பெங்களூர் ஜெயநகர். ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கோயில். காலை 10 மணிப்போல் ஆரம்பித்த சுதர்ஷன ஹோமம் மெல்ல முன்னேறுகிறது. அர்ச்சகர்களும், சார்ந்தவர்களும் நிதானமாக மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்கிறார்கள். அமைதியான சூழலில், மந்திர ஒலி அலையலையாகப் பரவி வியாபிக்கிறது.
ஹோமகுண்டத்தின் முன்னே, ஒரு வரிசையில் பெண்கள். எதிர்வரிசையில் ஆண்கள். ஒரு குட்டிப்பையன் -நாலு வயசு இருக்கலாம்- அம்மாபக்கம் அப்பாபக்கம் என, ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டிருக்கிறான். இடையிலே அவனது அப்பா பிடித்து உட்காரவைத்து ஒரு சுலோகத்தை சொல்லவைக்கிறார். கொஞ்சம் சொன்னான். இன்னும் சொல்லு.. என்கிறார் தந்தை. தெரில ! – என்கிறான். மறுபடியும் திமிறி அந்தப் பக்கத்துக்குத் தாவல். கீழே உட்கார முடியாததால், அப்பாவுக்குப் பக்கத்தில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் தாத்தாவிடம் இப்போது வந்து சிக்கிக்கொண்டான்! பேரப் பிள்ளையை சார்ஜ் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறார் பெரியவர். இழுத்து மடியில் உட்காரவைக்கிறார்..
விஷமம் பண்ணக்கூடாது ஒரு எடத்துல ஒக்காரணும்!
ம்ஹூம்.. அங்கே போய் ஒக்காந்துக்கறேன்..
ஸ்…அங்கயும் இங்கயுமா ஓடக்கூடாது. கோவிச்சுக்குவா!
யாரு ?
அங்க பார். அந்த மாமா !
அங்க என்ன நடக்கறது?
ஹோமம் நடக்கறது ..
இது எப்போ முடுயும்..?
டேய் ! மந்த்ரம் சொல்றார் பாரு மாமா. கேளு..
ஏன் ஃபாஸ்ட்டா சொல்லமாட்டேங்கிறா ?
மந்த்ரம்லாம் மெதுவாதான் சொல்லணும்.
ஏன்?
அப்பதான் உம்மாச்சி காப்பாத்துவார்..
அங்க ஒக்காந்துண்டு என்ன பண்றா? எனக்கு அங்கே போகணும்..
அங்கேலாம் போகக்கூடாது.
ஏன் ?
ஃபயர்! அதுக்குள்ளேயிருந்து நெருப்பு வருது பாத்தியா!
நெருப்பு எப்பிடி அங்கேருந்து வர்றது?
அந்த மாமா நெய்ய விடறார்!
நெய்யா! எனக்கு உன்னும் தெரியலயே
அடேய்.. அவர் கையில பார்றா .. லாங் ஸ்பூன்
அது .. ஸ்பூனா?
ம்.. உட்டன் (wooden) ஸ்பூன்.. அதுலேர்ந்து நெய் விடறார்.
நெய்ய ஏன் அதுக்குள்ள விடறார்?
அப்பதான் நெருப்பு பெரிசா மேல வரும்.
பையனின் கண்களில் மின்னும் ஆச்சரியம் .
நெருப்பு.. எம்பி எம்பி மேல வர்றது !
ம்..
கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் நழுவி ஓடிவிட்டான். எதிர்வரிசை அம்மாவிடம் போய் உட்கார்ந்துகொண்டான்.
ஹோமம் முடியும் தருவாயில்.. மீண்டும் தாத்தாவின் மடியில் பேரன்.
அங்க என்ன பண்றா ?
பாத்துண்டே இரு.. தெரியும்!
ஐயோ!
என்னடா?
அந்த மாமா.. வாழப்பழத்தத் தூக்கி நெருப்புலே போட்டுட்டார் !
ம்..
ஏன் போட்டார் ?
அதப் பார் ! அவர் கையில..
ஆப்பிள்! ஆ! அதயும் போட்டுட்டாரே நெருப்புக்குள்ள ..
ம்..
ஏன் இப்பிடிப் பண்றார் அந்த மாமா ?
அதுல்லாம் உம்மாச்சிக்கு.
அவர்தான் நெருப்புக்குள்ள போட்டுட்டாரே…
நெருப்புக்குள்ளதான் உம்மாச்சி வந்து ஒக்காந்திருக்கு.
நெருப்புக்குள்ளயா ! எனக்கு உன்னும் தெரியலயே..
நம்ப கண்ணுக்குத் தெரியாது.
எப்பிடி?
மந்த்ரம் சொன்னா இல்லியா? அப்போ நைஸா.. நெருப்புக்குள்ள வந்து உம்மாச்சி ஒக்காந்திருக்கும்.
அப்பறம்?
அப்பறம் யாருக்கும் தெரியாம.. போய்டும்!
நெஜமாவா! – பையன் கொழுந்துவிட்டெறியும் ஜுவாலையை கண்மலரப் பார்க்கிறான்..
சுதர்ஷனுக்கு தீபாராதனை செய்கிறார் அர்ச்சகர்.
எல்லாரும் கன்னத்துல போட்டுக்கறா பாரு! – எதிர்வரிசையை காண்பித்து சொல்கிறார் தாத்தா.
நீயும் கன்னத்துல போட்டுக்கோ..
போட்டுக்கொள்கிறான் சிறுவன்.
கைகூப்பு! காப்பாத்து..ன்னு பெருமாள சேவிச்சுக்கோ !
பெருமாளையும், கூட்டத்தையும் மாறி மாறிப் பாத்துக்கொண்டே கைகூப்புகிறான் குழந்தை.
**