என்ன செய்வது, என்ன சொல்வது

’வயசுதான் ஆகிக்கிட்டே இருக்கு.. இதுகூடத் தெரியல இன்னும்!’ என்றாள் அவரின் மனைவி. உண்மைதான். வயசு ஆகிக்கொண்டேதான் போகிறது. என்ன செய்வது? காலையில் காப்பி குடிப்பதற்கு முன்னேதான் இந்த  திடீர் ஞானோதயமா என்ன? ஏற்கனவே தெரிந்த, ஆச்சரியப்படுத்தாத, மனதில் ஊறிப்போன விஷயம்தான். சிந்தனை ஊற்றெடுக்க, காலாற நடக்கலானார் மனிதர்.

எதற்குத்தான் ஆகவில்லை? மனிதன், மிருகம், பறவை, மரம், செடிகொடி, கல், மண், மலை, நதி, கடல், ஆகாயம் எல்லாவற்றிற்கும் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது வயசு. அதுபோலவேதான் நமக்கும். எப்போதிலிருந்து?  பிறந்த கணத்திலிருந்தே, அதுமாட்டுக்கு ஆகிக்கொண்டேதான் இருக்கிறது. இப்போதும், இந்தக் கணத்திலும் ஆகிக்கொண்டிருக்கிறது. இனியும் ஆகும்.. எதுவரை ஆகவேண்டும் என இருக்கிறதோ, அதுவரை ஆகும். இதில் நம்முடைய முயற்சி என்ன? பங்கு என்ன? சாதனை என்ன? ஒரு மண்ணுமில்லை. அதுமாட்டுக்கு நடக்கிறது காரியம். நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும். மற்றவர்கள், சந்தர்ப்பத்துக்கேற்றபடி, அவ்வப்போது கிண்டலடிக்கவோ, குத்திக்காட்டவோ வழிசெய்கிறது, நமக்கு இப்படி ‘ஆகி’க்கொண்டிருக்கும் வயசு.

பேசுவதை, எழுதுவதை நிறுத்தலாம். ஏதாவது காரியம் செய்துகொண்டிருந்தால் அதை நிறுத்திப் பார்க்கலாம். இந்த பாழாய்ப்போன வயது ஆவதை ..?  ம்ஹும். ப்ரயத்தனத்தில் அர்த்தம் இல்லை. நம் கையில் இல்லை.

இத்தகைய கலங்கிய மனநிலையில் ஒருவேளை, ஏதும் புதிதாக, மாறுதலாக செய்வதற்கு, சொல்வதற்கோகூட இல்லையா? அப்படி ஒரு சோர்வா? அடடா.. பிறகு?  ’மலை சாய்ந்து போனால்.. சிலையாகலாம். இந்த மனம் சாய்ந்து போனால்.. என்ன செய்யலாம்?’ – என்று கேட்டுப்போனானே நம் கவிஞன். சாய்ந்துபோன மனதை வைத்துக்கொண்டு செய்வதறியாது புலம்பியிருப்பானோ அவனும்?

இத்தகு கவைக்குதவாத சித்தத்தில், ஒரு போக்கற்ற நிதர்சனத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லை எனினும், ஏதாவது சொல்லிப் பார்க்கலாமா? ’கிருஷ்ணா..!’ எனலாம். புரந்தர தாசரைக் கேட்டால் அப்படித்தான் சொல்வார்.  அவர் இதையே பலவிதமாய்ச் சொல்லிச் செல்கிறார். மனம் குழம்பியிருக்கையில், தெளிவாயிருக்கையில், சந்தோஷமாயிருக்கையில், துக்கமாயிருக்கையில், ஒரு இடத்துக்கு நாம் காரியமாகப் போகையில், போய்விட்டுத் திரும்பி வருகையில், அங்குமிங்கும் நிலையின்றி அலைந்துகொண்டிருக்கையில், மூலையில் முடங்கிக் கிடக்க நேர்கையில், பூமியைப் பார்க்கையில், ஆகாசத்தைப் பார்க்கையில்.. ’கிருஷ்ணா..!’ எனலாமே.  சாப்பிடுவதற்குமுன் சொல்லலாம். ரசித்து சாப்பிடும்போதும் சொல்லலாம். சாப்பிட்டுப் பசியடங்கிய திருப்தியிலும் கிருஷ்ணா எனலாம்தான். அற்பமானதோ, பெரியதோ – செய்யவேண்டிய செயல்களுக்கு முன்னே சொல்லாம், இடையேகூடச் சொல்லலாம், முடிந்தபின்னும் சொல்லலாம். தூங்குவதற்கு முன் சொல்லலாம். தூங்கி எழுந்தபின்னும் சொல்லலாம். தூக்கம் அகாலமாகக் கலைந்து, என்ன முயற்சித்தும் மேற்கொண்டு வராது அடம்பிடிக்கையில், இருட்டைப் பார்த்துக்கொண்டும் ‘கிருஷ்ணா..!’ என வாய்திறக்கலாம். கஷ்டத்திற்கிடையே சொல்லலாம். கஷ்டம் கலைந்தபின்னும் சொல்லலாம். விடாது தொடரும் நித்யப்பிரச்னைகளினூடேயும் அவ்வப்போது ’கிருஷ்ணா..’ எனலாம். ’வாயிருக்கிறது. வார்த்தையுமிருக்கிறது. கிருஷ்ணா என்று சொல்லப்படாதா!’ என்று சகமனிதர்களைப் பார்த்து அங்கலாய்ப்பார் புரந்தர தாசர்.

ஹரியே எங்கும், எதிலும் என நினைத்தவர், அவ்வாறே உணர்ந்தவர், அவனையே நினைந்து காலமெலாம் மருகினவர் தாசர். தென்னிந்தியாவில் ஹிந்துமத மறுமலர்ச்சி/ பக்தி இயக்கம் உச்சத்திலிருந்த காலகட்டம். 15-16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  செல்வந்தராய் இருந்தவர், ஒருநிலையில் எதையோ சடாரென உணர்ந்து, எல்லாவற்றையும் தூக்கிவீசிவிட்டு, பிச்சை எடுத்துப் புசித்து,  அலைந்து திரிந்தவர். பொதுஜனங்களுக்கிடையே தெய்வத்தைப் பாடி, பழகி பக்திப் பரவசத்தை அருளிய ‘ஹரிதாசர்களில்’ பிரதானமானவராகக் கொண்டாடப்படுபவர் புரந்தர தாசர் (கன்னடத்தில் புரந்தர தாசரு). கேட்போர் உருக, அவர்தம் மாயை கருக, பாடித் திரிந்தார் ‘கிருஷ்ணா .. ராமா..’ என்றே.   18-19 ஆம் நூற்றாண்டில்தமிழ்நாட்டில் தியாகராஜர், தியாகப்ரும்மம் ‘ராமா’.. ராமா!’ என மகிழ்ந்து, நெகிழ்ந்து சிஷ்யர்களுடன்  பாடிச் சென்றதுபோலவே.

காலையில் .. அதிகாலையில் ..

 

அதிகாலையில் தூக்கம் கலைந்தது. பறவைகள் முன்னமேயே எழுந்திருந்து வினோத சத்தங்களை எழுப்பிக்கொண்டிருந்தன. நாம் போடும் சத்தங்களைப்பற்றி அவைகள் என்ன நினைக்கின்றனவோ தெரியாது. பறவைகளின் பாஷை புரியாததும் நல்லதிற்குத்தானோ!

தூக்கம் கலைந்ததே தவிர, உடனே எழுந்து உட்காராமல் படுத்திருந்தேன். பக்கத்தில் படுத்திருந்த மொபைலை எழுப்பிப் பார்த்தேன். வாட்ஸப்பில் (மொபைலே இப்போதெல்லாம் வாட்ஸப்பிற்காகத்தானே. ’இல்லை செல்ஃபீக்காகத்தான்!’ என பலர் கத்துவதும் கேட்கிறது). ஒரு பெண் தன் ஸ்ரீரங்க அனுபவம் பற்றி விவரித்திருந்தார். பெருமாளை தரிசித்துவிட்டு திரும்புகையில் முனியப்பன் கோட்டை வழியாக வர நேர்ந்ததாம். அங்கே முனியப்பன் சன்னிதியில் பலிபீடத்தில் சுருட்டு புகைந்துகொண்டிருந்ததாம். அருகில்வேறு முரட்டு ஆசாமி ஒருவர் நின்றிருந்தாராம். அதைப்பற்றிக் கேட்கலாம் என்றால் தைரியம் வரவில்லையாம். பக்கத்தில் மாரியம்மன் சன்னிதியிலும் பூஜை.  ஸ்ரீரங்கனின் வளாகத்திலேயே முனியப்பனும், அம்பாளுமா  என ஆச்சரியப்பட்டு, அந்தக் காலைநேரத்தில் நம்மையும் ஸ்ரீரங்கம்பற்றி சிந்திக்கவைத்திருந்தார் அம்மணி. புண்ணியம் அவருக்கு. நமது தெய்வீக சிந்தனையைப்பற்றிய பிரக்ஞையோ,  தாக்கமோ ஏதுமில்லாப் பறவைகளின் அதிகாலைப் பிரசங்கம் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது. அவைகளின் அனுபவங்கள், தத்துவவிசாரங்கள் என்னென்னவோ?

ஒருவாறாக எழுந்திருந்து பால்கனிக்கு வந்தால்,  மெல்ல வருடியது குளிர்க்காற்று. அடடா, இந்த எதிர்பாரா சுகம்.. கருமேகங்கள் படர்ந்திருக்கும் ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒன்பதாம் வகுப்புப் படித்திருக்கையில் பள்ளி அணியுடன் கொடைக்கானல் சென்றிருந்ததும் அங்கு முதலில் அனுபவித்த அந்த மலைப்பிரதேச குளிர்ச்சியும் மனதில் வந்தன. புதுக்கோட்டையிலிருந்து கொடைக்கானலுக்கான பஸ் பிரயாணம், மாணவ, மாணவியரைக் கண்மாற்றாமல் பார்த்துப் பார்த்துக் கூட்டிச்சென்ற ஆசிரியைகள்,  கொடைக்கானலின் நட்சத்திர ஏரியில் படகோட்டம், ஸில்வர் காஸ்கேட்  (Silver Cascade) எனும், அந்த வயதில் பெரும் பிரமிப்பை ஊட்டிய கண்ணுக்கிதமான அருவி, பில்லர் ராக்ஸ் (Pillar Rocks) என அழைக்கப்படும் தூண்களாய் எழுந்து நிற்கும் மலைக்குன்றுகள்.. உடம்பை மெல்ல வருடிக் கிளுகிளுப்பூட்டிய அந்த, அதுவரை அனுபவித்திராக் குளிர்ச்சி..  புதுக்கோட்டையில் ராஜ வம்சத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ பிரஹதாம்பாள் அரசு உயர்நிலைப்பள்ளியிலிருந்து சுற்றுலாவில் வந்திருந்ததால், கொடைக்கானலில் இருந்த புதுக்கோட்டை  அரண்மனையை சுற்றிப் பார்க்கக் கிடைத்த அந்த அரிய வாய்ப்பு என அந்த பெஙகளூர் அதிகாலை கொடைக்கானல் காட்சிகளை வேகவேகமாகக் காட்டிச்சென்றது. இந்த மனம் – நமது சூட்சும உடம்பு – இருக்கிறதே,  அது நினைத்தால்,  எங்கிருந்தாவது நம்மை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு, எங்கேயாவது கொண்டுபோய் நொடியில் சேர்த்துவிடும். அங்கே கொஞ்சம் நாம் திளைத்திருக்கையில், திடீரென புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடும். அதன் இஷ்டமா, நம் இஷ்டமா !

இருள் விலக எத்தனித்த நேரத்தில், ஆகாசத்தில் நீலம், வெள்ளை, சாம்பல் என்று விதவிதமான வண்ணங்கள். இன்னும் சூரியன் எழுந்திருக்கவில்லை. ஞாயிறுதான் இன்று.. போனால் போகிறது. கொஞ்சநேரம் படுத்திருக்கட்டும். ஆதவன் ஆனந்தமாக இழுத்துப் போர்த்திக்கொண்டான்போலும். இன்னும் கீழ்வானம் சிவக்க ஆரம்பிக்கவில்லை. பாவம், சித்தநேரம் தூங்கட்டும். முழித்தபிறகு தலைக்குமேலே ஆயிரம் வேலைகள் இருக்கின்றன அவனுக்கு. தயவு, தாட்சண்யமின்றி ஆற்றவேண்டிய, அவனுக்கு விதிக்கப்பட்ட தினக் கடமைகள்..

**

அன்றும் இன்றும் என்றும்

இந்த உலகில் பலர் மனமில்லாதவர். மனமில்லாதவர் என்றால் ஏதோ மனம் எனும் ஒன்றை, ஒரு entity-ஐ, அது எதுவாயினும், அதை, கடந்து சென்றுவிட்ட ஞானி என இங்கே அர்த்தமில்லை. மெய்யியல்பற்றியல்ல பேச்சு. மனமில்லாதவர் என இங்கே குறிப்பிடுவது யாருக்காகவும் எதையும் செய்ய விரும்பாதவர்களை. ஒரு துரும்பையும்கூடத் தூக்கிப்போட மனமில்லாதவர்கள். உலகம் என்பதும் வாழ்க்கை என்பதும் இவர்களைப் பொறுத்தவரை இவர்களேதான். வேறொன்றுமில்லை. இந்த லட்சணத்தில் அடுத்தவனாவது, கஷ்டமாவது, உதவியாவது, மாற்றமாவது, மண்ணாங்கட்டியாவது.. போங்கப்பா அந்தப்பக்கம்.. என்றிருப்பவர்கள். தங்களைத் தாண்டி வேறெதிலும் இஷ்டமில்லாதவர்கள். இப்படிப்பட்டவர்களால்தான் இந்த உலகம் எப்போதும் நிரம்பி வழிகிறது. மத்லபி என்பார்கள் வடநாட்டில். அதாவது அதிசுயநலவாதிகள்.

இத்தகையோர் விரவிக் கிடக்கும் உலகில், ஆங்காங்கே கொஞ்சம்பேர் வித்தியாசமாகத்தான் தெரிவார்கள். அவர்களிலும் பலர் அமைதியாகவே இருப்பார்கள். சிலர் தலை உயர்த்தி, மாற்றம், புரட்சி, புது உலகம் என்றெல்லாம் சத்தம்போட்டிருக்கிறார்கள். இது அப்போதும் நடந்திருக்கிறது. இப்போதும் சிலர் தலையை சிலுப்பிக்கொண்டு, புதிதாக எதையோ கண்டுபிடித்துவிட்டவர்களைப்போல் கூவித் திரிகிறார்கள். இனிவரும் காலத்திலும் இத்தகைய ப்ரக்ருதிகள் தோன்றத்தான் செய்வார்கள். ஒரேயடியாக முஷ்டியை உயர்த்தி, தொண்டை கிழிய கோஷம் போடுவார்கள். ஏதேதோ செய்ய முனைவார்கள். அல்லது அதற்காக ஆள் சேர்ப்பார்கள். அவர்களால் எல்லாம் ஒன்றும் நிகழாதா என்று கேட்கலாம். நிகழலாம் ஏதோ கொஞ்சம் இங்கேயும் அங்கேயுமாக. அல்லது நிகழ்வதாக, ஏதோ நடந்துவிட்டதாகக் கூடத் தோன்றலாம். பிறகு மீண்டும் எல்லாம் பழைய குருடி.. கதவத் திறடி.. என்றாகிவிடும். எப்போதும்போலவே, எருமைமாட்டுக்கணக்காய், எல்லாவற்றையும் உள்ளேதள்ளி மெல்ல அசைபோட்டு நடந்துபோய்க்கொண்டிருக்கும் உலகம்..

**

. . புரிந்தும் புரியாமலும்

காலையில் ஒரு இருபது-நிமிட நடைக்குப்பின் சாலையோரமாக அந்த ரெஸ்ட்டாரண்ட் தலைதூக்கும். நடைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க நினைத்து, அதற்குள்போய் ஒரு கிளாஸ் காஃபி குடிப்பது வழக்கம். கிளாஸ் என்றால் பெங்களூரின் ஷார்ட் கிளாஸ். வேகமாகக் குடித்தால் நொடியில் காலியாகிவிடும். சூடாக வாங்கி, நிதானமாக அனுபவித்துக் குடிப்பதே உசிதம். காலைக் குளிருக்கும் இதம். காஃபியை வாங்கிக்கொண்டு ஓரமாக உட்கார்ந்து வெளியே பார்க்க இடம் தேடுகையில், வாசலோரத்தின் ஒவ்வொரு டேபிளிலும் ஒவ்வொருவர் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சரி என மூலையில் பார்த்தபோது, ஒரு இருக்கை ’அட, வா இந்தப்பக்கம்’என்றது. போய் உட்கார்ந்துகொண்டேன்.

வெளியே சாம்பல்போர்வையாய் வானம். லேசான காற்றில் ஒரு ஜிலுஜிலுப்பு. காஃபி நன்றாக இருந்தது. ஏதோ சிந்தனையில் மனமிருக்க, கண்கள் வானத்தில் நிலைத்திருக்கையில், திடீரென மேகப்போர்வைக் கொஞ்சம் விலகியது. உள்ளிருந்து நிலவைப்போல் மங்கலாக மாயாஜாலங்காட்டி வெளிப்பட்டது சூரியன். அவ்வப்போது காலை அல்லது மாலைப்பொழுதினில், அதை நானே பார்த்துவிடுகிறேன். மேகமூட்ட நாட்களில்தான் காட்சி கிடைப்பதில்லை. சிலசமயம் அதுவே, ’நா இங்கேதான் இருக்கேன் பாரு !’ – எனத் தன்னைத் திரைவிலக்கிக் காட்டிவிட்டு மூடிக்கொண்டுவிடுகிறது. சிந்தனையினூடே மனம் பாடல் ஒன்றை தன் ஆழடுக்கிலிருந்து எடுத்து விசிறியது :

எங்கிருந்தபோதும் உனை மறக்கமுடியுமா
என்னைவிட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

என்று மனம் ஓட்டுகையில், சூரியன் ஒளிந்துவிட்டிருந்தது.
தொடர்ந்து மேலெழுந்து ரீங்கரித்தது சுசீலாவின் குரல் :

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீயில்லாத உலகத்திலே சிங்காரமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வரும்வரை.. நிம்மதி.. இல்லையே…

இந்த வரிகள் மனதிலே மீண்டும் ரீ-ப்ளேயானபோது அந்தக்கால காட்சிகள் மனக்கண்ணில், கற்பனைத் திரையில் ஓடின. இப்படியெல்லாம் பெண்கள் ஒரு முப்பது-நாற்பது வருடம் முன் உருகியிருக்கிறார்கள் மனங்கவர்ந்தவனை நினைத்து. காதல் என்பது எப்பேர்ப்பட்ட மென் உணர்வாய் மனதில் அழகாய் இறங்கியிருந்திருக்கவேண்டும். மன ஆழத்தில் இதமாக அனுபவிக்கப்பட்டிருக்கவேண்டும். இப்படி இவர்கள் உருகும்படி அல்லவா அந்த ஆண்களும் இருந்திருப்பார்கள். அது ஒரு காலகட்டத்தின் அழகிய கதாபாத்திரங்கள். இளம் மனங்களின் நாசூக்கான உணர்வு வெளிப்பாடு. அது தரும் ஆழ்ந்த சுகம்.. மாறாத சோகம்.

இப்படி சிந்தனை ஓடுகையில், இப்போது நமது யுவர்கள், குறிப்பாக சல்வார்-கமீஸ்களிலும், பேண்ட்-ஷர்ட், சூட் என பிஸினஸ் உலகத்திற்கேற்ப பரபரப்பாய் உலாவருபவர்கள் – பதவி, பணம், அந்தஸ்து என இலக்குகளை நோக்கி பாய்ந்துகொண்டிருக்கும் இளமனுஷிகள் –இவர்களில், இந்த இயந்திர வெளியில், இத்தகைய மென் உணர்வுகள் உண்மையில் தோன்றுமா? காதில் இயர்-ஃபோனும் கையில் நித்திய மொபைலுமாய், அல்லது ப்ளூடூத் புண்ணியத்தில் தனக்குத்தானே சிரித்துக்கொண்டு, பேசிக்கொண்டு எந்தக் கவலையையும், பொறுப்பையும் சந்திக்காது, அருகில் மோப்பமிடும் ஆபத்துக்களைக்கூட உணராது, உலாவரும் நகரத்தின் இளசுகளைக் கவலையோடு பார்க்கிறேன். இவர்கள் காதில் தப்பித்தவறி… ’பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீயில்லாத உலகத்திலே சிங்காரமில்லை..
’ என்று விழுந்துவைத்தால் என்ன நினைப்பார்கள்? ’நீயில்லாட்டி நான் ஏன் சிங்காரமாய் இருக்கக்கூடாது? இது என்ன பேத்தல்?’ என்றா? இந்த வரி: ‘வரும்வரை நிம்மதி இல்லையே..’ கேட்டால் என்ன சொல்வார்கள்? ‘’ Cool dude..cool ! ஷிவ் வெளிநாட்லேர்ந்து திரும்ப ரெண்டுவருஷம் ஆகுமா? ஸோ வாட்! ஷங்கர் இருக்கான்ல..சீண்டுவோம்.. போக்குவோம் பொழுதை..கமான் டீ! எதுக்கு இப்படி அநியாயத்துக்கும் யோசிக்கிறே ?’’ என்பார்களோ? பெரும்பாலான ஆண்களின் நிலையைத் துருவினால், அது இதைவிட அபத்தமாக இருக்கும்.

இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை என்றும் சிலசமயம் தோன்றுகிறது. காதல் எனும் ஆழ்மனம் சார்ந்த மென் உணர்வு, அழகியல் ரீதியாக, தற்செயலாகக்கூட இவர்களில் நிகழ்ந்துவிடக்கூடாது எனத் திட்டமிட்டு நாசப்படுத்துவதுபோலல்லவா நிகழ்த்தப்படுகின்றன காட்சிகள் இப்போதெல்லாம் – நமது சினிமாக்களிலும், சீரியல்களிலும், பொதுவெளிகளிலும் ? திரையிசைக்கு எழுதப்படும் பாடல்களும், சினிமா வசனங்களும் எவ்வளவு கேவலமாகப் போய்க்கொண்டிருக்கின்றன நாளுக்குநாள்? எவனாவது கவலைப்படுகிறானா? நவீனம் என்கிற பெயரில் இன்னும் ஏதேதோ அபத்தங்கள் சமூக வாழ்வில் மண்டிக்கிடக்கின்றனவே.

சமூக, பொருளாதார இடைமறித்தல்களையெல்லாம் மிஞ்சி, இளம்வயதினரில் இயற்கை அவ்வப்போது மென்மையாக உணர்வுகளை நிகழ்த்தும்தான். அதனை இவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்களோ, எப்படி வெளிப்படுத்துவார்களோ! ஏதோ சொல்ல நினைத்து, ஏதோ சொல்லி, விதவிதமான சமூகசூழலில் எப்படி எப்படியோ அசைவார்கள். ஏதேதோ பாடுவார்கள். அதற்கேற்ப சிலர் ஆடுவார்கள். பின்னே சிலர் ஓடுவார்கள். காட்சிகள் தினந்தினம் மாறும். விதவிதமான செய்திகளைக் கூறும்.

சம்பந்தாசம்பந்தமில்லாமல் வேறுசிலர், ‘அந்தகன் வரும்போது.. அவனியில் யார் துணை ?’ என்று மனதுக்குள் பாடிக்கொண்டே மெல்ல நடந்துகொண்டிருப்பர். சிரித்துக்கொண்டே கடந்து செல்லும் காலம்.

**

ஆதவனின் ‘புகைச்சல்கள்’ சிறுகதை

அடுத்ததாக எழுத்தாளர் ஆதவனின் ‘புகைச்சல்கள்’ என்கிற சிறுகதைபற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.


ஆதவன்

பெயரிலேயே ஒரு கவர்ச்சி. பிறந்தது தமிழ்நாட்டின் கல்லிடைக்குறிச்சியில். டெல்லியில் ரயில்வே அமைச்சகத்திலும் பின்பு நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிலும் பணிபுரிந்தவர். மென்மையான மனிதர். (நான் பார்த்த முதல் தமிழ் எழுத்தாளர். என் அண்ணாவின் நண்பர். டெல்லியின் சரோஜினி நகரில் என் அண்ணாவின் வீட்டுக்கு ஒரு மாலையில் வந்தார். ஏதோ புத்தகம் கொடுத்தார். வாங்கிச் சென்றார். அப்போது பார்த்தது. எனக்கோ 20 வயது. இவருடைய அருமையை நான் அறிந்திருக்கவில்லை அப்போது!

தமிழ்ச்சிறுகதை உலகில் எழுபதுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர். இலக்கிய விமரிசகர்களையும், வாசகர்களையும் ஒருசேர திரும்பிப் பார்க்கவைத்த படைப்பாளி. எழுபதுகளில் கணையாழி போன்ற சிறு பத்திரிக்கைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்து இலக்கிய வாசகர்களைக் கவர்ந்தன. நகர்வாழ் மத்தியதர வகுப்பினரின் வாழ்க்கைப்போக்குகளைப் படம்பிடித்தாலும், குறிப்பாக இளைஞர்களின் உளவியல் சார்ந்த போக்குகளைக் கூர்மையாக சித்தரித்த, நளினமும் நேர்த்தியும் காட்டிய எழுத்து. இயற்கையும் இவரது எழுத்தினால் ஆகர்ஷிக்கப்பட்டதோ என்னவோ, 45 வயதிலேயே ஆதவனை அள்ளிக்கொண்டு போய்விட்டது. இவரது ‘என் பெயர் ராமசேஷன்’ நாவல் ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமாக விற்று தமிழ் இலக்கிய உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முக்கிய சிறுகதைத் தொகுப்புகள்: கனவுக்குமிழிகள் , ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் , புதுமைப்பித்தனின் துரோகம், முதலில் இரவு வரும் போன்றவை

குறுநாவல்கள்: இரவுக்கு முன்பு வருவது மாலை, மீட்சியைத்தேடி, நதியும் மலையும், ’பெண்,தோழி,தலைவி’ – மேலும் சில.

நாவல்கள்: காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன்
’புழுதியில் வீணை’ என்கிற நாடகத்தையும் இயற்றியவர் ஆதவன்.

விருது: சாஹித்ய அகாடமி விருது (1987) ‘முதலில் இரவு வரும்’ சிறுகதைத்தொகுப்பிற்காக (ஆசிரியரின் மறைவுக்குப்பின் வழங்கப்பட்டது)

’புகைச்சல்கள்’ சிறுகதையில் : அவன். அவள். இளம் தம்பதி. கல்யாணமாகி ஆறு மாதங்களே ஆகிறது. மணவாழ்வில் பெரிதாகப் பிரச்சினை ஏதும் தலைகாட்டவில்லைதான்.

ஆரம்ப நாட்களின் ஆண்-பெண் இளமைக் கவர்ச்சி இருவரையும் தன்வசம் ஈர்த்துக் கட்டிப்போட்டிருக்க, சின்ன சின்ன உரசல்களைத்தாண்டி எளிதாக நடைபோட்டது தாம்பத்யம். ஒருவர்மீது ஒருவர் காட்டும் அன்பு, உரிமை என்பதெல்லாம் இருவருக்குமே சந்தோஷம் தருகின்றன. ஆனால் மனம் என்று ஒன்று இருக்கிறதே.. அதனால் வெகுநாள் சும்மா இருக்க முடியாதே! எதையாவது கிளப்பவேண்டாமா? சுமுகமாகச் செல்லும் உறவுவெளியில், தன் ஆளுமையை முதலில் நிறுவ முயற்சித்தவள் அவள்தான். அவனிடம் உள்ள தனக்கு ஒவ்வாத சிறுசிறு பழக்கங்களை, குறைகளாகப் பார்த்து அவற்றை சரிசெய்ய தனக்கு உரிமை இருக்கிறதென மனதளவில் ஆரம்பித்து, நியாயம் கற்பித்துக்கொண்டு வார்த்தைகளுக்கு நகர்த்துகிறாள். ஆதவன் எழுதுகிறார்:

’இந்த உரிமையின் போதை முதலில் பிதற்றச் செய்தது அவளைத்தான். அவனுடைய பழக்கங்களைச் சீண்டத் தொடங்கினாள். முதலில் வேடிக்கையாக, பிறகு சீரியஸாக. அவனுடைய ஊதாரித்தனத்தை, அவனுடைய சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை.

முதலிலெல்லாம் சட்டையில் உட்காரும் பூச்சியைத் தட்டிவிடுவது போல அவன் அவளுடைய ஆட்சேபங்களை ஒரு புன்சிரிப்பால் அலட்சியமாகத் தட்டி உதறிவிட்டுத் தன்பாட்டில் இருந்தான். இது அவளுடைய அகந்தையைச் சீண்டியது. தன் அதிருப்தியை அவன் அங்கீகரிக்கும்படி செய்ய வேண்டும். அது அவனைக் காயப்படுத்தவேண்டும் என்பது அவளுக்கு ஒரு தீவிர தாகமாகவும் வெறியாகவும் ஆகி, தன் ஆட்சேபணைகளின் காரத்தை ஏற்றிக் கொண்டே போனாள்.
நிகழ்ந்து கொண்டிருப்பது வெறும் காதல் சீண்டல் அல்ல, தீவிரமான பலப்பரீட்சை; எறியப்படுபவை பூப்பந்துகள் அல்ல; பாணங்கள் – என அவன் உணரச் சிலகாலம் பிடித்தது. உணர்ந்ததும் அவன் எச்சரிக்கை அடைந்தான். .’

என வேகம்பிடிக்கிறது சிறுகதை. அவன் தன் மனைவியின்மீது அன்புடன்தான் இருக்கிறான். அவளும் அவன்மீது அப்படியே – கூடவே அவனிடமிருக்கும் குறைகள் என்னென்ன என்று பூதக்கண்ணாடிகொண்டு பார்ப்பதைப் பொழுதுபோக்காக ஆக்கிக்கொள்கிறாள். அவற்றை சீர்செய்து ஒழுங்குபடுத்துவதற்குத் தான் எடுக்கும் முயற்சிகளுக்கு அவன் உடன்படவேண்டும் என்கிற மனநிலையில் தினம் வளர்க்கிறாள் வார்த்தைகளை.. அவன் ஒவ்வொருமுறையும் அவளுடைய குறைகூறுதல்களுக்கு நிதானமாக பதில் சொல்ல முனைகிறான். அவளை ஆசுவாசப்படுத்த முயல்கிறான் :

‘ஹூம்!’ என்று அவன் பெருமூச்செறிந்தான். ‘இதோ பார், நான் சொல்ல விரும்புவதெல்லாம் அற்ப விஷயங்களை ஏன் பெரிதாக்குகிறாய், என்றுதான்… வாழ்க்கையில் துக்கத்துக்கான காரணங்களையே தேடி சதா துக்கத்தில் ஆழ்ந்திருப்பதும் சாத்தியந்தான். சந்தோஷத்துக்கான காரணங்கள் தேடி எப்போதும் சந்தோஷமாக இருப்பதும் சாத்தியந்தான். நாம் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போவோமே! உனக்காக நான் ஒரு செயற்கையான வேஷமணிந்தால்தான் உனக்குத் திருப்தியா? நான் நானாகவே இருக்க முயற்சி செய்கிற நேர்மையை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய், பாராட்டமாட்டேன் என்கிறாய்?’

‘ஹோ!’ என்று அவள் நொடித்தாள். ‘நல்ல நேர்மை… நான் ஒன்று கேட்கட்டுமா?’

‘ஒன்றென்ன, ஒன்பது கேள்’

‘நான் சிகரெட் குடித்தால் நீங்கள் பேசாமலிருப்பீர்களா?’

‘ஐ டோன்ட் மைன்ட் அட் ஆல்’

‘குடிக்க மாட்டேனென்ற தைரியம் – வேறென்ன?’

‘அதுதான் சொன்னேனே.. இது ரொம்பச் சின்ன விஷயம். நீ குடித்தாலும் சரி, குடிக்காவிட்டாலும் சரி, நம்முடைய உறவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.’

‘பொய்! சுத்தமான வடிகட்டின பொய்!’ என்றாள் அவள், ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரித்தவாறு.

இப்படி வாழ்க்கையில் ஒன்றுமில்லாதவற்றையெல்லாம் ஊதி ஊதிப் பெரிதாக்க முயலும் மனைவி. என்ன சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறாளே.. என்ன செய்வேன் நான்.. என தினம் அவளோடு அல்லாடும் கணவன். இப்படி ஒரு தம்பதியின் மனமுடிச்சுகளைக் காட்டிச் செல்லும் கதை. தொடர்ந்து படியுங்கள்
வாசகர்களே.

லிங்க்: http://azhiyasudargal.blogspot.in/2011/02/blog-post_26.html

நன்றி: ’அழியாச் சுடர்கள்’ இணையதளம். azhiyasudargal.blogspot.in
படம்: இணையம். நன்றி.

**

இழுத்துமூடு முதலில் !

அச்சுபிச்சு வாட்ஸப் மெசேஜுகளுக்கிடையில் ஒருநாள் அதிசயமாக ஓஷோ. என்னவாம் அவருக்கு. . அதாவது என்ன சொல்லிவைத்திருக்கிறார் ? இதுதான்: அனாவசியமாகக் கடந்தகாலத்தைச் சுமந்து கொண்டிருக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பழையதுகளை மூடிவிடுங்கள்.

ரொம்பச்சரி. ஆனால் அவ்வளவு எளிதான காரியமா அது? நம்ம கடையா என்ன, இஷ்டம்போல் இழுத்து மூடிவிட? அப்படி எல்லாம் மனம் நம் பேச்சைக் கேட்டுவிட்டால் அப்புறம் என்னதான் இருக்கிறது. மனிதன் இன்னேரம் எங்கேயோ போயிருப்பானே ஐயா! இதை எழுதும்போதுகூட என்னை இடையிலே அம்போ என்றுவிட்டுவிட்டு மனம் வேறெங்கோ ரவுண்டுக்குப் போயிருப்பது தெரிகிறதே! அதைத் தற்காலிகமாகவாவது இழுத்து அல்லவா ஸ்க்ரீனுக்குக் கொண்டுவரவேண்டியுள்ளது? ஒரு இடத்தில் நில்லாது எங்கெங்கோ இஷ்டத்துக்கு ரவுண்டு சுற்றிவரும் மனதைக் கட்டுக்குள் கொண்டுவருவதுபற்றி, அமைதிப்படுத்துதல்பற்றி என்னென்னவோ எல்லாம் காலங்காலமாய் சொல்லப்பட்டுவருகிறதே. பொல்லாக் குணமுடைய மனதை சொல்லாலோ, செயலாலோ அவ்வளவு சுலபமாக நிறுத்திவிடமுடியுமா? எத்தனை பேர் அதை சாதித்திருக்கிறார்கள் இதுவரை?

’ஆயிரம் வாசல் இதயம். . அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம். .’ அதில் எந்த வாசலை மூடுவது? அப்படியே மூடினாலும் இன்னொன்று தன்னால் திறக்கும் தன்மையதாயிற்றே. மனிதன் என்னதான் செய்வான் பாவம்? ’மனம் ஒரு குரங்கு . . ! ’ என்று இன்னொரு இடத்தில் ஆரம்பித்த கண்ணதாசன் தொடர்ந்து ‘. . நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும் . . நிம்மதி இல்லாமல் அலைபோல மோதும்!’ என்றெல்லாம்வேறு நொந்துபோய் எழுதியிருக்கிறாரே. சித்தர்களையே சித்தம் கலங்கவைத்த விஷயமாயிற்றே. . அத்தகைய குணவான் ஆன மனதிடம்போய் ’அந்தக்காலத்துக்கெல்லாம் திரும்பித் திரும்பிப் போகாதே . . பழைய குப்பையைக் கிளறித் தொலைக்காதே! கொஞ்சம் சும்மா மூடிகிட்டுக் கிட!’ என்றால் கேட்டுவிடுமா?

’மனமே முருகனின் மயில்வாகனம் . . ‘ என்று ஆரம்பித்து நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறது ஒரு பக்திப்பாடல். முருகபக்தர்களுக்கு கேட்கப் படுசுகமானது. மனமென்பது முருகன் அமரும் வாகனமாகவே ஆகிவிட்டால், அதாவது எப்போதுமே முருகன்தான். வேறு சிந்தனையில்லை என்றாகிவிட்டால், கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் போன்ற கஷ்டகாலங்கள் ஏதுமில்லை என்றாகிவிடும்தான். ஆனால் அது தித்திக்கும் விஷயம்போல் தோன்றினாலும், எல்லோருக்கும் சித்திக்கும் விஷயம் அல்லவே? அதற்கும், இறைத்தேடல் உள்ள ஒருவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஏகப்பட்ட சாதனாக்களை வாழ்நாள் முழுதும் செய்யவேண்டியிருக்குமே? அப்படியும் அந்நிலை சாத்தியமாகுமா என்பதே பெரும் கேள்விக்குறிதானே! சாதாரணர்கள் அண்டக்கூடிய சங்கதியா அது? நீங்கள்மாட்டுக்கு ‘.. கொஞ்சம் கொஞ்சமாக பழையதுகளை மூடிவிடுங்கள்’-னு சும்மா சல்லீஸா சொல்லிட்டு அந்தப்பக்கமா போயிட்டீங்களே ஆச்சார்ய ரஜ்னீஷ் – அதாவது ஓஷோ ஜி !

**

இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது ?

நண்பர் ஜிஎம்பி-யின் ‘எங்கள் வீட்டு மாமரம்’ (http://gmbat1649.blogspot.in) படித்தபிறகு, இளம்பிராயம் நோக்கி, இழந்துவிட்ட ஆகாயம் நோக்கி வேகமாகப் பாய்ந்தது மனது. அமைதியான கிராமப்புற வாழ்க்கையின் காட்சிக்கோப்புகளை எடுத்துவைத்துக்கொண்டு, மீள்பார்வை பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதற்குத் தெரியும். எதுவுமே நம்மோடு எப்போதும் இருக்கப்போவதில்லை. அல்லது கூட வரப்போவதுமில்லை. ஆதலால் காணொலிக்கோப்புகளை உடனுக்குடன் தயார் செய்து ஆழடுக்குகளில் பதுக்கிவைப்பது அதன் வழக்கம். ஏதோ, அதனால் முடிந்த காரியம்!

இப்போது பேசவந்தது இந்த மனதின் சாதுர்யம், சாகசம் பற்றி அல்ல. நாலாபுறமும் நாம் காணும் நாசகார காரியங்கள் பற்றி; சுற்றுச்சூழல் சிதைவு பற்றி. பொருளாதாரத்தின் தவிர்க்கமுடியாத கூறுகளில் ஒன்றான தொழிற்பெருக்கத்திற்கென, நாட்டின் குளிர்ச்சியான குக்கிராமங்கள் தடயம் தெரியாமல் காணாமல்போகுமாறு செய்யப்பட்டுவிட்டன. அதனிடத்தில், மழைக்காளான்களாய் முளைத்துவருகின்றன தொழிற்பேட்டைகளும், போதிய வசதியில்லாப் புறநகர்ப்பகுதிகளும். அசுரவேகத்தில் பெருநகரங்களாக உருமாறுகின்றன சிறு நகரங்கள். தவிர்க்கவியலாத, சூழல்நெருக்கடி மிகுந்த இக்காலகட்டத்தில், சரியான ஆரோக்யமான நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களின்றி, கான்க்ரீட் மலைகள் ஆங்காங்கே, தாறுமாறாகப் பொங்கி, கூட்டம் கூட்டமாக எழுந்து நின்று மனிதனின் ஆரோக்கிய வாழ்வையே அச்சுறுத்தும் அவல நிலை உண்டாகிவிட்டிருக்கிறது.

முன்னர், அக்கம்பக்கத்தில் பச்சைப்பசேலென்று வளர்ந்து சூழ்ந்திருந்தருந்த, குளிர்ச்சிதரும் நாட்டு மரங்களான ஆல், அரசு, வேம்பு, புளி, மா, தென்னை, பூவரசு, பூங்கொன்றை போன்ற பூ, காயெனப் பொழிந்துதள்ளிய மரங்கள், பணம்பண்ணும் முதலைகளின் பேராசைக்கெனக் காவுகொடுக்கப்பட்டுவிட்டன. கொடுக்கப்பட்டும் வருகின்றன. ஒருகாலத்தில் ஏரிகளால், குளம், குட்டைகளால், நீர்நிலைகளால், நிழல்தரும் மரங்களால் நிறைந்திருந்த, மனிதனுக்கான அழகான வாழ்விடங்களாக இருந்த சிறுநகரங்கள், ரியல் எஸ்டேட்காரர்களின் தீக்கண்கள்பட்டு, சிதைந்து சின்னாபின்னமாகி வருவதை நம் கண்முன்னே காண்கிறோம். ‘கார்டன் சிட்டி’ என்று ஆசையாக ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட பெங்களூரு, இன்று நாட்டின் மற்றுமொரு ‘கான்க்ரீட் சிட்டி’ என்றாகிவிட்டது. பத்தோடு பதினொன்று. அத்தோடு இது ஒன்று. குறுகிய காலகட்டத்திலேயே, கண்முன்னே நிகழ்ந்த பரிதாபம்.

நமது கிராமங்கள், நகரங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கென, தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்கள் வரையமுடியாத, செயலாக்கமுடியாத, எதையும் உருப்படியாக செய்ய விரும்பாத அரசியல்வாதிகளால் மனித வாழ்வு சீர்குலைந்துவிட்டது. மனிதனோடு சேர்ந்து வாழநேர்ந்த துர்ப்பாக்கியம் கொண்ட ஜீவன்களான, ஆடு, மாடுகள், பறவைகள் என, இவைகளின் பாடும் பெரும் திண்டாட்டம்தான். இவைகளின் வாசம், வாழ்வாதாரத்துக்கு, நீர்நிலைகள், நிழல், காய்கனிதரும் மரங்கள், செடிகொடிகள் முக்கியமல்லவா? சிலருக்குப் பணம் காய்ப்பதற்காக, இவைகள்தானே கொடூரமாகப் பலியாக்கப்பட்டுவிட்டன. அல்லது பலியாகிக்கொண்டிருக்கின்றன. பொதுவாக எங்கும் நிறைந்து காணப்படும் சிட்டுக்குருவிகளை, இப்போதெல்லாம் காண்பதே அறிதாக இருக்கிறதே, கவனித்தீர்களா? அதிகாலையிலும், மாலையிலும் இப்போதெல்லாம் கேட்காத பறவைகளின் கீச்கீச்சு சப்தங்களுக்காக மனம் ஏங்குகிறது.

நாட்டை ஆள்வதற்கென நாம் ஓட்டுப்போட்டு அனுப்பிவைத்த அரசியல் வாதிகள், பசப்புவார்த்தைப் பேடிகள் பெரும்பணத்தை லஞ்சமாக ரியல் எஸ்டேட் பேய்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, நம் சுற்றுச்சூழலை, இயற்கை வளங்களை, சிதைக்க அனுமதித்துக்கொண்டிருக்கிறார்கள். நாடெங்கும் சீராக நடக்கிறது சீரழிவு. இன்னமும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பெங்களூரில், மூன்றாவது அடுக்குமாடிவீட்டின் பால்கனியிலிருந்து சிந்தனையோடு சுற்றுவெளியைப் பார்க்கிறேன். குத்துக்குத்தாக தனிவீடுகள், அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கிடையே, ஆங்காங்கே கொஞ்சம் பச்சைத் திட்டுகள் இன்னும் தெரிகின்றன. ஒரு இளம் வேப்ப மரம், ஆலமரம், பெயர்தெரியாத சில மரங்கள் – இன்னும் பெரிதாகவில்லை- தூரத்தில் சிறுகூட்டமாக யூகலிப்டஸ் மரங்கள்.. தெரியாத்தனமாக விட்டுவைத்திருக்கிறார்களோ? சந்தோஷம் தலைதூக்குகிறது. கூடவே பயமாகவும் இருக்கிறது.யார் கண்ணாவது பட்டுவிடாமல் இருக்கவேண்டுமே !
**

காணா இன்பம் . .

உறக்கம் கலைந்தபின்னும்
உற்சாகமாயிருந்தேன்
அதிகாலை நேரத்தின்
அடுக்கடுக்கான எண்ணங்களினூடே
கண்டேன் கவிதையின்
தத்ரூபக் காட்சியை
எழுந்துவந்து எழுதாது
ஏனோ விட்டுவிட்டேன்
தப்பி ஓடிவிட்டது எனைத்
தனியே தவிக்கவிட்டு
நிலையில்லாத மனதின் திரையில்
நிறையவே ஓடுகின்றன இப்பவும்
கலகலத்துச் சிரிக்கின்றன
கட்டற்ற எண்ணங்கள்
கவிதையைத்தான்
காணவில்லை

**