நாதனுக்குப் பக்கத்திலேயே இருக்கிறாள் எப்போதும். காதல் மட்டுமா காரணம், பதியைக் கணமும் பிரியாமல் இருப்பதற்கு? வேறொன்றும் இருக்கிறது.
இந்தப் பெருமாள் இருக்கிறாரே, கடினமானவர். அழுத்தம் ஜாஸ்தி. அவர் இஷ்டத்துக்கு விட்டுவிட்டால் அவ்வளவுதான். ஏகப்பட்ட கெடுபிடி காட்டக்கூடியவர். ஒரு ஜீவன் தவறுசெய்துவிட்டால்தான் என்ன? போனால்போகிறது என அவனை விடுவதில்லை. பிடித்துத் தண்டித்து அவனை சரிப்படுத்தவேண்டும், திருத்தவேண்டும் எனும் பிடிவாதம் இவருக்கு. இப்படிக் கறாராக இருக்கலாமா? பாவம், இந்த மனித ஜென்மங்கள். அவர்களும்தான் என்ன செய்வார்கள்.. ஏற்கனவே எத்தனையோ கஷ்டங்களில் வாழ்நாளெல்லாம் உழல்கிறார்களே. ஏதோ தெரியாமல் தப்புத்தண்டா செய்துவிட்டார்கள் என்பதற்காக விரட்டி விரட்டியா தண்டனை கொடுப்பது? அந்தக் குழந்தைகள்தான் பாவம் என்ன செய்யும், எங்கே போய் நிற்கும் ? – என்று எப்போதும் தன் குழந்தைகளை நினைத்துக் கவலைப்படுகிறவள் தாயார். தன் குழந்தைகள், அவர்கள் யாராகிலும், எந்த நிலையில் இருப்பவர்களானாலும், அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டு அவளால் உட்கார்ந்திருக்கமுடியாது. அதனால் சிந்திக்கிறாள் – என்னுடைய நாதன் தண்டிப்பதிலேயே குறியாக இருந்தால், இந்தக் குழந்தைகளுக்கு அதுவே நித்திய ஆபத்தாகப்போய்விடுமே. அவர்களைக் கொஞ்சம் பயமுறுத்திவைப்பதற்காக, ஏதாவது சின்னதாக ஒரு சோதனையைக் கொடுத்துவிட்டு, விட்டுவிடலாம் அல்லவா? அதுபோதுமே பாவம், அதுகளுக்கு.. என்று மனித ஜீவன்களுக்காக தன் மணாளனான மகா விஷ்ணுவிடம் என்றும் மன்றாடுபவள் மகாலக்ஷ்மி.
இல்லைம்மா, உனக்கு இது புரியவில்லை.. அவன் அப்படியெல்லாம் சுலபமாகத் திருந்தமாட்டான். அவன் இருக்கும் மனநிலையே வேறே.. அவன் செய்துவிட்ட காரியத்துக்கு, ஏதாவது தண்டனை கொடுத்தால்தான், கடும் சோதனையில் புரட்டிப் புடம்போட்டால்தான் கொஞ்சமாவது புரியும். நல்லபடியாக மாறுவான்.. என்று பெருமாள் வாதிடும்போதெல்லாம் உடன்படமாட்டாள் தாயார். ’அதெல்லாம் அப்படி ஒன்றுமில்லை. அவன் நல்லவன்தான். ஏதோ தெரியாமல் அசட்டுத்தனமாகத் தப்புக் காரியம் செய்துவிட்டான். தண்டனை அது இதுன்னு ஏதாவது பயங்கரமாகக் கொடுத்து அவனைப் படுத்தவேண்டாம். பேருக்கு ஏதாவது கொஞ்சம் கஷ்டம்கொடுத்து சோதித்துவிட்டு, விட்டுவிடுங்கள். இனிமேல் அப்படியெல்லாம் பண்ணமாட்டான் குழந்தை..’ என்று தன் குழந்தையாகிய மனித ஜீவனுக்காகப் போராடி பெருமாளின் மனம் இளகச் செய்கிறாள் அன்னை. இதையும் மீறி, தப்பு செய்த மனிதனுக்கு பெருமாள் தண்டனையே கொடுத்துவிட்டாலும், அதை அந்த ஜீவன் தாங்கிக்கொள்ளக்கூடிய வகையில் கொஞ்சம் எளிதாக்கிக்கொடுக்கிறாள்; கஷ்டப்பட்டாவது அந்த சோதனைக் கட்டத்தைக் அவன் தாண்டிச் செல்லுமாறு கருணைபுரிகிறாள் தாயார். ஜீவர்கள், பெருமாளிடம் வகையாக மாட்டிக்கொண்டு, கடுமையாகத் தண்டிக்கப்பட்டுவிடாதபடி, அவர்களுக்குக் கருணைகாட்டிக் காப்பதற்காகவே, பெருமாள்பக்கத்திலேயே எப்போதும் இருப்பவள் பிராட்டி. நம் எல்லோரின் அன்னை.
வேதாந்த தேசிகன், ராமானுஜர்பற்றி எழுதிய ’’எதிராஜ சப்ததி’-எனும் 74 பாசுரங்கள் அடங்கிய படைப்பின் ஆரம்பத்தில், ஆதி ஆச்சார்யர்கள் எல்லோருக்கும் முதலில் வணக்கம் சொல்கிறார். பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனை முதல் குருவாக, ஆச்சார்யராகக்கொண்டு வணங்கிவிட்டு, பிறகு தாயார் மகாலக்ஷ்மி, அதற்குப் பின் விஷ்வக்ஷேனர், நம்மாழ்வார் எனப் பின் தொடரும் ஆச்சார்யர்களை ஒவ்வொருவராக வணங்கிச் செல்கிறார். அப்போது அன்னை மகாலக்ஷ்மியை வணங்கும்போது, இந்த உலகின்மீது, உயிர்கள்மீது அவள் காட்டும் கருணைபற்றி சிந்திக்கையில், மேற்கண்டவாறு உருகுகிறார், வேதாந்த தேசிகன்.
**