நாய் என்றொரு ஜீவன்

எங்கள் குடியிருப்பு வளாகத்தின் வாசல் மரத்தடியில், கொஞ்ச நாட்களாக ஒரு காட்சி. மரத்தில் கட்டப்பட்டிருக்கிறது ஒரு அழகிய இளம் நாய். சாம்பல், வெள்ளை கருப்பென்று வர்ணக் கலவை. துறுதுறு முகம். குறுகுறு பார்வை. அலைக்கழியும் மனத்தோடு அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருப்பதாய்ப் படுகிறது. யாரையும் பார்த்துக் குரைப்பதில்லை. அந்த வழியே செல்லும் மற்ற நாய்களையும் சீண்டுவதில்லை. ஒரு இடத்தில் அமர்வதுமில்லை. என்னதான் பிரச்னை? நேற்று மாலை வெளியிலிருந்து திரும்புகையில் கண்ணையும் மனதையும் கவர்ந்த, இந்த நாயை கேஷுவலாக தாண்டிச்செல்ல முடியவில்லை. அருகில் நின்றிருந்த நேபாளி செக்யூரிட்டியிடம் நாயைப் பற்றி விஜாரித்தாள் என் மனைவி. கொஞ்சம் தெரிய வந்தது:

இதன் எஜமானர், எஜமானி ரெண்டு பேரும் வெளியூர் போயிருக்காங்க மேடம்! எங்களை பார்த்துக்கொள்ளச் சொல்லிட்டு போயிருக்காங்க.

நல்லா சாப்பாடுல்லாம் போடுறீங்களா?

அதுதான் பெரிய பிரச்னையாயிருக்கு மேடம். வெளிநாட்டு நாய். அவங்க இதுக்காக பெடிக்ரீ (Pedigree – dog food) வாங்கிக் கொடுத்து, பணமும் கொடுத்துட்டுப்போயிருக்காங்க. இதுதான் சாப்பிடமாட்டேன்னு அடம் பிடிக்குது. தண்ணிகூடக் குடிக்கமாட்டேங்குது.

ஒன்னுமே சாப்பிடலையா !

பக்கத்து வீட்லயும் வெளிநாட்டு நாய் வளர்க்கிறாங்க. அவங்ககிட்ட போய்ச் சொன்னோம். அவங்களும் அவங்க நாய்க்கு போடற வேற மாதிரியான சாப்பாட்டையும் தட்டுல கொண்டுவந்து வைச்சாங்க. தொடணுமே…ம்ஹூம்! இன்னியோட 3 நாளாகப்போகுது. ரொம்பப் பெரிய பிரச்சினையாப் போச்சு..

எங்க போயிருக்காங்க அவங்க? எப்ப திரும்பி வருவாங்க?

அவசரமா சிம்லா போறதாச் சொன்னாங்க. நாலைந்து நாள்ல திரும்பிருவோம்னாங்க. ஒரு துர்சம்பவம் அவங்க குடும்பத்தில ..

என்ன நடந்தது?

அவங்களோட அண்ணா, அண்ணி, ரோட் ஆக்ஸிடெண்ட்டுல போயிட்டாங்க.. அதுக்காகத்தான் இவங்க அவசரமா போயிருக்காங்க.. நாலு நாளாகுமோ, கூட ஆகுமோ தெரியலையே..! உள்ளுக்குள்ள இருந்தா அதுக்கு போரடிக்குமேன்னு, வெளியே இருக்கிற மரத்துல கட்டியிருக்கோம். அக்கம்பக்கத்தைப் பாத்துகிட்டாவது இருக்குமில்ல..!

இவ்வளவு விபரம் செக்யூரிட்டி ஆசாமியிடம் சொல்லிட்டு போயிருக்காங்க. சரிதான். ஆனா இந்த நாய், அவர்களுடைய செல்லம், இந்தப் பாவப்பட்ட ஜெனமத்துக்கிட்ட ஒன்னும் சொல்லலையே. அதுக்கு ஒன்னும் புரியலையே, என்ன செய்ய?

நாய் என்று நாமழைக்கும் இந்த உயிரை, இறைவன் எப்படித்தான் படைத்திருக்கிறான் ? வெகுநேரம் எடுத்துக்கொண்டு தன் வேலையை செய்திருப்பான் போலும். எஜமானன் வரும்வரை சாப்பாடும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம் என்று கிடக்கிறதே.. வாயைத் திறந்து ஒரு சத்தமில்லை. வாலாட்டல் இல்லை ! அப்படி ஒரு விசுவாசம். ஒரு எஜமான பக்தி.

பொதுவாக, மனிதராகிய நாம், உயர்பிறப்பு என நம்மைக் கருதிக்கொண்டு, ஆறாவது அறிவு, ஏழாவது அறிவு என்று ஏதேதோ வைத்துக்கொண்டு, எப்படி இருக்கிறோம், நடந்து கொள்கிறோம்? நம்முடைய யோக்யதைகள், குணாதிசயங்கள் என்ன? அன்பு, விசுவாசம் போன்ற சங்கதியெல்லாம் நாம் இருக்கும் திசையிலாவது தலைவைத்துப் படுக்குமா? இந்த லட்சணத்தில், சகமனிதனோடு நமக்குப் பிரச்னைவந்து, அவனை நாம் திட்ட முற்படுகையில் `நாயே!` என்று கோபத்தில், வன்மமாகக் கத்துகிறோம். நாய் என்கிற ஒரு அற்புதமான ஜீவனைக் குறிக்கிற சொல்லை, வசைச்சொல்லாக மாற்றியிருக்கிறோம், நம் வசதிக்கென. அடடா! உயர்பிறப்பல்லவா நாம் ?

**