற்றே? மனிதன் திகைத்தான். அதனை ‘வாக்கினால்’ துரத்திப்பிடிக்க முயற்சித்தான். நடக்கவில்லை. வாக்கினால் பிடிக்க முடிந்திருந்தால், ‘உணவு’ எனச் சொல்வதாலேயே திருப்தி கிட்டியிருக்குமே அவனுக்கு!

அதனை நுகர்வதால் பிடிக்கமுடியுமா? முயற்சித்தான். முடியவில்லை. நுகர்ந்தே பிடித்துவிட்டால்,  நுகர்வதாலேயே திருப்தி அடைந்திருப்பானே அவன்?

ஓடுகின்ற உணவைத் தன் பார்வையால் பிடிக்க எத்தனித்தான். சிக்கவில்லை. சிக்கியிருந்தால் அதனைப் பார்ப்பதாலேயே மனிதன் பசி தீர்ந்து திருப்தியடைந்திருப்பானே?

ஓடும் உணவைக் கேட்பதன்மூலம் பிடிக்க முயன்றான். நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால், உணவைப்பற்றிக் காதால் கேட்பதிலேயே அவனுக்குத் திருப்தி ஏற்பட்டிருக்குமே?

அந்த உணவைத் துரத்தித் தொட்டால் திருப்தி கிட்டுமா? முயன்றான். அதுவும் நடக்கவில்லை. தொட்டதனால் பசிதீருமென்றால், உணவைத் தொட்டாலே போதுமே..

இப்படி நிற்காது ஓடும் உணவை மனிதன் சிந்தனையால் கைப்பற்ற நினைத்தான். நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால், உணவைப்பற்றி நினைப்பதினாலேயே பசி தீர்ந்திருக்குமே..

உணவைத் துரத்தித் தன் குறியால் அடைய நினைத்தான்  மனிதன்.  முடியவில்லை. குறியின்மூலம் அடைந்திருந்தால், அதனை வெளிப்படுத்துவதிலேயே திருப்தியடைந்திருப்பான் அல்லவா?

இறுதியாக, ஓடும் உணவை அபானன் என்பதால் பிடிக்க முயன்றான் மனிதன். பிடித்துவிட்டான். அபானனே உணவைப் பிடிக்கிறது. பிராண சக்தியின் ஒரு அங்கமான அபானனே, வாய்வழி உள்ளே செல்கின்ற உணவை ஏற்று, ஜீரணித்து, அவயவங்களுக்கு வேண்டிய சக்தியாக உருமாற்றிப் பகிர்ந்து தருவது. எனவே அதுவே உணவின்மூலம் உயிரைத் தாங்க உதவுகிறது.

படம்: இண்டர்நெட்/கூகிள்

(தொடரும்)

 

 

புறாவுக்கு ஒன்னத்தையும் போட்றாதீங்க!

எங்கள் அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் நுழைந்து உள்பக்கமாகபோய்த் திரும்பி நடைபாதையில் நடந்துகொண்டிருந்தேன். தற்செயலாக அடுக்குமாடிச்சுவரின் உயரத்தில், அந்த சிறிய போர்டு கண்ணில் பட்டது. Don’t feed the pigeons. அடப்பாவிகளா! புறாவுக்கு சாப்பிட ஒன்றும் போடக்கூடாதா? பிச்சைக்காரனுக்கும் காசு, கீசு போட்றக்கூடாது. நாய் வாசலில் பசியோடு நாளெல்லாம் பட்டினியாகப் படுத்துக்கிடக்கட்டும். எதையும் போடாதே. நாம் மட்டும் நல்லா இருப்போம்.. டேய், நடக்கக்கூடிய காரியமா இது?

அந்தக்காலத்து மாடப்புறாக்கள் தான் இந்தக்காலத்து கோபுரப் புறாக்கள், அப்பார்ட்மெண்ட்டுப் புறாக்கள். இவைகள் மரங்கள் பக்கம் போகாது குடியிருக்க. கோயில் கோபுரங்கள், சர்ச்சுகள், மசூதிகள் என உயர்ந்த கட்டிட அமைப்புகளில் வாழும். இந்தக்கால அடுக்குமாடிக் கட்டிடங்களின் உச்சிகள், மொட்டை மாடிகள் இவை ஜோடி ஜோடியாய்க் குடும்ப வாழ்வு நடத்த வசதியாகிப்போகின. கட்டிடங்களின் பால்கனிகளில் இங்குமங்குமாக அவ்வப்போது இவை பறக்கும். சிலசமயங்களில் எங்காவது ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு ஙூம்..ஙூம்.. என ஒரு அழுத்தமான ஒலியில் முனகும். இவற்றின் வாழ்வு முறை அது. வேறென்ன செய்துவிடுகின்றன இந்தப் புறாக்கள்? இவை உன்னிடம் என்ன அல்வாத்துண்டையா தினம் தினம் கேட்கின்றன? இதுகளுக்காக மூலையில் கொஞ்சம் தானியத்தைத் தூவினால் என்ன, குறைந்தா போய்விடுவாய் நீ? ஏனிந்தக் கொலவெறி?

மெத்தப்படித்த உனது புத்திசாலித்திட்டங்கள் நாடெங்கும் பல காடுகளை சீராக அழித்துவருகின்றன; இயற்கை வளங்களை சூறையாடுகின்றன. வளமான வாழ்விடங்கள் அமைத்துக்கொள்வதாகச் சொல்லிக்கொண்டு, விலங்குகளின், பறவைகளின் இருப்பிடங்களைக் கபளீகரம் செய்கிறாய். கட்டிடங்கள், தொழிற்கூடங்கள் என்று ஏதேதோ முன்னேற்றமொழி பேசியே ஏரி, குளங்களையும் தூர்த்து மூடுகிறாய். இயற்கையை இப்படி சீண்டிவிட்டுக்கொண்டே நாளெல்லாம் வாழ்கிறாய். நவீனம் என்கிறாய்; நாகரிகம் என்கிறாய். என்னே என் திறமை என்று மார்தட்டிக் கொள்கிறாய். இடையிடையே பழம்பெருமையும் பேசி பம்மாத்து வேலை செய்கிறாயடா நீ! திடீரென எங்காவது சுனாமி, புயல், பூகம்பம் என இயற்கை சீற்றம் காட்டிவிட்டால், ஐயோ, அம்மா என்று அலறுகிறாய். ஓஸோனில் விழுந்தது ஓட்டை; உலகமே அழியப்போகிறதென்று என்று பேத்தினாய் ஒருமுறை! வான்வெளியின் கருங்குழி என்னையே பார்ப்பதுபோல் தெரிகிறதே என்கிறாய். அழிவுக்குழிகளை உன்னைச் சுற்றியும் நீயே தோண்டிவைத்திருக்கிறாய். திடீரென்று எல்லாக்குழியும் என்னயே பார்க்கிற மாதிரி இருக்கிறதே என்றால், என்னதான் செய்வது?

ஐந்தறிவை மட்டும் வைத்துக்கொண்டு, எத்தனையோ பிரச்சினைகளுக்கிடையேயும், விலங்குகள் எல்லாம் தங்கள் வாழ்வை சரிவர நிர்வகித்துவருகின்றன. உனக்குப் புரியாததா இது? ஆறை வைத்துக்கொண்டு அலட்டும் உன்னிடம் இந்த அடிப்படை சாமர்த்தியம் கூட காணப்படவில்லையே? மாண்புமிகு மனிதா! உன் தலையில் நீயே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டு எங்கே வேகமாகப் பறந்துகொண்டிருக்கிறாய்? புதிய உலகம் படைப்பதற்கா? இல்லை, இந்தக் கிரஹத்தின் கணக்கை ஒருவழியாக செட்டில் செய்துவிட்டு, வேற்றுக்கிரஹத்தில் போய் உட்காருவேன் என்கிறாயா?

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.. இந்த
மண்ணைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடா
கடந்து செல்லவும் முடியலைடா…

**

நேற்றும் நாளையும்

காலைக் காஃபியை மெதுவாக ஸிப் செய்துகொண்டு வலையில் மேய்ந்துகொண்டிருந்தேன். தினமும் ஒருமுறையாவது விமலாதித்த மாமல்லன், ஜெயமோகன், சாரு நிவேதிதா என்று எட்டிப் பார்த்துவிடுவது வழக்கம். இலக்கிய தாகம் என்றெல்லாம் ஜல்லியடிக்க விருப்பமில்லை. ஏதாவது சண்டை, சர்ச்சை, சுவாரஸ்யம் நிகழ்ந்திருக்கிறதா என்று அப்டேட் செய்துகொள்ளத்தான். சில சமயங்களில் அப்படியே நல்ல வாசிப்பனுபவமும் அமைந்துவிடுவதுண்டு. உதாரணம்: மாமல்லனின் ‘படித்த டாக்டர்களும் படிக்காத மெக்கானிக்கும்’ மற்றும் சாருவின் ’அசோகமித்திரனின் தத்துவம்’ எனும் சமீபக் கட்டுரைகள்.

ஜெயமோகன் பக்கத்தில் இருந்தபோது, இளம் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின்பற்றி அவர் குறிப்பிட்டிருந்தது பட்டது கண்ணில் : ‘நேற்றும் நாளையுமில்லாத பித்து’. என்ன சொல்கிறார் இவர்? நேற்றும் நாளையும் ‘இல்லாத’…. அப்படி ஒரு நிலை சாத்தியமெனில், அது நமக்குள் நிஜமாகவே நிகழ்ந்துவிட்டால் எப்படி இருக்கும்? பித்தா அது? அதுவல்லவோ தெளிவு!

எதிரே என்ன நடக்கிறது, தனக்குள்ளேயும் இந்த க்ஷணத்தில் என்னதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்கிற தெளிவான ப்ரக்ஞை ஏதும் மனிதனுக்கிருப்பதில்லை. எப்போதும் ஏதாவதொரு பழசைப்பற்றியோ, எதிர்காலம்பற்றியோ – அப்படி ஒன்று ஒருவேளை இல்லாமல் போகும் சாத்தியமும் உண்டு – நினைத்துக்கொண்டு நிலைகொள்ளாத மனதுடன் நாளெல்லாம் அலைந்துகொண்டிருக்கிறான். நிஜத்தில் வாழ்வைப்பற்றிய எந்தப் புரிதலும் பெரும்பாலும் அவனுக்கில்லை. அதற்கான சிரத்தையோ, ஏன் சிந்தனையோகூட அவனிடம் இருப்பதில்லை. உள்ளும் வெளியுமாக உண்மையில் ஏதோ நடக்கிறது என்பதை உணருமுன்னேயே, அவனுடைய கதை முடிந்துவிடுகிறது.

இருந்தும் மனிதன், தான் இவ்வுலகில் ’வாழ்ந்துகொண்டிருப்பதாக’ நம்புகிறான். நம்பிக்கையில் உழல்கிறது உலகம் . .

**

தேடித் தேடியே …

புதிதாகக் குடிவந்த இடத்தை
பொழுதுபோகாமல் சுற்றிப் பார்த்தேன்
குட்டித்தெருக்களில்
வட்டமிட்டபோது
புதுசு புதுசாகக் கண்ணில்பட்டன
ஏகப்பட்ட தெருநாய்கள்
நீளமும் குட்டையுமாய்
பெரிசும் சிறிசுமாய்
கருப்பும் சிவப்புமாய்
ஆசையாக வாங்கி வளர்த்து
அம்போ என்று விட்டுவிட்டார்களோ
விதவிதமாய் முகத்தைவைத்துக்கொண்டு
விசித்திரமாய் சத்தம் எழுப்புகின்றன
எந்தெந்த நாடுகளின்
இறக்குமதி வடிவங்கள் இவை
நாட்டு நாய்களெல்லாம் எங்கே?
தேடினாலும் எளிதாகத் தென்படுவதில்லை
நாட்டில் மனிதர்களும்கூடத்தான்

**

நாய் என்றொரு ஜீவன்

எங்கள் குடியிருப்பு வளாகத்தின் வாசல் மரத்தடியில், கொஞ்ச நாட்களாக ஒரு காட்சி. மரத்தில் கட்டப்பட்டிருக்கிறது ஒரு அழகிய இளம் நாய். சாம்பல், வெள்ளை கருப்பென்று வர்ணக் கலவை. துறுதுறு முகம். குறுகுறு பார்வை. அலைக்கழியும் மனத்தோடு அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருப்பதாய்ப் படுகிறது. யாரையும் பார்த்துக் குரைப்பதில்லை. அந்த வழியே செல்லும் மற்ற நாய்களையும் சீண்டுவதில்லை. ஒரு இடத்தில் அமர்வதுமில்லை. என்னதான் பிரச்னை? நேற்று மாலை வெளியிலிருந்து திரும்புகையில் கண்ணையும் மனதையும் கவர்ந்த, இந்த நாயை கேஷுவலாக தாண்டிச்செல்ல முடியவில்லை. அருகில் நின்றிருந்த நேபாளி செக்யூரிட்டியிடம் நாயைப் பற்றி விஜாரித்தாள் என் மனைவி. கொஞ்சம் தெரிய வந்தது:

இதன் எஜமானர், எஜமானி ரெண்டு பேரும் வெளியூர் போயிருக்காங்க மேடம்! எங்களை பார்த்துக்கொள்ளச் சொல்லிட்டு போயிருக்காங்க.

நல்லா சாப்பாடுல்லாம் போடுறீங்களா?

அதுதான் பெரிய பிரச்னையாயிருக்கு மேடம். வெளிநாட்டு நாய். அவங்க இதுக்காக பெடிக்ரீ (Pedigree – dog food) வாங்கிக் கொடுத்து, பணமும் கொடுத்துட்டுப்போயிருக்காங்க. இதுதான் சாப்பிடமாட்டேன்னு அடம் பிடிக்குது. தண்ணிகூடக் குடிக்கமாட்டேங்குது.

ஒன்னுமே சாப்பிடலையா !

பக்கத்து வீட்லயும் வெளிநாட்டு நாய் வளர்க்கிறாங்க. அவங்ககிட்ட போய்ச் சொன்னோம். அவங்களும் அவங்க நாய்க்கு போடற வேற மாதிரியான சாப்பாட்டையும் தட்டுல கொண்டுவந்து வைச்சாங்க. தொடணுமே…ம்ஹூம்! இன்னியோட 3 நாளாகப்போகுது. ரொம்பப் பெரிய பிரச்சினையாப் போச்சு..

எங்க போயிருக்காங்க அவங்க? எப்ப திரும்பி வருவாங்க?

அவசரமா சிம்லா போறதாச் சொன்னாங்க. நாலைந்து நாள்ல திரும்பிருவோம்னாங்க. ஒரு துர்சம்பவம் அவங்க குடும்பத்தில ..

என்ன நடந்தது?

அவங்களோட அண்ணா, அண்ணி, ரோட் ஆக்ஸிடெண்ட்டுல போயிட்டாங்க.. அதுக்காகத்தான் இவங்க அவசரமா போயிருக்காங்க.. நாலு நாளாகுமோ, கூட ஆகுமோ தெரியலையே..! உள்ளுக்குள்ள இருந்தா அதுக்கு போரடிக்குமேன்னு, வெளியே இருக்கிற மரத்துல கட்டியிருக்கோம். அக்கம்பக்கத்தைப் பாத்துகிட்டாவது இருக்குமில்ல..!

இவ்வளவு விபரம் செக்யூரிட்டி ஆசாமியிடம் சொல்லிட்டு போயிருக்காங்க. சரிதான். ஆனா இந்த நாய், அவர்களுடைய செல்லம், இந்தப் பாவப்பட்ட ஜெனமத்துக்கிட்ட ஒன்னும் சொல்லலையே. அதுக்கு ஒன்னும் புரியலையே, என்ன செய்ய?

நாய் என்று நாமழைக்கும் இந்த உயிரை, இறைவன் எப்படித்தான் படைத்திருக்கிறான் ? வெகுநேரம் எடுத்துக்கொண்டு தன் வேலையை செய்திருப்பான் போலும். எஜமானன் வரும்வரை சாப்பாடும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம் என்று கிடக்கிறதே.. வாயைத் திறந்து ஒரு சத்தமில்லை. வாலாட்டல் இல்லை ! அப்படி ஒரு விசுவாசம். ஒரு எஜமான பக்தி.

பொதுவாக, மனிதராகிய நாம், உயர்பிறப்பு என நம்மைக் கருதிக்கொண்டு, ஆறாவது அறிவு, ஏழாவது அறிவு என்று ஏதேதோ வைத்துக்கொண்டு, எப்படி இருக்கிறோம், நடந்து கொள்கிறோம்? நம்முடைய யோக்யதைகள், குணாதிசயங்கள் என்ன? அன்பு, விசுவாசம் போன்ற சங்கதியெல்லாம் நாம் இருக்கும் திசையிலாவது தலைவைத்துப் படுக்குமா? இந்த லட்சணத்தில், சகமனிதனோடு நமக்குப் பிரச்னைவந்து, அவனை நாம் திட்ட முற்படுகையில் `நாயே!` என்று கோபத்தில், வன்மமாகக் கத்துகிறோம். நாய் என்கிற ஒரு அற்புதமான ஜீவனைக் குறிக்கிற சொல்லை, வசைச்சொல்லாக மாற்றியிருக்கிறோம், நம் வசதிக்கென. அடடா! உயர்பிறப்பல்லவா நாம் ?

**

எங்கே நிம்மதி ?

சமீபத்தில் சென்னையில் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் செல்கையில் வழியைத் தவறவிட்டு, அவரையே நான் நிற்கும் இடத்துக்கு அழைக்கும்படி ஆனது. நம்மால் மற்றவருக்குக் கஷ்டத்தைத் தவிர வேறென்ன! நான் அடையாளம் சொன்ன சந்திப்பில் அவர் ஸ்கூட்டரில் வர, அவர் என்னைப் பார்த்து வண்டியை நிறுத்தியதாக நினைத்தேன். என்னை நோக்கிக் கையசைத்துவிட்டு, எதிரே வந்துகொண்டிருந்தவரை நிறுத்திப் பேசலானார். ரொம்பவும் நெருக்கமானவரோ?

விஷயம் வேறுவிதமானது என்று அவர்கள் பேசுகையில் புரிந்தது. எதிரே நடந்துவந்துகொண்டிருந்தவர் என் உறவினரின் உற்ற நண்பர். வயது 80-ஐ நெருங்கிக்கொண்டிருக்கவேண்டும். சோர்ந்த முகம். மெல்லிய தேகம். லேசான தள்ளாடல். கூடவரும் ஒருவருடன் எங்கோ வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறார். என் உறவினர் அவரிடம் கவலையோடு,

இந்த வெயில்ல எங்க கெளம்பிட்டீர்?

மடிப்பாக்கம் போறேன்..

ஏன், ஏதாவது விசேஷமா?

என்னோட இன்னொரு பிள்ளை வீட்டுக்கு போறேன்

வயசான காலத்துல, ஏன் இப்பிடி அலையறீர்? ஒரு இடத்தில இருந்தா என்ன? சின்னப் பையன் வீட்ல என்ன ப்ராப்ளம் ஒமக்கு?

நிம்மதி இல்ல இங்கே.. நான் அங்கே போறேன்!

ஹ்ம்..! நிம்மதியைத் தேடி இங்கிருந்து அங்கே. அங்கே போனால் கிடைத்துவிடுமா? சொன்னால் புரியாது; போய்ப் பார்த்தால் தெரியலாம். இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சையாய்த்தான் எப்போதும் தெரியும்.
வாழ்வின் ஒரு இடத்திலிருந்து, ஒரு புள்ளியிலிருந்து இன்னொன்றுக்கு, நிம்மதியைத் தேடி தீராப்பயணம். இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது இந்தப் பூமியில் மனித வாழ்க்கை. இது மனித இயல்போடு சம்பந்தப்பட்டது. இயல்பு என்பது மனம் சார்ந்ததல்லவா? மனமோ சஞ்சலமானது. சதா சர்வகாலமும் ஆடிக்கொண்டே இருப்பது. எந்த நிலையிலும் ஒரு contentment –நிறைவு, திருப்தி காணாதது. எதிலும் குறைகாணும் இயல்புடையது. இத்தகைய மனதை வைத்துக்கொண்டு காலட்சேபம் செய்யும் மனிதன் வேறு என்ன செய்வான்? அங்கும் இங்குமாய் அல்லாடுவதைத்தவிர ?

வயதானவர்களைக் கொஞ்சம் உற்று நோக்குகையில், அவர்களது நடவடிக்கைகளைக் கவனிக்கையில், மனம் கவலை கொள்கிறது. வயதாகிவிடுவதின் மூலமாய் இவர்களில் பெரும்பாலானோர் அடைந்ததென்ன? தலையிலே நரை. முகத்திலே வாட்டம். உடம்பிலே சோர்வு, தள்ளாடல். இது உடம்புக்கு நிகழும் இயற்கை. அவர்களின் மனதுக்கு? ஏதாவது நிகழ்ந்ததா? உடம்பு முதுமை அடைந்ததைப்போல், மனதும் முதிர்ச்சி அடைந்துள்ளதா? இல்லையே. பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் – வயதாகிவிட்ட சின்னப்பிள்ளைகள் ! இறுகிவிட்ட பிடிவாதம். மற்றவரின் கருத்தையோ, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையையோ ஏற்க, தாங்கிக்கொள்ள, அனுசரித்துப்போக இடம்கொடுக்காத மனநிலை கொண்ட சராசரி மனிதர்கள். பெரியவர்கள் என்கிற சமூக அந்தஸ்து இவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதில் குளிர்காய விரும்புகிறார்கள். ஆனால் அதற்கேற்ற மனப்பக்குவம், தகுதி இல்லை. அப்படி இல்லையே என்கிற பிரக்ஞையும் இல்லை.

காலத்தின் தவிர்க்க இயலாத வாழ்வியல் மாற்றங்கள் (lifestyle changes), பெற்றோர்-பிள்ளைகளிடையே நாளுக்குநாள் அதிகமாகிவரும் தலைமுறை இடைவெளி (ever-increasing generation gap) போன்றவைகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடுகின்றன. குடும்ப வாழ்க்கை என்பது தீவிர பரிணாம மாற்றம் கொள்ளும் காலகட்டத்தில், நிலைமையைப் புரிந்துகொள்ளாது, பக்குவமின்றி, கிணற்றுத்தவளைகளாக வாழும் முதியோரின் அந்திமக்காலம், அவர்களுக்கே பெரும் சோதனைக்கட்டமாக ஆகிவிடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

“மாறும் உலகில், மாறா இளமை அடைவோம் கண்ணா!“ என்று நாயகி பாடுவதாக வரும், ஒரு பழைய திரைப்படப் பாடலில். மாறா இளமைகொண்ட மார்க்கண்டேயனாக ஒவ்வொருவரும் ஆனால் – ஆஹா, ஜோராகத்தான் இருக்கும். ஆனால் அப்படி எழுதப்படவில்லையே நம் விதி! ஹாலிவுட் லெஜெண்ட்களில் ஒருவரும், அவரின் காலகட்டத்தில் பேரழகி எனக் கருதப்பட்டவருமான மர்லின் மன்ரோ (Marilyn Monroe), தன் இளமையின் உச்சத்தில், வாழ்வின் தவிர்க்கமுடியாத முதுமைநிலை பற்றி யோசித்துப் பார்க்கிறார். சொல்கிறார்: “சில சமயங்களில் நான் இப்படி நினைக்கிறேன்: முதுமையை எளிதாகத் தவிர்த்துவிடலாம்… இளமையிலேயே இறந்துவிட்டால் என்ன! ஆனால் ஒரு சிக்கல். வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவில்லை என்றாகிவிடும். நம்மை நாமே முழுதாகப் புரிந்துகொள்ளமுடியாது போய்விடுமே!“ அந்த இளம் வயதிலும், பக்குவ அறிவின் ஒளிக்கீற்றுகள் – flashes of brilliance at a relatively tender age…

**