ICC WT20 WC: ஆஸ்திரேலியாவுக்கு மகளிர் உலகக் கோப்பை

WC for Australia

எந்தவித எதிர்ப்பும் challenger இந்தியாவிடமிருந்து வராமல் போக, ஒரு one-sided affair ஆகிப்போனது மெல்பர்னில் (Melbourne) நடந்த (8th March – Intl. Women’s Day) மகளிர் டி-20 உலகக்கோப்பைக்கான இறுதி ஆட்டம்.  பெரிதும் எதிர்பார்த்திருந்த லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு வெகுமதியாகக் கிடைத்தது அதிர்ச்சிதான். இந்திய அணியினர் கேட்ச்சுகளைக் கோட்டை விட, ஆஸ்திரேலிய பேட்டிங் சரியான சமயத்தில் தூள்கிளப்ப, 85 ரன் வித்தியாசத்தில் கோப்பை ஆஸ்திரேலியாவின் கையில், ஐந்தாவது முறையாக.

முன்பு ஒரு கட்டுரையில் சொன்னதுபோல், இந்திய மிடில் ஆர்டர் எழுந்து தாக்காமல் போனால், அதாவது ஸ்ம்ருதி, ஹர்மன்ப்ரீத், ஜெமிமா, வேதா போன்றவர்களிடமிருந்து பெரிய ஸ்கோர் வரவில்லை எனில், இத்தகைய முக்கிய போட்டிகளில் ஒப்பேற முடியாது என்கிற கணிப்பு, பயம் பலித்துவிட்டது. ஷெஃபாலி இதுவரை 10-12 ஓவர் வரை நின்று தாக்கியிருக்கிறார்; 29-லிருந்து 47 வரை விளாசியிருக்கிறார். அத்தகைய ஒரு தாக்குதலில் நாம் குளிர்காயலாம் என மற்றவர்கள் நினைத்திருக்கமாட்டார்கள் எனினும், அதற்கு மேல் வீறுகொண்டு எழ  இந்திய மிடில்-ஆர்டர் வீராங்கனைகளால் முடியவில்லை. அதிமுக்கியமான போட்டியில் துரதிருஷ்டவசமாக ஷெஃபாலி முதல் ஓவரில் வீழ்ந்துவிட, அடுத்துவந்தவர்கள் – சிலர்  அவரைவிட அனுபவத்தில் புலிகள் – பொறுமை காத்து ஆடவோ, போட்டுத்தாக்கவோ முடியாது, மேட்ச்சை எதிரியிடம் வலிய ஒப்படைத்தது போலானது. இங்கேதான் துக்கமே.

ஷெஃபாலி 35-40 ரன் எடுத்திருந்தால் இந்திய ஸ்கோர் 135-140 என்கிற கௌரவ நிலையை எட்டியிருக்கும். கடைசி வரை ஃபார்முக்கே வராத சீனியர் பேட்ஸ்மன்களான ஸ்ம்ருதி, ஹர்ன்மன்ப்ரீத், வேதா போன்றோரை வைத்துக்கொண்டு கோப்பையை வெல்வது எப்படி சாத்தியம்? அதுவும் ஆஸ்திரேலியா போன்ற ஒரு கடைந்தெடுத்த ப்ரொஃபஷனல் டீமுக்கு எதிராக, 80000 பேர்கொண்ட ஆரவாரக் கூட்டத்தின் பின்னணியில், ’ஃபைனல் போட்டி அனுபவம்’ இல்லாத அணி சாதித்திருக்க வாய்ப்பு மிக, மிகக் கம்மி. நாம்தான் அதிகமாக எதிர்பார்த்துவிட்டோம்.

உலகக்கோப்பையை இழந்த இந்தியர்களின் சோகம்..

போட்டியின் இறுதியில் இந்திய வீராங்கனைகள் நிலைகுலைந்து காணப்பட்டது சோகத்தின் உச்சம். குறிப்பாக 16 வயது சிறுமியான, உண்மையில் இந்தியா ஃபைனல் வரை வந்துசேர பிரதான காரணகர்த்தாவான,  உலக்கோப்பையில் ஏற்கனவே ஆடியிராத ஷெஃபாலி வர்மா – தோல்வியில் துவண்டு அழுதது நெஞ்சைத் தொட்டது என்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்டார் ப்ரெட் லீ (Brett Lee). ’இந்தக் கட்டத்திலிருந்து  இந்திய மகளிர் மேலெழுந்து வருவார்கள், நிச்சயம்’ என்றார். தன்னுடைய சக வீராங்கனையின் தோளில் சாய்ந்துகொண்டும், ப்ரமை பிடித்தவாறு தனித்தும் நின்றுகொண்டிருந்த இந்திய அணியினரைப் பார்த்த வெஸ்ட் இண்டீஸின் லெஜெண்ட் சர் விவ் ரிச்சர்ட்ஸ் (Sir Viv Richards) சொல்கிறார்: ’உங்கள் கையிலும் கோப்பை ஒரு நாள்  வரும்!’

Courtesy: Cartoonist Satish Acharya, One India.com

வரும். ஆனால் அதற்கு இன்னும் காலமிருக்கிறது; நிறைய உழைப்பு பாக்கியிருக்கிறது. அணியில் பலரின் அனுபவக் குறைவு, ‘big match temperament’ இல்லாமை,  பதற்றம் என ஒன்றுகூடி, இந்திய அணியை ஒரு கத்துக்குட்டிகள்போல் உலகத்துக்குக் காட்டிவிட்டது இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி. பரவாயில்லை. ஆயினும், நமது வீராங்கனைகள் மீது வருத்தமில்லை. ஒரு மேட்ச்கூடத் தோற்காமல் உலகக்கோப்பையை விளையாடி, இறுதிப்போட்டியில்  நுழைந்தவர்கள் என்கிற பெருமையும் இந்தியப் பெண்களுக்கு உண்டு. ஆகவே, திறனுக்கு அவர்களிடம் குறைவில்லை. நமது கன்னிகைகள் முனைப்பிலும் தாழ்ந்தவர்கள் இல்லை.  They are just rough diamonds..  they need professional polishing. விரைவில் அது அவர்களுக்குக் கிடைக்கும். மீண்டு வருவார்கள் இந்திய வீராங்கனைகள். காத்திருப்போம்.

Brief Scores :

Australia: 184  (AJ Healy 75, BL. Mooney 78 n.o., M.Schutt 4 wkts)    India: 99 (Deepti Sharma 33 & 2 wkts)

**