எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதை ‘தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை’


எம்.வி.வெங்கட்ராம். (படம்:இணையம். நன்றி)

தமிழ் முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகளில் சிலவற்றைக் கொஞ்சம் பார்ப்போம். இங்கு வரவிருக்கும் கதைகளில் சில, கதைக்கரு, கதையாடல் அல்லது அவை வாசகனுக்குள் எழுப்பிச்செல்லும் மன உணர்வு போன்றவைகளில் வித்தியாசமாக இருக்கலாம். திறந்த மனதோடு இவற்றை அணுகினால்தான் கதைகளை ஓரளவாவது ரசிக்கமுடியும்.

எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதை ஒன்றிலிருந்து துவங்குவோம். முதலில் சிறுகுறிப்பு ஆசிரியர்பற்றி. பின் கதைபற்றிக் கொஞ்சம் கதைப்போம் !

எம்.வி.வெங்கட்ராம் (1920-2000) : கும்பகோணத்தில் பிறந்தவர். சுதந்திரத்துக்கு முன்னிருந்த காலத்திலேயே பி.ஏ.(பொருளாதாரம்). புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்ற மணிக்கொடி எழுத்தாளர்களோடு அடையாளம் காணப்பட்டவர். ’காதுகள்’ என்கிற தலைப்பிலான இவரது நாவல் தமிழின் முதல் ‘மாய எதார்த்தவாத’ (magical realism) நாவல் என விமர்சகர்களால் அறியப்பட்டது.

இவரது நாவல்களில் சில : நித்திய கன்னி, ஒரு பெண் போராடுகிறாள், உயிரின் யாத்திரை, இருட்டு, காதுகள், அரும்பு.

சில சிறுகதைத்தொகுப்புகள்: உறங்காத கண்கள், அகலிகை முதலிய அழகிகள், குயிலி, மாளிகை வாசம், எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள்.

விருது: சாகித்ய அகாடமி விருது 1993. (‘காதுகள்’ நாவலுக்காக).

‘தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை’ சிறுகதைபற்றி :

கும்பகோணத்தில் ஒரு மத்தியவர்க்க குடும்பம். காலகட்டம் 1950-கள் எனலாம். குடும்பத்தில் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் அப்படி ஒரு அன்னியோன்யம். அப்பாவுக்குப் பிடித்த பிள்ளை. கதையின் ஆரம்பத்திலிருந்து அப்பா தன் மூத்த மகன் சந்திரனைப்பற்றி சொல்லிச் செல்கிறார். ‘நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச்சொன்னதில்லை என்பதும்’ என்கிறார் தன் அருமைப் பிள்ளைபற்றி.

சட்டப்படிப்பு முடித்தான். ப்ராக்டீஸுக்கு செல்லவில்லை. அப்பாவின் வியாபாரத்தை கவனித்து ஒத்தாசையாக இருக்கிறான். பத்திரிக்கை நடத்த ஆசைப்பட்டான். நடத்தினான். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஆறுமாசக் கணக்கைப் பார்த்தால் நஷ்டம். சரிப்பட்டு வராது என்கிறார் அப்பா. ‘இப்போ என்ன? பத்திரிக்கையை நிறுத்திவிடு என்கிறீர்கள் அதுதானே..’ராக’த்துக்கு மங்களம் பாடிவிட்டேன், சரிதானே?’ என்கிறான் மகன்.

இப்படி, சொன்ன பேச்சைக் கேட்கும் பிள்ளைபற்றி அவருக்கு ஒரே பெருமை. என் அபிப்ராயத்தில் என் மகன் நல்லவன். கல்லூரியில் நன்னடத்தைப்பரிசும் அவனுக்குத்தான். சிகரெட், பொடி, புகையிலை வகையறா தெரியாது. பெண்களிடம் சங்கோஜம் இல்லாமல் பழகுவான். ஆனால் வேலி தாண்டியது கிடையாது. நான் கண்டிக்கும்படியாக அவன் ஒன்றும் செய்யவில்லையே என்று அவன்மேல் எனக்குக் குறை! – பாசமாய்ப் பொங்கும் அப்பா.

இப்பேர்ப்பட்ட பிள்ளை கல்யாணவிஷயத்தில் மட்டும் தன் அப்பாவிடம் மனம்விட்டுப் பேசாமல் மர்மமாக ஏன் இருக்கிறான்? அவரோ அந்தக்காலத்துக்கேற்ப, மகாலட்சுமி என்கிற ஒரு பெண்ணை தன் மகனுக்கேற்றவள் என்று மனதில் திட்டமிட்டுவைத்திருக்கிறார்! 22 வயதான இவனோ பேசாதிருக்கிறான். ’இவன் 40 வயதில்கூட கல்யாணம் செய்யலாம். மகாலட்சுமி ஒரு பெண். அவளை ஊறுகாய் போடமுடியுமா..’ என்கிற நியாயமான சிந்தனை அப்பாவின் மனதில்.

ஒருநாள், வெளியே போயிருந்த மகன் திரும்புகையில், அவனைக் கோபித்துக்கொண்டு கேட்டுவிடுவது என்று முடிவுசெய்கிறார் அப்பா. ஆனால் அதிலும் பிரச்சினை. கோபம் என்றால் முகத்தை ’உர்’ரென்று வைத்திருக்கவேண்டுமே.. அவர் ‘உர்’என்று வைத்திருந்த நேரத்தில் அவன் வரவில்லை. அவர் தன் கடைசிப்பையனோடு (3 வயது) சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கையில் சந்திரன் வருகிறான். எப்படிக் கோபிப்பது என்று அவருக்கு கவலை. (இடையிலே அப்பா தன்னைப்பற்றி: 22-ல் ஒரு பையன், 3 வயதில் ஒரு பையனா என்று கேட்கிறீர்களா? இதற்கென்ன வெட்கம்! எனக்கும் கட்டுப்பாட்டில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. கட்டுப்பாடு செய்துகொண்ட ஒரே காரணத்தினால் அதை நானும் அவளும் மீறிவிட்டோம்!’ – அடடா அப்பா!)

திரும்பிவந்த சந்திரனை ’எங்கே சுற்றிவிட்டு வருகிறீர்கள்!’ எனக் கோபம் காண்பிக்க முயல்கிறார் அப்பா. அவன் தான் மகாலட்சுமி வீட்டுக்குப்போனதாகவும், அவளுடன் பேசிக்கொண்டிருந்ததில் நேரம்போனது தெரியவில்லை என்றும் கூறுகிறான். அவருக்கு உள்ளூர சந்தோஷம் – பயல் சரியான ட்ராக்கில்தான் செல்கிறான்!
’அப்படி என்றால் மகாலட்சுமியை உனக்குப் பிடிக்கிறது என்று சொல்..’ என்று பையனை சீண்டுகிறார். முகூர்த்தத்துக்கு நாள் பார்க்கலாமா என்று கேட்ட அப்பாவிற்கு, அவன் ‘வேண்டாம்!’ என்கிறான். ’ஏன் நாள் பார்க்காமல்? சீர்திருத்த திருமணமா?’ என்கிறார் அப்பா.

‘அது இல்லை அப்பா. மகாலட்சுமியை வேண்டாம் என்கிறேன்’ என்று குண்டை வீசுகிறான் மகன். அப்பா அதிர்கிறார்.’ஆரம்பித்துவிட்டாயே! என்ன விளையாட்டு இது. இரண்டுபேரும் சேர்ந்து கும்மாளமடிக்கிறீர்கள்..கல்யாணப்பேச்சில் மகாலட்சுமியைப்பற்றி விளையாடாதே!’ என எச்சரிக்கிறார் அப்பா.

இருவருக்கிடையிலான உரையாடல் சுர்.. சுர்.. :

சந்திரன் தொடர்கிறான்: நிஜமாய்த்தான் சொல்கிறேன்.

ஏன் கருப்பாய் இருக்கிறாள் என்பதாலா?

அதுக்காக இல்லை..

ஒன்னரைக்கண் என்றா?

வந்து..அப்பா..

சதா நாட்டியம் ஆடுகிறாளே அதனாலா?

நான் சொல்லவந்தது…

அவள் ஆண்பிள்ளைக் குரலில் பேசுகிறாள் என்றுதானே சொல்லப்போகிறாய் !

நீங்கள் இப்படிப் பேசிக்கொண்டே போனால் நான் எப்போது பேசுவது? –கேட்கிறான் சந்திரன்.

’மனதுக்குப்பிடிக்கிறது என்று கல்யாணம் வேண்டாம் என்றால் என்னடா அர்த்தம்? போடா! போடா! கல்யாணம் என்றால் இவ்வளவு வெட்கமா! போ, போ, நாள் வைத்துவிட்டுச் சொல்லிவிடுகிறேன்’ – கதையை சுமுகமாக முடிக்கப்பார்க்கும் அப்பா.

’இரண்டுநாள் தவணை கொடுங்கள் அப்பா, முடிவாகச் சொல்லிவிடுகிறேன்..’ என்கிறான் சந்திரன்.

சந்திரன் இறுதியாக என்னதான் சொன்னான்? அப்பாவின் இஷ்டப்படி மகாலட்சுமியைக் கல்யாணம் செய்துகொண்டானா ?
மேற்கொண்டு தொடர்ந்து படிக்கவேண்டுகிறேன் வாசக அன்பர்களை.

எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதை ‘தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை
இணைப்பு: http://www.sirukathaigal.com/tag/எம்.வி.வெங்கட்ராம்/

நன்றி: ’சிறுகதைகள்’ வலைத்தளம் http://www.sirukathaigal.com/

**

Sri Adi Shankara ஆதிசங்கரர் – பால சந்நியாசி

இந்தியா. 8-ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும், 9-ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம். நாட்டில் மக்களின் இறை நம்பிக்கைகள், தத்துவார்த்த, ஆன்மீக சிந்தனைகள், மழைக்காளான்களாய் முளைத்துவிட்டிருந்த முரண் பல கொண்ட சிறுசிறு மதக்குழுக்களால், அமைப்புகளால்(religious sects) சிதறடிக்கப்பட்டுவிட்டிருந்தன. தங்களை குருக்கள், ஆச்சாரியர்கள் என அழைத்துக்கொண்டு சாதாரணர்களிடையே பெரும் சிந்தனைக் குழப்பத்தை கிளறிவிட்டு, மன அமைதியைத் தவிடுபொடியாக்கியிருந்த போலிகள், புரட்டுகள் தேசமுழுதும் பரவிவிட்டிருந்த இந்திய பெரும்சோதனைக் காலம் அது.

தென்பாரதத்தில் திருச்சூருக்கு அருகே காலடி என்னும் ஊரில் (இப்போது கேரளா மாநிலம்) பக்தியில் திளைத்த சிவபக்தர்களான சிவகுரு, ஆர்யாம்பா என்கிற குழந்தையில்லா தம்பதி, கவலையுடன் பெரும் பிரார்த்தனையில் இருந்தனர். அவர்களுடைய பக்தியை மெச்சி அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருளுமுன்னே சிவபெருமான், சிவகுருவின் கனவில் வந்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவைத்தார்: “சராசரி மனிதராய் வாழக்கூடிய, நீண்ட ஆயுளை உடைய குழந்தைகள் வேண்டுமா இல்லை, உண்மை ஒளியுடன் சிறந்த ஞானியாக வாழக்கூடிய ஒரே ஒரு குழந்தை வேண்டுமா? ஆனால் அந்தக் குழந்தைக்கு ஆயுள் குறைவுதான். யார் வேண்டும்?.“ சிவனின் அடியவரான சிவகுருவுக்கு யோசிக்கப் பெரிதாக ஏதுமில்லை. பெருமானை நோக்கி, “தங்கள் சித்தமே எங்கள் பாக்யம்“ என்றார். `அப்படியே ஆகட்டும்!` என்று மறைந்தார் இறைவன். பாரதப் பெரும்பூமியில் நிலவியிருந்த குழப்பம், தெளிவின்மையை அகற்றி, தர்மவழியை உண்மைவழியை நிலைநாட்ட வந்துபிறந்தார் ஆதிசங்கரர்.

Adi Shankarar
with disciples

7 வயதுச் சிறுவனாக சங்கரர் இருந்தபோதே அவருடைய தந்தை இயற்கை எய்தினார். வயதான தாய், சங்கரருக்கு, குலவழக்கப்படி உபநயனம் (பூணூல் போட்டுக்கொள்ளல்) செய்வித்து, குருகுலத்திற்கு வேதசாஸ்திரங்களைப் படிக்க அனுப்பிவைத்தார். அந்த இளம்பிராயத்திலேயே அவருக்குள் இருந்த அதீத சக்தி அவ்வப்போது தன்னை வெளிப்படுத்திக் காட்டியது. பால்ய வயதிலேயே சங்கரர் வேத, சாஸ்திரங்களில் தேர்ச்சி அடைந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

குருகுலத்தில் இருந்தபோது, சிஷ்யர்கள் அந்தக்கால தர்மப்படி ஒவ்வொரு வீடாக சென்று உணவை யாசித்து, கிடைத்ததை உண்பது வழக்கம். ஏகாதசி விரதம் முடித்து அடுத்த நாளான துவாதசி அன்று சிறுவனான சங்கரர், திருவோட்டைக் கையிலேந்திப் பிச்சை எடுக்கச் சென்றார். ஒரு ஏழை அந்தணர் வீட்டின்முன் நின்றார். `பவதி பிக்ஷாந்தேகி!`(Bhavati Bikshaandehi -தாங்கள் பிச்சை போடுங்கள்) என்று குரல் கொடுத்தார். வீட்டிலிருந்து யாரும் வருவதாகத் தெரியவில்லை. சாஸ்திர முறைப்படி, எந்த ஒரு வீட்டின் வாசலில் நின்று மூன்று முறைதான் பிச்சை கேட்டு அழைக்கலாம். ஒருவீட்டில் என்ன பிச்சை கிடைக்கிறதோ அதைப் பேசாமல் வாங்கிக்கொண்டு, பிச்சை போட்டவரை ஆசீர்வதித்து (அல்லது அவருக்காக வேண்டிக்கொண்டு) அங்கிருந்து சென்றுவிடவேண்டும். அதுதான் பிச்சை கேட்டவருக்கான உணவு. அடுத்தவீட்டில்போய் மேற்கொண்டு பிச்சை கேட்கக்கூடாது. அப்படி இருந்த காலமது.

யாரும் வரவில்லையே என நினைத்து சங்கரர் மீண்டும் பிச்சை கேட்டு அழைக்க, வீட்டினுள் அந்தணரில்லை; அவருடைய மனைவி எட்டிப் பார்த்தாள். வாசலில் பசுமைமாறா குழந்தை முகத்துடன் ஒரு பால பிரும்மச்சாரி நின்றிருப்பது கண்டதும் மிரண்டாள். ஏனெனில், கொடுப்பதற்கு அந்த ஏழையிடம் என்ன இருக்கிறது வீட்டில்? பிச்சை கேட்கும் ஒரு பிராமண பாலகனை, வெறும் கையோடு அனுப்புவது பாவமல்லவா? சமையல் உள்ளில் சென்று பாத்திரங்களை உருட்டுகையில், தன் கணவருக்கென எடுத்துவைத்த ஒரு நெல்லிக்கனி -அதுவும் வதங்கிப்போயிருந்தது – அவளது கையில் கிடைத்தது. வேறு வழியில்லை; இதனைத் திருவோட்டில் போட்டுவிடவேண்டியதுதான் என நினைத்து எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.

`பிச்சைகேட்டு வாசலில் நிற்கும் இந்த பாலகனுக்குப் போட ஒருபிடி சாதம் கூட இல்லாத தரித்திரியாக இருக்கிறேனே, பாவியல்லவா நான்!` என நினைத்து உளம் வெந்தாள் அந்தப் பெண்மணி. சங்கரரின் திருவோட்டில் அந்த நெல்லிக்கனியை இட்டுவிட்டு, தன்னுடைய கொடிய வறுமை தந்த அவமானத்தால் முட்டும் அழுகையை முந்தானையால் நிறுத்த முயன்றவளாய், பாலகனை நேராகப் பார்க்கும் தைரியமின்றி வேகமாக வீட்டுக்குள் திரும்பிவிட்டாள். சங்கரர் அவ்வளவையும் கூர்ந்து பார்த்திருந்தார். கடும் ஏழ்மையிலும் கொஞ்சமும் மாறாத அவளது தர்மசிந்தனை, இயலாமை தந்த பெருந்துக்கம், பரிதவிப்பு எல்லாவற்றையும் ஒரே கணத்தில் கனமாக உணர்ந்தார். தான் வணங்கும் தேவி மகாலட்சுமியை மானசீகமாக அழைத்து அந்த ஏழையின் வறுமையை உடன் நீக்கி அருளுமாறு வேண்டினார். உருக்கத்தோடு ஆகாசத்தை நோக்கிப் பாடினார். அந்த ஸ்லோகமே அவர் முதலில் இயற்றிப்பாடிய, பின்னாளில் பெரிதும் புகழ்பெற்ற `கனகதாரா ஸ்தோத்திரம்`. பிஞ்சுக்குரலில் உருக்கிய பாடல் விண்ணைத் தாண்டியது. மகாலட்சுமி உளம் கசிந்தாள். அவர் பாடி முடித்ததும், அந்த ஏழைப்பெண்ணின் வீட்டினுள் தங்க மழை பொழிந்தாள் தேவி. விதியை நினைத்து விம்மி அழுதவாறு வீட்டுக்குள் மூலையில் முடங்கியிருந்த அந்தப் பெண், திடீரென ஏதோ விழுந்தோடும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். ஓட்டைக்கூரை வழியாக தரையில் விழுந்து தடதடவென ஓடி, மூலைக்கு மூலையாகக் கிடந்து பளபளத்தன அவை. நெல்லிக்கனிகள். தங்க நெல்லிக்கனிகள்! செப்புக்காசையும் வாழ்க்கையில் பார்த்திராத அந்த ஏழை வெகுவாக அரண்டுபோனாள். தன் கண்களை நம்பாது கசக்கிக்கொண்டு மீண்டும் உற்றுப் பார்த்தாள். வாசலில் பிச்சைக்கு வந்துநின்ற பாலகனின் முகம் ஒருகணம் அவளது மனக்கண்ணில் பிரகாசித்தது. ஓடிப்போய் வாசலில் பார்த்தாள். சங்கரர் போய்விட்டிருந்தார்.

தன் பிறப்பின் காரணமும், ஆற்றவேண்டிய ஆன்மீகக் கடமைகள் பற்றிய சிந்தனையும் அந்த சின்னவயதிலேயே அவர் மனதில் ஓடியது. துறவறம் மேற்கொண்டு பாரதம் முழுதும் பயணிக்க சித்தமானார். ஆனால் அம்மாவோ சங்கரருக்கு விரைவில் திருமணம் செய்துவிடவேண்டும் என்கிற ஆசையில் இருந்தார். பால்ய விவாகம் வழக்கமாயிருந்த காலமது. இந்த நிலையில் சந்நியாசத்திற்கு தாயார் சம்மதிப்பாரா?

ஒருநாள் ஆற்றில் குளிக்கபோன சங்கரரின் காலைக் கவ்வியது ஒரு முதலை. கரையில் நின்றிருந்த அவருடைய தாய் அலறினார். சஙகரருக்கு தனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது புரிந்தது. தாயிடம் சொன்னார். “அம்மா, இந்த முதலை பிடித்த பிடியை விடாது. எனது காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிலையிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நான் சன்னியாசியாக நீ சம்மதித்தால் ஒருவேளை என் உயிர் பிழைக்கலாம். சொல்லம்மா!“ என்றார். சந்நியாசியோ எதுவோ தன் மகன் பிழைத்திருந்தால் போதும் எனச் சம்மதித்தார் அந்தத் தாய். சங்கரர் சந்நியாச தீட்சை மந்திரத்தை மனதில் ஆழ்ந்து சொல்ல, முதலை பிடி தளர்த்தி விலகியது. சங்கரர் சந்நியாசியாகக் கரை மீண்டார்.

தேசசஞ்சாரம் செல்ல விரும்பித் தாயிடம் அனுமதிகேட்டார் சங்கரர். அந்தக்காலத்தில் தேசசஞ்சாரம், புண்ணிய யாத்திரை என்பதெல்லாம், எத்தனை தூரமானாலும் கால்நடையாகத்தான். வீட்டை விட்டு ஒருவர் போனால் போனதுதான். திரும்பி வந்தால்தான் நிச்சயம். அப்படி ஒரு காலகட்டம். வயோதிகத் தாய் பயந்து அழுதார். “என் கடைசி காலத்தில் உன்னைக் காணாதுதான் நான் உயிர்விட வேண்டுமா“ என அரற்றினார். தாயாரைத் தேற்றிய சங்கரர் `அம்மா! கவலைப்படாதே உன் அந்திமக் காலத்தில் நான் எங்கிருப்பினும் உனை வந்து சேர்வேன். அப்படி ஒருவேளை, நான் வருமுன் உன் உயிர்போகுமென்றால், ஒரு தாய்க்கு மகன் செய்யவேண்டிய அந்திமக் கடமைகளை நான் உனக்கு செய்வேன்` என உறுதி அளித்தார். சாஸ்திர நியதிப்படி ஒரு சந்நியாசிக்கு இத்தகைய இல்லற தர்மங்கள், கடமைகள் ஏதும் கிடையாது. இருப்பினும் தன்னைப் பெற்ற மனுஷியின் தாபத்தை உணர்ந்து, அவருடைய இறுதி ஆசையை நிறைவேற்ற சங்கரர் சம்மதித்தார்.

வட பாரதத்தில், இமயமலைப்பகுதி நோக்கிக் கால்நடையாகப் பயணித்தார் ஆதிசங்கரர். போகும் வழியில் பல புனிதத்தலங்களுக்கு சென்றும், பல புண்ணிய நதிகளில் நீராடியும் தொடர்ந்து பயணித்தார். பனிபடர்ந்த இமயமலைப் பகுதியில், கடல்மட்டத்திலிருந்து 10279 அடி உயரத்தில் இருக்கும், வைஷ்ணவர்களின் 108 திருப்பதிகளில் விசேஷமான ஒன்று எனக் கருதப்படும் பத்ரிநாத் என்கிற ஊருக்கு (தற்போது பத்ரிநாத், உத்தராகண்ட் மாநிலம்) வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். (தொடரும்)

**